Home Historical Novel Moongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

63
0
Moongil Kottai Ch4 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 பகைச்சுவையில் நகைச்சுவை

Moongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து சேரமான் யானைக் கண் சேய் மாந்திரன் சேரல் இரும் பொறையை விடுவிக்கத் தாம் ஓராண்டு காலமாக வகுத்து வைத்திருக்கும் பயங்கரத் திட்டத்தை மெள்ள மெள்ள விவரிக்க முற்பட்ட
புலவர் பெருமானான குறுங்கோழியூர்க்கிழார், அந்த விவரணத்துக்குப் பூர்வாங்கமாக அதன் தன்மையையும், எத்தகைய சக்திகளை இளமாறன் எதிர்நோக்கிச் சமாளிக்க வேண்டு மென்பதையும் எடுத்து விளக்கினார். மாந்திரன் சேரல்
இரும்பொறையின் கதியை எண்ணியதும் சற்றே சோகப் பெருமூச்சுவிட்ட கிழார், “இளமாறா! திட்டம் பயங்கரமானது என்று சொன்னேன் உனக்கு. ஆனால் நிறைவேற்ற முடியாததல்ல. மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால்
திட்டம் கண்டிப்பாய் நிறைவேறும் ஆனால்…” என்று சற்றே நிறுத்தினார்.
புலவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இளமாறன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை. உயிரைப்பற்றி என்றுமே கவலைப்படாத அந்தச் சேர நாட்டு வீரன் மனத்தில் திட்டத்தினால் ஏற்படும் ஆபத்துகளைப்பற்றிக்
கவலை ஏதும் ஏற்படவில்லையாகையால் அவன் முகம் சர்வ சாதாரணமாகவே இருந்தது மட்டுமல்லாமல் அவன் சொற்களும் எந்தவித உணர்ச்சியுமில்லாமலே வெளி வந்தன. “சொல்லுங்கள் புலவரே!” என்று அவன் மேலும் அவரை
ஊக்கினான்.
இளமாறனின் உணர்ச்சியற்ற உறுதியான சொற்களால் திடமுற்ற கிழார் சொன்னார் : “இளமாறா! என் நெஞ்சிலும் அச்சம் லவலேசமும் கிடையாது. ஆனால் தமிழகத்தின் தற்கால நிலை உள்ளத்தில் சோகத்தை எழுப்பியிருக்கிறது. அது
மட்டுமல்ல, இந்தக் கணத்தில் உன்னைப்பற்றிய கவலையும் அதிகமாக என் உள்ளத்தைக் கௌவிக் கொண்டிருக்கிறது” என்று.
“என்னைப்பற்றி என்ன கவலை?” என்று வினவினான் இளமாறன்.
“நீ வயதிற் சிறியவன். உன்னை நான் அனுப்பும் பணியோ…” என்று முழுவதையும் சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கினார் குறுங்கோழியூர்க்கிழார்.
“பயங்கரமானது, அதில் என் உயிர் போனாலும் போகலாம். என்மீது அதனால் உங்களுக்குப் பரிதாபம், எனக்கும் கதவைத் திறந்த அந்த பணிப் பெண்ணுக்கும் பரிதாபம்” என்ற இளமாறனைச் சட்டென இடை மறித்த
குறுங்கோழியூர்க்கிழார், “இளமாறா! நிறுத்து நிறுத்து! என்ன பணிப்பெண்ணா! யார் பணிப்பெண்” என்று பதற்றத்துடன் வினவினார்.
இளமாறன் கண்களில் திடீரென சந்தேகத்தின் சாயை விரிந்தது. அவன் மனத்தில் ஆரம்பத்தில் உதித்த சந்தேகம் மீண்டும் துளிர்விட்டது. “எனக்குக் கதவைத் திறந்தவள்…” என்று இழுத்தான்.
“திறந்தவள்?” கிழாரின் கேள்வியில் வியப்பிருந்தது.
“பணிப்பெண் என்று சொன்னாள்” என்று குறிப்பிட்டான் இளமாறன்.
“அப்படியா?” என்று வியப்பைக் குரலில் காட்டினார் கிழார்.
“ஏன் அவள் பணிப்பெண் அல்லவா?” என்று வினவினான் இளமாறன் தன் விழிகளைப் புலவர் மீது நாட்டி.
பயங்கரத் திட்டத்தை விவரிக்க முற்பட்ட புலவர் தமது தாடியை உருவிவிட்டுக்கொண்டு சற்று குதூகலத்துடன் நகைத்தார். “பணிப்பெண்தான் ஒரு வகையில் பார்த்தால் அதுவும் சரிதான்” என்று அவர் கூறிய வார்த்தைகளிலும்
நகைப்பு ஒலித்தது,
புலவர் பெருமான் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை மறைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட இளமாறன் கேட்டான். “புலவரே! அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை நானறியக் கூடாதா?” என்று.
புலவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்துவிட்டதற்கான அறிகுறிகள் அவர் முகத்தில் தென்பட்டன. சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு அவர் முகத்தில் சாந்தி நிலவியது. “இறைவன் திருவருள் அப்படியா…!” என்று தமக்குத்தாமே
ஏதோ சொல்லிக் கொண்டார்.
அவர் பேசியதன் பொருள் சிறிதும் விளங்கவில்லை, அந்தச் சேரநாட்டு வாலிபனுக்கு. “இறைவன் திருவருளுக்கு என்ன இப்பொழுது?” என்று சலிப்புடன் வினவினான்.
“ஒன்றுமில்லை, நன்றாக இருக்கிறது. சிறப்பாக இருக்கிறது” என்றார் கிழார் சிறிது மகிழ்ச்சியுடன்.
“என்ன சிறப்பாக இருக்கிறது?” இளமாறனின் இந்தக் கேள்வியில் சிறிது சீற்றமிருந்தது.
“இறைவன் திருவருள்!”
“அதைத்தான் சொன்னீர்களே?”
