Home Historical Novel Moongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

52
0
Moongil Kottai Ch7 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 தாமதிக்க நேரமில்லை

Moongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

முக்காடிட்ட சிறு உருவத்தின் கையிலிருந்து நீண்ட அந்த மெல்லிய வாள் தன் பலமான வாளை மிக அலட்சியத்துடன் தடுத்துத் தேக்கி விட்டதையும், தனக்கு வாள் பயிற்சி அளித்த குருநாதர் அந்த வீச்சை தந்திர வீச்சு என்றும் அந்த
வீச்சுக்கு முன்னால் எந்த வாளும் நிற்க முடியாது என்றும் சொல்லி இருந்தாரோ அந்த மர்ம வீச்சு, எதிரே வாளேந்தி நின்ற அந்தச் சிறு உருவத்தினிடம் லவலேசமும் பலிக்கவில்லையென்பதையும் உணர்ந்த இளமாறன் பெரும்
பிரமிப்புக்கும் ஓரளவு எச்சரிக்கைக்கும் உள்ளானான். ஆகவே, எதிரியின் மெல்லிய வாளிலிருந்து தன் வாளைப் பின்னுக்கு இழுத்து மறுபடியும் தாக்கத் தீர்மானித்துச் சரேலென வாள் பிடித்த கையை பின்னால் இழுத்தான். ஆனால்,
அந்தச் சிறு உருவத்தின் வாளில் ஏதோ மந்திரமிருக்க வேண்டும். அது பாம்பு போல் வளைந்து சுழன்று இளமாறன் வாளைக் கௌவிக் கொண்டுவிட்டதால் வாளைப் பின்னுக்கிழுப்பதும் கஷ்டமாகிவிட்டது, சேர நாட்டின் அந்த வாலிப
வீரனுக்கு. இப்படித் தன் வாளைச் சிறைப்படுத்திக் கொண்டதால் சிறு உருவத்திடம் பெரும் சீற்றம் கொண்ட இளமாறன் தன் முழுப் பலத்தையும் உபயோகித்துத் தன் வாளைச் சுழற்றிப் பின்னுக்கு இழுத்து அதை விடுதலை செய்து
கொண்டான். அப்படி விடுதலை செய்து கொள்வதிலிருந்த சிரமத்தையும். அப்படி வாள் விடுதலை அடைந்த சமயத்தில் எதிரியின் வாள் கிர்ரென்ற ஒலியுடன் தன் வாளைப் பலமாக ராவியதையும் கண்ட இளமாறன் எதிரியின் கை
பார்வைக்கு மெல்லியதே தவிர மிகவும் திடமானது என்பதையும் புரிந்துகொண்டு அடுத்த தாக்குதலை மிகுந்த எச்சரிக்கையுடன் துவங்கினான்.
பின்னுக்கு வாங்கிய வாளை அவன் மீண்டும் மேலோங்கி கீழிறக்கித் தாக்காமல் அதை நீட்டிப் பிடித்த வண்ணம் பக்கவாட்டில் அப்படியும் இப்படியும் மாறிப் பாய்ச்சி எதிரியின் விலாப்பக்கங்களை அணுக முயன்றான். ஆனால் இந்தச்
சிறு உருவத்தின் பொல்லாதவாள் மின்னல் போல பல முனைகளிலும் சுழன்று இளமாறன் வாளை ஒவ்வோர் இடத்திலும் தடுத்து நின்றது. அதுமட்டுமல்ல, குறிகளை அவ்வப் பொழுது மாற்ற இளமாறன் அங்கும் இங்கும் நகர்ந்து
போரிட்டானே தவிர, அந்தச் சிறு உருவம் மட்டும் நின்ற இடத்திலிருந்து சிறிதும் அசையாமல் வாளை மட்டும் பலபடி வளைத்து வளைத்து சிலம்ப வித்தைக்காரன் போல் சுழற்றிக் கொண்டிருந்தது. அப்படிச் சுழற்றிய சமயங்களில் அது
எவ்விதப் பிரயாசையையோ ஆயாசத்தையோ காட்டாததைக் கண்ட இளமாறன் இதயத்தில் சினம் மேலும் மேலும் பொங்கி எழுந்ததால் அவன் திடீரெனப் போர் முறையை மாற்றிக் கொண்டான். வாளின் வேகத்தைத் திடீரென குறைத்துத்
தற்காப்புக்காக மட்டும் போரிட முற்பட்டான்.
