Home Historical Novel Naga Deepam Ch1 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch1 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

105
0
Naga Deepam Ch1 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch1 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch1 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1. ஹரிதாஸ் ஜாலா

Naga Deepam Ch1 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சரத் காலத்தின் அந்த மாலை நேரத்திலும் சகிக்க வொண்ணாத அளவுக்குத் தீட்சண்யத்தைக் கிளப்பித் தகித்துக் கொண்டிருந்த ஆதவனின் அத்தனை கொடுமையையும் அலட்சியம் செய்து, கடகடவெனச் சிரிப்பு ஒன்றை
உதிரவிட்டான் ஹரிதாஸ் ஜாலா. அவன் வாழ்க்கையைப் போலவே அந்தச் சிரிப்பும் வறண்டு கிடந்தது.
அந்தச் சிரிப்பை அனுபவிப்பதற்கோ, வேண்டாமென விலக்கித் தள்ளுவதற்கோ அக்கம் பக்கத்தில் யாருமில்லை. அப்படி யாருமில்லாததே அவன் சிந்தனைக்கும் சிந்தனையின் விளைவாக எழுந்த அந்தச் சிரிப்புக்கும்
காரணமாயிருந்திருக்க வேண்டும். அந்தக் காரணத்தைச் சரியென்று வலியுறுத்தும் புன்முறுவலொன்றும் சிரிப்பைத் தொடர்ந்து அவன் இதழ்களில் சில விநாடிகள் பரவி நின்றது. அதுவரை தலையைக் குனிந்து கொண்டே தீவிர
சிந்தனையில் புரவி மீது சென்று கொண்டிருந்த ஹரிதாஸ் ஜாலா, மெள்ளத் தலை நிமிர்ந்து நாலா பக்கத்திலும் தனது கண்களைச் சஞ்சரிக்க வொட்டாமலும் கனலின் ஒளிகளை ஆங்காங்கு கிளப்பிக் கொண்டும் வெள்ளை
வெளேரென்று கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் பரவிக் கிடந்த அந்தப் பாலைவனப் பிரதேசத்தைக் கவனித்த ஹரி தாஸ் ஜாலா, அந்தப் பாலைவனத்துக்கும் தனக்கும் எத்தனை ஒற்றுமையிருந்தது என்பதை, எண்ணினான்.
அந்த எண்ணத்தின் விளைவாக ஏற்கெனவே அவன் இதழ்களில் தவழ்ந்து நின்ற புன்முறுவல் முகத்திலும் பரவலாயிற்று.
பாலைவனத்தைப் போலவே தன் வாழ்க்கையும் வறண்டு கிடப்பதையும், பெரும் காற்றுகளால் சற்றுத் தூரத்துக்கொருமுறை திரட்டி நிற்க வைக்கப்பட்டிருந்த மணற்குன்றுகளையும், அவற்றையடுத்த பெரும் மணற்
பள்ளங்களையும் போலவே, தன் வாழ்க்கையிலும் பெரும் புயல்கள் பல வீசி சில சமயங்களில் தன்னைக் குன்றினளவுக்கு உயர்த்தியும் மற்றும் சில சமயங்களில் பள்ளங்களின் அளவுக்குத் தாழ்த்தியுமிருப்பதை நினைத்த அந்த
ராஜபுத்திர வாலிபன், ‘உற்றார் உறவினர் யாருமற்ற எனக்கும் இந்த உலகத்தில் துணையிருக்கிறது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். அத்தகைய துணையையும் நினைத்து மேல்திசையின் தூரத்தே தெரிந்த ஹாராவளி
மலைத் தொடரில் மறையத் தொடங்கிக் கொண்டிருந்த கதிரவனையுங் கண்ட அந்த வாலிப வீரன், “ஆதவன் சுடு கிரணங்களால் பாலைவனத்தை வருஷக் கணக்கில் சுட்டும் பாலைவனத்தின் மணல் மற்ற பொருள் களைப் போல்
கருகிப் போகாமல் வெள்ளை வெளேரென்று சுய நிலையிலேயே நிற்கிறதல்லவா?” என்று சொல்லிக் கொண்டதன்றி, “வீரர்கள் நிலையும் இப்படித்தான். வாழ்க்கையின் கடுஞ்சோதனைகளால் அவர்கள் வாடு வதுமில்லை;
சுயநிலையிலிருந்து மாறுவதுமில்லை” என்று தத்துவ சிந்தனையிலும் இறங்கினான்.
