Home Historical Novel Moongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

60
0
Moongil Kottai Ch12 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 சித்தர்

Moongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

“காதல்” எனும் மந்திரச் சொல்லை இமயவல்லி இளமாறன் காதுக்கருகே சொன்ன தன் விளைவாக உணர்ச்சிகள் அலைமோத, கைகள் பிணைந்து கிடக்க நேரம் போவதோ, வண்டி நின்றதே தெரியாமல் சுய நிலை இழந்து கிடந்த அந்த
இருவரும் “மன்னிக்க வேண்டும்’ என்று வண்டிக்கு வெளியே இருந்து வந்த குரலால் திடீரெனப் பிரிக்கப்பட்டதும் தனித் தனியாகத் தள்ளி உட்கார்ந்த அந்த இருவரில், இளமாறன் கோபத்துக்கும், இமயவல்லி பயத்துக்கும் உள்ளானார்கள்.
மூடுதேரின் திரையை விலக்கி நின்றவர் ஒரு பெரியவர் என்பதையும் நல்ல உயரமுள்ள வரென்பதையும் அவர் தலையை மிகவும் தாழ்த்தி உடல் வளையத் திரைக்குள் நுழைந்திருந்த முறையிலேயே புரிந்து கொண்ட இளமாறன்
அத்தகைய துணிவுடன் அரச மகளிர் செல்லும் தேரை நிறுத்தும் மனிதர் யாராயிருக்க முடியும் என்று எண்ணிப் பார்த்தான். யாராயிருந்தாலும் அவர் மதிப்புக்குரியவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் முகத்திலிருந்த பெருந்
தோரணையிலிருந்தும், கண்களில் வீசிய பேரொளியிலிருந்தும், யாரையும் விநாடியில் அலசிவிடும் வல்லமையுள்ள கண்கள் இளமாறனை நோக்கின. இளமாறன் கண்களும் அவரை மேற்கொண்டு ஆராய்ந்தன.
உயர்ந்த, மெல்லியதான ஆனால், உயரமான உடலைப் படைத்த அவர் வடநாட்டிலிருந்து யாத்திரை வரும் துறவிகளைப்போல் ஒரே துணியை இடுப்பில் சுற்றி அதன் இரு முனைப்புகளையும் எடுத்துக் கழுத்தில் முடிந்திருந்ததால் அவர்
விசால மார்பு மூடி முழந்தாள் வரையில் மட்டுமே துணி உடலை மறைத்திருந்தது. அந்தத் துணி அதிக வெளுப்பாகவோ காவியாகவோ இல்லாததாலும், உடுத்தியிருந்த முறை வட நாட்டு யாத்திரிகர் போல் இருந்ததாலும் அவர் துறவியா,
குடும்பியா, வடநாட்டவரா, தென் நாட்டவரா என்று தீர்மானிக்க முடியாதிருந்தது. அவர் தலையிலிருந்த மயிர் ஆலம்பாலால் முனைகளில் சுருட்டி விடப்பட்டு, உருண்டை உருண்டையாகத் தோள் வரையில் தொங்கி அவர்
துறவியாயிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு இடங் கொடுத்தாலும், தலையின் உச்சி நடுவில் எடுக்கப்பட்டிருந்த வகிடு அந்த ஊகத்துக்கு இடங்கொடுக்கவில்லை. அவர் நெற்றியில் எந்தக் குறியும் தரிக்காததால் நெற்றி சூன்யமாயிருந்தது.
கண்களில் நல்ல ஒளியிருந்த போதிலும், பார்வையில் தீட்சண்யமிருந்த போதிலும், கண்களில் வெளுப்பாக இருந்த பாகம் நன்றாகச் சிவந்து குடிகாரன் கண்கள் போலிருந்தன. சீலையை விலக்கி நின்ற நீண்ட கைகள் வயிரம்
பாய்ந்திருந்தன. ஒரு கையில் வாளின் காயத்தால் ஏற்பட்ட பலமான தழும்பு இருந்தது. முழந்தாளுக்குக் கீழே வெளிப்படையாகத் தெரிந்த நீண்ட கால்கள் மெல்லியனவாயிருந்தாலும் எஃகுத் தூண்கள் போலிருந்தன.
