Home Historical Novel Mohini Vanam Ch 50 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 50 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

72
0
Mohini Vanam Ch 50 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 50 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 50 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 50 சோதிடம் பலித்தது!

Mohini Vanam Ch 50 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினிவனப் பள்ளத்தாக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் பீம்சிங் சலூம்பிராவைச் சந்தித்தானோ, அதே இடத்தில் அதே சமயத்தில் அதே சூழ்நிலையில் அன்றும் தீப்சந்த் நின்றிருந்தாலும், அவன் அந்தப் பழைய நாளைப் போன்ற மன
நிம்மதியோ மகிழ்ச்சியோ சிறிதும் இல்லாமலே தனது பார்வையை நான்குப் புறங்களிலும் செலுத்தினான்.
அவனுக்குப் பின்னால் அப்பொழுதும் மகாராணா. மாதர்களுடன் குலாவும் அந்தப் பழைய மாளிகை இருந்தது. அவன் நின்றிருந்த இடத்துக்கு இருபுறங்களிலும் மலர்ச் செடிகள் பல நாளாவித வண்ண மலர்களைத் தாங்கி நின்றிருந்தாலும், அவற்றில் சில செக்கச்
செவேலென்ற பெரும் பூக்களைத் தாங்கி, அது இரத்தக் கிளறி ஏற்படுவதற்கே ஏற்பட்ட நிலம் என்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்துத் தரையையும் நோக்கிய தீப்சந்த், “இந்த இடத்தில் தான் புஷ்பாவதியை நான் முதலில் சந்தித்தேன். அதற்குப் பின்பு இங்குதான் அந்த அவல உச்சிப்பூ ஆபரணத்தைக் கண்டெடுத்தேன். இங்குதான் பீம்சிங் சலூம்பிராவுடன் போரிட்டேன். இது
வினையின் விளைவு நிலம்” என்று சொல்லிக் கொண்டான். பிறகு அண்ணாந்து நோக்கி வானத்தில் உலாவிக் கொண்டிருந்த வெண்மதியை நோக்கி, “அன்றும் இப்படித்தான் உன் தண்ணொளியை வீசிக்கொண்டிருந்தாய். ஆனால் உன் விளைவில் இங்கு
நிகழ்ந்ததெல்லாம் பூசலும் ராஜத் துரோகமும் தானே!” என்று குற்றமும் சாட்டினான்.
அடுத்து நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த மகாராணாவின் சித்தூர் பட்டணப் பிரவேசத்தையும் நினைத்துப் பார்த்தான். “என்ன மாற்றம்! என்ன விந்தை! மகா ராணாவுக்குத் துரோகம் செய்து சித்தூரையே ஆக்ரமித் திருந்த பீம்சிங் சலூம்பிரா அவரது
வலதுபுறத்தில் தேச பக்தராக, மகாராணாவின் நலத்தைக் காக்கும் ராஜ பக்தராக, சித்தூரில் சகல மரியாதைகளுடன் நுழைகிறார். மகாராணா வின் நலனைப் பாதுகாக்க உயிர்விட்ட மந்திரி சோம்சந்த் காந்தியைப்பற்றிக் கேட்பாரைக் காணோம். மகாராணாவைக்
கைவிடாது காத்து நின்ற சக்தாவதர்களின் தலைவனும் மகாவீரனுமான சங்கிரமசிம்மனைக் காணோம்.
சலூம்பிரா மன்னரை எதிர்த்தபோது சலூம்பிராவை அடக்கத் தமது பெரும் படையுடன் உதவிக்கு வந்த ஜலீம்சிங் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இதுதான் லட்சியவாதிகளுக்கு அரசியலில் கிடைக்கும் பரிசு போலிருக்கிறது. தேச தியாகிகள் கீழே போவதும்
தேசத் துரோகிகள் மேலே வருவதும் இயற்கையின் நியதியா?” என்று நினைத்து, “இதென்ன உலகம்!” என்று உலக நிந்தனையிலும் இறங்கினான்.