“ஆம் சொன்னேன்”
“அந்தச் சிறப்பு திடீரென எப்படி வந்தது என்பதை விளக்கவில்லையே நீங்கள்.”
“காலம் விளக்கும்.”
“இப்பொழுது உங்களுக்கு மட்டும்…”
“விளங்கியிருக்கிறது?” என்ற கிழார், “அந்தப் பெண்ணைப்பற்றி விவரமறிய நீ விரும்பினாய் அல்லவா?” என்றும் கேட்டார்.
“ஆம்.”
“அப்பொழுதுதான் விளங்கிற்று” என்று சொன்ன கிழார் மெல்ல நகைத்தார். பிறகு திடீரென நகைப்பை நிறுத்திக் கொண்டார். மீண்டும் தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட்டுச் சேரமான் சிறைவாசத்தைப் பற்றிப் பேசத் தொடங்கி
சொன்னார்: “இளமாறா! சேரமான்
விடுதலைத் திட்டத்தை விவாதிக்கத் தொடங்கி வேறெங்கோ போய்விட்டோம். அப்படிப் போனதும் நல்லது. என் வேலை இப்பொழுது மிகச் சுலபமாகிறது. அதனால் தான் இறைவன் திருவருளை வியந்தேன். இளமாறா! உனக்குக்
கதவைத் திறந்தாளே ஒரு கட்டழகி, அவள் உன் மீது பரிதாபப் பார்வையை வீசியதாகக் கூறினாய் அல்லவா? அந்தப் பரிதாபம் உனக்குப் பெரும் கவசம் இளமாறா! அவள் பார்வை அவள் கையின் சைகை, அவள் தோழமை உன்னைப்
பெரிதும் காப்பாற்றும். ஆனால் அந்தப் பெண்ணிடம் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள். அதிகமாக நெருங்காதே” என்று.
“ஏன் புலவரே? அவள் அத்தனை கொடியவளா?” என்று வினவினான் இளமாறன்.
“கொடியவளல்லள் இளமாறா! அவளைவிடக் கருணையுள்ளம் படைத்தவள் இந்தத் தமிழகத்தில் இருக்க முடியாது. ஆனால் நீ மட்டும் அவளை அதிகமாக நெருங்காதே” என்றார் புலவர்.
“ஏன்?”
“காரணம் கேட்காதே. காலக்கிரமத்தில் நீ புரிந்து கொள்வாய்.”
இளமாறன் ஏதும் புரியாமல் புலவரை நோக்கினான். மீண்டும் இரண்டொரு கேள்விகளை அந்தப் பெண்ணைப் பற்றித் தொடுத்தான். அவள் விஷயமாக மேற்கொண்டு ஏதும் பேச மறுத்த குறுங்கோழியூர்க்கிழார் பேச்சை
அடியோடு மாற்றி, “அவளைப் பற்றிப் பிறகு பேசுவோம் இளமாறா! திட்டத்தைப்பற்றிக் கேள். திட்டம் பயங்கரமானதென்றும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் அதை நிறைவேற்றலாம் என்றும் சொன்னேன். ஆனால் அதை
நிறைவேற்றுங்கால் பாண்டியன் நெடுஞ்செழியன் எப்பேர்ப்பட்டவன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தமிழகத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைவிடப் புத்தி கூர்மையுள்ளவர்கள் கிடையாது.
அவனுக்குக் கண்கள் ஆயிரம் உண்டு” என்றார்.
புலவர் சொன்னது நன்றாகப் புரியவே செய்தது இளமாறனுக்கு. “அதை நானே கவனித்தேன் புலவரே! வரும் வழியில் பாண்டியமன்னன் காவல் வகுத்திருக்கும் முறையில் அரசனறியாமல் இந்த நகரத்துக்குள் யாரும் நுழைய
முடியாதென்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் இளமாறன்.
“ஆம் இளமாறா, மதுரையின் காவல் இணையற்றது. அது மட்டுமல்ல, நெடுஞ்செழியன் படை வீரர் மட்டுமின்றி ஒற்றர் பலரும் மதுரையைக் காவல் புரிகிறார்கள். மதுரையின் ஊடே இன்று நடந்தால் யார் பிச்சைக்காரன்? யார் ஒற்றன்? யார்
வர்த்தகன்? யார் உளவாளி? என்பதை அறிய முடியாது. புதிதாக மதுரைக்குள் நுழைந்த அத்தனை பேர்மீதும் ஒற்றர்கள் கண்காணிப்பு இருக்கிறது” என்றார் புலவர்.
“அப்படியானால் நான் வந்ததுகூட…”
“நெடுஞ்செழியனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.”
இளமாறன் இதயத்தில் திகைப்புக்குப் பதில் வியப்பு மண்டியது. ஆகவே கேட்டான். ‘அப்படியானால் கிழாரே! நான் இருமுறை திட்டி வாசலைத் தட்டுவானேன்? ரகசியமாக நுழைவானேன்? இதிலெல்லாம் பயனென்ன இருக்கிறது?” என்று.
பெரியவர் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. “இளமாறா! இங்கு யார் நுழைவதும் நெடுஞ்செழியனுக்குத் தெரியாது” என்றார் அவர்.
“ஏன் புலவரே! இந்த இடம் மட்டும் என்ன காவலுக்கு விலக்கா?” என்று வினவினான் அந்த வாலிபன்.
“ஆம் இளமாறா! இந்த ஓர் இடம் காவலுக்கு விலக்கு. இதை யாரும் கண்காணிக்க முடியாது. இங்கு குறுங்கோழியூர்க்கிழார் இருக்கிறார் அல்லவா?”
“இருந்தாலென்ன?”
“அவரிடம் பாண்டிய மன்னனும் அவன் குடும்பத்தாரும் தமிழ் பயில்கிறார்கள். ஒரு வகையில் கிழார் அவர்கள் ஆசான்.”
“ஆசானா? நண்பரா?”
