Home Historical Novel Moongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

51
0
Moongil Kottai Ch8 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 துணை இவள்

Moongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

அந்த இரவில் மதுரையம்பதியில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விவரித்ததும் குறுங்கோழியூர்க்கிழார் ‘கெட்டது குடி’ என்று அலுத்துக் கொண்டதையும் இமயவல்லியும் முகத்தில் திகில் படர, “இனி தாமதிக்க நேரமில்லை’ என்று
முணுமுணுத்ததையும் கண்ட இளமாறன், அப்படி என்ன நடக்கக்கூடாத காரியம் நடந்து விட்டது என்பதை எண்ணிப் பார்த்து ஏதும் புரியாமல் கலங்கினான். ‘மதுரையின் தெருக்களைப் பார்க்கச் சென்றேன், வீரனொருவன் சண்டைக்கு
இழுத்தான், சண்டையிட்டேன். திரும்பினேன். இதிலென்ன தவறு இருக்க முடியும்?’ என்று தன்னைத் தானே ஒரு விநாடி கேட்டுக் கொண்டான். ஒரு வேளை மோதிரத்தை அந்த வீரனிடம் காட்டியதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்குமோ
என்பதையும் நினைத்துப் பார்த்து, ‘இருக்க முடியாதே, இமயவல்லிதானே அவசியமானால் மோதிரத்தைக் காட்டும்படி கூறினாள்’ என்றும் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான்.
ஆனால் அவனுக்கெதிரே இருந்த இருவர் மட்டும் சமாதானப்பட்டதாகத் தெரியவில்லை. அன்றைய இரவின் ஆரம்பம்வரை மிகுந்த நிதானத்தைக் காட்டி வந்த புலவர் பெருமான் முகத்தில் கவலை பெரிதாக விரிந்து கிடந்தது.
இமயவல்லியின் அழகிய முகமோ பயத்தால் பெரும் பொலிவு பெற்றிருந்தது. இந்த இக்கட்டான சமயத்திலும் பெண்களுக்கு, தைரியத்தைவிட பயம் எத்தனை அழகைக் கொடுக்கிறது என்பதை எண்ணி வியந்தான் இளமாறன்.
ஆனால் இமயவல்லியின் அழகிலோ முகபாவத்திலோ தினையளவும் மனதை ஒட்டாத புலவர் மட்டும், “உன்னை யார் இந்த மாளிகையைவிட்டு, வெளியே போகச் சொன்னது?” என்று எரிந்து விழுந்தார் இளமாறன் மீது.
இதைக் கேட்ட இளமாறன் மேலும் வியப்பே எய்தி, இமயவல்லியைக் கேட்டுக் கொண்டுதான் போனேன்” என்று பதில் கூறினான். புலவர் மனம் மட்டும் தெளிவாயிருந்திருந்தால் இமயவல்லியை இளமாறன் பெயர் சொல்லி அழைத்ததைக்
கவனித்திருப்பார். தவிர அந்தப் பெயரைச் சொன்னபோது குரலில் இருந்த கனிவையும் கவனித்திருப்பார். ஆனால், புலவர் மனம் அந்தச் சமயத்தில் இருந்த நிலையில் அவர் எதையுமே கவனிக்காமல் இரவில் இளமாறனின் மதுரை
நடமாட்டத்தை மட்டுமே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தாராகையால், “இமயவல்லி! இது உண்மையா? இந்த வாலிபனுக்கு வெளியே செல்ல நீ அனுமதி கொடுத்தாயா?” என்று வினவினார்.
இமயவல்லி பதில் சொல்லத் தன் அழகிய அதரங்களை மெள்ளத் திறக்கும் முன்பாக இளமாறனே பதில் கூறினான்: “இல்லாவிட்டால் இந்தப் பாண்டிய முத்திரை மோதிரம் ஏது எனக்கு?” என்று.
பதிலுக்குப் புலவர் அர்த்தம் புரியாதபடி ஏதோ ஒரு விதமாகத் தலையை அசைத்தார். பிறகு வருத்தந் தோய்ந்த குரலில் கூறினார், “இன்னும் இரண்டு நாள் அவகாசமிருந்தால் நன்றாகயிருந்திருக்கும். ஆனால் அதற்குள்
கெடுத்துவிட்டாயே இமயவல்லி” என்று.
