Home Historical Novel Naga Deepam Ch13 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch13 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

92
0
Naga Deepam Ch13 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch13 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch13 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13. உண்மையின் கொடுமை

Naga Deepam Ch13 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

ராஜபுத்திரியின் எதிர்பாராத செய்கையால் உணர்ச்சி வசப்பட்டுத் தன் கண்களின் சக்தியை அறவே இழந்துவிட்ட ஹரிதாஸ் பிரமை பிடித்து உட் கார்ந்திருந்தான். தன் தோளைத் தொட்டுக் கழுத்துப் புறமாகத் தவழ்ந்து சுற்றி வளைத்த
கரத்தினாலேயே கருத்தை ஓரளவு இழந்திருந்த ஹரிதாஸ் ஜாலா, அவள் திடீரென தனது இன்னொரு மலர்க்கரத்தையும் வீசித் தன் முகத்தைத் திடீரெனத் திருப்பித் தன்னை உற்றுப் பார்த்ததும் அவன் என்ன செய்வது என்று அறியாமல்
திகைத்தான். அவள் தன் கன்னத்துக்கருகில் தன் கன்னத்தைக் கொண்டு வந்து காதுக்கருகில் சொன்ன அறைகுறை மொழிகள் அவனை ஏதேதோ செய்தன. அவன் முகத்தைத் திருப்பி ஒரு விநாடியே அவனை உற்றுப் பார்த்த ராஜபுத்திரி
திடீரெனத் தனது முதுகுப் புறத்தை அவனை நோக்கித் திருப்பித் தலையையும் குனிந்து கொண்டு உட்கார்ந்தாள். அப்படி அவள் உட்கார்ந்து தலையைக் குனிந்ததால் அவள் தலையில் குடியிருந்த வாசமலர்க் கொத்து அவன்
நாசிக்கருகில் இருந்தது. வாசமலரின் நறுமணம் போதையை அளித்தது அந்த வாலிபனுக்கு. அந்த வாசமலர்க் கொத்தைத் தாங்கி நின்ற கார்மேகக் கூந்தலின் வாசனைத் தைல மணமும் அவன் சிந்தையை மயக்கியது. அந்தக் கார் மேகக்
கூந்தலின் கொண்டைக்குக் கீழே தெரிந்த வெளே ரென்ற கழுத்துப் புறத்திலிருந்தும் உடலின் பரிமளம் எழுந்தது. ஆனால், இந்த மூன்றில் எது அதிக போதையை அளித்ததென்பதை அறிய முடியவில்லை ஹரிதாஸ் ஜாலாவினால்.
வாசமலர் நறுமணம், வாசனைத் தைலத்தின் நறுமணம், அவள் கழுத்தின் சுகந்தம் இந்த மூன்றில் எது சிறந்தது என்பதை ஊகிக்க முடியாமல் திணறினான் அந்த வாலிபன். அந்த மூன்று இடங்களையும் திரும்பத் திரும்ப அவன் கண்கள்
வெறித்துப் பார்த்தன. பாலைவனப் பால் மணலைச் சற்று முன் பார்த்த வெறிப் பார்வையல்ல அது. வேறு ஒருவித வெறி அந்தப் பார்வையில் தெரிந்தது, அந்த வெறிக்கு அவன் இடம் கொடுத்திருந்தால் நடந்திருக்கக் கூடிய கதையே வேறு.
அவள் மலரும், கூந்தலும், கழுத்தும் அடுத்தடுத்து அளித்த விருந்தை அவன் பெரிதும் தடுத்து தேக்க முயன்றான். ஆனால் அவள் நன்றாகக் குனிந்ததால் வளைந்து உயர்ந்த அவள் முதுகு அவன் மார்பின் மீது உராய்ந்து
கொண்டிருக்கவே, அவன் தனது முயற்சியில் பெரும் தோல்வியுற்றான். சற்று முன்பு அவள் தன் உரிமைகளைப் பற்றிச் சுட்டிக்காட்டி, ‘முறைப்படி அழைக்க’ என்று கூறிப் பிறகு முறைப்படி…’ என்று முதலில் தடுமாறியதும்,
கடைசியாகத் தனது காதுக்கருகில் வந்து ‘அணைக்க’ என்ற சொல்லை உதிர்த்து விட்டதையும் நினைத்துப் பெரிதும் அடைந்த தத்தளிப்பை மேலே தவழ்ந்த அவள் மலர்க்கரமும் முகத்தைத் திருப்பிய பூங்கையும், திடீரெனத் திரும்பி
உட்கார்ந்ததால் மார்பில் உராய்ந்த முதுகுப் பகுதியும் இன்னும் அதிகப்படுத்தின. அந்தச் சமயத்திலும் அவன் பேசாமலே உட்கார்ந்து அவளைக் கவனித்தான். தன் கைப் பெட்டியில் பெரும் தனமிருந்தும் அதை அனுபவிக்கக் கொடுத்து
வைக்காத லோபிக்கும் தனக்கும் அந்தச் சமயத்தில் அதிக வித்தியாசமில்லை என்பதை ஹரிதாஸ் ஜாலா உணர்ந்து கொண்டாள், ஆனால் சூழ்நிலை உணர்ச்சிகளின் வேகம் அவனை முழு லோபியாக அடிக்க மறுத்ததால் அவன்
கைகளிரண்டும் அவள் தோள்களைக் கெட்டியாகப் பிடித்தன.