வறண்ட வாழ்க்கைக்கு அவ்வப்பொழுது சிறிது உயிருட்டும் ஒரே சாதனம் தத்துவந்தான் என்பதை நன்றாக உணர்ந்திருந்த ஹரிதாஸ் ஜாலா, தத்துவங்களிலும் பல மாறுபாடுகள் உண்டென்பதையும் அவை மனித சுபாவத்துக்குத்
தக்கபடி மாறுபட்ட உணர்ச்சிகளையும் அர்த்தங்களையும் அளிக்க வல்லவையென்பதையும் நினைத்துப் பார்த்தானாகையால், வாழ்வில், எது வளர்ச்சி, எது வீழ்ச்சி என்பதை நிர்ணயிப்பது கூட சுலபமல்ல’ என்று தனக்குத்தானே
சொல்லிக் கொண்டான். ஏதும் விளையாமல் வறண்டு கிடக்கும் பாலைவனம் வளர்ச்சியுற்றதா அல்லது தூரத்தே தெரிந்த ஒண்டாலா என்றழைக்கப்பட்ட ஓமதலா சமவெளி வளர்ச்சியுற்றதா என்பதுகூட தீர்மானிக்க முடியாத விஷயம்
என்று அவன் எண்ணினான். ‘எப்படி முடியும்?’ வளர்ச்சி விளைவுகளைப் பொறுத்ததல்ல, செயல்களைப் பொறுத்தது’ என்று முடிவு கட்டி அவன் ராஜபுதனமே அதற்குப் பேருதாரணமாக நிற்பதை மனக் கண்ணாடியில் கண்டான்.
மேவார் தலைநகரமான சித்தூரில் இன்று ஏதுமில்லை. கட்டடங்களை அலாவுதீனும் அழித்து விட்டான். அக்பரின் பீரங்கிகளும் அழித்து விட்டன. கோட்டை படுதூளாகக் கிடக்கிறது. எங்கும் பெருநாசம், போரின் விளைவு அது, ஆனால்
அந்த நாசத்திலும் வளர்ச்சியிருக்கிறது. அங்குள்ள இடிந்த கட்டடங்கள் எத்தனை கதைகளைச் சொல்லுகின்றன. எத்தனை வீரப் பிர தாபங்கள் அந்தத் தலைநகர வீழ்ச்சியில் இணைந்து கிடக்கின்றன. சூரியன் வாயிலில் வாள் பிடித்து
மொகலாயரைப் பெரும் பலி வாங்கிய பிறகே மாண்ட மாவீரர்களான ஜெய்மல்லுக்கும் பட்டாசிம்மனுக்கும் அக்பரே நினைவு ஸ்தூபிகளைக் கட்டவில்லையா? பெரும் வீரச் செயல்கள், நாசமடைந்த அந்தக் கோட்டையில் எழுந்து இன்றும்
பேரொலி செய்யவில்லையா? செயல்களில் வளர்ச்சியில்லையென்று எப்படிச் சொல்ல முடியும் என்று விளக்கம் சொல்லிக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அதற்கு நேர் எதிரான நிலையையும் எண்ணிப் பார்த்தான். மொகலாயரிடம்
சரணடைந்த ராஜபுத்திரர்களின் நகரங்கள் நாசமடையவில்லை; கட்டடங்கள் பெரிதாக எழுந்து கண்ணைப் பறிக்கத் தான் செய்கின்றன. இஸ்லாத்தின் நட்பினால் விளைவு நல்லது தான். ஆனால் அது வாழ்வின் வளர்ச்சியா? அல்ல அல்ல.
