Home Historical Novel Moongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

63
0
Moongil Kottai Ch16 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 கடைசி முயற்சி

Moongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

பரஸ்பர அணைப்பில் பரவசப்பட்டு உணர்ச்சிகளின் ஓட்டத்துக்கு இடங்கொடுத்து விட்டிருந்த அந்த இருவரும் பக்கத்துக் கொடிகளில் ஏற்பட்ட சலசலப்பைக் கேட்டதும் பதறிவிலகி எழுந்திருந்ததன்றி, அவ்விருவரில் இளமாறன்
வாளை உருவிக்கொண்டு கொடிகளை விலக்கி வெளிப்புறத்தை நோக்கி வெகு வேகமாகச் சென்றான். கொடிமறைவை விட்டு அவன் வெளியே வந்ததும் அந்தக் கொடியின் பக்கப் பகுதிகளை நாலைந்து வீரர்கள் விலக்கி விலக்கிப்
பார்ப்பதைக் கண்டதும் சினத்தின் வசப்பட்டு, “யார் நீங்கள்? என்ன செய்கிறீர்கள் இங்கே?” பன்று அதிகாரத்துடன் விசாரித்தான். இதைக் கேட்டதும் கொடிகளின் மறைவைச் சோதனை செய்து கொண்டிருந்த வீரர்கள். சோதனையை
விட்டுச் சரேலெனத் திரும்பி வாளும் கையுமாக நின்ற இளமாறனை ஏறிட்டுச் சில விநாடி நோக்கினார்கள். அவர்கள் பார்வையில் கோபம் இல்லாததையும் வியப்பே இருந்ததையும் கவனித்த இளமாறன், அந்த வியப்புக்குக் காரணத்தை
அறியாததால், “என்ன அப்படி ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்கள்? புதிதாக இப்பொழுது தான் மனிதப் பிறவியைப் பார்க்கிறீர்களா?” என்று மீண்டும் வினவினான் அதட்டலாக.
அந்த அதட்டல் அவர்களுக்கு அதிக வியப்பை அளித்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு விநாடி பதிலேதும் சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பிறகு அவர்களில் தலைவனாயிருந்தவன் சொன்னான்: “ இங்கு
மனிதப் பிறவிகள் பல வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் உயிருடன் இங்கு நின்று வார்த்தையாடும் மனிதப் பிறவியை இன்று தான் புதிதாகப் பார்க்கிறோம்” என்று.
வீரர்களின் தலைவன் பேச்சு அதிக விசித்திரமாயிருந்தது இளமாறனுக்கு. “இதற்கு முன்பு பிணங்களைத்தான் பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினான் கோபக் குரலை ஏளனக் குரலாக மாற்றிக் கொண்ட இளமாறன்.
“ஆம்.” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் வீரர் தலைவன்.
“என்ன ஆம்?” எரிச்சலுடன் எழுந்தது இளமாறன் கேள்வி.
“இதுவரையில் இந்த இடத்திலே பிணங்களைத் தான் பொறுக்கியெடுத்துச் சென்றிருக்கிறோம்.”
“பிணங்களையா! பன்மையிலிருக்கிறதே விளக்கம்.”
“ஆம் பிணங்களைத்தான். இந்த இடத்துக்கு வந்த ஒவ்வொருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் நூறு பிணங்களை நாங்களே தூக்கிச் சென்று புதைத்திருக்கிறோம்.”
“இங்கு வருபவர்கள் ஏன் இறக்கிறார்கள்?” என்று வினவினான் இளமாறன்.
வீரர் தலைவன் குழப்பம் நிறைந்த பார்வையொன்றை அவன் மீது வீசினான். பிறகு கேட்டான், “நீங்கள் பாண்டிய நாட்டுக்குப் புதிதோ?” என்று.
“ஆம், ஏன் கேட்கிறீர்கள்?” என்று வினவினான் இளமாறன்.
“இந்த இடம் மூங்கில் கோட்டைக்கு நேர் எதிரில் இருக்கிறது. இங்கு வரும் யாரையும் பார்த்த மாத்திரத்தில் வெட்டிப் போடும்படி பாண்டிய மன்னன் உத்தரவிருக்கிறது. சுமார் நூறு ஒற்றர்கள் சேர நாட்டிலிருந்து இங்கு வேவு பார்க்க
வந்து மாண்டிருக்கிறார்கள். நீங்கள் பிழைத்திருப்பது தான் விசித்திரமாயிருக்கிறது” என்று பதில் கூறினான் வீரர் தலைவர்.
