Home Historical Novel Naga Deepam Ch14 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch14 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Naga Deepam Ch14 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch14 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch14 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14. தெய்வ மங்கை

Naga Deepam Ch14 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சோலைவனப் பகுதியின் இறுதி விளிம்பில், அதையடுத்து விரிந்து பறந்து ஓடத் துவங்கிய பாலைவன மணலின் முகப்பில் தனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வண்ணம் ஹரிதாஸ் ஜாலா உரைத்த உண்மையைக் கேட்ட ராஜபுத்திரி,
விவரிக்க இயலாத பலவித உணர்ச்சிகளுக்கு இலக்கானாள். தனக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா, துயரமா, வெறுப்பா, விருப்பா, அதிர்ச்சியா, கொந்தளிப்பா என்று எதுவுமே புரியாத நிலையை அடைந்தாள் ராஜபுத்திரி. அந்த வாலிப வீரன்
சொன்ன பதிலால் வெட்கத்தை விட்டு வெறுப்பை விட்டு ‘அணைக்கவும் உனக்கு உரிமை யுண்டு’ என்று தான் சொல்லியும், தன் கையால் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தும், தன் அன்பையெல்லாம் கொட்டிக் காட்டியும், “உன்
மாற்றம் விரும்பத்தக்க தல்ல ராஜபுத்திரி” என்று மெள்ள அவன் சொன்னதன் பொருள் ஆரம்பத்தில் விளங்கவில்லை அவளுக்கு.
“நான் உன்னை மனைவியாக ஏற்றால் உன்னை ராஜபுதனத்தின் வீரப் பெண்மணிகள் துரோகியின் மனைவியெனத் தூற்றுவார்கள்’ என்று அவன் சொன்ன பிறகு தான் அவன் மனப்போக்கின் புதிர் சற்று அவளுக்கு விளங்கியது.
இருப்பினும், ‘இத்தனை பரிவு உங்களுக்கு ஏன்?’ என்று அவள் கேட்ட பின்பு கிடைத்த பதில் அப்பப்பா எத்தனை இன்பம் அதிலிருந்தது துவக்கத்தில்! ஆனால் அதன் முழுக்கதையும் விளக்கப்பட்ட பின்பு அதில் தான் எத்தனை துன்பம்
பிணைந்து கிடந்தது. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் எத்தனை பிணைப்பு ரோஜாவையும் முள்ளையும் போல்.
இப்படிப் பலப்பல விதமாக எண்ணும் நிலையைச் சிருஷ்டித்தன ஹரிதாஸ் ஜாலாவின் சொற்கள். அவன் உதடுகள் உதிர்த்த சொற்களைவிட கண்கள் சொன்ன செய்தியில் வேகமிருந்தது, விளக்கம் இருந்தது, விசாரணையிருந்தது. ‘ஏன்
இத்தனை பரிவு உங்களுக்கு என் மீது? என்று கேட்டதும் ஹரிதாஸ் ஜாலா சில விநாடிகள் மௌனமாகவே உட்கார்ந்திருந்தான். அந்த மௌனத்தில் ராஜபுத்திரிக்கு இணையற்ற மகிழ்ச்சியிருந்தது. தனது முதுகுப் புறத்தில்
உட்கார்ந்திருந்த ஹரிதாஸ் ஜாலாவின் மார்பு அப்பொழுது அவளது முதுகைத் தடவிக் கொண்டிருந்தது. அத்தனை உணர்ச்சி வேகத்திலும் நிதானமாகவும் திடமாகவும் அளந்து கொண்டிருந்த அவன் இதய சப்தத்தைக் கூட அவள்
முதுகின் நரம்புகள் வாங்கி அவள் உடலெங்கும் பரப்பிக் கொண்டிருந்தன. தனது உடல் பூராவுமே இதயம் சப்திக்கிறதென்ற உணர்வடைந்த ராஜபுத்திரி அந்த மௌன நிலையையே பெரிதும் விரும்பினாள். அவன் இதயம் தன்னை
இத்தனை தூரம் ஊடுருவ முடியும் என்பதை அவள் சொப்பனத்திலும் நினைக்க வில்லையாதலால் அவளுக்கு அந்த அனுபவம் புத்தம் புதியதாயிருந்தது. காதலைப் பற்றிப் படித்திருக்கிறோம். பாடல்கள் கேட்டிருக்கிறோம். அந்தப்
படிப்பிலும் கேள்வியிலும் உண்டாகும் அறிவுக்கு அப்பால் அனுபவத்தில் எத்தனை படிப்பினைகள், எத்தனை பாடல்கள் இருக்கின்றன? என்று எண்ணிப் பிரமித்தாள் ராஜபுத்திரி. பின்னால் சப்திக்கும் இதயத்துக்கே இத்தனை
வேகமென்றால் நாங்கள் எதிரே எதிரேயிருந்து இதயங்கள் எதிரே எதிரே பொருந்திச் சப்தித்தால்-! இதற்கு மேல் எண்ணவும் அஞ்சினாள் அந்த ஏந்திழை. நிச்சயம் இருவர் உயிர்களும் உடல் மாறும். கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை
பொய்யில்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் ராஜபுத்திரி. அத்தகைய எண்ணங்களின் அனுபவத்திலேயே மிதந்து கொண்டிருக்க விரும்பிய ராஜபுத்திரி சரேலென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். அதிர்ச்சியுடன் ஹரிதாஸ்
ஜாலாவின் கைகள் மீண்டும் அவள் தோள்களைப் பற்றியதால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி அது.
