Home Historical Novel Moongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

98
0
Moongil Kottai Ch10 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 இமயவல்லி சீறினாள்

Moongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

மூடுதேரைத் துரத்திக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் படைவீரர்கள் வருகிறார்களென்றதைக் கேட்டதும் அதைப்பற்றிச் சிறிதும் பயமோ கவலையோ காட்டாமல் இளமாறன் தன் இடைக் கச்சையிலிருந்து வாளை உருவிப்
பிடித்துக் கொண்டு சண்டைக்குச் சன்னத்தமாகி விட்டதைக் கண்ட இமய வல்லி பெரும் ஆச்சரியத்துக்கே உள்ளானாள். ‘எத்தனை வீரர்கள் வருகிறார்கள். அவர்களைத் தன்னந் தனியாகச் சமாளிக்க முடியுமா?’ என்பதை எல்லாம் எண்ணிப்
பார்க்காமல் சண்டை வருகிறதென்றவுடன் அதற்குச் சன்னத்தமாகி விட்ட அந்த வாலிப வீரனின் உறுதியைக் கண்டதும் சண்டையென்பது அவனுக்குச் சர்வ சகஜமென்பதையும் அதற்காகத் தனிப் பிரயாசை எதையும் எடுத்துக்
கொள்ளும் பழக்கம் அவனிடம் கிடையாதென்பதையும் புரிந்து கொண்ட இமயவல்லி, தாங்கள் மேற்கொண்டுள்ள அபாயப்பணிக்கு சரியான தொரு வீரனையே வரவழைத்திருக்கிறார் புலவர் என்பதையும் உணர்ந்து கொண்டாள்.
தவிர, இந்த வாலிபன் பண்பின் சிகரமாக இருக்க வேண்டுமென்பதையும் அவள் சந்தேகமறத் தெரிந்து கொண்டாள். ‘இதற்கு முன்பு வந்த வீரர்களை இப்பணிக்கு அனுப்பிய போதெல்லாம் தன்னுடன் துணையாக வேறு நான்கைந்து
வீரர்களை அனுப்பி வந்த புலவர் இந்த முறை மட்டும் ஏன் இந்த வாலிபனுடன் என்னை ஏன் இருளில் அதுவும் ஒரு மூடுதேரில் தனிமையில் அனுப்பத் துணிந்தார்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட இமயவல்லி, அந்த வீரனின்
பண்பு அத்தனை உயர்ந்ததாகவும் மாசுமறு இல்லாததாகவும் இருக்க வேண்டுமென்பதையும் புரிந்து கொண்டாள். அதுவரை பணிக்கு வந்த வீரர்களுக்கும் இளமாறனுக்கும் அதிக வித்தியாசமிருந்ததையும் அவள் அறிந் தாள்.
‘இதுவரை வந்த வீரர்களும் நிகரற்ற வீரர்களானாலும் பின்னால் காவலர் துரத்தியதும் பதறுவார்கள். வண்டியை வேகமாக விடச் சொல்வார்கள். பிறகு போருக்குத் தாங்கள் மட்டுமின்றி, மற்ற வீரர்களையும் சன்னப்படுத்துவார்கள்.
இவரோ எதைப்பற்றியும் லட்சியம் செய்யாமல் மூடுதேரைத் துரிதப்படுத்தக் கூடச் சொல்லாமல் வாளை உருவிக்கொண்டு ஆசனத்தில் சாய்ந்து விட்டாரே! என்ன துணிவு இவருக்கு?” என்று பெரிதும் இளமாறன் போக்கை இமயவல்லி
ஆராய்ந்து கொண்டிருந்த சமயத்தில் வண்டி பாண்டிய வீரர்களால் சூழப்பட்டு நிறுத்தப்பட்டது. வண்டி நின்றதைத் தொடர்ந்து கீழே இறங்கச்சொல்லி ஆணை வந்தபோது, இளமாறன் அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் தன் வாளை
மட்டும் வெளியே நீட்டியதைக் கண்ட இமயவல்லி, எந்தக் குறியை நாடி வெளியே நீட்டுகிறார் வாளை?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட சமயத்தில் திடீரென வெளியே ஒரு வீரன் அலறும் சத்தம் அவள் செவிகளில் விழுந்ததும்,
அந்தச் சாகசச் செயலுக்குக் காரணம் கற்பிக்க முடியவில்லை அவளால். ‘மூடியிருந்த திரைக்கு அப்புறம் நின்றவனை எப்படி இவர் பார்க்க முடிந்தது? எப்படிக் குறி வைத்து வாளைச் செலுத்த முடிந்தது?’ என்று தன்னைத்தானே கேட்டுக்
கொண்டு விடை காணாமல் தவித்தாள்.