இமயவல்லி குற்றவாளி நீதிபதியை நோக்குவது போல் புலவரை ஏறெடுத்து நோக்கினாள். “நானென்ன செய்யட்டும் தந்தையே? சேர நாட்டு வீரர், தாம் இங்கு சிறைப்பட்டிருப்பதுபோல் பேசினார். சிறைப்படவில்லை சுதந்தரத்துடன்
தானிருக்கிறார் என்று வலியுறுத்தினேன். வெளியில் போக வேண்டுமென்று பிடிவாதம் செய்தார்…” என்று வாசகத்தைப் பாதியிலேயே விட்டு மீதியைப் புலவரையே ஊகிக்கச் செய்தாள்.
புலவர் ஊகிக்க மறுத்து, “எதற்காக?” என்றொரு கேள்வியையும் கேட்டு வைத்தார்.
“பாதுகாப்புக்கு இருக்கட்டும் என்று மோதிரத்தைக் கொடுத்து வைத்தேன்” என்றாள் இமயவல்லி.
“மோதிரத்தை பார்க்கக்கூடாதவர் பார்த்து விட்டால் விளைவு என்னவென்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று சீறினார் புலவர்.
“தெரியும்” என்றாள் இமயவல்லி அடக்கத்துடன்.
“தெரிந்துமா மோதிரத்தைக் கொடுத்தாய்?”
“ஆனால்…”
“சொல்.”
“இது அவரிடம் போகுமென்று எனக்கெப்படித் தெரியும்?”
“எச்சரிக்கையுடனிருக்க வேண்டியது உனது கடமையல்லவா?”
“ஆம்.”
“கடமையைத் தவறவிட்டாயே பெண்ணே? என் ஏற்பாடுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை” என்று ஏக்கத்துடன் கூறினார் புலவர். அந்த ஏக்கத்திற்கறிகுறியாகப் பெருமூச்சும் விட்டார்.
அதுவரை அவ்விருவர் சம்பாஷணையையும் கேட்டுக்கொண்டிருந்த இளமாறன், புலவர் ஏக்கப் பெருமூச்சு விட்டதும் சற்று கோபத்தின் வசப்பட்டு, “புலவர் பெருமான் ஏக்கப்படுவதற்கு என்ன நேர்ந்து விட்டது இப்பொழுது?”
என்று சீற்றத்துடன் கேட்டான்.
புலவரின் விழிகள் முன்னைவிட அதிகமாகப் பளிச்சிட்டன. இன்னும் என்ன நேரிட வேண்டும்” என்று வினவினார் அவரும் கோபத்துடன்.
“வீரர்கள் புது நாடுகளில் நுழையும்போது இம் மாதிரி சில்லறைச் சண்டைகள் விளைவது சகஜம் தானே?” என்று வினவினான் இளமாறன்.
“இது சில்லறை சண்டையா?” கிழாரின் கேள்வியில் வியப்பு இருந்தது.
“வேறென்ன? தானும் ஒரு வாலிபனும் போரிட்டோம். என் கைவாள் அதில் பறந்தது. நீ யார் என்று கேட்டான். பெயர் சொன்னேன், ஊர் சொன்னேன், மதுரையைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன்…”
“புலவர் மாளிகையைச் சொன்னாய். முத்திரை மோதிரத்தைக் காட்டினாய்…”
“ஆம் காட்டினேன். அவன் ஒரு விநாடிதான் மோதிரத்தைப் பார்த்தான். பிறகு வழிகாட்ட எனக்குத் துணையும் அனுப்பினான்…”
இதைக் கேட்ட குறுங்கோழியூர்க்கிழார் திடீரென பைத்தியம்போல் பேய்ச் சிரிப்புச் சிரித்தார். பிறகு இளமாறனை மரியாதையின்றியும் பேசத் தொடங்கி, “அட முட்டாள்! உனக்கு இன்னும் விளங்கவில்லையா?” என்று வினவினார்,
அந்தப் பேய்ச் சிரிப்புக்கிடையே கடினமான குரலில்.
புலவரின் அந்த உக்ர சொரூபத்தை அதுவரை கண்டிராத இளமாறன் பிரமிப்புக்குள்ளானான். தயை நிறைந்த முகத்தில் வெறியும் கோபமும் தாண்டவ மாடியதையும் அந்தக் கோபத்தால் உதடுகள் துடிக்கவே மீசையும் தாடியும் கூட
குதித்ததையும் கண்டான். அவருடைய மரியாதையற்ற பேச்சு அவனுக்குக் கோபத்தைச் சற்று அளித்ததனாலும் அவர் வயது, புலமை, பெருமை இவற்றை நினைத்துத் தன்னைப் பெரிதும் அடக்கிக்கொண்டான். ஆகவே மிகவும்
நிதானமான குரலில் கேட்டான்: என்ன விளங்கவில்லையா எனக் கேட்கிறீர்கள்?” என்று.
