Home Historical Novel Moongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

58
0
Moongil Kottai Ch6 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 வாள் பயிற்சி

Moongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

மயக்கும் விழிகளைப் படைத்த மங்கையர்க்கரசியான இமயவல்லி மோதிரமொன்றைக் கழற்றிக் கொடுத்ததுமே பெரும் திகிலுக்கும் கலவரத்துக்கும் உள்ளான இளமாறன் அவள் மந்தகாச மலர்க்கணையொன்றை அவன் மீது வீசிவிட்டு
நடந்த நீண்ட நேரத்துக்குப் பின்பும் அறை வாயிற்படிக்கருகிலேயே நின்று மீண்டும் மீண்டும் கையில் விரல்கள் பிடித்து நின்ற மோதிரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி உற்றுப் பார்க்கப் பார்க்க அந்த மோதிரம்
சொல்லிய விவரத்தைச் சிந்திக்கச் சிந்திக்க மகர மாளிகையின் மர்மம் பெரிதாகிக்கொண்டு போவதை உணர்ந்தான் அந்த சேர நாட்டு வீரன்.
இடது கையில் பந்தத்தை ஏந்தியவண்ணமே அந்த ஏந்திழை மோதிரத்தைக் கழற்றிக் கையில் கொடுத்ததும் அதன் அமைப்பைப் பார்த்துப் பெரும் பிரமைக்குள்ளான இளமாறன், அந்த மோதிரம் தன்னைக் காக்கும் என்று அவள்
சொன்னதும் ஆரம்பத்தில் பெரும் வியப்பு உணர்ச்சிக்கே இலக்கானாலும், அதை மேன்மேலும் உற்றுப் பார்த்ததும் ஓரளவு கிலியையும் அடைந்தான்.
மோதிரம், கிழாரின் பணிப்பெண் என்று சொல்லிக் கொண்ட அந்த அழகியின் விரலுக்குப் பொருந்தும்படி அளவில் சிறியதாயிருந்தாலும் அது நல்ல பட்டையாகவும் ஒரு முழு கழஞ்சுக்கு மேற்பட்ட பொன்னையுடையதாகவும்
இருந்ததையும், அந்த மோதிரத்தின் நட்ட நடுவில் பெரும் கோமேதகக் கல் ஒன்று மீனைப் போல் கடைசல் பிடிக்கப்பட்டு வளைந்து கண்ணைப் பறித்ததையும் கண்ட இளமாறன் அந்த ஒரு கல்லைக் கொண்டு சிற்றரசையே விலைக்கு
வாங்கிவிட முடியும் என்பதைப் புரிந்துகொண்டான். கல்லைச் சோதித்து மதிப்புக் கூறும் வணிகர் இனத்தில் அவன் பிறக்கவில்லையே தவிர, மேல் நாட்டு வாணிபம் தமிழகத்தில் நுழையும் வாயிலெனத் திகழ்ந்த தொண்டித் துறை
முகத்தையுடைய சேர நாட்டவனானதாலும், அந்த நாட்டில் மேல் நாட்டின் பெரும் நவமணிகள் கணக்கின்றி நடமாடியதால் அந்நாட்டுச் சாதாரண மக்கள் கூட கல்லுக்கு விலை சொல்லும் திறனுடையவர்களாயிருந்தபடியாலும், அந்தத்
திறனை இளமாறனும் பெற்றிருந்தான். ஆகவே, பார்த்த மாத்திரத்தில் மிக விலை மதிப்புள்ள மோதிரத்தைத் தான் தாங்கி நிற்பதை உணர்ந்துகொண்டான். அதுமட்டுமல்ல; அந்த மோதிரம் பாண்டிய மன்னர் குலத்தின் முத்திரை
மோதிரங்களில் ஒன்று என்பது புலனாகியது அந்த வாலிப வீரனுக்கு. அந்த மச்ச கோமேதகத்தின் முதுகில் பொறிக்கப்பட்ட இரண்டொரு சின்னஞ்சிறு எழுத்துக்களிலிருந்தும் தான் கையில் தாங்கி நிற்பது பாண்டிய மன்னனின்
முத்திரை மோதிரந்தான் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்ட இளமாறன் இதயத்தில் பல சந்தேகங்கள் உதயமாயின.