நிலைமையை நன்கு புரிந்து கொண்டான் இளமாறன், மூங்கில் கோட்டையில் மட்டுமின்றி அதன் எதிரிலிருக்கிற காட்டிலும் பாண்டிய நாட்டுக் காவலர் நடமாட்டம் பலமாக இருக்கிறதென்பதையும். மூங்கில் கோட்டைக்கு அருகே
வரத் துணிந்தவர்கள் யாரும் உடனடியாக அழிக்கப் படுகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்ட இளமாறன் அந்த வீரர்கள் யாரென்பதை அறிய விரும்பி, “நீங்கள் யார்? கொடிகளின் மறைவில் என்ன தேடுகிறீர்கள்!” என்று
வினவினான்.
“நாங்கள் யாரென்பதைச் சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள்.”
“ஏன், இப்பொழுது என்ன?”
“எப்படியும் நீங்கள் எங்களுடன் வந்துதான் ஆக வேண்டும்” என்றான் வீரர் தலைவன்.
“உங்களுடன் வரவேண்டும் என்று கட்டாயம் உண்டா?” சற்றுக் கோபத்துடன் கேட்டான் இளமாறன்.
பதிலுக்கு வீரர் தலைவன் சகாக்களைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். பிறகு அதே புன்முறுவல் இதழ்களில் தவழ இளமாறனை நோக்கி,”அப்படியொன்றும் கட்டாயமில்லை. தங்களிஷ்டம்தான்” என்றான்.
அவன் புன்முறுவலும் பேச்சும் எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியதால், “என்ன என் இஷ்டம்?” என்று வினவினான், இளமாறன் விழிகள் சினத்தால் சீற.
“எங்களுடன் உயிருடன் நடந்து வருவதா அல்லது நாளை நாங்கள் வந்து உங்களைப் பிணமாகத் தூக்கிச் செல்வதா என்பது உங்களிஷ்டம்” என்று நகைச்சுவையைக் காட்டினான் வீரர் தலைவன்.
அந்த வீரர்களின் போக்கும் பேச்சும் விசித்திரமாயிருந்தது இளமாறனுக்கு. வாளை உருவி நின்ற அவர்கள் அவனைத் தாக்க முன்வரவில்லை. யாரோ வழிப் போக்கனிடம் பேசுவதுபோல் பேசினார்கள். அவர்களைத் தொடர்வதற்கு
இளமாறன் இணங்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றியதால் வீரர் தலைவன் மற்றவர்களை நோக்கி, “சரி சரி, வாருங்கள். நாம் அவர்களைத் தேடுவோம் நேரமாகிறது” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் கொடிவீடுகளை
விலக்கிச் சென்றான். அப்படிச் சென்றவனை “நில்” என்ற இளமாறனின் அதிகாரக் குரல் தடுத்தது.
வீரர் தலைவன் திரும்பிக் கேட்டான், “ஏன்? இன்னும் ஏதாவது அறிய விரும்புகிறீர்களா?” என்று.
“ஆம். நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்பது தெரிய வேண்டும்.”
“உங்களுக்கு என்ன அவசியமோ அது?”
“உங்களுக்கு ஒருவேளை நான் உதவலாம்.”
“முடியாது.”
“ஏன் முடியாது?”
இதைக் கேட்ட வீரர் தலைவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான் : “அப்படியானால் சொல்லுங்கள். இங்கு யாராவது பெண்ணைப் பார்த்தீர்களா?” என்று.
இளமாறன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “பார்த்தேன்” என்றான் அந்த முறுவலுடன்.
“தனியாகவா?”
“இல்லை.”
“ஓர் ஆண்பிள்ளையும்கூட இருந்தாரா?”
“இருந்தார்.”
“நல்லவேளை. எங்கே அவர்கள்?”
“ஆண் மகன் உங்கள் கண்ணுக்கெதிரே இருக்கிறார்.”
“பெண்?”