வாளுடன் வாள் விடாமல் உராய்ந்து போர் ஒலிகளை அந்த இருட்டடித்த தெரு மூலையில் கிளப்பிக்கொண்டிருந்த அந்தச் சண்டை சில விநாடி தொடர்ந்தது. இளமாறன் ஓரளவு எச்சரிக்கை அடைந்து விட்டதையும் தற்காப்புப்
போரில் இறங்கி விட்டதையும் உணர்ந்த அந்தச் சிறு உருவமும் தன் போர் முறையை மாற்றி வாள் சுழற்சியில் சிறிது வேகத்தைக் காட்டத் துவங்கியது. இதை அறிந்த இளமாறன் உள்ளத்தில் மெல்ல மெல்ல மகிழ்ச்சி உதய மாயிற்று. எதிரியின்
வாள் வேகம் உள்ளத்தின் வேகத்தையும் அவசரத்தையும் குறிக்கிறதென்பதை உணர்ந்து கொண்ட இளமாறன் உள்ளூரப் பெரும் பூரிப்படைந்து மிகுந்த நிதானமாகவும் பதற்றம் இல்லாமலும் போரிட்டுக் கொண்டே வந்தான். எதிரியின்
வேகம் சிறிது கால அளவை மீறியதும் திடீரென வேகத்துடன் தன் வாளை உயரத் தூக்கிக் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மூன்று பலமான அடிகளை எதிரி வாளுக்குக் கொடுத்தான்.
அந்த மூன்று அடிகளை பெற்ற எதிரி சினத்துக்குப் பதில் சந்தோஷமே அடைந்தான். அந்த அடிகளைத் தடுக்க அவன் இரண்டு மூன்று முறை அப்படியும் இப்படியும் மாறி மாறிக் குதிக்க நேரிட்டபோதெல்லாம் நல்லது நல்லது என்று
இளமாறன் போர் முறையை சிலாகித்துக் கொண்டே குதித்தான். நின்ற நிலையிலிருந்து அசையாமல் இடித்த புளிபோல் நின்று போராடிய அந்தச் சிறு உருவம் அப்படியும் இப்படியும் குதித்துப் போராட முற்பட்டதும் இளமாறனும்
முன்னேறி வேகமாகத் தாக்கத் தொடங்கினான். அந்தச் சந்தர்ப்பத்திலும் எதிரி சக்கர வட்டமாகச் சுழற்றிய வாள் இட்ட பாதுகாப்பு கோட்டைக்குள், இளமாறன் வாள் உட்புக முடியவே இல்லை. மூன்று முறை புக வாய்ப்பு இருந்தது. அந்த
மூன்று முறையும் இளமாறன் வாள் புகுந்துதான் இருக்க வேண்டும். அதையும் புகாமல் தடுத்துவிட்டானே எதிரி! எப்படித் தடுத்தான்? வாளில் ஏதாவது மந்திரம் வைத்திருந்தானா?
இத்தகைய கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே போராடிய இளமாறன் மெல்ல மெல்ல எதிரியை எதிர்ப்புறமாக விரட்டிக் கொண்டு சென்றான். எதிரியும் இளமாறனுக்கு இடம் கொடுத்துக் கொண்டே சென்றான்.
எதிரியின் கை சளைத்துவிட்ட தற்கான அறிகுறி இவன் வாளின் தாக்குதலில் கிடைத்த அடிகளின் பலவீனத்திலிருந்து நன்றாகப் புலனாகியது. இன்னும் சில விநாடிகளில் அந்த வாளைத் தட்டி விடலாமெனத் தீர்மானித்தான் இளமாறன்.
ஆனால், அவன் நினைத்தது வேறு, நடந்தது வேறு. சளைத்த எதிரியின் கை திடீரென மின்னல் போல் எழுந்தது. அடுத்த விநாடி இளமாறன் வாள் அவன் கையில் இருந்து விடுபட்டு இரண்டடி தள்ளி தெருப் புழுதியில் விழுந்தது.
