Home Historical Novel Naga Deepam Ch10 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch10 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

57
0
Naga Deepam Ch10 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch10 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch10 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 10. புது முறைகள்

Naga Deepam Ch10 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

ஒண்டாலா சமவெளியின் ஆரம்பத் தோப்பிலிருந்து மாஜபுத்திரியுடனும் ஜயன் சந்தாவத்துடனும் அன்றிரவின் இரண்டாம் ஜாமத்தில் கிளம்பிய ஹரிதாஸ் ஜாலா ,தன் புரவியை நடத்திய வண்ணமே மீண்டுமொரு முறை வறண்ட
சிரிப்பு ஒன்றை உள்ளுக்குள்ளேயே உதிரவிட்டுக் கொண்டான். இந்தக் கதையின் ஆரம்பத் தில் சூரிய உஷ்ணம் மிஞ்சிக் கிடந்த நேரத்தில் பாலைவனத்து மணல் வெளியில் உதிர விட்ட பெரும் சிரிப்புப் போன்றதே இச்சிரிப்பும் என்றாலும்,
இரண்டுக்கும் பல விஷயங்களில் வித்தியாசம் இருக்கிறது. அப்பொழுது அவன் உதிரவிட்டது பொறுப்பற்ற பெரும் சிரிப்பு. தன் வறண்ட வாழ்க்கை அஸ்தமித்து விட்டாலும் பாதகமில்லை என்ற துணிவில் வாழ்வைவிட மானத்தை
விரும்பிய வெறுப்புக் கலந்த சிரிப்பு அது. ராஜபுதனத்தின் பெரும்படைத் தலைவன் ஜஹாங்கீரின் தூதனாகிவிட்ட பிறகு, அதுவும் மேவார் குலச் சொத்தான நாகதீபத்தைக் கொண்டுவர வாளின் மேல் ஆணைவைத்த நிலை வரையில்
கீழே இறங்கி விட்ட பிறகு, எது எப்படிப் போனால் என்ற நினைப்பால் ஏற்பட்ட அலட்சிய சிரிப்பு அது. ஆனால் ஒண்டாலா சமவெளியின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு ஏற்பட்ட சிரிப்பு பொறுப்பற்றதல்ல. இகழ்ச்சித்
தன்மையும் உடையதல்ல. விதியின் விளையாட்டை எண்ணி ஏற்பட்ட வைராக்கியச் சிரிப்பு; உள்ளத்தை ஊடுருவிச் சென்றது. முந்திய சிரிப்பைப் போல் வாய் விட்டு வெளிவராத சிரிப்புதான். ஆனால் உள்ளுக்குள் உதிர்த்த அந்தச் சிரிப்பு
அவன் இதயத்துக்கருகே பெரும் இரைச்சலைக் கிளப்பியது. வாழ்க்கையை வெறுத்தவனுக்கு எதிர்பாராதபடி வாழ்வும், வாழ்வை வளப்படுத்த ஒரு மனைவியும் கிடைத்ததை எண்ணிச் சிரித்த அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து பற்பல
எண்ணங்களும் அவன் மனதிலே எழுந்து உலாவின. வாழ்வும் மனைவியும் கிடைத்த சமயமும் முறையும் அவனுக்குப் பெரும் விசித்திரமாகவும் விபரீதமாகவும் தெரிந்தன. இதே வாழ்வும் மனைவியும் ஜஹாங்கீரின் தூதனாவதற்கு
முன்பு கிடைத்திருந்தால் வாழ்வுக்கும் அர்த்தமிருக்கும். மனைவிக்காக மானத்தையும் எதிர்நோக்கிப் போரிட்டிருக்கலாம். இப்பொழுது இரண்டும் கிடைத்தும் என்ன பயன்?’ என்று தன்னைத் தானே அவன் கேட்டுக் கொண்டான்.
அனுபவிக்க முடியாதவனுக்கு அஷ்ட ஐசுவரியம் கிடைத்தால் எப்படிப் பயனில் லையோ அப்படியே வாழ்வும் மனைவியும் தனக்கு அச்சந்தர்ப்பத்தில் பயனற்றவை என்று நினைத்த ஹரிதாஸ் ஜாலா, அனுபவிக்க முடியாத
நிலையையும் ஏற்படுத்தி அனுபவத்துக்கான வசதிகளையும், அளித்த விதியின் விந்தைக் கரங்களை எண்ணி வியந்தான். அந்த வியப்பே அவன் உள்ளத்தில் நகைப்பாக உருவெடுத்தது.
