Home Historical Novel Mohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

76
0
Mohana Silai Ch 8 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 8. பழைய கதை! புதிய நிலை!

Mohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

விடியற்காலை முதல் விடுவிடு என்று நடந்துவிட்ட பற்பல நிகழ்ச்சிகளால் பெரிதும் குழம்பிக் கிடந்த சிந்தையுடன் அந்த சிங்கார சிற்றறையில் சித்திரப்பாவையென நின்றுவிட்ட அரசகுமாரி “நீ சேரன் புதல்வியல்ல” என்று இரத்தினக்
கொல்லர் கதையைத் துவங்கியதும், அதுவரை இருந்த குழப்பத்தையெல்லாம் உதறிக்கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவள் ஒவ்வொரு அங்கத்திலும் அரச தோரணை ஒளிவீச, அவள் கண்கள் தனது எதிரே நின்ற மூன்று
உருவங்களையும் அதிகார தோரணையிலேயே அளவெடுத்தன. தன்னை உரித்து வைத்தது போன்ற அழகுச்சிலை மீதும், அவள் இருபுறத்திலும் அவள் மெய்காவலர்கள் போல் நின்றிருந்த இரத்தினக் கொல்லர் மீதும், மன்னரென்று
வெறிபிடித்த கிழவனால் அழைக்கப்பட்ட அந்தப் புதிய மனிதர் மீதும் தனது அழகிய விழிகளை நாட்டினாள். தங்கள் முகங்களில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் நடுவிலிருந்த சிலையைப் போலவே அந்த இருவரும் நின்றிருந்தது
பெருவியப்பாக இருந்தது வஞ்சி நகர்ச் செல்விக்கு. அப்படி உணர்ச்சியற்ற பார்வையுடைய அந்த மூன்று சிலைகளில் இரத்தினக் கொல்லருக்கு அடுத்தபடியாக அந்தப் புதுமனிதரே வாய்திறந்து பேசினார். அப்படிப் பேசியபோதும் நின்ற
இடத்திலிருந்து நகராமலும் இமைகளைக்கூட அசைக்காமலும், உதடுகளைத் திறந்தாரா இல்லையா என்று சந்தேகப்படும்படியாக லேசாகத் திறந்த உதடுகளால் மிக மெதுவாகப் பேச முற்பட்ட அந்தப் புதுமனிதர், “செல்வி! உன்னைப்பற்றி
நான் பெருமையடைகிறேன். இன்று காலை முதல் ஏற்பட்ட கேழ்ச்சிகளால் சித்தம் சிதறிக் கிடக்கும் நிலையிலும் உன் தோரணையை நீ குறைத்துக் கொள்ளவில்லை. அதுவே பிறப்புக்குச் சரியான சான்றாகும். இருப்பினும் இரத்தினக்
கொல்லர் திடீரென விஷயத்தை உடைத்திருக்க வேண்டாம். மெல்ல மெல்லச் சொல்லியிருக்கலாம்” என்று சொன்னார்.
அரசகுமாரி அதற்கு உடனடியாகப் பதிலேதும் சொல்லவில்லை. அவர்களுக்கு எதிரே மண்டியிட்டு வெள்ளை மயிரெல்லாம் தரையைத் தொட தலைவணங்கியது வணங்கிய படி இருந்த அந்த கிழவெறியனைப் பார்த்தாள். மயக்கமுற்று
தரையில் சாய்ந்து கிடந்த இளையவேளைப் பார்த்தாள். கையில் காயத்திலிருந்து சொட்டிய ரத்தகசிவைத் தனது அங்கியின் முனையொன்றால் துடைத்து அழுத்தி விட்டு மீண்டும் சர்வ சாதாரணமாகக் கையில் அந்தப் பழைய
மோகனச்சிலையை ஏந்தி நின்ற இதயகுமாரனைப் பார்த்தாள். இத்தனையும் பார்த்து பழையபடி உயிருள்ளது போல் தன்னை நோக்கிக் கொண்டிருந்த அந்த அழகுச் சிலையையும் பார்த்தாள். அதன் அழகிய விழிகளில் ஏதோ ஒரு
புத்தொளி பிறந்தது போன்ற பிரமை அரசகுமாரிக்கு ஏற்படவே அவள் தன்னை மேலும் திடப்படுத்திக் கொண்டு இரத்தினக் கொல்லர் மீது முடிவாகத் தனது கண்களைப் பதியவிட்டு “அச்சுதரே! இவர் எந்த நாட்டு மன்னர்?” என்று
வினவினாள்.
