Home Historical Novel Moongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

59
0
Moongil Kottai Ch20 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 சித்தரின் கோபம்

Moongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

நல்ல இருட்டில் அந்தப் பொல்லாக் கோட்டையின் உட்கட்டடம் பெரும் பிசாசுகள் போல் பின்னணி அமைத்துக்கொடுக்க, எதிரேயிருந்த பொட்டல் வெளியில் அந்த மூன்றடி உயர உருவங்கள் குட்டிப் பிசாசு களைப்போல
துரிதத்துடன் நகர்ந்துவர, அவற்றை நோக்கிய வண்ணம் புலவரும் அவர் கூட்டமும் மூச்சை இழுத்துப் பிடித்தபடி. விநாடி ஓடுவதை எண்ணி நிற்க, காலம் பயங்கரமாக மெள்ள நகர்ந்தது. அப்படிக் காலம் நகர நகர அந்த நான்கு
உருவங்களும் கண்களால் சரியாகக் கவனிக்கக் கூடிய தூரத்தை அணுகி விடவே புலவர் அவற்றை ஊன்றிக் கவனித்து அவற்றின் உயரம் ஆள் உயரத்தில் பாதி இருக்கும் காரணத்தைப் புரிந்துகொண்டார். அந்த நான்கு உருவங்களும்
கோட்டையிலிருந்து பார்ப்பவர் கண்களுக்குப் புலப் படாதிருப்பதற்காக மண்டியிட்டும் தவழ்ந்தும் வந்ததாலேயே அவற்றின் உயரம் அத்தனை குறைவாயிருப்பதையும் வந்த உருவங்கள் மனித உருவங்கள் என்டர்தில் சந்தேகமில்லை
என்பதையும் உணர்ந்துகொண்ட புலவர் அதைப்பற்றி இமயவல்லியிடமும் தெரியப்படுத்தினார். அதை அவருக்கு முன்பே கவனித்துவிட்ட இமயவல்லி, “ஆம், ஆம், புலவரே! சேர நாட்டு வாலிபர் மிகுந்த சாகசத்துடன்தான் காரியத்தை
முடித்திருக்கிறார்” என்று கூறினாள். அந்த உருவங்கள் தவழ்ந்து வருவதில் என்ன பெரிய சாகசம் இருக்க முடியுமென்பதை உணராத வீரமார்த்தாண்டன் மட்டும் கேட்டான்: “இதில் என்ன அப்பேர்ப்பட்ட சாகசம் இருக்கிறது?” என்று.
“அதோ பார் வீரமார்த்தாண்டா! கோட்டைக்குள் இருக்கும் நடுக்கட்டடத்தின் நிழல் பொட்டல் வெளியில் இந்தப் பகுதியில் மட்டும் அதிக இருட்டை அடித்திருக்கிறது. அதில் எழுந்து நடந்தால் தலைமீது கோட்டை விளக்கு வெளிச்சம்
விழும்! மனிதர் நடமாடுவது தெரியும். ஆகையால்தான் இவர்கள் மண்டியிட்டும் தவழ்ந்தும் வருகிறார்கள்” என்று புலவர் விளக்கினார். அதைத் தொடர்ந்து இமயவல்லியும் கூறினாள் : “அது மட்டுமல்ல, இந்தப் பொட்டல் வெளியின்
தரை பொய்த்தரை. இதன் மேலேயுள்ள மெல்லிய பொடி மண் பூச்சுக்குக் கீழே ஆங்காங்கு மூங்கில்கள் இருக்கின்றன. அவற்றில் எங்காவது கால்பட்டு மூங்கில் முறிந்தால் கீழிருக்கும் அகழியில் விழும்படியாயிருக்கும். தவழ்ந்து
வருவதால் மனித எடை பரவலாகி விடுகிறது. மூங்கில் ஓரிடத்தில் முறிந்தாலும் சற்று நகர்ந்து சமாளித்துக் கொள்ளலாம் கைகளின் உதவியால்” என்று.
இதைக் கேட்ட புலவர் பெருமானின் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. மதில்கோட்டையை அடைவதற்கு இதுவும் ஒரு வழிதான் என்பதை உணர்ந்து கொண்ட அவர் இளமாறன் புத்திக்கூர்மையை மிகவும் வியந்தார். யாருக்கும்
புலப்படாத யுக்திகள் இளமாறன் தந்தைக்கு ஏற்படும் என்பதை அறிந்திருந்த புலவர், தந்தைக்குத் தகுந்த தனயன் தான் இளமாறன் என்றும் தனக்குள்ளேயே சிலாகித்துக் கொண்டார். இளமாறன் திறமையைப் பற்றிய இத்தனை
பாராட்டுதலைச் செய்த அவர் மனம் இளமாறன் நிலை அந்தச் சமயத்தில் எப்படி இருக்கிறதோ என்ற சிந்தனையிலும் இறங்கவே அவர் உள்ளத்தில் திகில் மண்டியது.
