Home Historical Novel Naga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

98
0
Naga Deepam Ch2 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2. நிலவில் நின்ற நேரிழை

Naga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

அந்திவேளை உந்தி எழுப்பிய உஷ்ணத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் உள்ளம் எழுப்பிய உணர்ச்சி அலைகளில் புரண்டு கொண்டு தன் வாழ்வையே வெறுத்துக் கொண்டும், தான் புரியச் செல்லும் பணியை நினைத்து மனம்
புழுங்கியும் ஒண்டாலா சமவெளியை அடுத்த ராஜபுதனப் பாலைவனத்தில் புரவியை மெல்ல நடத்திய வண்ணம் சென்று கொண் டிருந்த ஹரிதாஸ் ஜாலா, திடீரெனப் பின்னால் ஏற்பட்ட ஆரவாரத்தைக் கேட்டதும் பட்டென்று தன்
புரவியை நிறுத்திப் பின்புறம் திரும்பிப் பார்த்ததன்றி ஆபத்துக்குப் பயந்து ஒட்டகத்திலமர்ந்து ஓடி வந்து கொண்டிருந்த அழகியைக் கண்டதும் அவளுக்கு உதவத் தன் புரவியைக் கணவேகத்தில் திருப்பி அந்த அழகி வந்த திசையை
நோக்கிக் காற்றின் வேகத்தில் விரைந்தான். மொகலாயச் சக்கரவர்த்தியால் சில தினங் களுக்கு முன்பே பரிசாக அளிக்கப்பட்டிருந்தாலும் ஹரிதாஸ் ஜாலாவிடம் நீண்ட நாள் பழகியதைப் போல் நடந்து கொண்ட அவன் புரவி, அந்த
ராஜபுத்திரனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டது போல் அவன் கடிவாளத்தை இழுத்துவிட்டதுமே தான் ஓடிக்கொண்டிருந்த பெரும் மணல் திட்டிலிருந்து திரும்பி வெகுவேகமாகச் சரிவில் ஓடி, அந்த அழகி வந்து கொண்டிருந்த
இடத்தைச் சில விநாடிக்குள் அடைந்து விட்டது. எதிரியினால் எறியப்பட்ட வேலைப்போல் தூரத்திலிருந்து தங்களெதிரே பாய்ந்து வந்த அந்தப் புரவி வீரன் தங்களை ஊடுருவாதிருக்க வேண்டுமென்ற எண்ணத்திலோ என்னவோ அந்த
அழகி ஏறிவந்த ஒட்டகமும் அதற்குப்பின் வந்த புரவிகளும் சட்டென்று ஒன்று கூடி நின்றன. ஹரிதாஸ் ஜாலா அந்தக் கூட்டத்தின் எதிரே நின்றவண்ணம் அந்த ஒட்டகத்தின் அம்பாரியின் மீது தன் கண்களைச் சில விநாடிகள்
அலையவிட்டான். அந்தச் சில விநாடிகளுக்குள் அவர்கள் யாரென்பதை உணர முடியாவிட்டாலும் ஒட்டகத்திலமர்ந்த அழகி ராஜபுதன உயர்குடியில் பிறந்தவளென்பதையும் புரவி வீரர் அவள் காவலர் ரென்பதையும் ஊகித்துக்
கொண்டதால் ஓரளவு நிம்மதியும் அடைந்தான். ஒட்டகத்தின் அம்பாரியிலிருந்த உயர்தரப் பட்டுச்சீலைகளையும் வெள்ளித் தகட்டால் மூடப்பட்ட அம்பாரித் தூண்களையும் கவனித்த அந்த வாலிப ராஜபுத்திரன், ‘மேவார் மன்னனின்
ஆட்சியில் போர்களால் ராஜபுதனத்தின் பெரும் செல்வம் அழிந்தும் ராஜபுத்திர ஸ்திரீகளின் படாடோபம் மட்டும் அழியவில்லை. பழைய சம்பிரதாயப்படியே அவள் அம்பாரி அமைத்துக் கொண்டு போதிய பாதுகாப்பின்றி