இந்தக் கேள்வியைக் கேட்டதும் அச்சுதக் கொல்லர் பதில் சொல்லத் தயங்கினார். பதில் சொன்னபோதும் அவர் குரலில் சிறிது தயக்கம் இருந்தது. “இவர் எந்த நாட்டு மன்னர் என்று அறிந்து கொள்வதைவிட இவருக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பயனுண்டு” என்றார் அச்சுதக் கொல்லர்.
“அதையும் தெரிந்து கொள்ள ஆசைதான். அதை மட்டுமல்ல, பிறநாட்டு அரசர் ஓசைப்படாமல் இன்னொரு நாட்டில் திருட்டுத்தனமாக நுழைய வேண்டிய அவசியமென்ன என்பதையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இவருக்கு
முன்னோடியாக இவர் (இந்த இடத்தில் இதயகுமாரனைச் சுட்டிக்காட்டினாள் அரசகுமாரி) இங்கு வந்து இல்லாத குழப்பத்தையெல்லாம் விளைவிக்க வேண்டிய காரணமென்னவென்பதையும் அறிய ஆசைப்படுகிறேன். தவிர, இரத்தினக்
கொல்லரும், பெரிய வியாபாரியுமான தாங்கள் இத்தகைய சுரங்க அறைகளையும், நிலவறைச் சித்திர வேலைப்பாடு களையும் செய்துகொண்டு அரசியலில் பெரும் பங்கு ஏற்றிருக்கும் விசித்திரம் எதனால் என்பதையும் உணர்ந்து
கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று நிதானமாக, பதட்டமேதுமில்லாமல் கேள்விகளை வீசினாள் அரசகுமாரி.
அவள் கேள்விகளின் தெளிவையும், கேள்விகளை வீசியபோது நிதானித்து விட்ட அவள் உணர்ச்சிகளையும், கண்களில் தெரிந்த அந்தப் பெரும் தோரணையையும் கவனிக்கவே செய்த இரத்தினக் கொல்லர், ‘அரசகுமாரி! உன்
கேள்விகள் அனைத்துக்கும் என்னால் பதில் கூற முடியும். அதற்கு முன்பாக நீ அறிய வேண்டிய விஷயம் முக்கியமாக ஒன்றிருக்கிறது. விஜயாலயச் சோழதேவர் எங்கும் திருட்டுத் தனமாக நுழைய வேண்டிய அவசியமில்லையென்பதை
தமிழகம் அறியும்’. பல்லவரிடம் சிற்றரசராகவும் படைத் தலைவராகவும் இருந்தபோதிலும் விஜயாலயர் பல்லவர்களாலேயே ‘ பரகேசரி என்று மரியாதையாக அழைக்கப்படுகிறார் என்பதை நீ உணர்ந்தால் அவரைப் பற்றிய உன் கேள்விக்கு
அவசியமிருந்திருக்காது” என்று உணர்ச்சியுடன் ஒரு மர்மத்தை உடைத்தார் இரத்தினக்கொல்லர் அச்சுதர்.
அப்படி இரத்தினக்கொல்லர் மர்மத்தை உடைத்ததால் மனம் நெகிழவில்லை அரசகுமாரி. “சோழநாடு என்று ஒரு நாடு இப்பொழுது இருக்கிறதா?” என்று இகழ்ச்சியுடன் கேட்கவே செய்தாள்.
