Home Historical Novel Moongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

68
0
Moongil Kottai Ch13 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 சொல்லாசிரியனும் வில்லாசிரியனும்

Moongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

எந்தச் சித்தர் மடத்தின் பெயரைச் சொன்னதும் பாண்டிய வீரர்கள் தலைவணங்கிச் சென்றார்களோ அந்த மடத்தின் அதிபதி தான் அந்தப் பெரியவர் என்றும், தமது மடத்துக்கே அவர் மூடுதேரை ஓட்ட உத்தரவிட்டிருக்கிறார் என்றும்
அறிந்துகொண்ட இளமாறன், எதிரே உட்கார்ந்திருந்த அந்தச் சித்தரை மீண்டும் தன் கண்களால் நோக்கினான். மடத்துக்குத் தேரை ஓட்டச் சொன்ன அடுத்த விநாடி அந்த மனிதர் பாண்டிய சேனாதிபதியான மருதன் மீது சற்றே சாய்ந்து
தேரின் ஆசனப் பின்பகுதியில் தலையை வைத்துக் கொண்டும், கண்களை மூடிக் கொண்டும் தியானத்தில் இருப்பவர் போல் காட்சி அளித்தார். அவர் கண்களை மூடியிருந்ததால் அவரைப் பற்றி ஏதாவது ரகசியமாகக் கேட்கலாம் என்று
இமயவல்லியை நோக்கித் திரும்பிய இளமாறன், இமயவல்லியின் முகத்தில் அப்பொழுதும் பயத்தின் சாயை பரவிக்கிடந்ததையும் அவள் எவ்வித சம்பாஷணைக்கும் தயாராயில்லை என்பதையும் முகபாவத்திலிருந்தே தெரிந்து
கொண்டான்.
‘இப்படி அரசரையும் அரச மகளிரையும் ஒருங்கே ஆட்ட இந்தச் சித்தருக்கு அப்படியென்ன அபார சக்தியிருக்கிறது?’ என்று தன்னைப் பலமுறை கேட்டுக் கொண்ட இளமாறனுக்கு அந்தச் சமயத்தில் விடை சிடைக்காதது மட்டுமின்றி
மடத்தைச் சேர்ந்த பின்பும் விடை கிடைக்கவில்லை.
சுமார் ஒரு நாழிகை பயணத்துக்குப் பின்புதான் மூடுதேர் சித்தர் மடத்தை அடைந்தது. அந்த ஒரு நாழிகை காலமும் சித்தர் வாயையோ மூடிய கண்களையோ திறக்காமலே பிரயாணம் செய்தார். ஆகையால் அவரிடமிருந்து
மேற்கொண்டு எந்தத் தகவலும் கேட்பதற்கு இயலாததாயிற்று இளமாறனுக்கு.
அவனருகே உட்கார்ந்த இமயவல்லியும் பேசா மடந்தையாகி விட்டதால் அந்த மௌனப் பிரயாணம் பெரும் வேதனையாயிருந்தது சேர நாட்டு வீரனுக்கு. மெள்ள ஆசனத்திலிருந்து திரையை விலக்கி மேற்படியிலேறித் தேரோட்டினயைக்
கீழே தள்ளிவிட்டு ரதத்தைத் தானே ஓட்டினாலென்ன என்று ஒரு விநாடி யோசித்த இளமாறன் அப்படிச் செய்தாலும் பலனேது மில்லை என்பதையும், பின்னாலிருந்த சித்தர் தாக்கினால் தான் செய்யக் கூடியதும் அவர் யோசனைப்படி
ரதத்தைச் செலுத்துவதே என்பதையும் புரிந்து கொண்டதால் ஆசனத்தின் பின்னால் சாய்ந்து கொண்டு தன் இடது கையை மட்டும் பின்புறமாக நீட்டி இமயவல்லியின் கையைத் திருட்டுத்தனமாகப் பிடித்து ஆறுதலாக அழுத்திக்
கொடுத்தான். இமயவல்லியின் கை அவன் கையுடன் இணைய மறுத்தது. பிடிபட்ட கை பலவந்தமாகப் பின்னால் இழுத்துக் கொண்டது. இமயவல்லி பரிபூரண அச்சத்தில் இருக்கிறாள் என்பதைக் கை பிடிபட்டபோது இருந்த
சங்கடத்தாலும், இழுத்துக் கொண்டபோது ஏற்பட்ட லேசான சிரமத்தாலும் புரிந்து கொண்ட இளமாறன், மூடுதேர் மடத்தை அடையும் வரையில் எவ்வித விஷமத்திலும் ஈடுபடாமல் காலத்தைக் கடத்தினான்.