“இதோ” என்ற சொல் கொடிகளுக்கிடையே இருந்து வெளி வந்தது. கொடிகளை விலக்கிக்கொண்டு வந்த இமயவல்லியும் அந்த வீரர்களை வியப்புடன் நோக்கினாள்.
“யார் நீங்கள்?” என்று வினவினாள்.
“வனவாசிகள்” என்று பதில் வந்தது வீரர் தலைவனிடமிருந்து.
“சரி வழிகாட்டிச் செல்லுங்கள்” என்ற இமயவல்லி அவர்களைத் தொடர முற்பட்டதன்றி, “வாருங்கள். இவர்கள் நமது நண்பர்கள்” என்றாள் இளமாறனையும் நோக்கி.
“நண்பர்கள் என்று எப்படித் தெரியும் இமயவல்லி?” என்று வினவினான் இளமாறன்.
“அவர் பதில் சொன்னதைக் கவனிக்கவில்லையா நீங்கள்?”
“கவனித்தேன். வனவாசிகள் என்று பதில் சொன்னார்.”
“அந்தப் பதில் போதும் எனக்கு” என்ற இமய வல்லி மறுவார்த்தை பேசாமல் வீரர்களைத் தொடர்ந்து சென்றாள். இளமாறனுக்கு எல்லாம் விசித்திரமாயிருந்தது. வனவாசிகள்’ என்ற சொல்லில் என்ன பிரமாதப் பொருளைக்
கண்டுவிட்டாள் இமயவல்லி என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் பலமுறை. ஓர் ஆணையும் பெண்ணையும் அவர்கள் தேடியதாக சொன்னதும் தங்களைத் தானிருக்க வேண்டுமென்று அவன் ஊகித்துக்கொண்டான். ஆனால்
ஓர் ஆணையும் பெண்ணையும் சேர்த்து தேட வேண்டிய பிரமேயம் என்னவென்று புரியவில்லை அவனுக்கு. அதுவும் தாங்கள் காலையில் படுத்துக் கிடந்த முகப்புக்கு அருகிலுள்ள சுனையருகில் தேட வேண்டிய அவசியம்
விளங்கவில்லை அவனுக்கு. தாங்கள் வந்தது தங்களுக்கே தெரியாதிருக்கக் காட்டிலிருக்கும் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று சிந்தித்துப் பார்த்தான் இளமாறன். தங்களை அத்தனை அக்கறையுடன் தேடும் இவர்கள் புலவரின்
சதிப்படையா அல்லது சித்தரைச் சேர்ந்தவர்களா என்று யோசனை செய்து பார்த்தும் ஏதும் புரியாமல் மிகுந்த குழப்பத்துடன் வீரர்களைப் பின் தொடர்ந்து இமயவல்லியின் பக்கலில் மௌனமாகச் சென்றான்.
வீரர்கள் அந்த மலை நாட்டுக்குள் நீண்ட தூரம் சென்றார்கள். காடு வரவர அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. சில இடங்களில் காட்டுப் பாதை மிகக் குறுகலாயிருந்தபடியால் ஒருவர் பின் ஒருவராகவும் அவர்கள் செல்ல நேர்ந்தது. அந்த
வழியில் மிகவும் பழக்கப்பட்டிருந்த அந்த வீரர்கள் சர்வ சாதாரணமாக முட்களிலிருந்தும் புதர்களிலிருந்தும் விலகி நடந்தார்கள். இப்படி இரண்டு நாழிகைகள் பயணம் செய்தபின் ஒரு பெரும் மரக் கூட்டத்திடையே வந்த வீரர்களில்
தலைவனானவன் வாயிலிருந்து ஏதோ விபரீத சத்தமொன்றை மெல்லக் கிளப்பினான். அடுத்த விநாடி காட்டின் அந்த பகுதி திடீரென உயிர் பெற்றுத் துடித்தது. புதர்களின் மறைவுகளிலிருந்து சுமார் நாற்பது ஐம்பது வீரர்கள் வெளி
வந்தார்கள். அந்தக் கூட்டத்திலொருவனை நோக்கி வீரர் தலைவன், “இதோ இவர்களைப் படைத் தலைவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.