அப்படித் தன் விசித்திர நிலையை எண்ணி நகைத்துக் கொண்டே புரவியை நடத்திக் கொண்டு தன்னைவிட்டுச் சற்று விலகியே சென்ற ஹரிதாஸ் ஜாலாவை, மற்றொரு புரவியில் வந்து கொண்டிருந்த ராஜபுத்திரி இரண்டொரு
முறைக் கடைக் கண்ணால் நோக்கினாள். அவளும் தன் நிலையை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாள். அந்த நகைப்பில் வறட்சி இல்லை, வெறுப்பு இல்லை; கோபம் மிதமிஞ்சிக் கிடந்தது. கோபத்தின் இடையிடையே வேறோர்
இன்ப உணர்ச்சியும் குறுக்கிட்டது. ஆனால் மனம் மீண்டும் மீண்டும் ஒதுக்கித் தள்ள கோப நகையை மட்டும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். அந்தக் கோபம் தன்னைப் பற்றியதா, தன் பாட்டனாரைப் பற்றியதா, ஹரிதாஸ்
ஜாலாவைப் பற்றியதா என்று தீர்மானிக்க மட்டும் அந்த அழகியால் முடியவில்லை. அந்த மூவர் மீதும் அவளுக்குக் கோபம் இருக்கிறது. சற்று தூரத்தே வந்த ஹரிதாஸ் ஜாலா அத்தனை சம்பவங்களுக்குப் பின்பும் திடமாகவும்
அலட்சியமாகத் தலையைச் சற்று கர்வத்துடன் தூக்கிக் கொண்டு புரவியில் அமர்ந்து சென்ற விதத்தைக் கடைக்கண்ணால் கண்ட அவள் அவன் மீது சீற்றம் கொண்டாள். மொகலாய மன்னன் தூதரான இவர் உண்மையான
ராஜபுத்திரனாயிருந்தால் தன் நிலையை எண்ணி வெட்கித் தலை குனிய வேண்டும். அப்படி ஏதுமில்லாமல், போருக்குச் சென்று வெற்றியுடன் தலை நகருக்குத் திரும்பும் அரசனைப் போல் எத்தனை அகங்காரத்துடன் புரவியில்
உட்கார்ந்திருக்கிறார்?’ என்று எண்ணினாள். இத்தகைய ஒரு வெட்கங் கெட்ட ராஜ புத்திரருடன் அடிக்கடி பாட்டனார் எதற்காகச் சகஜமாகச் சம்பாஷித்துக் கொண்டு வருகிறார். இவர். எதிரியின் கையாள் என்பதை அறிந்தும் வாளைப்
பிடுங்கிக் கொண்டு எனது வீரர்கள் வசம் இவரை ஒப்படைத்திருக்கலாமே. அப்படியின்றி இவர் வசம் என்னையும் என் வீரர்களையும் ஒப்படைத்து எத் தனை சகஜமாகப் பேசிக் கொண்டு வருகிறார்! ராஜ புதனப் பிதாமஹருக்கும்
சுரணை கெட்டுவிட்டதா என்ன?’ என்று அவர்மீதும் சீற்றத்தைப் பெருக்கவிட்டாள். இத்தனையிலும் அவள் மனம் அடிக்கடி ஹரி தாஸ் ஜாலாவைச் சுற்றிச் சுற்றி அலைந்தது. கண்கள் மீண்டும் மீண்டும் அவனிருந்த இடத்தை நாடின.
‘எதற்காக இவரைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன். என்ன அப்பேர்ப்பட்ட சுதந்தர வீரர் இவர்? எனக்கும் சுரணை கெட்டுவிட்டதா? இல்லை; கண்ணை வேண்டுமென்றே புத்தி அந்த திசைக்குத் திருப்புகிறதா? வெட்கம்! வெட்கம்! என்ன
புத்தி இது!’ என்று தன் மீதும் தன் புத்திமீதும் சீற்றம் கொண்டு உள்ளூரக் கோப நகை நகைத்தாள்.