வாழ்வின் வீழ்ச்சி அது. அங்கும் செயலுண்டு. ஆனால் அடிமைச் செயல். செயல் சொந்தமானதல்ல. அதிகாரி. தூண்டுவதால் அடிமை இயங்குகிறான். அதில் பணமுண்டு படாடோபமுண்டு. பதவி உண்டு. இல்லாதது மானம் ஒன்றுதான்’
என்று நினைத்துப் பார்த்ததால் வெறுப்புக் கொண்ட ஹரி தாஸ் ஜாலா தன் நிலையை நினைத்துப் பெரிதும் மனம் வெதும்பினான். இரண்டு வருட காலம் மொகலாயர் சிறையில் சிக்கி இம்சைப்பட்டுச் சில தினங்களுக்கு முன்னரே
ஜஹாங்கீரால் விடுவிக்கப்பட்ட அந்த ராஜபுத்திரன், ‘விடுதலைக்கு நான் ஏன் ஒப்புக் கொண்டேன்? இப்பொழுது நான் செய்ய ஒப்புக் கொண்ட பணியைவிட மொகலாயர் சிறையிலேயே மடிந்திருந்தால் உத்தமமாயிருக்குமே’ என்று
தன்னைத் தானே இழிவாகவும் பேசிக் கொண்டான்.
இரண்டு வருஷ காலம் மொகலாயர் சிறையில் பட்ட அவதியை நினைக்க நினைக்க, கலங்காத அவன் நெஞ்சமும் கலங்கியது; எத்தனை இழி பணிகள்! எத்தனை சவுக்கடிகள்… நினைக்கக்கூட நெஞ்சம் திடுக்கிட்டது அவனுக்கு. ஆனால்
ஜஹாங்கீரிடம் தான் செய்ய ஒப்புக் கொண்ட பணியைவிடச் சிறையில் அவர்கள் இட்ட பணிகள் இழிபணிகளா? என்று எண்ணிய ஹரிதாஸ் ஜாலா, ‘இல்லை, இல்லை; ஒரு காலுமில்லை’ என்று திட்டமாகத் தனக்குத்தானே சொல்லிக்
கொண்டான். அவன் விடுதலைக்குப் பரிசாக் ஜஹாங்கீர் விதித்த பணியும் அப்படிப் பெரும் அவமானத்தைத் தரும் பணியன்று. ஜஹாங்கீர் கேட்டதெல்லாம் ஒரு சிறு பொருள். அதை எப்படியாவது மேவார் ராணாவிடமிருந்து கொண்டு
வரும்படி பணித்தார் ஜஹாங்கீர்.
இரண்டு வருஷ காலம் சிறையில் படாத பாடுபட்ட தன்னை, ஆஜ்மீர் அரண்மனையில் எத்தனை அன்புடன் மொகலாய சக்கரவர்த்தி வரவேற்றார் என்பதை நினைக்க நினைக்கப் பாலைவனத்தின் கொடுமையான அந்தச் சூழ்நிலையில்
கூட வியப்பு உள்ளத்தை ஊடுருவிச் சென்றது. ஹரிதாஸ் ஜாலாவுக்கு. சக்கரவர்த்தியைப் பார்க்கும் முன்பு அவருடைய அரண்மனையில் தனக்கு நடந்த ஸ்நானபானங்கள், ஆடை அலங்காரங்கள், பெரும் மன்னர்களுக்குக் கூட
நடக்காது என்பதை அறிந்தான் ஹரிதாஸ் ஜாலா. அரண்மனை ஸ்நான அறையில் பணி மக்கள் ஊற்றிய பன்னீரை விடக் குளுமையான மந்தகாசத்துடன் மொகலாய சக்கரவர்த்தி தன்னை வரவேற்றது அப்பொழுதும் அவன் மனக்கண்
முன்னால் எழுந்தது. இருவருக்கும் நடந்த சம்பாஷணையும் அவன் காதுகளில் ஒலித்தது.