அதுவரை மண்டியிட்டு வணங்கியிருந்த அந்தக் கிழ வெறியன் எழுந்திருந்து தனது கூன் உடலையும் நிமிர்த்தினான் சிறிது. “பெண்ணே ! நீ அரகுமாரியாயிருக்கலாம். ஆனால், உன் பெண்புத்தி போகவில்லை. ஒரு பெரிய அரசை
உருவாக்கிவரும் விஜயாலயச் சோழதேவரை அவமதிக்க சோழநாடு உண்டா என்று கேட்கிறாய்? சோழநாடு என்றும் அழிந்ததில்லை. இனியும் அழியாது. நம் கண்ணில் படாத தெல்லாம் அழிந்ததாகாது. ஆத்மா கண்ணுக்குப்
புலப்படுவதில்லை. அது அழிகிறதா? நீ சோழன் மகள். அது உன் மனக் கண்ணுக்குப் புரிந்துவிட்டதா? இல்லை புறக்கண்ணுக்குத் தான் பார்த்தவுடன் தெரிந்து விட்டதா?” என்று தனது வெறி – பிடித்த குரலில் கூறி, “அதோ நிற்கிறது
சோழ நாட்டின் உயிர், சோழ நாட்டின் ஆத்மா, உன் தந்தை” என்று விஜயாலயனைச் சுட்டிக்காட்டினான். இடையே சிறிது நகைத்தான் வெறி பிடித்து. “உம்! உன் பாட்டியையே அறியாதவள் தந்தையை எப்படி அறியப்போகிறாய்? அவளை
நான் சமைத்தேன் இந்த இரு கைகளால். நினைப்பிலிருந்து சமைத்தேன். சில சமயங்களில் நீ இந்த வஞ்சிமாநகரில் பவனிவரும்போது உன்னைப் பார்த்துச் செதுக்கினேன் அந்தச் சிலையை. அவள்தான் இந்த மகா புருஷனை, உன் தந்தையை
ஈன்றவள். அவளுக்கும் உனக்கும் எந்தவித வித்தியாசமுமில்லை. ராஜமாதாவின் கண்களைப் பார். நன்றாகப் பார் உற்றுப் பார்” என்று வெறி கலந்த சொற்களைக் கொட்டினான்.
அரசகுமாரி அதிர்ச்சியடைந்து நின்றாள் பல விநாடிகள். பிறகு தலையை ஏறெடுத்து இரத்தினக்கொல்லரை நோக்கினாள். “இவர் சொல்வது…?” என்று தட்டுத்தடுமாறிக் கேட்கவும் செய்தாள்.
இரத்தினக்கொல்லர் தலையை அசைத்தார் ஆமோதிப் பதற்கு அறிகுறியாக. “மாரவேள் வாயில் பொய் வராது. வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சிறிது சித்தக் குழப்பம் இருக்கிறது. ஆனால், அவர் கையில் உறையும்
சித்திரக்கலையும் சிற்பக்கலையும் என்றும் பழுதுபட்டது கிடையாது. இந்த அறையிலும் இதற்கு வெளியேயுள்ள பெரிய அறையிலும் அவர் சிருஷ்டிகளையே பார்க்கிறோம். இந்த சகாப்தத்தில் இவரைவிடச் சிறந்த வண்ணச் சிற்பியோ
ஓவியரோகிடையாது. சங்ககாலத்து சம்பிரதாயக் கலை இன்று இவர் ஒருவரிடந்தானிருக்கிறது. இவரை நம்பாதவர் இந்த தமிழகத்தில் யாருமில்லை. புதிதாக யாராவது ஏற்பட்டால் தானுண்டு” என்றார் இரத்தினக்கொல்லர்.
அரசகுமாரிக்கு ஏதோ சொப்பனத்திலிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. ஆகவே விஜயாலயனையே நோக்கி வினவினாள். “நீங்கள் என் தந்தை என்றால் இத்தனை நாள் ஏன் என்னைத் தேடவில்லை, அழைத்துப்போகவில்லை?”