அந்தச் சமயத்தில் ஹரிதாஸ் ஜாலாவிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டே புரவியில் சென்று கொண்டிருந்த ஐயன் சந்தாவத்தும் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டார். அந்த நகைப்பு மற்ற இருவர் நகைப்பைப் போன்றதல்ல.
அதில் இரு குழந்தைகளைப் பற்றிய அன்பு இருந்தது, ராஜபுதனத்தின் க்ஷேமத்துக்கு அந்த இரு குழந்தைகளின் சேர்க்கை எத்தனை அத்தியாவசியமானது என்ற நினைப்பு இருந்தது. வழியும் வசதியும் கிடைத்தால் எந்த மனிதனும்
மாறிவிடுவான் என்ற எண்ணமும் இருந்தது. ஒருவருடன் ஒருவர் உறவு கொள்ளும் உரிமையுள்ள ராஜபுத்திரிக்கும் அந்த ஜாலா வம்ச வாலிபனுக்கும் வழியும் வசதியுமிருந்தால் – அவர்கள் உறவுடன் இணைய அதிக நாளா காது என்று
தீர்மானித்தார், மனித உணர்ச்சிகளை எடை போடுவதில் நிகரற்ற ஜயன் சந்தாவத். அந்த நள்ளிரவிலிருந்து ஒண்டாலாக் கோட்டைக்குப் போக இருந்த ஒன்றரை நாள் அந்தத் தம்பதிகளுக்குப் பல வழிகளையும் வசதிகளையும் காட்டும்
என்பதிலோ அவற்றின் விளைவாக அந்த இருவர் மன நிலையும் மாறும் என்பதிலோ அந்த மகா வீரனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லாதிருந்தது. அப்படி உறுதி கொண்டிருந்தவர் பயணத்தின் இடை இடையே ராஜபுத்திரியையும்
ஹரிதாஸ் ஜாலாவையும் ஓரக் கண்ணால் கவனித்தார். ராஜபுத்திரியின் கண் கள் அடிக்கடி ஹரிதாஸ் ஜாலாவைக் கவனித்ததையும், பிறகு அவள் தலை கோபத்துடன் வேறு திசையில் திரும்பியதையும் கண்ட அவர், அந்தக் கோபத்தின்
அடிப்படை காதல் என்று சந்தேகமற உணர்ந்து கொண்டார். ஹரிதாஸ் ஜாலா புரவி மீது திடமாக உட்கார்ந்திருந்தாலும் அவன் உடலில் அநாவசியமாக ஒரு விறைப்பு இருந்ததையும், தலை தூக்கியிருந்த அலட்சியத்திலும் சிறிது சங்கடம்
கலந்திருந்ததையும் கவனித்த ராஜபுதன பிதாமஹர் உள்ளே எழுந்த அன்பு உணர்ச்சிகளை உடைக்க அந்த வீரன் பெரும்பாடுபடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டார். இப்படி அந்த வாலிபப் பருவத்தினர் இருவரும் படும் அவதியைக்
கண்டு உள்ளுக்குள் நகைத்துக் கொண்டார் ஜயன் சந்தாவத். இதன் முடிவு இந்த இருவர் சேர்க்கைதான். அந்தச் சேர்க்கை மீண்டும் ராஜபுதனத்துக்குப் படைத் தலைவனை அளிக்கும்; சந்தேகமே இல்லை என்று எண்ணி “வாலிபத்தின்
வேகத்தில் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றன” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு சிரித்தார் ராஜபுதனத்தின் பிதாமஹர்.