‘சேரமான் இரும்பொறையை விடுதலை செய்ய வேண்டுமானால் இவர்கள், ஒன்று பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விரோதிகளாக நடந்துகொள்ள வேண்டும். அல்லது அவனை உறவாடிக் கெடுக்க வேண்டும். புலவர் பெருமானைப்
பார்த்தபோதும் சரி, இமயவல்லியைப் பார்த்தபோதும் சரி அவர்கள் உறவாடிக் கெடுக்கக்கூடிய ஈன குணம் படைத்தவர்களாகத் தெரியவில்லை. தவிர, இருவர் பேச்சிலிருந்தும் அவர்கள்; பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பூர்ண பக்தி
கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் தமிழக நலனை முன்னிட்டு அவனை எதிர்க்கத்தான் துணிந்திருக்கிறார்கள். பாண்டியனை எதிர்ப்பவர்களிடம் இந்த முத்திரை மோதிரம் எப்படி சிக்கியது? நான் மதுரைக்குள்
நுழைந்ததுகூட நெடுஞ்செழியனுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்பும் இவர்கள் மன்னனுக்குத் தெரியாமல் முத்திரை மோதிரத்தை எப்படிக் கைப்பற்றினார்கள்?’ என்று பலவாறாக யோசித்து யோசித்துக் குழம்பி அந்த மோதிரத்தைப்
பல முறை திருப்பித் திருப்பிப் பார்த்தான். பார்க்கப் பார்க்க பாண்டியன் நெடுஞ்செழியன் தமிழகத்தின் மாவீரன்,
தலையாலங்கானத்துச் செருவென்ற பராக்கிரமசாலி, அவன் மோதிரத்தைக் கையில் வைத்திருக்கோமென்ற பேருணர்ச்சி அவன் நரம்புகளை ஊடுருவிச் சென்றது. அச்சத்தால் ஏற்பட்டதல்ல அந்த உணர்ச்சி; பாண்டியனின் வீர
சரித்திரத்தை, தமிழ்நாடு வியந்த அரும் பெரும் செயல்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டியது. அந்தக் கோமேதகம் பேசியது, காட்சிகளையும் தன் மூலம் காட்டியது.
நெடுஞ்செழியனின் வீரச் செயல்களை எண்ணி அந்த மோதிரத்தை ஆர்வத்துடன் தடவிக் கொடுத்தான் இளமாறன் சில விநாடிகள். பிறகு அதை வாளிருக்கும் வலக்கை விரலிலணிந்துகொண்டு அறைக் கதவைச் சாத்திவிட்டு
அங்கிருந்து பஞ்சணையில் படுத்தான். பஞ்சணை மலரணையென மிக மிருதுவாக இருந்தது. அறையிலிருந்த விளக்கின் வேலைப்பாடு கூட பிரமாதமாயிருந்தது. புலவர் பெருமான் மாளிகையின் சுக வசதிகளுள் அரசு வசதிகக்கு
எள்ளத்தனையும் குறைவில்லையென்பதை அறிந்து கொண்ட இளமாறன் கண்களை மூடி உறங்க முயன்றான்.