எது எப்படியிருந்தாலும் அன்று தனது வாழ்வில் ஒரு முடிவு ஏற்படும் என்ற தீர்மானத்துடன் சற்று எட்ட நின்று புல் மேய்ந்துகொண்டிருந்த புரவியைத் தடவிக் கொடுத்து “நாம் இன்று பிரிந்தாலும் பிரியலாம்” என்று அதன் காதில் சொன்னான். புரவியும்
தனது தலையைத் தூக்கித் தனது முகத்தை அவன் முகத்துடன் இழைத்தது. அதன் கண்களை உற்று நோக்கிய தீப்சந்த் அதன் கண்களிலும் தனது பிரிவை நினைத்து நீர் துளிர்ப்பதாக நினைத்தான். பிறகு தன்னைத் திடப்படுத்திக் கொண்டு தனது கச்சையில்
இருந்து இடையில் தொங்கிய வாளைத் தட்டிக்கொண்டான் வலது கரத்தால், பிறகு மோகினி வனத்துக்குச் சித்தூரில் இருந்து வரும் பாதை மீது கண்ணை ஓடவிட்டான். ‘சலூம்பிரா வருவாரா வரமாட்டாரா?’ என்று தன்னைக் கேட்டுக்கொண்டு வராதிருக்க மாட்டார்.
என்ன இருந்தாலும் வீரர்’ என்று சமாதானமும் சொல்லிக்கொண்டான்,
அவன் அப்படிப் பலவிதமாக எண்ணங்களை ஓட்டிக் கொண்டிருந்த சமயத்தில் தூரத்தே ஒரு பெரும் புரவி நிதான நடை போட்டு வந்துகொண்டிருந்ததைக் கவனித்தான். அதன்மீது மிக அலட்சியமாக உட்கார்ந்திருந்த ராட்சத உருவத்தைக் கண்டதும் “சலூம்பிரா
வந்து விட்டார். இனி எங்கள் வாழ்க்கை வெகு விரைவில் நிர்ணயிக்கப்படும்’ என்று தீர்மானித்துக் கொண்டான்.
சந்தாவதர்களின் தலைவரும் வீரனுமான பீம்சிங் சலூம்பிராவும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் நேராகப் புரவியைச் செலுத்தி வந்து தீப்சந்தின் முன்பு நிதானமாக இறங்கிப் புரவிமீது சேணத்தை எறியவே, அது சென்று தீப்சந்தின் புரவியுடன்
உராய்ந்து நின்றது.
அதைப் பார்த்த சலூம்பிரா, தீப்சந்தை நோக்கி, “தீப்சந்த்! நமது புரவிகள் நேசத்தைக் காட்டுகின்றன.” என்றார் புன்முறுவலுடன்.
“நாமும் மிருகமாயிருந்தால் எதிலும் எப்பொழுதும் நட்பைக் காட்ட முடியும்” என்றான் தீப்சந்த்.
துன்பப் புன்முறுவல் ஒன்றை உதடுகளில் தோற்றுவித்த பீம்சிங் தனது கச்சையிலிருந்த கடிதமொன்றை எடுத்து தீப்சந்திடம் காட்டி, “இது நீ எழுதிய ஓலை தானே?” என்று வினவினார்.
ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய தீப்சந்த், “அந்த ஓலையில் கண்டபடி நான் போரிடுவதில் தங்களுக்கு ஆட்சேபனையில்லையே?” என்று வறண்ட குரலில் வினவினான்.
“இல்லை. ஆனால் இது தேவைதானா?” பீம்சிங் வருத்தத்துடன் கேட்டார்.
“தேவையில்லாவிட்டால் ஓலையை அனுப்பியிருக்கமாட்டேன்.” தீப்சந்த் இதைத் திட்டமாகச் சொன்னான்.
“நாம் இருவரில் ஒருவர் மரணமடையும் வரையில் போரிட வேண்டும் என்று எழுதியிருக்கிறாய்.”
“ஆம்.”
“என்மேல் உனக்கு என்ன கோபம்?”
“ஆயுதம் ஏந்த முடியாத சோம்ஜியைக் கொன்றீர்கள். ராஜத் துரோகியாக இன்னொரு மன்னனாக சித்தூரைப் பிடித்தீர்கள்.”
“அவற்றை மன்னரே மன்னித்து விட்டாரே?”
“மன்னர் எதையும் மன்னிப்பார். நாட்டை கவனிக்காமல் அந்தப்புரப் பஞ்சணையில் புரளும் வீரமற்ற மகாராணா எதையும் சரியென்று நினைக்கலாம். நான் நினைக்க முடியாது.”
“ஏன்?”
“மன்னனையும் நாட்டு நலத்தையும் காப்பதாக ராஜ மாதாவுக்கு உறுதி அளித்திருக்கிறேன். எனது வாளின் மீது ஆணையிட்டு இருக்கிறேன்.”
