Home Historical Novel Moongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

70
0
Moongil Kottai Ch9 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 சாலைப் போர்

Moongil Kottai Ch9 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

அன்றிரவு பிற்பகுதியில் நேரிட்ட நிகழ்ச்சிகளாலும், அவற்றைப்பற்றிப் புலவர் அளித்த விளக்கத்தாலும், அந்த விளக்கத்தில் வெளிவந்த உண்மைகளாலும், உணர்ச்சிகள் பெரிதும் நெகிழ்ந்து கிடக்கப் பிரமை பிடித்தவன் போல்
மூடுதேரில் உட்கார்ந்திருந்த இளமாறன் திரும்பத் திரும்ப அந்த இரவின் சம்பவங்களை அலசி பார்த்தான். மதுரையிலிருந்து கருவூருக்கு வந்த அழைப்பின் முறையே மர்மமாக இருந்ததென்றால் மதுரை வந்தபின் ஏற்பட்ட நிகழ்ச்சிகள்
மர்மத்தின் இருளை அதிகப்படுத்தினவேயொழிய சிறிதும் அதில் ஒளி வீசாததை நினைக்க, ‘இந்தப் பெண் யார்? இவளும் ஒரு புலவரும் மட்டும் சேர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியனின் பயங்கரச் சிறையான மூங்கில் கோட்டையிலிருந்து
சேர மன்னனை விடுதலை செய்வது நடக்கிற காரியமா? இவர்களுக்குப் படைகளின் உதவியோ வேறு பாண்டிய மக்களின் உதவியோ இருப்பதாகத் தெரியவில்லையே!’ என்று திரும்பத் திரும்பத் தன்னைப் பலமுறை கேட்டுக் கொண்டான்.
அத்துடன் புலவரும் இந்த இளமங்கையும் வாழ்ந்த முறை, வாழ்ந்த மாளிகை இவை அனைத்துங்கூட பெரும் மர்மமாயிருந்தது இளமாறனுக்கு. ‘இவள் புலவருடன் ஏன் அந்த மர்ம மாளிகையில் வாழ்கிறாள்? இவளுக்கு உற்றார்
உறவினர் யாருமே இல்லையா?’ என்று கேள்விகளையும் அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான்.
பிறகு மதுரையின் பெரும் காவலையும் கண்காணிப்பையும் எண்ணிப் பார்த்த அவன், இத்தகைய கடுமையான காவலையும் கண்காணிப்பையும் கடந்து, ‘மூடு தேர் ஓடிவிடுமா? தவிர இந்த மூடுதேர் ஏது இவர்களுக்கு?” என்றும் தன்
இதயத்தில் கேள்விகளை எழுப்பிக்கொண்டான் இளமாறன்.
இந்தக் கேள்விகள் கிளப்பிய சந்தேகங்களுக்கும் உணர்ச்சிக் குழப்பத்துக்கும் இடையே சிறிது சங்கடமும் அவனுக்கு நேரிட்டது. மூடுதேர் கணவேகத்தில் பறந்து சென்றதால் இடையிடையே சாலைப் பள்ளங்களில் வண்டிச் சக்கரம்
புகுந்து தள்ளி அவனைத் திடீர் திடீரெனப் பலமுறை தூக்கித் தள்ளியதால் அவன் உடல் இரண்டு முறை இமயவல்லியின் உடலுடன் மோத ஏற்பட்டதன் விளைவாகப் பெரும் சங்கடத்துக்குள்ளான இளமாறனுக்கு அத்தனை சங்கடத்திலும்
சிறிது மனத்திருப்தியுமிருந்தது. திருப்தியிருந்ததேயொழிய மனம் அந்தத் திருப்தியையும் சந்துஷ்டியையும் ஒப்புக்கொள்ள மறுத்தது. ‘சே சே, யாரோ அபலைப் பெண்ணை நம்மிடம் நம்பி ஒப்படைத்திருக்கிறார் புலவர். இந்த எண்ணமே
பிசகு’ என்று தன்னை மேலுக்குக் கண்டித்துக்கொண்டான். இப்படிப் பல வாறாக யோசித்து யோசித்து மௌனம் சாதித்ததைச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த அந்தப் பைங்கிளியும் கவனித்தாளானாலும் அந்த மௌனத்தை அவள்
சிறிதும் கலைக்கவில்லை, அவள் முகத்தில் மட்டும் ஏதோ சிறிது கவலைக்குறி இருந்ததே தவிர, அவளுக்கு அந்தப் பயணத்தைப்பற்றிப் பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை. ஏதும் பேசாமல் மார்பில் கையைக் கட்டிக்கொண்டு
தேரின் ஆசனத்தில் மல்லாந்து சாய்ந்து கிடந்த அந்த வாலிபனை இரு முறை தன் கடைக் கண்ணால் பார்த்தாள் அந்தப் பெண். பிறகு மெல்லப் புன்முறுவல் கொண்டாள். அவ்வளவுதான். அவளும் பேசவில்லை. இத்தகைய மௌனத்தைக்
கலைக்கத்தானோ என்னமோ திடீரென சாலை மடிப்பு ஒன்றைத் தாண்டிக் குதித்த மூடுதேரின் பேரசைவு அந்தப் பருவப் பெண்ணை ஒரே தூக்காகத் தூக்கி இளமாறன் கைகளில் விட்டெறிந்தது.
