Home Kalki Mohini Theevu Ch 1 | Kalki

Mohini Theevu Ch 1 | Kalki

102
0
Mohini Theevu Ch 1 | Kalki | Read Mohini Theevu Free Mohini Theevu is an historical novel by Kalki. Mohini Theevu has 10 chapters and its good story to read. Mohini theevu free download, mohini theevu pdf, download mohini theevu, mohini theevu audiobook
Mohini Theevu ch 1 மோகினித் தீவு முதல் அத்தியாயம்

Mohini Theevu Ch 1 | Kalki

மோகினித் தீவு

முதல் அத்தியாயம்

Mohini Theevu Ch 1 | Kalki

இரங்கூனியிலிருந்து புறப்பட்ட கப்பலில் இடம் கிடைத்த வரையில் நான் பாக்கியசாலிதான் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் கப்பலில் பிரயானம் செய்ய நேர்ந்ததை ஒரு பாக்கியம் என்று சொல்ல முடியாது. நரகம் என்பதாக ஒன்று இருந்தால் அது கிட்டத்தட்ட அந்தக் கப்பலைப் போலத்தான் இருக்க வேண்டும். அது ஒரு பழைய கப்பல். சாமான் ஏற்றும் கப்பல். அந்தக் கப்பலில் இந்தத் தடவை நிறையச் சாமான்களை ஏற்றியிருந்ததோடு ‘ஐயா! போகட்டும்!’ என்று சுமார் ஆயிரம் ஜனங்களையும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பாரம் தாங்க மாட்டாமல் அந்தக் கப்பல் திணறியது. கப்பல் நகர்ந்த போது பழைய பலகைகளும் கீல்களும் வலி பொறுக்கமாட்டாமல் அழுந்தின. அதன் மீது பலமான காற்று அடித்தபோது ஆயிரங்கட்டை வண்டிகள் நகரும் போது உண்டாகும் சத்தம் எழுந்தது. அந்தக் கப்பலில் குடிகொண்டிருந்த அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் சொல்ல முடியாது. இப்போது நினைத்தாலும் குடலைப் பிடுங்கிக்கொண்டு வருகிறது. ஆயிரம் ஜனங்கள், பலநாள் குளிக்காதவர்கள், உடம்பு வியர்வையின் நாற்றமும், தலை மயிர் சிக்குப் பிடித்த நாற்றமும், குழந்தைகள் அசுத்தம் செய்த நாற்றமும், பழைய ரொட்டிகள், ஊசிப்போன தின்பண்டங்களின் நாற்றமும் “கடவுளே! எதற்காக மூக்கைப் படைத்தாய்!” என்று கதறும்படி செய்தன.

கப்பலில் ஏறியிருந்த ஜனங்களின் பீதி நிறைந்த கூச்சலையும் ஸ்திரீகளின் சோகப் புலம்பலையும் குழந்தைகளின் காரணமில்லாத ஓலத்தையும் இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது. ஒவ்வொரு சமயம், ‘இந்த மாதிரி ஜனங்கள் உயிர் பிழைத்து இந்தியா போய்ச் சேருவதிலே யாருக்கு என்ன நன்மை? இந்தக் கப்பல் கடலில் முழுகிப் போய் விட்டால் கூட நல்லது தான்!’ என்ற படுபாதகமான எண்ணம் கூட என் மனத்தில் தோன்றியது. உலகமெங்கும் பரவியிருந்த ராட்சத யுத்தத்தின் விஷக்காற்று இப்படி எல்லாம் அப்போது மனிதர்களின் உள்ளத்தில் கிராதக எண்ணங்களை உண்டு பண்ணியிருந்தது.