காயம் விளைவித்த மூர்ச்சையால் மௌனமான பாண்டிய தளபதி மருதுவையும், சூழ்நிலை கிளப்பிய உணர்ச்சிகளால் மௌனமாகிவிட்ட மற்ற மூவரையும் தாங்கிய அந்த மூடுதேர் ஒரு நாழிகைக்குப் பின்பு சித்தர் மடத்துக்குள்
நுழைந்து வாயிலில் நின்றதும், முதலில் இறங்கிய சித்தர் சேர நாட்டு வீரனை நோக்கி, “இளமாறா! வா!” என்று சர்வசகஜமாகவும் பெயர் சொல்லியும் அழைத்தார். அதற்குப் பதிலேதும் சொல்லாமல் கீழே இறங்கிய இளமாறன் சுற்றுமுற்றும்
பார்த்து, மடத்தின் கட்டடமெல்லாம் கூரைக் கட்டடமாயிருந்தாலும் கூரைமுகப்பு உயர்ந்திருந்ததையும், மடத்தின் நீளமும் அகலமும் ஒரு மாளிகைக்கு வேண்டிய நீள அகலத்துடன் இருந்ததையும் கவனித்தான். சுற்றிலுமிருந்த வேலி
நீண்ட தூரம் இருந்ததாலும் மரங்கள் பல நெடுந்தூரம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்ததாலும் அதன் நிலப்பரப்பும் அதிகமென்பதை அறிந்து கொண்ட இளமாறனுக்கு அந்த மடத்தில் காவலேதுமில்லாதது மட்டும் பெரும் வியப்பாயிருந்தது.
அரசரும் மதிக்கும் பெரிய மடாதிபதிக்குக் காவலாளிகள் கூட இல்லையென்பதை நினைத்துப் பார்த்த இளமாறன் ஒருவேளை உட்புறத்தில் வீரர்கள் இருக்கலாம்; பின்னால் வரலாம் என்று நினைத்தான் முதலில். அதுவும் இல்லை என்பது
பின்னால் புரிந்தது.
