Home Historical Novel Moongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

68
0
Moongil Kottai Ch22 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 நெடுஞ்செழியன் நீதி!

Moongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

வீரனான காதலனுக்கு உயிர்ப்பிச்சை கேட்பதை விரும்பாத வீரப் பெண்மணியான இமயவல்லி தங்களைத் தள்ளிக்கொண்டு கீழே ஓடிவிட்டதும் புலவரும் சித்தரும் ஒரு கணம் வியப்பின் வசப்பட்டார்களென்றாலும், அடுத்த விநாடி
பாண்டியன் சகோதரியைப் பற்றிச் சிறிதும் சிந்தியாதவர்களாய் இளமாறனுக்கிருந்த ஆபத்தே உள்ளத்தில் மேலெழுந்து நிற்க, மன்னன் நெடுஞ்செழியன் அரண்மனையை நோக்கி வெகு வேகமாகச் சென்றனர். அப்பொழுது பொழுது
புலர்ந்து எட்டு நாழிகைக்கு மேலாகிவிட்டதால் கதிரவன் கிரணங்கள் பாண்டியனின் அரண்மனைச் சிகரங்களிலிருந்த தங்கக் கலசங்களில் பிரதிபலித்துப் பாண்டியன் கீர்த்தியைப்போல ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தன.
அவன் அரண்மனையின் ஆரம்பக் கட்டுகளிலிருந்த யானைக் கூடங்களில் கேட்ட யானைகள் பிளிரும் ஒலிகளும், குதிரை மண்டபத்தில் கேட்ட புரவிகளின் கனைப்புச் சத்தங்களும் அவன் படைபலத்துக்கு சான்று கூறின.
வைகையிலிருந்து நீராடி வந்து கொண்டிருந்த அந்தணர் வேதமோதிய சப்தமும், ஓதுவார்களின் தமிழிசை ஒலிகளும், அறநெறி தவறாத, மதத்தில் பற்றுடைய மாமன்னன் ஆட்சியை வலியுறுத்தின. பண்டகசாலைகளின் வணிகர்
கூச்சலும், வயலுக்குச் செல்லத் துவங்கிய கால்நடைகளிள் கழுத்துக்களில் ஆடிய மணிகளின் அரவமும், அருட்செல்வம் பொருட் செல்வத்தோடு கால்நடைச் செல்வமும் பாண்டியன் நாட்டில் வளர்ந்து நாட்டை வளப்படுத்தியதைக்
குறிப்பிட்டன.
இப்படிப் பல செல்வமும் பொருந்திய மதுரையம் பதியில் எத்தனையோ நாள்கள் புலவர் நடந்திருக்கிறார்.
நடந்த சமயங்களில் இந்தச் செல்வங்களைக் குறிப்பிட்ட ஆதாரங்களைக் கண்டு மகிழ்திருக்கிறார். கவிதைகளும் இயற்றியிருக்கிறார். ஆனால் இளமாறனை மீட்கச் சென்ற இந்த தினத்தில் அவர் எதையும் கண்டாரில்லை கேட்டாரில்லை.
மகிழ்ந்தாரில்லை.
உள்ளே துன்பப் புனல் அள்ளித் தெளிக்க, சித்தருடன் மதுரை வீதிகளில் நடந்து பாண்டியன் அரண்மனையின் பல கட்டுகளையும் கடந்து சென்று ஆஸ்தானத்தை அடைந்த புலவர் பெருமான் அங்கிருந்த கட்டியக்காரனை விளித்து,
“புலவர் வந்திருப்பதாகத் தெரிவி புரவலனிடம்” என்று ஆணையிட்டு அங்கிருந்த ஆசனமொன்றில் அமர்ந்து, சித்தரையும் அமரச் சொன்னார் மற்றோர் ஆசனத்தில். சித்தர் அமரவில்லை. மைந்தன் உயிருக்குப் பரியவந்த அந்தச்
சமயத்திலும், முகத்தில் உணர்ச்சிகள் தெரியவொட்டாமல் மனத்தை இரும்பாக்கிக் கொண்டு கைகளை மார்பில் கட்டியவண்ணம் நின்று கொண்டே இருந்தார். அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் நெடுஞ்செழியன் வெகுவிரைவில்
தன் ஆஸ்தான அந்தரங்க மண்டபத்தை அடைந்தான். ஆசனத்தில் அமர்ந்தான். மன்னன் வந்ததும் புலவர் எழுந்து தலை வணங்கினார். சித்தரும் சிரம் தாழ்த்தினார்.
