Home Historical Novel Mohini Vanam Ch 46 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 46 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

69
0
Mohini Vanam Ch 46 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 46 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 46 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 46 முதல் பலி!

Mohini Vanam Ch 46 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

முதல் நாள் மந்திராலோசனை நடத்திய மாதாஜி சிந்தியா மேவாருக்குள் நுழைப் பதினைந்து நாட்கள் எடுத்துக்கொண்டாலும், முதலில் அம்பாஜி இங்ளேயையும் ஜலீம்சிங்கையும் சித்தூரை நோக்கிப் படையெடுத்துச் செல்லுமாறு அனுப்பிவிட்டார். அவர்
உத்தரவுப்படி புறப்பட்ட ஜலீம்சிங்கும் இங்ளேயும் தீப்சந்தும் தங்களுடன் வரட்டும் என்று சொன்னதும், புஷ்பாவதியும் புறப்படவே “குழந்தாய்! நீ பிறந்தகத்தில் சில நாட்களாவது இருக்க வேண்டாமா? நீ என்னுடன் வரலாம். மாப்பிள்ளை முன்னால் போகட்டும்”
என்றார்.
கணவனை விட்டுப் பிரிய புஷ்பாவதிக்கு இஷ்டமில்லை என்றாலும், மாதாஜியின் மனைவி கங்காபாய் “அடி புஷ்பா! சில நாட்கள் என்னுடன் இரு. எனக்கும் உடல் நிலை சரியாயில்லை. நான் அதிக நாள் இருக்க மாட்டேன்.” என்று குரல் தழுதழுக்கக் கேட்டுக்
கொண்டாள்.
“புஷ்பாவதி! இந்த உன் தாய் தந்தையர்கள் சிக்கலும் தொந்தரவும் மிகுந்த மேவாருக்குள் நுழைய ஒப்புக் கொண்டதே உன்னை முன்னிட்டுத்தான். ஆகையால் நீ அவர்களுடன் வா” என்று தீப்சந்தும் வற்புறுத்தினான்.
அதற்கு மறுக்க முடியாமல் வளர்ப்புப் பெற்றோருடன் தங்க புஷ்பாவதி ஒப்புக்கொள்ளவே தீப்சந்த் மாதாஜி சிந்தியாவையும், கங்கா பாயையும் வணங்கி விட்டுப் படைகளுடன் மேவாருக்குப் பயணமானான்.
மராட்டியர் படைகளுடனும் ஜலீம்சிங்கின் கோட்டா சமஸ்தானப் படைகளுடனும் மேவாருக்குள் நுழைந்த அம்பாஜி இங்ளே, “நாம் முதலில் எந்தத் திக்கில் போகப் போகிறோம். நாம் தாக்கவேண்டிய முதல் இடம் எது?” என்று ஜலீம்சிங்கை வினவினார். இந்தக்
கேள்வியை இரண்டாவது நாளிரவு படைகள் முகாம் செய்திருந்த போது தமது கூடாரத்தில் உட்கார்ந்து தீர்க்க ஆலோசனையில் இருந்த சமயத்தில் இங்ளே கேட்க “இந்த விவகாரங்களை தீப்சந்திடம் கேட்பது நல்லது.” என்றும் ஜலீம்சிங் சொன்னார்.
“உங்களைவிட மேவாரின் மர்மங்கள் அந்த வாலிபனுக்கு அதிகமாகத் தெரியுமா?” என்று வினவிய இங்ளே தமது நீண்ட மூக்கைத் தடவிவிட்டுக் கொண்டார்.
“தீப்சந்துக்கு மேவாரைப் பற்றித் தெரிந்ததில் அரை வாசி எனக்குத் தெரியாது. போரிடத் தெரியும். படைகளை இயக்கத் தெரியும். ஆனால் எந்த இடத்தில் தாக்கலாம்? எது பலவீனமான இடம்? என்பதெல்லாம் தீப்சந்த் நன்றாக அறிவான்” என்று ஜலீம்சிங் தமது
பெருந்தன்மையைக் காட்டினார்.