எதிர்பாராத விதமாகத் தன்னை நோக்கி எழும்பி வந்த அந்தப் பூவுடலை அப்படியே இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்த இளமாறன், “நல்ல வேளை!” என்று ஏதோ மேலும் சொல்லப்போய்ப் பேச்சைச் சட்டென்று நிறுத்திக்கொண்டான்.
அந்த நல்ல வேளையைச் சொன்னபோதும் சரி, கைகளால் அவளை இறுக்கிப் பிடித்தபோதும் சரி, பெரும் கவலையைக் குரலில் இளமாறன் காட்டியதைக் கண்ட அந்தப் பைங்கிளி மெல்ல அவன் பிடியிலிருந்து விலகிக்கொண்டு,
“ஒன்றுமில்லை…” என்று கூறி மூடு தேரின் தனது பழைய மூலைக்கு நகர்ந்தாள்.
அந்த ‘ஒன்றுமில்லை’ என்பது அர்த்தமற்ற சொல் என்பதை இளமாறன் உணர்ந்திருந்தான். உணர்ச்சிகள் குழம்பும்போது புத்தியும் குழம்புமாதலால் அர்த்தமற்ற சொற்கள் வெளிவருவது இயற்கையே என்பதை இளமாறன் புரிந்து
கொண்டதால் அந்தச் சொல்லைப் பற்றி விவாதிக்காமல், “சாலை மிகவும் மேடு பள்ளமாயிருக்கிறது” என்றான்.
அவள் பதிலுக்கு ‘ஆம்’ என்று ஒரு சொல்லை மட்டும் சொன்னாள். அந்த ‘ஆம்’ என்ற சொல்லில் பெரும் சங்கடமிருந்ததை உணர்ந்த இளமாறன் அதன் காரணத்தைப் புரிந்துகொண்டதன்றி, இருவர் சங்கடத்தையும் தீர்த்துக்கொள்ள
உரையாடலே சிறந்த முறை என்று கருதிப் பேச முற்பட்டு, “மதுரையின் நெடுஞ்சாலை நான் பார்த்தவரையில் நன்றாகத் தானே இருந்தது?” என்றான்.
“மதுரையின் பெருஞ்சாலையில் பழுதிருந்தால் மன்னர் வெகுண்டெழுவார்” என்றாள் இமயவல்லி.
“அப்படியானால் இது மதுரையின் நேர்சாலையல்லவா?” என்று வினவினான் இளமாறன்.
“அல்ல.”
“இந்தச் சாலை எந்த ஊருக்குச் செல்கிறது?”
இளமாறனின் இந்தக் கேள்விக்கு அவள் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. “சேரநாடு நோக்கிச் செல்கிறது” என்றாள் அவள்.
அந்தப் பதில் அவனுக்குப் பெரும் வியப்பை அளித்தது. ‘சேர நாட்டுப் புறம் செல்ல வேண்டுமானால் வைகையின் இருபெரும் மூங்கிற் பாலங்களில் ஒன்றையாவது கடந்திருக்க வேண்டும். அப்படிக் கடப்பதானால் அங்குள்ள பெரும்
காவலைத் தாண்ட வேண்டும். வீரர்கள் கண்டிப்பாய் மடக்கிச் சோதனை செய்திருப்பார்களே?’ என நினைத்த இளமாறன் கேட்டான், “பெருஞ்சாலை இல்லாவிட்டாலும் வைகையை எப்படியும் தாண்டித்தானே ஆகவேண்டும்?” என்று.
