Home Historical Novel Naga Deepam Ch22 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch22 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Naga Deepam Ch22 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch22 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch22 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22. சரித்திர இரத்தினம்

Naga Deepam Ch22 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

எந்த நாகதீபத்தை முடியுமானால் நேர்வழியிலும் முடியாவிட்டால் வேறு முறையிலும் கொண்டு வருமாறு மொகலாயச் சக்கர வர்த்தியான ஜஹாங்கீர் பணித்தானோ, எதைக் கொண்டு வருவதாகத் தன் வாளின் மீது ஆணை வைத்து
வந்திருக்கிறானோ, அந்த நாகதீபத்தைக் காக்கும் பொறுப்பை ராணா தன் மீதே சுமத்துவது கண்டு பெரும் வியப்படைந்த ஹரிதாஸ் ஜாலா, அந்த நாகதீபம் ராஜபுதனத்தின் உயிர் என்றும், அது இல்லையேல் ராஜபுதனம் இல்லையென்றும்
ராணா கூறியதும், அப்பேர்ப்பட்ட மகத்துவம் அதற்கு என்ன இருக்க முடியுமென்று நினைத்துப் பார்த்தான். அந்த மாபெரும் ரகசியம் மன்னர்களுக்கும், ஜஹாங்கீருக்கும், ராணா அமரசிம்மனுக்கும் விளங்கியிருக்கிறதென்பதை அறிந்ததால்
அது ஒரு மாணிக்கக் கல் என்பதைவிட அத்துடன் ஒட்டிய வரலாறு ஏதோ ஒன்று இருக்க வேண்டுமென்பதை மட்டும் ஊகித்துக் கொண்டான். இத்தகைய யோசனைகளில் சற்றே தயங்கி நின்ற ஹரிதாஸ் ஜாலாவைப் பார்த்த மன்னர் அவன்,
உள்ளூர ஓடிய யோசனையைத் தவறாகப் பொருள் செய்து கொண்டு, “உனக்கு வியப்பாகத்தானிருக்கும் ஹரிதாஸ் ஒரு மாணிக்கத்துக்கு என்ன அத்தனை சக்தி என்பது ஆச்சரியமாக இருக்கும். நீ முதலில் அதைப் பார். பிறகு அதன்
மகத்துவத்தைச் சொல்கிறேன், வா இப்படி” என்று அவனை அழைத்துக் கொண்டு, தனது ஆசனத்திலிருந்து எழுந்து அவனைச் சந்தித்த அறையிலிருந்து உட்புறம் நோக்கி மெள்ள நடந்தார். ஹரிதாஸ் ஜாலாவின் மனம் பலதரப்பட்ட
துறைகளில் சஞ்சரித்துக் கொண்டு இருந்ததால், அவன் ஏதும் பேசாமலே ராணாவைப் பின் தொடர்ந்தான். ராணா மிகவும் மௌனமாகவும் அடி. மேலடி வைத்தும் ஏதோ தெய்வ சந்நிதானத்துக்குச் செல்லும் பக்தன் போலவும், முதல்
இரண்டு கட்டுகளைத் தாண்டி நடந்தார். இரண்டு கட்டுகளிலும் காவல் வீரர் இரண்டொருவரே இருந்தாலும், உருவிய வாளும் கையுமாக அவர்கள் நின்று கொண்டிருந்த தையும், முன்னெச்சரிக்கையின்றி யார் கட்டுக் கதவுகளைத்
திறந்தாலும், அவர்கள் விசாரணையின்றி இந்தத் தளத்திலேயே வெட்டிப் போடப்படுவார்கள் என்பதையும், அந்த வீரர்கள் நின்ற தோரணையிலிருந்து புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, நாகதீபத்தின் மதிப்பு மிக உயர்ந்ததாக
இல்லாவிட்டால் ராணா இத்தனை பந்தோபஸ்தை அதற்கு வைத்திருக்கமாட்டார் என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டான். அந்த இரண்டு கட்டுகளைத் தாண்டியதும் ராணா திடீரென வேறொரு வழியில் திரும்பித் திரையொன்றை
விலக்கி உள்ளே நுழைந்தார்.