“இரண்டுந்தான்.”
“பாண்டியனுக்கு நண்பரானால் நீங்கள் சேரமானுக்கு…”
“எப்படி நண்பனாக முடியும் என்று கேட்கிறாய், இளமாறா! எனக்குப் பாண்டியனும், சேரனும், சோழனும் மூவரும் ஒன்று தான். மூவரும் தமிழன்னையின் குழந்தைகள்” என்கிறார் கிழார்.
புலவர் பெருமானின் பரந்த உள்ளம் தெரிந்தது இளமாறனுக்கு. புலவர் திட்டத்தின் பயங்கரத்தைத் தெரிவித்தாரேயொழிய அதை நிறைவேற்றும் சக்தி அவருக்கிருந்ததைத் தெரிவிக்கவில்லை என்பதை அந்த வாலிபன் புரிந்து
கொண்டானானாலும், அத்தனை செல்வாக்குள்ள பெருமான் சேரமானை விடுவிக்கும் திட்டத்தில் ஏன் ஏற்கெனவே நான்கு உயிர்களைப் பறிகொடுத்து விட்டார் என்பது மட்டும் புரியவில்லை அவனுக்கு. தன் புத்திக்கு நேரிடையாகத்
தெரிவதைவிட ஆழமான மூடு மந்திரம் ஏதோ அதில் இருக்கிறதென்பதை மட்டும் உணர்ந்து கொண்ட இளமாறன் அந்த நேரத்தில் அதைப்பற்றி அறிய முயலுவதில் பயனில்லை என்று தீர்மானித்துக் கொண்டானா கையால், “புலவரே
நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்று வினவினான்.
புலவர் ஆசனத்திலிருந்து எழுந்து அடக்கமாக நின்ற அந்த வாலிபனுக்கு அருகில் வந்து அவன் தோள் மீது தனது கையை வைத்துக் கொண்டு, “இளமாறா! பாண்டியன் நெடுஞ்செழியனை அணுகிச் சேரனை விடுவிப்பதானால்
அதை நாளைக்கே செய்துவிடுவேன். ஆனால் அது நடவாது. பாண்டியன் தயவால் விடுதலை அடைய வீரனான சேரமான் உடன்பட மாட்டான். ஆகவே பாண்டியனையும் மீறித்தான் அந்தப் பணியை நாம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்
போது நாம் தமிழகத்தின் பெரும் அறிவாளியுடன் மட்டு மல்ல, பெரும் வீரன் ஒருவனுடன் மோதுகிறோம். அது மட்டுமல்ல, நகைச்சுவையுள்ள ஒரு மன்னனிடம் நாம் மோதுகிறோம்” என்று கூறினார்.
இளமாறன் புலவரை ஏறெடுத்து நோக்கினான். “என்ன! நகைச்சுவையா!” என்று வியப்புடன் கேட்கவும் செய்தான்.
“ஆம்! பாண்டியன் நெடுஞ்செழியன் நகைச்சுவையுள்ளவன், பகைமையிலும் அதைக் காட்டியிருக்கிறான்” என்றார் புலவர்.
“புரியவில்லை எனக்கு” என்றான் இளமாறன்.
புலவர் விளக்கினார் : “இளமாறா! யானைகளைப் போலவே பலம் உள்ளவனும், யானையின் கண்களைப்போல் கண்களைப் படைத்தவனுமான சேரமான் யானைகளைப் பிடிப்பதில் வல்லவன் என்பது உலகம் அறியும். அவனைச்

.
சிறைப்பிடித்து வந்து நெடுஞ்செழியன் தன் எதிரே மதுரை நீதி மண்டபத்தில் செருக்குடன் நின்ற சேரமானை நோக்கிக் கேட்டான் : ‘உன் பலமும் செருக்கும் என்ன ஆயிற்று?’ என்று. ‘யானையை அவிழ்த்துவிடு. அது உன்னைத் துவைத்து
விடும்’ என்று சேரமான் அந்தச் சபையிலும் தன் யானைப் பலத்தைச் சுட்டிக் காட்டிச் சீறினான்.
யானையென்று தன்னைச் சொல்லிக் கொண்ட சேரமானை யானையைப் போலவே நடத்த உறுதிகொண்ட நெடுஞ்செழியன் உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட தல்லாமல் அந்த நகைச்சுவையைச் சேரமானைச் சிறை வைத்ததிலும்
காட்டினான். அது மட்டுமல்ல, நகைச்சுவையுடன் பகைச்சுவையையும் காட்டினான். அதன் விளைவு என்ன தெரியுமா?” என்று கேட்டார் புலவர்.
“தெரியாது” என்றான் இளமாறன்.
புலவர் பெருமான் கண்கள் பளிச்சிட்டன. “வினளவு பயங்கரம் இளமாறா; மூங்கில் கோட்டை, அதன் விளைவு” என்றார் புலவர்.
இளமாறனுக்கு ஏதும் விளங்கவில்லை. “மூங்கில் கோட்டையா?” என்று வினவினான், அவன் பெரும் குழப்பத்துடன்.
“ஆம், மூங்கில் கோட்டைதான்” என்றார் புலவர். வெறுப்பு நிரம்பிய குரலில்.
“அது எங்கிருக்கிறது?”
“இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில்.”
“அப்படியொரு கோட்டை இருப்பதைப்பற்றி நான் கேள்விப்படவில்லை.”
“நீ என்ன? பல பேர் கேள்விப்பட்டதில்லை. ஆனால், வரலாறு கேள்விப்படும்”
“அத்தகைய பயங்கரக் கோட்டையா?”
ஆம், இளமாறா! மிகவும் பயங்கரமான கோட்டை அது!”
“அது எப்படியிருக்கிறது? அமைப்பின் விவரம் என்ன?”
இளமாறன் கேள்விக்குப் புலவர் பதில் சொல்லவில்லை. “இப்படி வா” என்று அவனை அழைத்துக் கொண்டு அறைக்கு வெளியே சென்று மாடிப்படியைக் கடந்து சென்றார்.