“தீப்சந்த்! நன்றாகச் சிந்தித்துப் பார். தனிமனிதர் விருப்பு வெறுப்புகள் நாட்டைப் பாதிக்கக்கூடாது. நீ என்னைக் கொன்றால் நாட்டில் மறுபடியும் சந்தாவதர், சக்தாவதர் சச்சரவு ஏற்படும். இந்தப் பூசல்களைத் தடை செய்ய சிந்தியா மேலும் தமது படைகளை
ஏவினால் மேவார் சீக்கிரம் அவர் வசமாகும்.” என்று சலூம்பிரா விளைவுகளைச் சுட்டிக் காட்டினார்.
தீப்சந்த் புன்முறுவல் செய்து, “சலூம்பிரா இப்பொழுது திடீரென நாட்டின் நலத்தில் சிரத்தை ஏற்பட்டிருப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். நாட்டுப்பற்று சமயத்துக்குத் தக்கபடி ஏற்படுவதும் நீங்குவதும் சரியல்ல. தவிர தனி மனிதர்கள் சண்டையில் விபரீதங்கள்
ராஜ புதனத்தில் விளைவது சரித்திரம் பூராவும் காணப்படுகிறது.” என்று கூறினான். “காலம் கடத்தாமல் வந்த காரியத்தை முடிப்போம்” என்று கூறிக்கொண்டு தனது வாளைக் கச்சையில் இருந்து உருவினான்.
சலூம்பிரா அதற்குமேல் ஏதும் பேசாமல் தனது வாளை உருவிக்கொண்டார். இரு வாட்களும் அடுத்த விநாடி இணைந்து மீண்டன. சலூம்பிரா அன்று மிக நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் போராடினார். ஆனால் தீப்சந்த் மிகுந்த அனாயாசமாக வாளைச்
சுழற்றினாலும் கூடியவரை தற்காப்புப் போரிலேயே ஈடுபட்டான். அவனது வாள் இருமுறை சலூம்பிராவின் வாளின் பாதுகாப்பு எல்லையையும் மீறி அவர் மார்புக்குச் சென்றபோதும் அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை
சலூம்பிரா கவனிக்கவே செய்தார். “இவன் ஏன் என்னைக் கொல்ல மறுக்கிறான்?” என்று தனக்குள் கேட்டுக்கொள்ளவும் செய்தார். ஒரு வேளை இதே இடத்தில் முன்பு காயப்படுத்தியது போல் காயப்படுத்த முயல்கிறானா? எனது வாட்கரத்தைச் செயலற்றதாக
அடித்து மீண்டும் மன்னிப்பு அளித்து என்னைப் பார்த்து ராஜபுதனம் சிரிக்கும்படி செய்ய உத்தேசிக்கிறானா?” என்று வினவிக்கொண்டு அந்தக் கேள்விகள் விளைவித்த பீதியால் மும்முரமாக போரிட முற்பட்டார். உக்ரமாகத் தமது வாளால் தீப்சந்தின் வாளைத்
தாக்கிக் கொண்டு முன்னேற முற்பட்டார். இருமுறை தீப்சந்தின் கழுத்துக்கு அருகிலும் தனது வாள் சென்றுங்கூட தீப்சந்தின் வாள் அதை அகற்றிவிட்ட விந்தையைப் பார்த்து வாட்போரில் இணையற்ற ஒரு வீரனிடம் தாம் சிக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்தார்.
உணர்ந்ததால் போரையும் உக்கிரப்படுத்தினார். இருவரும் ஒருவருக் கொருவர் சளைக்காமல் போரிட்டார்கள். அவர்கள் வாட்கள் சந்தித்த ஒலியும் சந்திப்பிலிருந்து மீண்டபோது ஏற்பட்ட ‘கிரீச்’ சென்ற சத்தமும் அந்த மோகினி வனப் பகுதியை மரணவனப்
பகுதியாக அடித்தன.
போர் சுமார் அரை ஜாமத்துக்குமேல் நடந்தும் இருவரும் சளைத்ததாகத் தெரியவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தீப்சந்த் திடீரென தனது போர்முறையை மாற்றினான். மிக வேகமாக சலூம்பிராவின் வாளுடன் தனது வாளை இணைத்து ஒரு சுழற்று சுழற்றினான்.
அவரும் அதேபோல் சுழற்றவே இருவர் வாட்களும் மேலே பறந்தன. அப்பொழுது திடீரெனப் பின் வாங்கிய சலூம்பிராவின் கால் தரையிலிருந்த பாறையொன்றால் தடுக்கவே அவர் மல்லாந்து விழுந்தார். தீப்சந்த் பறந்த தனது வாளை அந்தரத்திலேயே பற்றினான்.
