Home Historical Novel Mohini Vanam Ch 34 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 34 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

74
0
Mohini Vanam Ch 34 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 34 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 34 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 முற்றுகை இரண்டு

Mohini Vanam Ch 34 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

ஜாவுத் கோட்டையை முற்றுகையிட்ட இருபத்திரண்டாவது நாள் அடியுண்ட வேங்கைபோல டீ பாயின் தனது கூடாரத்தில் உலாவிக்கொண்டிருந்தான். உலாவிக் கொண்டே தனது கையிலிருந்த கடிதத்தை மூன்றாவது முறையாகப்
படித்த டீ பாயின் “நான் என்ன இங்கு தூங்க வந்திருக்கிறேனா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு சீறினான் எதிரே நின்ற மகாராஷ்டிர வீரனை நோக்கி.
தூதன் பதிலேதும் சொன்னான் இல்லை. சிந்தியா ஏதோ கடுமையாகக் கடிதத்தில் எழுதியிருக்க வேண்டும் என்று தீர்மானித்ததால் “ஜெனரல்! மகாப்பிரபு சிந்தியாவுக்குப் பதில் கடிதம் தருகிறீர்களா?” என்று பணிவுடன் வினவினான்.
“கடிதம் எதுவும் தேவையில்லை. நான் போர் வீரனே தவிர மந்திரவாதி அல்ல என்று மட்டும் சொன்னால் போதும்.” என்றான் டீ பாயின் வெறுப்புத் தட்டிய குரலில்.
“ஜெனரல்! நான் வாயால் எதுவும் சொல்வதற்கில்லை. நீங்களே பதில் எழுதிக் கொடுத்துவிட்டால் நல்லது.” என்று கூறினான் தூதன்.
பதிலுக்கு மிகுந்த கோபத்துடன் தூதனை நோக்கினான் டீ பாயின், அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த சதர்லண்டிடம் கடிதத்தைக் கொடுத்து “காப்டன்! இதற்கு நீ பதில் சொல்” என்று கூறினான்.
சதர்லண்ட் டீ பாயின் கொடுத்த கடிதத்தைப் படித்ததும் அவன் முகம் சிவந்தது. “நாம் பயனற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் சிந்தியா” என்று சொல்லவும் செய்தான் சினத்துடன்.
“அப்படி நேரிடையாகச் சொல்லவில்லை” என்றான் டீ பாயின்.
“நேரிடையாகச் சொல்ல என்ன இருக்கிறது? ராஜ புத்திரர்களிடம் இருந்து மற்ற எல்லா கோட்டைகளையும் நமது படைகள் கைப்பற்றி விட்டபோது இந்த ஒரு கோட்டை மாத்திரம் ஏன் இன்னும் நமது கையில் விழ வில்லை என்பதற்குக்
காரணம் கேட்டிருக்கிறார். இது போதாதா?” என்று வினவினான் சதர்லண்ட்.
“போதும் போதும்” என்று முனகிய டீ பாயின் “சிந்தியா கேட்பதில் காரணமும் இருக்கிறது. மற்ற எல்லா கோட்டைகளும் விழுந்துவிட, இது ஏன் தாக்குப் பிடிக்கிறது என்று கேட்கிறார். ஆனால் இங்குள்ள நிலை அவருக்குத் தெரியாது.
இங்கு கோட்டைக் காவலன் தீப்சந்த். ஐரோப்பிய போர் முறை அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. நம்மிடம் பீரங்கிகள் மட்டும் இருக்கின்றன. அவனிடம் ராக்கெட்டுகளும் இருக்கின்றன. நவீன ஆயுத பலமும் நம்மைவிட அதிகம்.
நமது படைகளின் முறையில் கோட்டைப் படைகளுக்கும் பயிற்சி அளித்து சித்தம் செய்திருக்கிறான். தவிர, அவனுக்குப் புஷ்பாவதி இருக்கிறாள். நம்மிடம் அப்படி யாரும் இல்லை.” என்றும் கூறினான்.
“தீப்சந்தைப் பற்றியும் புஷ்பாவதியைப் பற்றியும் பேசியபோது மிகுந்த மரியாதையும் இருந்தது டீ பாயின் பேச்சில்.
டீ பாயின் பேச்சைக் கேட்ட தூதனும் காப்டன். சதர்லண்டும் பிரமித்துப் போனார்கள். புஷ்பாவதியைப் பற்றித் தூதனுக்குத் தெரிந்திருந்தாலும் “அவள் எப்படி முற்றுகையைச் சமாளிக்க முடியும்?” என்று எண்ணினான் தூதன்.
