Home Historical Novel Mohini Vanam Ch 48 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 48 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

93
0
Mohini Vanam Ch 48 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 48 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 48 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 48 இரண்டாவது பலி!

Mohini Vanam Ch 48 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மகாராணாவின் ஆசைப் புதல்வி கிருஷ்ணகுமாரி கிருஷ்ண விக்ரகம்போல உள்ளே நுழைந்ததும் மாதா ஜி சிந்தியா குழந்தையை ஆர்வமுடன் தமதருகில் அழைத்து அதன் உச்சிமீது தமது கையை வைத்து ஆசீர்வதிக்க முயன்றவர் கையைத் தடுத்த உச்சிப்பூவைக்
கண்டதும் அதைச் சில நிமிடம் உற்று நோக்கினார். பிறகு கையில் ஏதோ சுட்டுவிட்டதுபோல கையை இழுத்துக்கொண்டு “மகாராணா! இந்த உச்சிப்பூ ஏது உங்களுக்கு?” என்று வினவினார்.
மகாராணா அவர் கேள்வியின் உட்கருத்தைப் புரிந்து கொண்டாலும் புரியாதது போலவே கேட்டார், “ ஏன் இந்த உச்சிப்பூவுக்கு என்ன?” என்று.
மாதாஜி சிந்தியா அதிகமாகப் பேச்சை வளர்த்தாமல் “இந்த உச்சிப்பூ இந்த நாட்டை நாசம் செய்துவிடும். இந்தக் குழந்தையின் வாழ்வுக்கு உலை வைத்துவிடும். இதை முதலில் ஏதாவது ஒரு தெய்வத்துக்கு சமர்ப்பித்து விடுங்கள்.” என்றார்.
ஒரு நகை நாட்டுக்கு எப்படி உலைவைக்க முடியும்? ராணா தமது இயற்கையான பிடிவாதத்தைக் காட்டினார்,
“உங்கள் நாட்டுக்கு வந்த தீமை யெல்லாம் இந்த நகை வந்த காலத்தில் இருந்து தான் ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் நடுக்கல்லில் ரத்தச் சிவப்பு காணப்படுகிறது. இடையே கறுப்பும் இருக்கிறது, இந்த சிவப்பு நாட்டில் ரத்தத்தைப் பாய்ச்சும்.இந்தக் கறுப்பு, நாட்டை
கரியாக்கிவிடும். இதை அணிந்தால் இந்தக் குழந்தையின் வாழ்வும் பருவத்துக்குப் பிறகு அதிக நாளிருக்காது.” என்று திட்டமாகச் சொன்னார்.
மகாராணா தமது பிடிவாதத்தையும் பகுத்தறிவையும் காட்டி, “ஒரு கல் எப்படி நாட்டை நாசம் அடையச் செய்யும்?” என்று கேட்டு, சிந்தியா! இப்பொழுது நான் எள்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். சிந்தியாவின் ஒவ்வொரு வார்த்தையும் பிற்காலத்தில்
சரித்திரத்தில் உண்மையாகி நிலைக்கப்போவதை அன்று மகாராணா அறிந்தாரில்லை. மகாராணாவுக்கு மற்றது எதுவும் கையாலாகா விட்டாலும் பிடிவாதத்தில் குறைவில்லை என்பதை உணர்ந்த மாதாஜி சிந்தியா சொன்னார்: “மகாராணா | கல் பரீட்சை எனக்குத்
தெரியும். மனித வாழ்க்கை ஏதோ தோடோ பின்னப்படுகிறது இயற்கையால், அதை நாம் அறிய முடியாவிட்டாலும் சாத்திரங்கள் அறிந்திருக்கின்றன. மண்ணோடு நமது வாழ்க்கை பின்னப்படவில்லை. இதற்காகத்தானே சண்டை போடுகிறோம். மடிகிறோம்.
கல்லோடு மாத்திரம் அது ஏன் பிணைந்திருக்கக்கூடாது?” என்று என்ன சொன்னாலும் மகாராணாவின் புத்தியில் எதுவும் ஏறாது என்பதை உணர்ந்ததால், “மகாராணா! எனது கருத்து ஒரு புறமிருக்கட்டும். தாங்கள் முற்றுகைக் களத்துக்குப் புறப்படுங்கள்.”
என்றார்.
“நான் அவசியமா?” என்று தயங்கினார் மகாராணா.