உறக்கம் அவனுக்கு எப்படி வரும்? கண்ணை மூடியதும் இமயவல்லி அவன் மனக்கண்ணில் தோன்றினாள். மோதிரத்தைக் கொடுத்தாள், மந்தகாசம் செய்தாள். அன்ன நடை நடந்து அழகெலாம் குலுங்கச் சென்றாள். கண்ணைத்
திறந்தாலோ தனியறை. கையில் சுடர்விட்ட மோதிரம், இவற்றின் காட்சி! இவற்றுடன் அறை மூலையில் சதா கிழார் இருந்து கொண்டு அவனை உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு பிரமை! இத்தகைய அல்லல்களுக்கு இடையே பஞ்சணையில்
புரண்ட இளமாறன் திடீர் திடீரென இரு முறை எழுந்து கட்டிலின் முகப்பில் உட்கார்ந்துகொண்டான். பல தடவை ஏதேதோ யோசித்த பிறகு வாளை எடுத்துக் கச்சையில் கட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். அந்த
அறையின் எதிரே நீண்ட சுவர் இருந்ததால் பக்கத்தில் வரிசையாக அறைகள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்ட இளமாறன் தனது அறை வாயிலின் வலது புறத்தில் வாயிலும் தான் ஏறிய மாடிப்படியும் இருப்பதை
கவனித்தான். பிறகு இடதுபுறம் திரும்பி நீளத் தாழ்வாரத்தின் வழியே நடந்து பக்க அறைகளைப் பார்த்துக்கொண்டே சென்றான். பக்கத்து அறைகள் எல்லாம் பூட்டப்பட்டுக் கிடந்தன. அறைகளுக்கெதிரே கோட்டைச் சுவர்போல்
உயரமாயிருந்த சுவரில் அந்த தாழ்வாரத்திற்கு மட்டும் தேவையான ஒளிவீச, ஓர் ஒற்றைப் பந்தம் எரிந்து கொண்டு இருந்தது. அந்தப் பந்தத்தின் பிடியில் தொங்கிக்கொண்டிருந்த வெண்கலப் பானையையும் கரண்டியையும் பார்த்த
இளமாறன் அவ்வப்பொழுது பந்தத்துக்கு எண்ணெய் ஊற்ற பணியாள் யாராவது வருவான் என்பதை ஊகித்துக்கொண்டு மெள்ள அறைகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு நடந்தான். மொத்தம் பத்து அறைகளைத்
தாண்டியதும் திடீரெனப் பெரும் சுவர் ஒன்று குறுக்கிடவே சில விநாடி மலைத்து நின்றான் இளமாறன். தனது அறையைத் தவிர வேறு அறைகள் பூட்டப்பட்டிருப்பதையும், அறைகளின் வரிசைக் கோடியில் குறுக்கே பெரும் சுவர்
அடைத்துக்கொண்டிருந்தபடியால் யாரும் அப்புறம் போக வழியில்லை என்பதையும் அறிந்த இளமாறன், ‘இமயவல்லி எங்கு சென்றாள், எப்படிச் சென்றாள்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு விடை காணாமல் தவித்தான்.
அந்தக் குறுக்குச் சுவரில் மர்மக் கதவு ஏதாவது இருக்குமோ என்றும் சுவரில் சோதித்துப் பார்த்தான். அப்படியும் எதுவும் தெரியாததால் ஆழ்ந்த யோசனையுடன் வலதுபுறம் திரும்பி வாயிற் கதவைத் திறந்து கொண்டு மாளிகைக்கு
வெளியே வந்தான். அப்பொழுது இரண்டாம் ஜாமம் முடிய இருந்ததை வானிலிருந்த நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பால் அறிந்த இளமாறன், மெல்ல அந்த வாயிற் கதவைச் சாத்திக் கொண்டு படிகளில் மெல்ல மெல்லக் கீழே இறங்கித்
தெருவில் நின்றபடி அந்த மாளிகையை ஏறெடுத்து நோக்கினான்.
