Home Historical Novel Moongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

67
0
Moongil Kottai Ch14 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 சித்தரின் மாயம்

Moongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனின் வில்லாசிரியரான அந்த விந்தைச் சித்தர், இமயவல்லி ‘வேண்டாம் வேண்டாம்’ என எத்தனையோ கதறியுங்கூட அவளைச் சிறிதும் லட்சியம் செய்யாமலே அவளைப்
பற்றிய விவரங்களைக் கூற முற்பட்டு, “இளமாறா! மாந்தரஞ் சேரல் இரும் பொறையை விடுவிக்க நீ எடுத்திருக்கும் இந்த முயற்சியில் நீ அறியாத விஷயங்கள் பல இருக்கின்றன, அவற்றை நீ அறிந்து கொண்டு இந்த முயற்சியில்
இறங்குவது நல்லது. முதன் முதலாக நீ அறியவேண்டியது இவள் யாரென்பது?” என்று சொன்னார்.
“யாரென்பது எனக்குத் தெரியும்’ என்றான் இளமாறன் பதிலுக்கு, இமயவல்லியை அந்தச் சித்தரின் முன்பாக விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தினால்.
சித்தர் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறுவல் அரும்பியது. “என்ன தெரியும் உனக்கு? இவள் கிழாரின் இல்லத்திலிருந்ததால் அவருடைய பணிமகள் என்று அறிந்திருப்பாய்” என்றார்.
இளமாறன் தன் ஆசனத்தை விட்டு எழுந்து சிறிதளவு தள்ளி நின்று கொண்டு சித்தரைச் சில விநாடிகள் நோக்கிவிட்டுச் சொன்னான், “முதலில் அப்படித் தான் நினைத்தேன்” என்று.
சித்தர் பொருள் விரியும் நோக்கமொன்றை அவன் மீது வீசினார். அந்த நோக்கில் முதலில் தெரிந்த இகழ்ச்சிப் புன்முறுவலும் நன்றாக விரிந்து நின்றது. “பிறகு என்ன நினைத்தாய் இளமாறா?” என்று வினவினார், அந்த புன்
முறுவலில் விரிந்த இகழ்ச்சி குரலிலும் ஒலிக்க.
“அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை புரிந்து கொண்டேன்” என்று இளமாறன் கூறினான் அழுத்தந்திருத்தமான குரலில்.
இதைக் கேட்ட சித்தர் முகத்தில்கூட உணர்ச்சிகள் மாறின. அதுவரை அதில் விரவிக்கிடந்த இகழ்ச்சிக் குறி மறைந்து அவன் ஓரளவு இமயவல்லியைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட சித்தர் குரலை சர்வ
சாதாரணமாக்கிக் கொண்டு, “அதை எப்படிப் புரிந்து கொண்டாய்?” என்று வினவினார். அதைக் கேட்ட அவர் குரலில் வியப்பு மட்டுமின்றிக் கவலையும் லேசாகத் தொனித்ததைக் கண்டான் இளமாறன். வியப்புக்குக் காரணம்
அவனுக்குப் புரிந்தது.
கவலைக்குக் காரணம் மட்டும் அவனுக்குப் புரியாததால் அலட்சியமாகவே பதில் சொன்னான் சேரநாட்டு வீரன், “எப்படிப் புரிந்து கொண்டாலென்ன? புரிந்து கொண்டேன் என்பது தெரிகிறதல்லவா?” என்று.
விந்தைச் சித்தர் சில விநாடி வாளாவிருந்தார். மீண்டும் அவனை நோக்கி, “இளமாறா! எப்படிப் புரிந்தது என்பதைக் கூறமாட்டாயா?” என்று கவலை குரலில் அலைபாயக் கேட்டார்.
“சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று பிடிவாதமாகக் கூறினான் இளமாறன்.
“அவசியமிருக்கிறது” என்று வலியுறுத்தினார் சித்தர்.
“என்ன அவசியம்?” இளமாறன் பொறுமையை இழந்த குரலில் மெள்ள சூட்டைக் காட்டினான்.