ஹரிதாஸ் ஜாலா மன்னரைத் தொடராமல் ஸ்தம் பித்து நின்றான். மகாராணா நுழைந்தது பொக்கிஷ அறை அல்லவென்பதையும், அரண்மனையின் வலது புறத்திலிருந்த அந்தப்புரம் என்பதையும் திரைச்சீலை விலக்கப்பட்லிருந்தே
புரிந்துகொண்ட ஹரிதாஸ் ஜாலா, ராஜபுத்திரர் வழக்கப்படி வெளியே நின்றான். திரைக்குள்ளே சென்ற மன்னர் மீண்டும் திரையை விலக்கி வெளியே தலையை நீட்டி, “ஏன் நின்று விட்டாய்? வா” என்று அழைத்தார்.
மன்னர் அப்படி ஆணையிட்டும் ஹரிதாஸ் ஜாலாவின் கால் இருந்த இடத்தைவிட்டுப் பெயரவில்லை. “அந்தப்புரமாயிற்றே” என்று இழுத்தான் தயக்கத்துடன்.
“இருந்தாலென்ன?” மன்னர் குரலில் சற்றுச் சினம் இருந்தது.
“ராணாவின் அந்தப்புரத்துக்குள் நுழைபவர்களுக்கு மரண தண்டனை உண்டு ராஜபுதன வழக்கப் படி” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“தண்டனை விதிக்க வேண்டியது யார்?”
“ராணாதான்.”
“நானே அழைக்கிறேன்.”
அதைக் கேட்டும் பண்பாடு மிகுந்த ராஜபுத்திரனின் கால்கள் நகர மறுத்தன.” இருப்பினும்…” என்று சங்கடத்துடன் ஏதோ சொல்ல முற்பட்ட ஹரிதாஸ் ஜாலாவின் சொற்களை, மன்னர் சினத்துடன் குறுக்கே புகுந்து வெட்டினார்.
“ஹரிதாஸ்!” என்று அவர் குரல் பயங்கரமாக ஒலித்தது.
“ராணா!” பணிவுடன் எழுந்தது ஹரிதாஸின் பதில்,
“ராணாவின் உத்தரவை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?”,
“தெரியும்… மரண தண்டனை.”
“உத்தரவை மீறாதே, வா என்னைத் தொடர்ந்து” என்று கூறிவிட்டுத் திரைச்சீலையை அகற்றி ஹரிதாஸ் ஜாலாவுக்கு வழிவிட்டு நின்றார் ராணா. வேறு வழியின்றி அந்தப்புரத்திற்குள் புகுந்தான் ஹரிதாஸ், ராணா வழிகாட்டிக்
கொண்டு நடக்க, அவனும் அவரைத் தொடர்ந்து நடந்தான். அந்தப்புரத்துக்குள் அறைகள் பல இருந்தன. உள்ளே ராணாவின் மகிஷிகளுக்குத் தோழிகளாய் வந்த ராஜபுதனப் பெண்மணிகள் பலர் வழி நெடுக உலாவிக்
கொண்டிருந்தனர். ராணாவைக் கண்டதும், அந்த அழகிகள் பலர் வழிவிட்டு நின்றார்கள். அவருடன் வந்த ஹரிதாஸ் ஜாலாவைக் கண்டதும் பயத்துக்குப் பதில் வியப்பையே காட்டினார்கள். அந்தப்புரத்தில் ராணாவும் அவருடைய
புத்திரர்களும் மைத்துனரும் தவிர வேறு யாரும் புகுவதற்கு அதிகார மில்லாதிருக்க, ஒரு புது ஆடவனை ராணா அழைத்துக்கொண்டு நுழைந்து யாரையும் லட்சியம் செய்யாமல் நெடுகப் போய்க் கொண்டிருந்ததைக் கண்டு, ஒருவருக்
கொருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொண்டார்கள். ராணாவின் குரல் கேட்டதுமே முதலில் வலப்பக்க அறையிலிருந்த ராஜமகிஷியொருத்தி தலையை வெளியே நீட்டி ராணா தனியாக வரவில்லை என்பதை அறிந்ததும் தலையை
உள்ளுக்குள்ளே இழுத்துக் கொண்டாள். அந்த மலர் முகத்தை ஒரு விநாடி சரேலென்று பார்த்த ராணா புன்முறுவல் செய்துவிட்டு மேலே நடந்தார்
இப்படிப் பல பெண்கள் குறுக்கிட்டு நடமாடிய போதிலும், தன்னை அவர்கள் உற்றுப் பார்த்த போதிலும், ஹரிதாஸ் ஜாலா குனிந்த தலை நிமிராமல் பக்கத்துக்குள் வரும் புது நாட்டுப் பெண்ணைப்போல், மன்னரைப் பின்தொடர்ந்து
நடந்தான். மன்னர் இரண்டு பக்கத்து அறைக்குள் இடையே இருந்த நீண்ட தாழ்வாரத்தில் நடந்து சென்று கடைசியாக இருந்த ஒரு பெரு அறையின் முன்பு வந்து நின்றார். அந்த அறையின் முகப்பில் பெருந் திரைச் சீலைகள் தொங்கிக்
கொண்டிருந்தன. அந்தத் திரைச் சீலைகள் விலை உயர்ந்த பட்டுக்களால் தயாரிக்கப்பட்டிருந்ததையும், அவற்றில் பெரும் சரிகைச் சித்திரங்கள் போடப்பட்டு விளக்கொளியில் அந்தச் சித்திரங்கள் ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக்
கொண்டிருந்ததையும் கவனித்தான் ஹரிதாஸ். அந்தத் திரைச் சீலைகளுக்கு முன்பு வந்ததும் சட்டென்று நின்ற ராணா, ‘யாரங்கே?” என்று இருமுறை அழைத்தார்.
