Home Historical Novel Naga Deepam Ch17 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch17 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

88
0
Naga Deepam Ch17 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch17 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch17 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 17. அவன் ஓதிய மந்திரம்

Naga Deepam Ch17 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

கனியில் உறையும் சுவைபோல ஹரிதாஸ் ஜாலாவின் அணைப்பில் உறைந்துவிட்ட ராஜபுத்திரி உலகத்தை மறந்து விட்டாளென்றால், அந்தச் சுவையை ஈர்த்துக்கொண்ட முரட்டுக் கனியும் இதயம் விரிந்து பூரித்த நிலையில்
இருந்தபடியால், சுற்றும் முற்றும் நடப்பது என்னவென்று இந்தக் கனிக்கும் தெரியவில்லை. அப்படித் தெரியவில்லையென்பதை அறிந்து கொண்ட எதிரே மஞ்சத்தின் தட்டிலிருந்த மற்ற கனி வர்க்கங்கள், பஞ்சணையிலிருந்த முரட்டுக்
கனியை ஏளனத்துடன் நோக்கின, உணவுக்காக வைக்கப்பட்டிருந்த வெடித்த மாதுளைக் கனியொன்று தன் செம்பற்களைக் காட்டி நகைக்கவும் செய்தது. தட்டின் இடையிலிருந்த அறுசுவை உணவு வர்க்கங்கள் கூட எத்தனை நேரம்
இவர்களுக்காகக் காத்திருப்பது என்ற கோபத்தினால் புகைந்து கொண்டிருந்தன. காதல் உணர்வுள்ளபோது மற்ற உணவுகள் தேவையற்றவை என்பதை அந்தக் கூடாரத்தில் பறந்த கால விநாடிகள் நிரூபித்தன. விநாடிகள் துரிதமாகப்
பிரிந்து சென்றனவேயொழிய காதலர் இருவரும் பிரியவில்லை. ஹரிதாஸ் ஜாலாவின் கரங்கள் ராஜபுத்திரியைப் பலமாகப் பிணைத்தே நின்றன. பிரிந்து விலக அந்த முரட்டுக் கரங்கள் அவளை அனுமதிக்கவில்லை. அனுமதிக்கத்
தேவையுமில்லை’ ராஜபுத்திரி அந்த அனுமதியை நாடவுமில்லை. அந்த அணைப்பு எத்தனையோ நிம்மதியை அளித்திருந்தது அவளுக்கு…
எதிரே மஞ்சத்திலிருந்த உணவைத் தொடாமலும், திரை விலகிய சத்தத்தைக்கூடக் கவனியாமலும், தங்களிருவரையும் தவிர உலகத்தில் யாருமில்லையென்ற நினைப்புடனும், தழுவிக் கிடந்த அந்தக் காதலர் இருவரையும் கூடார
வாயிலில் நின்று கவனித்த அந்தப் புது மனிதன், வியப்பின் எல்லையை அடைந்தான். அந்த இன்பக் காட்சியை அந்த கூடாரத்தில் காண முடியுமென்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை யாகையால், சொல்லவொண்ணா
பிரமிப்பின் வசத்தில் சிக்கி நின்ற இடத்தில் அசைவற்றுப் பல விநாடிகள் அவன் நின்றான். காதலர் அணைந்திருக்கும் நிலையில் தான் அங்கு நிற்பது அநாகரிகம் என்பதைக்கூட அந்த மனிதன் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இல்லை
என்பதை அவன் முகபாவம் காட்டியது. முகத்தில் நிலவிக் கிடந்தது வெறும் பிரமிப்பு மட்டும்தான். அதிர்ச்சியும் அதில் கலந்திருந்ததா என்பதை நிர்ணயிக்க முடியாத உணர்ச்சிகள் முகத்தில் துரிதமாக ஓடிக் கொண்டிருந்தன. சில
விநாடிகள் எதிரே இருந்த காட்சியைப் பார்த்து அசைவற்றுவிட்ட அந்த மனிதனின் கண்கள் மெல்லச் சுரணை அடைந்து நிலத்தை நோக்கின. காதலரை எச்சரிக்கும் பாவனையில் இருமூறை தொண்டையையும் கனைத்துக் காட்டினான்
வந்த மனிதன். அந்த ஒலியைக் கேட்டதும் திடீரென மின்னல் தாக்கியது போல் அதிர்ச்சியுற்று பிரிந்து பஞ்சணையில் தனித்து உட்கார்ந்த காதலரிருவரும் கூடார வாயிலை நோக்கியதும், வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை
அடைந்தார்கள். ராஜபுத்திரியின் இதயத்தில் கோபம் வழிந்தது. அந்தக் கோபம் முகத்தில் பெரிதும் பரவி, உதடுகளையும் சிறிது துடிக்கவைத்ததால் அந்தத் துடிப்புடனேயே கேட்டாள் அவள். “உத்தரவின்றி உன்னை யார் வரச் சொன்னது
உள்ளே?” என்று.