விந்தைச் சித்தர் சில விநாடி தமது கூரிய கண்களை இளமாறன் முகத்திலிருந்து நீக்கி நிலத்தில் தாழ்த்திச் சில விநாடி தீவிர ஆலோசனையில் இறங்கினார். பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவர்போல் கூறினார். “இளமாறா! உன் நன்மையை
முன்னிட்டுத் தான் இத்தனையும் நான் விசாரிக்கிறேன்; நீ பயங்கரமான அலுவலை நாடிச் செல்கிறாய். சேர நாட்டு யானைப்படை புக முடியாத மூங்கில் கோட்டையில் நீ நுழையச் செல்கிறாய், யானைப் படைக்கு நேர்ந்த அழிவு உனக்கு
ஏற்படாதிருக்க வேண்டுமானால் நீ யாருடன் செல்கிறாய், எந்த வசதிகளை எதிர்பார்த்துச் செல்கிறாய் என்ற விவரங்களைப் பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் பூரணமாக உனக்கு உணர்த்த வேண்டுமானால் நீ மதுரை
மாநகரில் கால் வைத்தது முதல் நடந்த அனைத்தும் எனக்குத் தெரிய வேண்டும்.”
அவர் சொன்ன தெல்லாம் இளமாறன் கோபத்தை மேலும் தூண்டுவதற்குப் பதில் கோபத்தை அகற்றி வியப்பையே தூண்டியது. என் விஷயத்தில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” என்று கேட்டான் இளமாறன்.
விந்தைச் சித்தரின் விழிகளில் திடீரென ஒரு புத்தொளி தோன்றி மறைந்தது. “அதைப்பற்றி சொல்ல முடியாத நிலையிலிருக்கிறேன்” என்றார் சித்தர்.
“ஏன்!’ என்று கேட்டான் இளமாறன், அவர் குரல் ஒலித்த மாதிரியைக் கண்டு.
“என் தற்சமய நிலை அப்படி.”
“சித்தருக்கும் இந்த மாதிரி பலப்பல நிலைகள் உண்டா?”
“உண்டு.”
“நீங்கள் முற்றும் துறந்த முனிவர்தானே?”
“இல்லை, பலவற்றைத் துறக்காதவன்.”
“துறக்காதவரா?”
“ஆமாம் இளமாறா!” என்ற சித்தர் நீண்ட சோகப் பெருமூச்சு விட்டார். “துறவியாய் இருப்பவனுக்கு முதலில் நாட்டில் என்ன வேலை? நாட்டிலிருந்தாலும் இந்தப் பெரிய கட்டடங்கள் எதற்கு? பணி மக்கள் எதற்கு? இத்தனை நேரம்
இமயவல்லி சொல்லியிருப்பாள் உனக்கு, நான் அரசனுக்கும் மற்றோருக்கும் ஆயுதப் பயிற்சியளிக்கிறேன் என்பதை. அது துறவியின் வேலையா? குடும்பத்திலிருப்பவர்களைவிட அதிக ஆட்கள் இந்த மடத்தின்
எல்லைக்குள்ளிருக்கிறார்கள். இது துறவறமா? ஒருவகையில் துறவறம் பல வகையில் இல்லறத்தைவிட மோசமான அறம். பல தொல்லைகள், பல மனிதர்களைப் பற்றிய கவலைகள், இதெல்லாம் எதற்குத் துறவிக்கு?” என்று கேட்டார் சித்தர்.
“இவற்றை ஏன் உதற முடியவில்லை?”
“மனம் இடம் கொடுக்கவில்லை. உலகத்திலிருக்கும் பிணிகள், இயற்கையான பிணிகள் மட்டுமல்ல; மனிதன் மனிதனைத் தாக்கி விளைவிக்கும் காயங்கள் என் மனதைப் புண்ணாக்குகின்றன இளமாறா! அவற்றுக்குச் சிகிச்சை
செய்கிறேன்.”
“அப்படியானால் அந்தக் காயத்தை விளைவிப்ப தற்கு வழியும் ஏன் சொல்லிக் கொடுக்கிறீர்கள்? ஆயுதப் பயிற்சிக்கூடத்தை எதற்காக ஏற்படுத்தியிருக்கிறீர்கள்?”
“கற்ற வித்தையைச் சொல்லித்தர மறுப்பது அதர்மம் என்று சாஸ்திரங்கள் கூறும் என் வித்தையை முதலில் பாண்டிய மன்னன் விரும்பினான், சொல்லிக் கொடுத்தேன். பிறகு மற்றவர்களும் விரும்பினார்கள். கூடமமைத்தேன்” என்றார்
சித்தர்.