“அதோ, தவழ்ந்து வரும் நால்வரில் இளமாறனும் ஒருவனாய் இருப்பானா?” என்று தன்னைத்தானே பல முறை கேட்டுக்கொண்ட குறுங்கோழியூர்க்கிழார், வந்த நான்கு உருவங்களிலேயே கண்ணைப் பதித்துக் கொண்டு
நின்றிருந்தார்,
அந்த உருவங்கள் நான்கும் எத்தனை வேகமாக தவழ்ந்துவர முடியுமோ அத்தனை வேகமாகவே தவழ்ந்து வந்தன. நேரம் ஆக ஆக ஆபத்தும் அதிகமாகுமென்பதை உணர்ந்த புலவர், அவர்கள் தவழ்ந்த வேகம் போதாது என்றே
நினைத்தார். அவர் இதயம் படக்படக்கென்று அடித்துக் கொண்டது.
அதே சமயத்தில் கோட்டைக்குள் திடீரெனப் பரபரப்பு ஏற்பட்டது, தீபங்கள் மிகத் துரிதமாகக் கொளுத்தப்பட்டன.
அடுத்த சில விநாடிகளில் கோட்டைக்குள் பெரும் கூச்சலும் கேட்டது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பிவிட்டத்தைக் கோட்டைக் காவலர் கவனித்து விட்டார்கள் என்பதற்கு அறிகுறியாகப் பந்தங்கள் எங்கும் நடமாடத் தொடங்கின.
கோட்டைச் சுவர்மீதும் பலர் ஏறினார்கள். அதிக நேரம் தாமதித்தால் தவழ்ந்து வரும் நான்கு பேர் மீதும் ஈட்டிகளும் அம்புகளும் கோட்டையிலிருந்து பறந்துவரும் என்பதை உணர்ந்த புலவர் பெருமான் நடுங்கினார். கோட்டை சுவர் மீது
சில நிமிஷங்களுக்கெல்லாம் பந்தங்களைப் பிடித்த காவலர் உலாவி, பந்தங்களைப் பொட்டல் வெளிப்பகுதிகளில் வீசினார்கள். பந்தங்களின் வெளிச்சம் தவழ்ந்து வந்தவர்களின் இடம்வரை வராததைக் கண்ட புலவர் பெருமான் ஆசுவாசப்
பெருமூச்சு விட்டார். வந்த உருவங்களும் சீக்கிரம் காட்டின் முனைப் பகுதியை அடைந்து கொண்டிருந்தன. திடீரெனக் கோட்டையில் அரவம் அதிகமாகியது. அதன் கதவுகள் திறக்கப்பட்டு வீரர்கள் வெளியே ஓடி வந்தனர்.
துரிதமான நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. “அந்தப்புறம் போக வேண்டாம். நில் நில்” என்று வெளியே வந்த வீரர்களை எச்சரித்த குரல் ஒன்று கோட்டையின் உள்ளிருந்து கிளம்பியது. இதையும் கேளாது ஆத்திரத்தில் ஓடி வந்த சில வீரர்கள்
திடீரென, “ஐயோ” எனக் கதறினார்கள். அகழியை மறைத்த மூங்கில்கள் பல இடங்களில் படேல் படேலென முறிவது காதில் கேட்டது. அது முறிந்த அடுத்த விநாடியில் அகழியில் கோபக்கூச்சலுடன் விழுந்த வீரர்கள் இரண்டொருவரின்
அலறல் வானைப் பயங்கரமாகப் பிளந்தது. அதே சமயத்தில் தவழ்ந்து வந்த உருவங்கள் வேகத்துடன் எழுந்தன. அந்த உருவங்களில் ஒன்று கீழே ஓரிடத்தைத் தோண்டிக் கையிலிருந்த இரு கற்களைத் தட்டி நெருப்பை இடவே பூமியிலிருந்து
பெரும் ஜ்வாலை திடீரெனக் கிளம்பியது. அந்த ஜ்வாலையின் ஒளியில் நால்வர் ஓடுவதைப் புலவர் கவனித்தார். மூவர் அவர் இருந்த இடத்தைவிட்டுக் காட்டின் மற்றொரு பகுதியை நோக்கி ஓடினார்கள். ஓர் உருவம் மட்டும் வெகு
வேகமாக ஓடி வந்து திடீரென நின்று தள்ளாடித் தள்ளாடிப் புலவரை நோக்கி வந்தது. புலவர் அந்த உருவத்தைத் தமது கையில் தாங்கினார். முகத்தை உற்று நோக்கினார். அருகிலிருந்த பந்தத்தின் வெளிச்சத்தில், யானைக்கண்சேய்
மாந்தரஞ்சேரல் இரும் பொறை அவருடைய கரங்களில் விழுந்து கிடந்தான். அவன் உடலில் இரண்டோர் இடங்களில் புதிதாகக் கத்திபட்ட காயங்கள் இருந்தன. சேர மன்னனை சில விநாடியே உற்றுப் பார்த்த புலவர் அவன் முகத்தைக்
கையால் தடவிக் கொடுத்து சுரணை வரச்செய்து. “மன்னனே! நீ வாழி! சேரநாடு வாழி!” என்றார்.