“வீரரே! நீங்கள் வைகையைத் தாண்டித்தானே வந்தீர்கள்?” என்று. இரண்டாம் முறை சற்று அழுத்தமாகக் கிளம்பிய அந்தக் கேள்வியால் அவள் அழகு விரித்த வலையிலிருந்து மீண்ட இளமாறன் சுரணை வரப் பெற்று, “ஆம் ஆம்!
வைகையைத் தாண்டித்தான் வந்தேன்” என்றான்.
தலை குனிந்தவண்ணமே மீண்டுமொரு கேள்வியைக் கேட்டாள் அவள், “வைகையில் என்ன விசித்திரத்தைக் கண்டீர்கள?” என்று.
“அதன் இணையற்ற எழிலைக் கண்டேன். அரித்து ஓடிய நீரை எடுத்து அந்தணர் வீசிய அந்திக் கடன் விந்தையைப் பார்த்தேன். பிறகு அந்த அந்தி வேளையில் சற்று அப்பால் தள்ளி நீராடிய…” என்று மேலும் ஏதோ சொல்லப் போய்
சட்டென சொற்களை நிறுத்திவிட்ட இளமாறனை இடைமறித்த இமயவல்லியின் சொல் வீச்சில் சினம் இருந்தது. “அப்பால் தள்ளி நீராடிய இளமங்கையரைக் கண்டீர்கள். பல்லை இளித்துக்கொண்டு நின்றீர்கள்” என்று சீறிய அவளும் தான்
அத்து மீறிவிட்டதை உணர்ந்து சட்டென்று பேச்சை மாற்றி, “இத்தகைய காட்சிகளைப் பற்றிக் கேட்கவில்லை வீரரே! இந்தக் காட்சிகள் அனைவரும் அறிந்தவை! புலவர்களால் ஏற்கனவே பாடப்பட்டவை இவற்றில் விந்தையுமில்லை,
விசித்திரமுமில்லை. இருந்தாலும் நமது தற்சமய ஆராய்ச்சிக்கு அவை தேவையுமில்லை” என்று சடசடவெனவும் கடுமையாகவும் பேசினாள்.
இளமாறன் பெரிதும் சங்கடத்துக்குள்ளாகிப் புலவரைப் பார்த்தான். புலவர் முகத்தில் சீற்றத்துக்கு பதில் மகிழ்ச்சிக் குறி லேசாகப் படர்ந்து கிடந்தது. மீசை தாடி மறைக்காத இடங்களில் தெரிந்த இதழ்களில் புன்முறுவலும்
தோற்றமளித்தது. அந்தப் புன் முறுவலைக் கண்டதும் சங்கடம் மேலும் அதிகரிக்கவே, “நான்… நான் பார்த்ததைச் சொன்னேன்…” என்று மெல்ல இமயவல்லியை நோக்கிக் கூறினான் அந்த வாலிபன் தட்டுத் தடுமாறி.
இமயவல்லியின் சீற்றமும் சற்று அடங்கியிருக்க வேண்டும். அருள் உள்ளத்தே ஓடிய உணர்ச்சிகளையும் அவள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆகையால் அடுத்து எழுந்த சொற்களில் சீற்றமோ வேறெவ்வித உணர்ச்சி வேகமோ
இல்லை. “மற்றவர்கள் பார்வையைப்போல் வீரரான உங்கள் பார்வை இருக்கக் கூடாது. அதுவும் அபாயப் பணியை முன்னிட்டு வந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையில் சபலங்கள் இருக்கக்கூடாது. ஒருவேளை இந்தப் பணியில் நீங்கள்
வெற்றி பெற்று உயிருடன் திரும்புவதானால் உங்கள் பார்வை நல்ல கூர்மையடைய வேண்டும்” என்ற இமய வல்லி ஏதோ தூதனை நோக்கிப் பேசும் ராணியைப் போல் பேசினாள். அந்தப் பேச்சு முடிந்ததும் தலை நிமிர்ந்து தைரியத்துடன்
இளமாறன் கண்களையும் சந்தித்து, “வேறென்ன விந்தையைக் கண்டீர்கள் வைகையில்?” என்று வினவினான்.
தடங்கலின்றி வந்தது இளமாறன் பதில். அவன் கண்களும் மிகுந்த தைரியத்துடன் அந்தப் பெண்ணின் அழகிய விழிகளைச் சந்தித்தன. அரச சந்நிதானத்தில் உத்தரவைப் பெற்று விரைய நிற்கும் வீரன் முறையில் நின்ற இளமாறன்,
“மூங்கிற் பாலங்கள் இரண்டைக் கண்டேன்” என்றான்.
அதைக் கேட்ட இமயவல்லியின் அழகிய முகத்தில் மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. புலவர் பெருமானும் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை இருமுறை ஆட்டினார். இரண்டையும் கவனித்த இளமாறன், ‘எல்லோரும் பார்க்கும்படியாக
நிர்மாணிக்கப்பட்டிருந்த மூங்கிற் பாலங்களில் என்ன அத்தனை ரகசியம் இருக்க முடியும்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாலும் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் இமயவல்லியிடமிருந்தே சொற்கள் உதிரட்டும் எனக்
காத்திருந்தான்.
உள்ளத் திருப்திக்கு அறிகுறியாக முகத்தில் மகிழ்ச்சி ஒளிவீச இமயவல்லி சொன்னாள் : “எதிர் பார்த்தேன்! வீரனான உங்களிடமிருந்து இதை எதிர் பார்த்தேன்” என்று. அவள் குரலிலும் உள்ளத்திலும் பரவிக் கிடந்த மகிழ்ச்சி பிரதிபலித்தது.