இந்த உருவத்தைப் பார்த்த இளமாறன் பெரிதும் வியந்தான். அந்த மனிதர் துறவியாயிருந்தாலும், நல்ல வராயிருந்தாலும், பொல்லாதவராயிருந்தாலும், வீரராயிருந்தாலும், ஆத்திகராயிருந்தாலும், நாத்திகராயிருந்தாலும் அவருடைய பலம்
மட்டும் அசாதாரணமான தென்பதைப் புரிந்துகொண்ட இளமாறன் அப்படி அந்த அசாதாரண பலத்தைப் பார்த்து வியந்தாலும் கலங்காத அவன், “யார் நீங்கள்?” என்று வினவினான் கோபத்துடன்.
அந்தப் பெரியவர் அந்தக் கோபத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமலே சொன்னார், “இமயவல்லிக்குத் தெரியும்” என்று.
இளமாறன் இமயவல்லியைத் திரும்பி நோக்கினான். அதுவரை அருகில் உட்கார்ந்திருந்த இமயவல்லி ஆசனத்தின் கோடியில் நகர்ந்து உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்தில் திகில் மண்டிக் கிடந்தது. அந்தத் திகிலின் காரணத்தை அறியாத
இளமாறன் கேட்டான்: “யார் இவர் இமயவல்லி?” என்று.
இதற்கு இமயவல்லியிடமிருந்து பதிலேதும் வர வில்லை. அதுவரை நிமிர்ந்து இருந்த தலையைக்கூட குனிந்து கொண்டாள். அவள் அப்படிப் பயப்பட்டதன் விளைவாகவும் அதனால் உண்டான கோபத்தில் பின்னால் இருந்த திரையை
நீக்கிய இளமாறன் மேற்பீடத் திலமர்ந்திருந்த தேரோட்டியை நோக்கி, “உன்னை யார் வண்டியை நிறுத்தச் சொன்னது?” என்று சீறினான்.
சாரதி பதில் சொல்லுமுன்பாகப் பெரியவரே முந்திக் கொண்டார். “அவன் மேல் பிசகில்லை. நான் தான் ரதத்தை நிறுத்தினேன்” என்றார்.
“நீங்கள் நிற்கச் சொன்னால் அவன் நிறுத்துவா வானேன்?” என்று மீண்டும் சீறினான் இளமாறன்.
பதிலுக்கு உக்கிரமாகப் புன்முறுவல் கொண்ட அந்தப் பெரியவர், அவன் நிறுத்தாவிட்டால் தேரை நான் கட்டாயமாக நிறுத்திவிடுவேன் என்று அவனுக்குத் தெரியும்” என்று கூறினார். அந்தப் பயங்கரப் புன்முறுவலைத் தொடர்ந்த
அவர் சொற்களில் உறுதியிருந்தது. சொன்னதை அவர் செய்யக்கூடியவர் என்ற ஒலி அவற்றில் தெளிவாகத் தென்பட்டது இளமாறனுக்கு. ஆகவே அவன் தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு, “ஆமாம், ஓடும் புரவிகளை
நிறுத்தும் திறன் உமது கையில் இருக்கிறது” என்று சிலாகித்தான் இளமாறன்.
பெரியவர் மெல்ல நகைத்தார். “அதை நீங்கள் புரிந்து கொண்டதால் இனி தேரோட்டி மீது கோபம் கொள்ள வேண்டாம். தவிர அவன் கடமையைத்தான் அவன் செய்திருக்கிறான்” என்றும் கூறினார் பெரியவர் சிரித்துக் கொண்டே.
“உங்களைப் பார்த்தவுடன் தேரை நிறுத்த வேண்டியது அவன் கடமை போலிருக்கிறது?” இந்தக் கேள்வியை இகழ்ச்சியுடன் கேட்டான் இளமாறன்.
“ஆம்” இம்முறை பெரியவர் குரலில் அதிக உறுதியிருந்தது.