“தீப்சந்த்! தாமதிக்காதே. முடித்துவிடு என்னை.” என்று கூவினார் சலூம்பிரா. மரணத்தின்மீது அவருக்குப் பெரும் ஆசை ஏற்பட்டது அவர் குரல் ஒலியில் நன்றாகத் தெரிந்தது.
தீப்சந்த் அவருக்கு அந்த மரணத்தை அளிக்க விரும்பாமல் சற்று எட்ட விழுந்த அவரது வாளை எடுத்து அவரிடம் கொடுத்து அவரது கையைத் தூக்கி எழுப்பியும் விட்டான். அவர்கள் சண்டை மீண்டும் மூண்டிருக்கும் வேறு தலையீடு ஏற்படாதிருந்தால்,
மரணமடையும் வரை போரிடத் தீர்மானித்த அந்த இருவரும் மீண்டும் வாட்களை எடுத்து முன்னேற முயன்ற சமயத்தில் திடீரெனப் புரவிகள் வரும் ஒலி கேட்கவே சலூம்பிரா சொன்னார் “யாரோ வருகிறார்கள்” என்று.
அடுத்து, மாதாஜி சிந்தியா வீரர்கள் பலருடன் வந்து, சலூம்பிராவையும் தீப்சந்தையும் வளைத்துக்கொண்டார்.
இருவருக்கும் குறுக்கே சிந்தியாவின் வீரர்கள் புகுந்து விட்டதால் இருவருக்கும் எந்தச் செயலும் சாத்தியமில்லாது போயிற்று. “மகாராணாவின் ஆணைப்படி உங்கள் இருவரையும் கைது செய்கிறேன்” என்றார் சிந்தியா.
“என்ன குற்றத்திற்கு?” என்று கேட்டார் சலூம்பிரா.
“மேவாரில் தனி நபர் சண்டைகளைத் தவிர்க்க உத்தரவு போட்டிருக்கிறார் மகாராணா. அரசர் உத்தரவை மீறிய குற்றத்திற்கு உங்களை சிறை செய் கிறேன். உங்கள் வாட்களை என்னிடம் கொடுத்து விடுங்கள்.” என்று கையை நீட்டினார்.
வீரர்களால் சூழப்பட்டு நின்ற இருவரும் வாட்களைக் கொடுக்க மறுத்தார்கள். “வாளைக் கொடுப்பதைவிட மடிவேன்.” என்றார் சலூம்பிரா.
“ராஜபுதனமே தினம் மடிந்துகொண்டிருக்கிறது. தனி மனிதர்கள் சாக முற்படுவதில் வியப்பில்லை” என்ற சிந்தியா இகழ்ச்சியாகப் புன்முறுவல் கொண்டார்.
“எந்த ராஜபுத்திரனும், மனைவி, வாள், புரவி மூன்றில் எதையும் இன்னொருவரிடம் ஒப்படைக்க மாட்டான், ராஜ புத்திரராகப் பிறந்திருந்தால் உமக்கு இது தெரிந்திருக்கும்” என்றான் தீப்சந்த்.
“சரி; உன்னிடம் இப்பொழுது வாளும் இருக்கிறது. புரவியும் இருக்கிறது, மனைவியையும் அழைத்துக்கொள்.” என்றார்.
“மனைவியா! எங்கே?” என்று கேட்டான் தீப்சந்த்.
அவன் கேட்டதும் கேட்காததுமாகப் பக்கத்தில் இருந்த மலர்ச்செடிகள் அசைந்தன. அந்தக் கூட்டத்தில் இருந்து மலர்ச்செடியாக புஷ்பாவதி வெளியே வந்தாள்.
பிரமை பிடித்தவன் போல் நின்றான் தீப்சந்த். புஷ்பாவதியின் விழிகள் நிலத்தில் தாழ்ந்து கிடந்தன. அவள் ஏதும் பேசவில்லை. உதடுகள் லேசாகத் துடித்தன. சிந்தியா பேசினார்: “தீப்சந்த்! இவளை நட்டாற்றில் நிறுத்துவதற்காக உனக்கு இவளை மணமுடித்துத் தர
வில்லை நான். அவள் நினைப்புக்குத் துரோகம் செய்ய நீ உன்னை அழித்துக்கொள்வது தீய செய்கையாகும்.” என்றார்.
தீப்சந்த் தனது கண்களை அவர் கண்களுடன் உறவாட விட்டான். “வீரன் வாழ்வு என்றும் நிலையுள்ளதல்ல” என்றான் தீப்சந்த்.