மூடுதேர் வந்து நின்ற பல விநாடிகளுக்குப் பிறகும் காவலரோ சீடப்பிள்ளைகளோ யாரும் வெளிவரவுமில்லை. மடத்துக் கதவைத் திறக்கவுமில்லை. சித்தரும் யாரையும் குரல் கொடுத்து அழைக்கவுமில்லை. இளமாறனையும்
இமயவல்லியையும் ரதத்தை விட்டு இறங்கச் சொன்ன சித்தர் காயமுற்றிருந்த பாண்டிய சேனாதிபதியின் பெரு உடலை ஒரு சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் தமது கைகளில் தூக்கிக் கொண்டு குதிரைகளை அவிழ்த்து விடும்படி
சாரதிக்கும் உத்தர விட்டுத் தம்மைத் தொடர்ந்து வரும்படி மற்ற இருவருக்கும் உத்தரவிட்டு மடத்தின் வாயிலை நோக்கி நடந்தார். வாயிலை அடைந்ததும் வாயிற்கதவைத் தமது வலது காலால் மெல்ல உதைத்துத் திறந்தார். அதுவரை
மௌனமாகக் கிடந்த அந்த மடத்திலிருந்து பலவித முனகல்களும் இம்சைப்படுவதற்கும் அடையாளமான தீன சுரங்களும் வெளிக் கிளம்பியதைக் கண்ட இளமாறன் அவற்றுக்குக் காரணம் அறியாமல் திணறினான். கதவு திறந்து மூவரும்
உள்ளே சென்றதும் அந்தச் சத்தங்கள் மிகவும் அதிகமாயின. இளமாறன் நாலா புறமும் பார்த்தான். ஆனால் யாரும் இருப்பது அவன் கண்களுக்கு மட்டும் புலப்படவில்லை. இம்சை ஒலிகள் மட்டும் நாலா பக்கங்களிலும் இருந்தும் வந்து
கொண்டிருந்தன. இளமாறன் சேர நாட்டவனாதலாலும் மந்திரம், மாயம், பில்லி, சூனியம், பிசாசு, பூதம் முதலியவற்றில் நம்பிக்கையுள்ளவனாதலாலும், சித்தர் ஒருவேளை பலதரப்பட்ட பிசாசுகளை மந்திரத்தால் கட்டி
வைத்திருக்கிறாரோவென்றும் நினைத்தான். சித்தர் ஒருவேளை கொடூரத்தின் உருவமோ, ஏவல் முதலியவற்றில் சமர்த்தரோ என்று கூடச் சந்தேகப்பட் டான். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்தச் சந்தேகம் தீர்ந்தது இளமாறனுக்கு.
இளமாறனும் இமயவல்லியும் பின்தொடர மடத்துக்குள் நுழைந்து இருட்டில் நிதானத்தின் மேலேபே நடந்த சித்தர் மெள்ள ஒரு கூடத்தில் வந்து நின்றதும், எங்கிருந்தோ ஒரு சிறு விளக்குடன் ஒரு துறவி வந்தார். அந்த விளக்கு வீசிய
வெளிச்சத்தில் அந்தக் கூடத்துக்கு எதிரிலும் ஒரு பெரும் கூடமிருந்ததையும், இரண்டு கூடத்திலும் ஒரு பத்தடி விட்டுப் பெரும் கறுப்புச் சீலைகள் தொங்கவிடப்பட்டு இருந்ததையும், இந்தக் கறுப்புச் சீலைகளுக்கு அப்புறமிருந்தே
இந்த இம்சை ஒலிகள் வருவதையும் உணர்ந்து கொண்ட இளமாறன் சந்தேகத்துடன் சித்தரை நோக்கினான். அவன் சந்தேகத்தைக் கண்ட சித்தர் புன்முறுவல் செய்தாரானாலும் பதிலேதும் சொல்லவில்லை. அவர் செய்த சைகையைத்
தொடர்ந்து எதிரே நின்ற துறவி விளக்கைக் கீழே வைத்துவிட்டு தமது கைகளை நீட்டவே, அந்தக் கைகளில் தமது கைகளில் கிடந்த பாண்டிய சேனாதிபதியை மாற்றிவிட்ட சித்தர், குனிந்து அந்த விளக்கைத் தாம் எடுத்துக்கொண்டு
இளமாறனையும் இமயவல்லியையும் தம்மைத் தொடர்ந்து வருமாறு சைகை செய்து கொண்டு, இரண்டு கூடத்துக்கும் இடையே இருந்த தாழ்வாரத்தில் இறங்கி, மடத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தார். அவரைப் பின் தொடர்ந்து பல
கட்டுகளைத் தாண்டியதும் பின் கதவு திறக்கப்பட்டதையும், அதையும் தாண்டியதும் தனிச் சிறு விடுதியொன்றில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்ததையும் கண்டான் இளமாறன். அந்த விடுதியைத் திறந்து கொண்டு உள்ளே
நுழைந்த சித்தர், இமயவல்லிக்கும் இளமாறனுக்கும் ஓர் அறையைக் காட்டி முதல் முதலாக வாய் திறந்து பேசினார்.
