Home Historical Novel Mohini Vanam Ch 45 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 45 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

99
0
Mohini Vanam Ch 45 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 45 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 45 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 45 விடுதலையின் விலை!

Mohini Vanam Ch 45 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மாதாஜி சிந்தியாவின் வலக்கரம் போன்ற அம்பாஜி இங்ளே பெரிய வீரரோ படைத்தலைவரோ அல்ல வென்றாலும் போர்த் தந்திரங்களின் நுட்பங்களை சாங்கோபாங்கமாக அறிந்தவர் என்பதைப் புஷ்கரம் வந்த இரண்டாவது நாளே தீப்சந்த் உணர்ந்து
கொண்டான். இரண்டாவது நாள் சிந்தியா நடத்திய மந்திராலோசனையில் அம்பாஜி இங்ளே மிகவும் சங்கடமான கேள்விகள் சிலவற்றைக் கேட்டார்.
முதலில் ராஜமாதாவின் கோரிக்கையும் தீப்சந்தின் தூதும் மட்டும் மராட்டியர் மேவாரில் தலையிடுவதற்குப் போதாதென தமது கருத்தைத் தெரிவித்த அம்பாஜி, “தீப்சந்த் மாவீரன் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், மேவார் இருக்கும் நிலையில் தனி நபர்
வீரம் மட்டும் பயன்படாது. நல்ல படை வசதியுள்ள ஒரு ராஜ புத்திரனின் ஈடுபாடும் வேண்டும்” என்று கூறிய அம்பாஜி, “தீப்சந்த்! நீங்கள் சொல்லும் கோட்டா சமஸ்தானாதிபதி ஜலீம்சிங் தனது படைகளுடன் இந்தப் போரில் ஈடுபடு வாரா!” என்று கேட்டார்.
“கண்டிப்பாய் ஈடுபடுவார்.” என்றான் தீப்சந்த்.
அம்பாஜி தமது நீண்ட மூக்கை ஒருமுறை உருவி விட்டுக்கொண்டு, தமது கழுகுக் கண்களை தீப்சந்த்மீது நிலைநாட்டி, “அவரது ஈடுபாட்டைப்பற்றி நாம் தீர்மானிப்பதைவிட அவர் மூலமே அதை அறிந்து கொள்வது நலம் அல்லவா?” என்று விசாரித்தார்.
அம்பாஜியைச் சந்தேகப் பார்வையாகப் பார்த்தான், தீப்சந்த். “ஏன் நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்று வினவினான்.
“படைபலம் இல்லாமல் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு போரை வெல்ல முடியாது.” என்ற அம்பாஜி” நீங்கள் இங்கு வருமுன்பே ஜலீம்சிங்கை இங்கு வரும்படிக் கேட்டுத் தூது அனுப்பியிருக்கிறேன். எப் படியும் நாளைக்கு அவர் வருவார். இல்லை,
பதிலாவது வரும்.” என்றார்.
அதற்குமேல் அவருடன் பேசுவதில் பயனில்லை என்று தீர்மானித்த தீப்சந்த், “சரி, ஜலீம்சிங் வரட்டும்.” என்று சொல்லிவிட்டு புஷ்பாவதி இருந்த இடத்துக்குச் சென்றான். அங்கு சிந்தியாவும் அவனுடன் சேர்ந்து கொண்டு, “மாப்பிள்ளை! இன்று அம்பாஜி
சொன்னதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எந்த ஓர் அலுவலை எடுத்தாலும் அவர் தோல்வி கண்டவர் இல்லை. அவர் மேவாரில் தலையிட ஒப்புக்கொண்டதே மேவாரின் பாக்கியம்.” என்று சமாதானப்படுத்தினார்.
“அப்படியானால் உங்கள் முடிவு என்பது இதில் இல்லையா?” என்று வினவினான், தீப்சந்த்.
“முடிவு என்னுடையதாகத்தான் இருக்கும். ஆனால், அந்த முடிவை எடுக்கும் முன்பு அதன் சாதகபாதகங்களைக் கவனிக்க வேண்டும். அதற்கு அம்பாஜியை நியமித்திருக்கிறேன். அவர் போட்ட கணக்கு இதுவரை தவறியது இல்லை.” என்றார், மாதாஜி சிந்தியா.