மிருதுவான சுபாவத்தை விளக்கிய சிறந்த அழகு பெற்ற ஜஹாங்கீரின் செவ்விய வதனத்தில் முளைத்துக் கிடந்த கருவிழிகள், எதிரே புத்தாடை புனைந்து நீண்ட வாள் இடுப்பில் தொங்க வீரக்களை சொட்ட நடந்து வந்த
ராஜபுத்திரனைப் பார்த்ததும் கொள்ளை அன்பை உதிர்த்தன. மெல்லிய மீசைக்குக் கீழே பெண் களின் உதடுகளைப் போல மிருதுவாயிருந்த அதரங்கள் மெல்ல விரிந்து, “வீரனே வருக” என்று முகமனும் கூறின. நவரத்தினங்கள் இழைத்த
மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருந்த ஜஹாங்கீரின் வலது கரம் எழுந்து, ‘அங்கே உட்காரலாம்’ என்பதற்கு அறிகுறியாக மிக அருகிலிருந்த ஒரு மஞ்சத்தையும் சுட்டிக் காட்டியது. பெரிய பெரிய ராஜபுத்திரர்களும் எதிர்பார்க்க முடியாத
அத்தனை மரியாதையைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா, சில விநாடிகள் பிரமித்தே போனான். அவன் பிரமிப்பை சக்கரவர்த்தியும் கவனித்ததால் அவர் இதழ்களில் பரவியிருந்த புன்னகை மேலும் விரிந்தது. “பிரமிப்புக்குக் காரணமில்லை;
உட்காரலாம்” என்று சற்று அழுத்தியே சொன்னார் ஜஹாங்கீர்.
“நான் தங்கள் கைதி” என்று சுட்டிக் காட்டிய ஹரிதாஸ் உட்காராமல் நின்று கொண்டே இருந்தான்.
கைதியென்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட போதும் அந்த ராஜபுத்திரன் குரலிலிருந்த திமிரையும் அலட்சியத்தையும் சக்கரவர்த்தி கவனித்தாரானாலும் கவனிக்காதது போல் பாசாங்கு செய்து, “நேற்றுவரை தான் கைதி,
இன்றல்ல” என்று தேனொழுகப் பேசினார்.
ஹரிதாஸ் ஜாலாவின் சந்தேகம் இந்த உபசரனையாலும் இனிப்பான பேச்சினாலும் பன்மடங்கு அதிகமாக உயர்ந்தது. தந்திரத்தில் இணையற்றவர் என்று ஜஹாங்கீர் பெயர் பெற்றிருந்ததை அறிந்திருந்த ஹரிதாஸ் ஜாலா, ஏதோ
காரியார்த்தமாகவே ஜஹாங்கீர் தன்னைச் சரிகட்டப் பார்க்கிறார் என்று முடிவுகட்டிக் கொண்டதால், “திடீரென்று இந்த அடிமை மீது இத்தனை அன்பு பிறக்க என்ன காரணம்” என்று வினவினான்.
சற்று முரட்டுத்தனமாகவே எழுந்த அந்தக் கேள்வியில் ஒலித்த கசப்பைக் கவனிக்கத் தவறாத ஜஹாங்கீர், “அன்பு மெள்ள மெள்ள முளைப்பதில்லை. திடீரென்று தான் ஏற்படுகிறது. அதுவும் ஆசையைப் போல் தான்” என்றார்
சாவதானமாக!”
“அப்படியா!”
“ஆம். அழகான மலரைப் பார்க்கிறோம். திடீரென்று ஆசை பிறக்கிறது, ஓர் அழகான பெண்ணைப் பார்க்கிறோம். திடீரென்று அன்பும் பிறக்கிறது. அன்பும் ஆசையும் முளைப்பது சில விநாடிகளில்தான். அவற்றுக்கும் காலமும்
யோசனையும் தேவையில்லை.
“தங்களுக்கு இப்பொழுது முளைத்திருப்பது அன்பா, ஆசையா?”
“இரண்டுந்தான்.”
“புரியவில்லை எனக்கு…”
“உன்மேல் அன்பு பிறந்தது. அதற்குக் காரணம் வேறொரு பொருளின் மேல் பிறந்த ஆசை” என்று விளக்கினார் சக்கரவர்த்தி.
