Home Historical Novel Moongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

57
0
Moongil Kottai Ch18 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 புலிக்குப் பிறந்தது

Moongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

பாழடைந்த மண்டபத்தின் நடுவிலிருந்த பாறாங்கல்லைப் புரட்டிக் கிளப்பி சூரன் கோட்டைக்குச் செல்லும் சுரங்கவழிக்குள் இளமாறனை இறக்கிவிட்டுத் தளபதியான வீரமார்த்தாண்டன், சாவை நோக்கிச் சென்ற அந்த சிற்றிளங்
காளையிடம் அனுதாபம் கொள்வதற்குப் பதில் மிகுந்த சீற்றத்துடனேயே திரும்பினான். பல போர்களைக் கண்ட தன்னிடம் அந்த வாலிபன் நடந்து கொண்ட முறையும், பேசின பேச்சும் சிறிதளவும் வீரமார்த்தாண்டனுக்குப்
பிடிக்காததால், இளமாறன் திமிரைப் பற்றிய சிந்தனைகளுடனேயே தளபதி திரும்பினான். புலவரின் பர்ணசாலைக்குத்தான் அதுவரை அழைத்துச் சென்ற நான்கு வீரர்களும் தன்னை ஏதும் கேள்வி கேட்காமல் சொன்னபடி நடந்திருக்க,
இளமாறன் மட்டும் தன்னுடைய திட்டத்தையும் போகும் மார்க்கம் முதலியவற்றையும் கேட்டறிந்து கொண்ட பின்னரே புறப்பட்டதைத் தளபதியால் சகிக்க முடியவில்லை. தவிர தன் திட்டத்தின் விவரங்களைப் பற்றி விவரித்தபோது
இளமாறன் கேட்ட கேள்விகளும் அவற்றின் ஊடே விரிந்த இகழ்ச்சிப் புன் முறுவலும் பெரும் கோபத்தைத் தந்திருந்தது தளபதிக்கு. கடைசியில் சுரங்கத்தில் இறங்கும் சமயத்திலாவது இளமாறன் பயந்து அடக்கத்தைக் காட்டுவானென்று
எதிர்பார்த்த வீரமார்த்தாண்டன் அதிலும் ஏமாந்ததால் அவன் சினமும் வெறுப்பும் சொல்லத் தரமற்றதாயின. இளமாறன் கடைசியாக, “நான் இரண்டு நாள் உயிருடன் இருக்கத் தீர்மானித்து விட்டேன்” என்று கூறிவிட்டுச் சுரங்கத்தில்
இறங்கியதை நினைத்த தளபதி, “திமிர் பிடித்தவன் ஒழியட்டும்” என்று உள்ளூரக் கறுவிக்கொண்டே பர்ணசாலைக்குத் திரும்பினான்.
அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புலவரும் இமயவல்லியும் அவன் பர்ணசாலைக்குள் நுழைந்ததுமே, “என்ன ஆயிற்று?” என்று ஏககாலத்தில் கவலை தொனித்த குரலில் வினவினார்கள்.
அவர்கள் காட்டிய அக்கறையும் கவலையும் வீரமார்த்தாண்டனுக்குத் திருப்தியை லவலேசமும் தராததால், ‘அனுப்பிவிட்டேன்” என்று வறண்ட குரலில் பதில் சொன்னான்.
உணர்ச்சியற்ற அந்தக் குரலை அனுதாபக் குரலாக அர்த்தம் செய்து கொண்ட புலவர் பெருமானும் தலையசைத்துப் பெருமூச்செறிந்து பக்கத்திலிருந்த இமய வல்லியை நோக்கினார். இமயவல்லி சோகத்தின் உருவமாக நின்றாள். அவள்
சந்திரவதனத்தைக் கவலை மேகம் பெரிதாகக் கவ்வி நின்று அதன் சோபையை ஓரளவு குறைத்திருந்தது. கண்களில் நீர் திரளவில்லை தான். திரளுவதற்கான அறிகுறிகள் மட்டும் நிரம்ப இருந்தன. அவள் சோகமுகத்தை அதிக நேரம்
பார்த்ததால் தமது மன உறுதியும் குறையும் என்பதை உணர்ந்த குறுங்கோழியூர்க்கிழார், முகத்தை வீரமார்த்தாண்டனை நோக்கித் திருப்பி, “வீரமார்த்தாண்டா! இளமாறன் அச்சமின்றிச் சுரங்கத்தில் இறங்கினானா?” என்று வினவினார்.
