Home Historical Novel Moongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

62
0
Moongil Kottai Ch19 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 அகல் விளக்கு அணுகிய ஆபத்து!

Moongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்று உணர்ச்சிகள் குமுறிப் பிரவகிக்கக் கூறிய புலவர் நீட்டிய ஓலையை வாங்கிப் படித்த வீரமார்த்தாண்டன், மித மிஞ்சிய பிரமிப்பால் அசைவற்றுப் பல வீநாடி நின்று விட்டான். கையில்
பிடித்திருந்த ஓலையில் ஓடிய வரிகளைத் திரும்பப் படித்துப் பார்த்த பின்பும் அவை நம்பமாட்டாததால் விவரிக்க இயலாத வியப்புடன் புலவரை நோக்கித் தன் கண்களை உயர்த்தினான். அவன் கண்களில் விரிந்த பிரமிப்பையும்
வியப்பையும் கவனித்த புலவரும் தலையை ஆட்டி, “ஆம் வீரமார்த்தாண்டா! நம்ப முடியாதது நடந்திருக்கிறது” என்று கூறி மீண்டும் ஓலையை அவனிடமிருந்து வாங்கித் திரும்பவும் அதை ஊன்றிப் பார்த்தார். “ஆம். ஆம். சந்தேகமில்லை.
இது இளமாறன் எழுதிய ஓலைதான். என்றும் கூறினார், அத்தனை விநாடிகளுக்குப் பின்பும் உணர்ச்சி குறையாமல்.
வீரமார்த்தாண்டனுக்கு அப்பொழுதும் பூர்ண நம்பிக்கை பிறக்காததால், “அத்தனை திட்டமாக எப்படிச் சொல்லமுடியும் புலவரே? நமது வீரர்களை அழிக்க எதிரிகள் செய்யும் சூதாக இந்த ஓலை ஏன் இருக்கக் கூடாது?” என்று
வினவினான்.
புலவர் தமது விழிகளை அவனை நோக்கி உயர்த்தி, “இப்படிவா!” என்றழைத்து ஓலையின் அடிப்பாகத்தை விரலால் சுட்டி, “இதைப் பார். இது உங்கள் அரசர் முத்திரை அல்லவா” என்று வினவினார்.
“ஆம்” என்று தலையை ஆட்டினான் வீரமார்த்தாண்டன்.
“முத்திரை சரியாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் எழுத்தாணியைக் கொண்டு” என்று புலவர் மீண்டும் விளக்கினார். த
“ஆம்.”
“இதே மாதிரிதான் நானும் பொறித்திருந்தேன் சேர மன்னன் முத்திரையை, இளமாறனுக்கு நான் ஓலையனுப்பிய போதும்.”
“அப்படியா!”
“ஆம்! வீரமார்த்தாண்டா! அதை முன்னிட்டுத்தான் இளமாறனும் ஓலையின் அடியில், எந்த மூலையில் நான் முத்திரையைப் பொறித்திருந்தேனோ அதே மூலையில் பொறித்திருக்கிறான். இது அவன் எழுதிய ஓலைதான். சந்தேகமில்லை.
இதன்படி நாம் நடக்கவேண்டியது தான்” என்ற புலவர் வீரமார்த்தாண்டன் கருத்தை அறிய அவன் முகத்தை நோக்கினார்.
வீரமார்த்தாண்டன் முகத்தில் அப்பொழுதும் சந்தேகக்குறி படர்ந்து நின்றது. இதன்படி நடந்தால் ஏற்படக்கூடிய விளைவு என்ன என்பதை உணர்ந்தீர்களா புலவரே?’ என்று வினவினான் சேரநாட்டுத் தளபதி.
“ஓலையில்தான் அது கண்டிருக்கிறதே, சேர மன்னர் விடுதலைதான் விளைவு” என்றார் புலவர்.
“இந்த ஓலையை அப்படியே நம்புகிறீர்களா?”
“ஏன் நம்பக்கூடாது?”
“ஏற்கனவே சென்ற நால்வர் சாமான்ய வீரர்கள் அல்லர்.”