“இதில் நீங்களிருவரும் தங்கலாம்” என்று, அதைக் கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் வெளியே செல்ல முயன்ற சித்திரை, “ஒரு நிமிஷம்” என்று கூறித் தடுத்தான் இளமாறன், சந்தேகம் கேட்க.
வாயிற்படியைத் தாண்ட ஒரு காலை வெளியே எடுத்து வைத்த சித்தர் தலையைப் பின்னுக்குத் திருப்பி, “என்ன வேண்டும்? இங்கு உங்களுக்கு வேண்டியது சகலமுமிருக்கிறது, ஏதாவது தேவையானால் இமயவல்லியைக் கேளப்பனே”
என்றார்.
“நீங்கள் விளக்கிவிடுவது நல்லது” என்றான் இளமாறன் சற்றே சினத்துடன்.
“மனிதனுக்கு விளக்கந்தான் தேவை. யார் விளக்கினாலென்ன?” என்று கேட்டார் சித்தர். அவன் சினத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமல்.
“உங்கள் வாயாலேயே கேட்க வேண்டுமென்பது என் விருப்பம்” என்று வீம்புக்குச் சொன்னான் இளமாறன்.
சித்தரின் கூரிய கண்கள் இளமாறனைச் சில விநாடி ஆராய்ந்தன.
“அப்படியானால் சிறிது நேரம் விழித்திருங்கள், வந்து விடுகிறேன்” என்றார்.”
“இப்பொழுது எங்கே போகிறீர்கள் அவசரமாக?”
“வேலை இருக்கிறது.”
“அவசரமாகக் கவனிக்க வேண்டியது என்ன இருக்கிறது?”
“மருதனின் காயம்” என்று பதில் கூறிய சித்தர், மேற்கொண்டு ஏதும் பேசாமல் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டார்.
அவர் சென்றதும் இமயவல்லியைச் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு மரமஞ்சத்தில் உட்காரச் செய்த இளமாறன் தானும் அவள் எதிரே மற்றொரு மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டு அவளை நோக்கினான். மூடுதேரில் சித்தரைக் கண்டதும்
முதலில் தெரிந்த அதே பயம் அவள் முகத்தில் அப்பொழுதும் தெரிந்தது. அவளைத் தேற்ற முயன்ற இளமாறன், “இமயவல்லி! ஏனிந்தப் பயம் உனக்கு நானிருக்கும்போது?” என்று கேட்டான்.
இமயவல்லி சில விநாடிகள் கழித்தே பதில் சொன்னாள். அப்படிப் பதில் சொன்னபோதே அவள் குரலிலும் அச்சமிருந்தது. “சித்தர் வல்லவர்” என்றாள் அவள் இரண்டே சொற்களில்.
“எதில் வல்லவர்? வாட்போரில் வல்லவரா? விற்போரில் வல்லவரா? மற்போரில் வல்லவரா?” என்று வினவினான் சற்றுக் கோபத்துடன் இளமாறன்…
“மூன்றிலும் வல்லவர்!” என்றாள் இமயவல்லி சர்வ சாதாரணமாக.
“அதற்காகத்தான் பாண்டிய மன்னர் இவரிடம் பயப்படுகிறாரா?” என்று மீண்டும் சினம் தணியாமலே வினவினான் இளமாறன்.
“பாண்டிய மன்னர் யாருக்கும் அஞ்சுவது கிடையாது.” இந்தச் சொற்களைச் சினத்துடன் உதிர்த்தாள் இமயவல்லி.
“அப்படியானால் எதனால் கொடுக்கிறார் இந்தச் சித்தருக்கு இத்தனை அதிகாரத்தை?”
“மதிப்பினால்?”
“என்ன மதிப்பு?”
“ஆசிரியரிடம் சீடனுக்கு இருக்க வேண்டிய மதிப்பு!”