அந்தச் சித்தரின் விந்தையான கருத்துக்களை எண்ணிப் பெரும் வியப்பு அடைந்தான் இளமாறன். ஆனால் அவர் சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகப் புலப்படவில்லை அவனுக்கு. ஆகவேதான் ஏதும் சொல்லாமல் அவரையே
பேசவிட்டான்.
சித்தரும் அவன் மனப்போக்கை அறிந்து கொண்டு தங்கு தடங்கல் இல்லாமல் பேசினார் : “இளமாறா! நான் கூறுவதெல்லாம் உனக்கு விளங்குவது கஷ்டம். நீ சாதாரண உலகில் சாதாரண முறையில் வாழ்பவன். நான் வாழும் முறை வேறு
என்னைப் பற்றி எதுவும் அறிய முயலுவதில் பயனில்லை. பல விஷயங்களை நான் சொல்லவும் முடியாது. உதாரணமாக உன் நலனில் எனக்கு ஏன் இத்தனை அக்கறை என்று கேட்டாய். அதற்கும் நான் பதில் கூற முடியாது. இறைவனருள்
இருந்தால் ஒரு காலத்தில் நீ புரிந்து கொள்வாய். புரியாத விஷயங்களைப் பற்றிக் கவலைப் படாதே. இதுவரை பல விஷயங்களைப் பற்றி நீ கவலைப்படவில்லை…”
சித்தர் மேலும் பேசியிருப்பார். ஆனால் இளமாறன் அதை இடையில் வெட்டினான். “என்ன! பல விஷயங்களைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லையா?” என்று கேட்டான் இடைபுகுந்து.
சித்தர் தமது ஆராய்ச்சி விழிகளை அவன்மீது நன்றாக நாட்டினார். “ஆம் இளமாறா! பல விஷயங்கள் உனக்குப் புரியவில்லை. அதைப்பற்றி நீ கவலைப் படவுமில்லை” என்றார்.
“என்ன அவை?” என்று கேட்டான் இளமாறன்.
“உன்னை யார் பாண்டிய நாட்டுக்கு வர வழைத்தது?” என்று கேட்டார்.
“புலவர் பெருமான் குறுங்கோழியூர்க்கிழார்.”
“புரிந்து கொண்டு தான் வந்தாயா அதை?”
“இல்லை, முதலில் தெரியாது. ஒரு வீரன் ஓலை கொண்டு வந்தான். அதில் வரும்படி பணித்திருந்தது.”
“யார் பணித்தது?”
“அரசர்.”
“எப்படித் தெரியும் உனக்கு?”
“ஓலையில் அரசர் முத்திரையிருந்தது.”
“அதை ஏன் புலவர் பொறித்திருக்கக்கூடாது?”
“பொறித்திருக்கலாம். அரச முத்திரைக்குப் பணிய வேண்டியது என் கடமை.”
“அது சரி, ஓலையைக் கொண்டு வந்தவன் யார்?”
“யாரோ ஒரு வீரன்.”
“அவன் ஊர், பெயர்?”
“தெரியாது.”
சித்தர் திடீரெனக் கடுமையாகச் சிரித்தார்! “ஓலை கொண்டு வந்தவன் ஊர் பெயர் யாது, அவனை அனுப்பியவர் யாரெனத் தெரியாது. அலுவல் யாதெனத் தெரியாது. அவை யாதும் தெரியாது. என்னைப்பற்றி மட்டும் தெரிந்து கொள்ள
ஆசைப்படுகிறாய்?” என்று கடுமையாகவே சொன்ன சித்தர், “இளமாறா! வேறொரு முக்கிய விஷயத்தையாவது யோசித்தாயா?” என்று வினவினார்.
அவர் குரலின் கடுமையால் சிறிது சங்கடப்பட்ட இளமாறன் கேட்டான் : “என்ன சித்தரே?” என்று.
“நீ சேர நாட்டில் பெரிய படைத்தலைவனா?” என்று கேள்வியொன்றை வீசினார் சித்தர்.
இளமாறன் சிந்தையில் மெள்ள மெள்ளத் தெளிவு உதயமாயிற்று. “இல்லை” என்றான் அதன் விளைவாக.
“ஆயிரக்கணக்கான வீரர்களில் நீ ஒருவன் தானே?” என்று கேட்டார் சித்தர்.