அந்தத் திடீர் நிகழ்ச்சி அவளுக்குத்தான் வியப்பாயிருந்ததேயொழிய, இளமாறனுக்கு அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. காவல் வீரர்கள் தொடருகிறார்கள் என்று அறிந்ததுமே அவன் உணர்ச்சிகள் மேலுக்கு
அடங்கியிருந்தாலும் உள்ளூரக் கிளம்பி ஊசி முனையில் நின்று கொண்டிருந்தன. அப்படி நின்றதன் விளைவாக எதிரிப் புரவிகளின் குளம்படிச் சத்தங்கள் விளக்கமாக அவன் காதில் விழுந்தன. அந்த ஒலிகளிலிருந்து சுமார் எட்டுப்
பேரிலிருந்து பத்துப் பேர் வரை வண்டியைத் துரத்தி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். திடீரென வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தித் தான் மட்டும் எதிரிகளைச் சமாளிப்பதால் தீடீரெனத் தான் நாற்புறமும்
சூழப்படலாமென்பதை உணர்ந்து கொண்டானாகையால் வண்டியைத் தனக்குப் பின்னால் சார்பிடமாகக் கொண்டே போரிடத் தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்துடன் உட்கார்ந்திருந்த இளமாறன் வண்டி நின்றதும் புரவி வீரன்
புரவியிலிருந்து கீழே குதித்ததையும் வண்டியை நோக்கி வருவதையும் காலடித் சத்தத்தினால் உணர்ந்தான். அந்த காலடிச் சத்தம் சட்டென்று நின்றதும் எதிரி வீரன் வண்டியை அணுகிவிட்டான் என்பதையும் திரைக்கு வெகு அருகில்
நிற்கிறானென்பதையும் அடுத்த விநாடி திரை விலக்கப்படலாம் என்பதையும் ஊகித்துக் கொண்ட இளமாறன், திரைச் சீலையை திடீரென விலக்கி கத்தியைப் பாய்ச்சியதால் எதிரி வீரன் திடீரென அலறிப் பின்னடைந்தான். அந்த அலறைக்
கேட்டு மற்ற வீரர்கள் பிரமித்த விநாடி நேரத்தில் இளமாறன் குருதி தோய்ந்த கத்தியைப் பின்னுக்கிழுத்து வெளியே குதித்து வண்டியின் மீது சாய்ந்துப் போருக்குத் தயாராக நின்றான்.
அப்படிச் சாய்ந்து நின்று அணுகி வந்த வீரர் கூட்டத்தைத் தன் நீண்ட வாளால் சமாளித்துக் கொண்டே எதிரிகளின் எண்ணிக்கையைக் கவனித்தான். வீரர்கள் மொத்தம் பத்துப் பேரிருந்தாலும் அவர்களில் இருவர் பந்தம் பிடித்து
நின்றதாலும், மீதி எட்டுப் பேரிலும் ஒருவன் தரையில் சாய்ந்து கிடந்ததாலும் தான் போரிட வேண்டியவர் ஏழு பேருடனே என்பதைத் தீர்மானித்துக் கொண்ட இளமாறன் வாளை வெகு வேகமாகச் சுழற்றினான். வாளைச் சுழற்றிக்
கொண்டிருந்த நேரத்தில் வந்த வீரர்களும் அற்ப சொற்பமானவர்கள் அல்லர் என்பதையும் புரிந்து கொண்டான் இளமாறன்.