வந்திருக்கிறாளே’ என்று தனக்குள் எண்ணியதால் வெறுப்புக் கலந்த புன்முறுவலொன்றையும் தன் இதழ்களில் தவழ விட்டுக் கொண்டான். போதாக் குறைக்கு அவள் கழுத்திலும் கைகளிலும் விலைமதிக்க முடியாத ஆபரணங்களும்
நிரம்ப இருந்தன. அவள் கால்கள் சீலைக்குள் மறைந்து கிடந்ததால் அவற்றை ஹரிதாஸ் பார்க்க முடிய வில்லையே தவிர அவற்றிலும் பெரும் சிலம்புகள் இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டான். ஆனால் ஊகம் எதற்கும் அவசியம்
இல்லாமலும் சரியாகப் பார்க்காத கண்களையும் இழுக்கும்படியும் அவள் நெற்றிச் சுட்டியின் மத்தியில் சுடர்விட்ட சிவப்புக்கல் பெரும் மதிப்புள்ள தென்பதை ஆரம்பத்திலேயே பார்த்துவிட்ட ஹரிதாஸ் ஜாலாவுக்கு அந்தப் பெண்ணைச்
சந்தித்த நேரத்தில் ஏற்பட்டதெல்லாம் அவளைச் சுற்றியிருந்த ஆபத்தைப் பற்றியே தவிர அழகைப்பற்றி நினைக்கவும் இதயம் மறுத்தது.
உண்மையில் அவள் அழகும் பருவமும் முகச்சுட்டி ரத்தினத்தின் அழகை எடுபடாமல் அடித்திருந்தன. அவள் அம்பாரிமீது உட்கார்ந்திருந்த தோரணையிலும் பெரும் லாவகம் இருந்தது. ஜஹாங்கீர் அரண்மனையில் உலகத்தின் சிறந்த
ஓவியர்களால் வரையப்பட்ட ஒய்யாரச் சித்திரங்கள் கூட அவள் உட்கார்ந்திருந்த ஒய்யாரத்துக்கு இணையில்லை என்பது நிஜந்தான். அத்தகைய சித்திரங்களை ஹரிதாஸ் ஜாலா ஜஹாங்கீரிடம் பேசியபோது அவர் அறைச்சுவர்களில்
பார்த்ததும் வாஸ்தவந்தான். ஆனால் அந்தச் சித்திரங்களையும் அந்த அழகியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதிலோ அவள் அழகைப் பற்றிச் சிந்திப்பதிலோ அவன் அந்தத் தருணத்தில் ஈடுபடவில்லை. தவிர வாழ்வில் அவனுக்கு ஏற்பட்டிருந்த
வெறுப்பும் அதற்கு இடங் கொடுக்கவுமில்லை. அவன் அப்பொழுது சிந்தித்துப் பார்த்ததெல்லாம் அவளுக்கிருந்த ஆபத்தைப் பற்றித்தான். ஆகவே சில விநாடிகளிலேயே எதிரேயிருந்த கூட்டத்தை அளவெடுத்துக் கொண்ட ஹரிதாஸ்
ஜாலா அம்பாரியிலிருந்த அழகியை நோக்கி, “யாருக்குப் பயந்து ஓடி வருகிறீர்கள்?” என்று குரலில் இனிமையேதுமில்லாமல் சற்று முரட்டுத்தனமாகவே வினவினான்.
அவன் கேள்வியும் கேள்வியில் தொனித்த முரட்டுத் தனமும் அவளுக்கு ஆச்சரியத்தை அளித்ததா? அல்லது கோபத்தை அளித்ததா? இரண்டையும் நிச்சயமாகச் சொல்ல முடியாத உணர்ச்சி அவள் முகத்தில் பரவி நின்றது. அவனைப்
பார்த்த உடனேயே அவன் ராஜபுத்திர வம்சத்தில் பிறந்தவனென்பதையும் பெரும் வீரனென்பதையும் உணர்ந்து கொண்ட அந்த அழகி, அவனிடம் நாகரிகமும் பெண்களைப் பார்த்ததும் காட்ட வேண்டிய கண்யமும் இல்லாததைக் கண்டதால்
வெறுப்புடனேயே பதில் சொன்னாள், “ராஜபுதனத்துப் பெண்கள் இதயத்தில் பயம் கிடையாது” என்று.
