Home Historical Novel Mohana Silai Ch4 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch4 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

71
0
Mohana Silai Ch4 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch4 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch4 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 4. அடைத்த கதவு! அதிகாரக் குரல்!

Mohana Silai Ch4 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

பத்து வீரர்களின் கத்தி முனைகள் தடவி நின்றதைக் கடுகளவும் லட்சியம் செய்யாமல் அவர்கள் கண்ணெதிரிலேயே மிதமிஞ்சிய துணிவுடன் தன்னை அணைத்து அள்ளியெடுத்துப் புரவிமீது இருத்தித் தூக்கிச் சென்றுவிட்டவனும்,
காட்டின் மற்றொரு பகுதியில் ஏதுமே நடக்காதது போல் தன்னுடன் சர்வ சகஜமாக உரையாடி காவலர் அரவம் கேட்ட போது இரண்டாம் முறையும் தன்னைக் குழந்தை போல் எடுத்துத் தோள்மீது போட்டுக் கொண்டு அடவிக்குள்
சென்று விட்டவனும், முடிவில் தனது புரவியையே கொடுத்து இரத்தினக்கொல்லன் வீட்டுக்குப் போகும்படி பணித்தவனுமான அந்த வாலிப முரடனைப் பாராட்டி “இதயகுமாரன் நட்பு கிடைத்தது உன் அதிர்ஷ்டம்” என்று அந்தப் புது
மனிதர் சொன்னதையும், அதை இரத்தினக் கொல்லனான அச்சுதன் ‘உண்மை’ என்று ஆமோதித்ததையும் கண்ட அரசகுமாரியின் இதயத்தில் பலவித எண்ணங்கள் எழுந்து உலாவின.
தன்னை அந்த முரடன் தூக்கிப் போனது அதற்குள் எப்படி இரத்தினக் கொல்லன் இல்லம் வரையில் பரவி விட்டது என்று தன்னைக் கேட்டுக் கொண்ட அரசகுமாரி பெரும் குழுப்பமும் அச்சமும் அடைந்தாள். “இந்தச் செய்தி இத்தனை
துரிதமாக இத்தனை தூரம் பரவி விட்டதால் அரண்மனைக்கு எட்டியிருக்கும். அப்படியானால் என் தோழிகள் என்ன நினைப்பார்கள்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் அவள். இப்படி அந்த வாலிபன் செய்கையால் இத்தனை
அவப்பெயர் தனக்கு உண்டாகியிருக்கும் போது அவனை மீண்டும் சிறை செய்ய தான் ஏன் நேராக அரண்மனை சென்று உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றும், என்ன காரணத்தால் முன்பின் தெரியாத அவன் உத்தரவுப்படி இரத்தினக்
கொல்லன் இல்லத்துக்கு வரவேண்டுமென்றும் கேள்விகளை எழுப்பிக் கொண்ட அரசகுமாரி அவற்றுக்கு விடை காணாமல் தவித்தாள்.
இத்தனையும் போதாதென்று யாரோ ஒரு புதிய மனிதர் தன்னை அரசகுமாரியென வரவேற்றது மட்டுமின்றி அந்த வாலிபன் பெயர் இதயகுமாரன் என்று அறிமுகப்படுத்தியதையும் எண்ணிப் பார்த்து “அத்தனை நேரம் உரையாடிக்
கொண்டிருந்தும் அவர் பெயரை நான் ஏன் கேட்கவில்லை?” என்றும் கேட்டுக்கொண்ட அந்த ஏந்திழை அவன் பெயரைக் கேட்டதும் தனது மனத்தில் சீற்றத்துக்குப் பதில் இன்பம் உலாவுவதை எண்ணி “என்ன கேவலம் இது!” என்று
தன்னை வெறுத்தும் கொண்டாள்.