வந்த வீரர்கள் மூவர் மூவராக அவனை அணுகி வந்தார்கள். மற்ற மூவர் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். இந்த அணிவகுப்பின் காரணத்தை வெகு சீக்கிரம் அறிந்து கொண்டான் இளமாறன். இரண்டு நிமிடங்கள் போராடிய
பிறகு இருவர் வாள்களைச் சுழற்றிக் காற்றில் பறக்கவிட்ட இளமாறன், அந்த இருவர் வாளை நோக்கி ஓடியதும் பின்னாலிருந்த இருவர் அந்த இருவர் இடத்துக்கு நகர்ந்து விட்டதைக் கண்டான். அதுமட்டுமல்ல, வாளை எடுத்துக்கொண்ட
இருவர் போரிட்ட இருவருக்குப் பின்னால் போர் சன்னத்துடன் நின்று கொண்டார்கள்.
இப்படிப் போர் நடந்தால் விடியும் மட்டும் போர் நடக்கும் என்பதை அறிந்த இளமாறன் திடீரெனப் போர் முறையை மாற்றிக் கொண்டான். அநாவசியமான கொலையில் என்றுமே நம்பிக்கை இல்லாததால் வீரர்களை
நிராயுதபாணிகளாக்கி ஓட வைத்து விடலாமென நினைத்த அந்தச் சேர நாட்டு வீரன், வந்த வீரர்களின் போர் முறை நீடித்தால் அவர்கள் ஓடவேண்டிய அவசியமே இருக்காதென்று தீர்மானித்தான்.
ஆகவே கத்திகளைச் சுழற்றி எறியும் முறையை மாற்றி வாளை நீட்டி நீட்டி நெடுந்தாக்கலில் முனைந்தான்.
முதல் வீரர் மூவர் கைகளிலும் திடீர் திடீரென அவன் வாள் புகுந்து விட்டதால் அவர்கள் வாட்களைக் கீழே எறிந்து பின்னால் நகர்ந்தனர்.
அடுத்த மூவர் அந்த வாலிப வீரனைத் தாக்க முற்பட்டனர். அவர்கள் வாட்களைத் தனது வாளால் தடுத்துக் கொண்டே பந்தத்தின் வெளிச்சத்தில் நாலா பக்கமும் பார்த்த இளமாறனுக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது.
முதன் முதலில் தன் கத்தியால் காயப்பட்டவன் வண்டிச் சீலைக்கருகில் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டதும் இளமாறன் பெரும் வியப்படைந்தான். அந்த வியப்பின் விளைவாகத் திடீரெனப் போர் முறையை மாற்றி வாளைப்
பலமாகப் பாய்ச்சி மற்றும் இரண்டு வீரர்களைக் காயப்படுத்தினான்.
அடுத்த விநாடி திடீரெனத் துள்ளிக் குதித்துக் கீழே விழுந்து கிடந்த வீரன் மார்பு மீது காலை வைத்துக்கொண்டு இரைந்து கூவினான்: “நிறுத்துங்கள் தாக்குதலை! இல்லையேல் பாண்டிய நாடு அதன் படைத்தலைவரை இழக்கும்”
என்று.
