Home Historical Novel Mohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

122
0
Mohana Silai Ch 9 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 9. வஞ்சி நகர் வீழ்ந்த கதை

Mohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

விஜயாலயச் சோழ தேவர் “வஞ்சி என் கையிலிருக்கிறது” என்று சர்வ சாதாரணமாக அறிவித்து மகளை அரண்மனைக்கு வரும்படி அழைத்ததும் வஞ்சிநகர்ச் செல்வி அசந்தே போய் சிலையென நின்றாள் சில விநாடிகள். சோழ மன்னர்
சொன்னதை உண்மையென்று நிரூபிக்க அரண்மனை வாத்யங்களும் முரசுகளும் முழங்கியதால் சுயநிலையைச் சிறிதளவு வரவழைத்துக்கொண்ட அரசகுமாரி, புதிதாக முளைத்திருக்கும் தந்தையை நோக்கி, “இத்தனை விரைவில்
வஞ்சியை எப்படிக் கைப்பற்றினீர்கள்?” என்று வினவினாள்.
விஜயாலயன் இதழ்களில் இளநகை அரும்பிற்று. அவன் வலது கை மகளை ஆதரவுடன் தன்னிடம் இழுத்துக் கொண்டது. “கைப்பற்றி சில நாட்களாகின்றன. அறிவிப்பதற்குத்தான் சமயம் பார்த்திருந்தேன்” என்று கூறி பெண்ணின்
தலையைத் தனது இடது கையால் கோதி விட்டான்.
அவன் ஒவ்வொரு ஸ்பரிசமும் அரசகுமாரியின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடவே அவள் சிலிர்க்கும் உடலுடனும் துடிக்கும் உதடுகளுடனும் கேட்டாள். “முன்பே பிடித்திருந்தால் இவரை ஏன் கோட்டைவாயில் காவலர்கள் தடுத்தார்கள்,
பிடிக்க முற்பட்டார்கள்?” என்று சொல்லி இதயகுமாரனைச் சுட்டிக் காட்டினாள்.
“அப்பொழுது வஞ்சிநகர்க் கோட்டையும் அரண்மனையும் என் கைவசமில்லை. தவிர, இதயகுமாரனுக்கும் முழு விவரம் தெரியாது” என்று விளக்கினான் விஜயாலயன்.
மேலும் ஏதோ கேட்க முற்பட்ட அரசகுமாரியைத் தடுத்த விஜயாலயன், “மகளே! இங்கு நாம் நின்றுகொண்டேயிருந்தால் உன்னை வரவேற்கக் காத்துக்கொண்டிருக்கும் சோழ வீரர்கள் பொறுமை இழப்பார்கள். தங்கள் அரசகுமாரியை
உரிய நிலையில் பார்க்க அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்று அறிவித்து “வா அரண்மனை செல்வோம்” எனக் கூறிவிட்டு பழைய படி சுரங்கப்படிகளில் ஏறிச் சென்றான். அவனைத் தொடர்ந்து அரசகுமாரியும், அவளுக்குப்
பின்னால் அச்சுதக் கொல்லரும் படிகளில் ஏறிச் சென்றார்கள்.
அவர்களைத் தொடராத இதயகுமாரன், “மன்னவா” என்று குரல் கொடுத்தான். உச்சிப்படி வரை ஏறிவிட்டசோழ மன்னன் திரும்பிப் பார்த்தான். “என்ன இதயகுமாரா?” என்று கேள்வியையும் வீசினான்.
“இளையவேளை என்ன செய்யட்டும்?” என்று வினவினான் இதயகுமாரன்.
“அவனைச் சிறைசெய்ய வீரர்களை அனுப்புவோம். அதுவரை மாரவேள் அவனைக் கவனித்துக்கொள்வார்” என்ற சோழமன்னர் மேற்படியிலிருந்த வண்ணம் கூறிவிட்டு கதவைத் திறந்து கொண்டு சென்றுவிட்டார்.