ஹரிதாஸ் ஜாலா சரேலென்று பழையபடி அவள் தோள்களை அழுத்திப் பற்றினான், பற்றியதும் மட்டுமல்ல, பற்றிய அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான். அவன் கைகள் தோளைப் பற்றிச் சுற்றிய வேகத்தில் ‘கிர்’ என்று திரும்பிய
ராஜபுத்திரி, ஹரிதாஸ் ஜாலாவின் தீட்சண்யமான கண்கள் தன் கண்களுடன் கலப்பதை அறிந்தாள். எதிரே தன்னைப் பார்க்கும் ராஜபுத்திரியைத் திருப்பிவிட்ட பிறகும் ஹரிதாஸ் ஜாலா அவள் தோள்களை விட்டு தன் கைகளை
எடுக்கவேயில்லை, அந்த முரட்டுக் கைகள் சில சந்தர்ப்பங்களில் எத்தனை மிருதுவாக இருக்க முடியும் என்பதை ராஜபுத்திரி அந்தச் சில நிமிஷங்களில் அறிந்தாள். அவன் கைகள் அவள் தோளை ஆசையுடன் மிக மெதுவாகத் திருகின.
பிறகு, சற்று கீழிறங்கின. கைகளின் மத்திய பகுதிகளை வருடின. சற்றுக் கிட்டேயும் இழுத்தன. அவன் தன்னை அணைக்க இழுக்கிறானென்றே நினைத்த ராஜபுத்திரியின் உணர்ச்சிகள் பெரும் கொந்தளிப்பை அடைந்தன? உடலின்
நரம்புகள் துள்ளி விளையாடின. இதயம் ஏதோ போர் முகாம் போல் திடீர் திடீரென உள்ளே அடித்துக் கொண்டது. வெற்றி வீரனை முரசும் விருதுகளும் கொண்டு அழைக்கத் தயாராயிருக்கும் கோட்டை போல விளங்கினாள் அந்தக்
கட்டழகி. அந்த முரசும் எதிரேயிருந்த வீரனின் சித்தத்தில் தவிக்கத்தான் செய்தது. விருதுகளும் கண்ணுக்குத் தெரியத்தான் செய்தன. இருப்பினும் அவற்றை ஏற்கும் நிலையில் ஏற்று ஆண்டு அனுபவிக்கும் நிலையில் அந்த வெற்றி வீரன்
இல்லை. அவன் சம்பந்தப்பட்ட வரையில் அந்த வெற்றி பயனற்றது.
அத்தகைய பலனை அடைய முடியாத பரிதாபப் பார்வையை ஹரிதாஸ் ஜாலாவின் கண்கள் ராஜபுத்திரி மீது வீசின. அந்தக் கண்களில் ஆசையுமிருந்தது, நேசமுமிருந்தது. ஏமாற்றமும் இருந்தது. ஏமாற்றத் திற்குக் காரணம் மட்டும்
ராஜபுத்திரிக்கு விளங்கவில்லை. மெள்ள மெள்ள அவன் உதிர்த்த சொற்கள் விளக்கின அந்த மர்மத்தை. “ராஜபுத்திரி நீ என்ன கேட்டாய் என்னை?” என்று அவள் கைகளை அழுந்தப் பிடித்தவண்ணம் கேட்டான் ஹரிதாஸ்ஜாலா, அவள்
கண்களோடு தன் கண்களைக் கலக்கவிட்டு.
