Home Historical Novel Mohini Vanam Ch 5 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 5 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

82
0
Mohini Vanam Ch 5 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 5 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 5 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 பிரம்மச்சாரி

Mohini Vanam Ch 5 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

தீப்சந்தையும் புஷ்பாவதியையும் உள்ளறை ஒன்றில் விட்டு, அவர்களைக் கண்காணிக்கும்படி பணிப்பெண்ணொருத்தியையும் நியமித்து விட்டு மகாராணி மீண்டும் ராணாவின் பள்ளியறைக்குத் திரும்பினாள். அங்கு
அப்பொழுதும் சோம்ஜி நின்று மகாராணாவை ஏதோ கேட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, “சோம்ஜி நீர் இன்னும் இல்லம் செல்லவில்லையா?” என்று வினவினாள்.
“இல்லை மகாராணி” என்று மிகுந்த அடக்கத்துடன் பதில் சொன்னார் சோம்ஜி.
“மகாராணாவும் மகாமந்திரியும் எந்தக் கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுகிறீர்கள்?” என்று சற்று ஏளனத்துடன் கேட்டாள் மகாராணி.
“மகாராணி!” மென்று விழுங்கினார் சோம்ஜி.
மகாமந்திரி ஏதோ சொல்ல முயன்று அச்சத்தால் தவிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மகாராணி தனது குரலில் சிறிது கனிவைக் காட்டினாள். “என்ன சோம்ஜி?”
“இப்பொழுது எந்தக் கோட்டையையும் பிடிக்கும் நிலையில் நாம் இல்லை. இருக்கும் கோட்டை களை விடாதிருப்பதற்குத்தான் முயற்சி செய்ய வேண்டும்” என்றார் சோம்ஜி.
மகாராணியின் முகத்தில் சிறிது கவலைக்குறி தோன்றியது. “எந்தக் கோட்டைக்கு இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது?” என்று விசாரித்தாள் கவலை குரலிலும் ஒலிக்க.
சோம்ஜி மகாராணியை நன்றாக ஏறெடுத்து நோக்கினார். “தனிக்கோட்டை எதற்கும் ஆபத்தில்லை மேவார் அரசாங்கத்துக்கே ஆபத்து. மகாராணி! அது விஷயமாக பேசத்தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கு நடந்த விவகாரங்கள் அதற்கு
இடம் கொடுக்கவில்லை” என்று சொன்னார் சோம்ஜி.
மகாராணியின் முகத்தில் கவலை அதிகமாக விரிந்தது. விளக்கிச் சொல்லுங்கள் மகாமந்திரி. என்ன அப்பேர்ப்பட்ட ஆபத்து?” என்று வினவவும் செய்தாள்.
மகாமந்திரி அப்பொழுதும் வாயைத் திறக்கவில்லை. சிறிது சிந்தனை வசப்பட்டார்.” சொல்லும் மகாமந்திரி! உள்நாட்டுக் கலகம் ஏதாவது ஏற்பட இருக்கிறதா? அல்லது யாராவது படையெடுக்க முயற்சி செய்கிறார் களா?” என்று சற்று
அழுத்தமாக வினவினாள் மகாராணி.
மகாமந்திரி சற்றுத் துணிவை வரவழைத்துக் கொண்டு, “கஜானாவில் பணம் அடியோடு இல்லை” என்று மெதுவாகச் சொன்னார்.
“வரிப்பணமெல்லாம் என்ன ஆயிற்று?” மகாராணியின் கேள்வியில் கடுமை இருந்தது.
“வரிப்பணம் என்பது அதிகமாக எதுவும் கிடையாது.” தயங்கித் தயங்கிச் சொன்னார் சோம்ஜி.
“ஏன் கிடையாது? மேவாரில் வரியே விதிப்பதில் லையா?” மகாராணியின் கேள்வியில் உக்கிரம் இருந்தது.
“விதிக்கிறோம் ஆனால் அதை சலூம்பிராவே வசூலிக்கிறார்.”
“வசூலித்து…!”
“சிறிது நமக்கும் காட்டுகிறார்.”
“மற்றது?”
“அவரே வைத்துக்கொள்கிறார். இப்போழுது மேவாரில் பெரிய பணக்காரர் சலூம்பிராதான். அவரிடமிருக்கும் பணம் மகாராணாவிடம் கிடையாது. அவர் பெயரும் பீம்சிங். மகாராணாவின் பெயரும் தமது பெயரும் ஒன்றாயிருப்பதைப்
பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்கிறார் அவர். படாடோபத்தைப் பார்க்கிறவர்கள் பீம்சிங் சலூம்பிராவையே மகாராணா என்று நினைத்தாலும் அதைப் பற்றி நாம் வியப்படைவதர்கில்லை” என்ற மகாமந்திரி பெருமூச்செறிந்தார்.