இவ்விதம் அந்த அழகான கப்பலில் ஒரு நாள் பிரயாணம் முடிந்தது. மறுநாள் பிற்பகலில் கம்பி இல்லாத தந்தி மூலம் பயங்கரமான செய்தி ஒன்று வந்தது. ஒரு ஜப்பானிய ‘குருஸர்’ அந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்தச் செய்தி. கப்பலின் காப்டனுக்கு இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது என்பது எப்படியோ அந்தக் கப்பலிலிருந்த அவ்வளவு பேருக்கும் சிறிது நேரத்துக்கெல்லாம் தெரிந்து போய் விட்டது. கப்பல் நாயகனுக்கு வந்த செய்தி ஒரே ‘குரூஸர்’ கப்பலைப் பற்றியதுதான். கப்பல் பிரயாணிகளுக்குள் அந்தச் செய்தி பரவிய போது ஒரு ‘குரூஸர்’ ஒரு பெரிய ஜப்பானியக் கப்பற்படை ஆகிவிட்டது! ஸப்மரின் என்னும் நீர்முழ்கிகளும், டிஸ்ட்ராயர் என்னும் நாசகாரிகளும், டிரெட்நாட் கப்பல்களும் விமானதளக் கப்பல்களுமாகப் பேச்சு வாக்கில் பெருகிக் கொண்டே போயின. ஏற்கெனவே பயப் பிராந்தி கொண்டிருந்த ஜனங்களின் நிலைமையை இப்போது சொல்ல வேண்டியதில்லை. இராவணன் மாண்டு விழுந்த செய்தியைக் கேட்ட இலங்காபுரி வாசிகளைப் போல் அவர்கள் அழுது புலம்பினார்கள்.

இதுகாறும் சென்னைத் துறைமுகத்தை நோக்கிச் சென்ற கப்பல், இப்போது திசையை மாற்றிக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்றது. ஓர் இரவும் ஒரு பகலும் பிரயாணம் செய்த பிறகு சற்றுத் தூரத்தில் ஒரு தீவு தென்பட்டது. பசுமை போர்த்த குன்றுகளும், பாறைகளும் வானளாவிய சோலைகளும் அந்தத் தீவில் காணப்பட்டன. திருமாலின் விசாலமான மார்பில் அணிந்த மரகதப் பதக்கத்தைப் போல் நீலக் கடலின் மத்தியில் அந்தப் பச்சை வர்ணத் தீவு விளங்கியது; மாலை நேரத்துச் சூரியனின் பசும்பொன் கிரணங்கள் அந்த மரகதத் தீவின் விருட்சங்களின் உச்சியைத் தழுவி விளையாடிய அழகைக் கம்பனையும் காளிதாசனையும் போன்ற மகாகவிகள் தான் வர்ணிக்க வேண்டும். எந்த நிமிஷத்தில் கப்பலின் மீது ஜப்பானியக் குண்டு விழுந்து கூண்டோ டு கைலாசமாகக் கடலில் முழுகப் போகிறோமோ என்று பீதி கொண்டிருந்த நிலைமையிலே கூட அந்தத் தீவின் அழகைப் பார்த்த உடனே பிரயாணிகள் ‘ஆஹா’ காரம் செய்தார்கள்.

கப்பல், தீவை நெருங்கிச் செல்லச் செல்ல பிரயாணிகளுக்கு மறுபடியும் கவலை உண்டாயிற்று; அந்தத் தீவின் மேலே கப்பல் மோதி விடப் போகிறதே என்றுதான். ஆனால், அந்தப் பயம் சடுதியில் நீங்கிற்று. தீவின் ஒரு பக்கத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து சென்று ஓர் இயற்கை ஹார்பரைச் சிருஷ்டித்திருந்தது. அந்தக் கடல் நீர் ஓடைக்குள்ளே கப்பல் புகுந்து சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் கப்பல் நின்றது. நங்கூரமும் பாய்ச்சியாயிற்று. கப்பல் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் நாலாபுறமும் பச்சைப் போர்வை போர்த்திய குன்றுகள் சூழ்ந்திருந்தன. வெளியிலே அகண்ட சமுத்திரத்தில் பிரயாணம் செய்யும் கப்பல்களுக்கு அந்த இயற்கை ஹார்பருக்குள்ளே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்பது தெரிய முடியாது.