“தேர் யாருடையதாயிருந்தாலும் நீங்கள் நிறுத்தச் சொன்னால்…”
“நின்றுவிட வேண்டியதுதான்”
“அரச மகளிர் செல்லும் அந்தப்புரத் தேராயிருந்தாலும்…”
“நிற்க வேண்டியதுதான்.”
“அரசர் தேராயிருந்தால்?”
“அதற்கும் விதி ஒன்றுதான்.”
“யார் விதித்த விதி”
“அரசர் விதித்த விதி.” இதை மிகவும் சாதாரணமாகச் சொன்னார் பெரியவர்.
அந்தச் சொற்களைக் கேட்டதும் பெருவியப்புடன் பிரமிப்புக்கும் உள்ளான இளமாறன், “பாண்டிய மன்னர் நெடுஞ்செழியர்…” என்று ஏதோ சொல்லப் புகுமுன்பு அந்தப் பெரியவரே குறுக்கிட்டு, “ஆம் வீரரே! நெடுஞ்செழியன் ஆணை
தான் அது” என்று முடித்தார்.
“அப்படி அரசராலேயே மதிக்கப்பட்ட நீர் யார்?” என்று வினவிய இளமாறன் குரலில் லேசான சங்கடம் தொனித்தது.
“சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள். நான் இல்லாத சமயத்தில் இமயவல்லி எடுத்துச் சொல்லுவாள் உமக்கு. ஆகவே அவள் மூலமாகவே அறிந்து கொள்ளுங்கள் அதை. என் வாயால் வருவதைவிட அவள் வாயால் வருவது
இனிப்பாயிருக்கும் உங்களுக்கு” என்று பதில் கூறிய பெரியவர் லேசாக ஏளனம் சொட்ட நகைத்தார். ஒரு துறவி பேசக்கூடிய பேச்சாக இல்லை அது. குரல் அந்த சந்தர்ப்பங்களில் துறவிகள் உபயோகப் படுத்தக்கூடிய குரலாக இல்லை.
விழிகளின் பார்வை கூட சுவாரஸ்யமாக இல்லை. அந்தச் சொற்களை அவர் உதிர்த்தபோது அவர் கண்களில் சற்றே கடுமையிருந்ததைக் கவனித்தான் இளமாறன். இளமாறன் சிந்தையில் மீண்டும் கோபம் துளிர்த்தது. “சரி அவளிடமிருந்தே
தெரிந்து கொள்கிறேன். சென்று வாருங்கள்” என்று கூறிய இளமாறன், “தேரை ஓட்டு” என்று சாரதிக்கு உத்தரவிட்டான்.
இளமாறன் உத்தரவை சாரதி நிறைவேற்றவில்லை. பேசாமல் இடித்த புளிபோல் தேர்த்தட்டில் உடகார்ந்திருந்தான். பெரியவர் உள்ளே எட்டி பார்த்த தலையை வெளிக்கிழுக்காமலும், சென்று வர எந்த முயற்சியை எடுக்காமலும், “நான்
முன்பே சொன்னேன் உங்களுக்கு” என்றார்.
“என்ன சொன்னீர்கள்?” என்று வினவினான் இளமாறன் சினம் தலைக்கேற.
“தேரோட்டி நான் சொல்வதை செய்யக் கடமைப் பட்டவன் என்று சுட்டிக் காட்டினேன்” என்றார் பெரியவர் சாவதானமாக.
“ஆம். சுட்டிக்காட்டினீர்கள்” என்றான் இளமாறன் அந்த நிலையில் என்ன செய்வதென்று அறியாமல்…
“ஆகவே புத்திசாலியான நீங்களும் என் சொற்படி கேட்பது தான் அழகு.”
“கேட்காவிட்டால் என்ன செய்வீர்?”
“தங்களைப் பலவந்தப் படுத்திக் கேட்கச் செய்ய வேண்டியிருக்கும்.”
“என்னைப் பலவந்தப்படுத்தும் மனிதன் உலகில் இனிமேல் தான் பிறக்க வேண்டும்.”
“தவறு.”
“எப்படித் தவறு?”