இளமாறன் நிலை குலைந்து பிரமை பிடித்து நின்றான். அதுவரை கையில் இருந்து விலகாத அவன் வாள் கையிலிருந்து விலகி விழுந்ததால் திகைத்தான். அந்தத் திகைப்பினாலும் அடைந்த அவமானத்தினாலும் மனம் குமுற, சொல்
தடுமாற சொன்னான், “முடித்து விடுங்கள் காரியத்தை” என்று.
அந்தச் சிறு உருவம் பதிலுக்கு மிகுந்த மரியாதையுடன் தூரத்திலிருந்த இளமாறன் வாளிடம் சென்று அதை எடுத்து வந்தது, “உங்கள் வாள், வீரரே!” என்று நீட்டவும் செய்தது.
வாளை இளமாறன் கையில் வாங்கவில்லை. “அது இனித் தேவையில்லை எனக்கு” என்றான்.
“வேறெது தேவை”- அன்புடன் வினவியது அச்சிறு உருவம்.
“மரணம்!”
“வீரர்களுக்கு அது என்றுமிருக்கிறது!”
“இன்றே எனக்குத் தேவை.”
இளமாறனின் இந்தச் சொற்களைக் கேட்ட அந்தச் சிறு உருவம் பலவந்தமாக அவன் வாளை அவன் கையில் திணித்தது. பிறகு ஆதரவாக அவன் தோளையும் அணைத்துக் கொண்டது. அத்துடன், “உள்ளே வாருங்கள் வீரரே” என்று மிக
மரியாதையுடன் அவனை அழைத்துக் கொண்டு எதிரே இருந்த திட்டி வாசலை நோக்கி நடந்தது. இளமாறன் கனவில் நடப்பவன் போல் அந்தச் சிறு உருவத்தின் பக்கத்தில் நடந்து சென்றான். திட்டி வாசலை நெருங்கிய சிறு உருவம் இரு
முறை மெல்லக் கதவைத் தட்ட அங்கும் ஒரு பணிப்பெண் வந்து கதவைத் திறந்தாள். அந்த வாயிலுக்குள் சிறு உருவத்தைத் தொடர்ந்து சென்ற இளமாறன் பிரமை பிடித்து நின்றான். உள்ளே அந்த இடமும் நூற்றுக்கு நூறு புலவர்
மாளிகை போலவே இருந்தது. எதிரே மாடிப்படி ஓடியது மேலே தெரிந்தது. அதேவிதமான தாழ்வாரம் மூன்று அறைகளும் அங்கு வரிசையாய்த் தெரிந்தன! கண்ணுக்குப் பட்டது அத்தனையே என்றாலும் மாடிப்படிக்குப் பின்னால்
வரிசையாக அறைகள் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டான் இளமாறன். முன்னரே தெருவின் இருட்டடித்த மூலையையும் திட்டி வாசலையும் கண்டு பிரமித்த இளமாறன், உட்புறமும் அந்த இடம் மகர மாளிகை போலிருப்பதைக்
கண்டு எதற்காக நகரத்தின் இரு புறங்களிலும் ஒரே மாதிரியான இரு மாளிகைகளைக் கட்டியிருக்கிறார்கள் என்பதை அறியாமல் தவித்தான்.
அத்தகைய தவிப்புடனும் பிரமிப்புடனும் பின் தொடர்ந்த இளமாறனை மாடித் தாழ்வாரத்தின் கடைசி அறைக்கு அழைத்துச் சென்ற அந்தச் சிறு உருவம் உள்ளே சென்றதும் அங்கிருந்த விளக்கொன்றைத் தூண்டிவிட்டுத் தன்
முக்காட்டையும் எடுத்து இளமாறனை நோக்கிப் புன்முறுவலும் செய்தது.
முக்காட்டைத் திறந்ததும் முழுவதும் தெரிந்த அந்த முகமும் அந்த மோகனப் புன்முறுவலும் இளமாறன் பிரமிப்பை உச்சநிலைக்குக் கொண்டு போகவே செய்தன.