என்று.
விஜயாலயன் மெள்ள நடந்து வந்தான் அரசகுமாரியை நோக்கி. மெள்ளத் தனது வலது கையை அவள் தோள்மீதும் வைத்தார் ஆதரவாக. “கண்ணழகி!” என்று மெதுவாக அரசகுமாரியைச் செல்லமாக அழைக்கவும் செய்தான்.
அரசகுமாரியின் உடல் விஜயாலயன் கை பட்டவுடனேயே சிறிது சிலிர்த்தது. அவன் அவளைப் பெயர் சொல்லி அழைத்ததும் அவள் உடலில் அன்றுவரை ஏற்படாத உணர்ச்சிகள் ஊடுருவிச் சென்றன. “என் பெயர் ரஞ்சனி” என்று
தழுதழுத்த குரலில் சொன்னாள் அரசகுமாரி.
விஜயாலயன் இதழ்களில் மெள்ள இளநகை அரும்பிற்று. “குழந்தாய்! அது சேரமன்னன் அளித்த பெயர். உன் உண்மைப் பெயர் கண்ணழகி. இந்தப் பெயரை வைப்பதில் எனக்கும் உன் தாயாருக்கும் எத்தனை விவாதம் நடந்தது தெரியுமா?
உனக்கெங்கே தெரியப் போகிறது? நீ சிறு குழந்தை” என்ற விஜயாலயன் குரலில் உணீர்ச்சி மிகுந்து கிடந்தது.
அரசகுமாரியின் தலை சுற்றும் ஸ்திதிக்கு வந்துவிட்டது. “ஏதேதோ சொல்கிறீர்கள். எனக்கு ஏதுமே புரியவில்லை” என்று கூறிக் கண்களை மூடினாள். விஜயாலயன் அவளைத் தாங்கிப் பிடித்து அணைத்துக் கொண்டான். பிறகு
லேசாகத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு”அச்சுதரே! வாரும் அடுத்த அறைக்குச் செல்வோம்” என்று கூறி இடையிலிருந்த கதவைத் திறந்து கொண்டு அந்தப் பெரிய சித்திரச் சாலைக்குச் சென்று அங்கிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து
மகளைத் தன் மடியில் கிடத்திக்கொண்டான். அவளைப் பின்பற்றி அதிவேகமாக வந்த வெறிபிடித்த மாரவேள் சித்திரச்சாலையின் ஒரு மூலையிலிருந்த மண்பாண்டத்திலிருந்து குளிர்ந்தநீரைக் கையில் ஏந்தி வந்து அரசகுமாரியின்
முகத்தில் தெளித்தான். அரசகுமாரி மெள்ள மெள்ளக் கண்களைத் திறந்தாள். தான் விஜயாலயன் மடியிலிருப்பதையும், அச்சுதக் கொல்லரும், வெறிபிடித்த சிற்பியும், இதயகுமாரனும் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருப்பதையும்
பார்த்தாள். தனது முகத்தில் நீர் தெளிக்கப்பட்டிருப்பதையும், சோழ மன்னன் தமது வலது கையால் மெள்ளத் தனது கண்களைத் துடைப்பதையும் உணர்ந்ததால் ஓரளவு வெட்கமும் கொண்டாள். அப்படி ஏற்பட்ட நாணத்தால், “அதிகமாக
உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அதனால்…” என்ற அவள் சொற்களை இடையில் வெட்டிய இரத்தினக் கொல்லர் “மயக்கமாகிவிட்டீர்கள். அதுவும் ஒருவிதத்துக்கு நல்லதுதான். உங்கள் தந்தையே உங்களைத் தாங்கி வந்திருக்கிறார்.