இதற்கெல்லாம் காரணம் புரியவில்லை இளமாறனுக்கு. ‘மூங்கில் பாலத்தை நான் பார்த்ததில் என்ன கெட்டிக்காரத்தனத்தை இந்தப் பெண் என்னிடம் கண்டு விட்டாள்?” என்று தன்னைக் கேட்டுக் கொண்ட இளமாறன் இகழ்ச்சியுடன்
பதில் கூறினான் அந்த ஏந்திழைக்கு : “ஆம்! ஆம்! சகலரும் பார்க்கும் படியாக வைகையின் கரைகளை அணைத்து நிற்கும் மூங்கிற் பாலத்தை நான் பார்த்து விட்டது அபூர்வந்தான்…” என்று.
பதிலுக்கு இமயவல்லி, “மூங்கிற் பாலத்தின் அமைப்பு எப்படியிருக்கிறது?” என்று வினவினாள்.
“பாலத்தின் அடி பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் இருபது பெருங் கருங்கல் சதுரத் தூண்கள் இடைவெளிகளில் வைகையை அடைத்து நிற்கின்றன. இந்தத் தூண்களுக்கிடையே பெரும் மூங்கில்கள் அடர்த்தியாக
வளைக்கப்பட்டிருக்கின்றன. மூங்கில்களுக்கு மேலே இரண்டு முழம் உயரத்திற்குக் களிமண்ணும் சாணமும் செம்மண்ணும் சேர்த்துப் பூசப்பட்டிருப்பதால் பாதை அதிகக் கெட்டியாயிருக்கிறது” என்று பதிலுறுத்தான் இளமாறன்.
புலவரும் இமயவல்லியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “நான் சொன்னது என்ன?” என்று கேட்டார் புலவர்.
“முற்றிலும் சரி” என்றாள் இமயவல்லி.
“இவனை நம்பலாமல்லவா?” என்று மீண்டும் வினவினார் புலவர்.
“கண்டிப்பாய் நம்பலாம்” என்று இமயவல்லி கூறினாள். அவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாத இளமாறன், “மூன்றாமவன் நானிருக்கிறேன். உரையாடலில் என்னையும் கலந்து கொண்டால் நன்றாயிருக்கும்”
என்றான்.
“உன்னைக் கலந்து கொள்வதற்கில்லை” என்றார் புலவர்.
“ஏன்?” என்று வினவினான் இளமாறன் சற்றுக் கோபத்துடன்.
“பேச்சே உன்னைப் பற்றியது தானே” என்று கூறிப் புன்முறுவல் செய்த புலவர் பெருமான். “கேள் இளமாறா! மூங்கிற கோட்டையில் சேரமானை நாடிச் சென்ற நால்வரும் மாண்டுவிட்ட பிறகு அடுத்தபடி யாரைத் தேர்ந்து
எடுக்கலாமென்று நானும் இமயவல்லியும் ஆழ்ந்து யோசித்தோம். உன்னை அழைப்பதென்று நான் முடிவு செய்தேன். உன் வயதையும் இவளிடம் சொன்னேன். முதலில் இமயவல்லி ஒப்பவில்லை. அனுபவம் பெற்ற வீரர் நால்வர்
தோல்வியடைந்த பணியில் ஓர் இளைஞனை அனுப்புவது சரியல்ல என்று மறுத்தாள். இளைஞனைப் பார்’ என்று சொன்னேன். இப்பொழுது பார்த்துவிட்டாள். உன் நுண்ணறிவையும் உணர்ந்து விட்டாள். இனி என் கவலை விட்டது”
என்றார்.
‘உயிரைப் பணயம் வைக்கும் இந்தப் பணிக்குத் தேர்ச்சி வேறா?’ என்று உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட இளமாறன், “இத்தனை விவாதமா என்னைப்பற்றி?” என்று கேட்டான் புலவரை நோக்கி.
இந்தக் கேள்விக்குப் புலவர் பதில் சொல்லுமுன்பு இமயவல்லியே பதிலைத் தொடங்கினாள். “ஆம் வீரரே! இத்தனை விவாதம் அவசியமாய் இருந்தது. உங்களுக்கு முன் வந்த வீரர் நால்வரும் பல போர்களைக் கண்டவர்கள், அஞ்சா
நெஞ்சம் படைத்தவர்கள். அப்பேர்ப்பட்டவர்களே தோல்வியுற்று மாண்டு விட்ட பணியில் ஓர் இளைஞரைப் பலிகொடுக்க நான் இசையவில்லை. ஆனால் புலவர் பிடிவாதத்துடனிருந்தார். நீங்கள் ஒருவர் தான் சேர மன்னரைச் சிறை மீட்க
முடியுமென்றார். அப்பொழுதும் நான் இணங்கவில்லை. எனக்குத் திருப்தியானால் தான் இந்த அபாயப் பணிக்கு உங்களை இறங்க அனுமதிப்பேனென்று சொன்னேன் என்றாள் இமயவல்லி.
“உங்கள் பரீட்சையில் நான் தேறிவிட்டேனா?” என்று வினவினான் இளமாறன்.
“நன்றாகத் தேறிவிட்டீர்கள். உங்களுக்கு முன்பு வந்த நான்கு பேரிடமும் இதே கேள்வியை நான் கேட்டேன். நால்வரும் சரியாக விடை கூறவில்லை. அவர்கள் வெற்றியைப் பற்றி எனக்கே சந்தேகம். என் சந்தேகம் சரியாகப் போயிற்று”
என்றாள் இமயவல்லி.
“நான் வெற்றியடைவேனா?” என்று வினவினான் இளமாறன்.
“வெற்றியடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்திருக்கிறது. இல்லையேல் உங்களை…”
“இப்படியே திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுவீர்கள்.”
“ஆம்!”
“பதிலுக்குச் சிரித்தான் இளமாறன். “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் இமயவல்லி.