“இவர் பாண்டிய மன்னனுக்கு ஆசிரியரா?”
“குறுங்கோழியூர்க்கிழார் தாம்தான் ஆசிரியர் என்று சொன்னாரே!”
“அவரும் ஆசிரியர் தான்!”
“விந்தையாய் இருக்கிறது எனக்கு?” என்ற இளமாறன் சொற்களில் வியப்பிருந்தது.
இமயவல்லி தலையை நன்றாக நிமிர்ந்து கொண்டாள். “இதில் விந்தையென்ன இருக்கிறது? புலவர் பெருமான் ஒருவகை ஆசிரியர். இவர் ஒருவகை ஆசிரியர்” என்று இமயவல்லி அதுவரையிருந்த பயத்தை கைவிட்டுச் சற்று
தைரியமாகவே பேசினாள்.
“இரண்டு வகை ஆசிரியர்களா?” மீண்டும் வியப்பைக் காட்டினான்.
“ஆம்” என்ற இமயவல்லி, இருவரும் எத்தகைய ஆசிரியர்கள் என்பதை விளக்கினாள். அந்த விளக்கத்தைக் கேட்ட பின்புதான் மெள்ள மெள்ள சித்தரைப் பற்றிய மதிப்புக்கான உண்மைகள் தெரியலாயின இளமாறனுக்கு. இமயவல்லி தன்
மரமஞ்சத்திலிருந்து எழுந்து நின்று கொண்டு விளக்கினாள் விஷயத்தை. சேர நாட்டு வீரரே! பாண்டிய மன்னனுக்கு இரண்டு ஆசிரியர்கள் உண்டு. ஒருவர் சொல்லாசிரியர். இன்னொருவர் வில்லாசிரியர் இந்த விந்தைச் சித்தர். பாண்டிய
மன்னருக்குத் தமிழ் போதித்தார் குறுங்கோழியூர்க் கிழார். அவருக்கு வில்லையும் வாளையும் கையாளும் வகையையும் போர் முறைகளையும் கற்பித்தார் விந்தைச் சித்தர். தலையாலங்கானத்துச் செருவில் சிதைத்தாரே எழுவரைப்
பாண்டிய மன்னர், அதற்கு மூலகாரணம் இந்தச் சித்தர் தான். மன்னர் எழுவரைச் சந்திக்கத் தலையாலங்கானத்தைத் தேர்ந்தெடுத்ததே இந்தச் சித்தர் தான்” என்றாள் இமயவல்லி.
இளமாறன் பெரும் பிரமிப்புக்குள்ளானான். “சித்தர் அத்தனை அறிந்தவரா?” என்று வினவினான் இளமாறன்.
“ஆம்” என்றாள் இமயவல்லி.
“அப்படியானால் இவர் இருக்க வேண்டிய இடம் மதுரையல்லவா?”
“தலைநகருக்கு இவர் என்றாவது ஒரு நாள் தான் வருவார். மற்றபடி மடத்தைவிட்டு நகருவதில்லை.”
“அப்படியானால் பாண்டிய மன்னர்…”
“இங்கு வந்து தான் பயிற்சி பெறுகிறார்.”.
“பெறுகிறாரென்றால்?”
“இன்னும் பயிற்சி பெறுகிறார். பாண்டிய நாட்டுப் படைத்தளபதிகளின் மக்கள் கூட இவரிடம் பயிலுகிறார்கள்!”
“அப்படியானால் இந்த மடம் போர்ப் பயிற்சிக் கூடமா!”
“அதுவும் இருக்கிறது பின்னால்!”
“பின்னாலென்றால்?”
“காலையில் பார்த்தால் தெரியும் வீரரே! இந்த மடத்தில் கூரை வேய்ந்த கூடங்கள் மூன்று இருக்கின்றன. வீரக்கூடம், ஞானக்கூடம், கருணைக்கூடம் ஆகிய மூன்று உண்டு இங்கே!”