பத்தொன்பது ஆண்டுகளே பூர்த்தியாகி இருபதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததால் இளம் முகத்துடன் குழந்தைபோல் காட்சியளித்த பாண்டியன் நெடுஞ்செழியன் இதழ்களில் இலேசாகப் புன்முறுவல் விரிந்தது. “இரண்டு
ஆசிரியர்கனளயும் ஒரே சமயத்தில் வணங்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது எனக்கு” என்று கூறிய பாண்டிய மன்னனும் தலை வணங்கினான் அவர்களுக்கு. பாண்டியனின் புன் முறுவல் விரிந்த இன்முகங்கண்ட இரு
ஆசிரியர்களும் சில விநாடி சொல்லிழந்து நின்றனர். ஆகவே தெடுஞ்செழியனே கேட்டான் தொடர்ந்து, ‘இந்தப் பாக்கியத்தை நான் அடைய நேர்ந்ததற்குக் காரணம் ஏதாவதிருக்கிறதா?” என்று.
சித்தர் பதிலேதும் சொல்லவில்லை. புலவரே சமாளித்துக் கொண்டு பேசினார்: “மன்னா, நீ வாழி! உன் கொற்றம் வாழி!” என்று வாழ்த்துச் சொற்களைக் கூறிய புலவர், ‘மன்னா! உன்னிடம் உன் ஆசிரியர் இருவரும் இரக்க
வந்திருக்கிறோம்” என்றார்,
நெடுஞ்செழியன் பதிலேதும் சொல்லாமலே புன் முறுவலே செய்தான். புலவர் மேற்கொண்டும் சொன்னார்: “மன்னா! இரப்போருக்குக் கொடுத்துச் சிவந்த உன் கை மீண்டும் சிவக்கட்டும்” என்று.
“பொன் வேண்டுமா புலவரே; நிரம்பத் தருகிறேன்” என்றான் மன்னன்.
“பொன்னிலும் உயர்ந்தது வேண்டும்” என்றார் புலவர்.
“நிலம் வேண்டுமா?”
“அதனிலும் உயர்ந்தது.”
“என் உயிர் வேண்டுமா?”
“உன் உயிரால் பல உயிர்கள் வாழ்கின்றன. தமிழ் வாழ்கின்றது. அது வேண்டாம் எனக்கு.”
“வேறென்ன வேண்டும்?”
“பிச்சை வேண்டும். உயிர்ப்பிச்சை வேண்டும்” என்றார் உணர்ச்சியுடன் புலவர்.
“யாருக்கு?” நெடுஞ்செழியன் சர்வசாதாரணமாகக் கேட்டான்.
புலவர் சித்தரைச் சுட்டிக்காட்டி, “இவர் மகனுக்கு” என்றார். இதைக் கேட்ட நெடுஞ்செழியன் வியப்பின் வசப்படுவானென்று எதிர்பார்த்த சித்தரும் புலவரும் ஏமாந்தே போனார்கள். யாருக்கு? இளமாறனுக்கா?” என்று வினவினான்
நெடுஞ்செழியன், எந்தவித வியப்பும் குரலில் காட்டாமல். சித்தரும் புலவரும் பிரமை பிடித்து நின்றார்கள்.
“மன்னா! மன்னா! எங்கள் மீதும் நீ ஒற்றர்களை ஏவுகிறாயா!” என்று திகிலுடனும் கோபத்துடனும் கேட்டார் புலவர்.
நெடுஞ்செழியன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்ற புலவரை நோக்கினான். “புலவரே! நான் பெரிய அரசை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. ஏராளமான மக்களின் உயிருக்கும் நலனுக்கும் நான் பொறுப்பாளி. அதற்கு இடையூறு
ஏற்படும் எந்த விஷயத்திலும் நான் எச்சரிக்கையுடனிருக்கிறேன். இது அரசன் கடமையல்லவா?” என்றும் கேட்டான்.