வீரமார்த்தாண்டன் புலவர் பெருமானை அடக்கத்துடன் நோக்கினாலும் அந்த அடக்கத்திலும் சினம் உள்ளூர ஊடுருவி நின்றதால், அவன் உடம்பில் அச்சமேது புலவர் பெருமானே?” என்று கேட்டான் பதிலுக்கு.
“ஆம்; இல்லை இல்லை. அந்தக் குடும்பத்தில் அச்சத்துக்கு இடம் சிறிதுமில்லை. இருப்பினும் இளைஞன் ஆயிற்றே என்பதற்காகக் கேட்டேன்” என்று திருப்தியுடனும் பெருமிதத்துடனும் சொல்லிக் கொண்ட குறுங்கோழியூர்க்கிழார்,
“அப்படியானால் நாம் நாளன்றைவரைக்கும் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
“இருக்கிறது” என்ற தளபதியின் வெறுப்புச் சொல் அவரைச் சற்று நிமிர்த்தி உட்கார வைத்தது.
“என்ன சொல்கிறாய் வீரமார்த்தாண்டா?” என்று வினவினார் புலவர்.
“இரண்டு நாள்களுக்குள் தன் பிணத்தைத் தேட வேண்டாமென்று சொன்னான் அவன்,” வீரமார்த்தாண்டன் குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.
“ஏன்? அதற்குள் காரியத்தை நிச்சயமாக முடித்து விடுவானா?” என்று மறுபடியும் ஆவலுடன் வினவினார் புலவர்.
“அதையும் திட்டமாகச் சொல்லவில்லை அவன்.”
“வேறெதைத் திட்டமாகச் சொன்னான்?”
“எதையும் திட்டமாகச் சொல்லவில்லை. ‘இரண்டு நாள்களுக்குள் தேட வேண்டாம்; மூன்றாம் நாள் தேடினால் போதுமென்றான்.”
“என்ன காரணமென்று நீ கேட்கவில்லையா?”
“கேட்டேன். அவன் பதில் ஒழுங்காக வரவில்லை. இரண்டு நாள்களுக்குள் இறக்க இஷ்டமில்லை’ என்று மட்டும் சொன்னான். இகழ்ச்சியுடன் என்னைப் பார்த்துப் புன்சிரிப்பும் சிரித்தான்” என்ற வீரமார்த்தாண்டன் தனது குரலில்
கோபத்தை லேசாகக் காட்டினான்.
புலவர் முகத்தில் வருத்தமும் பெருமிதமும் கலந்த சாயையொன்று பரவியது. “அது அந்தக் குடும்பத்தின் போக்கு. சாவுக்குச் செல்லும்போது விஷமமாக பேசும் நெஞ்சுரம் அவன் தந்தைக்கும் உண்டு” என்றார் புலவர்.
அதுவரை மௌனமாயிருந்த இமயவல்லி தன் மௌனத்தைக் கலைத்துக் கொண்டு கேட்டாள் தீனமான குரலில், “அவர் தந்தை யார் புலவரே?” என்று.
“சொல்ல எனக்கு உரிமையில்லை மகளே! இருப்பினும் ஒன்று சொல்ல முடியும். தமிழகத்தின் பெரும் வீரர்களில் இவன் தந்தையும் ஒருவர் என்று மட்டும் அறிந்துகொள். ஆண்டவன் அருள் அந்தக் குடும்பத்துக்கு இருந்தால் இவன்
தந்தை யாரென்பதைக் காலம் உணர்த்தும்” என்ற புலவர் சில விநாடி சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு சொன்னார் வீரமார்த்தாண்டனை நோக்கி, “தளபதி! அந்த இளைஞன் பேச்சையும் இகழ்ச்சிச் சிரிப்பையும் நினைத்து சினத்தின்
வசப்படாதே. உனது நாட்டுக்காக மரணத்தை நாடிச் சென்றுள்ள மாவீரன் அவன் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து நன்றியுணர்ச்சியுடன் நடந்துகொள். அவன் இரண்டு நாள் இறக்கமாட்டேன் என்று சொன்னால் நிச்சயமாய்
இறக்கமாட்டான். அந்த இரண்டு நாள்களில் அவனிடமிருந்து ஏதாவது செய்தி வந்தால் எனக்கு உடனடியாகத் தெரிவி” என்று.