அந்தக் கூச்சலைக் கேட்டு வீரர்கள் மந்திரத்தால் தள்ளப்பட்டவர்களைப்போல் பின்னடைந்தார்கள். அவர்கள் பல அடிகள் பின்வாங்கும் வரையில் காலை பாண்டிய சேனாதிபதி மார்புமீதும், வாளை அவன் கழுத்துக்கு நேரும்
வைத்திருந்த இளமாறனின் சொற்கள் ஆணி அறைந்தது போல் தொடர்ந்தன: “வீரர்களே! நீங்கள் யாரென்பது எனக்குத் தெரியும். இதோ மண்ணில் இரத்தமிழந்து மூர்ச்சையுற்றிருக்கும் பாண்டிய தளபதி மருதரை நான் இதே இரவில்
சந்தித்திருக்கிறேன். இந்த மகா வீரரைக் கொல்ல எனக்கு இஷ்டமில்லை. என் வாள் இவர் இடையில் பாய்ந்திருக்கிறது. இவருக்கு சீக்கிரம் சிகிச்சை தேவை. நீங்கள் பழைய படி திரும்பிச் சென்றால் இவருக்கு சிகிச்சை செய்து அனுப்புகிறேன்.
இல்லை மீண்டும் போரென்றால் இந்த வாள் இவர் ஊட்டியில் பாய்ந்துவிடும். என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவினான் இளமாறன், ஒளி விட்ட தன் ஈட்டிக் கண்களால் அவர்களை வளைத்து நோக்கி.
வீரர்கள் சில விநாடி கலந்து யோசித்தனர். பிறகு அவர்களில் ஒருவன் சொன்னான், “சரி செல்கிறோம், அவரை எடுத்துச் செல்கிறோம்” என்று.
இளமாறன் பதில் திடமாக வந்தது. இப்பொழுது அவர் சிகிச்சை இல்லாமல் பத்து அடிகூடப் பயணம் செய்ய முடியாது. எத்தனை குருதி மண்ணை நனைத் திருக்கிறது பாருங்கள்” என்றான் அவன்.
முதலில் பேசிய வீரன், “இப்பொழுது எங்களை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?” என்று வினவினான்.
“நான் இவர் காயத்தைக் கட்டிக் குருதியை நிறுத்தும்வரை இந்த வண்டியிலிருந்து நீங்கள் அனைவரும் இருபதடி தள்ளி நிற்க வேண்டும்” என்றான் இளமாறன்.
அதற்கு அவர்கள் உடன்படவே திரைச்சீலையை அகற்றி இமயவல்லியை வெளியே வரச்சொல்லி வீரர்களின் கைகளிலிருந்த பந்தங்களில் ஒன்றை வாங்கி அவள் கையில் கொடுத்துவிட்டு, “வீரர்களே! உங்கள் கத்திகளைக் கீழே
எறியுங்கள், புரவியிலிருப்பவர்கள் இறங்குங்கள்” என்று உத்தரவிட்டான்.
அதுவரை வண்டியை அணுகிப் போரிடாமல் புரவியில் அமர்ந்திருந்தவர்கள் அவன் சொற்படி கீழே இறங்க அத்தனை வீரரும் வாட்களைக் கீழே எறிந்தார்கள். அந்தக் கத்திகளை எல்லாம் பொறுக்கி எடுத்து மூடுதேரில் கால்
வைக்குமிடத்தில் சேர்த்துக் கொண்ட இளமாறன் அந்த வீரர்களனைவரையும் இருபதடி பின்னடையச் சொல்லிவிட்டு இமயவல்லி பந்தம் காட்ட கீழே உட்கார்ந்து மருதன் காயத்தைப் பரிசோதித்தான். வாள் மருதன் விலாவில் ஆழமாகப்
பாய்ந்திருந்தது. திடீரென வாள் பாய்ச்சப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ராட்சதன் போலிருந்த மருதன் மயக்க முற்றிருந்தான். காயத்தைப் பரிசோதித்த இளமாறன், “இமயவல்லி! வாள் ஆழமாகத்தான் பாய்ந்திருக்கிறது. இதில் துணியைத்
திணித்துத்தான் இரத்தத்தை நிறுத்த வேண்டும்” என்று கூறிக்கொண்டே தனது மேலங்கியைக் கழற்றிக் கிழித்துச் சிறிதளவு சுருட்டித் திணித்துப் பிறகு காயத்தின் மேற்பகுதியில் அங்கியின் மீதியை மடித்து வைத்து அழுத்தினான்.
