Home Historical Novel Moongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

78
0
Moongil Kottai Ch17 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 17 புறப்பாடு

Moongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

புலவரின் பர்ணசாலையைவிட்டு வெளியே வந்து சில அடிகள் நடந்ததுமே இளமாறனை நோக்கித் திரும்பிய சேர நாட்டுத் தளபதியான வீரமார்த்தாண்டன் ஆகாயத்தை நோக்கிவிட்டு, முதல் ஜாமத்தில் பாதிதான் ஆகியிருக்கிறது. முதல்
ஜாமத்தின் முடிவில் கிளம்பலாம். உனக்கு ஏதாவது அலுவலிருந்தால் கவனித்துவிட்டு வரலாம்” என்று கூறினான்.
இளமாறனும் வானத்தை உற்று நோக்கிவிட்டு, “ஆம், இருட்டி அரை ஜாமந்தான் ஆகிறது. சிறிது அலுவலும் எனக்கு இருக்கத்தான் செய்கிறது” என்று கூறினான்.
அதற்குமேல் ஏதும் பேச முடியாத வீரமார்த்தாண்டன் இளமாறனைவிட்டுத் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல காலை எடுத்து வைத்தான். ‘ஒரு வார்த்தை’ என்று இளமாறனின் குரல் அவனைத் தடுக்கவே அவன் திரும்பி, “என்ன
வீரனே! என்ன தேவை உனக்கு?” என்று வினவினான்.
இளமாறன் அவனை உற்று நோக்கினான். “தளபதி அவர்களுக்கு என்னை யாரென்று தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியாது” அலட்சியத்துடன் வந்தது வீரமார்த்தாண்டன் பதில்.
“உங்கள் படையில் ஒரு வீரன்.”
“அது மட்டும் தெரியும்.”
“எப்படித் தெரியும்?”
“புலவர் சொல்லியிருக்கிறார்.”
“மேற்கொண்டு ஏதும் அறிந்துகொள்ள விருப்பமில்லையா உங்களுக்கு?”
வீரமார்த்தாண்டன் இகழ்ச்சியுடன் பார்த்தான் இளமாறனை ஒரு விநாடி. பிறகு, ‘உன் உயிர் இன்னும் இரண்டு ஜாமங்களுக்குள் சொர்க்கமோ நரகமோ இரண்டிலொன்றை நோக்கிப் பறக்கப் போகிறது. அதற்குள் உன் வரலாற்றைத்
தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறேன்?” என்று கூறிவிட்டு மேற் கொண்டு சம்பாஷணைக்குத் தயாரில்லை என்பதைப் பார்வையாலேயே உணர்த்திவிட்டுச் சற்றுத் தூரத்தி லிருந்த தனது கொட்டகையை நோக்கி நடந்தான்.
அவனைப் பார்த்துக்கொண்டே நின்ற இளமாறன் இதழ்களிலும் புன்முறுவல் அரும்பியது. ‘கடமையை நோக்கிச் செல்லும் வீரனிடம் தளபதிக்கு என்ன அக்கறை!’ என்று உள்ளுக்குள் வினவிக்கொண்டு இமயவல்லியிருந்த சிறு குடிலை
நோக்கி நடந்தான்.
இளமாறன் உள்ளே நுழைந்தபோதுதான் இமயவல்லியும் குடிலைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தாளாகையால் வாசற்படிக்கருகிலேயே இருவரும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் லேசாக நகைத்தான் சேர நாட்டு
வாலிபன். இமயவல்லியின் முகத்தில் நகைப்பின் குறிக்குப் பதிலாகப் பெரிய சோகமே படர்ந்து நின்றது. புத்துடையும் வாளும் அணிந்து பயணம் சொல்லிக்கொள்ள வந்திருக்கும் அந்த வீரனைப் பார்த்ததும் அச்சம் அவள் இதயத்தை
ஆக்கிரமித்துக் கொள்ளவே கேட்டாள் அவள், “பயணபட்டு விட்டீர்களா?” என்று.