வீரமார்த்தாண்டன் சினம் உள்ளூர அதிகப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டாமலே, “இரண்டு நாள்களுக்குள் அவன் சாக இஷ்டப்படாவிட்டால் கோட்டைக்குள் இருக்கும். காவலர் பொறுத்திருப்பார்களா?” என்று வினவினான்.
அவன் பேச்சிலிருந்த விரோதத்தையும் ஏளனத்தையும் கவனித்த புலவர் சற்றே நிதானத்தை இழந்துவிட்டதற்கான அறிகுறி அவர் முகத்தில் தெரிந்தது. “வீரமார்த்தாண்டா! நம்மைவிடச் சிறந்த வீரர்களைப் பற்றிப் பேசும்போது நாம்
நம்மிடமுள்ள அற்ப குணங்களை உதறிவிடவாவது கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உஷ்ணம் ஒலிக்க சொற்களை உதிர்த்த புலவர் இமயவல்லியை நோக்கி, “இமயவல்லி! நாம் புறப்படுவோம். மதுரைக்கு செய்தி ஏதாவது கிடைத்தால்
திரும்பி வருவோம். சீக்கிரம் போய்ப் பயணப்படு” என்றார்.
அந்த உத்தரவைக் கேட்டுக்கொண்டுபோன இமயவல்லி சில நிமிஷங்களுக்குள்ளாகப் பயண உடை அணிந்து வந்தாள். இரவின் கடைசி ஜாமத்துக்குச் சற்று முன்பே புறப்பட்ட புலவரும் இமயவல்லியும் இரு வீரர்கள் வழிகாட்டி
முன்செல்ல சூரன் கோட்டைக் காட்டினூடே சிறிது தூரம் சென்று குறுக்குப் பாதை யொன்றில் புகுந்து பாதையின் ஓரத்தில் மறைவிலிருந்த வண்டியொன்றில் அமர, வண்டி மதுரையை நோக்கிப் பறந்தது. வழி நெடுக இமயவல்லியும்
புலவரும் மௌனமாகவே அக்கம் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். அந்த வண்டியில் ஆரம்பித்த மௌனம் அவர்கள் மகர மாளிகையை அடைந்த பின்பும் நீடித்தது. அடுத்த இரண்டு நாட்களில் கூட நிலைமை அபிவிருத்தி
அடையவில்லை. அடியோடு மௌனம் இல்லையே தவிர அவ்வப்பொழுது ஓரிரண்டு சொற்களுடன் இருவர் சம்பாஷணையும் முடிந்து கொண்டிருந்தது.
இளமாறன் சுரங்கப்பாதையில் நுழைந்து நாட்கள் இரண்டு மட்டுமின்றி மூன்றும் ஓடிவிட்ட போதிலும் எந்தத் தகவலும் மகர மாளிகைக்கு எட்டாமற்போகவே பெரும் குழப்பத்துக்கும் பீதிக்கும். உள்ளானார் புலவர். மூன்றாம்
நாளிரவு மூன்று முறை படுக்கையிலிருந்து எழுந்து தமது அறைக்கு முன்னிருந்த தாழ் வாரத்துக்கு வந்து, “இமயவல்லி! இமயவல்லி” என்றழைத்தார். அந்த மூன்று முறையும் உடனுக்குடனே இமயவல்லி கீழிருந்து ஓடிவந்து, “என்ன
புலவரே?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். “ஒன்றுமில்லை” என்று புலவர் சொல்ல, அவளும் திரும்பிச் சென்று கொண்டிருந்தாள். நான்காம் முறை புலவர் அழைக்கவில்லை. அவளே மாடிப்படிகளில் ஏறிவந்து புலவர் அறையைத்
தட்டினாள்.
கதவைத் திறந்த புலவர், “என்ன இமயவல்லி?” என்று ஆர்வத்துடன் கேட்டார். “ஒன்றுமில்லை” என அவர் மூன்று முறை சொன்னதை அவள் நான்காம் முறை திரும்பச் சொல்லி அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மஞ்சமொன்றில்
உட்கார்ந்து கொண்டாள்.