அரசகுமாரியும் அச்சுதக்கொல்லருங்கூட அவருடன் சென்றதும் மாரவேளை நோக்கிய இதயகுமாரன் பெரியவரே! இளையவேள் வாலிபன். தாங்கள் வயோதிகர்” என்று நிலைமையைச் சுட்டிக் காட்டினான்.
மாரவேள் பழையபடி பயங்கரமாகச் சிரித்தார். “வாலிபன் நிலை எப்படியிருக்கிறது பார்ப்போம் வா” என்று சிரிப்பின் ஊடே கூறிக்கொண்டு அடுத்த அறைக்கு இதயகுமாரனை அழைத்துச் சென்றார்.
அந்த அறையில் எந்த நிலையில், எந்த மயக்கத்தில் விடப்பட்டானோ அதே நிலையில் தரையில் சாய்ந்து கிடந்தான் இளையவேள். அவன் முன்பாக மண்டியிட்டு அவன் கண்களைத் திறக்க முற்பட்டான் இதயகுமாரன். ஆனால், அது
சாத்தியமற்றதாயிற்று. இரு விரல்களால் இதயகுமாரன் அவன் கண்களை இரு முறை திறந்தாலும் அவன் பஞ்சடைந்த கண்களை இமைகள் மீண்டும் மூடிக் கொள்ளவே செய்தன. தலையை ஒருமுறை திருப்பிப் பார்த்தான் இதயகுமாரன்.
இளையவேளின் தலை துவண்டு விழுந்தது மறுபுறம். “மாரவேள்! தங்கள் பிடி மரணப் பிடி போலிருக்கிறது. அவன் இதிலிருந்து விழிப்பானா அல்லது…” என்று கேட்ட இதயகுமாரன் வாசகத்தை முடிக்கவில்லை.
“விழிப்பான். ஆனால், விழிக்க இன்னும் அரை நாள் வேண்டும். குரல்வளையின் இருபுறங்களிலும் ஓடும் ரத்தக் குழாயைப் பிடித்தேன். அது கொடுத்துள்ள மயக்கம் தீருவதற்கு நேரமாகும். தூக்குப் போடுவதும் இதே முறைதான்.
அங்கு கயிறு கழுத்தை இறுக்குகிறது. இங்கு கை இறுக்கிவிட்டது. அங்கு சாகவிடுகிறார்கள். இங்கு நான் அத்தனை தூரம் போகவில்லை. இவனை எப்படியும் பிழைக்க வைத்துவிடு கிறேன். பயப்படாதே” என்று தைரியம் சொன்னார்
மாரவேள்.
“இவன் முகத்தில் நீரடித்துப் பார்ப்போமா?” என்று வினவினான் சோழநாட்டு வாலிபன்.
“நீருக்குத்தான் நஷ்டம். இவன் அப்படி சுலபத்தில் எழுந்திருக்க மாட்டான். அவனை நானே எழுப்புகிறேன் மாலையில். நீ போய் வா” என்று விடைகொடுத்தார் மாரவேள்.
அதற்குமேல் அங்கு நிற்காமல் படிகளில் ஏறிச் சென்றான் இதயகுமாரன், அச்சுதக்கொல்லர் பட்டறைக்கு வந்து கதவைத் திறந்து கொண்டு அவர் இல்லத்துக்கு வெளியே வந்ததும், விட்ட இடத்திலேயே நின்றிருந்த விஜயன் அவனைப்
பார்த்ததும் பல்லைக் காட்டிநகைத்தது. அருகில் வந்து வாயால் அவன் கன்னத்தைத் தடவவும் செய்தது. விஜயன் கழுத்தைக் கட்டிக்கொண்ட இதயகுமாரன் “விஜயா! ஆண் ஆணை முத்தமிடக்கூடாது. நீ அரசகுமாரியை முத்தமிட்டிருக்க
வேண்டும். அவள் கன்னம் எத்தனை அழகாயிருக்கிறது பார்த்தாயா?” என்று அதன் காதில் ஓதினான். பிறகு அதன்மீது ஏறிக்கொண்டு கடிவாளத்தைப் பிடிக்கவே விஜயன் ராஜநடை போட்டது அரண்மனையை நோக்கி.