“ஆம்” ஒற்றைச் சொல் பதிலையே இமயவல்லி சொன்னாள்.
“நாம் தாண்டிவிட்டோமா?”
“இல்லை.”
“எப்படித் தாண்ட முடியும்?”
“தாண்டுவதில் கஷ்டம் என்ன இருக்கிறது?”
“பாலங்களில் காவல் பலமாயிற்றே?”
“அது பெரும் பாலங்களில்!”
“வேறு சில பாலமும் இருக்கிறதா?”
“இருக்கிறது.”
“எங்கே?”
“சிறிது வடக்கே தள்ளி.”
“சிறிதென்றால்?”
“கால் காததூரம் தாண்டியதும்.”
“வைகைக்குப் பல பாலங்கள் இருக்கின்றனவா?”
“பத்து பாலங்களுக்கு மேல் இருக்கின்றன.”
“அந்தப் பத்திலும் காவல் உண்டா?”
“உண்டு.”
“நீங்கள் எதிர்பார்க்கும் இந்தச் சிறு பாலத்தில்…?”
“உண்டு… அதிகமில்லை.”
இதற்கு மேல் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் இளமாறன். மூடுதேர் நேர் சாலையில் மதுரையைத் தாண்டாமல் அதிகமாகப் படைப்பகுதி உபயோகப்படுத்தாத கிளை வழியாகச் சென்று கால் காதத்தூரத்துக்குப் பிறகு நதியைக் கடக்க
முயலுகிறதென்று உணர்ந்தானானாலும், அந்தப் பகுதியிலும் காவலிருப்பதால் எப்படி இந்தத் தேர் அதைக் கடந்து போக முடியும் என்று நினைத்துப் பார்த்து ஏதும் புரியாமல் விழித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.
அவன் எண்ணங்களை இமயவல்லி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவளே விளக்கத் தொடங்கி, “இந்த வண்டியை மதுரையில் பெருஞ்சாலையிலுள்ள பெரும் மூங்கிற் பாலக் காவலர்கூட தடுக்கமாட்டார்கள் வீரரே! ஆகவே
அஞ்சாதீர்கள்” என்றாள்.
இளமாறனுக்கு அவள் விளக்கம் எதையும் விளக்காததால் கேட்டான்: “ஏன்? இந்த வண்டி ஏதாவது மந்திரம் போட்டுவிடுமோ?” என்று.
“ஆம்.”
“என்ன?”
“இது மந்திர வண்டிதான். இதனருகே யாருமே வரமாட்டார்கள்.”
“ஏன்?”
“வந்தால் தண்டிக்கப்படுவார்கள்.”
“ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?”
“அதுதான் சொன்னேனே, இது மந்திர வண்டியென்று.”
“நீங்கள் சொல்வது பெரும் மூடுமந்திரமாயிருக்கிறது.”
“இது மூடுதேரல்லவா? அதுதான் மூடுமந்திரமாயிருக்கிறது” இதைச் சொன்ன இமயவல்லி தன் அழகிய வாயைத் திறந்து கலகலவென நகைத்தாள்.
அவள் நகைப்பதன் காரணத்தை அறியாத இளமாறன் மெள்ள கோபத்தின் வசப்பட்டான். “இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று அந்தக் கோபத்துடன் வினவவும் செய்தான்.
அவள் மெள்ள மெள்ளப் பேசினாள். குரல் குழைய குழையப் பேசினாள். அந்தக் குரலே இன்பமாயிருந்தது. அவள் இதழ்களை விரித்துச் சொற்களை உ.திர்த்தபோது அவள் வழவழத்த கன்னங்களில் குழி பெரிதாக விழுந்து அவள்
அழகை ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தியது. அந்த அழகை அவன் விழுங்கி விடுவதைப்போல் பார்ப்பதைக் கடைக் கண்ணால் கண்டாலும் காணாதவள் போல் நடித்த அவள், “வீரரே! சொன்னால் தவறாக நினைத்துக்கொள்ள
மாட்டீர்களே!” என்று துவங்கினாள் மெள்ள.
“சொல் பெண்ணே!” என்றான் இளமாறன் அவள் அழகில் பூரணமாக லயித்து.
“உங்கள் பார்வை…” என்று இழுத்தாள் அவள்.