அவளெதிரே தமது ஆசனத்தில் அமர்ந்த புலவர் பெருமான் அவளை நன்றாகக் கூர்ந்து நோக்கி அவள் மனோ நிலைக்கும் தமது மனோ நிலைக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதை உணர்ந்து கொண்டதால், “விசித்திரமாய்
இல்லையா இது இமயவல்லி” என்று கேட்டார் புலவர்.
“எது புலவரே?” என்ற இமயவல்லியின் குரல் அடியோடு சக்தியை இழந்து கிடந்தது.
“இளமாறன் விஷயம்” என்றார் புலவர்.
“விசித்திரமென்ன அதில்?” புலவர் தன் மனத்தின் ஆழந்திலுள்ளதை அறிந்து கொண்டுவிட்டாரே என்ற பீதியால் சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டாள் அவள்.
“இதுவரை நான்கு வீரர்களை மூங்கில் கோட்டைக்கு அனுப்பி இருக்கிறோம் அல்லவா?” என்றார் புலவர்.
“ஆம்.”
“ஒவ்வொருவரும் பெரும் போர்களைக் கண்டவர்கள்.”
“ஆம்.”
“அச்சத்தை அறியாதவர்கள்.”
“ஆம்.”
“இவனோ…” என்ற புலவரை, “வாலிபர்” என்ற இமயவல்லியின் சொல் இடைமறித்தது. அதில் தனிப் பட்ட இன்ப ஒலி இருந்ததைப் புலவர் கண்டு கொண்டார். அதுவரை புரியாத பல விஷயங்கள் அப்பொழுது மிகத் தெளிவாகப்
புரிந்தது புலவருக்கு. அடுத்து வந்த அவர் சொற்களில் அனுதாபம் பூரணமாகத் தொனித்தது. “ஆம் இமயவல்லி, ஏற்கனவே சென்ற நால்வரை ஒப்பிட்டால் இவன் மிகவும் இளைஞன்; அதிக அனுபவம் இல்லாதவன்.”
இமயவல்லி பதில் சொல்லாமல் ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள். புலவரே மேற்கொண்டு சொன்னார். “அத்தனை போர்ப் பயிற்சியும் திண்மை உடலும் பெற்ற மகாவீரர் நால்வரின் சடலங்களும் இரண்டு
நாள்களுக்குள் கிடைத்துவிட்டன. இவன் போன சுவடே தெரியவில்லையே?”
இமயவல்லியின் இதயத்தில் திகில் எழுந்ததால் முகத்தையும் அந்தத் திகில் மேகம் மூடியது. “ஒரு வேளை…” என்று துவங்கிய அவள் பேசமாட்டாமல் விக்கினாள்.
புலவர் அவள் நினைப்பது தவறென்பதற்கு அடையாளமாகக் கையை அப்புறமும் இப்புறமும் ஆட்டி விட்டு, “கோட்டைக்குள்ளே கொன்று புதைத்திருப்பார்களென்று நினைக்கிறாயா? ஒருக்காலுமிருக்காது” என்றார் புலவர்.
“ஏன்?” துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டாள் இமயவல்லி.
“நெடுஞ்செழியன் உத்தரவு அந்த விஷயத்தில் திட்டமாயிருக்கிறது. கொன்ற பின் காட்டில் சடலத்தைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் கோட்டை வீரர்கள்.”
“எதற்கு?”
“இங்கும் நெடுஞ்செழியனின் பகைச்சுவையும் நகைச்சுவையும் இருக்கிறது.”
“நகைச்சுவையா புலவரே?”
“மாந்தரஞ்சேரல் இரும்பொறையை சிறை மீட்க ஏதோ முயற்சி நடக்கிறது என்பது மட்டும் நெடுஞ்செழியனுக்குத் தெரியும். அப்படி நடப்பதாயிருந்தால் கோட்டையை அடுத்திருக்கும் காட்டின் மூலந்தான் அது நடக்க முடியும்
என்பதும் அவனுக்குத் தெரியும். ஆகையால் சடலங்களைத் தூக்கி அங்கு எறியச் சொல்கிறான். ‘உங்கள் ஆள் இதோ இருக்கிறான், தூக்கிச் செல்’ என்று நெடுஞ்செழியன் பரிகசித்துச் சிரிக்கிறான். நெடுஞ்செழியனுக்கு நான் தமிழ்
பயிலுவிக்கும் ஆசிரியர்தான். ஆனால், அவன் நெஞ்சாழத்தை என்னால் இன்னும் அளவிட முடியவில்லை இமயவல்லி. ஆகவே ஒன்று மட்டும் நிச்சயம். இதில் இளமாறன் இறக்கவில்லை. அவனை நெடுஞ்செழியன்தான் வேண்டுமென்று
உயிருடன் விட்டு வைத்திருக்கிறானா, அல்லது இளமாறன் தான் அவன் கையிலகப்படவில்லையா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை” என்றார் புலவர்.