“ஆம்.”
“அப்படியானால் உன்னை ஏன் அழைத்தார் புலவர் இப்பெரும் பணிக்கு, படைத்தலைவர்கள் பலர் இருக்கும்போது?”
இந்தக் சேள்வியால் நிலைகுலைந்து போனான் இளமாறன். ஆகவே வியப்பு மண்டிய கண்களை இமயவல்லி மீது திருப்பினான். இமயவல்லி தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். மீண்டும் சித்தரை நோக்கினான் இளமாறன்!
விளக்கொளி நன்றாயிருந்தும் மீண்டும் அவர் முகம் கல்லாகிவிட்டது. அவர் திடீரெனத் தமது இருப்பிடத்திலிருந்து எழுந்து கொண்டார். பிறகு தமது தீட்சண்யமான கண்களை இளமாறன் மீது நிலை நிறுத்தி, ‘இளமாறா! இப்பொழுது
தெரிந்திருக்க வேண்டும் உனக்கு, பல விஷயங்கள் உனக்குப் புரியவில்லை என்பது. மதுரையில் நடந்த விஷயங்களைப் பற்றி நீ சொல்ல மறுத்தாலும் பாதகமில்லை. நாளை நானறிந்து விடுவேன். ஆனால் ஒன்று நினைவில் வைத்துக்
கொள். நீ இறங்கியிருக்கும் பணியில் அசைவது நீ அல்ல; உன்னைப் பெரும் சக்திகள் அசைக்கின்றன. உனக்குத் தெரியாத பல விஷயங்கள் இடையில் நடக்கும். உனக்கு ஏற்படக்கூடிய இடர்கள் அனந்தம். அவை அனைத்திலிருந்தும்
உன்னை நான் காக்க முடியாது. ஆனால் சில விஷயங்களில் நீ கண்ணைத் திறந்து கொண்டு இந்தப் பணியில் இறங்குவது நல்லது. உதாரணமாக இதோ இருக்கிறாளே இமயவல்லி; இவள் அரசகுல மகள் தான். ஆனால் எப்படி. அரசகுல.
மகள் என்பதையும் அறிந்து கொள்…” என்று சொல்லிக் கொண்டே போனவரை, “சித்தரே!” என்ற இமயவல்லியின் தீனமான குரல் தடுத்தது.
சித்தர் ஒரு விநாடிதான் இமயவல்லியை நோக்கினார். பிறகு நன்றாக நிமிர்ந்து நின்று, “இளமாறா! இமயவல்லி அரசகுலத்தின் சாதாரண மகளல்லள். பாண்டியன் நெடுஞ்செழியனின் சகோதரி” என்றார் உணர்ச்சி மிகுந்த குரலில்.
இளமாறன் சிலையென நின்றான். அவன் எதை எதிர்பார்த்திருந்தாலும் இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் பல விஷயங்கள் அவனுக்கு அத்தச் சமயத்தில் தெளிவுபட்டன. இமயவல்லியிடம் ராஜ முத்திரை மோதிரம்
இருத்ததற்கும், அதைப் பார்த்ததும் பாண்டியன் நெடுஞ்செழியனின் கண்களில் தெரிந்த ஒரு புத்தொளிக்கும், அந்தச் சந்தர்ப்பங்களில் புரியாத காரணம் அப்பொழுது தான் புரிந்தது அவனுக்கு. இமயவல்லி பாண்டிய மன்னனின்
சகோதரி என்றறிந்ததும் அவளிடம் தான் நடந்து கொண்ட முறையைப் பற்றி பெரிதும் கலங்கினான் இளமாறன். சாதாரண வீரனான தான் எங்கே? மன்னன் சகோதரியான அவளெங்கே?’ என்று நினைத்த அவன் இருவருக்கும் எந்தவிதத்
தொடர்பும் சாத்தியமில்லை என்பதைச் சந்தேகமற அறிந்தான். ஆகவே சோகங்கலந்த பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து வந்தது. அதைக் கவனித்த சித்தர் திருப்தியுடன் தலையசைத்துவிட்டுச் சொன்னார் : “ஆம் இளமாறா! உனக்கு
எட்டாப் பழம் தான் அது. இருப்பினும் அதுவல்ல முக்கியம். நீ அவள் யாரென்பதைப் புரிந்து கொண்டு இந்த அலுவலில் இறங்கவேண்டும் என்பதற்காகச் சொன்னேன். உண்மையில் எனக்கு இதில் சம்பந்தமேதுமில்லை. ரதத்தில்
சந்தித்தபோதே சொன்னேன், எனக்கும் அரசிய லுக்கும் சம்பந்தமில்லை என்பதை. ஆனால் உனக்கு விஷயத்தைத் தெரிவிக்க ஆவலுள்ளவனாயிருந்தேன், தெரிவித்து விட்டேன். அதற்காகவே ரதத்தை மடக்கினேன்” என்று.