“பயணப்பட்டது போலத்தான். உன்னிடம் சொல்லிக் கொள்ளத்தான் வந்தேன்” என்றான் இளமாறன் முகத்தில் அப்பொழுதும் புன்முறுவல் படர.
வெளியே புறப்பட முற்பட்டு இளமாறனுடன் மோதும் தருவாயில் அப்படியே எதிரே நின்றுவிட்ட இமயவல்லி சரேலென்று திரும்பிக் குடிலுக்குள் நடந்து நாலடி சென்றாள். குடிலின் கதவைச் சாத்திவிட்டு அவளைத் தொடர்ந்த
இளமாறன் அவளை அணுகாமல் சற்று எட்டவே நின்றான். அவன் அப்படித் தங்களிருவருக்கும் இடைவெளிவிட்டு நின்றதன் காரணத்தைப் புரிந்துகொள்ளாத இமயவல்லி, “ஏன் அங்கேயே நிற்கிறீர்கள்? கசந்துவிட்டதா உங்களுக்கு?!’
என்று வினவினாள் வருத்தம் நதியெனப் பாய்ந்த குரலில்.
அவள் குரலிலிருந்த அந்த வருத்த வெங்ளங்கூட அவன் இதயத்தைத் தொட மறுத்தது. “கரும்பு கசக்குமா இமயவல்லி?” என்று கேட்ட அவன் குரலில் உணர்ச்சியில்லை. குரல் மிகவும் உறுதியாக இருந்தது. அதை இமயவல்லி கவனிக்கவே
செய்தாள். ஆகவே தன் விழிகளை நன்றாக அவனை நோக்கி உயர்த்திய இமயவல்லி கேட்டாள், “உண்மையில் உங்கள் எதிரில் நிற்பது கரும்புதானா?” என்று.
“ஆம்.”
“அப்படியானால் கைப்பற்ற ஏன் தயங்குகிறீர்கள்?”
“இறக்கும் தருவாயிலிருப்பவன் ஆசையை உதறுவது நல்லது. அது அவனுக்கும் நல்லது. கரும்புக்கும் நல்லது!”
“கரும்பே உணர்ச்சிக் காற்றில் சாய்ந்தால்?”
“அதைச் சாயாமல் தடுப்பது சொந்தக்காரன் கடமை.”
இமயவல்லியின் முகத்தில் அத்தனை வருத்தத்துடன் மகிழ்ச்சிப் பொலிவும் லேசாகப் படர்ந்தது. அவன் தன்னைச் சொந்தக்காரன் என்று சொல்லிக்கொண்டது அவளுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. பேசும் சக்தியைக்கூட இழந்து
நின்றாள் அந்தச் சமயத்தில். இளமாறனே மேற்கொண்டு பேசினான்: “இமயவல்லி! நாம் சந்தித்து இரண்டு இரவுகள் ஆகின்றன. இது மூன்றாவது இரவு. இரண்டு இரவுகளில் நமக்குள் நடந்து இருக்கும் சம்பவங்கள் பெரும் கதையாகத்
தோன்றுகிறது எனக்கு. அபாய காலங்களில், போர் நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்படுவது சகஜம். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டை ஊடுருவும் படை வீரர்கள் பெண்ணைக் காண்பதும்
காதலை நுகர்வதும் இயற்கை. ஆனால், எந்த வீரனுக்கும் இதுவரை ஓர் இரவில் ஒரு மாமன்னன் சகோதரியைச் சந்தித்து அடுத்த இரவுக்குள் அவர்களுக்குள் காதல் முற்றி, மூன்றாம் இரவில் அந்த வீரனுக்கு மரணம் ஏற்படக்கூடிய நிலை
ஏற்பட்டதை நான் கேட்டதுகூட இல்லை. ஆனால் அதைப் பற்றி, நான் கவலைப்படவில்லை அரசகுமாரி. ஏனெனில், என் வாழ்க்கையே ஒரு கதை” என்றான் இளமாறன்.