பெண்ணே! நீ இன்னும் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வேட்டைக்குக் கிளம்பிய சிங்கம் வேட்டை தீர்ந்தாலொழிய குகை திரும்புவது இல்லை. என்று அரசமுத்திரையுடன் கூடிய அழைப்பு ஓலையை எனக்குப் புலவர்
விடுத்தாரோ, என்று சேரமான் விடுதலைப் பணியை முன்னிட்டு நான் கருவூர் வஞ்சியைவிட்டு மதுரைக்குக் கிளம்பினேனோ, அன்றே நீங்கள் இருவரும் என்னை இந்த அலுவலுக்கு அமர்த்திவிட்டீர்கள். அதுவரையில்தான்
உங்களிருவர் பொறுப்பும். இனி சேரன் விடுதலையடைந்தாலொழிய நான் ஊர் திரும்பமாட்டேன். நீங்கள் என்னை இந்தப் பணியிலிருந்து விலக்கினாலும் நான் விலகமாட்டேன். இந்த மதுரையில் தங்கி மூங்கில் கோட்டை மர்மங்களை
அறிந்து அதை உடைத்து விடுவேன். அல்லது அந்தப் பணியில் முன் சென்ற நால்வர் திசையில் நானும் செல்வேன். இஷ்டப்படி வேலைக்கழைத்து இஷ்டப்படி விலக்கிவிடக் கூடிய வேலைக்காரனல்லன் இளமாறன். சேர நாட்டின் வீரன். அரச
முத்திரைக்குத் தலை வணங்கியிருக்கிறேன். அரச பணி முடிந்தாலொழிய சொந்த நாடு மீளமாட்டேன். நினைப்பிருக்கட்டும்!” என்று திடமும் வீரமும் அதிகாரமும் கலந்த குரலில் பேசிய இளமாறன், “சொல் பெண்ணே! இப்பொழுது
விவரமாகவும் தெளிவாகவும் சொல். மூங்கில் கோட்டைக்கும் மூங்கில் பாலத்துக்கும் உள்ள உறவை’ என்றும் உத்தரவிட்டான்.
அவன் பேச்சைக் கேட்ட புலவர் கண்கள் பளிச்சிட்டன. உணர்ச்சி வேகத்தில் இளமாறன் இமயவல்லியின் உயர்ந்த பதவியைக்கூட எண்ணிப் பார்க்காமல் ஏக வசனத்தில் பேசிவிட்டதையும் நினைத்துப் புன்முறுவல் கொண்டார்!
இமயவல்லியின் முகத்தில் பூர்ண மகிழ்ச்சி இல்லை. வருத்தமும் பரிதாபமும் கலந்து விரிந்து கிடந்தன, “வீரரே! உங்கள் துணிவை தான் மெச்சுகிறேன். உங்கள் கடமை உணர்ச்சியும் என்னைக் கவர்கிறது. இத்தனை நுண்ணறிவும் கடமை
உணர்ச்சியும் வீரமும் உள்ள உங்களைப் பெரும் அபாயத்தில் ஆழ்த்த என் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், வேறு வழியில்லை. சேரமான் சீக்கிரம் விடுதலையாகாவிட்டால் மறு போர் ஏற்படும். மறுபோர் ஏற்பட்டால் சேர நாடு
சிதைந்து விடும். அதை முன்னிட்டுத்தான் உங்களை இந்தப் பணியில் இறங்க நான் அனுமதித்திருக்கிறேன்” என்றாள்.
இன்னொரு போர் ஏற்பட்டால் சேரநாடு ஏன் சிதைய வேண்டும் என்பது விளங்கவில்லை அந்த வாலிப வீரனுக்கு. சேர நாட்டில் வீரர்களே இல்லையென்று இமயவல்லி நினைக்கிறாளா என்றும் எண்ணினான் அவன். அவன்
மனத்திலோடிய எண்ணங்களை உணர்ந்து கொண்டவள் போல் இமயவல்லி சொன்னாள் : “வீரரே! உங்கள் நாட்டில் வீரர்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த வீரம் மட்டும் வெற்றியைத் தராது உங்களுக்கு. பாண்டிய

மன்னர் நுண்ணறிவு இணையற்றது. எந்த சமயத்தில் எப்படிப் படைகளைத் திருப்பினால் வெற்றி நிச்சயம் என்பது அவருக்குத் தெரியும். தன் நாட்டை எத்தனை பலமான எதிரியிடமிருந்தும் காக்கும் வழிகளும் தெரியும்…”
இமயவல்லி தனது சொற்களை முடிக்கு முன்பாக இடைமறித்துச் சொன்னான் இளமாறன். “அதை ஏற்கெனவே நான் புரிந்து கொண்டேன்” என்று.
இமயவல்லியின் கண்கள் ஆச்சரியத்தால் எழுந்தன. “எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டாள் அவள்.
“மதுரையின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலிருந்து தெரிந்து கொண்டேன். எந்த எதிரி வந்தாலும் வைகையின் மூங்கிற் பாலங்கள் பெரும் பாதுகாப்பு மதுரைக்கு. எதிரி பாதிப் பாலத்திலிருக்கும் போதே கோட்டை மதிலை அடுத்திருக்கும்
பாலப் பகுதியை எளிதில் உடைக்கலாம். உடைத்து அடியேயுள்ள மூங்கில்களுக்குத் தீ வைக்கலாம். மூங்கில் தீயின் தன்மை உங்களுக்குத் தெரியுமல்லவா? பிடித்தால் விடாது. காட்டையே அழிக்க வல்லது. திடீர் திடீரென பெரு மூங்கில்கள்
வெடிக்கும். பாலமும் பிளவு கொடுத்து உட்கார்ந்துவிடும். வரும் எதிரி ரதங்கள் திடீரெனப் பிளவுகளுக்குள் சிக்கி ஆற்றிலேயேகூட இறங்கிவிடும். மூங்கில் வெடிப்பில் ரதங்கள் தீப்பிடிக்கும், வீரர்கள் தீப்புண்ணால் சிதறி ஓடுவார்கள்.