அப்பொழுதும் தில்லியின் அதிபர் சொன்னது புரியாத புதிராகவேயிருந்தது ஹரிதாஸ் ஜாலாவுக்கு. குழப்பம் மிகுந்த பார்வையை ஜஹாங்கீர் மீது நாட்டினான் அவன். அந்தப் பார்வையில் குழப்பம் மட்டுமல்ல, பெரும் சந்தேகமும்
கலந்து நிற்பதைக் கவனித்த ஜஹாங்கீரின் முகத்தில் அதுவரை விகசித்திருந்த புன் முறுவல் மறைந்து, அது இருந்த இடத்தைத் தீவிர சிந்தனை சூழ்ந்து கொண்டது. அப்படிச் சிந்தித்த வண்ணம் கேட்டார் ஜஹாங்கீர், “ராஜபுதனத்துக்குத்
தற்சமயம் வேண்டுவது என்ன?” என்று.
இந்தக் கேள்வியால் ஹரிதாஸ் ஜாலாவின் முகத்தில் பெரும் சந்தேகச் சாயை படர்ந்தது. “ஏன் கேட்கிறீர்கள் அதை?” என்று வினவினான் அந்த வீரன்.
“காரணமாகத்தான் கேட்கிறேன்” என்றார் ஜஹாங்கீர், ஆழ்ந்த சிந்தனையிலிருந்து விடுபடாமலே.
“வெற்றி” என்று பதில் சொன்னான் ஹரிதாஸ் ஜாலா.
அதுவரை சிந்தனையில் சிக்கிக் கிடந்த ஜஹாங்கீரின் நுதற் பிரதேசம் திடீரென ஒளிபெற்ற தன்றி, “இல்லை “ என்று அவர் உதடுகளிலிருந்து திட்டமாகச் சொல்லொன்றும் உதிர்ந்தது.
‘ராஜபுதனத்துக்குத் தேவை வெற்றி இல்லையா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
“இல்லை” மீண்டும் உறுதியுடன் வந்தது சக்கரவர்த்தியின் பதில்.
“வேறென்ன வேண்டும்?” துணிவுடன் கேட்டான் அந்த ராஜபுத்திர வீரன்.
“அமைதி” இந்தச் சொல்லை மிகுந்த நிதானத்துடன் சொன்ன ஜஹாங்கீர், ஹரிதாஸ்மீது தமது அழகிய கண்களை நாட்டிக்கொண்டு மேலும் பேசி னார். “இல்லை ஹரிதாஸ்! இல்லை. ராஜபுதனத்துக்குத் தற்சமயம் வேண்டுவது வெற்றி
அல்ல, அமைதி தான் தேவை. ராணா பிரதாபசிம்மன் பிடிவாதத்தால் மேவாரின் பெரும் நகரங்கள் அழிந்து விட்டன. அவர் மகன் இன்றைய ராணா அமரசிம்மனாலும் இணையற்ற நாசமும் துன்பமுமே விளைந்திருக்கிறது ராஜபுதனத்துக்கு,
இது வரை எனக்கும் அவருக்கும் பதினான்கு போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. பதினான்கு போர்களிலும் அவருக்கு வெற்றிதான் ஆனால் அந்த வெற்றிகள் பெரும் நாசத்தின் அஸ்திவாரத்தில் எழுந்தவை ஆகவே நிலைக்காத வெற்றிகள்
தவிர மொகலாய சாம்ராஜ்யத்தின் பெரும் சக்திக்கு எதிராக மேவார் அதிக நாள் நிலைப்பதும் நடவாது. கடந்த போர்களில் சிசோதய வம்சத்தின் பெரும் படைத் தலைவர்கள் மாண்டு விட்டார்கள். அதன் உபகிளையில் பிறந்து பெரும்
சைனியங்களை நடத்தவல்ல நீயும் என்வசம் கைதியாகி விட்டாய். இந்த நிலையில் எத்தனை நாள் மேவார் எதிர்த்து நிற்க முடியும்? எதிர்த்து நின்றாலும் மக்களின் அழிவு, உணவின் கோர நிலை இவற்றைத் தவிர்க்க முடியுமா? முடியாது;
ஒருகாலும் முடியாது. வீணாக மக்கள் சேதத்தை விளைவிப்பது விவேகமல்ல. இப் பொழுது ராஜபுதனத்துக்குப் போருமல்ல வெற்றியுமல்ல; அமைதிதான் வேண்டும்.