அவ்வளவு அழகும் கம்பீரமும் கலந்த முகம் ஒன்று இருக்க முடியுமென்று சொப்பனத்திலும் நினைத்திராத இளமாறன் அந்த முகத்தை, நீண்ட நேரம் கவனித்தான்.
முகம் விசாலமாகச் செக்கச் செவேலென்று இருந்தது. அந்த முகத்தை, தலையிலிருந்து இறங்கி வெட்டப்பட்டிருந்த சுருட்டை மயிர்கள் சூழ்ந்து நின்றன. பெண்களின் அதரத்தைப் போல் மிகச் சிவந்திருந்த அதரங்களிலிருந்த புன்னகை
யாரையும் வசீகரிக்கும் தன்மையைப் பெற்றிருந்தது. மேலுதட்டில் லேசாக முளைத்திருந்த அரும்பு மீசை அந்தச் சிறு உருவத்தின் வயது இருபதுக்கு மேலிருக்க முடியாது என்பதை அறிவுறுத்தியது. அந்த முகத்தின் புருவங்கள்
சரேலென்று வளைந்து கிடந்தன. கீழிருந்த கருமைக் கண்கள் மட்டுமே அவன் ஆண்மையையும் திடசித்தத்தையும் வலியுறுத்தின. அந்தக் கண்களிலிருந்த கூர்மையும் பளபளப்பும் அதிகார வேகமும் அவன் யாருக்கும் பணியக்கூடிய
பேர்வழியல்லன் என்பதை அறிவுறுத்தின. அந்த கண்களைப் பார்த்த இளமாறன் அதிலேயே வசப்பட்டிருந்தானாகையால் தனக்குப் பின்னால் அந்தப் பெரிய உருவமும் உள்ளுக்குள் நுழைந்துவிட்டதையும், அது அறைக் கதவைச் சாத்திக்
காவலாகக் கையில் வாளை உருவிப் பிடித்து நின்றதையுங்கூடக் கவனிக்கவில்லை. ஆள் வரும் ஒலியைக்கூட காதில் வாங்கும் நிலையிலில்லை இளமாறன் அந்தச் சமயத்தில். அத்தகைய அவன் பிரமிப்பை அந்தச் சிறு உருவமே அறுத்தது.
அறை விளக்கைத் தூண்டிவிட்டதும் அங்கிருந்த மஞ்சத்திலமர்ந்து கொண்டு அச்சிறு உருவம் “வீரரே” என்று சற்று எட்ட இருந்த ஓர் ஆசனத்தையும் காட்டியது.
கனவில் நடப்பவன் போல் நடந்த இளமாறன் ஆசனத்தில் அமர்ந்தான், “நீங்கள் யாரென்பதை நான் அறியலாமா?” என்று வினவியது அந்தச் சிறு உருவம்.
தலையிலிருந்த முக்காட்டை எடுத்துவிட்டதால் மிக அழகுடன் விளங்கிய அந்த வாலிபனைப் பார்த்த இளமாறன், “என் பெயர் இளமாறன்” என்று உண்மையே சொன்னான். “இளமாறன், இளமாறன்” என்று அந்த வாலிபனின் அழகிய
இதழ்கள் அந்தப் பெயரை இருமுறை உச்சரித்தன. “நல்ல பெயர். பெயரின் இளமை முகத்திலும் தெரிகிறது” என்றான் அந்த வாலிபன், அந்த உச்சரிப்பைத் தொடர்ந்து.
“தங்கள் முகத்தைவிட இளமை முகமல்ல என்னுடையது” என்றான் இளமாறன் பதிலுக்கு.
“உண்மைதான் வீரரே! உமது முகத்தின் இளமைக்கும் கையின் உறுதிக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது. பல போர்களைக் கண்ட பெருவீரர்களின் கையுறுதி உமது கைகளில் இருக்கிறது” என்றான் அந்த வாலிபன்.