யானைக்கண்சேய் கூர்மையான தன் சிறு கண்களைக் கொண்டு புலவரை நோக்கினான். “புலவரே! நீர் வாழி பாட வேண்டியது எனக்கல்ல; நீர் அனுப்பினீரே அந்த வாலிபனுக்கு” என்று கூறி, “விடுங்கள் என்னை, நான் செல்ல
வேண்டும்” என்று எழுந்து நிற்க முயன்றான்.
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட புலவர் பெருமான், “எங்களுக்குக் கட்டளை திட்டமாயிருக்கிறது மன்னவா! நீ போக வேண்டியது சேர நாடு. இதோ உன் படைத்தலைவரும் வீரரும் உன்னை அழைத்துச் செல்லக்
காத்திருக்கிறார்கள்” என்று துரிதப்படுத்தினார்.
யானைக்கண்சேய் அசையவில்லை. “நான் இப்பொழுது செல்ல வேண்டிய இடம் சேர நாடல்ல” என்று பிடிவாதமாகக் கூறினான் சேரமன்னன்.
“வேறெங்கு செல்ல வேண்டும் மன்னவா?” புலவர் குரலில் கோபம் ஒலித்தது.
“என்னைக் காப்பாற்றிய இளைஞன் சென்ற இடத்துக்கு.” மன்னன் குரலில் உறுதியிருந்தது.
“எந்த இடம் அது?” புலவர் கேட்டார் கோபத்துடன்.
“எனக்குத் தெரியாது. எதிர்ப்புறம் ஓடிய மூவரில் அவன் ஒருவன்; அந்த மூவரும் பேராபத்தில் இருக்கிறார்கள்.”
“என்ன ஆபத்து?”
“அவர்கள் ஓடுமிடம் கோட்டையின் ரகசிய வாயிலை நோக்கி. அங்கு அவர்களை நசுக்கப் படை காத்திருக்கிறது.”
“உங்களுக்கெப்படித் தெரியும் அது?”
“அவனே சொன்னான். நான் வேறு போக்குக் காட்டி பாண்டியனிடம் சிக்கிக் கொள்கிறேன், நீங்கள் தப்பி விடுங்களென்று.
புலவர் பெருமூச்செறிந்தார் ஒரு விநாடி. அடுத்த விநாடி தம்மைத் திடப்படுத்திக்கொண்டு, “மன்னவா! என்னை நம்பு. அவன் பாண்டியனிடம் சிக்கினாலும் அவனுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது. உன்னைத் தப்பு விக்க அவன்
பட்டுள்ள கஷ்டம், சமாளித்திருக்கும் ஆபத்து, மிக மிக அதிகம். அவன் காரியத்தை வியர்த்த மாக்காதே. புறப்படு சேரநாட்டுக்கு. அவனைக் காக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடு” என்று சமாதானம் சொன்னார்.
அதற்கு யானைக்கண்சேய் மசிந்தானில்லை. “காத்தவனை எதிரியிடம் கொடுத்துவிட்டு, தன்னுடலைக் காப்பாற்றிக் கொள்ளும் கயவன் என்றா சேரனை நினைத்தீர் புலவரே!” என்று சீறினான் மன்னன்.