கப்பல் நின்று, சிறிது நேரம் ஆனதும் நானும் இன்னும் சிலரும் கப்பல் நாயகரிடம் போனோம். நிலைமை எப்படி என்று விசாரித்தோம். “இனி அபாயம் ஒன்றுமில்லை; கம்பியில்லாத் தந்தியில் மறுபடி செய்தி வரும் வரையில் இங்கேயே நிம்மதியாயிருக்கலாம்” என்றார் காப்டன். பிறகு அந்தத் தீவைப் பற்றி விசாரித்தோம். அதற்குப் பெயர் ‘மோகினித் தீவு’ என்று காப்டன் கூறி, இன்னும் சில விவரங்களையும் தெரிவித்தார். இலங்கைக்குத் தென்கிழக்கே மூன்று நாள் பிரயான தூரத்தில் அந்தத் தீவு இருக்கிறது. அநேகருக்கு அத்தகைய தீவு ஒன்று இருப்பதே தெரியாது. தெரிந்தவர்களிலும் ஒரு சிலருக்குத் தான் இம்மாதிரி அதற்குள்ளே கடல் புகுந்து சென்று இரகசிய இயற்கை ஹார்பர் ஒன்றைச் சிருஷ்டித்திருக்கிறது என்று தெரியும். அது சின்னஞ் சிறிய தீவுதான். ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு மூன்று காத தூரத்துக்கு மேல் இராது. தற்சமயம் அந்தத் தீவில் மனிதர்கள் யாரும் இல்லை. ஒரு காலத்தில் நாகரிகத்தில் சிறந்த மக்கள் அங்கே வாழ்ந்திருக்க வேண்டுமென்பதற்கான சின்னங்கள் பல இருக்கின்றன. அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம் முதலிய இடங்களில் உள்ளவை போன்ற பழைய காலத்துச் சிற்பங்களும், பாழடைந்த கோயில்களும் மண்டபங்களும் அத் தீவில் இருக்கின்றன. வளம் நிறைந்த அத்தீவில் மக்களைக் குடியேற்றுவதற்குச் சிற்சில முயற்சிகள் செய்யப்பட்டன. அவை ஒன்றும் பலன் தரவில்லை. சில நாளைக்கு மேல் அந்தத் தீவில் வசிப்பதற்கு எவரும் இஷ்டப்படுவதில்லை. ஏதேதோ கதைகள் பல அத்தீவைப் பற்றிச் சொல்லப்படுகின்றன.

“அதோ தெரிகிறதே அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்த்தால் நான் சொன்ன பழைய காலத்துச் சிற்ப அதிசயங்களையெல்லாம் பார்க்கலாம். இதற்கு முன்னால் ஒரே ஒரு தடவை நான் அக்குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கிறேன். ஆனால் தீவுக்குள்ளே போய்ப் பார்த்தது கிடையாது!” என்றார் கப்பல் நாயகர்.

இதைக் கேட்டதும் அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்க்க வேண்டும் என்கிற அடக்க முடியாத ஆர்வம் என் மனத்தில் ஏற்பட்டு விட்டது. பழைய காலத்துச் சிற்பம், சித்திரம் இவற்றில் எனக்கு உள்ள சபலம் தான் உமக்குத் தெரியுமே! காப்டன் கூறிய விவரங்களைக் கேட்ட இன்னும் சிலரும் என் மாதிரியே ஆசை கொண்டதாகத் தெரிந்தது. எல்லாருமாகச் சேர்ந்து கப்பல் நாயகரிடம், “இங்கே கப்பல் வெறுமனே தானே நின்று கொண்டிருக்கிறது? படகிலே சென்று அந்தக் குன்றின் மேல் ஏறிப் பார்த்து விட்டு வரலாமே?” என்று வற்புறுத்தினோம். கப்பல் நாயகரும் கடைசியில் எங்கள் விருப்பத்துக்கு இணங்கினார்.

“இப்போதே மாலையாகிவிட்டது. சீக்கிரத்தில் திரும்பி வந்து விட வேண்டும். நான் இல்லாத சமயத்தில் ஏதாவது முக்கியமான செய்தி வரலாம் அல்லவா?” என்று சொல்லிவிட்டுக் கப்பலில் இருந்த படகுகளில் ஒன்றை இறக்கச் சொன்னார். காப்டனும் நானும் இன்னும் நாலைந்து பேரும் படகில் ஏறிக் கொண்டோ ம். தாம் இல்லாதபோது ஏதேனும் செய்தி வந்தால் தமக்குக் கொடி சமிக்ஞை மூலம் அதைத் தெரியப்படுத்துவது எப்படி என்று தம்முடைய உதவி உத்தியோகஸ்தரிடம் காப்டன் தெரிவித்துவிட்டுப் படகில் ஏறினார்.