அம்பாஜி இங்ளேயின் கழுகுக் கண்களில் மகிழ்ச்சிகூட தாண்டவமாடியது அந்தச் சமயத்தில். “ஜலீம்சிங்! ஒரு மன்னனுக்கு வேண்டிய வீரம் மட்டுமின்றி அடக்கமும் உண்மையும் உம்மிடம் இருக்கின்றன. இந்த ராணாவுக்குப் பதில் மேவாரில் நீர் ராணாவாகப்
பிறந்திருந்தால் இத்தனை கேவல நிலைக்கு மேவார் வந்திருக்காது” என்று பாராட்டினார் இங்ளே.
“அப்படிச் சொல்வது சரியல்ல மராட்டியர் படைத்தலைவரே! மகாராணா சூரிய வம்சத்தில் பிறந்தவர். எங்களை ஆளப்பிறந்த குலம் அது.” என்று கூறினார் ஜலீம்சிங்.
அதற்குமேல் அந்த வாக்குவாதத்தில் ஈடுபடாத இங்ளே தீப்சந்தை அழைத்து வர வீரன் ஒருவனை அனுப்பினார்.
சில நிமிடங்களுக்குள்ளாகவே கூடாரத்துக்குள் நுழைந்த தீப்சந்த், ஜலீம்சிங்குக்கும் இங்ளேவுக்கும் தலை வணங்கித் தன்னை அழைத்த காரணம் என்ன என்று வினவினான்.
“மேவார் எல்லைக்குள் நுழைந்தாயிற்று…” என்று துவங்கினார் இங்ளே.
இங்ளேயின் இந்த முகவுரை வேறு எதற்கோ ஆரம்பம் என்பதைப் புரிந்துகொண்ட தீப்சந்த் தனது தலையை வணங்க மட்டும் செய்தான்.
இங்ளே தொடர்ந்தார். “எந்த இடத்தில் நாம் தாக்குதலைத் துவக்கினால் சித்தூரைப் பிடிக்க அனுகூலமாயிருக்கும்?” என்று வினவினார் மெதுவாக.
ஜலீம்சிங் இருக்கும்போது தான் கருத்தைச் சொல்வது தகாது என நினைத்த தீப்சந்த் ஜலீம்சிங்கை நோக்கினான். அந்த ஜாடையைப் புரிந்துகொண்ட இங்ளே, “உன்னைக் கேட்க வேண்டும் என்று யோசனை சொன்னதே ஜலீம்சிங் தான்.” என்று குறிப்பிட்டார்.
“தீப்சந்த் நிற்க வேண்டாம், அந்த ஆசனத்தில் உட்கார்” என்று சற்று எட்ட இருந்த ஆசனத்தைச் சுட்டிக்காட்டினார்.
ஆனால் ஆசனத்தில் அமராமல் நின்றவண்ணம் சிந்தனையில் சில விநாடிகளே ஆழ்ந்த தீப்சந்த், “என் யோசனையை அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சித்தூரைத் தாக்குமுன்பு சித்தூருக்கு வடக்கி லுள்ள ஹமீர் கோட்டையைத் தாக்கினால் நல்லது
என்று நினைக்கிறேன்.” என்று மிக அடக்கமாகப் பேசினான்.
“ஏன்?” ஒற்றைச் சொல்லில் வினா தொடுத்தார் இங்ளே.
“அது ஒன்றும் அப்படிப் பலவீனமான கோட்டையல்லவே?” என்றார் ஜலீம்சிங்.
“கோட்டை பலவீனமானதல்ல. அதன் தலைவன் பலவீனமானவன்” என்றான் தீப்சந்த். “அதுமட்டுமல்ல…” என்று இழுக்கவும் செய்தான்.
“வேறென்ன?” இங்ளே கேட்டார்.
“ஹமீர் கோட்டையைச் சுலபமாகப் பிடிக்கலாம். அந்தக் கோட்டைக்குள் நிரம்ப உணவுப் பொருள்களும் புரவிகளும், வெடிமருந்தும் குண்டுகளும் இருக்கின்றன.” என்றான் தீப்சந்த்.
“அப்படியா!” என்று வாயைப் பிளந்தார் இங்ளே.
“இருப்பினும் அதை முதலில் கைப்பற்றுவானேன்? பிறகு பிடித்தால் என்ன?” என்று ஜலீம்சிங் வினவினார்.