சீற்றம், குழப்பம், வெறுப்பு ஆகிய இத்தனை உணர்ச்சிகளும் இதயத்தைக் கலக்கியுங்கூட அவற்றையெல்லாம் மறைத்து எழுந்தது இதயகுமாரன் குழந்தை முகம் அவள் மனத்தில். அதன் காரணமாக அவள் இதழ்களில் அரும்பிய இன்ப
இளநகையை அடுத்து “இதயகுமாரன்! என்ன அழகான பெயர்!” என்று அவள் இதயம் முணுமுணுக்கவே செய்தது. அடுத்து விநாடி “பெயர் எதுவானால் என்ன! செய்ததெல்லாம் சுத்த அயோக்கியத்தனம்” என்று அவள் இதயத்தில்
ஊடுருவி இன்ப உணர்ச்சியை உதறிவிட முயன்றாலும், அது முடிய வில்லை. அந்த அயோக்கியத்தனம் தனக்கு வேண்டியிருந்தது போன்ற ஒரு பிரமை அவள் சித்தத்தில் ஏற்படவே செய்தது. அதனால் விரிந்தது மகிழ்ச்சி அவள்
மதிவதனத்தில்.
அரசகுமாரி சிந்தனை வசப்பட்டு நின்றதையும், கடைசியில் மகிழ்ச்சியின் சாயை அவள் முகத்தில் படர்ந்ததையும் அந்தப் புது மனிதர் மட்டுமின்றி இரத்தினக் கொல்லனும் கவனித்ததால் இருவர் முகத்திலும் அதுவரை காணப்பட்ட
கவலைக்குறி மறைந்தது. ஆகவே மீண்டும் இரத்தினக்
கொல்லன் பேசத் தொடங்கி, “இதயகுமாரனிடம் நீங்கள் காட்டும் நட்பு வீண் போகாது அரசகுமாரி” என்று கூறினார்.
இதைக் கேட்ட அரசகுமாரியின் முகத்திலிருந்து மகிழ்ச்சி மறைந்தது. இதயத்தில் எழுந்த கௌரவம் ஏற்கெனவே தலை காட்டிய இன்பத்தை மறைத்தது. விழிகள் அக்கினியைக் கக்கின. “சொற்களின் பொருளை உணர்ந்து பேசுங்கள்
கொல்லரே” என்ற சொற்கள் தணலென உதிர்ந்தன அவள் அதரங்களிலிருந்து.
இரத்தினக்கொல்லர் உடனடியாக அவள் சீற்றத்தைத் தணிக்க முயலவில்லை. அர்த்தமில்லாமல் தமது அறையைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டார். அந்த அறை அவரது பட்டறையாயினும் ஏதோ பெரும் அரசர்களின் அந்தரங்க
அறைபோல் மிக விசாலமாகவும் பெரும் வேலைப்பாடுகள் அமைந்ததாகவும் இருந்தது. அச்சுதர் அமர்ந்து வேலை செய்ய அறை நடுவில் போடப்பட்டிருந்த பட்டுப்பாயே சித்திரக் களஞ்சியமாகக் காட்சியளித்தது. அந்தப் பாயின் சுற்று
முகப்பில் நுண்ணிய பட்டுப் போன்ற வண்ணக் கோரைகளால் பின்னப்பட்டிருந்த மலர்த் தினுசுகளும், பாயின் நட்ட நடுவிலிருந்த செந்தாமரைச் சித்திரமும், அந்த செந்தாமரை இதழ் முகப்புகளில் தெரிந்த பலவகை அப்ஸர மங்கையர்
முகங்களும், அந்தப் பாயின் விலையை நிர்ணயிப்பது எளிதல்ல என்பதை எடுத்துக்காட்டின.