“முன்னரே பிறந்துவிட்டான். அவன் தான் நான்” என்று பெரியவர் மேலும் சொன்னார் : “வீரரே! நீர் யாரென்பது எனக்குத் தெரியும். உமது புஜபலம் எப்பேர்ப்பட்டது என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால் இந்த எல்லைக்குள் உமது
புஜபலம் எந்தப் பயனையும் அளிக்காது. என் இஷ்டமிருந்தால் தான் இந்த எல்லையைவிட்டு நீர் நகர முடியும்.”
இளமாறன் இதழ்களில் கோபப் புன்முறுவல் படர்ந்தது. அத்துடன் முகத்தில் சிறிது சந்தேகச் சாயையும் தெரிந்தது. அந்த இரண்டையும் கவனித்த அந்தப் பெரியவர், “உமக்கு சந்தேகமிருந்தால் இமயவல்லியைக் கேளும்” என்றார்.
இளமாறன் இமயவல்லியை நோக்கித் திரும்பிக் கேட்டான். “ஏன் இமயவல்லி! இவர் அனுமதியில்லாமல் நாம் மேலே செல்ல முடியாதா? இவர் சொல்வதெல்லாம் உண்மையா?” என்று.
இமயவல்லி குனிந்த தலையை நிமிராமலே பெரு மூச்சு விட்டாள். “அவர் சொற்படி செய்யுங்கள்” என்ற சொற்களும் தட்டுத் தடுமாறி வந்தன.
“யார் இவர் என்று சொல்லமாட்டாயா? கண்ட. பேர்களுக்கெல்லாம் நாம் வணங்கிச் சென்றால் போக வேண்டிய இடத்துக்கு எப்படிப் போய்ச் சேருவது?” என்று வினவினான் இளமாறன். அவளைப் பார்த்துப் பேசிய இந்தச் சொற்களிலும்
அவன் கோபம் நன்றாகத் தொனித்தது.
ஆனால், அடுத்த விநாடி அவன் கோபம் பறந்தது. அவன் முகத்தில் மிதமிஞ்சிய வியப்பு படர்ந்தது. “நான் கொண்டு போய்ச் சேர்க்கிறேன்” என்றார் பெரியவர்.
பிரமிப்புடன் கேட்டான் இளமாறன், “ நான் எங்கே போகிறேன் தெரியுமா?” என்று.
“இமயவல்லியுடன் வரும் வீரர்கள் செல்லுமிடம் ஒன்றுதான்” என்றார் பெரியவர்.
“எது?”
“அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு.”
“இரண்டு பெயர்களா?”
“ஆம். ஒரு பெயர் அழிவு! இன்னொரு பெயர் மூங்கில் கோட்டை” என்ற பெரியவர் முகத்தில் விசனக்குறி படர்ந்தது. அதைக் கேட்டு இணையிலா பிரமிப்பின் வசப்பட்ட இளமாறனை நோக்கி அதுவரை கையாண்ட மரியாதையையும்
கைவிட்ட பெரியவர், “ஆம்! இளமாறா! அழிவு வேறு; மூங்கில் கோட்டை வேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான். இதுவரை இமயவல்லியுடன் சென்ற நான்கு வீரர்களை அது பலி வாங்கியிருக்கிறது. நீ ஐந்தாமவன். நீ பிழைப்பாயோ
சாவாயோ எனக்குத் தெரியாது. ஆனால், வீணாக உயிர்ப்பலியை விரும்புவதில்லை நான். அது இமயவல்லிக்கும் தெரியும். எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன் இவளை, வீரர்களைப் பலிக்கு அழைத்துச் செல்லாதேயென்று. இவள்
கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் இளைஞர்களை அழிவுக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் அதைப்பற்றி எனக்கென்ன? அது அரசியல். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என்று உணர்ச்சியுடன் சொன்னார்
அவர் தன்னைப்பற்றியும் இமயவல்லியைப் பற்றியும் சகல விவரங்களையும் அறிந்திருப்பதைக் கண்டு வியந்த இளமாறன், “அரசியலில் சம்பந்தமில்லையென்றால் இந்தத் தேரை ஏன் நிறுத்தினீர்கள்?” என்று வினவினான்.