இப்படி அந்த மூவரும் மூவகைச் சிரிப்பு சிரித்துக் கொண்டு பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு இலக்காகி இரவின் நான்காம் ஜாமம் வரை பயணம் செய்தபோது, ராஜபுத்திரி மட்டும் ஏதும் பேசாமல் வந்தாலும் ஜயன் சந்தாவத்தும்
ஹரிதாஸ் ஜாலாவும் சம்பாஷித்துக் கொண்டு சென்றனர். அந்த சம்பாஷணையிலிருந்து பல விஷயங்கள் புரிந்து கொண்டாலும் அவருக்குப் புரியாத ஒரு மர்மம் ஊடுருவி நின்றது. அவர் எதிர்பாராத பதில்களையெல்லாம் ஹரிதாஸ்
ஜாலா தினையளவும் சிந்திக்காமல் பட்பட்டென்று சொன்னான். ஆனால் அத்தனை தெளிவான பதில்களிலும் ஏதோ ஒன்று மறைந்து கிடப்பதை அறிந்த ஜயன் சந்தாவத், அது என்ன என்பதை அறியாமல் திணறினார். அவனை எடை
போட மெள்ள மெள்ளக் கேள்விகளை வீச முயன்ற ஜயன் சந்தாவத், அவன் பதில்கள் தயக்கமின்றி வருவதைக் கண்டு பிரமிப்பே ஆரம்பத்தில் அடைந்தார். வாளின் மேல் ஆணையிட்டு வந்திருக்கும் அந்த வாலிய வீரனிடம் ஜஹாங்கீரைப்
பற்றி அதிகமாக எதுவும் அறிந்து கொள்ள முடியாதென்ற நினைப்பிலேயே பேச முற்பட்டு, “ஹரிதாஸ்! நீ மொகலாயர் வட்டாரத்தைவிட்டுக் கிளம்பி எத்தனை நாளாகிறது?” என்று வினவினார் முதலில்.
“இரண்டு நாட்கள் ஆகிவிட்டன” என்று பதில் சொன்னான் ஹரிதாஸ்.
“மொகலாயர் இருக்குமிடத்திற்கும் ஒண்டாலா சமவெளியின் ஆரம்பத்திற்கும் ஒரே நாள் பயணம் தானே இருக்கிறது?” என்று மீண்டும் வினவினார் அவர்.
“ஆம்”
“அப்படியானால் இரண்டு நாட்கள் ஆகக் காரணம்?”
“தூது போக ஜஹாங்கீரிடம் ஒப்புக்கொண்டேன்…” என்று ஏதோ பேச்சைத் தொடங்கி முடிக்காமல் விட்டான் ஹரிதாஸ்.
“ஆம்; ஒப்புக் கொண்டாய்.”
“ஆனால் அன்று ஜஹாங்கீர் பணியைச் சொன்னாரே தவிர, அதற்கான அடையாளமோ லிகிதமோ எதுவுமே தரவில்லை.”
“அதற்காக ஒரு நாள் தங்கினாயா?”
“ஆம். தங்கினேன்.”
“பிறகு கிடைத்ததா உனக்கு வேண்டியது?”
“கிடைத்தது.”
“என்ன கிடைத்தது?”
“ஜஹாங்கீரின் முத்திரை மோதிரம்.”
“அது எதற்காக?”
“நான் ஜஹாங்கீரின் தூதுவன் என்பது தெரிய வேண்டுமல்லவா?”
“அதற்கு ராஜமுத்திரையுடன் கூடிய லிகிதம் போதுமே.”
“போதும்.”
“லிகிதம் கிடைத்ததல்லவா?”
“இல்லை”.
“ஏன்?”
“இரண்டாம் முறை யோசித்தபோது லிகிதம் அவசியமில்லையெனத் தீர்மானித்தேன்.”
“லிகிதமின்றி ராணா உன் தூதை ஒப்புக்கொள்வாரா?”
“ஒப்புக் கொள்வார்.”
“எப்படி?”
“தூதன் என்பதற்கு அடையாளமாக முத்திரை மோதிரமிருக்கிறது கையில், தூது இருக்கிறது நாவில்.”
ஜயன் சந்தாவத் சில விநாடிகள் மௌனமாயிருந்தார். பிறகு அழைத்தார் அந்த வீரனை, “ஹரிதாஸ்!” என்று.
ஹரிதாஸின் கண்கள் அவரைத் திடீரென ஏறெடுத்து நோக்கின. அவர் அழைத்த குரலில் பெரும் அர்த்த புஷ்டியிருந்ததாக அவனுக்குத் தோன்றியது.
“ஏன் பிதாமஹரே?” என்று கேட்டான் அவன்.
“உன் வம்சத்தார் சத்திய சந்தர்கள்…” என்று இழுத்தார் அவர்.
“ஆம்.”
“நீயும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.”
“இதுவரை நான் பொய் சொன்னதில்லை.”
“அப்படியானால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல். ஜஹாங்கீரின் முத்திரை மோதிரத்தை அடையாளம் தேவை என்பதற்காகத்தான் ஒரு நாள் தங்கிப் பெற்றாயா?”