அந்த வாலிபனை இளமாறன் ஏறெடுத்து நோக்கினான். அந்த வாலிபன் வதனத்தில் ஏளனக் குறி ஏதுமில்லை. அவன் பாராட்டுதல் உண்மையானது என்பதை முகம் சந்தேகமறக் காட்டியது. அதனால் சற்று வருத்தம் தோய்ந்த குரலில்
கூறினான் இளமாறன்: “தங்கள் பாராட்டு பெருந்தன்மையைக் குறிக்கிறது” என்று.
“உண்மையைச் சொல்வதில் பெருந்தன்மை எங்கிருந்து வருகிறது?” என்று வினவினான் அந்த வாலிபன்.
“உறுதியுள்ள கையிலிருந்த வாள் பறக்குமா?” என்று வினவினான் இளமாறன்.
இதைக் கேட்ட அந்த வாலிபன் சில விநாடி இளமாறனை உற்று நோக்கினான். பிறகு சொன்னான்: “வீரரே! இப்போது நான் கூறுவது தற்பெருமையல்ல. என்னிடம் இத்தனை நேரம் எதிரில் நின்று போராடிய வர்கள் கிடையாது. எதிரியின்
வாளைத் தட்டிவிட என் வாள் இத்தனை நேரம் முயன்றதும் கிடையாது, ஆனால் உமது வாளைத் தட்டுவதற்குள் என் பிராணனே போய் விட்டது. தட்டியபோது உமது வாள் இரண்டடிக்கு அப்புறமே விழுந்தது. உமது கையின் உறுதி
இணையற்றது” என்று.
இளமாறன் பதிலேதும் சொல்லவில்லை சில விநாடிகளுக்கு. பிறகு சொன்ன போது குரலில் பிரமையிருந்தது. “என் கையின் உறுதியை நீங்கள் பாராட்டி னால் தந்திரமாக என் வாளடிகளை லட்சியம் செய்யாத உங்கள் கை உறுதியைப்
பற்றி என்ன சொல்லட்டும்” என்றான் இளமாறன்.
அத்துடன் எதிரி வாளின் பேச்சை மாற்றிவிட்டு, “அதிருக்கட்டும் வாலிபரே! உங்கள் சொந்த ஊர் எது?” என்று வினவினான்.
“கரூர்!” என்று பதிலளித்தான் இளமாறன்.
“வஞ்சிமா நகரா?”
“ஆம்.”
“சேர நாட்டவரா?”
“ஆம்.”
“மதுரைக்கு ஏன் வந்தீர்?”
அதுவரை உண்மையைச் சொல்லி வந்த இளமாறன் திடீரென உண்மையை மறைத்தான். “மதுரையின் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டேன். பார்த்துப் போக வந்தேன்” என்று கூறினான்.
அதைச் சிறிதும் நம்பாத எதிரி வாலிபன், “அப்படியா! மகிழ்ச்சி. மதுரை அனைவரும் பார்க்க வேண்டிய நகரம். இப்பொழுது எங்கு தங்கியிருக்கிறீர்கள்?” என்று வினவினான்.
இம்முறை உண்மையைச் சொன்னான் இளமாறன். “புலவர் மாளிகையில்” என்ற சொற்கள் தடங்கலின்றி வெளிவந்தன.
அந்தப் பதிலைக் கேட்டதும் எதிரி வாலிபன் முகத்தில் சந்தேகச் சாயை படர்ந்ததைக் கண்ட இளமாறன் இமயவல்லியின் சொற்களை நினைவுபடுத்திக் கொண்டான். ‘புலவர் மாளிகையென்று சொல்லுங்கள். அப்படியும் மறுத்தால்
மோதிரத்தைக் காட்டுங்கள்’ என்று இமயவல்லி கூறியதை எண்ணி, ‘சந்தேகமிருந்தால் இதைப் பாருங்கள்’ என்று கையிலிருந்த முத்திரை மோதிரத்தைக் கழற்றிக் காட்டினான் இளமாறன்.
அதைக் கண்டதும் மஞ்சத்திலிருந்து வெகு வேகமாக எழுந்து நடந்து இளமாறனை அணுகிய அந்த வாலிபன் அந்த மோதிரத்தைக் கையில் வாங்கி ஒரு விநாடி பார்த்தான். அப்படிப் பார்த்த சமயத்தில் உள்ளூர உணர்ச்சிகள் ஏதாவது.