அங்கியை மடித்துவிட்டதால் காயத்தைக் கட்ட எதுவு மில்லாமல் போகவே தனது கண் முன் தொங்கிக் கொண்டிருந்த இமயவல்லியின் முந்தானையை திடீரென நீட்டத்தில் கிழித்து அந்தக் காயத்தை அழுத்தி இடையைச் சுற்றிக் கட்டினான்.
“போதும் இது! இனி ஒரு ஜாமத்திற்கு அபாயமில்லை” எனக் கூறிய இளமாறன், தூரமிருந்த வீரர்கள் இருவரை அழைத்து மருதனைத் தூக்கி மூடுதேரின் ஆசனத்தில் கிடத்தும்படி உத்தரவிட்டான்.
இதற்கு ஆட்சேபணை எழுந்தது வீரர்களிடமிருந்து. “நாங்கள் தலைவரை எடுத்துச் செல்கிறோம்” என்றான் வீரன் ஒருவன்.
“எப்படி எடுத்துச் செல்வீர்கள்?” இளமாறன் கேள்வியில் கோபத்தின் ஒலி இருந்தது.
“புரவியில்” வீரன் பதிலும் திடமாக இருந்தது.
“புரவியில் கொண்டு போனால் மாளிகையில் இறக்கும்போது படைத்தலைவன் பிணத்தைத்தான் இறக்க முடியும்.”
“ஏன்?”
“குதிரையின் அசைவில் ரணத்தின் வாய் விரிந்து இரத்தம் மீண்டும் கசியும்.”
வீரர்கள் சற்று யோசித்தார்கள். அவர்கள் யோசனையைப் பயன் படுத்திக்கொண்ட இளமாறன் கூறினான் : “வீணாக யோசிக்க வேண்டாம். பாண்டிய நாட்டுப் படைத்தலைவரின் நன்மையை முன்னிட்டே சொல்லுகிறேன். என்னிடம்
இவரை ஒப்படைத்துச் செல்லுங்கள். என் வாள் மீது ஆணையாகச் சொல்லுகிறேன் இவருக்கு எந்தத் தீங்கும் நேரிடாது” என்று.
முதலில் பேசிய வீரன் மீண்டும் யோசித்துவிட்டுக் கேட்டான் : “படைத் தலைவரை மீண்டும் எங்கு சந்திப்பது” என்று.
இதற்குப் பதில் சொல்ல இளமாறனுக்குத் தெரியாததால் இமயவல்லியை நோக்கினான் அவன். இமய வல்லி சற்று யோசித்துவிட்டு, “நீங்கள் போகும் வழியில் சித்தர் மடத்தில் இவரை ஒப்படைத்துவிட்டுச் செல்லலாமா?” என்று
வினவினாள் வீரர்களை நோக்கி.
சித்தர் மடம் என்ற பெயரைக் கேட்டதும் ஒரு முறை தலை வணங்கினார்கள் வீரர்கள். பிறகு இள மாறனை நோக்கி, “மீண்டும் அரண்மனை செல்கிறோம். நாளை சித்தர் மடத்தில் படைத் தலைவரைச் சந்திக்கிறோம். அவர்
அங்கில்லையேல்…” என்று கூறி மேலே ஏதும் பேசாமல் விட்டான்.
இளமாறன் இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்தது. “மிரட்டல் வேண்டாம் வீரனே! இளமாறன் வார்த்தை தவறுபவனல்லன். நான் மட்டும் இஷ்டப்பட்டிருந்தால் உங்கள் படைத்தலைவனை முன்பே கொன்றிருக்கலாம். பகைவனுக்கும் அருள்
புரியும் பண்பு எனக்கிருக்கிறது. “அஞ்சாதீர்கள்!” என்றான் இளமாறன்.