“ஆம், மாப்பிள்ளை. எல்லாவற்றையும் இவரே கவனிக்க முடியுமா? அதற்காகத்தான் இங்ளேயை வைத்திருக்கிறார். கவலைப்படாதீர்கள். எல்லாம் உங்கள் விருப்பப்படி முடியும். ஜலீம்சிங் வரும்வரையில் நீங்களும் புஷ்பாவதியும் இங்கு ஆனந்தமாயிருங்கள். இந்த
அரசியல் தொந்தரவு எப்பொழுதுந்தான் இருக்கிறது.” என்றாள், சிந்தியாவின் மனைவி.
அடுத்த ஒரு நாள் அரசியலைச் சிறிது மறந்து புஷ்கரத்தின் புண்ணிய நீரில் புஷ்பாவதியுடன் நீராடுவதிலும் சுற்றுப்புறங்களைச் சுற்றிப் பார்ப்பதிலும் காலம் கழித்தான் தீப்சந்த். ஆனால், அவன் சுகவாழ்வுக்கு. அதிக நாட்கள் கிடைக்கவில்லை.
மறுநாள் மாலையிலேயே ஜலீம்சிங் புஷ்கரத்துக்கு வந்து சேர்ந்தார். தம்மையும் ராஜமாதாவின் தூதர் என்று அறிவித்துக்கொண்டார். புஷ்கரத்தின் மாளிகை யின் முன்கூடத்தில் அவருக்கு அம்பாஜியை அறிமுகப்படுத்தி வைத்தார். தீப்சந்தையும் சுட்டிக்காட்டி,
“இவரை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கத் தேவையில்லை.” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
“ராஜபுதனத்தின் மாவீரனை, ராஜமாதாவின் முதல் தூதனை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ராஜமாதாவின் இரண்டாவது தூதனாக என்னை வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
“இரவு இளைப்பாறுங்கள். நாளை பேசுவோம்” என்ற சிந்தியாவை நோக்கிய ஜலீம்சிங், “மராட்டிய தளபதி! இனி விரயம் செய்யக் காலமில்லை. பேசவேண்டியதை இன்று இரவே பேசி முடிப்போம்.” என்று கூறினார்.
“தங்கள் விருப்பம்” என்ற சிந்தியா, அம்பாஜியுடனும் தீப்சந்துடனும் ஜலீம்சிங்குடனும் மந்திராலோசனை அறையை அடைந்தார். அங்கிருந்த மஞ்சங்களில் அமர்ந்ததும் ஜலீம்சிங் பேசத் தொடங்கி, “மேவார் துரோகிகளிடம் சிறைப்பட்டுக் கிடக்கிறது. அதிலிருந்து
மேவாரை மீட்கவும் ராணாவின் மரியாதையை அதன் உரிய நிலைக்குக் கொண்டு வரவும் நாம் கூடியிருக்கிறோம். இந்தப் பணிக்கு எனது படை சித்தமாயிருக்கிறது.” என்றார்.
“மகிழ்ச்சி” என்றார் சிந்தியா.
“எதற்கு மகிழ்ச்சி?” என்று கேட்டார் ஜலீம்சிங்.
‘மேவாரில் புரட்சிக்காரரைத் தவிர ராஜபக்தியும் தேசபக்தியும் கொண்டவர்கள் இருப்பது பற்றி மகிழ்ச்சி யடைகிறேன். எங்கள் படையும் சித்தமாயிருக்கிறது. அதில் ஒரு பகுதி டீபாயினின் பீரங்கிப் படை’ என்று சிந்தியா தனது படையின் உயர்வை மறைமுகமாகச்
சுட்டிக் காட்டினார்.
ஜலீம்சிங்கும் சளைக்கவில்லை. “அந்தப் படையைத் தானே இந்த தீப்சந்த் பிளந்து சென்றான்?” என்று கேட்டார்.
சிந்தியா பதிலுக்குப் புன்முறுவல் செய்தார், “அதைப் பற்றி உங்களை விட எனக்குத்தான் அதிகப் பெருமை டீ பாயினின் யந்திரப் படையைப் பிளந்தது என் மருமகன்” என்று புன்முறுவலின் ஊடே கூறினார்.
ஜலீம்சிங்கின் முகத்தில் சிறிது குழப்பம் தெரிந்தது. “புஷ்பாவதி நாக்ராமக்ராவின் தலைவர் பல்வந்த்சிங்கின் பெண் அல்லவா?” என்று கேட்டார் குரலிலும் குழப்பம் ஒலிக்க.