புலவர் உடனே பதில் சொல்லவில்லை. ஒரு முறை எழுந்தவர் மீண்டும் மஞ்சத்திலமர்ந்துகொண்டார். சில விநாடி இளமாறனை உற்று நோக்கினார். பிறகு, “வாலிபனே, நீ அதிர்ஷடசாலியா துரதிர்ஷ்டசாலியா என்பதே எனக்கு
விளங்கவில்லை” என்று கூறினார் புலவர்.
“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?” என்று வினவினான் இளமாறன்.
“ஒரு விதத்தில் பார்த்தால் நீ பெரிய அதிர்ஷ்டசாலி. இன்னொரு விதத்தில் பார்த்தால் பெரிய துரதிருஷ்டசாலி” என்றார் புலவர்.
“எந்த விதத்தில் அதிர்ஷ்டசாலி?” என்று வினவி னான் இளமாறன்.
புலவர் சற்றுத் தயங்கினார். பிறகு மெள்ளப் பேச்சைத் துவங்கி, இளமாறா! எந்தப் பாக்கியத்துக்குப் பெரும் வீரர்கள் தோள் தினவு எடுத்துத் துடிக்கிறார்களோ அந்தப் பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நீ இன்று போரிட்டது…?”
என்று சொன்னவர் மீண்டும் தயங்கினார்.
“போரிட்டது?” வியப்புடன் எழுந்தது இளமாறன் கேள்வி, புலவரின் தயக்கத்துக்குக் காரணம் புரியாமல்.
புலவர் பதில் இடியென இறங்கியது, இளமாறன் தலையில். “தமிழகத்தின் மாபெரும் வீரன், மன்னாதி மன்னன், இளமைச் செம்மல், பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போரிட்டிருக்கிறாய் இளமாறா! அந்த வாளுடன் தங்கள் வாட்களை
மோத எத்தனை வீரர்கள் ஆசைப்படுகிறார்கள் தெரியுமா? அவனை எந்த விதத்திலும் அணுகிப் பேச முடியாததால் எத்தனை வீரர்கள் தாங்கள் துர்ப்பாக்கியசாலிகள் என்று நினைக்கிறார்கள் தெரியுமா? அத்தகைய வீரர் தொகை
அனந்தம். அப்பேர்ப்பட்ட வீரன் பாண்டியன் நெடுஞ்செழியன் வாள் உன் வாளுடன் உராய்ந்திருக்கிறது. அந்த விதத்தில் நீ பெரும் பாக்கியசாலி” என்று புலவர் உணர்ச்சிகள் கொந்தளிக்க முகம் ஜொலிக்கப் பேசினார்.
இளமாறன் சில விநாடி பிரமை பிடித்து நின்றான். ‘பால் வதனத்துடன் பாலகன் போல் காட்சியளித்த அந்த வாலிபன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனா!’ என்று தன்னை ஒருமுறைக்கிருமுறையாகக் கேட்டுக்கொண்டான்.
‘பாண்டியன் நெடுஞ்செழியனாயிருந்தால் என்ன, யாராயிருந்தாலென்ன? நான் அடைந்தது தோல்விதானே’ என்று அப்பொழுதும் தன் வாள் கையை விட்டு விலகியதை நினைத்துப் பொருமிய இளமாறன், “இதில் பாக்கிய மென்ன
இருக்கிறது புலவரே?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான்.
“பாக்கியமென்ன இருக்கிறதா?” புலவர் வியப்பினால் வாயைப் பிளந்தார். அவர் மீசைக்கும் தாடிக்கு மிடையே வாய் செவ்விய குகைபோல் தெரிந்தது.

  • இளமாறன் சற்றும் அவர் வியப்பை லட்சியம் செய் யாமலே கேட்டான், “ஆம். இதில் பாக்கியமென்ன இருக்கிறது. வாட்போரில் தோல்வியுறுவது பெரும் பாக்கியமா?” என்று.
    புலவர் வியப்பு திகைப்பாக மாறியது. அந்தத் திகைப்பையும் மறைத்துக்கொண்டு கேட்டார் : “வாட் போர் எவ்வளவு நேரம் நடந்திருக்கும்” என்று.
    “ஒரு நாழிகை நேரம் நடந்திருக்கும்.”
    “ஒரு நாழிகை நேரமா?”
    “ஆம். நான் மன்னர் வாளை தட்ட முயன்றேன், முடியவில்லை. பல விநாடிகள் தாக்கிப் பார்த்தேன், பயனில்லை!”