ராஜபுத்திரி அந்தக் கண்களின் பார்வையிலிருந்து விலக முயன்றாள். முடியவில்லை அவளால். இரும்பை இழுத்து நிறுத்தும் காந்தமெனக் கவர்ந்து நின்ற அந்த வாலிபனின் கண்கள் அவள் மலர்விழிகளை அணுகவே, அவனைப்
பார்த்தவண்ணமே செம்பவள இதழ்களைத் திறந்த ராஜபுத்திரி, “ஏன் இந்தப் பரிவு என்று கேட்டேன்” என்று முணுமுணுத்தாள்.
அவன் சொற்கள் மெள்ள மெள்ள வெளிவந்தன. ஒலியும் பலமற்றுக் கிடந்தது, தன்னை மயக்க ஏதோ அவள் மந்திரத்தை உச்சரிப்பது போலிருந்தது ஹரிதாஸ் ஜாலாவுக்கு, அவள் முக லாவண்யம் அவன் மனத்தில் இல்லாத
போராட்டத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. புருவங்கள்! புருவங்களா அவை? அல்ல அல்ல கரும்பு விற்கள்! இப்படியெல்லாம் எண்ணி எண்ணி அவள் அழகைப் பருகிய ஹரிதாஸ் ஜாலா, “சொல்லட்டுமா ராஜபுத்திரி” என்று
கேட்டான் மெதுவாக.
ராஜபுத்திரி பரம சங்கடத்திற்குள்ளிருந்தபடியால் ஏதோ பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக, “எதைச் சொல்லட்டுமா என்று கேட்கிறீர்கள்?” என்றாள்.
“உன்மேல் எனக்கு ஏன் பரிவு என்று கேட்கவில்லையா நீ” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“ஆம். கேட்டேன்” என்றாள் ராஜபுத்திரி.
“காரணம் சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள்.”
“ராஜபுத்திரி…..”
“உம்”
“நான் “
“ஹும்…”
“நான் ஜாலா. வம்சத்தினன்.”
“ஆம், ஆம்.”
“பொய் சொல்லும் வழக்கம் என் மரபில் கிடையாது”
“ஆம்…”
“ஆகவே உண்மையைச் சொல்லுவேன்.”
“சொல்லுங்கள்”
மறுபடியும் சற்று நிதானித்தான், ஹரிதாஸ் ஜாலா பிறகு இழுத்தான். “என் பரிவுக்குக் காரணம்…?” என்று.
“சொல்லுங்கள்” ராஜபுத்திரியின் பெருமார்பு எழுந்து எழுந்து தாழ்ந்தது உணர்ச்சிகளின் கொந்தளிப்பால்.
ஹரிதாஸ் ஜாலாவின் கைகள் அவள் கைகளை வலிக்கும்படியாக முரட்டுத்தனமாக பிடித்தன. கொஞ்சம் கடுமையாகவும் கோபத்துடனும் ஒலித்தன. “காதல், உன்னிடம் ஏற்பட்டுள்ள காதல்” என்று கூறினான் அவன்.
கூறினானா, சீறினானா என்று புரியவில்லை ராஜபுத்திரிக்கு. காதலிப்பதை அத்தனை முரட்டுத் தனமாகவும் கோபத்துடனும் யாரும் செய்வார்கள் என்பதை அவள் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. தோளுக்குக் கீழிருந்த தன்
கைப்பகுதிகளை அவன் கன்னிச் சிவக்கும்படி பிடித்ததும் பெரிதும் வலித்தது அவளுக்கு. அந்த வலியிலும் ஆனந்தமிருந்ததை அவள் உணர்ந்தாள். அந்தத் தண்டனையை ஏன் அத்துடன் நிறுத்தி விட்டான் என்று ஏங்கவும் செய்தாள்
ராஜபுத்திரி.