சுவர்களில் பல வீரர்களின் சித்திரங்கள் பல வகைகளில், வண்ணங்களில் தீட்டப்பட்டிருந்ததால் சிலர் புரவி மீதேறிப் பாய்வது போலும், சிலர் போரில் ஈடுபட்டது போலும் காட்சியளித்ததால், ஏதோ வீரர் கூட்டத்தில் நிற்பது போன்ற
பிரமையை, பார்ப்பவர் யாருக்கும் அளித்தன. அந்த வீரர்களோடு சில வீரப் பெண்மகளிரும் புரவியேறி வாள்வீசும் சித்திரங்களும் கலந்திருந்ததால், வீரம் ஆண்களின் தனிச் சொத்தல்ல என்பதை சித்திரம் தீட்டியவன் கைவண்ணமும்
மனவண்ணமும் நிரூபித்தன. அந்தச் சித்திரங்களின் இடையில் கட்டியிருந்த வாட்களின் கைப்பிடிகள் எப்படியெல்லாம் இருக்கலாமென்பதை விளக்க, ஒவ்வொரு பிடியிலும் இரத் தினங்கள் புலி போலும், சிங்கம் போலும், யாளி போலும்
புதைக்கப்பட்டிருந்ததால் சித்திரப்பிடிகள் நிஜப் பிடிகள் போல் காட்சியளித்தன.
பலமுறை தமது அறைச்சுவர்களை அச்சுதன் பார்த்திருந்தாலும் அன்று அனாவசியமாக அவர் அவற்றைக் கவனிப்பதாக அரசகுமாரிக்குத் தோன்றியதால், “இந்த அறையின் மகிமை தமிழ்நாடு அறியும் அச்சுதரே. அதை நீரே திரும்பத்
திரும்பப் பார்த்து மகிழ வேண்டாம்” என்று சீறினாள் அரசகுமாரி, அச்சுதனின் கவனத்தைத் தன்மீது திருப்பி.
அச்சுதன் மெள்ள தனது விழிகளை சித்திரங்களிலிருந்து மீட்டு சித்திரப் பாவையென நின்றிருந்த அரசகுமாரி மீது நிலைக்கவிட்டார். “அதுமட்டும் என்னால் முடியவில்லை அரசகுமாரி” என்றும் சொன்னார் நிதானமாக.
“எது?” அரசகுமாரி உஷ்ணத்துடன் கேட்டாள்.
“இந்த சித்திரங்களை ரசிக்காதிருப்பது” என்றார் அச்சுதன்.
“தினம் பார்த்துக்கொண்டிருக்கும் சித்திரங்கள்தானே இவை?” என்று அரசகுமாரி இகழ்ச்சியுடன் வினவினாள்.
இரத்தினக் கொல்லரின் விழிகள் அவளை உற்று நோக்கின. “அரசகுமாரி! தாங்களுந்தான் தினம் அரங்கனை தரிசிக்கிறீர்கள்…” என்றும் அவர் உதடுகள் முணுமுணுத்தன.
“அதனால்?” அரசகுமாரியின் கேள்வியில் இகழ்ச்சி இருந்தது.
“அலுக்காது பார்க்கக் கூடியவை உலகத்தில் பல இருக்கின்றன” என்றார் அச்சுதன்.
“அது தெய்வ சந்நிதானம், கோவில்…” என்று விளக்கினாள் அரசகுமாரி.
“இதுவும் தெய்வீகக் கலை அரசகுமாரி. அதனால்தான் சிற்பத்தையும் சித்திரத்தையும் பெரியோர்கள் கோவில்களில் இணைத்திருக்கிறார்கள். அந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் ஒருமுறை பார்த்து நாம் திருப்தியடைவதில்லை.
கலையில் இருவிதம். திகட்டாத கலை; திகட்டும் கலை. முந்தியது தெய்வீகமானது. காலத்தால் அழியாதது. பிந்தியது மனத்தில் நிற்காதது. மின்னல் வேகத்தில் சித்தத்திலிருந்து அழியக்கூடியது” இதைச் சொன்ன இரத்தினக் கொல்லன்
பெருமூச்செறிந்தார்.
அவர் பேச்சு, பெருமூச்சு எல்லாமே விசித்திரமாயிருந்தது அரசகுமாரிக்கு. அரண்மனைக்கு எத்தனையோ முறை வந்து தனக்கு ஆபரணங்களை செய்து கொடுத்திருக்கும் இரத்தினக்கொல்லர் இத்தனை கலா ரசிகராயிருப்பாரென்றோ
உணர்ச்சி வசப்படக்கூடியவரென்றோ அன்றுவரை அறியாத அரசகுமாரி, அவர் போக்கு பரம விசித்திரமாயிருந்தாலும் அதைப்பற்றி மீண்டும் பேச்சுக் கொடுக்காமல், “நான் சொன்னது உங்களுக்குப் புரிந்தது என நினைக்கிறேன்”
என்று கூறினாள்.