இதைச் சொன்ன அவன் குரலில் துன்பம் தோய்ந்து கிடந்தது. அதைக் கவனித்த இமயவல்லி, “என்ன? உங்கள் வாழ்க்கையே ஒரு கதையா?” என்று வினவினாள்.
“ஆம் இமயவல்லி! அதைச் சொல்லத்தான் இங்கு வந்தேன்” என்ற இளமாறன், “இமயவல்லி! உன்னிடந்தான் முதன் முதலாக என் உள்ளத்தை ஒப்படைத்தேன். ஆகவே என் இதயத்தையும் திறந்துவிடுகிறேன். கேள் என் கதையை. நான் ஓர்
அநாதை. தாய் தந்தையர் இல்லாதவன். சேர நாட்டு வீரர் ஒருவர் என்னை எடுத்து வளர்த்தார். சேர நாட்டின் ஒரு கிராமத்திலிருந்த நாங்கள் எனக்கு வயது வந்ததும் கருவூர் வஞ்சியில் வந்து ஒரு சிறு வீட்டில் குடியிருந்தோம். தகுந்த
பருவத்தில் என்னை வளர்த்த வீரரே எனக்கு வாட்போர் பயிலுவித்தார். என்னைக் கடைசியில் சேர மன்னன் படையிலும் சேர்த்தார். இரண்டு மூன்று போர்களையும் பார்த்திருக்கிறேன். தலையாலங்கானத்துக்கு மட்டும் தான் நான்
வரவில்லை. என்னைக் கருவூரிலேயே அதிகப் பேருக்குத் தெரியாது. என் வளர்ப்புத் தந்தை என்னை அதிகமாக வெளியில் போகவிட்டதும் கிடையாது, படைப்பயிற்சிக்கு மட்டும் போய் வீட்டுக்கு வந்துவிடுவேன். அவ்வளவுதான். அந்த
வளர்ப்புத் தந்தை தலையாலங்கானத்துப் போருக்குச் சென்றார். திரும்பவில்லை பல நாள்கள் அவரை எதிர்பார்த்து ஏமாந்தேன். அந்த ஏமாற்றத்தால் மனமுடைந்த ஒரு நாளில் புலவரின் அழைப்பு வந்தது. புலவர் என்னை எப்படி
அறிந்தார்? என்னிடம் இப்பெரும் பணிக்கு என்ன திறமையைக் கண்டார்? ஏதும் தெரியவில்லை எனக்கு. உன்னிடம் ஏதாவது சொன்னாரா?” என்றான்.
இமயவல்லி அவன் சரிதையை வியப்புடன் கேட்டாள். கடைசியில் அவன் கேட்ட கேள்விக்கு, “ஒன்றும் சொலலவில்லை. அடுத்தபடி வருபவன் சேர நாட்டு வாலிபன் ஒருவன். அவன் பெயர் இளமாறன்!’ என்று மட்டும் சொன்னார்” என்று
பதில் கூறினாள்.
“அப்படித்தானிருக்கும் என்று நினைத்தேன், என்னைப் பற்றி ஏதோ தெரியும் புலவருக்கு, ஆனால், அதைச் சொல்ல மறுக்கிறார். அதைப்பற்றிக் கவலையில்லை. இப்பொழுது உன்னிடம் ஒன்று சொல்ல வந்தேன் இமயவல்லி. என்
உயிர் ஒருவேளை மூங்கில் கோட்டையில் போகுமானால் கடைசி மூச்சுடன் உன் பெயரைத்தான் உச்சரிப்பேன், ஆனால், ஒரு வேண்டுகோள்” என்றான் இளமாறன் திடமான குரலில்.
“என்ன வீரரே?” என்று கேட்டாள் இமயவல்லி.