அந்த வீரன் தலைவணங்கி வழிகாட்ட இளமாறனும் இமயவல்லியும் அவனைத் தொடர்ந்து சென்றனர். மீண்டும் ஒரு நாழிகைப் பயணம் காட்டினூடே நடந்தது. கடைசியாகக் காட்டின் மிக அடர்த்தியான ஒரு சோலைக்குத் தாங்கள் வந்து
சேர்ந்துவிட்டதையும் அந்த இடத்தில் பல வீரர்களும் நடுவில் ஒரு பர்ணசாலையும் இருந்ததைக் கண்ட இளமாறன், பர்ணசாலையின் அழகைக் கண்டு பிரமித்தான். வீரன் வழிவிட்டு நிற்கப் பர்ணசாலைக்குள் நுழைந்த இளமாறன் அந்த
பர்ணசாலையின் உட்புறம் எழுந்த தோற்றத்தைக் கண்டு பிரமித்தான். அந்தப் பர்ண சாலை பெரும் போர்ப் பாசறைப்போல் காட்சியளித்தது. சுற்றிலும் போர்க் கலங்கள் சார்த்தப்பட்டிருந்தன. இடையேயுள்ள மஞ்சத்தில் புலவர்
குறுங்கோழி யூர்க்கிழார் முகத்தில் கவலை அலைபாய உட்கார்ந்திருந்தார். அவரெதிரே சேர நாட்டுப் பிரதான படைத் தலைவரான வீரமார்த்தாண்ட தேவர் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தார். அவர் முகத்திலும் கவலைக் குறி
பெரிதாகப் படர்ந்தது.
உள்ளே நுழைந்த இமயவல்லியும் இளமாறனையும் கண்ட புலவர் முகத்தில் ஆசுவாசத்துக்குப் பதில் கவலை அதிகமாகவே மண்டியது. அந்தக் கவலை குரலிலும் தொனிக்க அவர்களை வரவேற்ற புலவர் பெருமான், “இளமாறா! வா. நீ
உயிருடன் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
இளமாறன் புலவருக்கும் அவரெதிரே நின்ற சேர நாட்டுத் தளபதிக்கும் தலை வணங்கினான். “புலவர் பெருமான் ஆசியிருக்கும்போது என் உயிருக்கு என்ன ஆபத்து நேரிடப் போகிறது?” என்று கூறவும் செய்தான்.
அந்த உபசார வார்த்தை சாதாரண சமயத்தில் பெரும் திருப்தியை அளித்திருக்கும் புலவர் பெருமானுக்கு. ஆனால் அவர் அப்பொழுது இருந்த நிலையில் வெறுப்பே ஏற்பட்டது அவருக்கு.” என் ஆசி மட்டும் பயனளிப்பதில்லை
இளமாறா! ஆண்டவன் ஆசியைக் கேள்” என்றார் அவர் சலிப்புடன்.
“ஏனப்படிச் சொல்கிறீர்கள்?”‘ விநயத்துடள் வினவினான் இளமாறன்.
“என் ஆசியால் பிழைக்க முடியுமானால் உனக்கு முன்னே இந்தப் பணிக்கு வந்த நால்வரும் பிழைத்திருக்க வேண்டும். ஒருவர்கூடப் பிழைக்கவில்லை. உன் போல்தான் அந்த நால்வரும் என் முன் நின்றார்கள். மறு நாள் அவர்கள்.
பிணத்தைத்தான் நான் பார்க்க முடிந்தது. ஆனால்…” என்ற புலவர் இளமாறனை வருத்தத்துடன் பார்த்தார்.
“ என்ன புலவரே?” என்று வினவினான், அவர் வருத்தத்தால் நெஞ்சம் நெகிழ்ந்த இளமாறன்.
“உன் நிலைமை அவர்கள் நிலைமையைவிட மோசமாகி விட்டது” என்றார் புலவர்.
“எப்படி?”
“அந்த நால்வரையும் நெடுஞ்செழியன் அறியாமல் தங்கு தடையின்றி இந்த இடத்திற்குக் கொண்டுவர முடிந்தது. அவர்களே பிழைக்கவில்லை. நீ என் கையிலிருந்து எங்கோ தவறி மீண்டிருக்கிறாய். நீ இந்தப் பணியில் பிழைப்பாயென்று
தோன்றவில்லை” என்றார் புலவர்.
“உங்கள் கையிலிருந்து தவறியது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வியப்புடன் வினவினான் இளமாறன்.