    “அப்புறம்?”
    “மன்னர் திரும்பத் தாக்கினார். ஏதோ வலிய முறையில் என் வாளைத் தட்டினார். கையிலிருந்து கழன்றது.”
    “பிறகு?”
    “இரண்டடி தள்ளி விழுந்தது.”
    “இரண்டே அடிகளா!”
    “ஆம். ஏன், பல அடி பறக்காதது வியப்பாயிருக்கிறதாக்கும் உங்களுக்கு?”
    இந்தக் கேள்விக்கு ‘ஆம் ஆம்’ என்று குறிப்பிடும் வகையில் புலவர் தமது தலையைப் பலமுறை ஆட்டினார். சந்தேகமில்லை. பெரும் வியப்பாய் இருக்கிறது… பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போரிட்ட பல வீரர்களைப்
    பார்த்திருக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் வாள் காற்றில் பறந்திருக்கிறது. ஒரு முழு நாழிகை போரிட்டிருக்கிறாய். பிறகு தட்டப்பட்ட வாள் இரண்டடியில் விழுந்திருக்கிறது. அந்த அனுபவம் நெடுஞ்செழியனுக்கே புதிது.
    அதில்தான் இருக்கிறது ஆபத்து” என்றார் புலவர்.
    “அதில் ஆபத்து என்ன இருக்கிறது?” என்று வினவினான் இளமாறன்.
    “சேர நாட்டு வீரன் ஒருவன் மதுரையில் புகுந்திருப்பதை ஒற்றர்களே சொல்லியிருப்பார்கள் நெடுஞ்செழியனுக்கு. உன்மேல் பாண்டியன் கண் வைக்க அதுவே போதும். அடுத்தபடி அவன் நகர சோதனை வருகையில் அதே வீரன்
    அவனுக்குக் குறுக்கே வருகிறான். அவன் கல்வி ஸ்தலத்தின் வாயிலைத் தட்டப் போகிறான். அவனைத் தடுக்க முயலுகிறான் பாண்டிய சேனாபதி மருதன். சேனாதிபதியின் வாளைத் தட்டி விடுகிறான் சேர நாட்டவன். பிறகு தானே
    போரிடு கிறான் பாண்டியன். மிகுந்த சிரமத்துக்குப் பிறகுதான் சேர நாட்டு வீரன் கைவாளை அவனால் தட்ட முடிகிறது. வந்திருப்பவன் தனக்கு நிகரான வீரன் என்பதை நெடுஞ்செழியன் புரிந்துகொள்கிறான். பிறகு என்ன நடக்கும்
    என்று எண்ணுகிறாய் இளமாறா?” என்று விளக்கினார், புலவர் பெருமான்.
    புலவரின் விளக்கம் இளமாறன் கண்களைப் பெரிதும் திறந்தது..
  • திறக்கப்பட்ட கண்கள் மீண்டும் பாண்டியன் நெடுஞ்செழியனை அப்பொழுதும் சுற்றுமுற்றும் கண்டன. அந்த வீர வதனம், இளமை முகம், இதழ்களின் புன்முறுவல் எல்லாம் கண் முன் தெரிந்தன.
  • தன்னிடம் தோல்வியுற்ற அந்தப் பெரிய வீரன் பாண்டி மண்டலப் படைத் தலைவனா? இப்படிப் பாண்டியன் நெடுஞ்செழியனையும் அவன் துணைவனையும் மனக் கண்களில் கண்டும் பல கேள்விகளைத் தன்னைக்
  • கேட்டுக்கொண்டும் பிரமைதட்டி நின்ற இளமாறனை நோக்கிப் புலவர் சொன்னார்: “இளமாறா! பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உன் வருகை, உன் வீரம், இரண்டும் தெரிந்துவிட்டன. வந்த காரணத்தை அவன்
  • ஊகித்துக்கொண்டிருப்பான். ஆகவே எந்த விநாடியிலும் உன்னை சிறை செய்ய வீரர்கள் இங்கு வருவார்கள். அல்லது உன் அசைவு ஒவ்வொன்றையும் கவனிக்க உத்தரவுகள் பறக்கும். ஆகவே தாமதிக்க நமக்கு நேரமில்லை.”
  • அதுவரை அவர்கள் உரையாடலில் கலவாத இமயவல்லியும் குறுக்கே புகுந்து, “ஆம், தாமதிக்க நேரமில்லை புலவரே! விநாடிகூட நேரமில்லை” என்றாள் உணர்ச்சி பொங்க.