“பெற்றது அவர் தான். ஆனால், புஷ்பா எங்கள் வளர்ப்புப் பெண்.” என்றார் சிந்தியா.
அந்த நேரத்தில் தமது ஒட்டிய கன்னங்களையுடைய வாயைத் திறந்த அம்பாஜி இங்ளே, போரைப் பற்றிச் சிறிது பேசுவோமா?” என்று வினவினார்.
சிந்தியா, அம்பா ஜியைப் பெருமை துலங்கிய கண்களால் நோக்கினார். “அம்பா ஜி! நீ எப்பொழுதும் கருமத்திலேயே கண்ணுடையவன். சரி, நீயே விவாதத்தைத் தொடங்கு” என்று தமது இருக்கையில் சாய்ந்து கொண்டார்.
அம்பாஜி கழுகுக் கண்களை ஜலீம் சிங்கின் மீது நாட்டி, ‘கோட்டா மன்னனே! மேவாரைக் காப்பது மராட்டியத்தின் கடமைகளில் ஒன்றல்ல ; அதைக் காப் பாற்றுவதும் எளிதல்ல. படை நாசம், பணநாசம் சகலமும் ஏற்படும். ஆகவே, இந்தப் பணிக்கு நீங்கள் எத்தனை
பணம் கொடுக்க முடியும்?” என்று கேட்டார்.
ஜலீம்சிங் சிறிது முகம் சுளித்து, “எடுத்த உடனே பணப் பேச்சுதானா?” என்று வினவினார்.
அம்பாஜி புன்முறுவல் செய்தார். அவரின் ரத்தமற்ற கன்னங்கள் அந்தப் புன்முறுவலை பிசாசின் புன்முறுவலைப் போல் காட்டின. அவர் சொற்களும் வரண்டு உணர்ச்சியற்று வெளிவந்தன: “பணம் இல்லாமல் இந்த உலகத்தில் எது நடக்கும்? படை வீரர்களுக்குச்
சம்பளம் கொடுக்க வேண்டாமா? உணவு அளிக்க வேண்டாமா? டீபாயின் பீரங்கிகளுக்கு வெடிமருந்தும் குண்டுகளும் வாங்க வேண்டாமா? பணம் இல்லாமல் எதைச் செய்ய முடியும்?” என்று இங்ளே விசாரித்தார், பயங்கரப் புன் முறுவலின் ஊடே.
ஜலீம்சிங் வாதாட முற்படவில்லை. “எத்தனை பணம் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“முன்னமே கணக்குப் போட்டு வைத்திருக்கிறேன். எழுபது லட்ச ரூபாய் பிடிக்கும்.” என்றார் அம்பாஜி.
ஜலீம்சிங் இந்தத் தொகையைக் கேட்டதும் அசந்து போனார். “தீப்சந்த்! நம்மால் எழுபது லட்சம் கொடுக்க முடியுமா?” என்று வினவினார்.
“முடியாது. கொஞ்சம் குறைந்தால் முடியும்” என்று தீப்சந்த் சொன்னதும், பிரமிப்பின் உச்சத்தை அடைந்தார் ஜலீம்சிங் “கொஞ்சம் குறைப்பு எவ்வளவு?” என்று கேட்டார்.
“பத்து லட்சம்.” என்றான் தீப்சந்த்.
“மீதி அறுபது இலட்சம் உன்னிடம் இருக்கிறதா?” ஜலீம்சிங்கின் கேள்வியில் சிறிது சீற்றம் துளிர்த்தது.
“என்னிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேவாரிடம் இருக்கிறது.” என்றான் தீப்சந்த் திட்டமாக.
அறுபது லட்சம் போதாது என்று இங்ளே சொன்னார். அதற்கு மேல் கிடைப்பது கஷ்டமென்று தீப்சந்தும் பேரம் செய்தான். முடிவில் 64 இலட்சம் கொடுப்பது என்று தீர்மானமானதும் சிந்தியா விசாரித்தார்: “தீப்சந்த்! இந்தப் பணம் எங்கிருக்கிறது?”
தீப்சந்த் சற்று எழுந்து அந்த அறையில் அங்குமிங்கும் சிறிது நேரம் உலாவினான். பிறகு நிதானமாகச் சொன்னான்-”இந்த 64 இலட்சத்தை சந்தாவதர் தலைவர்களுக்கு அபராதமாக விதிப்போம். இதில் முக்கால் பாகத்தை மராட்டியர் எடுத்துக் கொள்ள வேண்டியது.