இளமாறன் வியப்பு மேலும் விரிந்தது. “என்ன, கருணைக்கூடமா? அது எங்கேயிருக்கிறது?” என்று வினவினான்.
“அது தான் முதற்கூடம். அங்கு தான் நாம் நுழைந்தோம்” என்றாள் இமயவல்லி.
“அந்த இடத்தில் ஏதேதோ ஒலிகள் கேட்டனவே?”
“வியாதியஸ்தர்கள் முனகும் ஒலிகளைக் கேட்டீர்கள்.”
“வியாதியஸ்தர்கள் கண்ணுக்குத் தென்படவில்லையே?”
“அவர்கள் இருக்குமிடங்கள் கறுப்புச் சீலைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் இருக்குமிடங்களில் இரவில் ஓரிருவரைத் தவிர யாரும் போகக் கூடாது.”
“ஓரிருவரென்றால் சிகிச்சை செய்பவர்களா?”
“இல்லை, சிகிச்சையைச் சித்தரே செய்கிறார். அவர் உதவியாளர் ஓரிருவர் இருப்பார்கள்.”
சித்தரின் அந்த வாழ்க்கையை நினைக்கப் பெரும் வியப்பாயிருந்தது இளமாறனுக்கு. ‘ஒருபுறம் விற் பயிற்சியும், வேல் பயிற்சியும், கத்திப் பயிற்சியும் அளிக்கிறார். இன்னொரு புறம் கத்திக் காயத்துக்கும் வேறு வியாதிக்கும் சிகிச்சை
செய்கிறார். இவர் எத்தகைய கொள்கையை உடையவர்?” என்று தன்னைத்தானே இருமுறை கேட்டுக் கொண்ட இளமாறன், தனது மஞ்சத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து விட்டான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு கேட்டான், “இவர்
பாண்டிய நாடா?” என்று.
“தெரியாது” என்றாள் இமயவல்லி.
“எங்கிருந்து வந்தவர்?” என்று வினவினான் இளமாறன்.
“அதுவும் தெரியாது” என்று கூறினாள் இமயவல்லி.
“உனக்குத்தான் தெரியாதா?”
“யாருக்குமே தெரியாது.”
இந்தப் பதில் அவனுக்கு மேலும் ஆச்சரியத்தை விளைவிக்கவே, “நானே கேட்கிறேன் அவரை, வரட்டும் அவர்” என்றான் இளமாறன்.
“வந்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்த சித்தர் சற்று எட்ட இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, “இன்னும் இமயவல்லி சொல்லவில்லையா சொல்லாசிரியனையும் வில்லாசிரியனையும் பற்றி?” என்று
கேட்டுப் புன்முறுவல் கொண்டார். அத்துடன், ‘என்னை என்ன கேட்க வேண்டும் வீரனே?’ என்றும் வினவினார்.
“உங்களைப் பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறேன்” என்றான் இளமாறன் குரலில் உறுதியுடன்.
பதிலுக்குச் சித்தரின் புன்முறுவல் விரிந்தது. “அது கிடக்கட்டும். அவளைப் பற்றிய விவரங்களை அறிந்தாயா இளமாறா?” என்று வினவினார் சித்தர் இமயவல்லியை நோக்கிக் கை நீட்டி.
“இல்லை” என்றான் இளமாறன்.
“நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டார் பாண்டிய மன்னனின் வில்லாசிரியர்.
அதுவரை வாளாவிருந்த இமயவல்லி உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரேயடியாகக் குறுகி உட்கார்ந்து அச்சம் துலங்கிய கண்களைப் பரிதாபத்துடன் சித்தர் மீது வீசி, “வேண்டாம் சித்தரே! வேண்டாம்” என்று கூறினாள்.
வில்லாசிரியர் பிடிவாதமாகச் சொன்னார். இளமாறன் வியப்பு உச்ச நிலைக்கு ஓடிவிட்டது.

Previous articleMoongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here