புலவர் முகத்தில் கோபக்குறி சுடர்விட்டது. “மன்னா! உன்னைவிட அந்த இளைஞன் எனக்கு வேண்டியவன். அவனைக் காக்கும் வழி எனக்குத் தெரியும். அவன் சென்ற பக்கம் இப்பொழுது நீ சென்றால் அவனுக்கும் அழிவு; உனக்கும்
அழிவு. அவன் சேவையை பயனற்றதாக அடிக்கும் நீ பண்புள்ள மன்னனாக முடியாது. கேள் என் வார்த்தையை. அவன் சொற்படி உன் வீரர்களுடன் செல்; இல்லையேல்…” புலவர் சொற்களில் எச்சரிக்கை இருந்தது.
“இல்லையேல்?” மாந்தரஞ்சேரல் கேட்டான் வெறுப்புடன்.
“உன்னைப் புகழ்ந்த என் நாக்கு இனி உன்னை இகழும். உன்னைப் பாராட்டிப்பாடிய நாக்கு உன்னைக் காத்த இளைஞனுக்கு நீ நன்றியற்று நடந்து அவனையும் அழித்து உன்னையும் அழித்துக்கொண்ட கதையைப் பாடும்?” என்ற
புலவர் ருத்திரன் போலக் காட்சியளித்தார். அத்துடன் நன்றாக நிமிர்ந்துகொண்டு உத்தரவிட்டார்: “செல் உன் நாட்டுக்கு மன்னா! எந்த ஒரு வருக்காகவும் நாடு வாழ்வதில்லை. நாட்டுக்காகவே மன்னன் வாழவேண்டும்” என்று. அத்துடன்
வீரமார்த்தாண்டனையும் விளித்து, “உன் மன்னனை அழைத்துச் செல். பாண்டிய வீரர் இப்புறம் வருமுன்பு” என்றும் கூறினார்.
யானைக்கண்சேய் தள்ளாடி நின்றான், புலவர் சீற்றத்துக்கு முன்பு பதிலேதும் சொல்ல வகையின்றி, வேண்டா வெறுப்புடன் நடந்து சென்ற அவனை வீரமார்த்தாண்டன் ஒரு புரவி மேலேற்றினான். பிறகு புலவரிடம் விடை பெற்று
வீரர்களைக் காட்டினூடே விரையக் கட்டளையிட்டான். சேர வீரர் கூட்டம் காட்டின் வடபுறத்துக்குள் நுழைந்துவிட்ட சில விநாடிகளுக்கெல்லாம் தென்பகுதியில் பெரும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தார் புலவர்
பெருமான் இமயவல்லியுடன். சுமார் இரண்டு நாழிகைப் பயணத்துக்குப் பிறகு அந்தப் பகுதியை அடைந்தவர் எதிரே விரிந்த காட்சியைக் கண்டு அசைவற்றுப் பல விநாடி நின்று விட்டார். பிறகு இமயவல்லியுடன் சற்று எட்ட இருந்த
புதரில் மறைந்து கொண்டு அடுத்து நடப்பனவற்றைக் கவனிக்கத் தொடங்கினார். இளமாறனையும் தமது ஒற்றர்கள் இருவரையும் சூழ்ந்து பாண்டியப் படை வீரர்கள் உருவிய வாளுடன் நின்றிருந்தனர். இளமாறன் தோளிலும் மற்ற
இரு ஒற்றர்கள் உடல்களிலுமிருந்த காயங்களிலிருந்து உக்கிரமான சண்டை அந்த இடத்தில் சில விநாடிகளுக்காவது நடந்திருக்க வேண்டுமென்பதைப் புலவர் ஊகித்துக் கொண்டார். இமயவல்லி வேதனைப் பெருமூச்சு விட்டாள். இனி
இளமாறன் கதி அதோ கதிதானென்பது அவளுக்குச் சந்தேகமறப் புரிந்தது. அவனைக் காக்கும் வழி தனக்குத் தெரியுமென்று சேர மன்னனிடம் புலவர் சொன்னது வெறும் புரட்டுப் பேச்சென்று தீர்மானித்த அவள் புலவரைச் சுட்டு
விடுவதுபோல் பார்த்தாள். ஆனால் அவள் பார்வையைப் புலவர் கவனிக்கவில்லை. எதிரேயிருந்த கூட்டத்தின்மீதே அவர் பார்வை நிலைத்திருந்தது,
நிராயுதபாணியாக்கப்பட்ட இளமாறன் முன்பு நின்ற பாண்டிய சேனாதிபதி மருதன் உக்கிரத்துடன் கேட்டான்: “இப்பொழுது சொல், சேர மன்னர் எங்கே?” என்று.
