Home Historical Novel Mohini Vanam Ch 10 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 10 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

74
0
Mohini Vanam Ch 10 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 10 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 10 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 அரசைத் துண்டாடும் அழகு

Mohini Vanam Ch 10 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

உதயபூர் அரண்மனையின் அந்தப்புர வாயில் வழியாக வெளியே வந்த தீப்சந்தின் மனக்கண்ணில் புஷ்பாவதியின் கலங்கிய கண்கள் தொடர்ந்து தென்பட்டுக்கொண்டு இருந்தபடியால் சிறிது சஞ்சலத்துடனேயே அவன் புரவிக்
கொட்டடியை நோக்கிச் சென்றான். அங்கிருந்த அவனது புரவி அவனைப் பார்த்துப் பெரிதாகக் கனைக்கவே அவன் அதன் அருகில் சென்று அதன் மூக்கையும் வாயையும் தன் கையால் தடவிக் கொடுக்கப் புரவியும் அவன் மீது
ஆசையுடன் உராய்ந்தது.
அந்த உரசலில் பேரானந்தத்தைக் கண்ட தீப்சந்த் அதை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்து கொட்டடிக் காவலன் எடுத்து வந்த முதுகுத் தோலை அதன்மீது பொருத்திச் சேணத்தையும் தானே அணிவித்து அதன் மேல் ஏறி
அரண்மனைப் பாதைகளில் அதைச் செலுத்தி வாயிலுக்கு வந்து ஆகாயத்தை நோக்கினான்.
மாலைக் கதிரவன் அரைகுறையாக மறைந்திருந்ததால் அந்திவானம் பெரிதாகச் சிவந்து கிடந்தது. வெண்மதியும் காட்சியளித்தது. அப்பொழுதுதான் நட்சத்திரங்கள் ஒவ்வொன்று எங்கெங்கோ தெரியத் தொடங்கின.
இவற்றையெல்லாம் கவனித்ததால் நேரம் அதிகமாக வில்லை என்பதைக் கணக்கிட்ட தீப்சந்த், “எதற்கும் முன்னால் செல்வது நலம். நேரம் கழித்துப் போனால் ஒரு வேளை சலூம்பிரா நான் ஓடிவிட்டதாகவும், கோழை யென்றும்
நினைக்கலாம்” என்று தனக்குள் கூறிக் கொண்டே உதயபூரை அடுத்த மலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் புரவியைச் செலுத்தினான். இருப்பினும் நேரம் அதிகம் இருந்ததால் புரவியை நிதானமாகவே நடத்திக் கொண்டு மலைப்
பள்ளத்தாக்கில் உள்ள மோகினி வனத்தை ஒரு நாழிகைக்குள் அடைந்தான். மலைச்சரிவில் இருந்து சமவெளியை நோக்கிப் புரவியை நடத்தினான்.
அன்றைய இரவில் மதி வீசிய வெளிச்சத்தில் மோகினி வனம் அற்புதமாகக் காட்சியளித்தது. மலைச்சரிவில் புல்லடர்ந்த தரையை அடுத்திருந்த காட்டு முகப்பில் பெரும் புஷ்பச் செடிகள் மலர்க்கொத்துக்களை ஆட்டி தீப்சந்தை
வரவேற்றன. அவற்றை அடுத்திருந்த அடர்ந்த காட்டிலும் மகுடம் போன்ற பெரிய மரங்கள் ஆகாயத்தை அளாவி நின்று, தங்கள் சிறு மலர்களால் நறுமணத்தை எங்கும் பரப்பின. அந்தப் பள்ளத்தாக்கின் இயற்கை அழகின் விளைவாக எட்ட
எட்ட இடம் விட்டு சின்னஞ்சிறு மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன. அதில் ஒன்று மகாராணாவின் உல்லாச மாளிகை என்பதற்கு அறிகுறி யாக அதன் கவிழ்ந்த மகுடத்தில் கவசமொன்று சூட்டப்பட்டு அதன்மீது சூரியன் கொடியும்
பறந்தது.