ஓடியிருந்தால், அதை அவன் முகம் காட்டவில்லை. மோதிரத்தை மீண்டும் இளமாறனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வாயிற்படியை அடைத்து நின்ற தன் சகாவை சமிக்ஞை செய்து அருகில் வரும்படி அழைத்தான். அந்த வாலிபன்,
அருகில் வந்த ராட்சத உருவத்தை நோக்கி, “சேர நாட்டு வீரர் மதுரைக்குப் புதிது. புலவர் மாளிகையருகில் விட்டு வா,” என்று கட்டளையிட்டான்.
அந்தக் கட்டளையைக் கேட்டதும் அந்த பெரிய உருவம் மீண்டும் முக்காட்டை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டதன்றி, “வாருங்கள் வீரரே” என்று பணிவுடன் அழைக்கவும் செய்தது. அந்த அழைப்பின் விளைவாகப் புறப்பட
எழுந்த இளமாறனை எதிரி வாலிபன் ஆர்வத்துடன் முதுகில் தட்டிக் கொடுத்து, “வீரரே! மதுரையில் உமக்கு எந்த உதவி தேவையானாலும் நீர் என்னிடம் வரலாம். நான் எப்பொழுதும் நள்ளிரவில் இங்கு இருப்பேன்” என்றும் கூறினான்.
இளமாறன் பதிலேதும் சொல்லாமல் தலை வணங்கிச் சென்றான். அவனைத் தொடர்ந்து பெரிய உருவம் புலவர் மாளிகை வரையில் அவனைக் கொண்டு வந்து விட்டு வாயிலிலேயே அவனைப் பிரிந்து சென்றது.
தீர்க்காலோசனையுடன் மகர மாளிகையின் திட்டி வாசலைப் பழையபடி தட்டி உள்ளே நுழைந்த இளமாறன் இரவு இரண்டு ஜாமங்கள் பறந்துவிட்ட அந்தச் சமயத்திலும் இமயவல்லியே கதவைத் திறந்தது கண்டு வியந்து, “நீங்கள்
இன்னும் உறங்கவில்லையா?” என்று வினவினான்.
“இல்லை” என்றாள் இமயவல்லி.
“ஏன்?” மீண்டும் வியப்புடன் எழுந்தது இளமாறன் கேள்வி.
“உங்களுக்குக் கதவைத் திறக்கும் பொறுப்பு என்னுடையது” என்றாள் அவள். அத்துடன், “தங்களுக்காகப் புலவர் காத்திருக்கிறார்” என்றும் கூறினாள்.
அந்த இருவரும் தனக்காக விழித்திருக்கும் காரணத்தை அறியாத இளமாறன் படிகளில் ஏறி இமயவல்லி பின் தொடரப் புலவர் அறைக்குள் நுழைந்தான். புலவர் அவனை அன்புடன் வரவேற்று, “மதுரையைப் பார்த்தாயா இளமாறா?”
என்றும் வினவினார்.
“பார்த்தேன். மதுரையை மட்டுமல்ல; அதன் இணையற்ற வீரத்தையும் பார்த்தேன்!” என்றான் இளமாறன்.
புலவர் முகத்தில் கவலை பாய்ந்தது. “என்ன சொல்கிறாய் இளமாறா?” என்று கவலை குரலில் பாய்ந்தோடக் கேட்டார்.
இளமாறன் நடந்ததை ஒளிவு மறைவுவில்லாமல் கூறினான். அவன் கூறக் கூறப் புலவரின் முகம் கவலையில் ஆழ்ந்தது. அவன் முடித்ததும், கெட்டது குடி” என்று இரைந்தே கூறினார் புலவர். காரணம் தெரியாத இளமாறன்
இமயவல்லியை நோக்கினான். அவள் விழிகளில் விவரிக்க இயலாத திகில் படர்ந்து நின்றது. “இனி தாமதிக்க நேரமில்லை” என்ற சொற்களும் திகிலுடன் உதிர்ந்தன அவள் கொவ்வை இதழ்களிலிருந்து.

Previous articleMoongil Kottai Ch6 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here