ராஜமாதா ராம்பியாரி இதைக் கேட்டு மிகவும் கலங்கினாள். “சோம்ஜி! இதற்குப் பரிகாரம் ஏதுமில்லையா?” என்று வினவினாள்.
“இருக்கிறது மகாராணி. அது தங்கள் கையில்தான் இருக்கிறது. இப்பொழுது மேவாரில் சந்தாவதர்களின் கை ஓங்கியிருக்கிறது. சந்தாவதர்களை நாம் சிறிது தூக்கி விட்டால் சலூம்பிராவை நாம் ஓரளவு சமாளிக்கலாம்” என்றார் சோம்ஜி.
“இருவரும் கைகலந்தால்?” என்று மகாராணி கேட்டாள்.
“நமக்கொன்றும் நஷ்டமில்லை. அவர்கள் பரஸ்பரம் வெட்டிக்கொண்டு சாவார்கள்” என்ற சோம்ஜி, “இப்பொழுது சலூம்பிரா வரி வசூலிப்டதைத் தடுக்கவேண்டும். அதற்குப் பதில், வரி வசூலிப்பதை சக்தாவதர்களிடம்
ஒப்படைப்போம்” என்று யோசனை சொன்னார் சோம்ஜி.
மகாராணி சிந்தனையில் இறங்கினாள்.
சோம்ஜியின் யோசனை அபாயமென்பதை ராஜமாதா அறிந்தே இருந்தாள். சக்தாவதர்களிடம் வரி வசூலிப்பதை ஒப்படைத்தால் அவர்கள் மாத்திரம் கஜானாவுக்குப் பணம் அனுப்புவார்கள் என்பது என்ன நிச்சயம் என்று எண்ணினாள்.
ராணுவத்திடம் பணம் வசூலிப்பை ஒப்படைப்பது மிக அபாயம் என்பதை உணர்ந்த மகாராணி அதில் தலையிட யோசித்து, “வரி வசூலிக்கும் அதிகாரிகள் நம்மிடம் தனியாக இல்லையா?” என்று கேட்டாள்.
“இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களிடம் போக முடியாது. ராஜ்யத்தில் நாம் குடிமக்களுக்கு எந்த சவுகரியத்தையும் செய்து கொடுக்கவில்லை. ஆகையால் வரி வசூலிக்கும் அதிகாரிகள் வெளிப்புறக் கிராமங்களுக்குப் போக
அஞ்சுகிறார்கள். அப்படிச் சென்ற இருவர் ஏற் கெனவே கொலை செய்யப்பட்டார்கள்” என்று விளக்கிய மகாமந்திரி, “மகாராணி! நான் சொல்லும் திட்டத்தில் அபாயமிருக்கிறது. ஆனால் மேவாரின் மன்னர்களுக்குத் தூண்களாக நின்று
மடிந்த அந்த வீர சமுதாயம் இப்பொழுது நாட்டில் இல்லை. ஆகையால் சந்தாவதர்களை யும் சக்தாவதர்களையும் மோதவிட்டு நமது காரியத்தைச் சாதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. தவிர வெகு சீக்கிரம் நமக்கு நிரம்பப் பணம்
வேண்டும்” என்றார்.
“எதற்கு?”
“மகாராஷ்டிரர்களைச் சமாளிப்பதற்கு. வீரம் இப்பொழுது ராஜபுதனத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு மாறியிருக்கிறது. மகாராஷ்டிரம் இப்பொழுது பெரிய சாம்ராஜ்யமாக உருவாகிவிட்டது. டில்லியே அதைக் கண்டு நடுங்குகிறது.
இப்பொழுதுகூட ராஜபுதனத்தின் எல்லைகளில் மகாராஷ்டிரப் படைகள் நடமாடுகின்றன.”
இது மகாராணிக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், மகாமந்திரி விளக்கியபோது சிறிது அச்சத்தையே அடைந்தாள் மகாராணி. மேவார் இருக்கும் பயங்கர நிலையும் மகாராணிக்கு சந்தேகத்துக்கு இடமில் லாமல் புரிந்தது. “சரி,
மகாமந்திரி! உமது இஷ்டம்போல் செய்யும். முந்திய மந்திரி அமர்சந்த் பரூவா இந்த மாதிரி ஒரு சமயத்தில் மேவாரைக் காப்பாற்றினார். அந்தப் பணியை இப்பொழுது நீர் செய்தால் மேவார் ராஜவம்சம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்”
என்று மகாராணி உத்தரவு கொடுத்தாள்.