அரண்மனைக்குச் செல்லும் ராஜவீதியில் மலர்கள் நிரம்பத் தூவப்பட்டிருந்ததால் அவற்றை மிதித்துக் கொண்டு சென்றது விஜயன். எட்டத் தெரிந்த அரண்மனையின் தங்க விதானத்தில் சோழர்களின் புலிக்கொடி மிகக் கம்பீரமாகப்
பறந்து கொண்டிருந்ததையும், சோழவீரர்கள் எங்கும் காவல் புரிந்து கொண்டிருந்ததையும் இதயகுமாரன் கவனித்தான். “இன்று காலையில் அவர்களெல்லாம் எங்கிருந்தார்கள்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்
சோழநாட்டு வாலிபன். இத்தனை ஏற்பாடுகளை முன்னதாகச் செய்துவிட்ட சோழதேவர் தனக்கு எதையும் சொல்லாமல் எதற்காக அனுப்பிவைத்தார் என்றும் எண்ணிப்பார்த்தான். இத்தனை சோழ வீரர்கள் இங்கிருப்பதை சேரநாட்டு
வீரர்கள் எப்படி உணராதிருந்தார்கள் என்றும் தன்னைக் கேள்வி கேட்டுக் கொண்டான். வஞ்சிக்குப் போனதும் இரத்தினக்கொல்லர் அச்சுதர் வீட்டுக்குப் போ என்று மன்னர் உத்தரவு பிறப் பித்தாரே, அது எதற்கு? ஒரு நகரத்தைப்
பிடிப்பதற்கும், இரத்தினக்கொல்லர் இல்லத்திற்குப் போவதற்கும் என்ன சம்பந்தம்? அது கிடக்கட்டும். இந்த இரத்தினக்கொல்லர் உண்மையில் யார்?” என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான்.
அந்த மர்மத்தை அதே நேரத்தில் விஜயாலயன், சேரன் அரண்மனையில் அவிழ்த்துக் கொண்டிருந்தான். புதிதாக முளைத்த தந்தையுடன் இரத்தினக் கொல்லர் இல்லத்திலிருந்து கிளம்பிய அரசகுமாரி, வெளியே வந்ததும் நினைக்கவும்
முடியாத மாற்றங்களைக் கண்டாள். தூரத்தே அரண்மனையின் தலையில் சோழர் புலிக்கொடி பறப்பதைக் கண்டாள். அவள் விஜயாலயனுடன் வெளியே வந்ததும் “பரகேசரிவர்மர் வாழ்க! அரசகுமாரி வாழ்க!” என்ற வாழ்த்துக் குரல்கள்
வெளியே குழுமியிருந்த பெரும் கூட்டத்திலிருந்து எழுந்தது. அந்தக் கூட்டமும் அணிவகுத்து நின்றிருந்ததையும், அவர்கள் இல்லத்தின் படிகளில் இறங்கி வந்ததும் சோழ தேவருக்கும் தனக்கும் தனியாக இரு குதிரைகள் சேணங்கள்
போடப்பட்டுத் தயாராக நிறுத்தப்பட்டிருந்ததையும் கவனித்தாள்.