தாதியொருத்தி வெளியே தலையை நீட்டி ராணாவைப் பார்த்ததும், தலை தாழ்த்தித் திரையை நீக்க முயன்றாள். “வேண்டாம்” என்று கையால் சைகை செய்த ராணா, “மகாராணியைப் பார்க்க என்னுடன் மற்றொருவரும் வந்திருப்பதாகச்
சொல்” என்றார். மகாராணாவின் இந்த எச்சரிக்கையாலும் ஏற்பாடுகளாலும் அந்த அறை பெரிய மகாராணியின் அறை என்பதைப் புரிந்துகொண்ட ஹரிதாஸ் ஜாலா, பெரும் அச்சத்துடன் நின்றான். ராஜபுதனத்தின் பிரதம மந்திரியும்
பிதாமஹரும்கூட எளிதில் காணமுடியாத மேவாரின் பட்டமகிஷியைத்தான் சந்திக்கப் போவதை நினைத்தவுடன், ஹரிதாஸ் ஜாலாவின் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டது. வாள் பலத்தாலேயே சாம்ராஜ் யத்தைப் பரப்பிய
ஜஹாங்கீர் முன்பு அச்சமின்றி நின்ற ஹரிதாஸ் ஜாலாவின் பண்புள்ள உள்ளம் ராஜபுதனப் பட்டமகிஷியும், இளவரசனும் பட்டத்துக்குரியவனுமான கருணாசிம்மனின் தாயுமான ராஜபுதனத்தின் பிரதான அழகியைச்
சந்திக்கப்போகிறோமென்ற நினைப்பால் நடுங்கவே செய்தது. சில நிமிஷங்கள் கழித்துத் திரை விலக்கப்பட்டதும் பட்டமகிஷியின் அறைக்குள் நுழைந்த ராணாவை மிகுந்த அச்சத்துடனேயே பின் தொடர்ந்தான் ஹரிதாஸ் ஜாலா.
அந்த விசாலமான அறையின் நடுவிலிருந்த மஞ்சத்தில் அமர்ந்த மகாராணி, ராணா நுழைந்ததும் எழுந்திருந்து தலை வணங்கி தலை முக்காட்டை நன்றாக இழுத்து விட்டு முகத்தை மறைத்து நின்றாள். அதைக் கண்ட ராணா ஹரிதாஸின்
அச்சத்தை மேலும் உயர்த்த சொன்னார். “இவனை நீ பார்க்கலாம் ராணி! நம் மானத்தைக் காக்க இவனை அழைத்து வந்திருக்கிறேன்” என்று.
அதைக் கேட்டும் குனிந்த தலையை நிமிர்த்தாத ராணி “நம் மானத்தைக் காக்கவா?” என்று கேட்டாள். அவள் குரலில் வியப்புத் தொனி இருந்தது.
“ஆம் மகாராணி!” என்று திடமாகச் சொன்னார் ராணா.
“புரியவில்லை மகாராணா” என்றாள் மகாராணி.
“நாகதீபத்தைக் காக்க இவனை அழைத்து வந்திருக்கிறேன்” என்றார் ராணா, உறுதி பூர்ணமாக ஒலித்த குரலில்.