“நான் உயிருடன் திரும்பி வந்தால் நீ பாண்டிய நெடுஞ்செழியன் சகோதரியல்ல, அவனைவிடப் பெரிய அரசன் மகளானாலும் உன்னைக் கைப்பற்றாமல் பாண்டிய எல்லையை விட்டு நகரமாட்டேன். அப்படி வரவில்லையென்றால் நமது
இந்த இரண்டு நாள் தொடர்பை சொப்பனமாக நினைத்து மறந்துவிட வேண்டும்” என்றான் இளமாறன்.
“முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிறீர்கள்” என்ற இமயவல்லி அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள்.
“நில் அப்படியே இமயவல்லி! நீ வீரர் குலத்தில் பிறந்தவள். உணர்ச்சிகளுக்கு இந்தத் தருணத்தில் இடங் கொடுக்காதே. நான் திரும்பி வந்தால் இந்த இடைவெளி நம்மிருவரிடை இருக்காது. இல்லையேல் இடைவெளி நிரந்தரம். உன் வாழ்வை
இதற்காக நாசப்படுத்திக் கொள்ளாதே. இது என் கடைசி வேண்டுகோள்” என்று கூறிய இளமாறன் அதற்குமேல் ஏதும் பேசாமல் குடிலின் கதவைத் திறந்துகொண்டு வெகு வேகமாக வெளியே நடந்தான். குடிலின் கதவருகில் வந்து நின்று
கொண்டு அவன் போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் இமயவல்லி. நீண்ட நேரம் பார்க்க முடியவில்லை அவளால். கண்களை நீர்த்திரை மறைத்தது. இளமாறன் உருவம் முதலில் மங்கிப் பிறகு அடியோடு மறைந்தது அவள்
விழிகளுக்கு.
இமயவல்லியின் குடிலை விட்டுக் கிளம்பிய இளமாறன் வீரமார்த்தாண்டன் தங்கியிருந்த கோட்டைக்குச் சென்றான். அங்கு வீரமார்த்தாண்டன் பயணத்துக்குத் தயாராயிருந்ததைக் கண்டதும், “கிளம்பி விட்டீர்களா?” என்று வினவிவிட்டு,
எதிரேயிருந்த மஞ்சத்தில் சாவதானமாக அமர்ந்து கொண்டான். இளமாறன் போக்கைக் கண்ட சேர நாட்டுத் தளபதியின் விழிகளில் சினம் ஏறியது.
“உட்கார அவகாசமில்லை இப்பொழுது வீரனே!” என்றான் வீரமார்த்தாண்டன் அதிகாரமும் சினமும் ஒலித்த குரலில்.
“சற்று உட்காருங்கள்” என்று இளமாறன் கூறினான், படைத்தலைவனைவிடச் சற்றுக் கடுமையான குரலில்.
படைத்தலைவன் முகத்தில் கோபம் அதிகமாக ஏறியது. “படைத்தலைவனை எதிர்த்து வீரர்கள் பேசுவது போர் விதிகளுக்கு முரணானது” என்றான் வீரமார்த்தாண்டன்.
அந்தச் சினத்தை இளமாறன் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உட்கார்ந்திருந்த மஞ்சத்தைவிட்டு எழுந்திருக்கவும் முயலவில்லை. “நாம் இப்பொழுது போர்க்களத்திலோ படை அணிவகுப்பிலோ இல்லை படைத்தலைவரே.
இப்பொழுது நாம் ஈடுபட்டிருப்பது ரகசியமான பணி. இதில் தங்களுக்கு ஏதும் நஷ்டமுமில்லை! ஆனால் எனக்கு நஷ்டம் இருக்கிறது…” என்று சொல்லிக்கொண்டுபோன இளமாறனை இடைமறித்த வீரமார்த்தாண்டன், கோபத்தால்
என்ன கேட்கிறோமென்பதை உணராமலே, “என்ன நஷ்டம்?” என்று சீறினான்.
இளமாறன் பதிலில் இகழ்ச்சி ஒலித்தது. “உயிர் நஷ்டம் அத்தனை பிரமாதமாகத் தங்களுக்குப்படவில்லை போலிருக்கிறது” என்றான் அவன்.