“வீண் மரணமும் புத்திசாலித்தனமல்ல. மேவார் பல வீரர்களைப் பலி கொடுத்திருக்கிறது. மேவாரைக் காப்பது உன்னையும் சலூம்பிராவையும் போன்றவர் கடமை.” என்றார் சிந்தியா.
திப்சந்த் ஏதும் பதில் சொல்லவில்லை. புஷ்பாவதி சென்றதும் அவளைக் கையைப் பிடித்து அழைத்து வந்து, “சிந்தியா! நான் இனி மேவாரில் இருந்து பயனில்லை. மண்டலக் கோட்டைக்குச் செல்கிறேன்” என்று கூறி அவருக்குத் தலைவணங்கினான்.
சிந்தியா அந்தத் தம்பதிகளை நெருங்கித் தமது கைகளை அவர்கள் தலைமீது வைத்து ஆசீர்வதித்தார். புஷ்பாவதியும் அவனும் புரவிகளில் ஏறிச் சென்றபோது அவர் கண்களில் நீர் மல்கியது. “ஒரு மாபெரும் வீரன் போகிறான்” என்று முணுமுணுத்தார்.
சலூம்பிராவைப் பார்த்தார்.
சலூம்பிராவின் முகத்தில் வேதனை நிரம்பிக் கிடந்தது.
நான்கு நாட்களுக்குப் பிறகு மண்டலக் கோட்டை அரண்மனை உப்பரிகை அறையிலிருந்து சாளரத்தின் மூலம் வெளியே நோக்கிக்கொண்டிருந்த தீப்சந்தைப் பின்னாலிருந்து அணுகிய புஷ்பாவதி, “இன்னும் ஏன் மனதை அலட்டிக் கொள்கிறீர்கள்? மேவாரின்
நிலைதான் சீரடைந்துவிட்டதே. தந்தைதான் ஓரளவு அமைதியை நிலை நாட்டி விட்டாரே!” என்று கூறி அவன் தோள்மீது சாய்ந்தாள்,
அவளைத் திரும்பிப் பாராமலே பேசினான் தீப்சந்த், “புஷ்பாவதி! இனி மேவாரில் நிம்மதி கிடையாது. மராட்டியர் ஆதிக்கத்தில் இப்பொழுது நிம்மதி கிடைத்திருக்கிறது. அடுத்து வேறு ஏதாவது ஆதிக்கம் வரும். இனி மேவாரின் நிம்மதி அடிமைகளின் நிம்மதிதான்.
வீரர்களின் நிம்மதி கிடையாது. காத்திருந்து பார்.” என்றான்.
“இந்தப் பூமி எப்பொழுதும் வீரர்களைப் பெற்றெடுக்கும் என்று சொல்வீர்களே?” என்று கேட்டாள் புஷ்பாவதி. பிறகு பின்னடைந்து பஞ்சணையில் உட்கார்ந்தாள்.
தீப்சந்த் அவளைத் திரும்பி நோக்கினான். மெள்ள அவளை நோக்கி நடந்தான். பஞ்சணையை அடைந்து அவள் முகத்தைத் தூக்கி, ‘புஷ்பா! நீ சொன்னது உண்மை “ என்றான்.
“ஆம்” என்றாள் அவள்.
“என்ன ஆம்?” என்று அவன் கேட்டான்.
அவள் தலையைக் குனிந்து அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள். “இன்னும் எட்டு மாதங்கள்…” என்று அவன் இதயத்துக்குச் செய்தி சொன்னாள்.
“அப்புறம்?” என்றான் தீப்சந்த்.
“இந்த வீரனுக்கு ஒரு வீரன் பிறப்பான்.” என்று முணுமுணுத்த புஷ்பாவதி பஞ்சணையில் குப்புற விழுந்தாள்.
பஞ்சணைப் பக்கத்தில் அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற தீப்சந்த் முகத்தில் இன்பரேகை படர்ந்தது. பஞ்சணை முகப்பில் உட்கார்ந்து அந்த புஷ்பக் கொடியின் முதுகைத் தடவலானான். பிறகு குனிந்து “அடி கள்ளி! இதை ஏன் முன்னமே சொல்லவில்லை?”
என்று அவள் காதில் ரகசியமாகக் கேட்டான். முகத்தை அவள் தலையணையில் புதைத்துக் கொண்டாள்.

Previous articleMohini Vanam Ch 49 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here