இளமாறன் கண்களில் சிந்தனை படர்ந்தது. “இந்த ரதம் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினான் வியப்புடன்.
“தெரியும்.”
“எப்படித் தெரியும்? இன்று மாலைதானே நான் மதுரைக்குள் நுழைந்தேன்.”
சித்தர் புன்முறுவல் காட்டினார். “பாண்டியன் நெடுஞ்செழியனை என்னவென்று நினைத்தாய் இளைஞனே? மதுரைக்குள் நீ வந்ததும் அவனுக்குத் தெரியும் அதைப்பற்றி, உடனே எனக்குத் தகவலும் வந்தது. இந்த மடத்தில்
செய்திகொண்டு வந்த ஒற்றன் இன்னுமிருக்கிறான்’ என்று கூறினார் சித்தர்.
“ரதம் இப்படித்தான் வருமென்று எப்படித் தெரியும்?” என்று வினவினான் இளமாறன்.
“இது கிளை வழி. திருட்டுத்தனமாகச் செல்வதற்கு இந்த வழிதான் சிறந்தது. தவிர முதல் நால்வர் சென்ற வழியும் இது தான். அந்தச் சமயங்களிலும் ரதம் வந்தது. ஆனால் உயிர் இழக்கப்போன வீரனைத் தவிர இமயவல்லிக்குத் துணை
வீரரும் வந்தார்கள். இந்தச் சமயம் இவள் உன்னுடன் தனித்து வந்திருக்கிறாள். தவிர ரதத்தில்…” என்று சொல்லப்போன சித்தர் வார்த்தையை அடக்கினார்.
“சொல்லுங்கள் சித்தரே!” இளமாறன் குரல் கடுமையுடன் ஒலித்தது.
சித்தர் சிறிதும் சளைக்காமல் பதில் சொன்னார் : “உங்கள் இருவர் நிலையையும் கண்டேன் இளமாறா! இவள் உன்னை விரும்புகிறாளா அல்லவா என்பது எனக்குத் தெரியாது. முதன் முதல் ஓர் ஆடவனுடன் இவள் தனித்து வருவது
இம்முறைதான் இவள் சாதாரணமாக நிலைகுலையாதவள். ஆகவே ஒருவேளை உன்னிடம் இவளுக்கு ஆழ்ந்த அன்பிருக்கலாம். இருந்தால் நீ பிழைக்கலாம் ஒருவேளை. இல்லையேல் அழிந்துவிடுவாய் உன் உயிர் இவள் கையிலிருக்கிறது.
இவள் சாதாரணப் பெண்ணல்ல…” என்று கூறிய சித்தர், “அதைப்பற்றி இப்பொழுது நாம் பேச வேண்டாம். ஒன்று மட்டும் சொல்வேன் உனக்கு. நீ புலவரை நம்புவதைவிட என்னை நம்பலாம். அதை நாளையே புரிந்து கொள்வாய்.
இப்பொழுது படுத்துறங்குங்கள்” என்று சொல்லிவிட்டுச் சரேலென எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
இளமாறன் பெருவியப்பில் ஆழ்ந்திருந்தான். இமயவல்லியிருந்த மாதிரியிலிருந்து சித்தர் சொன்னது அத்தனையும் உண்மையே என்பது விளங்கிற்று அவனுக்கு. அடுத்தபடி ஏதோ பேச்சைத் துவங்க முற்பட்டான். இமயவல்லி அதற்கு
இணங்கவில்லை. எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாகிவிட்டாள். ஆகையால் இளமாறன் சற்று எட்ட இருந்த ஆசனத்தில் சென்று படுத்துக் கொண்டான்.