“இது இராக் காலம்” என்றார் அவர்.
“உங்களுக்கு மட்டும்…”
“நான் வெளியே நடமாடும் வேளை இது தான்.”
“இரவில்தான் நடமாடுவீர்களா?.
“ஆம்.”
“ஏனோ?”
“பகலில் ஜனக்கூட்டம் இருக்கிறது. உலகின் பாச பந்தங்களைக் காண நேரிடும். இரவு அமைதியானது. உலகம் உறங்கும் நேரம் அது. ஆகவே, அப்பொழுது நான் விழித்திருக்கிறேன், நடமாடுகிறேன்.”
இம்முறை பெரியவர் பேசியது வேதாந்தம் போலிருந்ததால் இளமாறன் அதற்கேதும் பதில் சொல்லாமல், “நீங்கள் நடமாடும் சமயங்களில் பாதையில் ரதம் போகக் கூடாதா?” என்று கேட்டான்.
“ஆம்…”
“ஏதோ தயங்குகிறீர்களே?”
“தயக்கமில்லை. ரதம் சாதாரண ரதமாயிருந்தால் தடுத்திருக்க மாட்டேன், காயமுற்றவர் இருப்பதால் தடுத்தேன்.”
இதைக் கேட்ட இளமாறன் மேலும் பிரமிப்பை அடைந்தான். “உள்ளே காயமுற்றவர் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான்.
“தேர் அதிகமாக விரைந்து வரவில்லை. பாதையில் பள்ளங்கள் வரும். இரண்டு சமயங்களில் சாரதி கடிவாளத்தை இறுக்கிப் பிடித்து நிறுத்திப் பிறகு அதை செலுத்தினான். தூரத்திலிருந்து பார்த்தேன். புரிந்து கொண்டேன்” என்றார்
பெரியவர்.
அவரின் ஊகத்தின் கூர்மையைப் புரிந்து கொண்ட இளமாறன் மேலும் அவரிடம் சர்ச்சை செய்ய இஷ்டமில்லாமல் “அடுத்தபடி என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவினான்.
“உங்களிருவருடன் ரதத்தில் பயணம் செய்ய உத்தேசம்” என்றார் பெரியவர்.
“இடம் கொடுக்க மறுத்தால்?”
“கண்டிப்பாய் கொடுப்பாய் இளமாறா!”
“என்ன அப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
“இமயவல்லி என்னிஷ்டபடிதான் நடப்பாள்.”
அதற்குமேல் வாளாவிருக்காத இமயவல்லி “அவரைத் தடை செய்யாதீர்கள். அவரும் வரட்டும்” என்றாள் இளமாறனை நோக்கி.
இதைக் கேட்ட பெரியவர், “நன்றி இமயவல்லி, நீ முன்பே பேசியிருந்தால் இத்தனை பேச்சும் காலமும் விரயமாயிருக்காது” என்று கூறிவிட்டு சர்வ சுதந்தரத்துடன் ரதத்தில் ஏறி இமயவல்லிக்கும் இளமாறனுக்கும் எதிரிலிருந்த ஆசனத்தில்
காயமுற்றுக் கிடந்த பாண்டிய சேனாதிபதிக்கு இடைஞ்சலில்லாமல் முகப்பில் உட்கார்ந்து கொண்டார். பிறகு சாரதியை அழைத்து “அப்பனே ஓட்டு என்றார்.
“எங்கு ஓட்டச் சொல்கிறீர்கள்?” என்று இளமாறன் வினவினான்.
“அவனுக்குத் தெரியும். மடத்துக்கு ஓட்டுவான்” என்றார் பெரியவர்.
“எந்த மடம்?”
“சித்தர் மடம்.”
இளமாறன் கண்களில் வியப்பு பெரிதும் படர்ந்தது. “அப்படியானால் நீங்கள் தான்?” என்று இழுத்து வாசகத்தை முடிக்காமல் விட்டான்.
“சித்தன்” என்று வாசகத்தை முடித்தார் பெரியவர்!

Previous articleMoongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here