அந்தக் கேள்வியால் வந்த மனிதன் சிறிதும் கலங்காமலும் சிறிது வினயத்துடனும் பதில் சொன்னான்:”ராஜபுத்திரி தனிமையாயிருப்பதாகக்’ காவலர்கள் சொன்னார்கள். ஆகையால் வந்தேன். துணையுடன் இருப்பதைப்பற்றி யாரும்
சொல்லவில்லை” என்று மிகவும் அடக்கத்துடன் பேசுவது போல் போக்கிரித் தனத்துடன் பேசினான்.
ராஜபுத்திரியின் விழிகள் அவனை மிகுந்த தைரியத்துடனும் அசட்டையுடனும் எழுந்து நோக்கின. “நான் தனிமையாயிருப்பதாக சொன்னார்களா வீரர்கள்” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டாள் ராஜபுத்திரி.
“அப்படித்தான் சொன்னார்கள். இல்லாவிட்டால்…” என்று இழுத்தான் வந்தவன்.
“உள்ளே நுழைந்திருக்க மாட்டீர்கள்?” என்று வாசகத்தை முடித்துக் கேள்வியைத் திரும்பினாள் ராஜ புத்திரி.
“ஆம், ராஜபுத்திரி” என்றான் வந்தவன்.
ராஜபுத்திரியின் விழிகளில் கோபம் மெள்ளத் துளிர்த்தது. பெண்கள் தனிமையாயிருக்கும்போது தான் கூடாரத்தில் நுழைவீர்கள்? இது தான் நீங்கள் ராஜபுதனத்தில் கற்றுக்கொண்ட பண்பாடு?” என்ற ராஜபுத்திரியின் சொற்கள்
கலகலவென உதிர்ந்தன.
ராஜபுத்திரியின் சீற்றத்தையோ, சீற்றத்தை வெளிப்படையாகக் காட்டிய கடும் சொற்களையோ, வந்த மனிதன் லட்சியம் செய்யாமலே தன் விஷமத்தை அணுவளவும் கைவிடாமல் பேசினான் : “அரசாங்க காரியங்களைத் தனிமையில் பேச
ராஜபுதனத்தில் அனுமதி உண்டு. பெண்கள் தனிமையிலிருந்தாலும் அடிமை அவர்களை அணுகலாம், உத்தரவும் கேட்கலாம்” என்றான் அவன்.
“பெண்கள் எந்த நிலையிலிருந்தாலும் கூடாரத்தில் நுழைய அந்த அனுமதி இடந்தருமா?” என்று கேட்கத் துடித்தது ராஜபுத்திரியின் உள்ளம். ஆனால் அதைக் கேட்க நா எழவில்லையாகையால், அவள் மேற் கொண்டு மௌனமே
சாதித்தாள்.
இத்தனை சம்பாஷணையிலும் ஹரிதாஸ் ஜாலா சம்பந்தப் படாமலும், பஞ்சணையில் தான் உட்கார்ந்த இடத்தைவிட்டு அகலாமலும், உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே வந்த மனிதனைத் தன் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தான். அந்த
மனிதன், தங்கள் தனிமையை உடைக்கும் வரை உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருந்த ஹரிதாஸ் ஜாலாவின் இதயம் திடீரென இறுகிவிட்டதைக் கல்லென மாறிவிட்ட அவன் முகம் சந்தேகமற நிரூபித்தது. அந்த முகம் திடீரென உணர்ச்சியற்றுக்
கல்லாகிவிட்டதைப் பார்த்து வந்த மனிதனும் சற்று எச்சரிக்கையடைந்திருக்க வேண்டும். ஆகவே அவன் மேற் கொண்டு ராஜபுத்திரியுடன் பேசாமலும், அவள் மேற்கொண்ட மௌனத்திற்கு குறுக்கே புகாமலும் ஹரிதாஸ் ஜாலாவிடமே
பேச முற்பட்டு, “உன்னை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை ஹரிதாஸ்” என்றான்.