அச்சுதன் “புரிந்தது” என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினார். “நான் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று திட்டமாகப் பதிலும் சொன்னார்.
“தவறாக ஏதும் சொல்லவில்லையா?” அரசகுமாரியின் குரலில் உக்ரம் ஏறியது மெள்ள.
“இல்லை” – அச்சுதனும் சர்வ சாதாரணமாகப் பதில் சென்னார்.
“இந்தப் புதிய வாலிபனிடம் நான் நட்புக் காட்டியதாகக் கூறினீர்கள்” என்றாள் அரசகுமாரி.
“ஆம்”
“எதைக்கொண்டு அப்படிக் கூறினீர்?”
“நீங்கள் இங்கு என் இல்லத்துக்கு வந்ததிலிருந்து. அவன் சொல்லித்தான் நீங்கள் இங்கு வந்திருக்க வேண்டும்.”
“ஏன், நானாக வந்திருக்கக்கூடாதா?”
“இதுவரை வந்ததில்லை. என்னைத்தான் அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்புவீர்கள். இப்பொழுதும் அப்படிச் செய்திருக்கலாம்” என்று சுட்டிக்காட்டினார் இரத்தினக் கொல்லர்.
“ஆம். செய்திருக்கலாம்” என்ற அரசகுமாரியின் முகம் சிவந்தது, அந்த வாலிபன் சொற்படி தான் அங்கு வந்தது தவறு என்ற நினைப்பில்.
அதுவரை இருவர் உரையாடலையும் எட்ட நின்றே கேட்டுக்கொண்டிருந்த அந்தப் புதுமனிதர் அரசகுமாரியின் அருகே வந்து, “அரசகுமாரி! இதயகுமாரன் கூறியபடி நீ இங்கு வந்தது தவறல்ல. இதயகுமாரன் கண்ணசைத்தால் அவன்
காலடியில் விழத் தயாராயிருக்கும் அழகிகள் உறையூரில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் அவன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நீ அவனை எதிர்பாராத விதமாகச் சந்தித்திராவிட்டால் இத்தனை திடீர் நிகழ்ச்சிகள்
ஏற்பட்டிருக்கமாட்டா. உங்களிருவரையும் விதி வேண்டுமென்றே சந்திக்கவிட்டிருக்கிறது” என்று மிக மெதுவாகக் கூறினார்.
அந்த மனிதர் குரலில் மிகுந்த கண்ணியமும் கம்பீரமும் ஒலித்ததை அரசகுமாரி கவனித்தாள். இருப்பினும் இதயகுமாரனுடைய சிறப்பைப் பற்றி அவர் பேசியது எரிச்சலாயிருந்தது அவளுக்கு. ஆகவே சொன்னாள். “எதற்கும் விதி மீது
பழியைப் போடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது” என்று. இதைச் சொல்லி அவரை ஏறெடுத்தும் நோக்கினாள். மிக விசால முகத்தில் ஈட்டிக்கண்கள் இரண்டு பளபளத்தன. அவற்றின் பார்வையில் அளவிட முடியாத அறிவு, அதிகாரத்
தோரணை இரண்டுமிருந்ததையும், இவற்றுக்கிடையே ஒரு கனவுச் சாயை ஓடியதையும் கவனித்தாள் அரசகுமாரி. நல்ல உயர்ந்த சரீரம், தொடையைத் தொடும் நீண்ட கைகள், உறுதியாகத் தரையில் நின்ற கால்கள்-இவை அவர் சாதாரண
மனிதரல்லவென்பதை எடுத்துக்காட்டின. இடையில் வாள் கச்சையிருந்தாலும் அதில் வாளில்லாததைக் கவனித்தாள் அவள்.