“அல்லர்.”
“அவர்களில் யாரும் சாதிக்காததை இந்த அனுபவமில்லாத வாலிபன் சாதிக்க முடியுமா?”
புலவர் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. அந்தப் புன்முறுவலின் சாயை முகம் பூராவும் படரவும் செய்தது.
“அவர்கள் சாதிக்க முடியாத காரியத்தை இவன் சாதிக்கவில்லையா, வீரமார்த்தாண்டா?” என்று வினவினார் புலவர்.
“எதைச் சாதித்துவிட்டான்?” என்று கேட்டான் தளபதி.
அவர்களில் ஒருவர் கூட தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. இவன் அதைக் காத்துக் கொண்டுவிட்டானே” என்று சாதனையைச் சுட்டிக் காட்டினார் புலவர் பெருமான்.
அது பெரிய சாதனைதான் என்பது வீரமார்த்தாண்டனுக்குத் தெரிந்திருந்தும் உள்ளூர எழுந்த பொறாமை அதை ஒப்புக்கொள்ள மறுத்ததால் அவன் பதிலேதும் சொல்லவில்லை. அவன் உள்ள உணர்ச்சிகள் புலவருக்கும் புரிந்ததால்
அவர் ஓரளவு சினங்கொண்டார். இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல் சொன்னார்: “வீரமார்த்தாண்டா! சேர மன்னனை விடுவிக்க எத்தனைத் தந்திரங்களைக் கையாண்டோம் இதுவரை? ஏதாவது பலித்ததா? இப்பொழுது
பலிக்கும்போது நம் சொந்த உணர்ச்சிகள் மகிழ்ச்சியில் குறுக்கிடாதிருக்கட்டும். இளமாறன் வாலிபன் தான். அனுபவமற்றவன் தான். ஆனால், அனுபவசாலிகள் சாதிக்க முடியாததை இவன் சாதித்திருக்கிறான், முதல் சாதனை அவன்
இறக்காதது. இரண்டாவது சாதனை நான்கு நாள் களாகியும் அவன் மூங்கில் கோட்டைக்குள் உயிருடனிருப்பது. மூன்றாவது சாதனை அங்கிருந்து ஓலையும் அனுப்பியது. இந்த சாதனைகளே போதும் அவன் வீரத்துக்குக்
கட்டியங்கூற. அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் நமக்கு எவ்விதக் கஷ்டமுமில்லாமல் சேர மன்னனையும் நம்மிடம் ஒப்படைப்பதாகக் கூறுகிறான். இன்னும் என்ன எதிர்பார்க்கிறாய் அவனிட மிருந்து?” என்று அத்துடன் நில்லாத
புலவர், “வீரமார்த்தாண்டா! இளமாறன் நமக்கு இடும் கட்டளைகளை நன்றாகக் கேட்டுக்கொள்.”
என்றும் கூறிவிட்டு இமயவல்லியிடம் ஓலையை நீட்டி, “இப்படிவா இமயவல்லி. இந்த விளக்கொளியில் மீண்டும்—ஓலையைப் படி, கேட்போம்” என்றார். இமயவல்லி தெளிவாகவும் திடமாகவும் படித்தாள். அதில் கீழ்க்கண்டபடி
எழுதியிருந்தது.
“புலவர் பெருமானே! இந்த ஓலை கிடைத்த மறு நாள் இரவு இரண்டாம் ஜாம ஆரம்பத்தில் சேர நாட்டுத் தளபதியுடனும் மற்றைய வீரர்களுடனும் காட்டின் வடக்குப் பகுதியின் மூலையில் காத்திருங்கள். அந்தப் பகுதிக்கு எதிரேயுள்ள
கோட்டைச் சுவரின் மீது ஓர் அகல் விளக்கு எரியும். அது அணைந்த ஒரு ஜாமத்திற்குள் சேர மன்னர் உங்களிடம் வருவார். மன்னரை சேரர் தளபதியும் வீரர்களும் பாதுகாத்து அழைத்துக்கொண்டு காட்டுமார்க்க மாக சோழ நாடு நோக்கி
விரையட்டும். நீங்களும் இமயவல்லியும் மதுரைக்குச் சென்று விடுங்கள். யாரும் காட்டில் தங்க வேண்டாம். ஆண்டவன் அருளிருந்தால் மீண்டும் சந்திப்போம்.”