கிட்டத்தட்ட தன் உயரமும் தன் வயதும் உள்ள அந்த மனிதன் தன்னை நோக்கிப் பேச முற்பட்டதும், முகத்தில் கொஞ்ச நஞ்சமிருந்த உணர்ச்சிகளையும் போக்கடித்தது. ஹரிதாஸ் ஜாலா வறட்டுக் குரலில் பதில் சொன்னான் : “ஆம்;
எதிர்பார்க்க நியாயமில்லை?” என்று.
“நீ…” என்று ஏதோ துவங்கிய அந்த மனிதனை இடைமறித்த ஹரிதாஸ் ஜாலா, அவன் மனத்திலிருந்ததைப் புரிந்து கொண்டு, “ஆம்; மொகலாயர் சிறையில் தானிருந்தேன்” என்று வார்த்தையை முடித்தான்.
“அப்படியானால்…?” என்று ஏதோ துவக்கினான் வந்தவன்.
“விடுதலை செய்தார்கள். வந்தேன்’ என்று வறட்டுக் குரலிலேயே பதில் சொன்னான் ஹரிதாஸ் ஜாலா.
“அது தெரியும்…” என்று மேலும் ஏதோ சொல்லப் போன அந்த மனிதன், திடீரெனப் பேச்சைப் பாதியில் அறுத்துக் கொண்டான். அவன் முகத்தில் அச்சத்தின் சாயையும் லேசாகப் படர்ந்தது.
அந்த மனிதனின் வார்த்தைகள் திடீரென அறுந்ததையும், முகத்தில் விநாடியே துளிர்த்துவிட்டு மறைந்த அச்சத்தின் சாயையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கவனித்து விட்ட ஹரிதாஸ் ஜாலா, “சுந்தர் தாஸ் உனக்கு என் மீதிருக்கும்
அக்கறை மட்டும் ராஜ புதனத்தில், மற்றவர்களுக்கிருந்தால் இத்தனை நாள் மொகலாயர் சிறையில் இருந்திருக்க மாட்டேன். ஆனால் உனக்கிருக்கும் வசதி மற்றவர்களுக்குக் கிடையாது. ஆகவே அவர்கள் மீது பழி சொல்லியும் பயனில்லை”
என்றான்.
அதுவரை சுந்தர்தாஸின் முகத்திலிருந்த திடம் திடீரென மறைந்தது. “வசதியா! என்ன சொல்கிறாய் ஹரிதாஸ்?” என்று குழப்பத்துடன் கேட்டான் சுந்தர்தாஸ்.
ஹரிதாஸ் ஜாலாவின் இதழ்கள் இகழ்ச்சியுடன் மடிந்தன. அவன் மேல்பற்கள் இரண்டும் கீழுதட்டை லேசாகக் கடித்தன. அடுத்துச் சொன்னான் ஹரிதாஸ் ஜாலா : “அதைப்பற்றிப் பிறகு பேசுவோம், வேறு அவகாசமும் இருக்கிறது” என்று.
“அவகாசமிருக்கிறதா!” குழப்பத்துடன் வினவினான் சுந்தர்தாஸ்.
“நிரம்ப இருக்கிறது” என்று கூறிய ஹரிதாஸ் ஜாலா உள்ளே வா சுந்தர் தாஸ். அப்படி உட்கார்” என்று சற்று தூரத்திலிருந்த மஞ்சத்தைச் சுட்டிக் காட்டினான்.
விலக்கிய திரையைத் தொங்கவிட்டு உள்ளே வந்து, ஹரிதாஸ் ஜாலா சுட்டிக்காட்டிய ஆசனத்தில் அமர்ந்த சுந்தர்தாஸின் முகத்தில் குழப்பம் முன்னை விட அதிகமாயிற்று. அந்தக் குழப்பத்தை உச்ச நிலைக்குக் கொண்டு போக
வினவினான் ஹரிதாஸ் ஜாலா. “நாம் இருவரும் பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன சுந்தர்தாஸ். அதற்கு நிரம்ப அவகாசமும் இருக்கிறது. ஆகவே அந்த விஷயங்களை இப்பொழுது பேச வேண்டாம்.