அந்தப் பிடிப்பில் அவள் அசைந்தாள். ஏதோ புதுவித உணர்ச்சி, மின்சாரம் போல் அவள் உடலில் பாய்ந்து சென்றது. மாலை முதல் சற்று முன்புவரை அந்த வாலிபனைக் கசப்புடன் பார்த்த அவள், இதயம் அந்தத் தருணத்தில்
எத்தனையோ இன்ப எண்ணங்களை எண்ணத் தூண்டியது. ‘கை எதற்காக அந்த இடத்திலேயே இருக்க வேண்டும்’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் ராஜபுத்திரி. காதல் சூழ்நிலையில் மனம் சிக்கும்போது புத்திக்கு மறதி பெரிதும்
ஏற்படுகிறது. ராஜபுத்திரி அவனைப் பற்றிய சலனத்தை மறந்தாள். அவன் நாட்டின் துரோகியென்பதை மறந்தாள். சற்று முன்பு தான் அவனை ஏகவசனத்தில் பேசியதை மறந்தாள். அவன் துடுக்குத் தனத்தையும் தன்னை
அதட்டியதையும் மறந்தாள். மறக்காததும் ஒன்றிருந்தது. அந்தச் சமயத்தில் அவன் தன் மணாளன் என்பது. தான் அது.
அவனுடன் தனித்திருப்பது சரிதானா என்று ஒரு கணம் அவள் தனக்குள் சந்தேகத்தை எழுப்பிக் கொண்டாள். அடுத்த கணம், ‘ஏன் இதிலென்ன தவறு என் கணவனுடன் தானே உட்கார்ந்திருக்கிறேன்?’ என்று தனக்குத்தானே சமாதானம்
சொல்லிக் கொண்டாள். அந்தச் சமாதானத்தில் ஒரு பெருமையும் இன்பமும் இருந்தது அவள் இதயத்துக்கு. அத்துடன் ஓர் ஏமாற்றமும் கலந்து கொள்ளவே அவள் சோகப் பெருமூச்சு விட்டாள். பின்னால் உட்கார்ந்திருந்த ஹரிதாஸ் ஜாலா
தோளில் வைத்த கைகளை மேற்கொண்டு அசைய விடவில்லை. ஏதோ மரக்கட்டை போல் உட்கார்ந்திருந்தான். தன் மனத்தைத் தானே வேண்டுமென்று இரும்பாக்கிக் கொண்டு சில விநாடிகளுக்குப் பிறகு தோள்களிலிருந்த
கைகளையும் எடுத்து விட்டான்.
அந்நிலை அவளுக்கு கோபத்தை ஊட்டியதால் அவள் ஏதோ முணுமுணுத்தாள். அந்த முணுமுணுப் பைக் கேட்ட அவன், “ராஜபுத்திரி! என்ன முணுமுணுக்கிறீர்கள்?” என்று வினவினான்.
ராஜபுத்திரி அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். ஹரிதாஸ் ஜாலா அவள் மனோ நிலையை, ஓரளவு உணர்ந்து கொண்டாலும் மேலுக்குக் கேட்டான் “ஏன் பதிலில்லை ராஜபுத்திரி!” என்று.
“கேள்வி சரியில்லை “ கடுமையாக எழுந்தது அவள் சொற்கள்.
“என்ன சரியில்லை?”
“மரியாதை அதிகமிருந்தது!”
“என்ன மரியாதை?”
“முணுமுணுக்கிறீர்கள் என்கிறீர்கள்?”
“முணுமுணுக்கிறாய் என்று கேட்க வேண்டுமா?”
“வேறெப்படிக் கேட்பதாம்.”
“நீங்கள் ராஜபுத்திரி. பிதாமஹரின் பேரப் பெண்…” –
“ஆம், பிறருக்கு.”
“எனக்கு?”
“அதைத்தான் பிதாமஹரே சொன்னாரே.”