காவலர் வாழ்த்துக் கூறி வழிவிட, அக்கம்பக்கத்துக் கட்டிடங்களின் மாடிகளிலிருந்து மங்கையர் மலர்தூவ, அரசரை அடுத்துப் புரவியில் அரசகுமாரி ஏறியதும், ஊர்வலம் நகர்ந்தது. முன்னால் சோழதேவரும் சோழர் செல்வியும் செல்ல,
பின்னால் இரத்தினக்கொல்லர் படாடோபடமாக அலங்கரிக்கப்பட்ட தங்கக் கடிவாளமுள்ள புரவியின் சேணத்தைக் கையில் பிடித்து ஏறிப் பின்தொடர, எங்கும் காவலர் பாதுகாக்க, ஊர்வலம் மெதுவாகச் சென்றது. அதுவரை சேரமன்னர்
அங்கு வந்த சமயங்களில்கூடக் காணாத கோலாகலமும் கட்டுப்பாடான ஏற்பாடும், எதிலும் ஒரு நிர்ணயமும் இருந்ததைக் கவனித்துக் கொண்டே அரசகுமாரி சென்றாள். அரண்மனையை அடைந்ததும் அவள் பணிப்பெண்கள்
சோழதேவருக்கும் அவளுக்கும் மங்கல ஆரத்தி எடுத்தார்கள். மகளுடன் சேரன் அரண்மனையில் விஜயாலயச் சோழதேவர் புகுந்ததும் மங்கலவாத்யங்கள் இன்பமாக முழங்கின.
விஜயாலயன் அந்த அரண்மனையை முன்னரே பார்த்தவன் போல் நுழைந்தான். நேராகத் தனது அந்தரங்க அறைக்குச் சென்றான் மகளுடன். பின்னால் வந்த அச்சுத கொல்லரைத் தவிர, மற்றவர்களைப் போகும்படி கையால் சைகை
செய்த விஜயாலயன் அரண்மனை அந்தரங்க அறையிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தான் கம்பீரமாக. மகளை அருகிலிருந்த மஞ்சத்தில் உட்கார வைத்துக் கொண்டான். “மகளே! உன் கதையை நீ கேட்கும் காலம் வந்துவிட்டது. ஆகையால்
சொல்கிறேன்” என்று துவங்கிய விஜயாலயன், “அதற்கு முன்பாக இந்த இரத்தினக் கொல்லரையும் நீ யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும். இவர் வெறும் இரத்தினக் கொல்லர் மட்டுமல்ல, பெரிய ராஜதந்திரி. எனது முதல் அமைச்சர்.
அச்சுதப் பேரறையர் என்று சோழ நாட்டில் இவரை மிகுந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள். இவர் இந்தக் காலத்து சாணக்கியன்” என்று அச்சுதரை அறிமுகப் படுத்தினான்.
அரசகுமாரியின் கண்கள் அச்சுதரை வியப்புடன் நோக்கின. “இத்தனை நாள் இது எனக்குத் தெரியாதே. ஆனால், இவர் எப்படிக் கொல்லரானார்?” என்று விசாரித்தாள்.
“இவருக்கு அந்தக் கலையும் தெரியும். இரத்தினத்தில் இவருக்கு எப்பொழுதுமே பெரிய பைத்தியமுண்டு. உறையூர் பெரிய கொல்லர் இவருடைய இணைபிரியா நண்பர். அவரிடம் இந்தக் கலையைக் கற்றார். அது இப்பொழுது எப்படி
உபயோகப்பட்டது பார். திடீரென வஞ்சி என் கைவசமாயிற்று. இந்த வஞ்சியைக் கைப்பற்றும் திட்டத்தை வகுத்தவர் இவர்தான். முதன்முதலில் இவர் வந்து இங்கு குடியேறினார் இரத்தினக் கொல்லராக. பல பணியாட்களை வைத்துக்
கொண்டார் நகைகளைத் திறமையுடன் செய்ய. பல நாட்டு முத்துக்களையும் வைரங்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டார். அதைப் பத்திரப்படுத்த கொல்லர் வீதியிலிருந்த அந்தப் பெரிய மாளிகையையும் வாங்கினார். எந்த நகை