சதர்லண்டுக்கு அவளைப்பற்றி ஏதும் தெரியாததால் “ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறீர்கள்.” என்றான் தயக்கத்துடன்.
“ஆம்.” டீ பாயின் குரலில் கனிவு இருந்தது.
“யார் அது?”
“தீப்சந்தின் மனைவியோ காதலியோ தெரியாது.”
“எப்படியிருந்தால் என்ன? போருக்கு அவளுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவள் தான் தீப்சந்த்துக்குத் துணை.”
“துணை என்றால்?”
“துணைவியாயிருக்கலாம்.”
“நீங்கள் சொல்வது புரியவில்லை.”
“தீப்சந்துக்கு அவள் உபதளபதி.” இதை மெதுவாகச் சொன்னான் டீ பாயின்.
சதர்லண்ட், தூதன், இருவருமே பிரமித்துப் போனார்கள். “என்ன பெண் உபதளபதியா?” என்று காப்டன் கேட்டான்.
“ஆம்” என்றான் டீ பாயின்.
“எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்று வினவினான் காப்டன்.
இருமுறை அவள் கோட்டை தளத்தில் ஏறி வாளை வீசிப் பீரங்கிகளை இயக்க உத்தரவிட்டதை நானே பார்த்தேன்.” டீ பாயின் திட்டமாக இதைச் சொன்னான்.
“ஒரு பெண் உபதளபதியாகப் பணி செய்யும் கோட்டையை நாம் பிடிக்காதிருப்பது அவமானம்!” என்றான் சதர்லண்ட்,
டீ பாயின் முகத்தில் அப்பொழுதுதான் சினம் மறைந்து இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “அந்த அவமானத்தை எப்படித் தீர்த்துக் கொள்வதாக உத்தேசம்?’ என்று கேட்டான் புன்முறுவலின் ஊடே, மேலும் சொன்னான். “வீரப்
பெண்மணிகள் உலகத்தில் எங்கும் இருந்திருக்கிறார்கள். இங்கு ஹோல்கார் சமஸ்தானத்தில் அகல்யாபாய் இல்லையா? ராஜபுத்திரர்களை அவள் தோற்கடித்து விரட்டவில்லையா? அதைப்பற்றி அவமானப்பட ஏதுமில்லை. முதலில்
கோட்டையைப் பிடிக்கும் வழியைப் பார்ப்போம்” என்ற டீ பாயின் சிந்தனையில் இறங்கினான். பிறகு எழுது கருவிகளைக் கொண்டுவரச் சொல்லி ஒரு கடிதம் தீட்டி தூதன் கையில் கொடுத்து “சிந்தியாவுக்கு எனது வணக்கங்களைச்
சொல்.” என்று கூறினான்.
“கடிதத்துக்கு முத்திரை வைக்கவில்லையே?” என்று கேட்டான் சதர் லண்ட்.
“அவசியமில்லை.”
“என்ன எழுதியிருக்கிறீர்கள்?”
“இன்னும் எட்டு நாளுக்குள் கோட்டையைப் பிடிப்பதாக எழுதியிருக்கிறேன்” என்ற டீ பாயின் தூதனுக்குப் போக விடை கொடுத்தான்.
அன்று முழுவதும் டீ பாயின் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவ்வப்பொழுது இரண்டொரு பீரங்கிகள் மட்டும் கோட்டையை நோக்கிச் சீறிக்கொண்டிருந்தன. அவற்றையும் நிறுத்த உத்தரவிட்ட டீ பாயின் அன்றிரவின் ஆரம்பத்தில்
தனது உபதளபதிகளை அழைத்துப் பேசினான். “சதர்லண்ட்! ராபர்ட்ஸ்! பெட்ரான்! ரோகரன்! நாம் இங்கு முற்றுகை துவங்கிய போது தீப்சந்தும் புஷ்பாவதியும் கோட்டையில் இல்லை” என்று பேச்சைத் துவங்கினான்.
இதைக் கேட்ட உபதளபதிகள் பிரமித்தார்கள். “அப்படியா!” என்று பெட்ரான் கேட்டான்.
“அவர்கள் சிந்தியாவின் வீட்டில் இருந்தார்கள்…” இதை டீ பாயின் மிக மெதுவாகச் சொன்னான்.