இந்தப் பதிலைக் கேட்ட அவன் இதழ்களில் இகழ்ச்சி நகையொன்று படர்ந்தது. புரவிகளைப் பெரு வேகத்தில் துரத்தி வந்ததால் இறைக்க இறைக்க நின்று கொண்டிருந்த அவள் வீரர்களைப் பார்த்து அவளையும் பார்த்தான் ஹரிதாஸ்
ஜாலா. அந்தப் பார்வையைத் தொடர்ந்த கேள்வியிலும் இகழ்ச்சி படர்ந்து நின்றது. “அப்படியானால் ராஜபுதனத்துப் புருஷர்கள் இதயத்தில், பயமிருப்பதாகத் தெரிகிறது” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“என் வீரர்கள் இதயத்திலும் பயம் கிடையாது” என்றாள் அந்த அழகி.
“புரவி ஓட்டப் பயிற்சிக்குப் பாலைவனம் தகுந்த இடம் இல்லை” என்று உணர்த்தினான் ஹரிதாஸ் ஜாலா.
“ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டதாக யார் சொன்னது உனக்கு?”
“புரவிகள் ஓடி வருவதை நானே பார்த்தேன். அது போதாதென்றால் இதோ வீரர்களுக்கும் புரவிகளுக்கும் மூச்சு துரிதமாக வருகிறது. புரவி வீரர் விரைந்ததற்கு ஒன்று பயம் காரணமாயிருக்க வேண்டும், அல்லது புரவிப் பயிற்சி
காரணமாய் இருக்க வேண்டும். இரண்டில் எது காரணம்?”
அழகியின் கருவிழிகள் கனலைக் கக்கின. “எதுவானால் உனக்கென்ன? எங்களை வழிமறிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று சீறினாள் அவள்.
“கடமை அதிகாரத்தை அளிக்கிறது.”
“என்ன கடமை?”
“அபாயத்திலிருக்கும் பெண்ணுக்கு ராஜபுத்திரர்கள் உதவ வேண்டியது கடமை.
“அந்தக் கடமைதான் ராஜபுதனப் பெண்களை அவமதிக்கவும் இடங்கொடுக்கிறதா?
“அப்படியொன்றும் நான் அவமதிக்கவில்லையே.”
“யாருக்குப் பயந்து ஓடிவருகிறேனென்று கேட்கவில்லையா நீங்கள்?”
“கேட்டேன்.”
“அதில் அவமதிப்பில்லையா?”
“இல்லை”
“இல்லையா?”-அந்த அழகி கோபம் தலைக்கேறச் சீற்றத்துடன் அந்தச் சொல்லை உதிர்த்தாள்.
அவள் வார்த்தையில் கொட்டிய உஷ்ணம், அழகிய விழிகளில் தெரிந்த கொடூரம், இரண்டும் அந்த வாலிப வீரனின் முரட்டுத்தனத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தது. அவன் இதழ் ஒலிருந்து ஏளனப் புன்னகை மறைந்தது.
அந்த இடத்தில் கருணையும் சாந்தமும் கலந்த புன்முறுவல் தோன்றியது. பல வருஷப் போர்களாலும் இரண்டு வருஷ மொகலாய சிறைவாசத்தாலும் அவநம்பிக்கையும் வெறுப்பும் கலந்து பாறையாகிக் கிடந்த அவன் இதயத்திலும்
கருணையின் சுனை மெள்ளத் தோன்றியது. அதனால் நெகிழ்ந்த மனத்திலிருந்து எழுந்த உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளில் சற்றே பணிவு தெரிந்தது. அந்தப் பணிவின் விளைவாக சற்றுப் பொய்யும் பேச்சில் கலந்தது. “நான்
சொன்னதில் தவறில்லை; நீங்கள் தவறாகப் பொருள் கொண்டீர்கள்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“அப்படியா!-” இம்முறை அவள் சொற்களில் இகழ்ச்சி இருந்தது.