“என் பார்வையா! அதற்கென்ன?” என்று வினவினான் அவன் சந்தேகத்துடன்.
“இந்த இரவின் ஆரம்பத்திலிருந்ததுபோல் இல்லை” என்று கூறினாள் இமயவல்லி.
“இப்பொழுது எப்படி இருக்கிறது?”
“சற்று மங்கியிருக்கிறது.”
“இமயவல்லி!” கோபத்துடன் எழுந்தது இளமாறன் சொல்.
“கோபிக்காதீர்கள். நீங்கள் வந்தபோது, அதாவது நான் கதவைத் திறந்தபோது…” என்ற இமயவல்லி சற்றுத் தயங்கினாள்..
“திறந்தபோது…”
“உங்கள் பார்வை…!”
“உம்.”
“கூர்மையாயிருந்தது.”
“என்ன சொன்னாய்?”
“ஆராய்ச்சி செய்யும் சக்தியுடனிருந்தது.”
“அப்படியா?”
“ஆம்.”
“அது உனக்குத் தெரிந்ததாக்கும்?”
“வேறு யாருக்குத் தெரியும்? நான் தானே கதவைத் திறந்தேன்.”
“அந்தப் பார்வைக்கு இப்பொழுதென்ன பழுது வந்துவிட்டது?”
“அதுதான் எனக்கும் தெரியவில்லை. ஆனால் பழுது வந்துவிட்டது என்பதென்னவோ உண்மை.”
“அதெப்படி தெரிகிறது உனக்கு?”
“இந்த வண்டியை நீங்கள் சரியாகப் பார்க்காததிலிருந்து.”
இளமாறன் சற்று யோசித்துவிட்டுக் கேட்டான்: “நான் பார்க்கவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று.
இமயவல்லி தயக்கமில்லாமல் பதில் சொன்னாள்: “இந்த வண்டியைக் காவலர் ஏன் நிறுத்தமாட்டார்கள் என்று கேட்பதிலிருந்து தெரிகிறது” என்று.
“எப்படித் தெரிகிறது?” சீற்றத்துடன் கேட்டான் சேர நாட்டு வாலிபன்.
இமயவல்லியின் பதில் தெளிவாகவும் உறுதியுடனும் வந்தது. “வீரரே! இந்த வண்டியை மட்டும் நீர் உற்றுப் பார்த்திருந்தால் இது பாண்டிய அரண்மனையின் அந்தப்புர மகளிர் செல்லும் வண்டி என்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
இதன் புரவிகளையும் மூடிவிடப்பட்ட சீலைகளையும் நீங்கள் கண்டீர்களே தவிர, இதன் சக்கரத்திலிருக்கும் பாண்டிய ராஜ சின்னத்தை நீங்கள் கவனிக்கவில்லை. இந்த வண்டியை யாரும் தடுக்க முடியாது வீரரே! தடுத்தவர்களுக்கு மரண
தண்டனை விதிப்பது பாண்டிய வம்ச பரம்பரை வழக்கம். இப்பொழுது புரிகிறதா இதை ஏன் மந்திரத் தேர் என்று சொன்னேன் என்பது?” என்றாள் இமய வல்லி.
பிரமித்து ஆசனத்தில் சாய்ந்தான் இளமாறன். இமயவல்லியின் முறைகளும் வழிகளும் மேலும் மர்மத்தை அதிகப்படுத்துவதை உணர்ந்தான். ஆகவே கேட்டான், “இந்த வண்டி உனக்கு ஏது?” என்று.
“மன்னர் கொட்டடியில் இருந்து தருவித்தோம்.” என்றாள் இமயவல்லி.
“மன்னர் கொட்டடியிலிருந்தா?” இளமாறன் வியப்பின் எல்லையை எய்தினான்.
“ஆம்” என்றாள் இமயவல்லி சர்வசகஜமாக.
“மன்னர் இதை அனுமதித்தாரா?”
“இந்த வண்டியைக் கொணர்ந்தது மன்னருக்குத் தெரியாது.”
“தெரியாமல் எப்படி அரண்மனைக் கொட்டடியிலிருந்து வண்டியைக் கொணர முடியும்?”
“புலவர் கட்டளையிட்டார்!”
“புலவர் என்ன அரசரா?”
“அரசரால் மதிக்கப்பட்டவர். அவர் கட்டளை எதையும் தன் கட்டளைபோல் பாவிக்கவேண்டு மென்பது பாண்டியன் நெடுஞ்செழியன் ஆக்ஞை.”