“இங்கு எப்படி வந்தார்கள்?” ரோகரன் கேட்டான்.
“சிந்தியாவே அனுப்பியிருக்க வேண்டும். அது கிடக்கட்டும். நமது முற்றுகையிருக்கும்போது இவர்கள் நமது கண்ணில் மண்ணைத் தூவி எப்படி உள்ளே நுழைந்தார்கள்?” என்ற டீ பாயின் “இந்தக் கோட்டைக்குள் செல்ல ஏதோ ரகசிய
வழி இருக்கவேண்டும்.” என்றும் கூறினான்.
இதைக் கேட்ட நான்கு உபதளபதிகளும் பிரமித்தார்கள். “அப்படியானால் அதைக் கண்டுபிடித்தால் என்ன?” என்று வினவினான் பெட்ரான்.
“அப்படி சுலபமாகக் கண்டுபிடிக்க முடியுமானால் அது ரகசிய வழியல்ல.” என்றான் டீ பாயின். “எந்த மகாராஜாவும் தப்பியோட சுரங்க வழிகளை வைத்திருப்பார்கள். பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி என்ற நாடுகளின் சரித்திரங்களிலும்
இந்த மாதிரி வழிகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இந்த நாட்டில் அதற்கு அவசியமிருக்கிறது. ராஜபுதனம் சதா உட்பூசல்களுக்கும் வெளித் தாக்குதலுக்கும் இலக்காகி நாசப்பட்டிருக்கிறது. ஆகவே இங்குச் சுரங்க வழிகள் இருப்பதில்
தவறில்லை. நியாயமுங் கூட. ஆனால் தப்ப முயலும் ராஜபுத்திரர்கள் குறைவு. வாட்களுடன் வெளி வந்து வீர மரணம் அடைந்தவர்களே அதிகம்.” என்றும் கூறினான்.
“அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று வினவினான், சதர்லண்ட்.
“பீரங்கிகள் சித்தமாக இருக்கட்டும்.” என்ற டீ பாயின் அவர்களுக்குப் போக விடை கொடுத்தான்.
அன்று இரவு நன்றாக மூண்டதும் டீ பாயின் தனது புரவியொன்றில் ஏறிக் கோட்டையைச் சுற்றித் தன்னந்தனியாகப் பயணம் செய்தான். உடன் வர முயன்ற வீரர்களை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு கோட்டையின்
புறக்காட்டில் சஞ்சரித்தான். இப்படி சவாரி செய்து கொண்டு சென்றவன் ஒரு மரத்தடிக்கு வந்தபோது புரவியின் காலில் ஏதோ உலோக ஒலி கேட்டதும் அங்கேயே புரவியை நிறுத்திக் கீழே இறங்கினான். புரவியின் காலில் இருந்த
தழைகளை நீக்கினான். அதன் அடியில் தெரிந்த பெரிய இரும்புப் பலகையைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டான். மெள்ள தன் கைகளால் அதைத் தூக்கி நிமிர்த்தினான். கீழே நீண்ட வழி ஒன்று தெரிந்தது. ஆனால் அந்த வழியின்
முகப்பில் பெரிய கோணிமூட்டைகள் இருந்ததைக் கவனித்த டீ பாயின் திருப்திக்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு மறுபடியும் இரும்பு மூடியால் ரகசிய வழியை மூடிவிட்டு சருகுகளையும் அதன் மீது பழையபடி
பரப்பிவிட்டுத் தனது கூடாரத்துக்குத் திரும்பினான்.
அதே இரவில் கோட்டைக்குள் இடிந்த நடு மாளிகையின் மொட்டைத் தளத்தில் நின்றுகொண்டிருந்த தீப்சந்த் பக்கத்திலிருந்த புஷ்பாவதியை நோக்கி “அதோ யாரோ ஒருவன் புரவிமீது தன்னந்தனியாகப் போகிறான்.”என்று அவன்
போன இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
“ஆம். அவன் யார்?” என்று கேட்டாள் புஷ்பாவதி.
“டீ பாயின்.”
“என்ன!”
“ஆம். டீ பாயின் தான். அவ்வளவு துணிவு வேறு யாருக்கும் இருக்காது.”
“எதற்காகக் கோட்டையைச் சுற்றுகிறான்.”
“ரகசிய வழியைக் கண்டுபிடிக்க.”
“கண்டுபிடித்துவிட்டால் கோட்டை அவன் கைகளில் விழுந்து விடுமே?”