சின்னஞ்சிறு குழந்தையாக அவர் மடியில் நீங்கள் கிடந்தது நினைப்பில்லாதிருக்கலாம். ஆனால், இப்பொழுது தந்தையின் மடியில் இருக்கிறீர்கள்” என்று கூறினார். அவர் குரலில் மகிழ்ச்சி மண்டிக் கிடந்தது. “ஆனால், அரசகுமாரி! இதில்
ஒரு சங்கடமும் இருக்கிறது” என்றும் கூறினார் அச்சுதர்.
“என்ன சங்கடம் அச்சுதரே?” என்றாள் அரசகுமாரி மெதுவான குரலில்.
“உங்கள் மர்மத்தை அவிழ்க்க நான் தொடங்கினேன் கதையை. அதை மாரவேள் தொடர்ந்து விடுகதையாக்கி விடையும் கூறிவிட்டார். ஆனால், உங்கள் கதை இத்துடன் முடியவில்லை…” என்று மையமாக சொற்களைத் தேக்கி அவளை
ஊகிக்க விட்டார்.
அரசகுமாரியின் முகத்தில் மீண்டும் சிந்தனை படர்ந்தது. தந்தையின் மடியிலிருந்து மெள்ள எழுந்து நின்றாள். “இன்னும் இருக்கிறதா என் கதை?” என்று வினவினாள், தனது அழகிய கண்களைத் தந்தையை நோக்கித் திருப்பினாள்.
“இருக்கிறது மகளே! அது பெருங்கதை. ஆனால், சுருக்கமாகச் சொல்கிறேன் கேள். எங்கள் மூதாதையரான கரிகால் வளவன் காலத்தில் பேரரசாக கிழக்கிலும் மேற்கிலும் கடலுக்கு அப்பாலும் விரிந்து, பெரும் வணிகத்துடன்
செல்வாக்குடனுமிருந்த சோழ சாம்ராஜ்யம் அடுத்த இரண்டு தலைமுறைகளில் பெரிதும் குறைந்துவிட்டது. குறைந்ததே தவிர அழியவில்லை. எப்படிக் கடல்கோளால் புகார் முற்றும் அழியவில்லையோ அப்படியே சோழர் குலமும்
சோழ அரசும் அழியவில்லை. தமிழ்நாட்டைக் கலங்கவைத்த களப்பிரர் ஆட்சியின் முந்நூறு ஆண்டுகளில் மறைந்திருந்தது சோழர் ஆட்சி தமிழகத்தில். ஆனால், சோழர்கள் சிலர் இங்கிருந்து புறப்பட்டு வடக்கே ஆந்திரத்துக்குச் சென்று
அங்குள்ள ரேநாடு என்ற பகுதியில் சோழ அரசை நிறுவினார்கள். களப்பிரரை வென்ற பாண்டிய கடுங்கோனும் பல்லவசிம்ம விஷ்ணுவும் தங்களுக்குள் தமிழகத்தைப் பங்குபோட்டுக் கொண்டார்கள். இத்தனை களேபரங்களுக்கும்
வேறு எந்தக் குலமும் மண்ணோடு மண்ணாகியிருக்கும். ஆனால், சோழர் குலமும் அரசும் மறையவில்லை. நீறுபூத்த நெருப்பாக இங்கேயே, உறையூரிலேயே இருந்து வந்தது. அந்த நீறு இப்பொழுது ஊதப்படுகிறது. இனி மீண்டும்
சோழர்கள் வீராக்கினி எதிரிகளைத் தகிக்கும், தமிழகத்தைக் குளிரச் செய்யும். அப்படி சோழர்குலம் மறையாதிருக்க இளஞ்சேட் சென்னி ஏற்பாடு செய்துவிட்டுப் போனார். சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வைத்து
விட்டுப்போன சொத்து சோழர் குலத்தைப் பாதுகாத்து வருகிறது…” இந்த இடத்தில் விஜயாலயன் சிறிது நிதானித்தான்.