அந்தச் சூரியன் கொடிமீது விழுந்த சந்திர வெளிச்சத்தைக் கண்ட தீப்சந்த் அந்தக் கொடியின் அழகு பதின் மடங்கு அதிகமாகி விட்டதைக் கண்டு, “சந்திரனும் சூரியனுக்கு அஞ்சலி செலுத்துகிறான். அப்படியிருக்க சலூம்பிரா ஏன்
இதற்கு அடங்க மறுக்கிறார்? அவரும் சூரிய வம்சத்தின் அடிமைதானே?” என்று வினவிக் கொண்டான். இந்த எண்ணங்களுடன் புரவியில் இருந்து இறங்கி முதல் நாள் சண்டையிட்ட இடத்தை நாடிச் சென்றான்.
அந்த சண்டைக்குப் பிறகு, இறந்த சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தாலும், நிலத்தில் புரவிகளின் காலடிகளால் நேர்ந்த உளைச்சலும், பிளவுபட்ட புல்பத்தைகளின் சீரழிவும் பழையபடியே இருந்ததைக் கவனித்தான்.
இப்படி அந்த இடத்தை ஆராய்ந்துகொண்டே சென்றவன் கண்களுக்கு நிலத்தில் பளிச்சென்று ஏதோ தென்படவே அதைக் கையில் எடுத்துப் பார்த்துப் பெரும் பிரமை கொண்டான். அது யாரோ ஒரு பெண்ணின் தலை ஆபரணமான
உச்சிப்பூ என்பதைப்புரிந்துகொண்ட தீப்சந்த், ‘மிக விலை உயர்ந்த ஆபரணம். என்ன அழகான மாணிக்கங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அதை இருமுறை திருப்பிப் பார்த்தான். அதன்
பின்புறத்தில் ஒரு சிறு கோடரி செதுக்கப்பட்டு இருந்ததைப் பார்த்துச் சிந்தனைக்குள்ளானான். “இருக்காது. ஒருக்காலும் இருக்காது. மன்னர் வேட்டைக்குத் தங்கும் வேட்டைக்கார விடுதி இங்கிருந்து தொலை தூரம் இருக்கிறது.
அங்கிருந்து இத்தனை தூரம் புஷ்பாவதி இங்கு எப்படி எதற்காக வருவாள். இந்த உச்சிப்பூ அவளுடையதாயிருக்க முடியாது” என்று வினாக்களை எழுப்பித் தானே பதில் சொல்லிக்கொண்டாலும் அந்தத் தலைக்குழல் ஆபரணத்தைத்
தனது கச்சையில் சொருகிக் கொண்டான்.
சலூம்பிரா வருவதற்கு நேரம் இருப்பதால் அந்தப் புல்தரையிலேயே உட்கார்ந்து ஜெபமாலையை எடுத்து கிருஷ்ண தியானத்தில் ஆழ்ந்துவிட்டதால் அடுத்த ஒரு நாழிகைக்கெல்லாம் சலூம்பிராவும் அவரது சகாக்கள் நால்வரும் வந்ததை
அவன் கவனிக்கவில்லை. சற்று எட்ட புரவியை நிறுத்திவிட்ட சலூம்பிரா தீப்சந்த் இருக்கு மிடத்தை நோக்கி”தீப்சந்த்! தீப்சந்த்!” என்று இருமுறை அழைத்தபிறகே கண்களை விழித்த அந்த வாலிபன், “மகாவீரரே! மன்னிக்க வேண்டும்” என்று
சொல்லி எழுந்திருந்து ஜெபமாலையைக் கச்சையில் மறைத்துக்கொண் டான்.
அதைக் கண்ட சலூம்பிரா பெரிதாக நகைத்தார். “தீப்சந்த்! அதென்ன ஜெபமாலையா?” என்று வினவினார்.
“ஆம்” என்று சொல்லிப் புன்முறுவல் செய்தான் தீப்சந்த்.
“இத்தனை நேரம்…” இளக்காரமாகப் பேசிய சலூம்பிரா வார்த்தையை முடிக்கவில்லை.
“கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டிருந்தேன்” என்றான் தீப்சந்த்.
“உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாய்?”
“ஆம்.”
“பயமாயிருந்தால் சொல்லிவிடு. உன்னை மன்னித்து விடுகிறேன்.”
“சலூம்பிரா! தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
“தவறாகவா?”
“ஆம்.”
“என்ன தவறோ?”
“நான் உயிர் பிழைக்க ஜெபம் செய்யவில்லை. உங்கள் உயிர் பிழைக்க கிருஷ்ணனை வேண்டினேன். போரில் நிதானமிழந்து நான் ஏதாவது வாளை எக்கச்சக்கமாக உங்கள் மார்பில்…” என்றான் தீப்சந்த்.
அதுவரை நிதானம் காட்டிய சலூம்பிரா எரிமலையானார். “தீப்சந்த்! இளங்கன்று பயமறியாது என்று தமிழ்நாட்டில் பழமொழி இருக்கிறது…” என்று சீறினார்.
“இருக்கலாம். ஆனால் அது ராஜஸ்தானத்துக்கும் பொருந்தும். இங்கு பிறக்கும் குழந்தைகளின் இரத்தத் திலேயே வீரம் ஓடுகிறது” என்று சுட்டிக் காட்டினான் தீப்சந்த்.
சலூம்பிரா அதற்குமேல் பேசவில்லை. சற்று எட்ட சென்று தமது மேலங்கியைக் கழற்றிப் பக்கத்தில் இருந்த வீரனிடம் கொடுத்துவிட்டு, தமது வாளையும் உறையிலிருந்து உருவிக்கொண்டார்.
அவரைப் போலவே அங்கியைக் கழற்றிய தீப்சந்தும் வாளை உருவிக்கொண்டான். உருவிய வாளுடன் சலூம்பிராவை நெருங்கினான். கீழே சல்லடம் மட்டுமே அணிந்து நின்ற சலூம்பிராவின் மார்பிலிருந்த பல வடுக்களைக் கண்ட
தீப்சந்த், “ இவர் உடலில் எத்தனை வீரச் சின்னங்கள்?” என்று வியந்தான்.
ராட்சசன்போல் உயரமாக நின்ற சலூம்பிராவும் தீப்சந்தைப் பார்த்து வியந்து நின்றார். அவன் மார்பிலும் வடுக்கள் இருப்பதைக் கண்டு, “இத்தனை சிறுவயதிலேயே பல சண்டைகளைப் பார்த்திருக்கிறான்” என்று தனக்குள்
சொல்லிக்கொண்டார். என்ன ஒல்லியான அழகானசரீரம் என்றும் வியப்படைந்தார். பிறகு அனாவசியமாக காலம் தளர்த்தாமல் தமது சகாக்களை அழைத்து “இந்தச் சண்டையில் நான் இறந்தால் இந்தச் சிறுவனுக்கு எந்த ஆபத்தும்
நேரிடக்கூடாது. அவன் சுதந்திரமாகப் போகட்டும். என் சடலத்தைச் சித்தூருக்குக் கொண்டு சென்று என் தாயிடம் ஒப்படைத்துவிடு” என்றார்.,
தீப்சந்த் சொன்னான்: “சலூம்பிரா! நான் இறந்தால் என் சடலத்தை இங்கேயே எங்காவது எரித்துவிடுங்கள். மண்டலக்கோட்டைக்குச் செய்தி அனுப்பினால் போதும்” என்று. “நீங்கள் இறக்கப்போவதில்லை. ஆகையால் நீங்கள் சொன்ன
ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை” என்றும் கூறினான்.
“ஏன்?” என்று வியப்புடன் வினவினார் சலூம்பிரா.
“உங்களைக் கொல்லும் உத்தேசம் எனக்கில்லை. மேவார் இன்றிருக்கும் நிலையில் உங்களைப் போன்ற வீரர்களை இழக்க முடியாது” என்றும் கூறினான்.
