Home Historical Novel Moongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

86
0
Moongil Kottai Ch5 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 மர்ம மோதிரம்

Moongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

பூங்கரத்தில் பந்தமேந்தி வழிகாட்டி வந்து அறையின் சிறு விளக்கையும் ஏற்றிவிட்டு வெளியே செல்ல முயன்ற இமயவல்லியை அந்தச் சேரநாட்டு வீரன் பெயர் சொல்லி அழைத்ததும், அந்தக் கட்டழகியின் கருவிழிகள் திடீரென
சீற்றத்துடன் அவனை நோக்கித் திரும்பினவென்றாலும் அந்தச் சீற்றம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இளமாறனின் ஈட்டியினும் கூர்மையான விழிகள் அவள் கெண்டை விழிகளை ஊடுருவி அவள் உள்ளத்தையும் பார்த்து
விடுவனபோல் இருந்தால், சீற்றமுற்ற அவள் விழிகளில் சில விநாடிகளுக்குள்ளாகச் சீற்றத்துக்குப் பதில் அச்சம் நிலவி நின்றது. அந்தச் சில விநாடிகளில், அந்தப் பருவ மங்கைக்குத் தன் இதயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அச்சமா குழப்பமா
என்பது கூடச் சரியாக விளங்கவில்லை யாகையாலும், தன் கண்களை அவன் கண்களிடமிருந்து விலக்கக்கூட சக்தியில்லையாகையாலும் அவள் பிரமை பிடித்து நின்றாள். அப்படி பிரமை பிடித்து நின்றாலும், அந்தப் பிரமையின்
காரணமாக உணர்ச்சிகள் அவள் வசமில்லையாகையாலும், அவள் வாயிற்படியைத் தாண்ட முன் எடுத்து வைத்த இடது காலைத் தவிர வலது பாதத்தைப் பின்னிலிருந்து வாங்கி முன் பாதத்துடன் சேர்த்துக் கொள்ளவும்
சக்தியற்றவளானாள். அப்படி ஒருகால் வாயிற்படிக்கு அப்புறமும், இன்னொரு கால் இப்புறமும் நின்றிருந்தாலும், அவள் திரும்பியதால் தேகம் சற்று முறுக்கி நின்றதாலும், இயற்கையாகவே செழித்திருந்த அவள் அவயவங்கள் அதிக
செழிப்பைப் பெற்றுவிட்டன போல் தென்பட்டன. சில விநாடிகளுக்குப் பிறகு அந்தக் கட்டழகியின் கருவிழிகளை விட்டுக் கழன்ற இளமாறனின் ஈட்டி விழிகள் அந்தச் செழிப்பைக் கண்டு பெரிதும் பிரமிக்கவே செய்தன.
இமயவல்லியின் அழகிய விழிகளுடன் தன் விழிகளை ஆரம்பத்தில் உறவாட விட்ட இளமாறன், அவற்றில் பெரும் சீற்றமிருந்ததைக் கவனித்து அதற்குக் காரணத்தையும் உணர்ந்து கொண்டிருந்தானானாலும், அந்தச் சீற்றம் மறைந்து
அந்த இடத்தை அச்சமும் குழப்பமும் கலந்த சாயையொன்று பற்றிக் கொள்ளவே சற்று தைரியம் அடைந்தான். அப்படித் தைரியமடைந்த நிலையிலும் தன் கண்கள் அவள் கண்களை ஆட்கொண்டனவா அல்லது அவள் விழிகள் தன்
விழிகளை இறுக்கிப் பிடித்து நிறுத்தி விட்டனவா என்பதை நிர்ணயிக்க முடியாமல் திணறினான். அந்தத் திணறலின் விளைவாக சற்றே கண்களைக் கீழேயிறக்கவே அந்தக் கண்கள், அவள் கழுத்துக்குக் கீழ் பெருமூச்சால் ஏறி இயங்கிக்
கொண்டிருந்த இருபெரும் பங்கய மொட்டுகளில் ஒரு விநாடிலயித்து அகன்றன. அந்தக் கட்டழகி கையில் பிடித்து நின்ற பந்தத்தின் ஒளி, அந்த இரட்டை எழில்களைக் காத்துக் கிடந்த மேலாடை மீது நன்றாக விழுந்ததாலும் அவற்றின்
ஏற்றமும் இறக்கமும் கண்களுக்குப் புலனானதாலும், இளமாறனின் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொள்ளவே அவன் கண்களைச் சிறிது நிலத்தில் தாழ்த்தவும் செய்தான். நிலத்திலும் அவன் கண்களுக்கோ இதயத்துக்கோ
நிம்மதியில்லை. செம்பஞ்சுக் குழம்பு பூசிய அவள் பாதங்கள் நல்ல சிவப்புடன் சின்னஞ் சிறு அழகிய விரல்களுடன் விரிந்த தாமரை மலர்களைப்போல் காட்சியளித்து அவன் விழிகளைத் தங்கள் பால் இழுக்கவே செய்தன; அந்தப்
பொல்லாத விழிகள் பாதத்துடன் நிற்கவில்லையே? நிம்மதி மட்டும் எப்படி இதயத்தில் நிற்கும்?