“ஆம்.” ஹரிதாஸ் ஜாலாவின் பதிலில் பணிவு இருந்தது.
“நீங்கள் விளங்கச் சொல்லுங்கள்” என்று இகழ்ச்சியுடன் கேட்டாள் அவள்.
“பயந்து ஓடி வருகிறீர்கள் என்று சொன்னது தவறாகப் பட்டது உங்களுக்கு” என்று அவன் இழுத்தான்.
“ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.
“பயம் என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் தவறாகாது. அது இருக்க வேண்டிய அம்சம்கூட.”
“அப்படியா!”
“ஆம்.
“உங்களுக்கும் பயம் உண்டா?”
“என்னைவிடப் பெரிய வீரர்களுக்கும் உண்டு.”
“உங்களைவிடப் பெரிய வீரர்களா?”
“காலஞ்சென்ற மேவார் ராணா பிரதாபசிம்மனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
ராஜபுதனத்தின் இணையற்ற வீரர்.”
“அவரும் சில சமயங்களில் ஓடியிருக்கிறார். அவர் ஓடினதும் அவர் சகோதரன் சக்திசிம்மன் அவரைத் துரத்தியதும் சரித்திரப் பிரசித்தம்.”
“அதற்கும் பயம் காரணமா?”
“ஆம். ஆனால் அது அவசியமான பயம்.”
“பயத்தில் அப்படியொன்று உண்டா?”
“உண்டு. பெரும் போர்களில் நமது படைகள் நாசமாகிவிடுமென்ற பயம் ஏற்பட்டால் பின்வாங்குகிறோம். நாம் பிடிபட்டால் நாட்டுக்கு ஆபத்து என்ற பயம் ஏற்பட்டால், எதிரி கையில் பிடுபடாமல் பின் வாங்கி ஓடுகிறோம். இவை
தர்மமான பயத்தின் அடையாளங்கள். சரித்திரம் இவற்றை வரவேற்கிறது. இந்த தர்மம் பெண்களுக்கும் உண்டு.
“பெண்களுக்கா!”
“ஆம்! இந்தப் பாலைவனம் மொகலாயர் படைத்தளத்தை நெருங்கியே இருக்கிறது. ஒரு நாள் பயணத்தில் மொகலாய சக்கரவர்த்தி இருக்கிறார். இந்த வட்டாரங்களில் மொகலாய வேவுப்படை வீரர்கள் சதா சுற்றி வருகிறார்கள்.
அவர்களிடம் நீங்கள் பயப்படுவதுதான் முறை. அந்தப் பயம் வரவேற்கத்தக்கது. அவர்களுக்குப் பயந்து ஓடுவதும், வரவேற்கத்தக்கது” என்று விளக்கினான் ஹரிதாஸ் ஜாலா.
அவனுடைய நுண்ணிய அறிவையும் பேச்சுத் திறமையையும் கண்டு ஆச்சரியத்தின் வசப்பட்டாள் அவள். தன் நிலைமையை அப்பட்டமாக அவன் அறிந்து கொண்டு விட்டதையும், ஆரம்பத்தில் உதிர்த்த அவமதிப்புச் சொல்லுக்கு
அர்த்த விளக்கம் கூறித் தான் சொன்னதில் தவறில்லையென்று சாதித்ததையும் கண்ட அந்த அரசகுமாரி அவனை நோக்கி இன்பப் புன்முறுவல் செய்தாள். அத்துடன், “நீங்கள் பேச்சில் வல்லவர்” என்றும் கூறினாள்.
“செயல்களிலும் அப்படி அற்பமல்ல” என்று கூறிய ஹரிதாஸ் ஜாலா, பெரிதாக நகைத்தான்.
“உங்களுக்குத் தற்புகழ்ச்சியில் பிரியம் போலிருக்கிறது” என்று குத்திப் பேசினாள் அவள்.