-இளமாறன்
ஓலையை இமயவல்லி படித்து முடித்ததும் தீர்க்கா லோசனையில் இறங்கினார் புலவர் பெருமான். அவர் அடிக்கடி தலையை ஆட்டியதிலிருந்து ஓலையில் கண்ட செய்தியை அவர் பூரணமாக ஜீரணித்துக் கொள்ள முயல்வதாகத்
தோன்றியது மற்ற இருவருக்கும். நீண்ட நேர யோசனைக்குப் பின்பு வீரமார்த் தாண்டனை நோக்கிய புலவர், “வீரமார்த்தாண்டா! ஓலை தெளிவாயிருக்கிறது. மன்னர் நாளை சிறை மீட்கப்படுவார். ஆகவே ஓலையில் கண்டதைச் செய்யச்
சித்தப்படு” என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைப் பிறப்பித்த புலவர் பார்வையிலும் குரலிலும் உறுதி பரிபூரணமாக இருந்தது. உத்தரவுக்கு எந்தவித ஆட்சேபணை தெரிவித்தாலும் புலவரின் சீற்றத்துக்கு இலக்காக நேரிடுமென்பதை
உணர்ந்த வீரமார்த்தாண்டன் புலவருக்குத் தலை வணங்கி வெளியே சென்றான்.
அவன் சென்றதும் புலவரும் இமயவல்லியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவர் கண்களும் பரஸ்பரம் அவர்கள் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை நன்றாகப் பிரதிபலிக்கவே செய்தன. அந்த
எண்ணங்களின் விளைவாக சோகப் பெருமூச்சு விட்ட புலவர், தமது ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, “நான் தான் கவனித்தேனென்று நினைத்தேன். நீயும் அதைக் கவனித்தாயா?” என்று வினவினார்.
இமயவல்லியின் நாசியிலிருந்து பெருமூச்சு வெளி வந்தது. “கவனித்தேன்” என்றாள் அவள் தலை குனிந்த வண்ணம்.
“சேர மன்னரை அழைத்து வருவேன் என்று எழுதவில்லை இமயவல்லி!” என்றார் புலவர் வருத்தந் தோய்ந்த குரலில்.
“ஆம்…” வேதனையே சொல்லாக வெளி வந்தது இமயவல்லியின் இதழ்களிலிருந்து.
“சேர மன்னர் உங்களிடம் வருவார் என்று எழுதியிருக்கிறான்.”
“ஆம் புலவரே!”
“ஆண்டவன் அருளிருந்தால் மீண்டும் சந்திப்போம் என்று குறிப்பிட்டு இருக்கிறான்.”
இமயவல்லி மேற்கொண்டு பதிலேதும் சொல்லவில்லையே தவிர, நின்றவண்ணமே குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் வேதனையைப் பார்த்த புலவருங்கூட அந்த வாலிபன் உயிரைப் பணயம் வைத்து சேர மன்னனை விடுவிக்க
வேண்டியது அவசியம்தானா என்று தோன்றியது. அத்தகைய எண்ணம் உள்ளத்தில் எழுந்ததை ஒரே விநாடியில் உதறித் தள்ளினார் புலவர். “நாட்டு நலனுக்கு வீரர்கள் தியாகம் தேவையாய் இருக்கிறது. என்ன செய்வது?” என்று
தமக்குள்ளேயே சொல்லிக்கொண்ட புலவர், இமயவல்லியை நோக்கி, “நீ சென்று படுத்துக்கொள் இமயவல்லி. இனி நாம் செய்யக்கூடியது எதுவுமில்லை” என்றார். இமயவல்லி மேலும் பேசாமல் கண்ணீரை முந்தானையில்
துடைத்துக்கொண்டு தனது குடிலை நோக்கிச் சென்றாள்.