அப்பொழுதும் அந்த மாளிகை நிசப்தமாயிருந்தது. அளவுக்கதிகமாயிருந்த அந்தத் திட்டி வாயிற் கதவுகள் பெரும் பிசாசுகள் போல் அந்த இருட்டில் நின்றுகொண்டிருந்தன. அந்த மாளிகையின் பெருங்கதவுகளும் முன் போல்
சாத்தப்பட்டிருந்ததையும், தான் நின்றிருந்த எதிர்ப்புறமிருந்த மாளிகைப் பகுதியில் சாளரம் எதுவுமில்லாததால் உள்ளிருந்த விளக்குப் பந்தம், இவற்றின் வெளிச்சம் சிறிது கூட வெளியே தெரியாதிருந்ததையும் கவனித்த இளமாறன்,
எதற்காக இப்படியொரு மாளிகையைக் கட்டியிருக்கிறார்கள்!’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு மதுரை மாநகரின் வீதிகளை கண்டு வருவோமென்று வீதி நெடுக நடக்க முற்பட்டான்.
அந்த வணிகர் வீதியில் புலவர் மாளிகையிலிருந்த முக்கோண முகப்பு ஒன்றைத் தவிர, மற்ற எல்லாப் பகுதிகளிலும் பெரும் அரவம் இருந்தது. வாணிபமும் நடந்து வந்தது. அந்த வீதியில், முக்கால் வீதியில் இப்படியிருந்த அத்தனை
வாணிபமும், அரவமும் புலவர் மாளிகைக்கு வெகு முன்னரே நின்றுவிட்டதையும், அந்த மாளிகையிலிருந்த இடத்துக்கு பல அடி முன்பாகவே மனித நடமாட்டம் இல்லாததையும், வாணிபப் பொருள்களை வாங்கிச் செல்பவர்கூட
வீதியின் குறுக்கு வீதிகளில் திரும்பிப் போய்க்கொண்டிருந்ததையும் கவனித்த இளமாறனுக்குப் புலவர் விடுதியிலிருந்து மக்கள் ஒதுங்கிச் செல்லும் காரணம் அறவே புரியவில்லை. புலவர் மாளிகையை மக்கள் விரும்பி அடைய
வேண்டியது இருக்க, அதைவிட்டு அவர்கள் விலகிச் செல்வது பெரும் ஆச்சரியத்தையே தந்தது அந்த வாலிபனுக்கு. இருப்பினும் மதுரை மாநகரின் அழகு, அவன் சிந்தனையைகூட புலவர் விடுதியிலிருந்து விலக்கித் தன்னிடம் இழுத்துக்
கொண்டது.
ஆதி காலத்திலிருந்து இன்றுவரை இரவும் பகலும் வாணிபமும் மனிதர்கள் நடமாட்டமும் இருப்பதால், இரவிலும் உறங்காத மதுரையெனப் பெயர் படைத்த அந்தக் கயல் கொடி நகரம் இராக் காலத்தில் இளமாறன் கண்களைப் பறித்தது.
அதன் வணிகர் வீதியில் கடைகளில் குவிக்கப்பட்டிருந்த ரத்தினங்களும் பட்டாடைகளும் விளக்கொளியில் பெரிதும் பளபளத்து மதுரையன்னையின் அலங்கார அறையாக அந்த வீதியை அடித்திருந்தது. புஷ்பக் கடைகளில்
காணப்பட்ட பலதரப்பட்ட வண்ண மலர்கள் வைரம் போலும், மாணிக்கம் போலும், மரகதம் போலும் காட்சியளித்ததன்றி, அந்த நவரத்தினங்களுக்கில்லாத வாசனையையும் கிளப்பி அந்தப் பக்கம் வருபவர்களின் நாசியில் புகுந்து
மதிக்கு மயக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
அந்த இரண்டாம் ஜாம முடிவில் களவியற் காதலை ருசிக்க முயன்ற வாலிபர் சிலர் அந்த வண்ண மலர்களைக் கொள்ளையாக வாங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த வீதியையும் அரச வீதிக்குச் சென்று அங்கும் சுற்றியடித்து அந்த வீதியின் பெரு மாளிகைகளில் கண்களை ஓட்டிக் கொண்டே வேறு இரண்டு வீதிகளைத் தாண்டி மதுரையின் மறுபுறம் சென்ற இளமாறன் இதயத்தில் பெருமை
மிகைப்பட்டும் கிடந்தது.