மீதி கால் பாகத்தை மகாராஜாவுக்கு மேவாரின் புனர் நிர்மாணத்துக்குக் கொடுக்க வேண்டியது.”
அம்பாஜியின் கழுகுக் கண்கள் பளிச்சிட்டன. ‘ தீப்சந்த்?” என்று எரிச்சல் துலங்கிய குரலில் அழைத்தார்.
“அம்பாஜி!” என்று தலை வணங்கினான் தீப்சந்த்.
“மேவாரில் பணம் ஏது?” என்று கேட்டார் அம்பாஜி
“மேவாரை சூறையாடியவர்களிடம் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டாலும் அவர்கள் ஆதிக்கத்திற்கு உள்ளிருக்கும் பகுதிகளில் வரி வசூலிக்கலாம்.” என்றான் தீப்சந்த்.
“வரி வசூல் ஆகாவிட்டால்?” என்று அம்பாஜி கேட்டார்.
“நிலம் உங்களுடையது.”
“இந்த வறண்டு போன நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?”
“வறட்சி என்பது சாசுவதம் அல்ல. நல்லாட்சி எனும் மழை பெய்யும்போது வறண்ட நிலங்கள் கதிர் விட்டுக் குலுங்கும். மேவாரின் சுரங்கங்களை மீண்டும் இயக்கினால் உலோகமும் கிடைக்கும். மேவார் போன்ற பேரரசில் 64 இலட்சத்தை வசூலிப்பது மிகவும்
சுலபம்.”
இதைக் கேட்ட சிந்தியாவின் முகத்தில் ஏதோ மாறுதல் ஏற்பட்டது. “சரி, இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்வோம்” என்ற சிந்தியா, “ஜலீம்சிங்! உமது படைகளை எத்தனை நாட்களில் நமது படையுடன் இணைக்க முடியும்?” என்று கேட்டார்.
“பத்தே நாட்களில்.” என்றார், ஜலீம்சிங். “இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் நமது படைகள் மேவாருக்குள் நுழையும்.” என்றார்.
சிந்தியா அன்று எடுத்த முடிவைப் பற்றி அம்பாஜி இங்ளேக்குப் பெரிதும் சந்தேகம் இருந்தும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சிந்தியா ஆழம் தெரியாமல் காலை விடுகிறார் என்று அம்பாஜி திட்டமாக எண்ணினார். எப்பேர்ப்பட்ட சிக்கலில் தாம்
மாட்டிக் கொண்டோம் என்று போர் தொடங்கிய பின்பே சிந்தியா உணர்ந்துகொண்டாலும், முன்பே அதை ஓரளவு ஊகித்திருந்தார் என்பதை தீப்சந்த் புரிந்து கொண்டான். அன்று இரவு சிந்தியா தம் மனைவியிடம், “இன்று நான் பெரிய முடிவு எடுத்தேன், நமது
மாப்பிள்ளைக்காக” என்று சொன்னார்.
“என்ன, அப்பேர்ப்பட்ட முடிவு?” என்று சிந்தியா வின் மனைவி கேட்டாள்.
“மேவாரில் தலையிட ஒப்புக்கொண்டேன். அதைவிட அது…” என்று சிந்தியா வாசகத்தை முடிக்கவில்லை.
“மாப்பிள்ளையைத் திருப்தி செய்ய” என்று கூறி நகைத்தாள், சிந்தியாவின் மனைவி.
அவள் கூறியதில் ஓரளவு உண்மையிருப்பதை சிந்தியா புரிந்துகொண்டார். “குடும்ப பாசங்களும் பொது வாழ்வின் திருப்பங்களுக்கு முக்கிய காரணம்” என்று உள்ளூர சொல்லிக்கொண்டார்.
இதை அடுத்த அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த தீப்சந்த் “இந்த வெற்றி உன்னுடையது புஷ்பாவதி” என்று கூறி அவளை இறுக அணைத்துக்கொண்டான் “மேவார் விடுதலையின் விலை 64 இலட்சம்” என்றும் மனைவியைப் பாராட்டினான். “நீ
விலைமதிக்க முடியாதவள்” என்றும் மனைவியைப் பாராட்டினான்.
அடுத்த பதினைந்தாவது நாள் சிந்தியாவின் பெரும் படை மேவாருக்குள் நுழைந்தது.

Previous articleMohini Vanam Ch 44 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 46 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here