உணர்ச்சிப் பெருக்கால் புலவரும் சரி, இமயவல்லியும் சரி, ஓலை கொண்டு வந்தது யார்? அதை ஏன் கையால் விட்டெறிந்தான்? வந்தவன் ஓலையை இமயவல்லி படுக்கையின் மீது எறிவானேன்? வந்தவன் எப்படி மறைந்தான்? ஏன்
மறைந்தான்? என்று விவரங்களைப்பற்றி யோசனையே செய்யவில்லை. இளமாறனைப்பற்றிய எண்ணங்களே அவர்கள் இதயங்களை அடைத்துக் கொண்டிருந்தன. ஆனால் இளமாறனிடம் எந்தவிதப் பாசம் ஏதுமில்லாத வீரமார்த்தாண்டன்
மட்டும் இந்தக் கேள்விகளைத் தானே எழுப்பிக் கொண்டதன்றி, வந்தவன் இளமாறனைத் தவிர வேறு யாருமிருக்க முடியாதென்ற தீர்மானத்துக்கு வந்தான்.
ஆகையால், மறுநாள் காலையில் அதைப்பற்றிப் புலவரைக் கேட்டான். அதுவரை வந்தவனைப்பற்றிச் சிந்தனையில்லாத புலவரும் அவனைப்பற்றி யோசித்து சிறிது குழம்பினார். இருப்பினும் கடைசியில் திட்டமாகச் சொன்னார்,
“வீரமார்த்தாண்டா! ஓலையை யார் எறிந்தாலென்ன? ஓலையில் கண்ட விஷயம் முக்கியம். அதன்படி நடப்பதில் நமக்கு எந்தவித நஷ்டமுமில்லை. தவிர சேரமான் இப்பொழுது தப்பவில்லையேல் வேறு சமயம் தப்புவதும் சாத்தியமில்லை”
என்று.
வீரமார்த்தாண்டன் சந்தேகம் அப்பொழுதும் தீரவில்லை. “ஒருவேளை இந்தக் கடிதம் சூதாயிருந்து நமது வீரர்கள் வளைத்துக் கொள்ளப்பட்டால் என்ன செய்வது?” என்று வினவினான் அவன்.
புலவர் நன்றாக நிமிர்ந்து நின்றுகொண்டு அவனை வெறுப்புடன் நோக்கினார். “போரில் எதிரிகளால் சூழப்பட்டால் என்ன செய்வாய்?” என்று வெறுப்புடன் வினவவும் செய்தார்.
“போரிடுவேன்” என்றான் வீரமார்த்தாண்டனும் கம்பீரத்துடன்.
“அதை இப்பொழுதும் செய்யலாம்” என்றார் புலவர் இகழ்ச்சியுடன்.
வீரமார்த்தாண்டன் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. அன்று முழுவதும் வீரர்களைப் பயணத்துக்குத் தயார்ப்படுத்தினான். வீரர்கள் தங்கள் போர்க் கலங்களைப் பூண்டு போருக்குச் சன்னத்தமாக நின்றார்கள்.