சக்கரவர்த்தி இப்படி விடுவிடுவென்று பேசிக் கொண்டே போனவர் சட்டென்று பேச்சை நிறுத்தி மஞ்சத்திலிருந்து எழுந்து ஹரிதாஸை நெருங்கி, “ஹரிதாஸ்! அந்த அமைதியை நான் அளிக்க முடியும்” என்றும் மெள்ளக் கூறினார்.
“பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று வினவினான் ஹரிதாஸ் ஜாலா.
“ஒரு பொருளை எதிர்பார்க்கிறேன்.”
“என்ன பொருள் அது!”
“ஒரு பெரும் ரத்தினம்.”.
“மாணிக்கமா?”
“ஆம். நாகரத்தினம். ‘நாக தீபம்’ என்று அது அழைக்கப்படுகிறது.”
“எங்கிருக்கிறது?”
“மேவார் ராணாவிடம்”
இதைக் கேட்ட ஹரிதாஸ் ஜாலா, வியப்பு மிதமிஞ்சி நின்ற பார்வையொன்றை ஜஹாங்கீர் மீது செலுத்தினான். கேவலம் ஒரு நா கரத்தினக் கல்லுக்காகப் போரையே நிறுத்த ஜஹாங்கீர் தயாராயிருப்பாரென்று நம்பவே முடியவில்லை
அவனால்.
“அந்த நாகரத்தினக் கல்லைக் கொண்டு வந்தால் போரை நிறுத்திவிடுவீர்களா?” என்று சந்தேகம் குரலில் பூரணமாகத் தொனிக்க வினவினான்.
“ஆம்” என்று திட்டமாக அறிவித்தார் சக்கரவர்த்தி.
“தங்களிடம் நவரத்தினங்களுக்குக் குறைவா?”
“இல்லை”
“பின் அந்த நாகரத்தினம் எதற்கு?”
“நூர்ஜஹான் விரும்புகிறாள்.”
இதைக் கேட்டதும் ஹரிதாஸ் ஜாலாவின் சந்தேகம் சிறிது விலகியது. நூர்ஜஹானைத் திருப்தி செய்ய சக்கரவர்த்தி எதையும் செய்வார் என்பதை பாரதமே அறிந்திருந்ததால் ஹரிதாஸ் ஜாலா ஜஹாங்கீர் சொன்னதை ஓரளவு நம்பவும்
முற்பட்டான். ஆனால் போயும் போயும் செல்வத்தையெல்லாம் இழந்து திண்டாடும் ராணா அமரசிம்மனிடம் இருக்கக்கூடிய நாகரத்தினத்தை எதற்காகக் கேட்கிறாள் நூர்ஜஹான்? மொகலாயச் சக்கரவர்த்தினி விரும்பினால் உலகத்
திலுள்ள அத்தனை சிறந்த ரத்தினங்களும் அவள் காலடியில் வந்து விழுமே! என்று எண்ணிய ஹரிதாஸ் ஜாலா, அதில் ஏதோ ஆழ்ந்த மர்மமிருக்கிறது என்பதை மாத்திரம் புரிந்து கொண்டான். நாகரத்தினத்துக்கு நாகதீபம் என்று ஏன்
பெயர் வந்தது என்பது புரியாத தன்றி, ராணாவிடத்திலிருக்கும் அந்த ரத்தினத்தைப் பற்றி தனக்கே தெரியாதிருக்க நூர்ஜஹானுக்கு எப்படித் தெரிந்தது என்பது விளங்கவில்லை அந்த ராஜபுத்திர வீரனுக்கு. ஆனால் ஒன்று மட்டும்
தெளிவாக விளங்கியது அவனுக்கு. நாகரத்தினத்துக்காக ஜஹாங்கீர் போரை நிறுத்துவதானால் அந்த நாகரத்தினத்திடம் கல்லின் சிறப்பைவிட வேறு ஏதோ சிறப்பும் இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா.