பிறகு தனிமையில் பேசிக் கொள்வோம்” என்று மேலும் ஏதோ சொல்லப் போவதை இடைமறித்த ராஜபுத்திரி கேட்டாள் : “நீங்களிருவரும் தனி மையில் பேச வேண்டிய விஷயங்கள் அத்தனை இருக்கிறதா?” என்று.
“கொள்ளை இருக்கிறது” என்று பதில் சொன்ன ஹரிதாஸ் ஜாலா, “வேண்டுமானால் சுந்தர்தாஸை கேட்டுப்பார் ராஜபுத்திரி” என்றான்.
சுந்தர் தாஸின் முகத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகன் தாண்டவமாடின, ஹரிதாஸ் ஜாலா தன்னைப் பெரும் ஆபத்தான வழியில் இறக்குகிறானென சந்தேகமறப் புரிந்து கொண்டான் சுந்தர்தாஸ். தவிர ராஜபுத்திரியை அவன்
ஏகவசனத்தில் அழைப்பதையும் கவனித்தான். அதைக் காரணமாக வைத்துப் பேச்சைத் திருப்ப முயன்ற சுந்தர்தாஸ், “ராஜபுத்திரியை மரியாதையின்றி அழைப்பது…” என்று நிறுத்தினான்.
“தவறுதான்.” தயக்கமின்றி வந்தது ஹரிதாஸ் ஜாலாவின் பதில்.
“தவறை ஏன் செய்ய வேண்டும்?”
“ஒரு தவறு பல தவறுகளுக்கு அடிகோலுகிறது.”
“ஒரு தவறா!”
“ஆம். நீ நுழைந்தபோது ஒரு தவறு நடந்ததைக் கவனித்தாய் தலைக்கு மேல் ஓடிய வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனாலென்ன?”
இந்த இடத்தில் குழப்பத்தை உதறிய சுந்தர்தாஸ் திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து, “இதை இனிமேல் நான் அனுமதிக்க முடியாது” என்றான்.
“எதை சுந்தர் தாஸ்?” இரும்பில் இரும்படித்தது போன்ற ஒலியில் வெளிவந்தன ஹரிதாஸ் ஜாலாவின் கேள்வி.
“ராஜபுத்திரியை நீ மரியாதையின்றி நடத்துவதை”.
“அனுமதிப்பதற்கும் அனுமதிக்காதிருப்பதற்கும் நீ யார்?”
“அரசரின் ஆணை பெற்றவன்.”
“என்ன ஆணை?”
“ராஜபுத்திரியைத் தேடிப் பிடித்து எந்தத் தீங்கும் நேரிடாமல் காத்து அழைத்து வருமாறு ராணா அமர சிம்மன் உத்தரவு பெற்று வந்திருக்கிறேன்.”
“நான் ராஜபுத்திரியுடனிருப்பது ராணாவுக்குத் தெரிந்திருக்காது.”
“தெரியாது.”
“தெரிந்திருந்தால்…”
“உன்னைச் சிறை செய்து கொண்டு வரவும் உத்தரவிட்டிருப்பார்.”
“ஏனப்படி உத்தரவிட வேண்டும்?”
“ஒற்றர்களை ராஜபுதனத்தில் சிறை செய்யாமல் என்ன செய்வார்கள்?”
இந்த இடத்தில் சற்று நிதானித்த ஹரிதாஸ் ஜாலா எழுந்திருந்து சுந்தர்தாஸின் எதிரில் வந்து நின்றான்.
“நான் மொகலாய ஒற்றனென்று ராணாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
இப்படிக் கேட்ட ஹரிதாஸ் ஜாலாவின் குரலிலும், அவன் நின்ற தோரணையிலும், ஏதோ விபரீதமிருப்பதைக் கண்ட சுந்தர் தாஸ் சற்று எச்சரிக்கையுடனேயே பேசினான்.
“தெரியும்” என்று.
“ஒற்றனென்று தெரியுமா? தூதனென்று கூடத் தெரியுமா?” என்று ஹரிதாஸ் ஜாலா மீண்டும் வினவினான்.