“ஆம்”
“அந்த அடையாளத்தை இந்தத் தூதுக்கு மட்டும் தான் பயன்படுத்த நினைத்தாயா?” இந்தக் கேள்வியைச் சரேலென அம்புபோல் வீசி, அம்பினும் கூரிய கண்களை ஹரிதாஸ் ஜாலா மீது நாட்டினார் ஜயன் சந்தாவத்.
ஹரிதாஸ் ஜாலாவின் விழிகள் ஈட்டிக் கண்களுடன் தைரியத்துடன் கலந்தன. “இல்லை” என்ற பதில் அந்த வீரனிடமிருந்து மிகத் தெளிவாகவும் பளீரென்றும் வெளி வந்தது.
அதைக் கேட்ட ஜயன் சந்தாவத்தின் முகத்தில் பெரு மகிழ்ச்சி படர்ந்தது. இதழ்களில் புன்முறுவல் தோன்றியது. “ஹரிதாஸ்! நீ குலத்துக்கேற்ற பிள்ளை. உண்மையை உரைத்தாய். நீ முத்திரை மோதிரம் பெற்ற காரணங்களில் ஆஜ்மீரிலுள்ள.
ஜஹாங்கீர் படை பலத்தை அறிவதும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியுமா?” என்று வினவினார் ஜயன் சந்தாவத்.
ஹரிதாஸ் ஜாலாவின் உள்ளத்தில் வியப்பு பெரிதும் எழுந்தது. சில கேள்விகளுக்குள்ளாகவே தன் அந்தரங்கத்தை அவர் புரிந்து கொண்டுவிட்டதை அறிந்த ஹரிதாஸ் ஜாலா, ஜயன் சந்தாவத்தின் கூரிய அறிவை நினைத்துப் பெருமிதம்
கொண்டான். இத்தகைய பிதா மஹர் ராஜபுதனத்தில் இருக்கும் வரை ராஜபுதனத்தை ஆயிரம் ஜஹாங்கீர்கள் வந்தாலும் வெற்றி கொள்ள முடியாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட உவகை குரலில்
தாண்டவமாட வெளி வந்தது அவன் பதில். “முத்திரை மோதிரம் பெற்றதற்கு நீங்கள் சொன்னதும் ஒரு காரணம்” என்றான் ஹரி தாஸ்.
“ஜஹாங்கீரின் படைபலம் இப்பொழுது எவ்வளவு?” என்று வினவினார் ஜயன் சந்தாவத்.
“சுமார் இருபதனாயிரம் பேர் காலாட்படை, ஐயாயிரம் குதிரைப்படை, பீரங்கிப் படை ஆயிரம்’ என்று பதில் கூறினான் ஹரிதாஸ்.
“பலமான படைதான். ஆனால் ராஜபுதனத்தின் படையைவிடப் பெரிதல்ல.”
“பெரிதல்ல, இருந்தாலும் வலுவுடையது.”
“எப்படி?”
“ஜஹாங்கீரின் பீரங்கிகளை – இயக்குபவர்கள் வெள்ளைக்காரர்கள்.”
“இருந்தாலென்ன?”
“ஒவ்வொரு பீரங்கியும் நமது படைப்பிரிவு ஒன்றை அழிக்கும் திறனுள்ளது.”
“எதிரி தூதனென்பதால் அவர்களைப் புகழ்கிறாயா?”
“இல்லை. எதிரியின் பலத்தைச் சரியாக உணர்ந்து கொள்வது எந்தப் படைத்தலைவனுக்கும் அவசியம் என்பதால் உள்ள நிலையைச் சொல்கிறேன்.”
“அப்படியானால் ராஜபுதனம் ஜெயிக்காதா?”
“ஜெயிக்கும். சில வசதிகளைச் செய்து கொண்டால்”.
“என்ன வசதி?”
“பீரங்கி வசதி. நாமும் பீரங்கிப் படையைப் பலப்படுத்த வேண்டும்.”
“ராஜபுத்திரர்கள் வாளைத்தான் நம்புகிறார்கள்.”
“போதாது.”
“ஏன்?”
“காலம் மாறுகிறது. வாளைவிடப் பலமான ஆயுதங்கள் வந்துவிட்டன.”
“அப்படியானால் வாளைத் துறக்க வேண்டுமா?”