பதிலுக்கு அவனை நோக்கி நகைக்கவே செய்தான் இளமாறன். அவரை உன்னிடம் காட்டிக் கொடுக்கத் தான் சிறை மீட்டேனென்று நினைக்கிறாயா?” என்று வினவவும் செய்தான் அலட்சியமாக.
“பயங்கரமான காரியத்தைச் செய்திருக்கிறாய் வாலிபனே! இதன் விளைவு என்ன தெரியுமா உனக்கு?” என்று இரைந்தான் மருதன்.
“தெரியும். மரண தண்டனை” என்றான் இளமாறன்.
“இந்தச் சிறு வயதில் உயிரை இழப்பது விவேகமா?”
“உயிர்த் தியாகம் வயதைப் பொறுத்ததல்ல, பணியைப் பொறுத்தது.”
“பாண்டிய மன்னருக்கெதிராகச் செய்யப்படும் பணி சிறந்த பணியா?”
“பாண்டிய வீரர்களுக்கு சிறந்த பணியாகாது. ஆனால், நான் சேர நாட்டைச் சேர்ந்தவன். சிந்தித்துப்பார்.”
இதைக் கேட்ட மருதன் வேங்கையைப்போல் சீறினான். “எப்படியும் சேரன் எங்களிடமிருந்து தப்ப முடியாது. இந்தக் காடு முழுவதையும் சோதனையிட என் வீரர்கள் விரைந்திருக்கிறார்கள். மீண்டும் சேர மன்னர் இந்தக் கோட்டைக்கு
வந்து சேருவார்” என்று மார் தட்டினான் மருதன்.”
“சற்றுத் திரும்பிக் கோட்டையைப் பாருங்கள் தளபதி” என்று கூறிச் சிரித்தான் இளமாறன்.
அவன் சொற்படி திரும்பிப் பார்த்த பாண்டிய சேனாதிபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பொட்டல் வெளியிலிருந்த பல இடங்களில் மூங்கில்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பரவவிட்டால் கோட்டையே
தீப்பிடிக்கும் என்பதை உணர்ந்த பாண்டிய சேனாதிபதி, “இது யார் வேலை?” என்று கூவினான்.
“நான் தான். சில இடங்களில் முன்னதாக மண்ணை அகற்றி வைத்திருந்தேன். இன்று வரும்போதுதான் தீ வைத்தேன்” என்றான்.
பாண்டிய சேனாதிபதியின் கோபம் எல்லை கடந்தது. “இவர்களை இழுத்துச் செல்லுங்கள் மதுரைக்கு. நான் தீயை அணைக்க ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன்” என்று உத்தரவிட்ட சேனாதிபதி திடீரெனத் திரும்பி வீரர் நால்வருடன்
கோட்டையை நோக்கி விரைந்தான். மற்ற வீரர்கள் இளமாறனையும் மற்ற இருவரையும் கட்டி இழுத்துப் புரவிகளில் ஏற்றிக் கையையும் காலையும் பிணைத்து அழைத்துக்கொண்டு சென்றனர்..
சில நிமிஷங்களில் அடியோடு காலியாகிவிட்ட காட்டில் புலவரும் இமயவல்லியும் மட்டும் தனித்து நின்றார்கள். புலவர் முகம் மார்பைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்த வயதிலும் சாதாரண காலத்தில் கம்பீரமாயிருந்த அவர் உடல்
அன்று அவரது வயோதிகத்தைப் பூர்ணமாகக் காட்டியது. அவர் விட்ட பெருமூச்சில் சோகத்தின் எல்லை இருந்தது. “பெரும் பணி முடிந்து விட்டது இமயவல்லி” என்றார் புலவர்.
இமயவல்லி மௌனமாயிருந்தாள். புலவரே மறுபடியும் சொன்னார்: “இனி நீ எந்த வீரனுடனும் இங்கு வரவேண்டிய அவசியமில்லை” என்று நா தழுதழுக்க…
இமயவல்லிக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. “ஐந்தாவது பலியும் கொடுத்துவிட்டோம் புலவரே’ என்றாள் அவள் கண்களில் நீர் சுரக்க.
“மனதைத் தளரவிடாதே இமயவல்லி. இன்னும் இந்தப் புலவன் உயிருடன் இருக்கிறான். இவன் நாக்கு இன்னும் கவி பாடும்” என்றார் புலவர், வருத்தத்தின் ஊடே துணிவையும் காட்டி.