அவன் இதயத்தில் உணர்ச்சி அலைகள் பெரிதாகி மோதிக்கொண்டு இருந்தன. அங்கு நிலவிய மௌன நிலை அடுத்த சில விநாடிகள் நீடித்தால் என்ன ஆகியிருக்குமோ சொல்ல முடியாது. அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த
நாளோ மரணந் தரும் பணியை நாடிச் செல்லவிருந்த அந்த வீரன் அருகில் தனிமையில் கிடைத்த அழகு மலர்களை என்ன செய்திருப்பானோ சொல்ல முடியாது. ஆனால், மௌனத்தை நல்ல வேளையாகக் கலைத்தாள் இமயவல்லி. “ஏன்
அழைத்தீர்கள் வீரரே?” என்று சர்வ சாதாரணமாகக் கேள்வியொன்றையும் வீசினாள் அவள்.
மௌன நிலை திடீரென அந்த மூன்று சொற்களால் கலைக்கப்படவே சுயநிலை அடைந்த இளமாறன் சற்று நேரம் என்ன செய்வதென்பதை அறியாமல் விழித்தான். ஒரே இரவில் அதுவும் அரை ஜாமமே அறிமுகமான ஒரு பெண்ணைப்
பெயர் சொல்லி அழைத்தது எத்தனை பெரும் குற்றம் என்பதை அப்பொழுது தான் புரிந்து கொண்டான் அவன். ஆகையால் பெரிதும் குழம்பி வகுப்பில் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத மாணவனென திருதிருவென்று விழித்த
வண்ணம் அவள் முன்பு நின்றான்.
இளமாறனைவிட வெகுவிரைவில் தனது குழப்பத்தை மறைத்துக் கொண்ட இமயவல்லி நன்றாகத் திரும்பி அவனெதிரில் பந்தத்துடன் நின்று, “என்ன பதிலெதையும் காணோம்” என்றாள் இதழ்களின் கோடியில் வலுவில்
வரவழைத்துக் கொண்ட இளநகையுடன்.
“இல்லை, ஒன்று கேட்க முயன்றேன்” என்று குளறினான் இளமாறன்.
அவள் புன்முறுவல் அதிகமாக இதழ்களில் பரவியதிலிருந்து அவள் தனது உணர்ச்சிகளைப் பூர்ணமாகக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட இளமாறன் தனது உணர்ச்சிகள் மட்டும் கட்டுக்கடங்காமல்
தவிப்பதை எண்ணி வியந்தான். அவள் அவ்வளவு சீக்கிரத்தில் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டதை எண்ணியதால் அவள் சாதாரணப் பெண் அல்லள் என்பதை உணர்ந்த அந்தச் சேர நாட்டு வாலிபன், அந்தப் பெண்ணிடம் அதிகமாக
நெருங்காதே’ என்று புலவர் தன்னை எச்சரித்ததற்குக் தகுந்த காரணம் இருக்க வேண்டுமென்பதையும் ஊகித்துக் கொண்டானானாலும், அது என்ன காரண மென்பது மட்டும் விளங்கவில்லை அவனுக்கு.
இப்படிப் பலவாறாக யோசித்து மனதுக்குள் கேள்விகளை எழுப்பிக் கொண்டு குழம்பிய இளமாறனை நோக்கிய இமயவல்லி, “ஏன் கேட்பது தானே?” என்று ஊக்கினாள்.
இளமாறன் மெள்ள மெள்ள சுயநிலையை அடைய முற்பட்டான். இருப்பினும் சிறிய அச்சத்துடனேயே, “கேட்க மனம் துடிக்கிறது. இருப்பினும்…” என்று சொல்லி வாசகத்தை முடிக்காமல் விட்டான் இளமாறன்.
“இருப்பினும் என்ன?” என்றாள் இமயவல்லி சிறிதும் சலனமற்ற குரலில்.
“பயமாயிருக்கிறது” என்ற இளமாறன் உண்மையைச் சொன்னான்.