புலவர் விளக்கம் பெரும் ஆறுதலைத் தந்தது இமயவல்லிக்கு, வெடித்துவிட இருந்த இதயத்துக்கு நம்பிக்கை நீரை வார்த்தன, புலவரின் சொற்கள். இருப்பினும் இளமாறன் கதி என்ன ஆயிற்று, அவன் எங்கிருக்கிறான் என்பதை
அறியாததால் இருவரும் பெரும் குழப்பத்துடனும் உறக்கம் பிடிக்காமலும் அந்த இரவைக் கழித்தனர். அடுத்த நாள் பகல் பூராவும் மெதுவாக நகர்ந்தது. அந்தப் பகலிலும் செய்தி ஏதும் வரவில்லை வீரமார்த்தாண்டனிடமிருந்து. ஆகவே
அன்று மாலை ஒரு முடிவுக்கு வந்த புலவர் பெருமான், “இமயவல்லி! இன்றிரவு மூங்கில் கோட்டைக்குப் புறப்படச் சித்தமாய் இரு” என்றார்..
“அங்கு போய் என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டாள் இமயவல்லி.
“இளமாறனைப் பற்றி ஏதாவது தெரிகிறதா என்று பார்க்கலாம்.”
“எப்படிப் பார்ப்பீர்கள்?”
“என் ஒற்றர்கள் இருவர் கோட்டைக்குள் இருக்கிறார்கள்.”
“அவர்களை எப்படி அணுகுவீர்கள்?”
“அவர்களை வெளியே வரவழைக்க வழியிருக்கிறது.”
“என்ன வழி?”
“நாமிருக்கும் இடத்திலிருந்து சருகுகளைச் சேர்த்துப் புகை கிளப்பினால் இரண்டு நாழிகைக்குள் ஓர் ஒற்றன் வருவான்.”
அந்தச் செய்தி பெரும் ஆறுதலாயிருந்தது இமயவல்லிக்கு. அதை ஏன் இத்தனை நாள் புலவர் தன்னிடம் சொல்லவில்லை என்பதை நினைத்து ஓரளவு வியப்பும் கொண்டாள் இமயவல்லி, இதை வாய்விட்டும் கேட்டாள், “இதை இத்தனை
நாள் என்னிடம் சொல்லவில்லையே” என்று.
“சொல்லவில்லை காரணமாக” என்றார் புலவர்.
“என்ன காரணம்?”
“ஒருமுறை ஒற்றன் வெளியே வந்தால் வந்ததுதான். திரும்ப முடியாது. இதுவரை இந்த முறையை நான் கையாளவில்லை. இப்பொழுதுதான் முதன் முதலாகக் கையாளுகிறேன்.” அதற்குமேல் ஏதும் பேச இஷ்டப்படாத புலவர்
பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்யவே இமயவல்லியும் கீழே இறங்கிச் சென்றாள். அந்த நாலாம் இரவின் முதல் ஜாம முடிவில் காட்டுப் பர்ணசாலையை அடைந்த புலவர் பெருமான் சிறிதும் கால தாமதம் செய்யாமல் சருகுகளைச் சேர்க்கச்
சொல்லித் தமது கையாலே அவற்றை நடுவெளியில் கொளுத்திப் புகையை உயரவிட்டார். இருட்டில் அந்தப் புகை எப்படிக் கண்ணுக்குத் தெரியப் போகிறதென்று வீரமார்த்தாண்டன் சந்தேகம் தெரிவிக்கவே, புலவர் சொன்னார்: “இரவில்
மேகங்களைச் சாதாரண மக்கள் கூடப் பார்க்கிறார்கள். உளறாதே வீரமார்த்தாண்டா” என்று.