அப்பப்பா! நிலைமை பயங்கரம்” என்று விளக்கினான் இளமாறன்.
“பிரமாதம் இளமாறா! பிரமாதம்” என்று குதூகலித்தார் திடீரெனப் புலவர்.
“வீரர்கள் இந்தப் பயங்கரச் சாவுக்குள்ளாவதில் புலவருக்கு இத்தனை மகிழ்ச்சியா?” என்று வினவினான் இளமாறன்.
“அதில்லை மகிழ்ச்சி இளமாறா! மூங்கில் கோட்டையின் மர்மத்தின் அடிப்படையை நாங்கள் சொல்லாமலே நீ புரிந்து கொண்டு விட்டாயே என்றுதான் சந்தோஷப்படுகிறேன்” என்றார் புலவர்.
இமயவல்லியின் கண்களில் மகிழ்ச்சி இல்லை. இத்தகைய நுண்ணறிவு படைத்தவனைப் பலி கொடுக்கிறோமே என்று உள்ளத்தில் ஏற்பட்ட சோகம் அவள் கண்களில் விரிந்து கிடந்தது. அந்தச் சோகம் குரலிலும் ஒலிக்கச் சொன்னாள்
அவள்: “வீரரே! மதுரை தாக்கப்பட்டால் நீங்கள் சொன்ன பயங்கர விளைவு தான் எதிரிப் படைக்கு! இதே முறையில் ஆனால் இந்த இரு பாலங்களைவிட மிகப் பலமாக அமைக்கப்பட்டிருக்கிறது மூங்கில் கோட்டை. பெயர் தான் மூங்கில்
கோட்டை அதற்கு. ஆனால் அது மூங்கிலால் நிர்மாணிக்கப்பட்ட கோட்டை அல்ல. சுண்ணக் கலவை அரைத்துக் கல் கொண்டு கட்டப்பட்டது தான் கோட்டை. சமீப காலம்வரை அதற்குச் சூரன் கோட்டை என்று பெயர். அதை மூங்கில்
கோட்டை என்று பாண்டிய மன்னர் சமீபத்தில்தான் மாற்றினார்.”
“உம் சொல்லுங்கள்.” மீண்டும் மரியாதையிருந்தது இளமாறன் பேச்சில். அவன் உணர்ச்சிகளைத் தீட்டிக்கொண்டு கேட்டான், இமயவல்லி சொல்லிய விவரங்களை. இமயவல்லி விவரித்தாள் : “வீரரே இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில்
இருக்கிறது அந்தச் சூரன் கோட்டை. அந்தக் கோட்டையைத் தூர இருந்து பார்த்தால் சற்று மேடான இடத்தில் கட்டப்பட்ட ஒரு சிறு கோட்டையாகத்தான் அது தெரியும். மற்றபடி அதைச் சுற்றிப் பெரும் மண்மேடு கட்டாந்தரை தான்
இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டாந்தரை மேல் ரதமோ வண்டியோ போகக்கூடாது. போனால் அதோ கதிதான். கோட்டைக்குச் செல்லும் அந்தப் பரந்தவெளி அந்த மண்மேடு உண்மையில் அபாயமான அகழி. அதில் முதலைகள் பல
இருக்கின்றன.”
இதைக் கேட்டுப் பிரமித்த இளமாறன் கேட்டான். “என்ன பூமிக்கு அடியில் அகழியா?” என்று வியப்புடன்,
“ஆம்.”
“அது எப்படிச் சாத்தியம்? பூமிக்கடியில் அகழி வெட்ட முடியுமா?”
“பூமிக்கடியில் வெட்ட முடியாது.”
“அப்படியானால்…?” சந்தேகமும் ஓரளவு விஷயம் புரிந்ததையும் விளக்கும் குரலில் கேட்டான் இளமாறன்.
“நாம் பார்ப்பது பூமியல்ல. கண்ணுக்கெதிரே கோட்டை. முன்னணியில் எழுவது மண்மேடல்ல. அது கவிழ்த்து வைத்த மூங்கில் கூடை.”
“மூங்கில் கூடையா?”
“ஆம், மூங்கில் கூடைதான் மூங்கில் கோட்டையாகியது. அதற்குக் காரணம் இருக்கிறது வீரரே! யானை பிடிப்பதில் வல்லவரான சேர மன்னர் ‘யானையைப் பிடிப்பதுபோல் இந்தச் சிறுவனை நொடி நேரத்தில் பிடித்து விடுவேன்’ என்று
பாண்டிய மன்னரை ஏளனம் செய்தார். பாண்டிய மன்னரின் காதுக்கு அது வந்தது. அதை உள்ளூர வைத்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர் சேர மன்னரைச் சிறை பிடித்ததும் சூரன் கோட்டையைச் சுற்றிப் பெரும் அகழிகளை
வெட்டினார். பக்கத்துக் கால்வாய்களிலிருந்து அந்த அகழிகளுக்கு நீரையும் பாய்ச்சினார். அந்த நீரில் முதலைகள் நிரம்ப விடப்பட்டன. பிறகு அகழிகளின் மேல் பாகத்தில் இள மூங்கில்கள் பரப்பப்பட்டன. மூங்கில்களின் மேலே
களிமண்ணும் சாணமும் பூசி மணலைத் தூவி பார்வைக்குச் சாதாரண கட்டாந்தரைபோல் செய்து விட்டார் பாண்டிய மன்னர். ‘யானைகளுக்குக் குழி வெட்டி மேலே மூங்கில் பரப்பி இலைகளால் மூடி யானை நடந்து வந்து அதில்
விழுந்ததும் இவன் யானை பிடிக்கிறவன், அத்தகைய குழிகளுக்கிடையே இவன் உறையட்டும். வெளியில் இந்த யானை வந்தால் அதைக் கீழுள்ள குழியில் (அகழியில்) தள்ளிவிடுங்கள்’ என்று உத்தரவிட்ட பாண்டிய மன்னர், ‘நீரில் யானை
முதலையிடம் ஒன்றும் செய்ய முடியாது. கஜேந்திர மோட்சம்’ கதை தெரியுமல்லவா? அதே கதைதான் இதுவும். ஆனால் இங்கு யானையை விடுவிக்க திருமால் வரமாட்டார். இப்படியெல்லாம் சொல்லி நகைத்தார். இந்த யானை தப்ப
முடியாதது மட்டுமல்ல இந்த யானையை விடுவிக்க வரும் மற்ற யானைகளும் அகழியில் அழிந்து போகும். என்று சொல்லியும் சிரித்தார். அவர் நகைச்சுவையைக் கேட்டு அவர் படைத் தலைவர்கள் நகைத்தார்கள். நான் நகைக்கவில்லை.
