Home Historical Novel Mohini Vanam Ch 32 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 32 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

72
0
Mohini Vanam Ch 32 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 32 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 32 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 ஜாவுத் கோட்டை!

Mohini Vanam Ch 32 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

ஜாவுத் கோட்டையின் நட்ட நடுவில் விழுந்த பீரங்கி குண்டையும் அதில் வெட்டப்பட்டிருந்த பெயரையும் பார்த்ததும் மாதாஜி சிந்தியா தன்னை விடுதலை செய்து அனுப்புவதற்கு முன்னதாகவே பிரெஞ்சுக்காரனான டீ பாயினைத்
தனது கோட்டையை வளைக்க அனுப்பி விட்டதை உணர்ந்துகொண்டான். டீ பாயின் கோட்டை முற்றுகையில் கலந்துகொண்டால் தான் வெளியே தப்பிச் செல்வது முடியாத காரியமென்று சிந்தியா தீர்மானித்திருக்க வேண்டும்
என்பதையும் ஊகித்துக்கொண்டான். ஆகவே சிறிது புன்முறுவலும் செய்தான்.
அவன் பீரங்கி குண்டைப் பரிசோதித்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த புஷ்பாவதி, “என்ன பார்க்கிறீர்கள்?” என்று வினவினாள். அவள் குரலில் சிறிதளவும் கவலை இல்லை, வியப்பு மட்டும் இருந்தது. பீரங்கிக் குண்டை
அவன் எதற்காகப் பார்க்கிறான் என்ற நினைப்பால்.
“இதோ நீயே பார், டீ பாயின் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்று குண்டில் வெட்டப்பட்டிருந்த செய்தியைக் காட்டினான்.
செய்தியை உற்றுப் பார்த்த புஷ்பாவதி, “டீ பாயின் நம்மைப் பரிகசிக்கிறான்” என்றாள் சற்று சினத்துடன்,
“இல்லை புஷ்பாவதி. டீ பாயின் மகாவீரன். எதிரியைப் பரிகசிக்கும் இழிவான செயலில் இறங்க மாட்டான். இந்தக் குண்டின் மூலம் நம்மை எச்சரிக்கை செய்கிறான். உடனடியாக நாம் சமாதானத்துக்கு வராவிடில் போர் துவங்கும் என்பதை
அறிவிக்கிறான்” என்று கூறிய தீப்சந்த் “இதெல்லாம் அந்தக் குள்ள நரியின் வேலை” என்றான்.
அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்பதை உணர்ந்து கொண்டதால் சீற்றத்தின் வயப்பட்ட புஷ்பாவதி “நீங்கள் யாரைப்பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள் என்பது புரிகிறது” என்றாள்.
“யாரைப்பற்றி?” என்று கேட்ட தீப்சந்த் கோட்டையைச் சுற்றி நடக்கலானான்.
புஷ்பாவதி அவனைத் தொடர்ந்து நடந்து கொண்டே “போயும் போயும் யாரைச் சொல்ல முடியும்? என் தந்தையைப் பற்றித்தான்” என்று கூறிய அவள் குரலில் அதிக சினம் இருந்தது.
“எந்த தந்தை? நாகராமக்ரா தந்தையா?”
“அவர் என்னைப் பெற்றிருக்கலாம். ஆனால் அன்புத் தந்தையில்லை!”
“நம் எதிரி சிந்தியாவா?”
“அவர் உங்கள் எதிரியாயிருக்கலாம். எனக்கு அன்புத் தந்தை.”