“இந்த இடம் மதுரையிலிருந்து சரியாக இரண்டரை காதம். இங்கு வர எந்தச் சப்பையான புரவி வண்டிக்கும் ஓரிரவு போதும். ஆனால், அந்த இரவு நீ இங்கு வரவில்லை. நீ வந்திருப்பாய் என்று நினைத்து ஓர் இரவு விட்டு மறு இரவே
இங்கு வந்தேன். வரும் வழியில் மூடுதேர் அச்சு முறிந்து விழுந்து கிடந்தது. நீங்களிருவரும் இங்கு வரவில்லை என்பதை அறிந்ததும் தேடச் செய்தேன்” என்று விளக்கினார் புலவர்.
இளமாறன் தங்களுக்கு நேர்ந்ததை விவரமாகக் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட புலவர் மட்டு மின்றிச் சேரர் தளபதியும் பிரமித்து வாயடைத்து நின்றார்கள். கடைசியாகப் புலவர் முனகினார். “விசித்திரம். விசித்திரம்’ என்று.
இளமாறனுக்கும் நடந்த நிகழ்ச்சிகள் விசித்திரமாகத்தான் இருந்தன. ஆனால் புலவர் எந்த விசித்திரத்தைக் குறிப்பிடுகிறார் என்பது புரியாததால், “எந்த விசித்திரத்தைக் குறிப்பிடுகிறீர்கள் புலவரே?” என்று வினவினான்.
“சித்தருக்கு இதிலென்ன சிரத்தை?” என்று வினவினார் புலவர். அவர் குரலில் அப்பொழுதும் பிரமையின் ஒலி இருந்தது.
“எதில்?” ஏதும் புரியாமல் கேட்டான் இளமாறன்.
“சேரனை விடுவிக்கும் பணியில்?” புலவர் கேள்வி சந்தேகத்துடன் எழுந்தது.
“சிரத்தையிருப்பதாக யார் சொன்னது?”
“யார் சொல்ல வேண்டும்? சித்தரின் செயலே சொல்லுகிறதே.”
“என்ன செயல்?”
உன்னை ஏன் அவர் பாண்டிய மன்னனிடம் ஒப்புவிக்கவில்லை?”
“எதற்காக ஒப்புவிக்க வேண்டும்?”
புவவர் பதிலில் பெரும் சீற்றமிருந்தது. “இதை ஊகிக்கக்கூடச் சக்தியில்லாதவன் நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கூறிய புலவர் திடீரெனக் கோபத்தைத் தணித்துக் கொண்டு, “இளமாறா! சித்தர் பாண்டிய மன்னரின் ஆயுதப்
பயிற்சி ஆசிரியர். தவிர அவனுக்குப் போர் யோசனை சொல்பவருங்கூட. தலையாலங்கானத்தைப் போரிடும் இடமாகத் தேர்ந்து எடுத்ததே அவர் தான். உண்மையைச் சொல்லப் போனால் இன்று சேர மன்னன் அவரால்தான்
சிறையிலிருக்கிறான். அந்தச் சேர மன்னனை விடுவிக்க நீ வருகிறாய். ஆனால் அவர் உன்னை மயக்க மருந்து கொடுத்து இங்கு எங்கள் மடியில் தள்ளுகிறார். ஏன் அவருக்கு என்ன சிரத்தை சேரன் விடுதலையில்? சேரன் விடுதலையில்தான்
சிரத்தையா அல்லது நமது விடுதலைத் திட்டங்களை நான்கு முறை பொறுத்த அவர் ஒரேயடியாக இந்த விடுதலைப் படையை அழித்துவிடப் பார்க்கிறாரா? எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது இளமாறா? நான் இத்தனை தூரம் என்
ஆயுளில் குழம்பியது கிடையாது” என்று கூறினார். பிறகு ஏதோ யோசித்துவிட்டு, “சரி, நீங்கள் சென்று நீராடி உணவருந்தி இளைப்பாருங்கள்” என்று கூறி அவர்களை அழைத்துச் செல்லும்படி வீரர்களுக்குப் பணித்தார்.