அவர் பகைமை பயங்கரமாயிருந்தது. உங்கள் நாட்டிலிருந்து வந்த இரு யானைப் படைகள் அவர் எண்ணப் படி மூங்கில் கோட்டையின் அகழிகளில் விழுந்து பயங்கர முடிவை அடைந்தன. அந்தப் பயங்கரத்தை நான் கண்ணால் பார்த்தேன்.
அகழிகளில் விழுந்த யானைகள் முதலைகளின் கடிபட்டு அலறின சேர வீரர்கள், கோட்டையிலிருந்து வீசப்பட்ட பாண்டிய வீரர்களின் அம்புகளாலும் ஈட்டிகளாலும் அகழிகளில் வளைந்து வளைந்து கடித்த முதலைகளின் இம்சையாலும்
கதறிக் கதறிக் கோர மரணமடைந்தார்கள். இப்பொழுது அந்தக் காட்சியை நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது” என்று உணர்ச்சியுடன் பேசிய அந்த இளமங்கையின் உடல் ஒரு முறை ஆடியது.
இளமாறன் முகம் உணர்ச்சியற்றுக் கல்லாயிருந்தது.
“அந்த இரு யானைப் படைகள் அழிந்ததும், அகழிகள் மீண்டும் மூங்கில்களாலும் களிமண்ணாலும் மூடப்பட்டன. மறுபடியும் அந்த மண்மேடு அமைதிக் கோலம் கொண்டிருந்தது. அதன் கீழே இப்போழுது அந்தப் பயங்கர அகழிகள்
இருக்கின்றன” என்றாள் இமயவல்லி.
“கோட்டையில் எந்தப் புறம் இருக்கின்றன? எத்தனை அகழிகள்?”
“ஏழு அகழிகள், கோட்டையை சுற்றிலும்.”
“அப்படியானால் எந்தப் படையும் அந்தக் கோட்டையை அணுக முடியாது.”
“முடியாது.”
“அதற்குள் எப்படிச் செல்வது?”
“ரகசிய வழி இருக்கிறது. அதன் வழியாகப் பாண்டிய மன்னர் மட்டுமே செல்லலாம்.”
“அப்படியா?”
“ஆம். குறுகிய வழி. வழி நெடுக ஆறு வாயில்கள். ஒவ்வொரு வாயிலிலும் காவல் உண்டு.”
“அப்படியானால் நாம் எப்படிப் போவது?”
“வழி நான் சொல்லுகிறேன்.” இமயவல்லி திடமாகக் கூறினாள்.
“எப்பொழுது புறப்படலாம்?” இளமாறனும் தயக்கமின்றிக் கேட்டான்.
“அதைப் புலவர் தான் சொல்ல வேண்டும்” என்றாள் இமயவல்லி.
புலவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். கடைசியாகத் தியானத்திலிருந்து மீண்டவர் போல் பெருமூச்சு விட்டு, “அதை நாளை நிர்ணயிப்போம், நீங்கள் போய் இளைப்பாறுங்கள்” என்று கூறிவிட்டு, ‘வெளியே போகலாம்’ என்பதற்கு
அறிகுறியாகக் கையை அசைத்தார்.
இமயவல்லி தன்னுடன் வரும்படி இளமாறனுக்குச் சைகை செய்து அறையை விட்டு வெளியேறினாள். இளமாறனும் ஒருமுறை பெரியவரை நோக்கிவிட்டு இமயவல்லியைத் தொடர்ந்து சென்றான். அறையை விட்டு வெளியே வந்த
இமயவல்லி பக்கத்துச் சுவரில் எரிந்த பந்தமொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கினாள். இளமாறன் ஏதும் பேசாமல் அவளைத் தொடர்ந்தான்.
படிகளின் அடிக்கு வந்ததும் இமயவல்லி பக்கத்தே இருந்த ஒரு குறுகிய வழியில் அவனை அழைத்துச் சென்று அங்கிருந்த ஓர் அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளேயிருந்த சிறு விளக்கு ஒன்றை ஏற்றிவிட்டு,
“வீரரே! இன்றிரவு நீங்கள் இந்த அறையில் தங்குங்கள். நான் வருகிறேன்” என்று கூறி விட்டு வெளியே செல்ல முயன்றாள்,
அவளை வழிவிட வாயிற்படி வரையில் வந்த இளமாறன் வாயிலை அவள் தாண்ட ஒரு காலை வெளியே எடுத்துவைக்க முற்பட்டதும் “இமயவல்லி” என்று பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் திடீரென்று பயத்துடன் திரும்பினாள். இருவர் விழிகளும் சந்தித்தன. சந்தித்த விழிகள் பிரியவில்லை. சந்தித்துக் கொண்டே இருந்தன. அவள் கால்கள் படியைத் தாண்டிச் செல்ல மறுத்தன. அந்தச் சில விநாடிகளில் இளமாறன்
மூங்கில் கோட்டையை மறந்தான். அங்கு நடந்த போர் வேட்டையை மறந்தான். அவள் காந்தக் கண்களுக்குத் தன் கண்களைப் பறிகொடுத்து நின்றான்.

Previous articleMoongil Kottai Ch3 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here