“அந்த சொத்துதான் மோகனச்சிலை” என்று வாசகத்தை முடித்தார் இரத்தினக்கொல்லர். அதைப் பாதுகாக்கத்தான் இத்தனை நாள் பாடுபட்டேன்” என்று கூறி இதயகுமாரன் கையிலிருந்த தந்தச் சிலையைச் சுட்டிகாட்டினார்.
அரசகுமாரி அந்தத் தந்தச்சிலையை மீண்டும் நோக்கினாள். “இது… இது…” என்று ஏதோ கேட்டாள்.
“இளஞ்சேட் சென்னியால் யானையின் முழு தந்தத்தால் செய்யப்பட்டது. இளஞ்சேட் சென்னி அழகுமிக்க தேர்களைச் செய்யும் சிற்பி என்பதை வரலாறு அறியும். அப்படிச் செய்த தேர்களில் ஒன்றில் இந்த மாதிரி ஒரு சிலையையும்
அமைத்தார். அவர் இறக்கும் போது சொன்னார், “போரில் தேர் உடைந்தாலும் இந்தச் சிலை உடையாது. இதைக்கொண்டு என் மகன் சக்கரவர்த்தியாவான்” என்று. அதைப் பிற்காலத்தில் இரும்பிடர்த்தலையார் சொல்லக் கேட்டு கரிகால்
வளவன் மிகப் பத்திரமாக இந்தச் சிலையப் பாதுகாத்து குலச் சொத்தாக்கினார். காலவெள்ளம், சரித்திரத்தின் சதிகள் இதை வஞ்சிக்குக் கொண்டு வந்தன. இதைப்பற்றி யாரும் அறியா திருக்க நான்தான் இதை பாம்பு புற்றுள்ள மரத்தடியில்
புதைத்து வைத்தேன். இப்பொழுது விதி மீண்டும் அதை சொத்துக்குடையவரிடம் சேர்த்து விட்டது” என்ற அச்சுதர் “சோழ ராஜகுமாரி! இனி நீங்கள் அரண்மனை செல்லலாம்” என்றும் கூறினார்.
“அரசண்மனைக்கா” என்று வியப்புடன் வினவிய வண்ணம் எழுந்திருந்தாள் அரசகுமாரி.
“ஆம்” என்றார் அச்சுதர்.
“இவர், என் தந்தை, எப்படி வரமுடியும் அரண்மனைக்கு?” என்று கேட்டாள் அரசகுமாரி அச்சுதனை நோக்கி.
“அவர் அரண்மனைக்கு அவர் போகத் தடை ஏது?” என்று வினவினார் அச்சுதர்.
அந்தக் கேள்வியே அரசகுமாரியை அசரவைத்ததென்றால் விஜயாலயன் கேள்வி அவளைப் பெரும் பிரமைக்கு அடிமையாக்கியது. “அச்சுதரே! இப்பொழுது நாழிகை எத்தனை?” என்று வினவினான் விஜயாலயன்.
“உச்சிவேளை” என்றார் அச்சுதர்.
அதைக் கேட்ட விஜயாலயன், “மகளே! அரண்மனைக்குச் செல்வோம் வா” என்று கூறி மஞ்சத்திலிருந்து தானும் எழுந்தார்.
அவள் தயங்கினாள். “இந்த இல்லத்தைச் சுற்றியுள்ள வஞ்சிக்காவலர்?” என்றும் வினவினாள் தயக்கத்துடன்.

.
விஜயாலயன் சர்வ சகஜமாகச் சொன்னார் “சிறையிலிருப்பார்கள்” என்று. அத்துடன் “வஞ்சி என் கைவசமிருக்கிறது” என்றார் ஏதோ சாதாரண விஷயத்தைச் சொல்வது போல.
அரசகுமாரி மோகனச்சிலையாகவே ஆகிவிட்டாள். அந்தச் சமயத்தில் அவளை எழுப்பவோ அரண்மனை முரசும் தூரி வாத்தியங்களும் பெரிதாக சப்தித்தன.

Previous articleMohana Silai Ch 7 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here