“இரண்டுக்கும் அதிக வித்தியாசமிருக்க முடியாதென்று ராணா நினைக்கிறார்.
“அவரை அப்படி நினைக்கச் செய்தது யார்?” சுரீலென எழுந்தது ஹரிதாஸ் ஜாலாவின் கேள்வி..
“அது யாரோ! எனக்கெப்படித் தெரியும்?”
ஹரிதாஸ் ஜாலாவின் குரல் திடீரென மாறியது. குரலில் அதுவரையில் தெரிந்த உஷ்ணம் மாறியது. “ஆம் ஆம், உனக்கெப்படித் தெரியும்” என்று ஒப்புக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, சுந்தர்தாஸின் தோளில் கையைப் போட்டு
மஞ்சத்திலிருந்து அவனை எழுப்பினான். அந்த இரும்புப் பிடியில் தப்ப முடியாமல் எழுந்த சுந்தர்தாஸை அணைத்தபடியே கூடாரத்தின் வாயிலை நோக்கித் திரும்பிய ஹரிதாஸ், “சுந்தர் தாஸ்! இன்னும் ஒரு நாழிகைக்குள் நாம் பயணமாக
வேண்டும். வெளியே சென்று வீரர்களை பயணத்துக்கு தயார் செய்.” என்று கூறிக் கொண்டே வாயிலை நோக்கி இரண்டடி நகர்ந்தான்.
“நீ, நீ ஹரிதாஸ்!” என்று விளக்கம் காணாத குரலில் கேட்டான் சுந்தர் தாஸ்.
“என் மனைவியுடன் உணவருந்திவிட்டு வருகிறேன்” என்ற ஹரிதாஸ் ஜாலாவின் பதில், சுந்தர்தாஸை அயர வைத்தது. “என்ன! உன் மனைவியா! யார் உன் மனைவி?” என்று திடீரென திரும்பிக் கேட்டான் சுந்தர் தாஸ்
“நான் சொல்ல வேண்டுமா சுந்தர்தாஸ்?” என்று கேட்டான், ஹரிதாஸ் புன் முறுவலொன்றை உதடுகளில் விட்டு.
“ராஜபுத்திரி உன் மனைவியா! இருக்க முடியாது!” என்று கூவினான் சுந்தர்தாஸ்.
“அதற்கு என்ன தடையிருக்கிறது?” என்று கேட்டு நகைத்தான் ஹரிதாஸ் ஜாலா.
“ராணா ஒப்புக் கொள்ளமாட்டார்.”
“ஏன்?”
“ராஜபுத்திரியை வேறொருவருக்கு மணமுடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.”
“ராணா எப்பொழுது புரோகிதரானார்?” என்று கேட்டு நகைத்தான் ஹரிதாஸ் ஜாலா சற்று இறைந்தே.
சுந்தர்தாஸ், ஹரிதாஸ் ஜாலாவின் இரும்புப் பிடியிலிருந்து விலகி அவனைச் சுடும் விழிகளால் நோக்கினான். “ஹரிதாஸ்! ராணாவை அவமதிப்பவர்களுக்கு ராஜபுதனத்தில் என்ன தண்டனை தெரியுமா?” என்று வினவினான்
கோபத்துடன்.
“தெரியும், மரண தண்டனை” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
தெரிந்துமா அவரை அவமதிக்கிறாய்?” என்று வினவினான் சுந்தர்தாஸ்.
“அதுமட்டும் தெரிந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டேன்” என்றான் ஹரிதாஸ் ஜாலா. இதைச் சொன்ன ஹரிதாஸ் ஜாலாவின் குரலில் விபரீத ஒலியிருந்ததைக் கவனித்தான் சுந்தர்தாஸ். “வேறென்ன தெரியும் உனக்கு?” என்று
கேட்டான் சந்தேகத்துடன்.
ஹரிதாஸ் ஜாலாவின் பதில் நிதானமாகவும் அழுத்தமாகவும் வந்தது. “ராஜத் துரோகத்துக்கும் மரண தண்டனை உண்டு என்பதும் எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல…”
அந்தச் சிரிப்பில் பெரும் ஆழமிருந்ததைக் கவனித்த சுந்தர் தாஸ் வேகமாக நடுங்கினான். “வேறென்ன!” என்று நடுக்கத்துடன் கேட்கவும் செய்தான்.