புலவர் ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். பாண்டியன் மேலும் தொடர்ந்து சொன்னான் : “எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கல்வி கற்பிக்க உமக்கு மகர மாளிகையை அளித்தேன். அந்தப் பகுதிக்கு யாரும்
செல்லக்கூடாதென்றும், அரவம் ஏதும் அந்தப் பகுதியில் கேட்கக் கூடாதென்றும், உமது அமைதிக்கு எந்தவிதத்திலும் பங்கம் வரக்கூடாதென்றும் உத்தரவிட்டேன். ஆனால் புலவரே! உமது கல்விக்கூடம் சதிக்கூடமாயிற்று. சிறுவனான
என்னை, ‘யானைக்குட்டியைப் பிடிப்பது போல் பிடிப்பேன்’ என்று பறைசாற்றிய சேரனை விடுவிக்க அங்கு ரகசியமாக வீரர்களை வரவழைத்தீர். நான் அப்பொழுதும் தலையிடவில்லை. என் சகோதரியின் ரதத்தை எந்த வீரனும் தடுக்க
முடியாதாகையால்
அவளையும் உமக்குத் துணை சேர்த்துக் கொண்டீர். இத்தனையிலும் தான் தலையிடவில்லை. நான்கு வீரர்களை ஒருவர் பின் ஒருவராக மூங்கில் கோட்டைக்கு அனுப்பினீர். அங்கு அவர்களுக்குக் கிடைத்த கதியிலும் நான்
தலையிடவில்லை. உள்ளே சிறைப்பட்ட வீரனை என்ன செய்வதென்று கோட்டைக் காவலர்கள் கேட்டார்கள். ஒற்றர்களுக்கு உண்டான தண்டனையை அளிக்கும்படியும் பிணத்தை மட்டும் காட்டுப் பகுதியில் எறிந்து விடும்படியும்
கூறினேன். வீரர்கள் யாராவது இருந்தால் காட்டுப் பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவர்களை நான் தாக்க உத்தரவிடவில்லை. தாக்க அவசியமில்லை என்று விட்டு வைத்தேன். நான்கு பேர் மரண தண்டனை
அடைந்து பிணங்கள் காட்டில் எறியப்பட்டால் நீங்கள் உங்கள் முயற்சியைக் கைவிடுவீர்களென்று நினைத்தேன். நீங்கள் கைவிடவில்லை. அதற்கு மாறாக இப்போது சிறையிருக்கும் வாலிபனை வரவழைத்தீர்கள். அவன் திறனை முதல்
நாளிரவே நான் புரிந்து கொண்டேன். அவனுக்கும் சித்தருக்கும் ஏதோ சம்பந்தமிருப்பதையும் புரிந்து கொண்டேன். மருதன் கத்தியை நிமிஷ நேரத்தில் தன் வாளால் சுழற்றி எறிந்தான் இளமாறன். அந்த வாள் சுழற்றும் முறையை சித்தர்
எனக்கு மட்டுமே கற்பித்திருந்தார்.
இந்த இடத்தில் சற்று சம்பாஷணையை நிறுத்திய பாண்டியன் மற்ற இருவர் மீதும் கண்களைத் திருப்பினான். இருவரும் பதில் சொல்லாது போகவே அவனே சொன்னான் : “அப்படியொரு பயிற்சியைப் பார்த்தவுடன் உண்மையை
ஆராயத் தொடங்கினேன். இளமாறனை மூங்கில் கோடடைக்குச் செல்லும் வழியில் தடுக்க மருதனை அனுப்பினேன். பலிக்கவில்லை. மேற்கொண்டு முயன்றிருப்பேன், சித்தர் கையாண்ட முறைகளால் ஏமாந்தேன். வண்டி அச்சு முறிந்து
கிடந்த காரணம் இப்பொழுது எனக்குத் தெரிகிறது. எப்படியும் சேரமான் தப்பிவிட்டான், இளமாறன் உதவியாலும் சித்தரின் உதவியாலும்.”
பிறகு சித்தர் மீது தன் விழிகளை நிலைக்கவிட்டு, “உம்மைச் சித்தரென்று அழைக்கட்டுமா, பழைய பெயர் சொல்லி அழைக்கட்டுமா, தளபதியாரே?” என்று வினவினான்.