தன் போக்கே பெரும் புதிராயிருந்தது ராஜபுத்திரிக்கு. அந்த முரடனை அப்படியே அணைத்து விட்டாலென்ன என்று கூட எண்ணினாள். அந்த எண்ணத்தை நினைத்துத் தன்னைப் புரிந்து கொள்ளவும் செய்தாள், “ஒரு பெருங்குடி
மகள் கொள்ளக்கூடிய நினைப்பல்ல இது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட ராஜபுத்திரி, ‘மனைவி ஸ்தானத்தைப் பெற்ற பின் பெருங்குடி மகளுக்கும் சிறுகுடி மகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? இந்த விஷயத்தில்,
பெண் குலம் ஒரே குலம். அவர்கள், ஆசைகள், உணர்ச்சிகள், ஏக்கங்கள் எல்லாம் ஒரே வகை’ என்று தனக்குள் சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.
அவள் கைகளின் இலேசான நடுக்கத்திலிருந்து அவள் நிலைகுலைந்து போயிருக்கிறாளென்பதைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அவளை பரிதாபத்துடன் பார்த்தான். பிறகு மெள்ள அருகில் இழுத்து, “இதோ என் கண்களை
நன்றாக உற்றுப் பார் ராஜபுத்திரி?” என்றும் கூறினான்.
அவள் கண்கள் மீண்டும் அவன் கண்களைப் பார்த்தன. “இப்பொழுது புரிகிறதா உனக்கு?” என்று மெள்ளக் கேட்டான் அவன்.
“எதைக் கேட்கிறீர்கள்?”
“எதை என்று நான் சொல்ல வேண்டுமா உனக்கு? என் கண்கள் பேசவில்லையா?”
“உதடுகள் தான் பேசும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“அது வெளிப்படை பேச்சு. அதில் ஒலி சம்பந்தம்”
“கண்களின் பேச்சு…”
“உணர்ச்சியின் பேச்சு, அதில் ஒலியில்லை. இருப்பினும் அதனினும் வலிய ஒளி உண்டு. முதலில் உலகத்தில் உண்டாவது அது தான்.”
“எது?”
“ஒளி”
“உம்”
“ஆம். ஒளிதான். ஆகவே ஆதிமனிதர்கள் கண்களைக் கொண்டு தான் பேசினார்கள். பின்புதான் உதடுகள் பேசின, மொழிகள் பிறந்தன, கண்ணும் பேசும், அதன் மொழி வேறு. அதற்கு…”
“ஊம்.”
“எழுத்து தேவையில்லை! எண்ணம் மட்டுமிருந்தால் போதும்.”
“இத்தனை கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?”
“ஆமாம்”
“எங்கு கற்றுக் கொண்டீர்கள்; மொகலாயர் அந்தப் புரத்திலா?’
“அங்கு கற்றுக் கொண்டிருந்தால் நான் சொன்னது முற்றிலும் உண்மையாகிவிடும்.”.
“எது?”
“கண்கள் பேசும் என்பது.”
“ஏன்?”
“நாவினால் பேச முடியாது.”
“ஏன் முடியாது?”
“மொகலாயர் நாவைத் துண்டித்திருப்பார்கள்.”
இதைச் சொன்ன ஹரிதாஸ் ஜாலா மீண்டும் பழைய நிலையை அடைந்து மெள்ள நகைத் தான். அந்த நகைப்பு நீடிக்கவில்லை. சட்டென்று நின்றது. கைகள் அவள் கைகளை விட்டு அகன்றன. கண்களும் மீண்டும் பாலைவனத்தை
நோக்கின. பழையபடி திரும்பி அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அவளையும் பக்கவாட்டில் திருப்பி அவள் இடையில் தனது கையைச் சுற்றிவிட்டு அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் ஆதரவு
இருந்தது. காதல் இல்லை போலிருந்தது ராஜபுத்திரிக்கு.
கோபத்துடன் சொற்கள் உதிர்ந்த போதிருந்த காதல், இன்பமான இந்த அணைப்பில் ஏன் இல்லை என்று புரியவில்லை அவளுக்கு. அவன் எட்ட இருந்த சமயத்தில் இருந்த வேகம் கிட்டியபின் ஏன் இல்லை யென்று தெரியவில்லை
அவளுக்கு. சில விநாடிகளுக்கு நிதானமாயிருந்து விட்ட ஹரிதாஸ் ஜாலா சொன்னான்: “ராஜபுத்திரி! என் வாழ்க்கையுடன் உன் வாழ்க்கையை இணைக்க இச்சை தூண்டுகிறது என்னை – ஆனால் இதயம் அதை எதிர்க்கிறது.”