“தூக்கிலாடுவதானால், நான் தனியாக ஆடமாட்டேன் என்பதும் நிச்சயம்!” என்று மீண்டும் நகைத்தான்.
அந்த நகைப்பு சுந்தர்தாஸுக்கு வேப்பெண்ணெயாக இருந்தது. ஏதும் பதில் சொல்லாமல் சரேலென வெளியேறினான் அவன்.
அவன் வெளியேறியதும் சர்வ சாதாரணமாகத் திரும்பிப் பஞ்சணையில் வந்து உட்கார்ந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, “ராஜபுத்திரி! வா உணவருந்து வோம், நேரமாகிறது புறப்பட” என்றான்.
அதுவரை ஹரிதாஸுக்கும் வந்த மனிதனுக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ராஜபுத்திரியின் இதயத்தில் வேதனை ஆறு பலமாக ஓடிக் கொண்டிருந்தது. சுந்தர் தாஸின் பேச்சு பலப்பல போராட்டங்களை அவள்
மனத்திலே சிருஷ்டித்தன. அப்படி மனம் நிலைகுலைந்து நின்றதால் உணவைத் தொடவும் முற்படவில்லை ராஜபுத்திரி. ஹரிதாஸ் ஜாலா அவள் சித்தத்திலே சுழன்ற எண்ணங்களை யெல்லாம் புரிந்து கொண்டான். ஆகவே அவளை ஒரு
கையால் அணைத்து மற்றொரு கையால் மாதுளைக் மனியை எடுத்து, “ இந்தா ராஜபுத்திரி, இதைச் சாப்பிடு” என்று அவள் மலர்க் கையில் கொடுத்தான்,
“மாதுளைக் கனி அவள் வாயருகில் செல்லவில்லை. “அவன் சுந்தர் தாஸ்…” என்று சொற்களை மட்டும் உதடுகள் உதிர்த்தன.
“யாரைப்பற்றியும் அஞ்சாதே ராஜபுத்திரி. சுந்தர்தாஸல்ல, ராணாவல்ல, ராஜபுதனம் முழுவதும் திரண்டாலும் ஹரிதாஸிடமிருந்து அவன் மனைவியைப் பிடுங்க முடியாது. மனைவி, வாள், குதிரை மூன்றும் இன்னொருவன்
வசப்படுவதை எந்த ராஜபுத்திரனும் அனுமதிக்கமாட்டானென்பதை முன்பே ஒருதரம் நான் சொல்லவில்லை?” என்று ஆதரவுடன் அந்த வார்த்தைகளைச் சொன்ன ஹரிதாஸ், அவளை மெள்ள மெள்ள உணவருந்த வைத்தான்.
நீரைத்தான் எடுத்துக் குவளையிலிருந்து ஊற்றிக் குடித்த அரசகுமாரியின் அதரங்களைத் தன் கையாலேயே துடைத்தான். பிறகு அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து, “ராஜபுத்திரி! நம் வாழ்வு சிக்கலில் துவங்கியது. சிக்கலில் மேலும் ஆழ்
கிறது. இருப்பினும் கவலைப்படாதே. சிக்கலை அவிழ்க்க என்னிடம் மந்திரமிருக்கிறது.” என்று ஆதரவுடன் சொன்னான்.
“என்ன மந்திரம்?” என்று கேட்டாள் ராஜபுத்திரி.
மந்திரத்தை அவள் காதில் ஓதினான் ஹரிதாஸ். அவள் முகத்தில் விவரிக்க இயலாத நிகழ்ச்சிகள் தென்பட்டன. “அந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“தெரியும்” என்றான் ஹரிதாஸ் ஜாலா…
“யார் சொன்னது உங்களுக்கு?” என்று வினவினாள் அவள்.
ஹரிதாஸ் ஜாலா பதில் சொல்லாமலே அவளை விட்டு வெளியே சென்றான்.
யார் சொன்னது இவருக்கு! யார் சொன்னது? பெரும் மர்மம் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று வியப்பில் அசைவற்றுப் பல விநாடிகள் கூடாரத்தின் நட்டநடுவில் நின்று விட்டாள் ராஜபுத்திரி.

Previous articleNaga Deepam Ch16 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch18 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here