அவள் தன்னை அளவெடுப்பதைக் கண்ட அந்த மனிதர் மிகப் பொறுமையுடன் சில விநாடிகள் நின்ற வண்ணம் ஏதும் பேசாமலிருந்தார். அரசகுமாரியின் ஆராய்ச்சி முடிந்து விட்டதென்பதை உணர்ந்ததும் பேச முற்பட்டு, “அரசகுமாரி!
நீ எதற்காகப் போனாய் காட்டுக்குள்? அதுவும் அவனிருந்த இடத்துக்கு?” என்று வினவினார்.
அவர் கேள்வி அரசகுமாரிக்குப் பெருவியப்பாயிருந்தது. இருப்பினும் வியப்பை அடக்கிக்கொண்டு பதில் சொன்னாள், “இன்று தை வெள்ளிக்கிழமை” என்று.
“அதனாலென்ன?” என்று வினவினார் அவர் மறுபடியும்.
“இந்த வஞ்சிமாநகரின் அரசர்கள் பரம்பரையாக வணங்கும் புற்று அங்குதானிருக்கிறது” என்றாள் அரசகுமாரி.
“அதனால் புற்றுக்குப் பால் தெளித்து நாகபூஜை செய்யச் சென்றாய்?” என்று வினவினார் அந்த மனிதர்.
“ஆம். நான் கொண்டு போன பூஜைத்தட்டு, பால் செம்பு இரண்டும் புற்றுக்கு எட்ட இருந்த மரத்தடியில் இப்பொழுதுமிருக்கும்” என்று அரசகுமாரி கூறினாள். “அப்படிப் பூஜை செய்யப் போனபோது அந்தப் புற்றின் சர்ப்பம்
கொல்லப்பட்டு எட்டக்கிடந்தது. நீங்கள் சொல்லும் வாலிபர் புற்றைக் கிளறிக் கொண்டிருந்தார், ஏதோ ஒரு சிலையையும் முடிவில் எடுத்தார்” என்றும் விளக்கினாள்.
அந்த மனிதர் இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. “அத்தனையும் தெய்வ அபசாரம் என்று நினைத்தாய். இதயகுமாரனைச் சிறைசெய்ய உத்தரவிட்டாய்” என்று சகலத்தையும் நேரில் பார்த்தது போல் கூறினார் அந்த மனிதர்.
அரசகுமாரியின் வியப்பு உச்ச நிலையை அடைந்தது. ‘மீதியும் உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினாள் வியப்பு குரலிலும் ஒலிக்க.
“மீதியை ஊகிப்பது கஷ்டமல்ல, இதயகுமாரன் குணத்தை உணர்ந்தவர்களுக்கு. ஆனால் நான் ஊகிக்கவில்லை. அரசகுமாரியை யாரோ ஒருவன் தூக்கிக்கொண்டு ஓடி விட்டான் என்ற செய்தியை வீரனொருவன் இங்கு வந்து
சொல்லவே நானும் அச்சுதனும் அந்த இடத்துக்கு விரைந் தோம். இதயகுமாரன் குறுவாளால் படம் ஊடுருவப்பட்ட சர்ப்பத்தையும், கிளறப்பட்ட புற்றையும், விஜயனின் பெரும் குளம்படிகளையும் பார்த்தோம். நடந்ததைப் புரிந்து
கொண்டோம். பிறகு திரும்பி இங்கு வந்து உனக்காகக் காத்திருந்தோம்” என்று விளக்கினார் அந்த மனிதர்..
அரசகுமாரி ஒரு விநாடி அந்த மனிதரையும் பார்த்து இரத்தினக்கொல்லரையும் பார்த்தாள். “நீர் ஏன் பேசாமலிருக்கிறீர்?” என்று வினவவும் செய்தாள்.
“பேசுவது ஆபத்தாயிருக்கிறது” என்றார் அச்சுதன்.
முதலில் அவர் பேச்சைத் தான் ஆட்சேபித்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அரசகுமாரி, “ஒழுங்கான பேச்சு எதிலும் ஆபத்தில்லை” என்று பதில் சொன்னாள்.