வணிகரிடமும் நிலவறைகள் உண்டு. போர்க் காலத்தில் பொன்னையும் மணியையும் ஒளித்து வைக்க. அத்தகைய நிலவறை இந்த மாளிகையிலும் இருத்ததால் அதைச் செம்மைப்படுத்தினார், விரிவு படுத்தினார். பிறகு மெள்ள மெள்ள
சோழ நாட்டு வீரர்களைப் பற்பல வணிகத் துறைகளில் ஈடுபடுத்தினார். சோழ நாட்டு வீரர்கள் பல துறைகளில் இங்கு பங்கு கொண்டார்கள். அதற்கு முன்புதான் இணையற்ற கலைஞரான மாரவேளையும் இவர் இங்கு அழைத்துக்
கொண்டார், தமது மாளிகையை அழகுபடுத்த. ஆனால், மாரவேள் இங்கு வந்த போது வேறொரு பணியையும் மனத்தில் வைத்துக் கொண்டு வந்தார். உன் தாயின் சிலையையும் மெள்ள மெள்ள வடித்தார் இரத்தினக் கொல்லர்
வசமிருந்த மோகனச்சிலையிலிருந்து. மாரவேளும் அச்சுதருமாகச் சேர்ந்து சுமார் ஓராண்டு காலத்தில் இந்த வஞ்சியை சோழ வீரர்களால் நிரப்பினார்கள். எந்த சமயத்தில் இதில் நான் பிரவேசிக்க வேண்டுமோ அதையும் நிர்ணயித்தார்கள்.
திட்டமிட்டபடி, நாழிகைப்படி இந்த வஞ்சி கைப்பற்றப்பட்டது. இதன் கோட்டை, கொத்தளம் அத்தனையும் இப்பொழுது என் கைவசமிருக்கிறது. அதுமட்டுமல்ல, எல்லா இரத்தினங்களுக்கும் மேலான நீயும் கிடைத்திருக்கிறாய்” என்று
விளக்கினான் விஜயாலயன். அத்துடன் சொன்னான் “சாணக்கியன் நவநந்தர்களின் தலைநகரத்துக் குள்ளும் இப்படித்தான் தனது சீடர்களை முதலில் அனுப்பி அதைக் கைப்பற்றினான்” என்று.
ஏதோ சொப்பனத்தில் கேட்பது போல் அக்கதையைக் கேட்ட அரசகுமாரி, “நான் எப்படி இங்கு வந்தேன்? எப்படி சேரநாட்டு அரசகுமாரியானேன்?” என்று வினவினாள்.
அதைக் கேட்ட விஜயாலயன் முகத்தில் துயரம் படர்ந்தது. கம்பீரமான கண்களில் சீற்றம் பிறந்தது. “அது ஒரு பயங்கரக் கதை’ என்று அதையும் விவரிக்கத் தொடங்கினான். அவன் துவங்கு முன்பு இன்னொரு கேள்வியையும் வீசினாள்
அரசகுமாரி, ‘என் தாய் எங்கே?” என்று.
விஜயாலயன் ஆசனத்தை விட்டு எழுந்தான். ஒரு விநாடி அவன் பதில் சொல்லவில்லை, உணர்ச்சிகள் உள்ளத்தே சுழன்ற தால், அடுத்த விநாடி உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான். “இறந்து விட்டாள், கொல்லப் பட்டாள்” என்று
வறண்ட குரலில் அறிவித்தான். “இப்பொழுது முழுக்கதையையும் கேள். கேட்டபின் கலங்காதே. உன்னால்தான் அவள் இறந்தாள்” என்றும் சொன்னான்!
“என்னை ஈன்ற போதா?” அரசகுமாரியின் குரல் நடுங்கியது.
“இல்லை.”
“அப்படியானால்?”
விஜயாலயன் கண்களில் கோபம் துளிர்த்தது. “சொல்வதைக் கேள். குறுக்கிடாதே” என்று அவன் சொற்களிலும் சினம் இருந்தது.

Previous articleMohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here