“மகாராணா! என்ன இருந்தாலும் நான் மூன்றா மவன். சித்தூரை முற்றுகையிட இந்த மராட்டியனுக்கு என்ன உரிமை என்று சலூம்பிரா கேட்கிறார். நீங்கள் நேரில் பங்கு கொண்டால் இந்தக் கேள்வி எழாது. ஒரு வேளை தங்களுக்கு சலூம்பிரா பணிந்தாலும்
பணியலாம்.” என்றார் சிந்தியா.
“அந்தத் துரோகியாவது பணியவாவது?” என்றார் மகாராணா.
“சலூம்பிரா உங்கள் காலில் விழுந்தாலொழிய சித்தூர் முற்றுகை முடியாது. அவர் சரணடையா விட்டால் அவரை சிறை செய்து கொண்டு வருகிறேன்.” என்று சிந்தியா சபதம் செய்தார். “மகாராணா! இந்த மராட்டியன் சிநேகம் செய்தால் காரியத்தை முடிக்காமல்
விடமாட்டான். உங்கள் நலம் எங்கள் நலம், உங்கள் விரோதிகள் எனது விரோதிகள்” என்று உறுதியுடன் பேசினார்.
அன்று மாலையே மகாராணா சிந்தியாவுடனும் ஜலீம்சிங்குடனும் சித்தூருக்குக் கிளம்பினார். மகாராணாவும் போரில் கலந்துகொண்டார் என்ற விஷயத்தை சித்தூர் கோட்டையிலிருந்த வீரர்கள் அறிந்ததும் புரட்சி செய்யத் தொடங்கினார்கள். சலூம்பிராவிடம்
சென்று, “மகாராணாவுக்கு எதிராக நாங்கள் வாளை எடுக்க மாட்டோம், நீங்களாக சரணடையாவிட்டால் நாங்கள் உங்களைப் பிணைத்து மகாராணாவிடம் ஒப்படைப்போம்.” என்று சீறினார்கள்.
அந்த நிலையை நன்றாகக் கிளறிவிட்டார் இங்ளே. சிந்தியா மகாராணாவைப் பார்க்கப் போயிருந்தபோது தாம் ஒரு வெள்ளைக் கொடியைப் பிடித்துக்கொண்டு சமாதானத் தூதனாகச் சித்தூருக்குள் போய்ச் சலூம்பிராவைச் சந்தித்தார். “சலூம்பிரா! நீர்
சரணடைவது நல்லது.இல்லாவிட்டால் நாளை முதல் டீபாயினின் பீரங்கிகளை இயக்க உத்தரவாயிருக்கிறது. சித்தூர் வீணாக நாசப்படும், உங்கள் வீரர்களின் உயிரும் சேதம் அடையும். இது அவசியமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.” என்றார்.
ஏற்கெனவே பீரங்கித் தாக்குதலாலும் சிந்தியா ஊரை வளைத்துவிட்டிருந்த முற்றுகையாலும் பெரும் அவதிக்குள்ளாயிருந்த அவர் உபதளபதிகளும் “மராட்டியர் தளபதி சொல்வதை ஒப்புக்கொள்ளுங்கள்.” என்று வற்புறுத்தினார்கள்.
உபதளபதிகளின் வேண்டுகோளுக்கு தூபம் போட்டார் இங்ளே. “ஆம் சலூம்பிரா! ஒப்புக் கொள்ளுங்கள்” என்றார். “சிந்தியா கேட்ட நஷ்டஈட்டை நான் சொல்லிக் குறைத்து விடுகிறேன். நீங்கள் இருபது இலட்ச ரூபாய் கொடுத்துவிடுங்கள். மீதியை உங்கள்
கிராமங்களில் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுங்கள்” என்று ஊக்கினார் இங்ளே.
இங்ளேயின் கழுகுக் கண்களை உற்று நோக்கினார் சலூம்பிரா. இங்ளே சொல்வது பேருக்கு சலுகை போலத் தோன்றினாலும் உண்மையில் நாற்பது இலட்சத்தையும் அவர் கிராமங்களில் இருந்து உறிஞ்சிவிடுவார் என்று உணர்ந்த சலூம்பிரா பேசாமலே இருந்தார்.
பிறகு ஒரு ஆட்சேபணை கிளப்பி, சக்தாவதர்கள் தலைவனாகவும் நண்பனாகவும் இயங்கும் ஜலீம்சிங் அங்கு அதிகாரத்தில் இருக்கும் வரையில் நான் எப்படிச் சரணடைய முடியும்? எங்கள் ஜன்ம எதிரிகளிடம் தாழ்ந்துபோகச் சொல்கிறீர்களா?” என்று வினவினார்.