இதைக் கேட்ட சலூம்பிரா சிந்தனையில் இறங்கினார். “இவனுடன் ஏன் போராட வந்தோம்” என்ற எண்ணம் உள்ளூர எழுந்தது அவருக்கு. “இருக்கட்டும்; இவனை நிராயுதபாணியாக்கி அனுப்பிவிடுகிறேன்” என்று
தீர்மானித்துக்கொண்டார். “சரி, சரி. எடு வாளை” என்று சொல்லித் தமது வாளைக் கொண்டு முன்னேறவும் செய்தார்.
அவரது பெரிய வாளை தீப்சந்தின் நீண்ட மெல்லிய வாள் அனாயசமாகத் தடுத்தது. வாளை மீட்டு மீண்டும் பக்கத்தில் செலுத்த முயன்றார் சலூம்பிரா. அங்கும் அவர் வாளை தீப்சந்தின் வாள் தடுத்தது. போரைத் துரிதப்படுத்தி வேகமாக
வாளைச் சுழற்றிப் போராடினார் சலூம்பிரா. அவரது அத்தனைச்’ சுழற்றல்களையும் சமாளித்த தீப்சந்த், அவர் வாள் தனது தற்காப்புக்குள் சிறிதும் நுழையாதபடி செய்தான்.
போர் உக்கிரமாக ஆக சலூம்பிராவின் வியப்பும் அதிகமாயிற்று. எத்தனையோ மகாவீரர்களின் வாட்களைச் சில விநாடிகளில் பறக்க அடித்திருக்கும் சலூம்பிரா தீப்சந்தின் வாளைச் சிறிதும் சுழற்றி எறிய முடியாமல் சங்கடப்பட்டார்.
ஆகவே அதுவரை காட்டிய அசிரத்தையைக் கைவிட்டுச் சிரத்தையாகவும் சாஸ்திர ரீதியாகவும் போரிட்டார்.
தீப்சந்த் அவருடைய அடிக்கு அடி, நுணுக்கத்திற்கு நுணுக்கம், தனது திறமையைக் காட்டினான். சண்டை மூண்ட ஒரு நாழிகைக்குப் பிறகும் அவன் நின்ற இடத்தை விட்டு நகராமல் நிற்பதைக் கண்ட சலூம்பிரா சற்றே நிதானத்தை
இழந்து அவனை அதிகப்படியாக நெருங்கி வாளை அவன் வலது தோளை நோக்கிப் பாய்ச்சினார். ஆனால் அவர் வாள் தோளைத் தொடுவதற்கு முன்பாகவே பலமான எதிர்த் தாக்குதலுக்கு உள்ளாகிச் சட்டென்று நிலத்தில் தாழ்ந்து,
மண்ணில் அதன் நுனி புதைந்தது. அதை அவர் மீட்பதற்குள் அவன் வாள் அவர் வலது கைத் தோளில் பாய்ந்து விடவே, வாளை எடுக்க முடியாமல் தவித்தார் சலூம்பிரா. தீப்சந்த் அவரை அணுகி அவரது வாளை நிலத்திலிருந்து பிடுங்கி
அவர் கையில் திணித்தான். “சலூம்பிரா! மன்னிக்க வேண்டும். உங்கள் தோளில் எனது வாள் ஆழமாகப் பதிந்திருக்கிறது. நீங்கள் வாளைச் சுழற்றுவது கஷ்டம். நீங்கள் பிரியப்பட்டால் இன்னொரு முறை சந்திப்போம்.” என்றான்.
சலூம்பிரா அந்த வாலிபனை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பார்த்தார். “தீப்சந்த்! என்னால் இடது கையாலும் போரிட முடியும்” என்றார்.
“அப்படி அவசியமில்லை. இந்தக் காயம் ஆறும்வரை நான் காத்திருக்கிறேன்.” என்றான்.
சலூம்பிராவின் சகாக்களில் ஒருவன், “எசமான்! உத்தரவு கொடுங்கள். நான் இவனுடன் போராடுகிறேன்.” என்று முன்னே வந்தான்.
சலூம்பிராவின் தீட்சண்யமான ஒரு பார்வை அவனைப் பின்னடையச் செய்துவிட்டது. சலூம்பிரா கேட்டார், “ தீப்சந்த்! நீ எந்தப் பெண்ணுக்காக என் தம்பியைக் கொன்றாயோ. அவள் யார்?” என்று வினவினார்.