“இதயத்திலிருந்து இச்சை பிறப்பதில்லையா?” என்று கேட்டாள் ராஜபுத்திரி. கட்டை விரலால் எதிரே இருந்த மணலைக் கிளறிக்கொண்டே.
“இதயத்தில் பிறப்பது காதல்; இந்திரியங்களில் பிறப்பது இச்சை” என்றான் ஹரிதாஸ் ஜாலா பெரு மூச்சு விட்டுக் கொண்டே.
“இரண்டுக்கும் வித்தியாசமுண்டா?”
“ஆம்; காதல் வேறு, இச்சை வேறு. இச்சைக்குப் பூர்த்தி உண்டு. காதலுக்குப் பூர்த்தியில்லை.”
“அப்படியா?”
“அப்படித்தான் சாத்திரங்கள் கூறுகின்றன.”
“எந்த சாத்திரமோ அது?”
“ஸநாதன தர்ம சாத்திரங்கள், மனித வர்க்கங்களுக்குள் இச்சை ஏற்படுகிறது. தெய்வ மனித சம்பந்தத்தில் காதல் பிறக்கிறது. அதே காதல் மனிதர்களுக்குள் ஏற்படும்போது மனிதர்களுக்குத் தெய்வத் தன்மை ஏற்படுகிறது. நிரந்தரமான,
திகட்டாத அந்தக் காதலில் சதிபதிகள் பரஸ்பர ஆன்மாக்களைப் பார்க்கிறார்கள். உடலுக்கும் அப்பாற்பட்ட இன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்.”
இதைக் கேட்ட ராஜபுத்திரி கோபத்துடன் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
“துறவியுடன் காதல் கொண்டுவிட்டேனே என்று சிரிக்கிறேன்” என்றாள் அவள்.
“தெய்வ மங்கையருக்கு அது சகஜந்தான்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“இதென்ன புகழ்ச்சியா இகழ்ச்சியா?”
“எதுவாயிருந்தாலென்ன? தெய்வ மங்கையர் துறவிகளின் தவத்தைக் கெடுக்கத்தானே ஏற்பட்டிருக்கிறார்கள்? ஆனால் நீ மட்டும் என் தவத்தைக் கெடுக்க முடியாது.”
“எனக்குச் சக்தியில்லையா அதற்கு?”
“இல்லை!”
“ஏன் இல்லை?”
“தவம் அப்பேர்ப்பட்டது, கெடுக்க முடியாது உன்னால், கொடுக்க முடியும்.”
“என்ன?”
“ஆம். ராஜபுத்திரி! உன் காதலைப் பெறத்தானே தவம் கிடக்கிறேன். அதை நீ கொடுத்தால் உனக்கும் நஷ்டம், எனக்கும் நஷ்டம்.
ராஜபுத்திரி அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் பார்த்தான். “நீங்கள் இருந்தாலும்…” என்று ஆரம்பித்து இதழ்களை விஷமத்துடன் மடித்தாள்.
“சொல் ராஜபுத்திரி!” அவன் உதடுகள் மட்டுமல்ல கண்களும் கேட்டன.
“மிகவும் துஷ்டர்.”
“இப்பொழுது தான் அதைத் தெரிந்து கொண்டாயா?”
“ஆம்.”
“இனி என்னை வெறுப்பாய்…”
“ஆம். வெறுப்பேன்.”
“பிறகு?”
“தண்டிப்பேன்.”
“அதற்குத் தாமதம் வேண்டாம். இப்பொழுதே தண்டித்துவிடு” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
அந்தத் தெய்வ மங்கை அவனைத் தண்டித்தாள். என்ன தண்டனை அது? இந்தக் கேள்வியைச் சோலை மலர்கள் கேட்டன. கிளையிலிருந்த கிள்ளைகள் கேட்டன. வெறித்துப் பார்த்த பாலைவனமும் கேட்டது. அது மட்டுமல்ல, ஹரிதாஸ்
ஜாலாவின் இதயமும் கேட்டது.

Previous articleNaga Deepam Ch13 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch15 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here