ஒவ்வொரு வீதியும் யாரும் சுதந்தரமாக நடமாடும் படியாகக் கட்டுக் காவல் இல்லாததுபோல் தெரிந்தாலும், உண்மையில் காவல் பலமாயிருந்ததையும், ஆயுதம் தரித்த வீரர் சிலரும், சாதாரண உடையிலிருந்த கண்காணிப்பாளர் பலரும்,
யாரையும் கவனிக்காதது போல் மூலை முடுக்கிலிருந்தாலும் அவர்கள் கண்கள் பல பக்கங்களிலும் பாய்ந்திருந்ததையும் கவனித்துக் கொண்டு வந்த இளமாறன் பாண்டிய மன்னன் தமிழ கத்துக்கே சிறந்த அணிகலன் என்று
தீர்மானித்து, அத்தகைய மன்னன் பிறந்த தமிழ் மண்ணில் தானும் பிறந்தது பற்றிப் பெருமையும் கொண்டான்.
அந்தப் பெருமையுடன் நடந்துகொண்டு இரண்டு தெருக்களைத் தாண்டி மூன்றாம் தெருவொன்றுக்கு வந்ததும் பிரமை பிடித்துச் சில விநாடிகள் நின்றான். அந்த மூன்றாம் தெருவின் மூலை வணிகர் வீதியின் மூலை போலவே
நிசப்தமாயிருந்தது. அங்கும் வீரர் நடமாட்டமில்லை. தெருவின் அந்தப் பகுதி மட்டும் இருட்டடித்துக் கிடந்தது.
இத்தகைய இடம் மகர மாளிகை பக்கமாகத்தான் இருக்கும் என்று நினைத்த இளமாறன், அந்தத் தெரு மூலையும் அதே மாதிரி இருப்பதைக் கண்டு மேற்கொண்டு நடந்து அந்த முலைக்கு வந்தான். அங்கும் நிசப்தமான பெரு மாளிகை
இருந்தது. அங்கும் ஒரு திட்டி வாசல் இருந்தது.
ஆனால், அந்த மாளிகைச் சிகரத்தில் மச்சம் மட்டும் இல்லை. மகர மாளிகையைப் போலவேயிருந்த அந்த மாளிகைத் திட்டி வாசலையும் தட்டிப் பார்க்கத் தீர்மானித்த இளமாறன். அந்த இடத்தை நோக்கிக் காலடி நடந்து அங்கிருந்த
படிகளில் ஏறப்போனான்.
அதே சமயம் அந்த மூலையில் எங்கிருந்தோ வந்த இரு முக்காடிட்ட உருவங்கள் திரும்பின. அவற்றில் திடகாத்திரமாயிருந்த பெரிய உருவம், “நில் அப்படியே?” என்று இளமாறனை அதட்டி நிறுத்தியது.