“தெரியாது.”
“தெரியாமலா அவள் உதவிக்குச் சென்றாய்?”
“ஆம். பெண் யாராயிருந்தால் என்ன? ராஜபுதனத் தவள். அவளைக் காப்பது ஒவ்வொரு வீரனின் கடமையாகும்.”
“உண்மை” என்ற சலூம்பிரா, “அவளை எங்கேயோ பார்த்த நினைவு எனக்கிருக்கிறது. அவளையே கேட்டுச் சொல் எனக்கு” என்று கூறினார்.
“இதோ இதைப் பாருங்கள். இந்த உச்சிப்பூவை இப்பொழுதுதான் கண்டு எடுத்தேன். இது அவளுடையதா யிருந்தால்…” என்ற தீப்சந்த் சொற்களை முடிக்கவில்லை.
சலூம்பிரா அந்த உச்சிப்பூவை வாங்கி இருமுறை திரும்பிப் பார்த்தார். பிறகு பிரமை பிடித்த முகத்துடன் சொன்னார். “இது அவள் ஆபரணமானால் ராஜபுதனம் இரண்டுபடும்.” என்றார்.
தீப்சந்த் புன்முறுவல் கொண்டு, “இப்பொழுது ராஜ புதனம் ஒன்றுபட்டிருக்கிறதா சலூம்பிரா?” என்று வினவினான்.
“இல்லை தீப்சந்த். ஆனால் இந்த ஆபரணம் பெரும் ரத்தக் கிளறியை உண்டுபண்ணும்” என்ற சலூம்பிராவின் குரலில் கவலை அதிகமாயிருந்தது. “எதற்கும் புஷ்பா வதியை நீ கேட்டு நாளைக்கு எனக்குச் சொல்” என்றும் சொன்னார்.
“தங்களை எங்கு சந்திப்பது?” என்று தீப்சந்த் வினவினான்.
சலூம்பிரா சிறிது சிந்தித்தார். “சோம்ஜியின் மாளிகையிலேயே சந்திக்கலாம் நாளை இதே சமயத்தில்.” என்று கூறிவிட்டு தீப்சந்தின் பதிலுக்குக் காத்திராமல் தமது புரவியில் ஏற முயன்றார்.
“இருங்கள்; உங்கள் தோள் காயத்தில் குருதி அதிகமாக வருகிறது. ஒரு கட்டுப் போட்டுவிடுகிறேன்.” என்றான் தீப்சந்த்.
குருதி ஒழுகிக்கொண்டிருந்த காயத்தை அலட்சியமாகப் பார்த்தார் சலூம்பிரா. “பாதகமில்லை. நான் மருத்துவரிடம் கட்டுப் போட்டுக்கொள்கிறேன்” என்று புரவியில் ஏறி சகாக்களுடன் சென்றுவிட்டார்.

.
தீப்சந்த் அந்த மகாவீரன் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றான். ‘ஒரு மகாவீரன் போகிறான் அதோ’ என்று உள்ளூர சலூம்பிராவைச் சிலாகித்துக் கொண்டே தனது புரவியில் ஏறி உதயபூர் அரண்மனையை நோக்கி அதைச்
செலுத்தினான். அரண்மனைக் கொட்டடியில் புரவியைப் பிணைத்துவிட்டு, அந்தப்புர நந்தவனத்தை அடைந்தவன் சற்று தலைநிமிர்ந்து நோக்கினான்.
புஷ்பாவதி சாளரத்தின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கமல முகத்துக்கு வான்மதி புது மெருகைத் தீட்டியிருந்தான்.
அவள் முகத்தைப் பார்த்த தீப்சந்த், “ராஜபுதனத் தைப் பிளக்கும் வதனம். இந்த அழகுக்காக ராஜபுதனம் ரத்தத்தில் நனையும்.” என்று முணுமுணுத்தான்.

Previous articleMohini Vanam Ch 9 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 11 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here