அந்த இடத்தில் கொந்தளிப்பு என்பதே இல்லாமல் தண்ணீர்ப் பரப்பு தகடு போல இருந்தது. படகை வெகு சுலபமாகத் தள்ளிக் கொண்டு போய்க் கரையில் இறங்கினோம். கரையோரமாகச் சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு வசதியான ஓர் இடத்தில் குன்றின் மீது ஏறினோம். குன்றின் உயரம் அதிகம் இல்லை. சுமார் ஐந்நூறு அல்லது அறுநூறு அடிதான் இருக்கலாம். என்றாலும் சரியான பாதை இல்லாதபடியால் ஏறுவதற்குச் சிரமமாகவே இருந்தது. மண்டி வளர்ந்திருந்த செடிகள் கொடிகளுக்குள்ளே புகுந்து அவற்றைக் கையால் ஆங்காங்கே விலக்கி விட்டுக் கொண்டு ஏற வேண்டியிருந்தது. “முன்னே நான் பார்த்ததற்கு இப்போது காடு அதிகமாக மண்டி விட்டது” என்றார் கப்பல் நாயகர். நல்ல வேளையாக அப்படி மண்டியிருந்த செடிகள் முட்செடிகள் அல்ல. ஆகையால் அரைமணி நேரத்துக்குள் குன்றின் உச்சிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

சூரியன் மறையும் தருணம். மஞ்சள் வெயிலின் கிரணங்கள் இன்னமும் அந்தப் பச்சைத் தீவின் உச்சிச் சிகரத்தின் மீது விழுந்து அதற்குப் பொன் மகுடம் சூட்டிக் கொண்டிருந்தன.

“அதோ பாருங்கள்!” என்றார் கப்பல் நாயகர்.

அவர் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினோம். பார்த்த கண்கள் பார்த்தபடியே அசைவின்றி நின்றோம். ‘திகைத்தோம்’, ‘ஸ்தம்பித்தோம்’, ‘ஆச்சரியக் கடலில் மூழ்கினோம்’ என்றெல்லாம் சொன்னாலும், உள்ளபடி சொன்னதாகாது. இந்த உலகத்தை விட்டு வேறோர் அற்புதமான சொப்பனலோகத்துக்குப் போய்விட்டோ ம் என்று சொன்னால் ஒரு வேளை பொருத்தமாயிருக்கலாம். வரிசை வரிசையாக விஸ்தாரமான மணி மண்டபங்களும், கோயில் கோபுரங்களும், ஸ்தூபங்களும், விமானங்களும் கண்ணுக்கு எட்டிய தூரம் காட்சி அளித்தன. பர்மாவில் உள்ளவை போன்ற புத்த விஹாரங்கள், தமிழகத்தில் உள்ளவை போன்ற விஸ்தாரமான பிராகார மதில்களுடன் கூடிய கோயில்கள், வானளாவிய கோபுரங்கள், தேர்களைப் போலும், ரதங்களைப் போலும் குன்றுகளைக் குடைந்து அமைத்த ஆலயங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள், ஸ்தூபி வைத்த விமானங்கள், ஸ்தூபியில்லாத மாடங்கள், பாறைகளில் செதுக்கிய அபூர்வமான சிற்பங்கள், நெடிய பெரிய சிலைகள், ஆகா! அவ்வளவையும் பார்ப்பதற்கு ஆண்டவன் இரண்டே கண்களைக் கொடுத்திருப்பது எவ்வளவு பெரிய அநியாயம் என்று தோன்றியது.