வீரர்கள் அந்தப் பர்ணசாலையிலிருந்து சற்றுத் தூரத்தில் தனித்தனியாகக் கட்டப்பட்டிருந்த இரு பர்ண சாலைகளில் தனித்தனியாக இமயவல்லியையும் இளமாறனையும் தங்க வைத்தார்கள். இளமாறனுக்கு வேண்டிய சகல
வசதிகளையும் வீரர்கள் செய்து கொடுத்தார்கள். அன்று பகல் முழுவதையும் அந்த வீரர் முகாமைச் சுற்றி வருவதிலேயே காலங்கழித்தான் இளமாறன். வீரர்கள் சேர நாட்டை மட்டும் சேர்ந்தவர்களில்லை என்பதையும் சோழ நாட்டிலிருந்து
வந்த சிலரும் அதில் சேர்ந்திருந்ததையும் கண்டான். அப்படி இரு நாட்டைச் சேர்ந்தவகளாயிருந்தாலும் அவர்களிடை ஓர் ஒற்றுமையும், கட்டுப்பாடும் இருந்ததையும் கவனித்தான். அன்று பிற்பகல் நடமாட்டத்தின்போது அந்த வீரர்கள்
அனைவரும் தனக்குத் தலை வணங்கியதைக் கண்டதும் தன்னைப்பற்றி ஏதோ அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டான்.
புலவருக்கு அன்று காலையில் எழுந்த சந்தேகங்கள் அவனுக்கும் அன்று பூராவும் எழுந்து அவன் சித்தத்தில் வலம் வந்துகொண்டிருந்தன. சித்தரின் விபரீதப் போக்கை நினைத்து நினைத்து அவன் பேராச்சரியப்பட்டான். சித்தர்
மூடுதேரை அச்சு முறித்து வழியில் போட்டதற்கு காரணமிருக்க வேண்டுமென்று அவன் நினைத்தாலும் அந்தக் காரணம் என்னவென்பதை அறிய அவனால் முடியவில்லை. சித்தரை நினைத்துப் புலவர் சிறிது குழப்பம் மட்டுமின்றி,
அச்சமும் அடைந்திருப்பதை எண்ணி சித்தர் விவகாரங்களில் ஏதோ யாரும் அறியாத பெரும் மர்மங்கள் புதைந்து கிடப்பதை அவன் புரிந்துகொண்டான். இந்த நிலையில் திட்டம் அடுத்தபடி என்ன என்பதை அறியாமலேயே அதைப் பற்றி
யோசித்து யோசித்து அன்றைய பகல் பொழுதை ஓட்டிய அவனுக்கு இரவு சூழ்ந்ததும் புலவரிடமிருந்து அழைப்பு வந்தது.
முதன் முதல் இமயவல்லியுடன் நுழைந்த அதே பர்ணசாலைக்குள் புலவரைச் சந்தித்தான் இளமாறன். புலவர் முகத்தைக் கூர்ந்து நோக்கிய இளமாறன் அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையும் புரிந்து கொண்டான். அவன்
உள்ளே நுழைந்ததும் ஆசனத்தை விட்டு எழுந்த புலவர் இரண்டே வார்த்தைகளைச் சொன்னார்: “இளமாறா! உன் வாழ்வின் முக்கிய கட்டம் நெருங்கி விட்டது” என்று.
இளமாறன் பதில் சொல்லவில்லை, ஒப்புவதற்கு அறிகுறியாகத் தலையைத் தாழ்த்தினான்.
புலவர் நன்றாக நிமிர்ந்து கொண்டு கூரையை நோக்கிச் சில விநாடி கண்களை உயர்த்தினார். “இப்பொழுதே நீ மூங்கில் கோட்டைக்குப் பயணமாகிறாய்” என்று உணர்ச்சி மேலிட்டுச் சொன்னார்.
மீண்டும் தலைவணங்கினான் இளமாறன். “மார்த்தாண்டா! இவனை அழைத்துச் செல். ஆண்டவன் இவனுக்கும் சேரனுக்கும் அருள் புரியட்டும். இது தான் நமது கடைசி முயற்சி!” என்று கட்டளையிட்டார்.
வீரமார்த்தாண்டன் தன்னைத் தொடர்ந்து வரும்படி இளமாறனுக்குச் சைகை செய்ய, இளமாறன் அவனைப் பின்தொடர்ந்து வெளியே சென்றான்.
அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்ற புலவர் அவர்கள் மறைந்ததும் தொப்பென தனது ஆசனத்தில் அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டார்.

Previous articleMoongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here