இதைக் கேட்ட மற்ற உபதளபதிகள் சிந்தனையில் இறங்கினார்கள். “ஆம், தலைவர் சொல்வது சரிதானே? சந்தாவதர்கள் எப்படி சக்தாவதர்களுக்குத் தலைவணங்க முடியும்?” என்று ஒரு உபதளபதி கேட்டார்.
“அதை நான் கவனித்துக்கொள்கிறேன்” என்றார் இங்ளே.
‘ஜலீம்சிங் அகன்றால் நாங்கள் சரணடைகிறோம் மகாராணாவிடம்.” என்று மற்ற உபதளபதிகள் கூறினார்கள். பீம்சிங் சலூம்பிரா பதில் சொல்லவில்லை. அவர் வீரமனம் வெந்துகொண்டிருந்தது. தமது வீரர்களிடம் தமது பிடிப்பு போய்விட்டதை
உணர்ந்துகொண்டார்.
“என்ன சலூம்பிரா! உமது முடிவு என்ன?” என்று கேட்டார் இங்ளே.
“என் வீரர்கள் முடிவுதான் என் முடிவும்.” என்றார் சலூம்பிரா.
அந்த உறுதியை வாங்கிக்கொண்டு தமது பாசறைக்குத் திரும்பிய இங்ளே, சிந்தியா முன்பாக ஒரு நாடகமாடினார். மகாராணா, சிந்தியா இவர்கள் இருந்த கூடாரத்தில் இந்தப் பிரச்சினையை மிக சாமர்த்தியமாகக் கிளப் பினார், “சலூம்பிரா சரணடைய
சித்தமாயிருக்கிறார். ஆனால் ஒரு தடையிருக்கிறது” என்றார்.
“என்ன தடை?” என்று சிந்தியா கேட்டார்.
“ஜலீம்சிங்கும் சலூம்பிராவும் எதிரிகள், ஜலீம்சிங் சக்தாவதர்களின் தலைவராகப் பணிபுரிகிறார். சலூம்பிரா பணிந்தால் சக்தாவர்களுக்கு சலூம்பிராக்கள் பணிந்தது போலாகுமாம். வெட்டி கவுரவம். இதற்காக நாட்டை நாசம் செய்வதா?” என்று
அலுத்துக்கொண்டார் இங்ளே.
போரிடாதிருக்க எந்தப்பிடி கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொள்ளும் மகாராணா, “அதுவும் நியாயந்தான். எதற்கும் ஜலீம்சிங்கைக் கேட்டுவிடலாமே.” என்றார்.
இதைக் கேட்ட சிந்தியாவுக்கு மகாராணாவிடம் பெரும் அருவருப்பு ஏற்பட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை அவர். “இங்ளே! எதற்கும் ஜலீம்சிங்கைக் கேட்டுப் பாரும்.” என்றார்.
அடுத்த விநாடி அங்கு நிற்கவில்லை இங்ளே. தமது புரவியில் ஏறி ஜலீம்சிங்கின் கூடாரத்துக்கு விரைந்தார்.
ஜலீம்சிங்கைச் சந்தித்து “கோட்டா தலைவரே! பெரும் அக்கிரமம் இது. என்னால் தாங்க முடியவில்லை.” என்று நடித்தார்.
“என்ன அம்பாஜி?” என்று சந்தேகத்துடன் வினவினார் ஜலீம்சிங்.
“தாங்கள் சக்தாவதர்களின் தலைவராயிக்காவிட்டால் சலூம்பிரா சரணடையத் தயாராம். இதைத் தாங்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது.” என்றார் அம்பாஜி இங்ளே.
ஜலீம்சிங் உணர்ச்சி வசப்பட்டார். “அம்பாஜி! இதில் நமது கவுரவத்தைப் பார்ப்பது சரியல்ல. நாட்டு கவுரவம். நன்மை இவைதான் முக்கியம் நாட்டு நன்மைக்கு. இந்தப் போரையும் நாசத்தையும் தவிர்ப்பதற்கு, நான் விலகுவது அவசியமானால் தான் விலகுகிறேன்”
என்றார்.
அம்பாஜி போலி துயரத்தை முகத்தில் காட்டினார். “வேண்டும் போது உங்களை உதவிக்கு அழைப்பது, வேண்டாதபோது விலக்குவது, இது என்ன நியாயம்? நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள்.” என்றும் சொன்னார் துயரம் மிகுந்த குரலில்.