அப்படிக் கோபத்துடன் நீண்ட நேரம் புகை போட்ட புலவர் பெருமான் கடைசியாகச் சருகுகளின் நெருப்பை அணைக்கச் சொல்லிவிட்டு மீண்டும் பர்ணசாலைக்குள் வந்தவர், ‘இமயவல்லி! நீ உன் குடிசைக்கு சென்று உறங்கு, ஒற்றன்
வர பல நாழிகைகள் ஆகும். வந்ததும் சொல்லி அனுப்புகிறேன்” என்று கூறினார்.
இமயவல்லி அவர் உத்தரவுப்படி தனது குடிசைக்கு சென்று அங்கிருந்த மஞ்சத்தில் படுத்தாள். வேதனை அவள் உள்ளத்தைச் சூழ்ந்து நின்றது. ஒற்றனை எதிர்பார்த்து நின்ற அவள் இதயம் மட்டுமல்ல, புலவரின் இதயமும் பெரும்
கவலையாலும் சங்கடத்தாலும் பீடிக்கப்பட்டு நின்றது. நாழிகைகள் மிக மெதுவாக நகர்ந்தன, எந்த ஒற்றனையும் காணாததால் புலவர் கிழப்புலிபோல் தமது பர்ணசாலையில் உலாவிக் கொண்டிருந்தார். இரண்டாம் ஜாமம் முடிந்ததும்
ஒற்றன் யாரும் வராததால் வியப்பும் கலவரமும் அடைந்தார் புலவர். வேறு வழியின்றி தமது அறையில் உலாவலை நிறுத்திக் கொண்டு தொப்பென்று கட்டிலில் விழுந்தார். கண்களையும் மூடினார்.
எத்தனை நேரம் அப்படி மூடிப்படுத்திருப்பாரோ தெரியாது அவர் சிந்தனை பெரிதும் குழம்பிக் கிடந்தது. புகை கிளப்பி ஒற்றனை வரவழைத்து விஷயம் அறியும் அந்தக் கடைசி அஸ்திரமும் பயனற்றுவிட்டால் இனி தான்
செய்யக்கூடியதெல்லாம் அங்கிருந்த அந்த ரகசிய படையைக் கலைத்துவிட்டு மாந்தரஞ்சேரல் இரும் பொறையின் விடுதலை முயற்சிக்கும் முடிவு கட்டிவிட வேண்டியதுதானென்று தீர்மானித்ததால் ஏக்கப் பெரு மூச்சும் விட்டார். அவர்
அப்படி ஏங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வெளியில் பர்ணசாலைக் கதவைச் சடசட வென்று இமயவல்லி தட்டுவதையும், “புலவரே, புலவரே” என்று அவள் அவசரமாகக் கூச்சலிட்டதையும் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு
கதவைத் திறந்த புலவர் அவள் முகத்திலிருந்த எல்லையற்ற வியப்பைக் கண்டு, “என்ன இமயவல்லி? என்ன நடந்தது?” என்று வினவினார்.
“சற்று முன்பு…” மூச்சு வாங்கியதால் படபடக்கப் பேசினாள் இமயவல்லி.
“சொல், சொல்.”
“மெள்ள என் குடிசைக் கதவை யாரோ திறந்தார்கள்!”
“திறந்து என்ன?”
“இதை என் மஞ்சத்தின் மீது விட்டெறிந்தார்கள்?” என்று ஓர் ஓலைச் சுருளையும் அம்பையும் காட்டினாள் இமயவல்லி.
ஓலையை மட்டும் அவள் கையிலிருந்து பிடுங்கிக் கொண்ட புலவர் பர்ணசாலைக்கு உள்ளே சென்று தமது மஞ்சத்தில் உட்கார்ந்து ஓலையைப் பிரித்து விளக்கொளியில் படித்தார். படித்தவர் முகத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள்
தாண்டவமாடின. “நினைத்தேன். நினைத்தேன்! புலிக்குப் பிறந்தது பூனையாகாது” என்று கூறினார்.
இமயவல்லி ஓடி வந்ததையும் பர்ணசாலைக் கதவைத் தட்டியதையும் தனது இருப்பிடத்திலிருந்து கவனித்ததால், உடனே பர்ணசாலைக்கு வந்த வீரமார்த்தாண்டன், “யார் புலி? யார் பூனை?” என்று ஏதும் புரியாமல் வினவினான்.
பதிலுக்கு ஓலையை நீட்டினார் புலவர். ஓலையைப் படித்த வீரமார்த்தாண்டன் சிலையென நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் நின்று விட்டான்

Previous articleMoongil Kottai Ch17 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here