உறுதியாலும், அவன் காட்டிய காரணத்திலிருந்த உண்மையை உணர்ந்ததாலும், வீரர்கள் தங்கள் படைத் தலைவரை எடுத்து மூடுதேரின் ஆசனத்தில் நெடுக்க படுக்க வைத்தார்கள். மூடுதேரில் இருவர் உட்காரவே வசதியிருந்ததால்
கால்களை முடக்கியே மருதனைப் படுக்க வைக்க வேண்டியிருந்தது. அப்படிப் படுக்க வைத்த பிறகு வீரர்கள் தலைநகரை நோக்கிப் பயணப்படவே இளமாறனும் இமயவல்லியும் பழையபடி மூடுதேரில் ஏறி மருதன் படுத்துக் கிடந்த
ஆசனத்தின் முகப்பில் உட்கார வண்டி நகர்ந்தது.
வண்டியை ஓட்டு முன்பாகக் கூடியவரையில் நிதானமாக வண்டியைச் செலுத்தும்படி சாரதிக்கு உத்தரவிட்டான் இளமாறன். அப்படியே மெல்லச் சென்றான் சாரதி. அந்த மூடுதேரின் ஆசனத்தின் முகப்பில் உட்கார்ந்திருந்த அந்த
இருவரும் பல விநாடிகள் பேசவே இல்லை. கடைசியில் இமயவல்லி பேச்சைத் துவங்கி, “பாண்டியத் தளபதிக்கு நினைவு வர எத்தனை நேரம் பிடிக்கும்?” என்று வினவினாள்.
“முதலில் நான் போட்டிருக்கும் கட்டை அகற்றி. மருந்து வைத்துக் கட்டினால் கொஞ்ச நஞ்சமுள்ள குருதிக் கசிவும் நின்றுவிடும். பிறகு கண்களை நீரால் துடைத்துப் பால் சிறிது கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் கண்
திறப்பார்” என்றான் இளமாறன்.
“அத்தனை நேரம் ஆகுமா?” என்று வினவினாள் இமயவல்லி.

.
“ஆகும்!”
“அப்படியானால் சத்திரத்தில்தான் விழிப்பார்.”
“சத்திரமா?”
“ஆம், அங்கு போகத்தான் புலவர் உத்தரவு.”
“சித்தர் மடமென்று ஏதோ சொன்னாயே!”
“சொன்னேன்.”
“அங்கு போகவில்லையோ?”
“இல்லை.”
‘அப்படியானால் நான் வீரர்களுக்குக் கொடுத்த வாக்கு?”
“காப்பாற்றப்படும்.”
“எப்படி?”
“நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் படைத்தலைவர் அங்கிருப்பார்.”
“எப்படியிருக்க முடியும்? நாம் தான் அங்கு போகவில்லையே?”
“இவரை அங்கு அனுப்பிவிட ஏற்பாடு செய்கிறேன். வீரர்களுக்கு வேண்டியது தளபதியே தவிர நீங்களோ நானோ அல்ல.” தன் இதைத் திட்டமாகக் கூறினாள் இமயவல்லி. அவள் பேசிய தோரணையில் இருந்து எந்தக் காரணத்தை
முன்னிட்டும் அவள் சத்திரத்தின் மார்க்கத்தை விட்டுத் திரும்பமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான் இளமாறன். அதன் விளைவாக ஒரு சந்தேகமும் எழவே கேட்டான் : “இமயவல்லி! சத்திரமும், சித்தர் மடமும் அருகிலிருக்கின்றனவா?”
என்று.
“ஆம்” என்றாள் இமயவல்லி.
“சித்தர் மடம் என்றதும் வீரர்கள் ஏன் தலையை வணங்கினார்கள்?” இதை வெகு சாதாரணமாகத்தான் கேட்டான் இளமாறன். ஆனால் இதைக் கேட்ட இமயவல்லி அடியோடு புது மங்கையாக மாறினாள். அவள் முகத்தில் குரோதம் குபீரென
எழுந்தது. விழிகள் சீறின. “நிறுத்துங்கள் உங்கள் கேள்விகளை” என்ற சொற்களும் சுடச்சுட உதிர்ந்தன.

Previous articleMoongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here