“அதைக் கைப்பற்றினால் சலூம்பிராவின் இதயத்தைத் தாக்கினது போலாகும்.” என்று தீப்சந்த் மர்மமாகப் பேசினான்.
ஜலீம்சிங் வியப்பு நிரம்பிய கண்களால் தீப்சந்தை நோக்கினார். அவரை நோக்கிச் சொன்னான் தீப்சந்த், “அந்தக் கோட்டையின் தலைவன் கும்பன். சலூம்பிரா வின் ஆசைநாயகியின் மகன். அவனைத் தொட்டால் நீங்கள் சலூம்பிராவின் இதயத்தில் கத்தியைப்
பாய்ச்சுகிறீர்கள்.” என்று.
ஜலீம்சிங் சட்டென்று தமது ஆசனத்தில் இருந்து எழுந்து தீப்சந்தைக் கட்டிக்கொண்டார். “தீப்சந்த்! உன்னுடைய அறிவு மேவாரில் யாருக்கும் கிடையாது.” என்று சிலாகித்தார்.
இங்ளேயின் கழுகுக் கண்களில் ஒளி வீசியது. “நாளைக் காலையில் நாம் ஹமீர் கோட்டையை நோக்கிச் செல்கிறோம்” என்று அவர் கூறியதும் மந்திராலோசனை முடிந்தது. ஜலீம்சிங்கும் தீப்சந்தும் சென்றபிறகு தனியே தமது கூடாரத்தில் உலாவத் தொடங்கிய
இங்ளே, “இந்த வாலிபன் தீட்சண்யமான புத்தியை உடையவன். ஜலீம் சிங்கின் படையைவிட இவன் புத்தி அதிகமாகப் பயன்படும். ஒரு ஆசைநாயகியின் பிள்ளையைவிட நெறிகெட்ட தந்தைக்கு யாரிடம் பிடிப்பு இருக்கும்?” என்று சற்று இரைந்தே சொல்லிக்கொண்டு
“களுக் களுக்”கென்று இரு முறை நகைக்கவும் செய்தார்.
மறுநாள் படை நகர்ந்து முற்றுகையிட்டதும் பதினைந்தாவது நாள் மேவாருக்குள் நுழைந்த மாதாஜியும் தமது சிறுபடையுடன் அவர்களுடன் கலந்துகொண்டார். சிந்தியா வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் ஹமீர் கோட்டை வீழ்ந்தது. சலூம்பிராவின் ஆசைநாயகி மகன்
கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. கால்களில் சங்கிலித் தளைகள் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.
ஜலீம்சிங்கின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை வகித்த தீப்சந்த் கோட்டைக்குள் நுழைந்தான். அங்கிருந்த நிலை கண்டு பெரிதும் வெகுண்டான். வெளியே மக்கள் உணவுக்குத் திண்டாடிய சமயத்தில் சலூம்பிரா தமது ஆசைநாயகியின் மகனுக்கு நிரம்ப
தானியங்களைச் சேகரித்து வைத்திருந்தார். தீப்சந்த் அந்தக் கோட்டையில் இருந்த தானியக் குவியல்களையும் பீரங்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் இவற்றையெல்லாம் கைப்பற்றினான். மாதாஜி சிந்தியா சகல மரியாதைகளுடன் கோட்டைக்குள்
வரவேற்கப்பட்டார்.
அங்கிருந்து படைகள் சித்தூரை நோக்கி முன்னேறிய போது சிந்தியா அந்தப் படையுடன் செல்லவில்லை. தமது மனைவி உடல்நிலை சீர்குலைந்து வந்த காரணத்தால் முதலில் நாதத்வாரத்துக்குச் செல்ல முடிவு செய்தார். அவர் அந்த முடிவை எடுக்கும்போது
தீப்சந்தும் புஷ்பாவதியும் கங்காபாயின் அருகில் இருந்தார்கள். கங்காபாய் தனது கணவனை நோக்கிச் சொன்னாள்: “என் உடல்நலத்துக்காக நீங்கள் கடமையை நிறுத்த வேண்டாம். நாதத்வாரத்தில் என்னை விட்டுச் செல்லுங்கள்” என்று.