  • “தாமதித்தால்?” இளமாறன் கேட்டான்.
  • “மாந்தரஞ் சேரல் இரும்பொறை நிரந்தரமாகச் சிறையிலிருப்பார். எங்கள் திட்டங்கள் தவிடு பொடியாகிவிடும்” என்றாள் இமயவல்லி.
  • அவர்கள் திட்டங்கள் என்ன என்பது தெரியாததாலும் அது எப்படி தவிடுபொடியாகுமென்பதை அறியாததாலும், “இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான் இளமாறன்.
  • குறுங்கோழியூர்க்கிழார் இமயவல்லியை நோக்கினார். “இப்பொழுது என்ன செய்ய வேண்டும் இமயவல்லி?” வினவவும் செய்தார்.
  • “இவரை உடனே மதுரையைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்றாள் இமயவல்லி புலவரை நோக்கி.
  • “எந்த இடத்துக்குக் கொண்டு போகலாம்?”
  • “சத்திரத்துக்கு.”
  • “நல்லது! நல்லது!” என்று குதூகலித்த புலவர், “சரி இளமாறா புறப்பட ஏற்பாடு செய்துகொள். இன்னும் ஒரு நாழிகைக்குள் வண்டி வந்துவிடும்” என்றார்.
  • இருவர் சம்பாஷணையையும் கேட்ட இளமாறன் சற்று கோபம் அடைந்தான். சடப்பொருளை அகற்று வதுபோல் தன்னை அவ்விருவரும் அகற்றப் பேசியது வெறுப்பாயிருந்தது அவனுக்கு. “இதில் என் சம்மதம் தேவையில்லை
  • போலிருக்கிறது” என்று சீறினான் அவன்.
  • “தேவையில்லை” என்று சிறிது லட்சியம் செய்யாமலே சொன்ன குறுங்கோழியூர்க்கிழார், “இளமாறா, வேண்டிய தொல்லைகளை நீ ஏற்கெனவே கொடுத்துவிட்டாய், இனியும் தொல்லை கொடுக்காதே. புறப்பட சித்தம் செய். போ
  • உனது அறைக்கு” என்றார் வீரனை உத்தரவிடும் தளபதி போல்.
  • அப்பொழுதும் அசையாத இளமாறன், “சத்திரம் என்கிறீர்களே, அது எங்கிருக்கிறது?” என்று வினவினான்.
  • “இமயவல்லிக்குத் தெரியும்” என்றார் புலவர்.
  • “அப்படியானால்…’ சந்தேகத்துடன் கேட்டான் இளமாறன்.
  • “இமயவல்லி உன்னுடன் வருகிறாள்.”
  • “அவளுக்குத் துணை?”
  • “அவளுக்குத் துணை நீ, உனக்குத் துணை அவள். சரி சரி போ” என்று துரிதப்படுத்தினார் புலவர்.
  • அதற்கு மேல் ஏதும் பேச வழியில்லாததால் அறையைவிட்டு வெளியே சென்றான் இளமாறன். அடுத்த நாழிகைக்குள் இமயவல்லி அவன் அறைக் கதவைத் தட்டினாள். அவளை அவன் தொடர்ந்து சென்றான். அந்த மகர மாளிகையின்
  • வேறொரு வழியாக அவனை அழைத்துச் சென்று இமயவல்லி ஒரு தோட்டத்தில் அவனைக் கொண்டுவந்து நிறுத்தினாள்.
  • அங்கு பயணத்துக்குத் தயாராக நாற்புறமும் முக்காடிட்ட இரு புரவித் தேரொன்று தயாராக நின்றது. அதில் ஒரு பகுதித் திரையை நீக்கிக்கொண்டு இமயவல்லி ஏறி உட்கார்ந்தாள். இளமாறனும் ஏறப்போன சமயத்தில் புலவர்
  • தோட்டத்துள் வந்தார். இளமாறன் அவரை வணங்கினான். அவர் அவனை ஆசீர்வதித்த தன்றி, “செல் இளமாறா, உனக்கு வெற்றியைக் கடவுள் அளிக்கட்டும். இமயவல்லி கிழித்த கோட்டைத் தாண்டாதே. அவள் சொற்படி நட” என்றும்
  • கூறினார்.
  • இளமாறன் வண்டியிலேறி இமயவல்லியின் அருகில் அமர்ந்தான். அடுத்த விநாடி அதுவரை திறந்திருந்த திரையும் மூடப்பட்டது! மூடுதேர் பறந்து சென்றது.

Previous articleMoongil Kottai Ch7 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here