“இந்த ஏழையால் ஆனதைச் செய்கிறேன் மகாராணி புது உத்தரவுக்கான பத்திரங்களைத் தயார்செய்து மகாராணாவின் கையெழுத்துக்கு அனுப்புகிறேன்” என்று கூறித் தலை வணங்கி “மகாராணா!” என்றார் மந்திரி.
“போய் வாரும். நீங்களும் எனது தாயாரும் தயாரிக்கும் திட்டங்களுக்குக் கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறு வேலை எனக்கு என்ன இருக்கிறது?” என்ற மகாராணா லேசாக நகைத்தார்.
அத்துடன் மந்திரி வெளியேறியதும் மகாராணி மகனைக் கடிந்துகொண்டாள். “பீம்சிங் இது நகைக்கும் விஷயமல்ல” என்று.
“ஆமாம் ; மகாமந்திரியின் காலம் சீக்கிரம் முடிந்து விடும். ஆகவே இது நகைக்கும் நேரமல்ல’ என்று மகாராணா இடக்காகப் பதில் சொன்னார்.
பெரிய ஆபத்தில் மகாமந்திரி தலை கொடுப்பதை மகாராணி புரிந்துகொண்டிருந்தாலும், அந்தச் சமயத்தில் தான் செய்யக்கூடியது ஏதுமில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் பெருமூச்செறிந்தாள். உள்கட்டுக்குச் செல்லவும்
முயன்றாள்.
அப்பொழுது மகாராணா கேட்டார். “அம்மா! அந்தப் பெண் எப்படியிருக்கிறாள்?” என்று.
மகாராணி உஷ்ணமாக மகனைப் பார்த்தாள். “அவளைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம் அவளுக்காக உயிரைக் கொடுக்க ஒரு மகாவீரன் சித்தமாயிருக்கிறான்” என்றாள், மகாராணி குரலிலும் உஷ்ணத்தைக் காட்டி.
“அம்மா!” பீம்சிங் மெதுவாக அழைத்தான்.
“என்ன பீம்சிங்?”
“உயிரை விட அவன் சித்தமாயிருப்பதாகச் சொன்னாயே, அது எத்தனை உண்மை?”
“என்ன உண்மையைக் கண்டுவிட்டாய்?”
“நாளைக்கு அவன் சலூம்பிராவைச் சந்திக்கப் போகிறான். அப்புறம் அவனுக்கு உயிர் ஏது?”
“நீ நினைக்கிறபடி தீப்சந்த் அத்தனை சாமானியமானவன் அல்ல” என்றாள் மகாராணி.
“இப்பொழுது அவன் எங்கே?”“ என்று மகாராணா விசாரித்தார்.
“அவளது அறையில் இருக்கிறான்.”
“ஒரே அறையில் இருவருமா?”
“ஆம்.”
“அப்படியிருக்கலாமா?”
“இருக்கலாமென்று அந்தப் பெண்ணே அபிப்பிராயப்படுகிறாள். அவன் ஆயுள் பிரம்மச்சாரியாம்” என்று சொல்லிவிட்டு மகாராணி சென்றுவிட்டாள்.
மகாராணா இதை நம்பவில்லை. “பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாக வைத்தால் பற்றிக்கொள்ளாமல் இருக்குமா” என்று தனக்குள் கேட்டுக் கொண்டார்.
“பஞ்சும் நெருப்பும் பற்றாதிருப்பது இயற்கைக்கு விரோதந்தான் என்றாலும் இந்திரியங்களையும் வெற்றி கொள்ளும் உத்தமர்கள் உலகத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள். பீஷ்மர் பிரம்மசாரியாக நின்று விடவில்லையா? அத்தகைய
மகான்களில் தீப்சந்த் ஏன் ஒருவனாக இருக்கக் கூடாது?” என்று மகாராணியும் தனக்குள் சமாதானம் செய்துகொண்டாள். அந்த எண்ணத்துடன் புஷ்பாவதி இருந்த அறைக்குள் சென்றாள். மருத்துவர் கொடுத்த மருந்தின் காரணமாக
புஷ்பாவதி பஞ்சணையில் நித்திரை செய்து கொண்டிருந்தாள். அறையின் ஒரு கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, கதவில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி கையில் ஒரு ஜெபமாலையை உருட்டிக் கொண்டு, வாயால் ஏதோ
மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தான் தீப்சந்த்.
அவன் இருந்த நிலையைக் கண்டு, அவன் உண்மையில் பிரம்மசாரிதான் வன்று மகாராணி தீர்மானித்தாள். இருப்பினும் அவனை விசாரிக்க எண்ணி, “தீப்சந்த்?” என்று மெள்ள அழைத்தாள்.