அவள் முகம் பூராவும் மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. “வீரர்கள் பயப்படலாமா?” என்று சற்று ஏளனத்துடன் கேட்டாள் அந்தக் கட்டழகி.
“கூடாது தான்; இருந்தாலும் எனக்கு இந்தச் சமயத்தில் பயமாயிருக்கிறது” என்றான் இளமாறன்.
“ஏன் சமயத்துக்கென்ன?”
“இரவு நேரம்…”
“ஆம்”
“நாம் தனித்திருக்கிறோம்…”
“அதனாலென்ன?”
“இப்பொழுது அதிக நேரம் நீ இங்கு இருப்பதே பிசகு. அதைவிடப் பிசகு நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்தது. மேலும் விவரங்கள் கேட்பது…” இதற்குமேல் சொல்லத் தைரியமில்லாததால் வார்த்தைகளை முடிக்காமல் விட்டான்
இளமாறன்.
“மிகமிகப் பிசகு” என்று சொன்ன இமயவல்லி லேசாக நகைத்தாள்.
“ஏன் நகைக்கிறாய் பெண்ணே?” என்று வினவினான் இளமாறன்.
“வீரரே! நீர் போரில் வல்லவராயிருக்கலாம். ஆனால் விஷயங்களைச் சரியாக ஊகிக்கும் சக்தியை இழந்து விட்டீர். கதவைத் திருடன் போல் தட்டுகிறீர், திறக்கிறாள் ஒரு காரிகை. பிறகு அவளுடன் உள்நுழைந்து ஒரு பெரியவருடன்
பேசுகிறீர். உம்மை அழைத்துச் சென்று அறை காட்ட அந்த பணிப்பெண்ணுக்கு அந்தப் பெரியவர் அனுமதிக்கிறார். இப்பொழுது அவளைக் கேள்வி கேட்கலாமா என்று அஞ்சுகிறீர். யோசித்துப் பாரும், இதுவரை நடந்த விஷயங்கள் உலக
ரீதிக்கு ஒத்து வருகிறதா என்று. நாம் அபாயமான அலுவலில் சிக்கியிருக்கிறோம். எந்த விநாடியிலும் நமது உயிர்கள் இப்பணியில் போய்விடலாம். ஆகவே சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பழக்க வழக்கங்கள், சட்ட திட்டங்கள் நமக்குக்
கிடையா. ஆகவே கேளுங்கள் வீரரே! அச்சம் இன்றி வேண்டியதைக் கேளுங்கள்” என்றாள் இமயவல்லி.
அவள் வார்த்தைகளால் இளமாறனுக்கும் சிறிது துணிவு வந்தது. கேட்டான் அவன், “நீ யார்?” என்று.
இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவள் விழிகளில் ஒரு புத்தொளி தோன்றி மறைந்ததை இளமாறன் கவனித்தான். ஆனால், அதைப் பற்றி அவன் யோசிக்கும் முன்பாக அவள் பதில் சொல்லி விட்டாள். புலவர் பெருமான்
குறுங்கோழியூர்க்கிழாரின் பணிப்பெண்” என்று.
“அது தெரியும் எனக்கு” என்றான் இளமாறன்.
“ஒ தெரியுமா!” என்றாள் இமயவல்லி சற்றே நகைத்து.
அந்த நகைப்பில் ஆழ்ந்த கருத்து ஏதோ இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதைக் கவனிக்காதவன் போல் சொன்னான், “நீங்கள் தானே பணிப்பெண் என்று கூறினீர்கள் உங்களை” என்று.
“ஆம் ஆம். மறந்துவிட்டேன். நான் பணிப்பெண் தான்” என்றாள் அவள்.
“மற்றப் பணிப்பெண்களும் இருப்பதாகச் சொன்னீர்களே!”
“சொன்னேன்.”
“அவர்கள்?”
“உள்ளறைகளில் இருக்கிறார்கள். பார்க்க வேண்டுமானால் வாருங்கள், அறிமுகப்படுத்துகிறேன்.”
இந்தப் பதிலைக் கேட்ட இளமாறன் உண்மையில் அவள் தன்னைப் பார்த்து நகைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே சற்றுக் கோபத்துடன் கூறினான், அறிமுகம் தேவையில்லை” என்று.
“பணிவிடைக்கு?”
“யாரும் அவசியமில்லை.”
“நான் கூடவா?”
“ஆம்”
“ஏன்?”
பதில் சரேலென வந்தது இளமாறனிடமிருந்து. “பொய் சொல்லும் யாரையும் நான் விரும்புவதில்லை” என்றான் சேர நாட்டு வீரன்.