“இரத்தினக்கொல்லன் ஒழுங்கீனமாகப் பேசுவதாக இன்றுவரை யாரும் சொன்னதில்லை” என்று சுட்டிக் காட்டினார் அச்சுதர்.
அரசகுமாரி மேற்கொண்டு ஏதும் சொல்ல முடியாமல் தவித்தாள். ஆகவே அவள் உதவிக்கு அந்தப் புதிய மனிதரே வந்தார். “அரசகுமாரி! நீ அனாவசியமாகத் தவறு கண்டுபிடிக்கிறாய். இதயகுமாரனிடம் நீ நட்பு காட்டியதாக நான்
கூறியதிலோ, அதை அச்சுதர் ஆமோதித்ததிலோ எந்தத் தவறும் இல்லை. நட்பு புனிதமானது. அது காதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நீ இதயகுமாரனைக் காட்டிக்கொடுக்காமல் அவன் சொற்படி நடந்ததால் ஒரு
சிறந்த வீரன் கண்ணியத்தை, நல்லெண்ணத்தை நீ புரிந்து கொண்டிருக்கிறாய் என்பதை வலியுறுத்தவே நான் அந்தச் சொல்லை உபயோகித்தேன்” என்று சமாதானப்படுத்தினார் அந்த மனிதர்.
அந்த மனிதரின் ஆறுதல் சொற்கள் உண்மையில் எந்த ஆறுதலையும் அளிக்கவில்லை. “இச்சக வார்த்தைகள்” என்று அரசகுமாரி சீறினாள்.
“ஆனால், வஞ்சக வார்த்தைகளல்ல” என்றார் அந்த மனிதர்.
அரசகுமாரிக்கு ஏதுமே புரியவில்லை. கடைசியில் அச்சுதனை நோக்கி, “அச்சுதரே! இவர் யார்? இவர் இந்த நாட்டவரா?” என்று வினவினாள்.
“இல்லை. ஆனால் இந்த நாட்டின் விமோசனம் இவர் கையில்தான் இருக்கிறது” என்றார் அச்சுதர் பணிவு நிரம்பிய குரலில்.
“நீர் சொல்வது விளங்கவில்லை” என்றாள் அரசகுமாரி.
“நான் விளங்க வைக்கிறேன். முதலில் அவர் பாதங்களில் வணங்குங்கள் அரசகுமாரி” என்ற சொற்களைக் கேட்டுச் சட்டென்று திரும்பினாள் அரசகுமாரி.
அறை வாயிற்படியில் இதயகுமாரன் நின்றிருந்தான், கையில் அந்த மோகனச் சிலையுடன். எதிரே நின்றவரின் அடி பணியும்படி கையால் சைகையும் காட்டினான்.
அரசகுமாரி வணங்கவில்லை. அதிகாரத்துடன் தலை நிமிர்ந்து நின்றாள். அந்தச் சமயத்தில் வெளியே புரவிகளிலிருந்து வீரர் பலர் குதிக்கும் காலடிச் சத்தம் கேட்டது. விடுவிடு என்று சாளரத்தை நோக்கி நடந்து வெளியே நோக்கிய
இரத்தினக்கொல்லர் அறைக்குள் திரும்பி, “இந்த இல்லத்தை வஞ்சிக் காவலர் சூழ்ந்து விட்டார்கள்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் அந்தப் புது மனிதரோ இதயகுமாரனோ சிறிதளவும் கலக்கமடையாததையும், இதயகுமாரன் விநாடி நேரத்தில் வாயிற்படியைத் தாண்டி அறைக்குள் வந்து அறைக்கதவைத் தாளிட்டுவிட்டதையும் கண்ட
அரசகுமாரி, அவன் துணிவு அத்துமீறிப் போவதை உணர்ந் தாள். அடுத்த விநாடி அறைக்கதவு தடதடவெனத் தட்டப்பட்டது. திற கதவை. இல்லையேல் கதவு உடைக்கப்படும்” என்ற அதிகாரக் குரலும் பலமாகக் கேட்டது.

Previous articleMohana Silai Ch3 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 5 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here