அத்தகைய சிறப்புடைய நாகரத்தினத்தைத் தான் கேட்டால் ராணா கொடுப்பாரா என்ற சந்தேகமும் எழவே ஜஹாங்கீரை ஏறெடுத்து நோக்கிய அந்த வாலிப வீரன். “நாகதீபத்தை நான் கேட்டால் ராணா கொடுப்பாரா?” என்று வினவினான்.
“கொடுத்தாலும் கொடுக்கலாம். அதற்காக நான் போரையே நிறுத்துகிறேனல்லவா?” என்றார் ஜஹாங்கீர்.
“கொடுக்காவிட்டால்?”
“கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு.”
“திருடச் சொல்கிறீர்களா?”
“அவசியமில்லை. காவலாளிகள் வெட்டிப் போட்டு வீரத்துடனும் எடுத்து வரலாம். முறையை உனக்கு விட்டு விடுகிறேன்.
“இந்தப் பணிக்கு நான் ஒப்பாவிட்டால்?”
“மீண்டும் சிறைக்குச் செல்லலாம்” என்ற ஜஹாங்கீர், “ஹரிதாஸ்! நீ வாலிபன் இதுவரை போரிலும் சிறையிலும் வாழ்க்கையைச் செலவழித்திருக்கிறாய். இனியும் அந்த வாழ்க்கை வேண்டாம் உனக்கு சுகப்படப் பார்” என்று அன்பு
ததும்பும் குரலில் சொன்னார். ஹரிதாஸ் ஜாலா நீண்ட நேரம் சிந்த னையில் ஆழ்ந்தான். திடீரென அவன் மனத்தில் ஓர் எண்ணம் உதயமாகவே சக்கரவர்த்தியை ஏறெடுத்து நோக்கினான். “நாகதீபத்தைக் கொண்டு வருகிறேன்” என்று
உறுதியுடன் கூறவும் செய்தான்.
“உன் வாளின் மேல் ஆணை வை” என்றார் ஜஹாங்கீர்.
நாகதீபத்தைக் கொண்டு வருவதாகப் பிரதிக்ஞை செய்து கிளம்பிய ஹரிதாஸ் ஜாலா, ஆஜ்மீரிலிருந்து ஹாராவளி மலைத் தொடரை நோக்கிச் சென்றான். இடையே பாலைவனத்தில் அகப்பட்டுத் தத்தளித்த அந்தச் சமயத்தில்
ஜஹாங்கீருடன் தனக்கேற்பட்ட பேட்டியையும் தான் மேற்கொண்ட பணியையும் எண்ணிப் பார்த்தான்.
எண்ண எண்ண அவன் இதயத்தில் வெறுப்பே ஏற்பட்டது. ‘இழியணிதான். ஆனால் என் இஷ்டப்படி நடந்தால் ராஜபுதனத்துக்குப் பெரும் லாபம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே மீண்டும் புரவியைத் தூண்டி நடத்த முற்பட்ட
அவன், திடீரென்று தனக்குப் பின்னால் பெரும் ஆரவாரம் கிளம்புவதைக் கேட்டுப் புரவியை சற்றே நிறுத்தித் திரும்பினான். சிறிது தூரத்திலிருந்த மணல் சரிவில் அம்பாரியிட்ட ஒட்டகமொன்று அழகியொருத்தியைத் தாங்கிக்கொண்டு
காற்றினும் கடுகி வந்து கொண்டிருந்தது அதைத் தொடர்ந்து புரவி வீரர் பலர் விரைந்து கொண்டிருந்தார்கள். அடுத்தகணம் ஹரிதாஸ் ஜாலா அந்தத் திசையை நோக்கித் தன் புரவியைத் திடீரெனத் திருப்பினான். திரும்பியது அவன்
புரவி மட்டுமல்ல, விதி அதைவிட வேகமாகத் திரும்பியது.

Previous articleCheran Selvi Ch53 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here