ஹரிதாஸ் சில விநாடிகள் மௌனம் சாதித்தான், அவள் தன் மனைவியென்பதை வற்புறுத்தப் பார்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா பிரமித்தான். மாலை முதல் தன்னிடம் எந்த உறவும் கொண்டாட இஷ்டப்படாத
ராஜபுத்திரி, இப்பொழுது மனைவியாக முழு உரிமை கொண்டாட. ஏன் முயலுகிறாள் என்பதை அறியாமல் திணறினான். ‘அப்பப்பா பெண் என்பது பெரும் புதிர்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஆகவே மெள்ளக் கேட்டான் :
“பிதாமஹர் சொன்னது சரிதான். இருப்பினும் என்னிடம் அந்த உறவு முறை கொண்டாட உனக்கு விருப்பமா?” என்று வினவினான் அந்த வாலிபன்.
“எப்படித் தோன்றுகிறது உங்களுக்கு? மற்றவர்களுக்குத்தான் எப்படித் தோன்றும் நாமிருக்கிற நிலையைக் கண்டால்?” என்று கேட்டுச் சிரித்தாள் ராஜபுத்திரி.
மயக்கம் தரும் சிரிப்பு அது! ஆனால் அதற்கு மசியவில்லை ஹரிதாஸ் ஜாலா. அடுத்து அவன் சொற்கள் துயரத்துடன் உதிர்ந்தன. “பெண்ணே! பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது உன்னிடத்தில், ஆனால் அது விரும்பத்தக்கதல்ல” என்றான்
அந்த வாலிப வீரன்.
“என்ன மாற்றத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?” அவள் மென்மையான குரலில் கேட்டாள்.
“முன்பு உன்னிடம் வெறுப்பு இருந்தது.”
“ஆம்.”
“இப்பொழுது விருப்பு இருக்கிறது.”
“ஆம்.”
“முன்பு உன் விழிகள் என்னைக் கண்டு சீறின.”
“ஆம்…”
“இப்பொழுதோ…”
“சொல்லுங்கள்.”
“காதலை உதிர்க்கின்றன.”
“தவறென்ன அதில்?”
அவள் கேள்வி திட்டமாக வந்தது, அவன் பதிலையும் திட்டமாகவே சொன்னான் : “பெண்ணே! ராஜ புதனம் நாளை உன்னைத் தூற்றும். நாட்டின் துரோகியின் பத்தினியென்று மக்கள் பழிப்பார்கள். பார்க்கு மிடங்களிலெல்லாம்
ராஜபுதனத்தின் வீரப் பெண்கள் உன்னைக் கண்டு நகைப்பார்கள். இத்தகைய நிலையை நான் விரும்பவில்லை. பிதாமஹரின் பேரப் பெண், சந்தா வதர்களின் தலைமகளொருத்தி – அத்தகைய இழிந்த வாழ்க்கையை மேற்கொள்வதை நான்
விரும்ப வில்லை. என் உயிர் போனாலும் உன்னை நான் கைப் பிடிக்க மாட்டேன்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
ராஜபுத்திரி மீண்டும் சோகப் பெருமூச்சு விட்டாள். “என்ன அத்தனை அக்கறை உங்களுக்கு என்மீது? நீங்கள் என்னைச் சந்தித்து மூன்று ஜாமங்கள் தானே ஆகின்றன” என்று கேட்டாள் அவள்.
“ஆம்; மூன்று ஜாமங்கள், இல்லை இல்லை; மாலையையும் சேர்த்துக் கொண்டால் மூன்றரை ஜாமங்கள்” என்றான் ஹரி தாஸ் ஜாலாவும்.
“அதற்குள்ளாக என்மீது ஏன் இத்தனை பரிவு?” என்று வினவினாள் அவள்.
இதற்குப் பதில் சொல்லத் தயங்கினான் அவன். சத்திய சந்தனான ஹரிதாஸ் ஜாலாவின் நாக்கில் பொய் எழ மறுத்தது. ஆகவே வழக்கப்படி சத்தியத்தையே பேசினான். அந்தச் சத்தியம் அவனுக்குப் பெரும் சிக்கலைக் கொண்டு வந்து
விட்டது. அவன் காலுக்கும் கைக்கும் இன்னோர் அடிமைத்தளையும் பூண்டது. உண்மை எத்தனை கொடுமையை விளைவிக்கவல்லது என்பதை நினைத்து அவன் சொன்ன உண்மை அவனுக்கு மட்டுமல்ல, ராஜபுத்திரியின்
வாழ்க்கையிலும் பெரும் சிக்கலையும் சங்கடங்களையும் விளைவித்தன. அடுத்த சில நாட்களில் அந்தச் சிக்கலின் வலையில் இருவரும் சிக்கித் தவிக்கவே செய்தார்கள்.

Previous articleNaga Deepam Ch12 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch14 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here