மெள்ள மெள்ள இரவும் நெருங்கி வந்தது. முதல் ஜாமமும் வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அது நகர்ந்து நடுப்பாதிக்கு வந்த சமயத்தில் புலவர் பெருமான் தமது பர்ணசாலையிலிருந்து இமயவல்லியுடன் வெளிப்போந்து
புறப்படத் தயாராக நின்ற வீரர்களை ஒருமுறை பார்த்தார். பிறகு அவர்களை நோக்கி, “வீரர்களே! சேர மன்னர் இன்னும் ஒரு ஜாமத்தில் உங்கள் வசம் ஒப்படைக்கப்படுவார். அவரைக் காத்து அழைத்துச் செல்லுங்கள். வாழட்டும் சேரநாடு,
ஒழியட்டும் போர் இனித் தமிழகத்தில்” என்று நா தழுதழுக்கச் சொல்லி உறுதியாகத் தமது கால்கள் நிலத்தில் பாவ அவர்களுக்கு வழிகாட்டி நடந்து சென்றார். இமயவல்லி அவருக்குப் பின்பும் அவர்களுக்குப் பின்பு வீரமார்த்தாண்டனும்
சென்றார்கள். அவர்களை பின்பற்றி வீரர்கள் நடந்தார்கள்,
நல்ல இருட்டில் வானம் வீசிய சிறு இயற்கை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் ஏதுமின்றி அந்தக் கோஷ்டி மௌனமாக நடந்து சென்றது. வீரர்களின் பாதங்கள் இலைச்சருகுகளில் பட்டதால் ஏற்பட்ட சலசலப்புச் சத்தத்தையும்,
காட்டு ஜீவராசிகள் கிளப்பிய நானாவித சப்தங்களையும் தவிர வேறு எந்த அரவமுமில்லாததால் மிதமிஞ்சிய பயங்கரம் எங்கும் நிலவிக்கிடந்தது. அந்த இரவில் நிகழ இருந்த சம்பவங்களை நினைத்துச் சலனப்பட்டன போல் மரத்தின்
இலைகள் கூட காற்றில் சலசலத்து ஏதோ ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையிலும் சிறிதும் கலங்காமலே நடந்தார் புலவர், வெற்றியை நாடிச் செல்லும் வீரத் தளபதிபோல. இமயவல்லியின் இதயம் பெரிதும்
நெகிழ்ந்துகிடந்தது. அந்தச் சமயத்தில் அவள் சேர மன்னனையும் நினைக்கவில்லை. பாண்டிய மன்னனையும் நினைக்கவில்லை. தன் இதய மன்னனை நினைத்துக்கொண்டே நடந்தாள். காட்டின் வடக்குப் பகுதியை நோக்கி அவள்
வைத்த ஒவ்வோர் அடியிலும் சோகம் பிரதிபலித்தது. அவள் மலரடிகள் சோகத்தால் அழுந்தி நடந்ததால் கீழே மடிந்து கிடந்த இலைச்சருகுகள் பொடியாகி மண்ணுடன் கலந்தன. மெள்ள மெள்ள இதய கனத்தால் கால்கள் அழுந்த அழுந்த,
நடந்தாள் அவள். கனவில் நடப்பவள் போல நடந்த அவளுக்குக் காட்டின் வடக்குப் பகுதிக்கு வந்து விட்டது கூடத் தெரியவில்லை. புலவர், ‘மகளே !” என்று அன்புடன் அழைத்த பின்பே அவள் கனவுலகத்திலிருந்து மீண்டாள்..
அப்படி மீண்ட பின்பும் உடலும் உள்ளமும் துவண்டு கிடந்ததால், “ஏன் புலவரே!” என்று தீனமான குரலில் கேட்டாள் இமயவல்லி.
“இளமாறன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விட்டோம்” என்றார் புலவர்.
“சரி” என்றாள். இமயவல்லி உணர்ச்சியற்ற குரலில். மேற்கொண்டு இருவரும் பேசவில்லை. இருவர் கண்களும் எதிரே தெரிந்த கோட்டையை நோக்கின. கோட்டையை அடுத்துக் கிடந்த, பார்வைக்கு ஆபத்தற்ற, ஆனால் பயங்கர
அகழிகளை உள்ளடக்கியிருந்த நிலப்பரப்பையும் கண்டன.