“நான் என்ன பொய் சொன்னேன் வீரரே?” என்று வினவினாள் அவள். புன்முறுவல் அப்பொழுதும் இதழ்களில் தவழ.
“நீ பணிப்பெண் என்பது பொய்” என்றான் இளமாறன் அவளை உற்று நோக்கி.
அவளும் அவனைத் தைரியமாக ஏறெடுத்துப் பார்த்தாள். “அப்படியானால் நான் யார்? அரச குமாரியா?” என்று கேட்டாள்.
“ஆம்.”
“எந்த நாட்டு அரச குமாரியோ?”
“அது தான் புரியவில்லை எனக்கு.”
“ஏன்?”
“உங்கள் கொண்டை நீங்கள் சேர நாடு என்பதை அறிவுறுத்துகிறது. ஆனால்…”
“சொல்லுங்கள்.”
“கழுத்திலுள்ள முத்துமாலை பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது.”
“சேரநாட்டுப் பெண்கள் முத்துமாலை போட மாட்டார்களா?”.
“மாட்டார்கள்.”
“ஏன்?”
“அங்கு அரசர் கிரீடத்தில் முத்துமாலை இருக்கலாமென்று விதி இருக்கிறது!”
“சேர நாட்டிலிருந்து இங்கு வந்துவிட்ட பெண்களுக்கு அந்த விதி ஏது?”
“எங்கிருந்தாலும் எங்கள் நாட்டவரை விதி கட்டுப்படுத்தும்.”
“அத்தனை ஒற்றுமையுள்ளவர்களா சேர நாட்டார்?”
“ஆம்.”
“நல்லது! நல்லது!” என்று கூறிய இமயவல்லி, “அப்படியானால் நான் எந்த நாட்டவள்? சேர நாடா? பாண்டிய நாடா?” என்று வேடிக்கையாகக் கேட்டு நகைத்தாள்.
“எனக்குத் தெரியவில்லை. நீதான் சொல்ல வேண்டும்” என்றான் இளமாறன்.
“நான் சொன்னால் நம்புவீர்களா?” என்று வினவினாள் அவள்.
“நம்பாமலென்ன?”
“நான்தான் பொய் சொல்லுபவளாயிற்றே?”
“வேண்டாம் மாற்றிக் கொள்ளுங்களேன்.”
“என்ன மாற்றினாலும் உண்மையென்று எப்படி ஒப்புவீர்கள்?”
“உண்மை எதுவென்று என்னால் அறியமுடியும்.”
இமயவல்லி சில விநாடிகள் தலைகுனிந்து நின்றாள். பிறகு, சொன்னாள்: “வீரரே நான் இரு நாடுகளுக்கும் சொந்தம்” என்று. இதைச் சொன்ன அவள் குரல் வருத்தத்தால் தழுதழுத்துக் கிடந்தது. அந்தச் சமயத்தில் அவள் இதயத்தில்
பெரும் குமுறல் இருந்ததை உணர்ந்த இளமாறனுக்கு அவளைப் பற்றிய விவரங்களை ஏன் கேட்டோமென்று தோன்றியது. ஆகவே அத்துடன் பேச்சை முடிக்க முயன்று, “உங்களுக்கு இஷ்டமில்லையேல் சொல்லவேண்டாம். நாளை
சந்திப்போம் நாம்” என்று கூறி அறையின் உட்புறத்தை நோக்கித் திரும்பினான் இளமாறன்.
இம்முறை அவனைத் தடுத்து நிறுத்தினாள் இமயவல்லி. “நில்லுங்கள் வீரரே!” என்று. அவனை நிறுத்தித் திரும்பச் செய்த அந்தக் கட்டழகி சொன்னாள் : “வீரரே! நான் இரண்டு நாடுகளுக்கும் சொந்த மானவள் என்பது உண்மை. என்
தாய் சேர நாட்டவள். என் தந்தை பாண்டிய நாட்டவர். நான் இளவயதில் தாயை இழந்தேன். பாண்டிய நாட்டில் தந்தையால் வளர்க்கப்பட்டேன். இரு நாடுகளின் இரத்தம் என் உடலில் ஓடுகிறது. அந்த இரண்டு நாட்டவரில் யார் இரத்தம்
சிந்தினாலும் என் இரத்தம் கொதிக்கிறது. ஆகவே இந்த இரண்டு நாடுகளுக்கும் சமாதானத்தை ஏற்படுத்த குறுங்கோழியூர்க்கிழார் மேற்கொண்டுள்ள இந்தப் பயங்கரப் பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன்…”
இந்தச் சமயத்தில் இடைமறித்த இளமாறன், “உன் தந்தையின் பெயர் என்ன?” என்று வினவினான்.