“அந்தப்புர மகளிர் பயண வண்டியைப் புலவர் எடுத்துச் சென்றதை மன்னன் அறிந்தால்…?”
“ஆபத்துதான்.”
“அந்தப்புர வண்டி. எதற்கும் என்று கேள்வி எழாதா?”
“எழாது. புலவர் செய்கை எதையும் மன்னர் பகிரங்கமாக விசாரிக்கமாட்டார்.”
வேறென்ன செய்வார்?”
“இந்த வண்டியை மடக்க வீரர்களை அனுப்புவார்.”
இளமாறனுக்கு விஷயம் தெளிவாகப் புரிந்தது. “அப்படியானல் இந்த மூடுதேர் திருட்டுத்தனமாக அரசனளித்த சலுகையைத் துர்விநியோகப்படுத்தி எடுத்துச் செல்லப்படுகிறதா?” என்று கேட்டான்.
“ஆம்” என்றாள் இமயவல்லி, அந்தத் தேரைத் கிடியது சரியான காரியம்போல.
“அகப்பட்டுக் கொண்டால்?”
“ஆபத்து தானென்று முன்னமே சொன்னேனே!”
“அகப்பட்டுக்கொள்ள…” என்று இளமாறன் மெள்ள புருவங்களைக் கேள்வி கேட்கும் பாவனையில் உயர்த்தினான்.
“மாட்டோம்” என்றால் இமயவல்லி.
அவள் சொல் அடுத்த விநாடி பொய்யாகியது. மூடுதேரை ஓட்டியவன் திரையை சற்று தள்ளி உள்ளே எட்டிப் பார்த்து, “அவர்கள் வந்து விட்டார்கள்” என்றான்.
இமயவல்லி ஆசனத்தில் எழுந்து உட்கார்ந்து, “உன் தேர் பறக்கட்டும்” என்று கட்டளையிட்டாள், மீண்டும் திரை விழுந்தது. சுளீர் சுளீர் என்ற சவுக்கடி களின் ஒலி திரும்பத் திரும்பத் திரைக்குள்ளும் வந்தது.
குலுங்கி, ஆடி அதிர்ந்து தேர் பறந்தது. அத்துடன் பின்னால் பல புரவிகள் வரும் குளம்படி ஒலிகளும் கேட்டன. இளமாறன் நிலைமையைப் புரிந்துகொண்டான். நெடுஞ்செழியன் வீரர்கள் வெகு சீக்கிரம் அந்த வண்டியைப்
பிடித்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை அவனுக்கு. அப்படி ஆபத்து நெருங்கியது ஒரு விஷயத்துக்கு நன்மையாகவும் முடிந்தது. அவன் புத்தி குழப்பம் மறைந்தது. போரிடும் கட்டம் நெருங்குவதிலிருந்த ஆவல் அவன்
உணர்ச்சிகளுக்கு முறுக்கேற்றியது. தனது வாளை உருவிப் பிடித்துக் கொண்டு போருக்குச் சித்தமும் ஆனான் அவன்.
அடுத்த அரை நாழிகைக்குள் வீரர்கள் அந்த ரதத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். “இருவரும் இறங்குங்கள் கீழே” என்று பெருங்குரல் ஒன்று அதட்டியது வெளியிலிருந்து. திரை மறைவிலிருந்து இளமாறன் வாள் மட்டும் வெளியே
நீண்டது. அதை அணுக முயன்ற ஒரு வீரன் அலறி மண்ணில் விழுந்தான். ஏதோ மந்திர வித்தைபோல் நிகழ்ந்துவிட்ட அந்த வீரச்செயலை நினைத்து மற்ற வீரர்கள் வியப்பெய்தி பிரமித்த அவகாசத்தை உபயோகப்படுத்திக் கொண்டு
மூடுதேரிலிருந்து கீழே குதித்த இளமாறன் வாள் அடுத்த விநாடி பயங்கரமாகச் சுழன்றது. சுமார் எட்டு வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். சாலையில் துவங்கிய அந்த விநோதச் சண்டையை உள்ளிருந்து பார்த்த இமயவல்லி
வியப்பை எய்தினாளா? அல்லது பயத்தை அடைந்தாளா? அவளுக்கே புரியவில்லை.

Previous articleMoongil Kottai Ch8 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here