அந்தப் பொட்டல் வெளி இமயவல்லியின் உடலை ஒரு முறை ஆட்டியது. அதன் கீழே இருக்கும் பெரும் முதலைகளின் சத்தம் அங்கு வெளிக்குக் கேட்கவில்லையாயினும் உள்ளே அவற்றின் பயங்கரச் சத்தம் எப்படி இருக்குமென்பதை
உணர்ந்திருந்ததால் அவள் பெரிதும் நடுங்கினாள். கருணை வள்ளலான தன் சகோதரன் நெடுஞ்செழியன் கேவலம் விரோதத்தால் எத்தகைய ஒரு பயங்கர கோட்டையை ஸ்தாபித்து விட்டான் என்பதை நினைத்து நினைத்து அவள் மனம்
புழுங்கினாள். அந்த அகழியை நினைத்ததால் உண்டான பயம் இளமாறன் கதியை எண்ணியதால் ஏற்பட்ட இதய வெடிப்புக்கு இடம் கொடுக்கவே அவள் விழிகள் பயத்துடன் கோட்டையை நோக்கின. கண்களில் நீர் சுரக்கவில்லை. சுரக்க
இருந்த நீர் உள்ளே எழுந்த வெப்பத்தால் வறண்டு போயிருக்க வேண்டும்.
புலவரும் இமயவல்லியும் அவரவர் எண்ண அலைகளில் உருண்டிருந்ததால் மற்ற வீரர்களுக்கு மெதுவாக நகர்ந்த இரவு அவர்களுக்கு மட்டும் வெகு வேகமாக ஓடியது. இரண்டாம் ஜாமமும் துவங்கியது.
இரண்டாம் ஜாமம் நெருங்கிவிட்டதையும் விண் மீன்களை ஒருமுறை நோக்கியதால் உணர்ந்துகொண்ட வீரமார்த்தாண்டன் இரண்டாம் ஜாமம் துவங்கி விட்டதை புலவருக்குத் தெரியப்படுத்தினான். புலவரும் ஒரு முறை ஆகாயத்தைப்
பார்த்து அதை ஊர்ஜிதம் செய்துகொள்ளவே. அனைவரையும் சன்னத்துடன் இருக்கும்படி எச்சரித்துக் கோட்டையின் மதில்மீது கண்களை நிலைக்கவிட்டார். நேரம் மட்டும் அவர் அவசரத்துக்குப் பணிய மறுத்து மெல்ல மெல்ல நகர்ந்தது.
அப்படி நகர்ந்ததால் சாதாரண காலத்தில் வனத்தின் பட்சி ஜாலங்களின் சப்தங்களைக் கேட்டு ரசிக்கவல்ல புலவர் பெருமான் அவற்றிடம் சீற்றமே கொண்டு ‘ச்சு’ என்ற அலுப்புடன் சப்தம் கொட்டினார்.
நேரம் நகர நகர புலவரின் தீட்சண்யமான கண்கள் கோட்டையின் மதிலை துளைத்து விடுவனபோல் பார்த்துக்கொண்டிருந்தன. இரண்டாம் ஜாமம் பாதி ஆகியும் எந்த அகல் விளக்கும் தெரியாதுபோகவே புலவர் இதயமும் ‘திக்கு
திக்கு’ என்று அடித்துக் கொண்டது. ‘ஒருவேளை வீரமார்த்தாண்டன் சொன்னது போல் கடிதம் சூதாக இருக்குமோ?’ என்று கூட எண்ணினார். அப்படி எண்ணி அவர் வீரமார்த்தாண்டனைப் பார்க்கத் திரும்பியபோது, “அதோ!” என்ற
இமயவல்லியின் மென்மைக் கூச்சல் புலவர் கண்ணைக் கோட்டையை நோக்கித் திருப்பியது.
கோட்டையின் கீழிருந்த ஒரு விளக்கு கிளம்பி கோட்டைச் சுவர்மீது உட்கார்ந்தது. மினுக்கென மிக இழிந்து எரிந்த அந்த விளக்கின் ஒளி திடீரெனச் சற்றுப் பெரிதாகச் சுடர் விடவே, யாரோ திரியைத் தூண்டுகிறார்கள் என்பதை மட்டும்
புலவரும் இமயவல்லியும் புரிந்துகொண்டார்கள். சுடர் பெரிதான விளக்கு ஒரு விநாடிதான் எரிந்தது. மீண்டும் திரி பின்னால் இழுக்கப் பட்டு அணைந்தது. விளக்கு சுடரின் ஏற்றத்தையும் தாழ்வையும் மறைவையும் இமை
கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த புலவர், வீரமார்த்தாண்டனை அணுகி, “தளபதி! வீரர்கள் எந்த விநாடியிலும் விரையத் தயாராகட்டும்” என்று எச்சரித்து அவன் பக்கத்திலேயே நின்றார்.