அந்தக் காட்சியைப் பார்க்கப் பார்க்க ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தது! இன்னொரு பக்கத்தில் காரணந் தெரியாத மனச் சோர்வும், உற்சாகக் குறைவும் ஏற்பட்டன. ‘காரணந் தெரியாத’ என்று சொன்னேனா? தவறு! தவறு! காரணம் தெளிவாகவே இருந்தது. அந்த அதிசயச் சிற்பங்கள் எல்லாம் மிகமிகப் பழைமையானவை; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மகாபுருஷர்களாலோ கட்டப்பட்டவை. நெடுங்காலமாகப் பழுது பார்க்கப் படாமலும் செப்பனிடப்படாமலும் கேட்பாரற்றுக் கிடந்து வருகிறவை; நாலாபுறமும் கடலில் தோய்ந்து வரும், உப்புக் காற்றினால் சிறிது சிறிதாகத் தேய்ந்து மழுங்கிப் போனவை. ஒரு காலத்தில் இந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் குதூகலமாயும், கோலாகலமாயும் கலைப்பண்பு நிறைந்த வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். இப்போதோ அத்தீவு ஜனசூனியமாக இருக்கிறது. சிற்பங்களும் சிலைகளும் மாளிகைகளும், மண்டபங்களும், பாழடைந்து கிடக்கின்றன. வௌவால்களும், நரிகளும் எலிகளும் பெருச்சாளிகளும் அந்த மண்டபங்களில் ஒரு வேளை வாசம் செய்யக் கூடும். அந்தத் தீவைப் பார்த்தவுடன் உண்டாகிய குதூகலத்தைக் குறைத்து மனச்சோர்வை உண்டாக்குவதற்கு இந்த எண்ணம் போதாதா?…

சற்று நேரம் நின்ற இடத்தில் நின்று பார்த்த பிறகு எங்களில் ஒருவர், தீவின் உட்புறம் சென்று மேற் கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் அருகிலே போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். என் மனத்திலும் அத்தகைய ஆசை ஏற்பட்டிருந்தபடியால் அவருடைய யோசனையை நான் ஆமோதித்தேன். ஆனால் கப்பல் நாயகர் அதற்கு இணங்கவில்லை. இருட்டுவதற்குள்ளே கப்பலுக்குப் போய்விடவேண்டும் என்று வற்புறுத்தினார்; “இராத்திரியில் இந்தத் தீவில் தங்குவது உசிதமில்லை. மேலும் நாம் சீக்கிரம் கப்பலுக்குத் திரும்பாவிட்டால் கப்பலில் உள்ள பிரயாணிகள் வீணாகப் பீதி கொள்வார்கள். அதனால் ஏதேனும் விபரீதம் விளைந்தால் யார் ஜவாப்தாரி? கூடாது! வாருங்கள் போகலாம்!”

அவர் கூறியபடியே நடந்து காட்டினார். அவரைப் பின்பற்றி மற்றவர்களும் போனார்கள். நானும் சிறிது தூரம் அவர்களைத் தொடர்ந்து போனேன்; ஆனால், போவதற்கு என் உள்ளம் இணங்கவில்லை. கால்கள் கூடத் தயங்கித் தயங்கி நடந்தன. ஏதோ ஒரு மாய சக்தி என்னைப் போக வொட்டாமல் தடுத்தது. ஏதோ ஒரு மர்மமான குரல் என் அகக்காதில் ‘அப்பனே! இந்த மாதிரி சந்தர்ப்பம் உன் ஆயுளில் இனி ஒரு முறை கிடைக்குமா? அந்த மூடர்களைப் பின் தொடர்ந்து நீயும் திரும்பிப் போகிறாயே!’ என்று சொல்லிற்று. குன்றின் சரிவில் அவர்கள் இறங்கத் தொடங்கிய பிறகு நான் மட்டும் ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டேன்.

அப்படி ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. அந்தத் தீவின் கரையிலிருந்து கொஞ்ச தூரத்திலே தான் கப்பல் நின்றது. இங்கிருந்து சத்தம் போட்டுக் கூப்பிட்டால் கப்பலில் உள்ளவர்களுக்குக் காது கேட்டுவிடும்.

இராத்திரி எப்படியும் கப்பல் கிளம்பப் போவதில்லை. ‘பொழுது விடிந்த பிறகுதான் இனிப் பிரயாணம்’ என்று கப்பல் நாயகர் சொல்லி விட்டார். பின் எதற்காக அந்த நரகத்தில் ஓர் இரவைக் கழிக்க வேண்டும்? அப்பப்பா! – அந்தக் கப்பலில் எழும் துர்நாற்றமும் பிரயாணிகளின் கூச்சலும்! அதையெல்லாம் நினைத்தாலே குடலைக் குமட்டியது. அந்தக் கப்பலுடனே ஒப்பிடும்போது இந்தத் தீவு சொர்க்கத்துக்கு சமானமல்லவா? தீவில் துஷ்ட மிருகங்களே இல்லையென்று கப்பல் நாயகர் நிச்சயமாய்ச் சொல்லியிருக்கிறார். பின் என்ன பயம்? சிறிது நேரத்துக்கெல்லாம் பூரண சந்திரன் உதயமாகி விடும். பால் நிலவில் அந்தத் தீவின் அற்புதங்கள் மேலும் சோபை பெற்று விளங்கும் – இவ்விதமெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே, மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன்.