இரவு வெகு சீக்கிரம் ஓடிப் பொழுது புலர்ந்தது. ஆனால் அவர்கள் இருந்த விடுதியின் வெளிக் கதவு அடைத்தே இருந்தது. சூரிய வெளிச்சம் சாளரத்துக்குள் அடித்த பிறகு தான் இரண்டு பணியாளர்கள் வந்து கதவைத் திறந்தார்கள்.
அவர்களில் ஒருவன் சொன்னான் : “சித்தர் அவசர வேலையாக வெளியே போய் இருக்கிறார். இரவில் சந்திப்பார் உங்களை” என்று.
“நாங்கள் எப்பொழுது புறப்படலாம்” என்று கேட்டான் இளமாறன் அந்தப் பணிமகனை.
“எங்களுக்குத் தெரியாது” என்று பதில் வந்தது.
அதே பதில் தான் அன்று பூராவும் கிடைத்தது இளமாறனுக்கு மற்றவர்களிடமிருந்தும். இமயவல்லி அன்று பூராவும் களையிழந்த மதிபோலிருந்தாள். இளமாறன் கேள்விகளுக்கு ஏதோ அரையும் குறையுமாகப் பதில் சொன்னாள்.
மற்றபடி தீவிர சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடந்தாள். அவ்வப்பொழுது அவளுக்கு வேண்டிய பல சௌகரியங்களையும் பணி மக்கள் செய்து கொடுத்தார்கள். ஆனால் அந்த விடுதியைவிட்டு வெளியே போக மட்டும் அனுமதி
கிடைக்கவில்லை. இருமுறை பணிமக்களை நோக்கிச் சீறினான் இளமாறன். அதை இமயவல்லியே தடுத்தாள். “அவர்களைக் கோபிக்காதீர்கள் நாம் இப்பொழுது சித்தர் கையிலிருக்கிறோம், அவர் இஷ்டப்பட்டால் தான் இங்கிருந்து
போகமுடியும்” என்று கூறினாள் அவள்.
இளமாறன் வியப்பும் கோபமும் கலந்த உணர்ச்சிகளுடன் அன்றையப் பொழுதை சித்தர் மடத்தின் அந்த விடுதியில் கழித்தான். அன்று பூராவும் சித்தர் தென்படவில்லை. அன்று இரவு ஏறி சிறிது நேரத்திற்குப்பின் தான் உள்ளே
நுழைந்தார். அவர் கைகளில் இரண்டு பெரும் கிண்ணங்களில் பால் இருந்தது. அவர் எதுவும் பேசாமல், “இன்று பூராவும் இருவரும் சரியாக உண வருந்தவில்லை என்று கேள்விப்பட்டேன். இதை அருந்துங்கள்” என்று இருவரிடமும்
நீட்டினார் கிண்ணங்களை.
“அவசியமில்லை” என்றான் இளமாறன்.
“உம் அருந்துங்கள்” அதிகாரத்துடன் ஒலித்தது சித்தர் குரல். அவர் பார்வையிலும் அந்த அதிகாரம் பூர்ணமாயிருந்தது. அவருடைய ஆராய்ச்சிக் கண்களால் கவரப்பட்ட அந்த இருவரும் பதிலேதும் பேசாமல் பாலை அருந்தினார்கள்.
“படுத்து உறங்குங்கள்” என்று அதே அதிகாரக் குரலில் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார் சித்தர்.
இளமாறன் தூர இருந்த மஞ்சத்தில் சென்றமர்ந்தான். இமயவல்லி அசதியால் கண்களை மூடி மஞ்சத்தில் சாய்ந்து உறங்கத் தொடங்கிவிட்டதைக் கவனித்தான். தானும் மெள்ளக் கண்களை மூடிக்கொண்டான். இன்பமான கனவுகள் பல
எழுந்தன. பிறகு அவையும் மறைந்தன.
மறுநாள் காலை கண் விழித்தபோது திடீரெனப் பிரமை பிடித்து அலறி எழுந்து உட்கார்ந்தான் இளமாறன். அவனுடன் வியப்புக் கூச்சலிட்டு எழுந்தாள் இமயவல்லியும். அவர்கள் கண்களுக்கெதிரே மிக ரமணீயமாக ஆனால்
பயங்கரமாய் எழுந்தது மூங்கில் கோட்டை. “இதென்ன சித்தரின் மாயமா?” என்று வாயைப் பிளந்தான் இளமாறன்.

Previous articleMoongil Kottai Ch13 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here