“தற்புகழ்ச்சியே எனக்குப் பிடிக்காது. உண்மை பிடிக்கும்” என்ற ஹரிதாஸ் ஜாலா, “அதோ அந்த மணல் திட்டிலிருந்தவன் உங்கள் ஆபத்தைக் கண்டு விரைந்து வந்ததே அதற்குச் சாட்சி” என்று கூறிவிட்டு, “இப்படியே நாம் விவாதித்துக்
கொண்டிருந்தால் மொகலாய வீரர்களுடன் கைகலக்க வேண்டியிருக்கும்” என்று உள்ள ஆபத்தையும் சுட்டிக் காட்டினான்.
அந்த அழகியின் ஆச்சரியம் பன்மடங்காகியது. “மொகலாய வீரர்கள் எங்களைத் தொடர்ந்து வருவது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினாள்.
“பெண்களைத் துரத்தும் நிலைக்கு ராஜபுத்திரர்கள் வரவில்லை. இந்த பாலைவனத்தை அடுத்திருப்பது ஒருபுறம் மொகலாயர், இன்னொரு புறம் ராஜபுத்திரர்” என்று சுட்டிக் காட்டினான் ஹரிதாஸ் ஜாலா..
‘நீங்கள் சொல்வது உண்மை. மொகலாய வீரர்கள் இன்னும் சில விநாடிகளில் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்” என்ற அந்த அழகியின் குரலில் கவலை மண்டிக் கிடந்தது.
அதைக் கேட்ட ஹரிதாஸ் ஜாலா சிறிது நேரம் சிந்தித்து விட்டு அவளுடைய வீரர்களை நோக்கிக் கேட்டான். “ராஜபுத்திரியை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று.
“பிரும்மபுரிக்கு” என்றான் அந்த வீரர்களின் தலைவன்.
“அதற்கு இன்னும் ஒருநாள் பயணமிருக்கிறதே!” என்று கூறினான் ஹரிதாஸ் ஜாலா.
“ஆமாம்.”
“அதுவரை மொகலாய வீரர்கள் உங்களைச் சும்மா விட்டு வைப்பார்களா?”
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய வீரர் தலைவனை வெறுப்பு மண்டிய கண்களுடன் நோக்கிய ஹரிதாஸ் ஜாலா மீண்டும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, “ராஜபுத்திரி!
நீங்கள் பிரும்மபுரியை அடைவது நடக்கக்கூடிய காரியமல்ல. உங்கள் ஒட்டகமும் வீரர் புரவிகளும் களைத்திருக்கின்றன. எந்த விநாடியிலும் மொகலாய வீரர்கள் உங்களைச் சூழலாம். வீரர்களை அழித்து உங்களைச் சிறைப் பிடித்துச்
செல்வதும் பெரும் காரியமல்ல அவர்களுக்கு. ஆகவே பிரும்மபுரியை மறந்து விடுங்கள். வேறு வழியிருக்கிறது” என்றான்.
“என்ன வழி” என்று கேட்டாள் அவள்.
“ஒட்டகத்தைப் படுக்கச் சொல்லி இறங்குங்கள் சொல்கிறேன்” என்றான் அவன்.
அவள் இறங்கியதும்” தொலை தூரத்திலிருந்த பாலைவனச் சோலையொன்றைச் சுட்டிக் காட்டினான் ஹரிதாஸ் ஜாலா. “ராஜபுத்திரி! அந்தச் சோலை பார்ப்பதற்குத்தான் அதிகத் தொலைவு. இங்கிருந்து கால்காதந்தான் இருக்கிறது.
நீங்கள் கால்நடையாகச் சென்றால் கதிரவன் மறையும் முன்பு அந்த இடத்தை அடைந்துவிடலாம். அதுதான் ஒண்டாலா சமவெளியின் ஆரம்பத் தோப்பு. அங்கு கூடாரமடித்துத் தங்குங்கள்” என்று யோசனையும் கூறினான்.
“கால்நடையாக ஏன் செல்ல வேண்டும்?” என்று வினவினாள் அந்த அழகி.