இதைக்கேட்ட ராணியின் போக்கு திடீரென மாறுதலடைந்தது. தலையை மின்னல் வேகத்தில் உயர்த்திய மகாராணி, தாமரையும் கண்டால் வெட்கும் முகத்தை மறைத்திருந்த பட்டுச் சீலையை விலக்கினாள். மிக அழகிய கண்கள் ஹரிதாஸ்
ஜாலாவை ஏறிட்டு நீண்ட நேரம் பார்த்தன. அந்தக் கண்கள் மெள்ள மெள்ள மென்மைப்பட்டதைக் கண்ட ராணா சாந்திக்கு அறிகுறியாகப் பெருமூச்செறிந்தார்.
அடுத்தபடி ஒரு கேள்வி கேட்ட ராணியின் குரலும் மென்மையாக ஒலித்தது. “இவர் யார் மகாராணா?”
“ஹரிதாஸ் ஜாலா!” என்றார் மகாராணா.
இதைக் கேட்டதும் மகாராணி கண்களில் லேசாக அச்சம் உதயமாவதைக் கவனித்தார் ராணா. “ஏன் மகாராணி! ஹரிதாஸ் ஜாலாவைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா! கேள்விப்படாதவர்கள் ராஜபுதனத்தில் யாருமில்லையே” என்று
கூறினார்.
“ஹரிதாஸ் ஜாலாவைப் பற்றிக் கேள்விப்படாவிட்டால் நான் ராஜபுதனத்தின் ராணியாக எப்படி இருக்க முடியும்?” என்ற ராணியின் குரலில் பெரும் சந்தேகத்தொனி இருந்ததை ராணா மட்டுமல்ல ஹரிதாஸும் கவனித்தான். ராணிக்குத்
தன்னைப் பற்றி முன்பே ஏதோ செய்தி எட்டி இருக்கிறதென்பதைப் புரிந்துகொண்ட ஹரிதாஸ் ஜாலா, அது என்னவாயிருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதைப் பற்றி ராணாவே பேச்சைத் தொடங்கிக் கேட்டார். “ஏன்
மகாராணி, ஹரிதாஸைப் பற்றி என்ன கேள்விப்பட்டாய்?” என்று.
“மொகலாயர் சிறையிலிருந்திருக்கிறார்…” மேலே சொல்லத் தயங்கினாள் ராணி.
“ஆம்” என்ற ராணாவின் குரலில், “மேலே என்ன” என்ற கேள்வியும் தொக்கி நின்றது.
“சமீபத்தில் தான் விடுதலையடைந்திருக்கிறார்…”
“ஆம்.”
“மொகலாயர் தூதராக வந்திருப்பதாகக் கேள்வி”
“ஆம்.”
“ஆனால்?”
“ஒற்றனென்று நினைக்கிறாய்” ராணாவின் முத்தாய்ப்பு சரேலென்று வெளி வந்தது.
அந்த இருவர் சம்பாஷணையையும் கேட்ட ஹரிதாஸ் ஜாலா பெரிதும் திகைப்படைந்து நின்றான். தான் ஒண்டாலா கோட்டையை அடைவதற்குள் தன்னைப் பற்றி பூரா விவரமும் ஒண்டாலா கோட்டைக்குள் மட்டுமல்ல,
அந்தப்புரத்துக்குள்ளும் நுழைந்து விட்டதைக் கண்டு பெரும் பிரமிப்பு அடைந்தான். தன் இதயத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பரம ரகசியங்களை ராணாவும் அவர் மகிஷியும் சர்வ சகஜமாகப் பேசுவதைக் கேட்ட அவன் மேலே என்ன
நடக்குமோவென்று ஓரளவு அச்சமும் கொண்டிருந்த தருணத்தில் மகாராணா சிரித்தது பெரும் விந்தையாய் இருந்தது ஹரிதாஸ் ஜாலாவுக்கு. ஆனால் மகாராணாவின் அடுத்த பரிகாச வார்த்தைகள் அவன் இதயத்தில் வேறு
உணர்ச்சிகளைக் கிளப்பின.
மகாராணி! உங்கள் இருவரில் யார் சிறந்த ஒற்றர் என்பது புரியவில்லை” என்றார் மகாராணா.
“மகாராணா!” கோபத்துடன் எழுந்தது பட்ட மகிஷியின் பேச்சு.
கோபிக்காதே மகாராணி! இவன் உளவறிய வந்திருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால், இவனைப் பற்றி நீ ஏற்கெனவே பூரணமாக உளவறிந்து வைத்திருக்கிறாய். இதில் யார்…?” மகாராணா வார்த்தையை முடிக்கவில்லை.
மகாராணி ஒரு விநாடி மௌனமாயிருந்தாள். பிறகு கேட்டாள், “ஹரிதாஸ் ஒற்றனல்லவென்பதை நீங்கள் நிச்சயமாகக் கூறமுடியுமா?” என்று.