“பாட்டினால் இவர் தப்புவாரா?” துக்கத்துடன் ஏளனத்தையும் காட்டினாள் இமயவல்லி.
“வாளினால் ஆகாதது தமிழகத்தில் பாட்டினால் ஆகியிருக்கிறது.”
“அப்பொழுது சேரமன்னனை விடுவிக்க வாளின் உதவியை ஏன் தேடினீர்கள்?”
“பாட்டினால் சேரன் தப்ப இசையாததால்,”
“சேரன் பிடிவாதத்துக்காக இந்த வாலிபரைப் பலி கொடுக்கத் துணிந்தீர்!”
“அதற்காக அல்ல இமயவல்லி.”
“வேறெதற்காக?”
“நாட்டு நன்மைக்காக, தமிழகத்தின் அமைதிக்காக மீண்டும் போர்கள் ஏற்பட்டு மக்கள் மடியாதிருப்பதற்காக.”
இமயவல்லி புலவர் காரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தாளானாலும் அவள் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. புலவரும் அதிகப்படியாக ஏதும் பேச இஷ்டப்படாமல் காட்டினூடே நடந்து தமது பர்ணசாலை இருக்குமிடம் வந்தார்.
அதன் வாயிலிருந்த காட்சி அவரைத் திகைக்க வைத்தது. எந்த மூடுதேரில் இளமாறனை இமயவல்லி அழைத்து வந்தாளோ, எந்த மூடுதேர் அச்சு முறிந்து காட்டில் சாலையில் கிடந்ததோ, அதே மூடுதேர் செப்பனிடப்பட்டுப் புரவிகளுடன்
நின்றிருந்தது. அதே சாரதி அதன்மீது அமர்ந்து பயணத்துக்குத் தயாராகக் கையில் சாட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தான். புலவரையும் இமயவல்லியையும் கண்டதும் தலை தாழ்த்திய தேரோட்டி அவர்களிருவரையும் ரதத்தில்
ஏறும்படி சைகை செய்தான்.
“ரதத்தை யார் அனுப்பியது?” என்று வினவினார் புலவர்.
“சித்தர்” என்று பதில் வந்தது சாரதியிடமிருந்து.
“அவருக்கு இந்த இடம் எப்படித் தெரியும்?”
“அவரைக் கேட்டால்தான் தெரியும்.”
“எங்கே அவர்?”
பதிலுக்கு சாட்டையைத் தேரின் உட்புறம் காட்டினான் சாரதி. இரண்டு எட்டில் ரதத்தை அடைந்து உள்ளே தலையை நீட்டினார். தலையை நீட்டியவர் நீண்ட நேரம் தலையை வெளியே இழுக்கவேயில்லை. “நீயா! நீயா!” என்ற குரல் மட்டும்
இரு முறை அவர் வாயிலிருந்து வியப்புடன் வெளிவந்தது. அடுத்த நிமிடம் அவரும் இமயவல்லியும் ரதத்தில் அமர, ரதம் மதுரையை நோக்கிப் பறந்தது. விடியற்காலைக்குச் சற்று முன்பே மகர மாளிகைக்குள் நுழைந்த மூவரில் சித்தர்
மட்டுமே சிந்தை கலங்காதிருந்தார். மற்ற இருவர் முகமும் பேயறைந்ததுபோல் கிடந்தது.
மகர மாளிகையில் நீராடி புத்தாடை புனைந்து சிற்றுண்டி அருந்திய பின்பு புலவர் அறையில் கூடிய அந்த மூவரில் சித்தரே துவங்கினார் கதையை. “என்னை இன்னாரென்று நீங்கள் அறியவில்லை புலவரே!” என்று.
“எப்படி நான் ஊகிக்க முடியும்? எப்படி ஊகிக்க முடியும்?” என்று இரு முறை கூவிய புலவர் முகத்தில் வியப்பும் திகிலும் மண்டிக் கிடந்தன.
சித்தரின் இதழ்களில் இகழ்ச்சி நகை புரிந்தது. “முடியாதுதான் புலவரே, முடியாதுதான். இருப்பினும் என் குடும்பத்தில் நீர் கைவைக்கு முன்பு, நீர் தீர யோசித்திருக்கவேண்டும்” என்ற சித்தரின் இளநகை கோப நகையாக மாறியது.

Previous articleMoongil Kottai Ch19 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here