அந்த வீரத் தாயைப் பார்த்த புஷ்பாவதியின் கண்களில் நீர் துளிர்த்தது. “அம்மா! உங்களுக்கு அப்படி யொன்றும் பிரமாத நோயில்லை. ராஜசமுத்திரம் ஏரியின் காற்றும் நாதத்வார கிருஷ்ணன் தரிசனமும் உங்களைக் காப்பாற்றும்.” என்றாள். ஆனால் அந்த
இரண்டும் பயனளிக்கவில்லை கங்காபாயின் தேகநிலைக்கு. நாள் ஆக ஆக திணறியது. ஆங்கிலக் கணக்குப்படி 1791-வது ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி கங்கா பாயின் உடல் நிலை மிகவும் மோசமாயிற்று.
புஷ்பாவதி தனது வளர்ப்புத் தாயைத் தனது மார்பு மீது சாத்திக்கொண்டு சாளரத்தருகே அமர்ந்திருந்தாள். கங்காபாயின் கண்கள் நாதத்வாரத்தை நோக்கிக்கொண்டிருந்தன. “புஷ்பா! கிருஷ்ணன் என்னை அழைக்கிறான்” என்றாள் கங்காபாய் மெதுவாக.
புஷ்பாவதி நீர் ததும்பும் கண்களுடன் “அம்மா! அப்படிப் பேசாதீர்கள்.” என்றாள் தழுதழுத்த குரலில்.
சற்று எட்ட அதே அறையில் உலாவிக்கொண்டிருந்த சிந்தியா தமது மனைவியை நோக்கி வந்தார். கங்கா பாயின் கண்கள் கணவனை அன்புடன் ஏறெடுத்து நோக்கின. “எது நேரிட்டாலும் நமது குழந்தைகளைக் கைவிடாதீர்கள். மாப்பிள்ளையின் நோக்கத்தை
ஈடேற்றுங்கள்” என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டாள், வயோதிகத்திலும் அழகாயிருந்த கண்கள் கணவனை ஏறெடுத்து நோக்கின. நோக்கிய கண்கள் நிலைத்துவிட்டன.
புஷ்பாவதி திடீரென வீறிட்டுக் கதறினாள். எதற்கும் மசியாத மாதாஜி சிந்தியா தமது முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டார். அந்த இரும்பு மனிதனின் உடல் குலுங்கியது. முகத்தைத் தாங்கிய கைகளில் இருந்து நீர் அருவியாக ஓடியது. “விடுதலைக்கு
மேவார் வாங்கிய முதல் பலி இது” என்று உள்ளூர எண்ணி விம்மினார் சிந்தியா. “இதற்கெல்லாம் காரணமான சலூம்பிராவை அழித்துவிடுகிறேன்.” என்றும் சபதம் செய்துகொண்டார்.
அடுத்த மாதம் சிந்தியாவின் பீரங்கிகள் சித்தூர் கோட்டையைத் தூள் செய்ய பக்கத்துக் குன்றுகளில் ஏற்றப்பட்டன. சித்தூருக்குள் ஈ எறும்புகூட நுழைய முடியாதபடி கோட்டையை முற்றுகையிட்டார் சிந்தியா. சித்தூருக்குள் பெரும் புரட்சியொன்று
விளைந்துகொண்டிருந்தது. புஷ்பாவதி, சிந்தியாவைவிட்டு அகலவில்லை. மனைவி போன துக்கத்தை ஆற்ற முடியாவிட்டாலும் சிந்தியாவின் மனதைத் திடப்படுத்த பெரும் ஊன்று கோலாக விளங்கினாள் புஷ்பாவதி. தீப்சந்த் அவரது பக்கத்தில் சதா
இருந்ததாலும் புஷ்பாவதியின் அன்பினாலும் மெள்ள ஆறுதலடைந்து கொண்டிருந்தார் சிந்தியா காலம் மெள்ள அவரது மனப்புண்ணை ஆற்றிக் கொண்டிருந்தது.
ஆனால் அதை வேறு விதத்தில் கிளறினார் பீம்சிங் சலூம்பிரா.

Previous articleMohini Vanam Ch 45 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 47 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here