போனவர்கள் படகில் ஏறினார்கள். கயிற்றை அவிழ்த்து விட்டார்கள். படகு கொஞ்ச தூரம் சென்றது. அப்புறம் யாரோ நான் படகில் இல்லையென்பதைக் கவனித்திருக்க வேண்டும். படகு நின்றது. காப்டனும் மற்றவர்களும் சர்ச்சை செய்யும் சத்தமும் கேட்டது. மறுபடியும் படகு இந்தக் கரையை நோக்கி வந்தது. என் நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது. கரை ஓரமாகப் படகு வந்து நின்றதும் கையைத் தட்டினார்கள். உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்கள். காப்டன் கைத்துப்பாக்கியை எடுத்து ஒரு தடவை வெடித்துத் தீர்த்தார். மேலும், சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தார்கள். நானோ அசையவில்லை. மறுபடியும் படகு நகரத் தொடங்கிக் கப்பலை நோக்கிச் சென்றது. ‘அப்பாடா’ என்று நான் பெருமூச்சு விட்டேன்.

பிறகு அந்த மரத்தின் மறைவிலிருந்து வெளியில் வந்தேன். அந்தக் குன்றிலேயே மிக உயரமான சிகரம் என்று தோன்றிய இடத்தை நோக்கி நடந்தேன். இதற்குள் சூரியன் அஸ்தமித்து நன்றாக இருட்டி விட்டது. சிகரத்திலிருந்து கீழே பார்த்தேன். கோபுரங்கள், மண்டபங்கள் எல்லாம் இருட்டில் மறைந்திருந்தன. “நல்லது, சந்திரன் உதயமாகி வரட்டும்! என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உட்கார்ந்தேன். அந்தத் தீவின் சரித்திரம் யாதாயிருக்கும் என்று மனத்திற்குள் எனக்கு நானே ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தேன்.

இத்தனை நேரமும் காற்றே இல்லாமலிருந்தது. தென் திசையிலிருந்து ‘குப்’ என்று காற்று அடிக்கத் தொடங்கியது. ஒரு தடவை வேகமாக அடித்து மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் குலுக்கிய பிறகு, காற்றின் வேகம் தணிந்து, இனிய குளிர்ப்பூந்தென்றலாக வீசத் தொடங்கியது. ‘பூந் தென்றல்’ என்று சொன்னேனல்லவா? அது உண்மையான வார்த்தை. ஏனெனில் அந்த இனிய காற்றில் மல்லிகை, பாரிஜாதம், பன்னீர், செண்பகம் ஆகிய மலர்களின் சுகந்தம் கலந்து வந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு பூவின் மணத்தோடு அகில் புகை சாம்பிராணி புகை – சந்தனத்தூள் புகையின் மணம் முதலியவையும் சேர்ந்து வரத் தொடங்கின.

இத்தகைய அதிசயத்தைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், மற்றோர் அதிசயம் ஏற்பட்டது. மாலை நேரங்களில் ஆலயங்களில் அடிக்கப்படும் ஆலாட்ச மணியின் சத்தம் வருவது போலக் கேட்டது. மணிச்சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற வியப்புடன் நாலுபுறமும் நோக்கினேன். ஆகா! அந்தக் காட்சியை என்னவென்று சொல்வேன்? பூரணச் சந்திரன் கீழ் வானத்தில் உதயமாகிச் சற்றுத் தூரம் மேலே வந்து அந்தத் தீவின் கீழ்த்திசையிலிருந்த மரங்களின் உச்சியில் தவழ்ந்து தீவின் பள்ளத்தாக்கில் பால் நிலவைப் பொழிந்தது. அந்த மோகன நிலவொளியில், முன்னே நான் சூரிய வெளிச்சத்தில் பார்த்த கோயில் கோபுரங்கள், புத்த விஹாரங்கள், மணி மண்டபங்கள், ஸ்தூபங்கள், விமானங்கள் எல்லாம் நேற்றுத்தான் நிர்மாணிக்கப்பட்டன போலப் புத்தம் புதியனவாகத் தோன்றியது. பல நூறு வருஷத்துக் கடற்காற்றில் அடிபட்டுச் சிதிலமாகிப் போன பழைய காலத்துச் சிற்பங்களாக அவை தோன்றவில்லை.