புலவரும் விஜய மார்த்தாண்டனும் பிரமை பிடித்து நின்றார்கள். இத்தனையும் தெரிந்திருந்தும் சேரனை ஏன் தப்பவிட்டான் பாண்டியன் என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டார்கள். நான் தப்பவிடவில்லை சேரமானை,
புலவரே! இளமாறன் தந்திரத்தால்தான் சேரமான் தப்பினான். கோட்டைக் காவலர் பழைய சுரங்க வழியில் இளமாறனை எதிர்பார்த்தார்கள். யாரும் எதிர்பார்க்காத, ஏற்கனவே சேர நாட்டு யானைப்படை வீழ்ந்து மடிந்த பொட்டல் வெளி
அகழிகளின் வழியில் அவன் வந்தான். அதுவும் இரண்டு நாள் கழித்து, அந்த இரண்டு நாளில் இடையிடையே மண்ணைக் கலைத்து, மூங்கில்களை வெளியில் தெரியும்படி செய்திருந்தான். பிறகு அவனும் சேரனும் தப்பியபோது வீரர்
அம்பு எய்வதைத் தடுக்க மூங்கில்களைப் பற்றவும் வைத்தான். மூங்கில் கோட்டையின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான மூங்கில் அகழிகள் பெரிதும் சேதப்பட்டுவிட்டன புலவரே. இஷ்டப்பட்டிருந்தால் நான் சேரனைத் தடை
செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஏன் தெரியுமா? என்று விளக்கினான் பாண்டியன்.
“ஏன்?” என்றார் புலவர் நா தழுதழுக்க.
“வீரத்துக்கு வணங்கினேன். இளமாறன் வீரத்தை வீணடிக்க நான் இஷ்டப்படவில்லை” என்றான் நெடுஞ்செழியன்.
புலவர் முகத்தில் சிறிது தைரியக்குறி தோன்றியது. “அப்படியானால் இளமாறனை மன்னித்து விடுகிறாயா மன்னா?” என்று ஆவலுடன் வினவினார் புலவர்.
நெடுஞ்செழியன் முகத்தில் சித்தரோ புலவரோ ஊகிக்க முடியாத உணர்ச்சி பரவியது. “எப்படி மன்னிக்க முடியும் புலவரே? இந்த நாட்டில் நீதியென்பது ஒன்றுண்டு. அதை மன்னனான நான் எப்படி மீற முடியும்?” என்று வினவினான்.
புலவர் முகந்தில் வருத்தக்குறி படர்ந்தது. அதைக் கண்ட நெடுஞ்செழியன் உறுதியான குரலில் கூறினான்: “வருந்திப் பயனில்லை புலவரே! இளமாறன் செய்தது குற்றம் குற்றந்தான். பாண்டிய நாட்டு விரோதியை
விடுவித்திருக்கிறான். கோட்டையின் காவலர் சிலர் சேரனாலும் இளமாறனாலும் மாண்டிருக்கின்றனர். ஆகவே இளமாறனுக்கு நீதி வழங்கப்படும் இந்த நாட்டு விதிகளின்படி” என்று.
“பாண்டியா! நெடுஞ்செழியா! உனக்கு நானளித்த வித்தைக்குக் குருதட்சணை கேட்கிறேன். அவன் உயிரை எனக்குத் தட்சணையாகக் கொடு” என்று மன்றாடினார் புலவர்.
“உயிருக்கு ஆபத்தில்லை அவனுக்கு” என்ற பாண்டியன், “உயிருக்கு ஆபத்தில்லை புலவரே! அவன் நிலையில் நானிருந்தால் நான் செய்திருக்கக் கூடியதும் அதுதான். சேரநாட்டவன் சேரனை விடுவித்தான். ஆகவே அவனுக்கு
ஆயுட்சிறை அளித்துவிட்டேன்” என்ற பாண்டியன், “அது கிடக்கட்டும் புலவரே! நீர் ஏதாவது பாட்டெழுதியிருப்பீரே, சேரமான் விடுதலைபற்றி” என்றும் வினவினான்.
புலவர் தமது மடியிலிருந்த இரு ஓலை நறுக்குகளை எடுத்து மன்னன் கையில் கொடுத்தார். மன்னன் உரக்கப் படித்தான் :
“மாப்பயம்பின் பொறை போற்றாது
நீடுகுழியகப்பட்ட பீடுடைய ஏறுழ்முன்பின்
கோடு முற்றிய கொல்களிறு
நிலைகலங் குழிகொன்று இணைபுலகத்
தலைக்கூடியாங்கு
நீ பட்ட அருமுன் பின் பெருந்தளர்ச்சி பலருவப்ப…”
இதுவரை படித்ததும் தலையசைத்த பாண்டியன், “நன்று புலவரே! நன்று! படுகுழி வீழ்ந்த யானை யொன்று குழியிலிருந்து தப்பி மீண்டும் தன் இனம் சேர்ந்து மகிழ்ந்ததை உவமையாகக் காட்டியிருக்கிறீர். அது மட்டுமா, இதோ பின்னர்
இனி சேரமானின் பகைவர் அவனுக்குப் பணிவாரேயன்றி, பகைமை காட்டார் என்று கவி புனைந்திருக்கிறீர். சிறப்புக் கவி தான் புலவரே! ஆனால் இதை நீர் பாடவேண்டிய இடம் மதுரையல்ல. கேட்க வேண்டியவனும் நானல்ல.”
புலவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “என்ன சொல்கிறாய் பாண்டியா?” என்று வினவினார் புலவர்.
“சேரமானுக்கு இந்தக் கவிதையைச் சமர்ப்பியுங்கள்” என்று ஓலை நறுக்குகளைப் புலவரிடம் நீட்டினான் நெடுஞ்செழியன்.
புலவர் ஸ்தம்பித்து நின்றார். “என்னை நாடு கடத்துகிறாயா பாண்டியா?” என்று வினவினார் கோபத்துடன்.

.
“அது சேரன் குணம். இதோ தளபதியை நாடு கடத்தவில்லை. சேரமானிடம் அன்புள்ள புலவரை அங்கு செல்லப் பணிக்கிறேன். உங்களுக்கு இன்று பகலில் ரதம் வரும் மகர மாளிகைக்கு” என்றான்.
புலவர் வாயடைத்து நின்றார். “என்னை என்ன செய்ய உத்தேசம்?” என்று கேட்டார் சித்தர்.
“நீர் எனக்கெதிராகச் சதி ஏதும் செய்யவில்லை. உமது மகனுக்கு ரகசிய வழியைக் காட்டக்கூட முனையவில்லை நீர். ஆகவே நீர் திரும்ப மடத்திற்குச் சென்று வழக்கம் போல் மக்களுக்குப் பணி செய்யும்” என்றான் நெடுஞ்செழியன்.
“என் மகன்?”
“அவனுக்குத்தான் ஆயுள் சிறை விதித்திருக்கிறேனே!”
“எங்கிருக்கிறான் அவன்?”
“சிறையிலிருக்கிறான். இப்பொழுதுதான் அவனது காவலாளியை அனுப்பினேன், வாருங்கள்” என்ற பாண்டியன் அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனையின் ஒரு மூலையில் இருந்த ஒரு சிறு சிறைக்கூடமொன்றுக்கு
வந்தான். சிறைக்கூடக் கதவு திறந்தே இருந்தது. காவலாளி யாரையுங் காணோம். “எங்கே காவலர்?” என்றார் சித்தர். சிறைக்குள் நுழைந்து ஓரிடத்தில் நின்ற பாண்டியன் நெடுஞ்செழியன், “அதோ” என்று தூர இருந்த அறையைக்
காட்டினான்.
அங்கு கண்ட காட்சியைக் கண்டு புலவரும் சித்தரும் பிரமித்தனர். அந்த அறையில் இளமாறனும் இமயவல்லியும் ஒருவரையொருவர் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் கைகள் பிணைந்து நின்றன.
“இவள் தான் காவலாளி சித்தரே! இவன் சிறைக்கூடம் இனி இவளிருப்பிடம்” என்று கூறிய நெடுஞ்செழியன் சிறைக்கூடத்தை விட்டுச் சென்றான்.
புலவரும் சித்தரும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். “சேரமானை மீட்கச் சதி செய்த எனக்கு நாடு கடத்தல். துறவியான உமக்கு மடம். வீரனுக்கு அவன் விரும்பிய பரிசு! பாண்டியா! நெடுஞ்செழியா! உன் நீதியின் நேர்மை என்ன!
வாழி நீ!” என்றார் புலவர். சித்தர் நெடுஞ்செழியன் சென்ற திசைநோக்கித் தலை வணங்கினார்.
இவை எதையும் பரஸ்பரம் சிறைப்பட்டுக் கிடந்த இளமாறனும் இமயவல்லியும் கவனிக்கவில்லை. கண்கள் கண்களைக் கவ்வி நின்றமையால் உலகத்தில் வேறெதையும் பார்க்கச் சக்தியற்றன.

Previous articleMoongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here