எதற்கும் உணர்ச்சிவசப்படும் ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்த ஜலீம்சிங் அம்பாஜியின் தந்திரத்தில் சிக்கி விடுவிடுவென்று தமது கூடாரத்தின் மூலைக்குச் சென்று ஒரு கடிதத்தை எடுத்துத் தாம் போரில் இருந்து விலகுவதாக மன்னருக்கு விலாசமிட்டுக்
கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அம்பாஜி காலம் தாழ்த்தாமல் மகாராணாவின் கூடாரத்துக்கு வந்து கடிதத்தைச் சமர்ப்பித்தார். மகாராணா அதைப் படித்துவிட்டுப் பக்கத்தில் இருந்த சிந்தியாவிடம் கொடுத்தார். சிந்தியா தமது கூரிய விழி களால் இங்ளேயை
நோக்கினார். உண்மை அவருக்குப் புரிந்திருந்தது. இருப்பினும் அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. மராட்டியர்கள் எதிர்பார்த்த நஷ்ட ஈடு மொத்தத்தில் கிடைக்கிறது. போரும் நிற்பதால் வீரர்களுக்கும் கஷ்டம் இல்லை. தவிர ராணா சித்தமாயிருக்கிறார். போரில்
ஈடுபடாமலே அதை முடித்துக்கொள்ள இந்தச் சூழ்நிலையில் இங்ளேயின் ஏற்பாட்டுக்குச் சிந்தியா ஒப்புக்கொண்டார்.

  • ஒரே ஒருவன் மட்டும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் போலி சமாதானத்தை வீரனான அவனால் ஜீரணிக்க முடியவில்லை. புஷ்பா வதியிடம் தனிமையில் சொன்னான் தீப்சந்த். “புஷ்பாவதி! இது வெட்கக்கேடு. நாம் இதில் சம்பந்தப்படவேண்டாம்.” என்று
    கூறினான்.
    “அப்பா, காரணம் இல்லாமல் சலூம்பிராவின் சரணாகதிக்கு ஒப்புக்கொள்வாரா?” என்று சப்பை கட்ட முயன்றாள் புஷ்பாவதி.
    “அவர் ராஜதந்திரி. மொத்தத்தில் எது நல்லது என்பதைத்தான் கருதுவார். இந்த ஏற்பாட்டில் –மகாராணாவின் உதவிக்கு வந்த ஜலீம்சிங் பலியிடப்படுகிறார். இந்தப் போரின் இரண்டாவது பலி இது.”
    “முதல் பலி?”
    “கங்கா பாய்! அது தவிர்க்கமுடியாது. நோய் அவளை முறித்தது. இது அரசியல் நோய். இது நண்பரான ஜலீம் சிங்கைப் பலி எடுத்துக்கொள்கிறது. இனி மேவார் உருப்படாது.”
    இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த சிந்தியா பெருமூச்சு விட்டார். “மாப்பிள்ளை! சில சமயங்களில் நாம் நாட்டு நலனுக்காக சில அதர்மங்களுக்கு உட்பட வேண்டியதாயிருக்கிறது” என்றார் துன்பச் சாயை மிகுந்த குரலில்.
    “மாதாஜி! அதர்மத்தால் தர்மம் விளைந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை” என்றான் தீப்சந்த். அத்துடன் சொன்னான், “நாங்கள் இந்த சமாதானத்துக்குப் பிறகு எங்கள் ஊருக்குச் செல்கிறோம் “ என்று.
    சிலையென நின்றுவிட்டார் சிந்தியா சில விநாடிகள். புஷ்பாவதி இல்லாமல் தாம் எப்படித் தனிமையில் இருக்க முடியும் என்று சிந்தித்தார். அந்தச் சிந்தனை அவருக்குப் பெரும் வேதனையைத் தந்தது. புஷ்பாவதியிடம் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்ட சிந்தியா,
    “மகளே! மாப்பிள்ளை சொல்வதில் நியாயமிருக்கிறது. எந்தப் பெண்ணும் பிறந்த வீட்டில் நீண்டகாலம் இருக்க முடியாது” என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அவர் கண்களில் இருந்து இரண்டு துளிகள் உருண்டு அவள் நெற்றியை நனைத்தன.

Previous articleMohini Vanam Ch 47 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 49 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here