அப்பொழுது இன்னொரு குண்டு கோட்டைக்குள் சீறி வரவே “உன் அன்புத் தந்தையிடம் இருந்து இரண்டாவது பரிசு வருகிறது” என்று கூறி நகைத்த தீப்சந்த், தனது படைத்தலைவர்களில் ஒருவனை அழைத்து, “ஜய்சிங்! நமது
பீரங்கிகள் எதிரியை நோக்கித் திரும்பட்டும். அவர்கள் முழுமையாகக் குண்டுகளை வீசும் மட்டும் நீ பீரங்கிகளை இயக்காதே. எனது கட்டளைக்குக் காத்திரு” என்று சொல்லிவிட்டு, “புஷ்பாவதி, நீ வா உள்ளே செல்வோம்” என்று
அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். அறையின் அந்தரங்கத்தில் சொன்னான். “பெனாயிட் டீ பாயின் பிரெஞ்சுக்காரன். பிறந்ததில் இருந்து அவன் பட்டுள்ள கஷ்டங்களும் சிறைவாச இம்சைகளும் சொற்களால் விவரிக்க
முடியாது. போரில் அவனுக்கு இணையாக இந்தப் பாரதத்தில் யாரையும் சொல்ல முடியாது. நம்மை எதிர்க்க அவனை அனுப்பியதால் நம்மிடம் சிந்தியாவுக்குப் பெருமதிப்பிருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அங்கிருந்த இரும்புச்
சட்டை ஒன்றை அணிந்துகொண்டான். “இனி இந்த மாளிகையை விட்டு வெளியே வராதே” என்று கூறிச் சென்றான்.
அவன் சென்றதும் சிந்தைவயப்பட்டு இடிந்து உட்கார்ந்துவிட்டாள் புஷ்பாவதி. என்ன தான் அவள் வீராங்கனையாயிருந்தாலும் தனது கணவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் அவள் கலங்கவே செய்தாள். வெளியே பீரங்கிகள் பலமாக
சப்தித்துக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் அவள் இருந்த மாளிகைமீது ஒரு குண்டு கூட விழாததைக் கண்டு வியந்தாள். ஒருவேளை நான் இருக்குமிடத்தின்மிது குண்டு வீசவேண்டாம் என்று தந்தை ஏற்பாடு செய்திருப்பாரோ என்று
உள்ளூர கேட்டுக்கொண்டு நகைக்கவும் செய்தாள். “போரில் இங்குதான் குண்டு விழலாம். இங்கு விழக்கூடாதென்று நிர்ணயம் செய்ய முடியுமா என்ன?” என்றும் தனக்குள் கேட்டுக்கொண்டாள். அத்துடன் சாளரத்தின் மூலம்
வெளியே நடக்கும் போரைக் கவனிக்கலானாள். பெரிய புரவியில் அமர்ந்து கையில் வேல் ஒன்றை ஏந்திக்கொண்டு அந்த வேல் மூலமே அடையாளம் காட்டி தீப்சந்த் போரை நடத்துவதைக் கண்டாள்.
வெளியே தன்னால் பயிற்சியளிக்கப்பட்ட பீரங்கிப் படையுடன் நின்று கோட்டையைக் கவனித்துக்கொண்டிருந்த டீ பாயின் உள்ளேயிருக்கும் கோட்டைத் தலைவன் அதிகமாகப் பீரங்கிகளை வீசாமல் ஏதோ நான்கைந்து பீரங்கிகளை
மட்டும் இயக்கிக்கொண்டிருந்ததைக் கண்டு “எதிரிக்கு வெளியே வந்து போர் செய்யும் நோக்கம் இல்லை. தற்காப்புப் போர் செய்கிறான். இப்படிப் போர் நடந்தால் ஒரு மாதம் முற்றுகையிட்டாலும் இந்தக் கோட்டையைப் பிடிக்க
முடியாது” என்று தீர்மானித்துப் போர்க்களத்தில் நின்றிருந்தவன், திடீரெனத் திரும்பி தனது கூடாரத்துக்குச் சென்றுவிட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னால் புதிதாகச் சேர்க்கப்பட்ட பெட்ரான், ரோகரன் என்ற
பிரெஞ்சுக்காரர்களையும் சதர்லண்டு, ராபர்ட்ஸ் என்ற இரு ஆங்கிலேயர்களையும் அழைத்து மந்திராலோசனையில் இறங்கினான். முதன் முதலாக, “எதிரியின் போரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று தானே வினா விடுத்தான்.