“அதை நான் இப்பொழுது சொல்லமுடியாது. சமயம் வரும்போது சொல்கிறேன். இவ்வளவுகூட நான் இதுவரை யாரிடமும் சொன்னது கிடையாது. உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்பது எனக்கே புரியவில்லை. மேற்கொண்டு
எதையும் கேட்காதீர்கள். படுத்து உறங்குங்கள்” என்று சொல்லிவிட்டுத் திரும்ப முயன்றாள்.
“இன்னும் ஒரு விஷயம்” என்றான் இளமாறன்.
“என்ன?” என்று அவள் கேட்டாள்.
“இந்த மாளிகையிலிருந்து நான் வெளியே செல்லலாமா?” என்று இளமாறன் வினவினான்.
“பகலில் செல்லலாம்.”
“இரவில்?”
“செல்வது அபாயம்.”
“யாருக்கு?”
“நீங்கள் மேற்கொண்டிருக்கும் பணிக்கு,”
“எப்படி அபாயம் வரும் என்பதையும் சொல்ல மாட்டீர்களாக்கும்.”
“சொல்லுவதற்கில்லை.”
“சத்திரத்தில் என் புரவியைக் கட்டியிருக்கிறேன்.”
“அது இங்கே வந்துவிட்டது. பின் கொட்டடியில் இருக்கிறது.”
“யார் வரவழைத்தது?”
“நான் தான்?”
“இளமாறன் வியப்புடன் அவளை உற்று நோக்கினான். “எல்லாம் முன் யோசனையுடன் நடக்கிறாப் போலிருக்கிறது?” என்று வியப்புடன் வினவவும் செய்தான்.
“என்னை இம்மாளிகையிலிருந்து வெளியே விடமாட்டீர்களா?”
இமயவல்லி பதில் கோபத்துடன் வந்தது. “இங்கு நீங்கள் சிறையிலில்லை வீரரே! இரவில் போகாதிருப்பது உங்களுக்குத்தான் நல்லது” என்று சினம் ஒலிக்கும் சொற்களை ஒலித்தாள் இமயவல்லி.
“என் நலத்தைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்” என்றான் அவன்.
“அப்படியானால் அவசியம் வெளியே போகத்தான் வேண்டுமா?”
“ஆம், போகத்தான் வேண்டும்.”
அவன் பேச்சில் பிடிவாதமிருப்பதைக் கவனித்தாள் அவள். பிறகு பெருமூச்சு விட்டுச் சில விநாடிகள் யோசித்தாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து தன் இடது கை விரலிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து அந்த வாலிபனிடம் நீட்டி,
“இந்த மோதிரத்தை அணிந்து கொள்ளுங்கள். உங்களை யார் மறித்தாலும் ‘புலவர் மாளிகை’ என்று சொல்லுங்கள். அப்படியும் மறிப்பவர்கள் அடம் செய்தால் இதைக் காட்டுங்கள். இது உங்களைப் பாதுகாக்கும்” என்று கூறியதன்றி
மோதிரத்தை அவன் கையில் கொடுத்தாள்.
அந்த மோதிரத்தைக் கையில் வாங்கிப் பார்த்த இளமாறன் விழிகளில் மிதமிஞ்சிய கலவரமும் திகிலும் தெரிந்தன. அந்த மோதிரத்தைத் தான் அணிவதால் அது தன்னைக் காப்பதற்குப் பதில் அழித்துவிடும் என் பதைச் சந்தேகமறப்
புரிந்துகொண்டதால் அந்த மோதிரம் அந்தப் பெண்ணிடம் எப்படிச் சிக்கியது என்று பெரும் சந்தேகத்துக்கும் உள்ளானான். அந்தச் சந்தேகத்தின் சாயை விழிகளில் பரவ இமயவல்லியை நோக்கினான் இளமாறன். இமயவல்லி புன்முறுவல்
பூத்தாள். அடுத்த வினாடி அங்கு நிற்காமல் அறைப் படியைத் தாண்டி வெகுவேகமாகச் சென்றுவிட்டாள். இளமாறன் விழிகள் மீண்டும் மீண்டும் அந்த மோதிரத்தின் மீதே நிலைத்தன. அந்த மோதிரம் மகர மாளிகையின் மர்மத்தை மேலும்
அதிகமாக்குவதை அவன் சந்தேகமற உணர்ந்து கொண்டான்.

Previous articleMoongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here