நாழிகைகள் ஓடின. காட்டினூடே புகுந்து காற்றின் சத்தத்தையும் எங்கிருந்தோ கத்திய புலி, ஓநாய் இவற்றின் சப்தங்களையும் தவிர வேறு எவ்வித சப்தமும் இல்லாததால் வீரர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு வாளை
உருவிக்கொண்டு நின்றனர். இரண்டாம் ஜாமமும் முடிந்து மூன்றாம் ஜாமம் துவங்கியதும் கோட்டைப் புறமிருந்து யாரும் வரும் வழியாகக் காணாததால் வீரமார்த்தாண்டன் ஒரு சந்தேகம் கேட்டான், “கோட்டையில் இருந்து வெளிவர
இந்தப் பகுதியில் வழி இருக்கிறதா?” என்று.
“எனக்குத் தெரிந்தவரையில் இல்லை” என்றார் புலவர்.
“உங்களுக்குத் தெரிந்த வழி?”
“பாழடைந்த மண்டபச் சுரங்க வழிதான்.”
“பின் அங்கல்லவா நாம் காத்திருக்க வேண்டும்?”
“ஓலையில் குறிப்பிட்டிருப்பது இந்த இடத்தை” புலவர் திடமாக இப்படிச் சொன்னதால் வீரமார்த்தாண்டன் மேற்கொண்டு ஏதும் சொல்லவில்லை.
அடுத்தபடி எல்லோரும் மௌனமே சாதித்தார்கள். மூன்றாம் ஜாமம் துவங்கி நாழிகைகள் நான்கு ஓடியும் ஏதும் நடக்காததால் புலவர் பெரிதும் சங்கடப்பட்டார். அந்தச் சமயத்தில் இமயவல்லி திடீரென மூச்சை இழுத்துப்
பிடித்துக்கொண்டாள். “புலவரே! அதோ! அதோ!” என்று பொட்டல் வெளிப்பரப்பைச் சுட்டிக் காட்டினாள்.
அவளது வலது கை காட்டிய இடத்தைப் புலவரும் மற்றோரும் ஊன்றிக் கவனித்தார்கள். பொட்டல் வெளியில் ஏதோ உருவம் அசைந்தது தெரிந்தது புலவருக்கு. அது சேர மன்னன்தான் என்று எண்ணி முதலில் மகிழ்ந்த புலவர்
திடீரெனப் பெரும் திகில் கொண்டார். நான்கு உருவங்கள் அசைகின்றன இமயவல்லி! அதோ பார். அதோ! அதோ!” என்று சுட்டிக் காட்டினார்.
இமயவல்லியின் கண்கள் மட்டுமின்றி, வீரமார்த்தாண்டன் கண்களும் அந்த உருவங்களைத் தொடர்ந்தன. அந்தச் சமயத்தில் வீரமார்த்தாண்டன் கேட்டான்: “புலவரே! அதோ நகரும் உருவங்கள் மனித உருவங்களா?” என்று. புலவருக்கும்
அந்தச் சந்தேகம் எழுந்தது. ஓர் உருவமும் மூன்றடிக்குமேல் உயரமில்லை. தானும் அறியாத பேராபத்து வருகிறது என்பதை நிச்சயம் செய்து கொண்ட புலவர், “வீர மார்த்தாண்டா! வாளை உருவிக்கொள். வீரர்களும் போருக்குத்
தயாராகட்டும்” என்றார்.
மனித உருவத்தில் பாதி உருவம் பெற்றிருந்த அந்த நான்கு உருவங்களும் வெளியில் புலவரும் மற்றோரும் இருந்த இடத்தை நோக்கித் துரிதமாக நகர்ந்து வந்தன.

Previous articleMoongil Kottai Ch18 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here