எந்த மந்திராலோசனையிலும் முதலில் கேள்வி கேட்பது தளபதியின் பழக்கம் என்பதை அறிந்திருந்த உபதளபதிகள், சிறிது நேரம் பதில் சொல்லவில்லை.
டீ பாயின் கண்கள் அவர்கள் மீது மாறி மாறி நிலைத்தன. அந்தக் கண்களின் பார்வையில் இருந்தே தளபதி கோபத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நால்வரில், பிரெஞ்சுக்காரனான பெட்ரான், “எதிரி போருக்குத் தயாரில்லை
என்று தெரிகிறது” என்றான்.
அதற்குத் தளபதி டீ பாயின் பதில் சொல்லாமல் அடுத்தவனை நோக்கினான். “எதிரி அதிகக் குண்டுகளை வீசவில்லை” என்றான் ரோகரன் என்றபிரெஞ்சுக்காரன்.
“அதனால்?” டீ பாயின் கேள்வி சட்டென்று வெளி வந்தது.
“நமது பலத்தைப் பார்த்து அவன் அச்சப்படுகிறான்” என்றான் ரோகரன்.
டீ பாயின் முகத்தில் வெறுப்புத் தெரிந்தது. “உள்ளேயிருப்பவன் யார் தெரியுமா?” என்ற அவன் கேள்வியில் இகழ்ச்சி இருந்தது.
“தெரியாது?” என்றான் ரோகரன்.
“தீப்சந்த் இருக்கிறான்” என்றான் டீ பாயின், “தீப்சந்த் சாதாரணமானவன் அல்ல. மகாராஷ்டிரர்கள் முன்பு இருந்த லால்சன் முதலிய எல்லா கோட்டைகளையும் திரும்பப் பிடித்து விட்டார்கள். சலூம்பிராவும் திரும்ப ஓடி விட்டான்
சித்தூருக்கு. இந்த ஒரு கோட்டை நம்மிடம் சரணடைய மறுக்கிறது. காரணம் தெரியுமா?” என்று வினவினான் டீ பாயின்.
“தீப்சந்தா?” வியப்புடன் வினவினான் பெட்ரான்.
“ஆம். அவன் நமது போர் முறைகளில் தேர்ச்சி பெற்றவன். இந்தக் கோட்டைக்குள் அவனது வீரர் பதினாயிரம்பேர் இருக்கிறார்கள், நூறு பீரங்கிகள் இருக்கின்றன. அவற்றை இயக்க தீப்சந்த் தனது வீரர்களைப் பழக்கி இருக்கிறான்” இதைச்
சொன்ன டீ பாயின் தனது உபதளபதிகளை நோக்கினார்.
“அப்படியிருக்க தீப்சந்தின் நூறு பீரங்கிகள் ஏன் இயங்கவில்லை?” என்று வெள்ளைக்காரனான காப்டன் சதர்லண்டு வினவினான்.
அதற்கு டீ பாயின் பதில் சொல்லவில்லை.
காப்டன் ராபர்ட்ஸ் என்ற ஆங்கிலேயனே சொன்னான். “தற்காப்புப் போரில் குண்டுகளை வீணாக அடிக்க எதிரி விரும்பவில்லை” என்று.
ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாக டீ பாயின் தலையை அசைத்தான். “ஆகையால் நாமும் அவசியமான அளவுக்குத்தான் பீரங்கிகளை உபயோகிக்க வேண்டும். வெடி மருந்தையும் குண்டுகளையும் நாம் அதிகமாகச் செலவிடக்
கூடாது. நாமும் தாமதிப்போம். முற்றுகையில் வெளியில் இருந்து உணவு தான்யங்கள் கோட்டைக்குள் செல்ல முடியாது. ஆகையால் நாம் எதிரியைப் பட்டினி போடுவோம். அவனே வெளியில் வரட்டும்” என்ற டீ பாயின், “இனிமேல்
ஏதாவது நாலைந்து பீரங்கிகள் சற்று நேரத்துக்கொருமுறை நல்ல இலக்குகளை நோக்கி இயங்கட்டும். நான் உத்தரவிடும் வரையில் பெரும் போர் வேண்டாம். கோட்டைக்குள். நுழையவும் வேண்டாம்.”என்று உத்தரவும் இட்டான்.
காப்டன் ராபர்ட்ஸ் கேட்டான் : “ஜெனரல்! கோட்டைக்கு நடுவில் ஒரு பெரிய மாளிகை இருக்கிறதல்லவா?” என்று.
“இருந்தாலென்ன?” என்று கேட்டான் டீ பாயின்.
“அதன் மீது நமது பீரங்கிகளில் இரண்டைத் திருப்பினால் அதைப் படு தூளாக்கி விடலாம்.” என்று யோசனை சொன்னான் ராபர்ட்ஸ்.
“அதற்கு எந்த சேதமும் கூடாது.”, தடையின்றி அதிகாரத்துடன் உதிர்ந்தது டீ பாயின் சொற்கள்.
“ஏன்?” பெட்ராஸ் கேட்டான்.
“அதில் நமது தலைவர் சிந்தியாவின் மகள் தங்கியிருக்கிறாள்.”
“சிந்தியாவுக்கு மகள் ஏது?”
“வளர்ப்பு மகள். அவளுக்குத் தீங்கு வரும் எந்த நடவடிக்கையிலும் நாம் ஈடுபட முடியாது.” இதை மிகத் திட்டமாகச் சொன்னான் டீ பாயின். அதே சமயத்தில் வாணம்போல் பெரிய அஸ்திரம் ஒன்று சீறிவந்து டீபாயின் கூடாரத்தின் மீது
விழ, கூடாரம் பற்றிக்கொண்டது. அது வெடிப்பதற்குள் உபதளபதிகளுடன் வெளிவந்த டீபாயின் முகத்தில் பிரமை தாண்டவமாடியது. தீப்சந்திடம் பீரங்கிகள் மட்டுமல்ல ராக்கெட்டுகளும் இருக்கின்றன “ என்று அவன் சொல்லிக்
கொண்டிருக்கையிலே அந்த ராக்கெட்டு பயங்கரமாக வெடித்தது கூடாரத்துக்குள். கூடாரம் மட்டுமின்றிப் பக்கத்திலிருந்த மருந்துகளும் தீப் பிடித்து எரிந்தன பயங்கரமாக.
அந்தத் தீயை அணைக்க தனது சிப்பாய்களை ஏவிய டீ பாயின் கோட்டைக்குள் இருந்த பெரிய மாளிகையை நோக்கினான். அதன் தளத்திலிருந்து டீ பாயினை நோக்கிக் கையை ஆட்டிய தீப்சந்த் தலையும் வணங்கினான். அடுத்த
விநாடி தளத்திலிருந்து மறைந்தும் விட்டான். அதுவரை தீப்சந்திடமும் புஷ்பாவதியிடமும் அனுதாபத்துடன் இருந்த டீ பாயின் “அந்த மாளிகை சையத் தூளாக்குங்கள்” என்று தனது உபதளபதிகளுக்கு உத்தரவிட்டான்.
பெரிய பீரங்கிகள் இரண்டு மாளிகையை நோக்கித் திருப்பப்பட்டன.
“தீப்சந்த்? எனது கருணையை பலவீனமாக நினைத்துக் கொண்டாய். இரு உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன்.” என்று டீ பாயின் உள்ளூர கறுவிக் கொண்டான்.

Previous articleMohini Vanam Ch 31 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 33 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here