“காரணம் கேட்காதீர்கள்… என்னை நம்புங்கள். ஒரே ஒரு புரவி மீது கூடாரச் சீலைகள், முளைகள், இவற்றை ஏற்றிக் கொண்டு ஒரே ஒரு வீரனை மட்டும் துணை கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவிட்டு மற்ற வீரர்களைப்
புரவியிலிருந்து இறங்கும்படியும் கூறினான்.
படுத்திருந்த ஒட்டகத்தின் பக்கத்தில் நின்ற அந்த அழகிக்கு அவனிடம் என்ன காரணத்தினால் நம்பிக்கை உதயமாயிற்றோ சொல்ல முடியாது. அவன் சொன்ன படி செய்யுமாறு தனது வீரர்களுக்கு கட்டளையிட்டு ஒரு புரவியுடனும்
ஒரு வீரனுடனும் கால் நடையாகத் தோப்பை அடைவதற்கும் கதிரவன் மலைவாயிலில் விழுவதற்கும் நேரம் சரியாயிருந்தது. கூட வந்த வீரன் சீலைகளையும் முளைகளையும் கொண்டு அமைத்த கூடாரத்தில் நுழைந்த அவள்
பஞ்சணை மீதிருந்த சீலையொன்றைத் தரையில் விரித்து ஆயாசத்துடன் படுத்துக்கொண்டு விழிகளை மூடினாள்.
நாழிகைகள் ஓடின. சந்திரனும் எழுந்து அந்தத் தொப்பை மிக ரம்மியமாக அடித்தான். ஆனால் அந்த ராஜபுத்திரியின் இதயத்தில் பெரும் வேதனையே இருந்தது. நாழிகைகள் ஓடியும் தன் வீரர்களோ அந்த வாலிபனோ வராததைக்
குறித்து விவரிக்க இயலாத வேதனையடைந்தாள் அவள். அத்தனை வேதனையிலும் அந்த வாலிபன்பால் அவள் மனம் ஓடிக் கொண்டிருந்தது. அவனை நினைத்தபோது இன்பமான ஏதோ ஓர் அலை இதயத்தை ஊடுருவிச் சென்றது.
இன்பமும் வேதனையும் கலந்து நின்ற இதயத்துடன் சீலையை விட்டு எழுந்து கூடாரத்தின் வாயிலுக்கு வந்தவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றாள். எதிரேயிருந்த சுனையிலிருந்து அந்த வாலிபன்
சிரித்த வறண்ட சிரிப்பு தோப்பை ஊடுருவி அவளிருந்த இடத்தை நோக்கி வந்தது. நன்றாக உற்றுக் கவனித்தாள் அவள். தன் ஆடைகளை முக்கால்வாசிக் களைந்து இடையில் சிறு துணியுடன் தன் புரவியை அந்தச் சுனையில் நீராட்டிக்
கொண்டிருந்தான் அந்த வாலிபன். அப்படி நீராட்டிக் கொண்டு நின்ற அந்த வாலிபன் குதிரையின் முதுகைக் கைத்துணியால் தேய்த்துக் கொண்டே திரும்பிக் கூடாரத்தை நோக்கினான். அடுத்த விநாடி ராஜபுத்திரியைப் போலவே
அவனும் ஸ்தம்பித்தான். கூடார வாயிலில் ராஜபுத்திரியின் மோகன உருவம் நின்றிருப்பனதக் கண்டான். அதுவரை ஒலிபரப்பிய சிரிப்பு சட்டென்று நின்றது. அதன் இடத்தைப் பிரமிப்பு ஆட்கொண்டது. நிலவில் நின்ற அந்த நேரிழையை
அவன் கண்கள் அணு அணுவாக ஆராய முற்பட்டன. பருவப் பெண்ணை அப்படி நோக்குவது அதர்மம் என்பதை அவன் மனம் உணர்ந்தது. புத்தி உணரவில்லை. புத்தியால் இயக்கப்பட்ட இந்திரியங்களும் உணரவில்லை.

Previous articleNaga Deepam Ch1 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch3 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here