“விழாது.”
“அந்த வழியாக அவன் வீரர்களை அனுப்பமாட்டானா?”
“முடிந்தால் அனுப்புவான்.”
“முடியாமலென்ன?”
“அந்த வழியை அடைத்துவிட்டேன்.”
இதைச் சர்வசாதாரணமாகச் சொன்ன தீப்சந்த், ‘புஷ்பாவதி! வா, நாம் உறங்குவோம்” என்று மொட்டை மாடியை விட்டுக் கீழே இறங்கி புஷ்பாவதி யையும் கைகளை நீட்டி வாங்கி தூக்கி இறக்கிவிட்டான்.
“நிலத்தில் கால் பதிந்ததும் “நமது வீரர்கள் கோட்டைக்குள் விழித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.” என்றாள் கோபத்துடன்.
“இருந்தாலென்ன?” என்று தீப்சந்த் கேட்டான்.
“நீங்கள் என்னை இறக்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்…” என்றாள் புஷ்பாவதி..
“பார்த்தாலென்ன?” என்று கேட்டான் தீப்சந்த்.
“உங்களுக்குத்தான் வெட்கமில்லை. எனக்கு இருக்கிறது” என்றாள் அவள்.
“அப்படியா?”
“ஆம்.”
“அப்படியானால் வா.”
“எங்கு?”
“நமது விடுதிக்கு.”
“எதற்கு?”
“வா, சொல்கிறேன்” என்று கூறிய தீப்சந்த் தனக்கும் புஷ்பாவதிக்குமாக ஒதுக்கியிருந்த சிறு வீட்டுக்குள் சென்று வழக்கம்போல் தரையில் படுத்துக்கொண்டான்.
“இருங்கள், பாய் கொண்டு வருகிறேன்” என்றாள் புஷ்பாவதி.
“வேண்டாம். தரையே நன்றாகத்தான் இருக்கிறது” என்ற தீப்சந்த் அவளை இழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான். பிறகு அவள் அழகிய உடலைத் தன்மீது சாய்த்துக்கொண்டான். அவன் இரு கைகளும் அவள்
பூவுடலைச் சுற்றிச் சென்றன, சுற்றி வளைத்தன, அழுத்தின.
அவள் மார்பின் எழுச்சிகள் அவன் அணைப்பினால் கெட்டிப்பட்டுவிட்டாலும் அவன் மார்புமீது அழுந்திக் கிடந்தன. அவன் கைகள் முதுகில் இருந்து இடைக்கும் பிறகு அதற்கும் கீழும் இறங்கியது. அவள் உணர்ச்சிகள் தத்தளித்தன.
ஒரு கை அவள் சேலையைத் தளர்த்த முயன்றது.
“உம்! எடுங்கள் கையை” என்றாள்.
அவன் கையை எடுக்காமலும் அவற்றின் செயலை நிறுத்தாமலும் கேட்டான், “நான் உன்னை இறக்கிய போது என்ன சொன்னாய்?” என்று.
“என்ன சொன்னேன்?” என்று அவள் முணுமுணுத்தாள்.
“எனக்கு வெட்கமில்லாவிட்டாலும் உனக்கு வெட்கமிருக்கிறது என்று சொல்லவில்லை?”
“சொன்னேன்.”
“அந்த வெட்கத்தை உடைக்கப்போகிறேன் இப்பொழுது.”
“முதலில் கோட்டை முற்றுகையிலிருக்கிறது. அதை உடையுங்கள்.” இதைச் சொன்ன அவள் பெருமூச்சு விட்டாள்.
“நீயும் ஒரு கோட்டைதான் புஷ்பாவதி. வெட்கம் பெண்களின் கோட்டை, அதை உடைத்தால் அவர்கள் பாதுகாப்பை உடைத்ததுபோலத்தான். உன் கோட்டையை உடைப்பதுபோலவே டீ பாயின் முற்றுகையையும் உடைக்கிறேன்”
என்றான். புறகு அவன் பேசவில்லை. உணர்ச்சிகள் பேசின. தீப்சந்த் அன்று அவள் முற்றுகையையும் உடைத்தான் ; எட்டாவது நாள் கோட்டை முற்றுகையையும் உடைத்தான். இரண்டிலும் இரண்டுவித உணர்ச்சிகள் தாண்டவமாடின.

Previous articleMohini Vanam Ch 33 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 35 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here