அப்பொழுதும் இளமாறனுக்கு இடங் கொடாத தளபதி, “உயிர் விடுதல் வீரர்கள் கடமை” என்றான்.
“தற்கொலையை சாஸ்திரங்கள் தடுக்கின்றனவே.”
“யார் உன்னைத் தற்கொலை செய்துகொள்ளச் சொன்னது?”
“இப்பொழுது செல்லும் பணி கிட்டத்தட்ட தற்கொலைக்கு ஒப்பானதுதானே?”
‘எப்படித் தற்கொலையாகும் அது?”
“மூங்கில் கோட்டைக்குள் என்னைப் போகச் சொல்கிறீர்கள்?”
“ஆம்.”
“கண்ணை மூடிக்கொண்டு தகவலறியாமல் உள்ளே நுழையச் சொல்கிறீர்கள்.”
“ஆம். உள்ளே நண்பர்கள் இருக்கிறார்கள். தவிர இதற்கு முன்பு சென்ற நால்வரும் இப்படிக் கேள்வி எதையும் கேட்கவில்லை.”
இளமாறன் மெல்ல நகைத்தான். “இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு, நான் ஏன் கேள்விகள் கேட்கிறேனென்பது?” என்று வினவினான்.
அப்பொழுதுதான் புரிந்தது படைத்தலைவனுக்கு இளமாறனின் எண்ணம்..
அவன் புரிந்து கொண்டதை இளமாறன் தன் வாயால் சொன்னான்: “உங்களையும் புலவரையும் நம்பிக் கோட்டைக்குள்ளேயிருப்பதாக நீங்கள் சொல்லும் நண்பர்களை நம்பிச் சென்ற நால்வர் கதி உங்களுக்குத் தெரிகிறதல்லவா?
ஆகையால் அப்படி யாரையும் நம்பாமல் என்னையே இந்த முயற்சியில் நம்ப நான் தீர்மானித்திருக்கிறேன் படைத்தலைவரே?” என்று.
இதற்குமேல் காலதாமதம் செய்யாத வீரமார்த்தாண்டன், “நேரம் ஓடுகிறது; சீக்கிரம் சொல். என்ன தெரியவேண்டும் உனக்கு?” என்று வினவினான்.
“உங்கள் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்று கேட்டான் இளமாறன்.
வீரமார்த்தாண்டன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான். “இங்கிருந்து இரண்டு நாழிகை தெற்கு நோக்கி நடந்தால் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அதன் நடுவிலிருக்கும் பாறையை நகர்த்தினால் அதிலிருந்து சூரன்
கோட்டைக்கு, இப்பொழுது மூங்கில் கோட்டையென வழங்குகிறதே அதற்குச் சுரங்க வழி இருக்கிறது. அந்தச் சுரங்க வழியே சென்றால், சூரன் கோட்டையின் உள்ளே வீரர்களைப் புதைக்கும் மயானம் இருக்கிறது. அங்கு போய்ச்
சேரலாம்…” என்றான் வீரமார்த்தாண்டன்.
“நேரே மயானத்திற்குத்தான் போக வேண்டுமா?” என்று வினவினான் இளமாறன் இகழ்ச்சிக் குரலில்.
அதைக் கவனிக்காத தளபதி சொன்னான்: “ஆம், அந்த இடத்திலும் பாறை இருக்கிறது. அதைக் கிளப்பினால் கோட்டையின் மதிலுக்கருகில் இருப்பாய். அங்கு காவல் கிடையாது. அங்கு உங்களை ஒருவர் சந்திப்பார்” என்று.
“யாரது?” என்று வினவினான்.
“எனக்குத் தெரியாது, புலவருக்குத்தான் தெரியும்.”
“பிறகு?”
“அந்த வீரர் உங்களை எப்படியாவது மாந்தரஞ் சேரல் இரும்பொறை இருக்கும் அறையில் சேர்த்து விடுவார்.”