அந்த அற்புதக் காட்சியும், ஆலாட்சமணி ஓசையும், மலர்களின் மணத்துடன் கலந்து வந்த அகில் சாம்பிராணி வாசனையும், இவையெல்லாம் உண்மைதானா அல்லது சித்தப் பிரமையா என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இது வரை பார்த்த அதிசயங்களைக் காட்டிலும், பெரிய அதிசயம் ஒன்றைக் கண்டேன். ‘ஜன சஞ்சாரமற்ற நிர்மானுஷ்யமான தீவு’ என்றல்லவா கப்பல் நாயகர் சொன்னார்? அந்தத் தீவின் உட்பகுதியிலிருந்து – சிற்பங்களும் சிலைகளும் இருந்த பகுதியிலிருந்து இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். நான் இருந்த திசையை நோக்கியே அவர்கள் வந்தார்கள். நான் இருப்பதைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறார்களோ என்று தோன்றியது. சீக்கிரமாகவே குன்றின் அடிவாரத்தை அடைந்து, அதில் நான் இருந்த சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கினார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் ஓட்டம் எடுக்கலாமா என்று தோன்றியது. ஆனால், எங்கே ஓடுவது? எதற்காக ஓடுவது? தண்ணீர்க்கரை ஓரம் ஓடிச்சென்று கூச்சல் போடலாம். கூச்சல் போட்டால் கப்பலில் உள்ளவர்கள் வருவார்களா? என்ன நிச்சயம்?

இதற்குள் கொஞ்சம் தைரியமும் பிறந்து விட்டது. “எதற்காக ஓடவேண்டும்?” என்று தோன்றிவிட்டது. ஓடயத்தனித்திருந்தாலும் பயன் விளைந்திராது. என் கால்கள் ஓடும் சக்தியை இழந்து, நின்ற இடத்திலேயே ஊன்றிப் போய்விட்டன. குன்றின் மேல் ஏறி வருகிறவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு கணமும் என் கண்களை அவர்களிடமிருந்து அகற்ற முடியவில்லை. அவர்கள் யார்? இங்கே எப்போது வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? எவ்விதம் வாழ்க்கை நடத்துகிறார்கள்? என்றெல்லாம் தெரிந்து கொள்வதில், அவ்வளவு ஆர்வம் எனக்கு உண்டாகி விட்டது.

சில நிமிஷத்துக்கெல்லாம் அவர்கள் அருகில் நெருங்கி வந்துவிட்டார்கள். இருவரும் கைகோர்த்துக் கொண்டு நடந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் ஆடவர். இன்னொருவர் பெண்மணி. இருவரும் நவயௌவனப் பிராயத்தினர்; மன்மதனையும் ரதியையும் ஒத்த அழகுடையவர்கள். அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளும், அணிந்திருந்த ஆபரணங்களும் மிக விசித்திரமாயிருந்தன. ஜாவாத் தீவிலிருந்து நடனம் ஆடும் கோஷ்டியார் ஒரு தடவை தமிழ் நாட்டுக்கு வந்திருந்தார்களே, பார்த்ததுண்டா? அம்மாதிரியான ஆடை ஆபரணங்களை அவர்கள் தரித்திருந்தார்கள்.

நான் நின்ற இடத்துக்கு அருகில் மிக நெருக்கமாக அவர்கள் நெருங்கி வந்தார்கள். என் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். நான் அணிந்திருந்த உடையை உற்றுப் பார்த்தார்கள். என் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன; அவர்களைக் கேட்பதற்குத் தான்! ஆனால் ஒரு வார்த்தையாவது என்னுடைய நாவில் வரவில்லை.

முதலில் அந்த யௌவன புருஷன் தான் பேசினான். “வாருங்கள் ஐயா! வணக்கம்!” என்று நல்ல தமிழில் என்னைப் பார்த்துச் சொன்னான். என் உடம்பு புல்லரித்தது.

Source

Previous articleMohini Theevu | Kalki
Next articleMohini Theevu Ch 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here