அந்த அதட்டலைக் கேட்டதும் பரம நிதானமாக திரும்பிய இளமாறன் அந்த இரு உருவங்களின் மேலும் இரண்டு விநாடி தன் கூரிய விழிகளை நாட்டினான். பிறகு ஏறின படிகளிலிருந்து மீண்டும் இறங்கி அந்த இரு உருவங்களை நோக்கி
நடக்கவும் முற்பட்டான். அப்படி நடந்து அருகே வரமுயன்ற அவனை எட்டவே நிற்க வைக்க முயன்ற அந்த ராட்சத உருவம், “இன்னும் ஓர் அடிகூட எடுத்து வைக்காதே! நில் அப்படியே” என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்குக்
கீழ்ப்படியாமல் மேலும் மேலும் நடக்க இளமாறன் முயலவே, அந்தப் பெரிய உருவம் தன் இடையிலிருந்த வாளை உருவி அவனை எட்டத் தேக்கி நிறுத்த முற்பட்டது. அது வாளை உருவி தீட்டியதற்கும் ‘ஹா’ என்ற வியப்புக் கூச்சலுக்கும்
இடைக்காலம் ஏதுமே இல்லை, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வெளிவந்த இளமாறன் வாள் ஏதோ மந்திரத்தால் சுழல்வதுபோல் அந்தப் பெரிய உருவத்தின் வாளைச் சரேலென்று தாக்கி விடவே அந்த வாள் விர் என்று பறந்து வெகு
தூரத்தில் போய் பெரும் சத்தத்துடன் விழுந்தது. இத்தகைய வாள் வித்தையை அந்தப் பெரிய உருவம் ஆயுளில் பார்த்திருக்கவில்லை என்பது அதன் முகக் குறியிலிருந்து மட்டுமல்ல; அந்த ‘ஹா’வில் கலந்து வந்த ஒலியிலும் புலனாகியது.
அத்துடன் இளமாறன் வாளை உறையில் போட்டுக் கொண்டு மீண்டும் படிகளில் ஏறத் திரும்பினான். ஆனால் இந்தச் சண்டையில் கலவாது சற்று எட்டவே நின்றிருத்த முக்காடிட்ட சிறு உருவம், “அந்த வித்தையைச் சற்று நானும்
அனுபவிக்கலாமா வீரரே?” என்று அன்பு ததும்பும் குரலில் வினவவே படிப்புறத்தை விட்டுத் திரும்பிய இளமாறன். “நான் இங்கு போராட வரவில்லை” என்றான்.
“பாதகமில்லை; எனக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுங்களேன்” என்று கூறிக்கொண்டே தனது இடையிலிருந்து நீண்ட. மெல்லிய வாளொன்றை உருவியது அந்தச் சிறிய உருவம். முக்காடிட்ட அந்தச் சிறு உருவத்தின் பேச்சிலும்
தோரணையிலுமிருந்த ஒலியைக் கேட்டதும் சற்றே பிரமித்த இளமாறன். அந்த முக்காட்டுக்குள்ளிருந்த முகத்தை உற்றுப்பார்க்க முயன்றான், தூர இருந்த தெரு விளக்கின் ஒளி மங்கலாயிருந்தபடியால் அந்த முகம் விளக்கமாகத்
தெரியவில்லை இளமாறனுக்கு. நீட்டிய வாள் மட்டும் கண்களுக்கெதிரே நன்றாகப் பளபளத்தது. அந்த வாளைப் பிடித்த கையின் உறுதியைக் கவனித்த இளமாறன், முக்காட்டுக்குள் மறைந்து இருந்த உருவம் சிறியதானா லும் வாள்
பயிற்சியில் அது இளைத்ததல்ல என்பதைப் புரிந்து கொண்டதால், “வாள் பயிற்சியளிக்கவும் நான் இங்கு வரவில்லை” என்றான்.
“அப்படியானால் நான் உங்களுக்குப் பயிற்சியளிக்கிறேன், சிறிது வாளை உருவுங்கள்” என்று கூறிய அந்தச் சிறு உருவத்தின் பதிலில் ஏளனமிருந்தது.
அந்த ஏளனத்தைக் கவனித்ததும் இளமாறன் சித்தத்தில் சினம் ஏறியது. அவன் வாள் வெகு துரிதமாக வெளிப்போந்து எதிரியின் வாளை முன்னைவிடப் பலமாகத் தாக்கியது. ஆனால் எதிரியின் வாள் கையை விட்டுச் சிறிதும்
அகலவுமில்லை, பறந்தோடவுமில்லை. ஒரு குழந்தையின் விளையாட்டு வாளைத் தடுப்பது போல் இளமாறன் வாளை மிக அலட்சியமாகத் தடுத்து. நின்றது அந்த மெல்லிய வாள்.

Previous articleMoongil Kottai Ch5 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here