“பிறகு?”
“மன்னவரை நீங்கள் சென்ற வழியாக அழைத்து வருவது உங்கள் பொறுப்பு.”
“நான் வராவிட்டால்?”
“நாளைக்கு மறுநாள் உங்கள் பிணத்தை மூங்கில் கோட்டைக்கு எதிரிலுள்ள காட்டில் வனவாசிகள் தேடுவார்கள்.”
“அவர்களை ஏன் வனவாசிகள் என்று அழைக்கிறீர்கள்?”
“இந்தப் படையினருக்குப் புலவர் கொடுத்திருக்கும் பெயர் அது!”
“சரி. மேலே சொல்லுங்கள்.”
“பிறகு உங்கள் சவத்தைச் சகல மரியாதைகளுடன் புதைப்போம்.”
இளமாறன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. ‘மிக்க மகிழ்ச்சி” என்ற இளமாறன், மீண்டும் ஒரு சந்தேகம் கேட்டான்: “ஒருவேளை நான் வெற்றியடைந்து மன்னன் மீண்டால்?” என்று.
“நான் அவரை அழைத்துச் செல்ல எனது வீரர்களுடன் பாழடைந்த மண்டபத்தருகே காத்திருப்பேன்’ அங்கிருந்து இந்த இடத்திற்கு வருவோம். இந்தக் காடு இங்கிருந்து இரண்டு காததூரம் வடபுறமும் நீடிப்பதால் மன்னரைக் காத்துச்
செல்ல காட்டு மூலமே போவோம். காட்டை அடுத்தது சோழ நாட்டு எல்லை. பிறகு அதிக கவலையில்லை” என்றான் வீரமார்த் தாண்டன்.
இளமாறன் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்து, “சரி கிளம்புங்கள்” என்று மஞ்சத்தை விட்டு எழுந்திருந்தான். வீரமார்த்தாண்டன் இளமாறனை அடர்த்தியான காடு நிறைந்த பகுதிகளில் அழைத்துச் சென்று
இறுதியில் ஒரு பாழடைந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். அந்த மண்டபத்துக்கு அருகில் கோயிலோ குளமோ ஏதுமில்லை. அப்படியிருக்க அங்கு எதற்காக ஒரு மண்டபத்தைக் கட்டினார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இளமாறன்
நிற்கையில் அந்த மண்டபத்தின் நடுவிலிருந்த பாறையொன்றை மெள்ள அசைத்து அசைத்துக் கிளப்பினான் வீரமார்த்தாண்டன். அதன் அடியில் படிகள் ஓடின. கையில் தயாராகக் கொண்டு வந்திருந்த பந்தத்தை இளமாறனிடம்
கொடுத்த சேர நாட்டுத் தளபதி, “வீரனே. இறங்கிச்செல். ஆண்டவன் உனக்கு அருள் புரிவார்” என்று உணர்ச்சியுடன் கூறினான்.
இளமாறன் பந்தத்தைக் கையில் வாங்கிக்கொண்டு சொன்னான்: “படைத்தலைவரே! உமது உத்தரவுப்படி செல்கிறேன். ஆனால், இரண்டு நாள்கள் வரை என் பிணத்தைத் தேடவேண்டாம். மூன்றாவது நாள் தேடினால் போதும்” என்று.
“ஏனப்படி?” என்று வினவினான் வீரமார்த்தாண்டன்.
“இரண்டு நாள்கள் உயிருடன் இருக்கத் தீர்மானித்து விட்டேன்” என்று கூறிய இளமாறன் அந்தப் படிகளுக்குள் இறங்கினான். அவன் தலை மண்டபத்தின் தரை மட்டத்திலிருந்து மறைந்ததும் பாறையைத் திரும்பப் பழையபடி மூடிவிட்ட
வீரமார்த்தாண்டன் சோகப் பெரு மூச்சொன்றை விட்டு வந்த வழியே திரும்பி நடந்தான்.

Previous articleMoongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here