“முடியாது”
“அப்படியானால்…”
“ஒற்றனென்றும் கூற முடியாது. இவன் விஷயத்திலிருப்பது சந்தேகந்தான். இவனையே கேட்டு விடலாமே” என்ற மகாராணா “ஹரிதாஸ்! நீ ஒற்றனா தூதனா?”
மகாராணியின் கண்கள் ஆச்சரியத்தால் பெரிதாய் மலர்ந்தன..
“இவரையே கேட்டால்…” என்று ஏதோ துவங்கியவளை ராணாவின் குரல் கடுமையுடன் தடுத்தது. “இவன் ஜாலா வம்சம்” என்று.
“ஆம்…” என்றாள் ராணி.
“ஜாலா வம்சத்தார் உயிரை இழப்பார்கள். பொய் சொல்ல மாட்டார்கள். ராஜபுதனத்தின் ராணியான நீ இதை அறிந்திருக்க வேண்டும்.”
இப்படிக் கடுமையாகக் கூறிய ராணா, “சொல் ஹரிதாஸ. நீ யார்… தூதனா, ஒற்றனா?” என்று ஹரிதாஸை நோக்கிக் கூறினார்.
“தூதன்.” சந்தேகமின்றிப் பதில் சொன்னான்.
ராணா மகாராணியை வெற்றிப் பார்வையுடன் பார்த்தார். அத்துடன் சொல்லவும் சொன்னார் “ராணிகளின் உறவினர்களால் ராஜபுதனம் பலமுறை கெட்டிருக்கிறது மகாராணி, ஆனால் அமரசிம்மன் அதற்கு இடங்கொடுக்க முடியாது.
சுந்தர்தாஸ் முன்பே உன்னிடம் வந்து இல்லாத பொய்களைக் கூறி விட்டுச் சென்றிருப்பது எனக்குத் தெரியும்…” என்று மேலும் ஏதோ சொல்லப் போன ராணாவை “மகாராணா” என்ற ராணியின் அதட்டலான குரல் சிறிது தேக்கியது.
“என்ன மகாராணி?” என்று ராணா கேட்டார்.
“அந்தப்புரத்தின் மீதும் வேவு பார்க்க ஆள் வைத்திருக்கிறீர்களா?”
“இல்லையே.”
“பின் சுந்தர்தாஸ் என்னை சந்தித்துச் சென்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“சுந்தர்தாஸின் குணத்தால் தெரியும். அது மட்டுமல்ல!”
“வேறென்ன?”
“உன் பார்வையும் பேச்சும் காட்டிக் கொடுத்தன.”
“எப்படி?”
“சுந்தர்தாஸ் வந்து போய்விட்டானென்பதை உன் பார்வையிலிருந்து தெரிந்து கொண்டேன். மீதியை ஊகித்தேன். இத்தனை ஊகமில்லாமல் நான் ராஜபுதனத்தை ஆள முடியுமா? தவிர மகாராணி, என் அந்தப் புரமும், சதிக்
கூடமாகாமல் பார்த்துக் கொள்வதும் எனது கடமை அல்லவா?” என்று கூறிய மகாராணா, “சரி மகாராணி! நாகதீபத்தைக் கொண்டுவா” என்று திட்டமாகக் கூறியதன்றி, “சுந்தர்தாஸ் பரம அயோக்கியன்” என்றும் தெரிவித்தார்.
ராணியின் முகத்தில் கோபம் ஏறியது. “அவன் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரன்.”
“கூடப் பிறந்தவனாயிருந்தாலுந்தானென்ன, உடன் பிறந்தே கொல்லும் வியாதி.
மகாராணி மேற்கொண்டு பேசவில்லை. மகாராணாவின் முகத்தில் இருந்த ஏதோ ஒரு பார்வை அவளை உள்ளே விடுவிடு என்று செல்ல வைத்தது. உள்ளிருந்து ஒரு பேழையைக் கையில் கொண்டு வந்த மகாராணி அதைத் திறந்தாள்.
அந்த அறை பூராவும் திடீரெனச் செங்கதிர்கள் பாய்ந்தன. சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்தப் பெரும் இரத்தினத்தின் மீது கண்களை நாட்டிய ஹரிதாஸ் ஜாலா, கண்களை அதில் இருந்து மீட்க முடியாமல் திண்டாடினான்.

Previous articleNaga Deepam Ch21 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here