“தேவையில்லை. படைகள் நெருங்கிப் போராடும் போது வாள் தேவை. நெருக்கு முன் தொலைவிலிருந்து விளையும் சேதத்தைத் தடுக்கவோ, எதிரிக்குப் பதில் சொல்லவோ பீரங்கிகள் தேவை.” இதைத் திடமாக அழுத்திச்
சொன்னான் ஹரிதாஸ் ஜாலா. அவர் கேட்காமலே தன் கருத்தைச் சொல்லத் தொடங்கிய அந்த வாலிப வீரன், “ராணா பிரதாப் அடைந்த தோல்விகளுக்கும் சித்தூர் சீரழிந்ததற்கும் புது ஆயுதங்களில் நாம் நம்பிக்கை வைக்காததே காரணம்.
சித்தூரின் இணையற்ற வீரர்களான ஜெய்மல்லும், பட்டாவும் அழிந்தது எதனால்? சித்தூர் கோட்டை. படுதூளானது எதனால்? எல்லாம் பீரங்கிக் குண்டுகளால். காலத்துடன் ராஜபுதனம் மாறவில்லை. போர்களின் படிப்பினையை
உணரவில்லை. அதனால் வந்த வினை இது. இல்லையேல் ராஜபுதனம் இந்த நிலையில் இராது. மொகலாயர் ராஜபுதனத்தின் பக்கத்தில் வந் திருக்க முடியாது. ராஜபுத்திரரிடம் ராஜபக்தியிருக்கிறது. தேசபக்தியிருக்கிறது. இணையற்ற வீர
உணர்ச்சி இருக்கிறது. இவை இருந்தும் வெற்றியில்லையென்றால், காரணம் புது முறைகள், புது ஆயுதங்கள் இல்லை. புது முறைப் போர்த் தந்திரங்களும் இல்லை. பண்டையப் போர் முறை, பண்டைய ஆயுதங்கள் எல்லாம் பழைமை”
என்றான் அலுப்புடன்.
“பழைமையில் நம்பிக்கை இல்லையா உனக்கு?” என்று ஜயன் சந்தாவத் கேட்டார்.
“இருக்கிறது. அதைப் புதுமையுடன் பிணைக்க வேண்டும்” என்றான் ஹரிதாஸ்.
“உனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் பிணைப்பாயா?”
“பிணைப்பேன்.”
“அதற்குப் பொறுப்பளித்தால் ஏற்கத் தயாராயிருக்கிறாயா?”
“தற்சமயம் தயாராயில்லை.”
ஜயன் சந்தாவத் இதற்குப் பிறகு ஒரே கேள்வி கேட்டார்.
“நீ வந்த காரணம் என்ன?” என்று வினவினார் திடீரென்று திடமான குரலில்.
“சொல்வதற்கில்லை.” அதை விடத் திடமாக வந்தது ஹரிதாஸின் பதில்.
இந்தப் பதில் ராஜபுத்திரியின் காதில் தெளிவாக விழுந்தது. அவன் மீது அவளுக்கிருந்த வெறுப்பு பன்மடங்காயிற்று. ஜயன் சந்தாவத்தின் இதயத்தில் வெறுப்பு இல்லை. ஆழ்ந்த சிந்தனையுடன் பேசாமல் அவர் பயணம் செய்தார்.
நான்காம் ஜாமத்தின் ஆரம்பத்தில் சமவெளித் தோப்பின் கடைசிப் பகுதி வந்தது. “இங்கு இரவின் மீதியைக் கழியுங்கள்” என்று உத்தரவிட்ட ஜயன் சந்தாவத், வீரர்களில் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டிய
இடத்துக்குப் பயணப்பட்டார். ராஜபுத்திரிக்குக் கூடாரம் அமைக்க வீரர்களுக்கு உத்தரவிட்ட ஹரிதாஸ் ஜாலா புரவியிலிருந்து கீழே இறங்கினான். வீரர்கள் விரைவில் கூடாரத்தை அடித்து முடித்ததும் அதற்குள் சென்று உறங்கும்படி
ராஜபுத்திரிக்கு உத்தரவிட்டான், ராஜபுதனத்தின் அந்த மாஜிப் படைத்தலைவன். அவன் உத்தரவிட்டது அவளுக்கு வேப்பங்காயாக இருந்தது. சீற்றம் மிகுந்த விழிகளை ராஜபுத்திரி அவன் மீது திருப்பினாள்.

Previous articleNaga Deepam Ch9 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch11 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here