தீப்சந்த் கண்களை விழித்து மகாராணியை நோக்கினான். “மகாராணி!” என்று அழைத்து எழுந்திருக்க முயன்றான்.
அவனை எழுந்திருக்கவிடாமல் தனது கைகளின் சைகையாலேயே தடுத்து, “தீப்சந்த்! உட்கார். உன் தவத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை. உனக்குத் தனி அறை வேண்டுமானாலும் தருகிறேன்” என்றாள்.
“வேண்டாம் மகாராணி! இந்தப் பெண்ணின் விருப்பப்படி இங்கேயே நான் தங்குகிறேன். இவளுக்குச் சிறிது சுரணையும் சக்தியும் வந்ததும் நான் போய் விடுகிறேன். பிறகு இவள் உங்கள் அடைக்கலம்” என்றான்.
மகாராணி அதற்குப்பிறகு அங்கு நிற்கவில்லை.
தீப்சந்த் அன்று முழுவதும் அந்த அறைக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் என்ப தையும், உணவைக்கூட உட்கார்ந்தபடியே உண்டான் என்றும் பணிப்பெண் கூறவே, தீப்சந்த்மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது
மகாராணிக்கு. இந்த பீம்சிங்குக்குப் பதில் தீப்சந்தைப் போன்ற ஒரு வீரன் தனது வயிற்றில் பிறந்திருக்கக்கூடாதா என்று கூட சிந்தித்தாள்.
இரவும் வந்தது. அப்பொழுதும் கதவை மூடவில்லை தீப்சந்த். மாலையே சுரணை அடைந்துவிட்ட புஷ்பாவதி அவன் ஜெபமாலையைப் பார்த்து எரிச்சல் கொண்டாள். சாயந்திர ஜெபத்துக்குப் பிறகு எழுந்த தீப்சந்த், பணி மகள்

.
கொண்டுவந்த பாலைத் தானே புஷ்பாவதியின் வாயில் ஊற்றினான். பாலைப் பருகியபோது சற்றே உதட்டில் இருந்து வழிந்த பாலைத் தனது கையாலேயே துடைத்தான், இரவு மூண்டு அந்த அறையில் விளக்கேற்றப்பட்ட பிறகும்,
அவளது பஞ்சணையை அணுகாத தீப்சந்த், “கண் களை மூடி உறங்கு” என்றான்.
கண்களை அவள் மூடிக்கொண்டாள். தீப்சந்த் கட்டிலின் அருகில் நின்றபடியே அவளைக் கவனித்தான். கட்டிலில் அவள் புஷ்பமாலையெனக் கிடந்தாள். அவளது அழகைக் கண்டு பிரமித்த தீப்சந்த், தனது பிரம்மச்சாரி விரதத்துக்குப்
பங்கம் ஏற்படப்போகிறது என்று அஞ்சி அவளைக் கூர்ந்து பார்ப்பதை விட்டு அறையின் மோட்டு வளையைப் பார்த்தான். அதில் சிருங்கார சிந்திரங்கள் பற்பல வண்ணங்களில் பற்பல கோணங்களில் தீட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
மனிதன் மனதை, உறுதியைக் கலைப்பதற்கே அந்த ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதை உணர்ந்து அவற்றை வெறுத்துக் கட்டிலில் கிடந்த புஷ்பா வதியைப் பார்த்தான். அந்த ஓவியங்களுக்கு இவள் அழகு சிறிதும் குறைந்தவள்
அல்லவென்று நினைத்தான். அவள் கட்டிலில் மல்லாந்து கிடந்த நிலை, உணர்ச்சி அளிப்பதாயிருந்தது. தாமரை வதனம், செம்பருத்தி இதழ்கள், மார்பின் எழுச்சிகள், கால்களின் இணைப்பினால் ஏற்பட்ட இந்திர ஜால ஊகங்கள் எல்லாமே
இவளை புஷ்ப சோலையாகக் காட்டியது. அந்த அழகைக் கண்ட தீப்சந்தின் திடமனமும் சிறிது கலங்கவே அவன் தனது பார்வையை வாயிற்புறம் திருப்பினான்.
இரவு நன்றாக ஏறியும் அவன் உறங்கவில்லை. பஞ்சணையில் படுத்திருந்த புஷ்பாவதி ஏதோ முனகினாள் ஒரு முறை. அது என்னவென்று பார்க்கக் கட்டிலுக்கு அருகில் சென்று குனிந்து அவள் முகத்தை நோக்கினான். லேசாக
அவளுக்குக் காய்ச்சல் கண்டிருந்ததால் கழுத்தில் கையை வைத்தான். அவள் கையொன்று எழுந்து அவன் கையைப் பற்றியது.

Previous articleMohini Vanam Ch 4 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 6 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here