Home Historical Novel Naga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

55
0
Naga Deepam Ch23 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 23. பதினைந்து நாட்களுக்கு

Naga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சிசோதய வம்சத்தினரால் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தக் குடும்ப இரத்தினத்தின் மீது முதல் முதலாக கண்களை நாட்டிய ஹரிதாஸ் ஜாலா, விநாடிகள் ஓடஓட அதன் பெருமையைப் பரிபூரணமாக
உணர்ந்து கொண்டதால், பேச நா எழாமல் பிரமை பிடித்து நின்றான். மகாராணி பேழையைத் திறந்தவுடன் அவன் அதன் மத்தியில் கண்டதும் ஒரு பெரும் சிவப்புக் கல் தான். அதிக ஒளியும் அதனிடம் தெரியவில்லை ஆரம்பத்தில், ஆனால்
மெள்ள மெள்ள ஆதவனின் காலைக் கிரணங்கள் போல அதிலிருந்து லேசான செங்கதிர்கள் கிளம்பத் தொடங்கின. விநாடிக்கு விநாடி அந்தச் செங்கதிர்கள் அதிகமாகி அந்த அறையின் நிறத்தையே சிவப்பாக அடிக்கத் தொடங்கின. முதலில்
ஏதோ பழுதடைந்தது போல் காணப்பட்ட அந்த நாகரத்தினம் மெள்ள மெள்ளச் சிவந்து சில விநாடிக்குள் பெரும் நெருப்புத் துண்டம் போல் அந்தப் பேழைக்குள் ஜொலித்தது. அந்த நெருப்புத் துண்டத்திலிருந்து புகை வாணம் போல்
கிளம்பிய சிவந்த கதிர்கள் அறையில் இரத்தச் சிவப்பை எங்கும் அள்ளித் தெளித்தன. சில விநாடிக்குள் அறைக்குள்ளிருந்த பந்தங்கள் விளக்குகள், திரைச் சீலைகள் எல்லாமே சிவப்புமயமாக மாறின. ராணாவும் ராணியுங்கூட அந்தச்
சிவப்பில் மூழ்கி அமரருலகிலிருந்து அப்பொழுது இவ்வுலகம் வந்த தேவதைகள் போல் காட்சியளித்தனர். அந்த அற்புதத்தைக் கண்டு பிரமிப்பால் ஏதும் பேசாமல் நின்ற ஹரிதாஸ் ஜாலாவின் காதில் அரசர் எங்கோ தொலைவிலிருந்து
பேசுவது போன்ற பிரமை ஏற்பட்டது.
“ஹரிதாஸ்! சிசோதயர்களின் இணையற்ற, தெய்விகமான குடும்ப இரத்தினத்தை உன் கண்கள் பார்க்கின்றன இன்று. இதைப் பார்த்தவர்கள் வெகு சிலர். அபகரிக்க முயன்றவர்கள், யாரும் இதுவரை உயிருடன் இருந்ததில்லை. இதைத் திருட
முயன்றதற்காக எங்கள் பெரியோர்கள் பலரைத் தூக்கிலிட்டிருக்கிறார்கள். வெட்டியிருக்கிறார்கள்” என்று ராணா மிகவும் உறுதியான குரலில் மெள்ள மெள்ள வார்த்தைகளை உதிர்த்தார்.
மகாராணாவின் சொற்கள் அந்த இரத்தினத்தின் மதிப்பை மிகவும் உயர்த்திக் காட்டவே, அந்த இரத தினத்தைப்பற்றி ஏதோ பெரும் இரகசியம் இருக்கிறதென்பதைப் புரிந்துகொண்ட ஹரிதாஸ் ஜாலா, அதை அறிய விரும்பி இரத்தினத்தை
விட்டுக் கண்ணை எடுக்காமலே, “மகாராஜா! ஓர் இரத்தினத்துக்காக அத்தனை உயிர்க் கொலையா?” என்று வினவினான் மிகவும் பயபக்தியுடன்.
“இது சாதாரண இரத்தினமல்ல ஹரிதாஸ்! இது எங்கள் குடும்பத்தின், ஏன் ராஜபுதனத்தின் உயிர். உயிரைக் கவர வருபவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை இதைக் கவர வருபவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது” என்று விளக்கிய
மகாராஜா, இரண்டடி நடந்து அந்தப் பேழையை மூடினார்.
அந்த அறையில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. அறையின் சிவப்பு மந்திரத்தால் மறைவது போல் மறைந்தது. மகாராணாவும் மகாராணியுங்கூட அமர உலகத்திலிருந்து மனித உலகத்துக்கு மீண்டார்கள், அப்படி இரத்தினப் பேழையை
மூடியதால் ஏற்பட்ட மாறுதலால் தன் இரு கண்களையும் துடைத்துக் கொண்டு மகா ராணாவையும் மகாராணியையும் ஏறெடுத்து நோக்கிய ஹரிதாஸ் ஜாலா கேட்டான்: “ஏன் பேழையை மூடி விட்டீர்கள் மகாராணா?” என்று.
“இரத்தினத்தின் ஒளி வீச்சு மதியை மயக்கவல்லது. நாம் தெளிவாகப் பேச முடியாது. ஆகையால் தான் பேழையை மூடினேன். ஹரிதாஸ்! இரத்தினத்தை நீ பார்த்து விட்டாய். ஆனால் இதன் வரலாற்றை நீ அறியமாட்டாய் அறிந்தவர்கள் சிலர்
உண்டு. அதில் இருவர்…” என்ற மகாராணா மேற்கொண்டு என்ன காரணத்தாலோ தயங்கினார்.
“சொல்லுங்கள் மகாராணா?” என்ற ஆவலுடன் கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
ராணாவின் பதில் ஹரிதாஸ் ஜாலாவை அயர வைத்தது. “அதில் ஒருவர் ஜஹாங்கீர் நூர்ஜகான்” என்று மெள்ள அழுத்தி வார்த்தைகளை உச்சரித்தார் ராணா.
ஹரிதாஸ் ஜாலா பதில் சொல்லவில்லை, உள்ளே எழுந்து மோதிய உணர்ச்சி அலைகளால் மௌனம் சாதித்தான். மகாராணாவே மேற்கொண்டு சொன்னார். “இந்த இரத்தினத்தின் சிறப்பு ஜஹாங்கீரின் காதுக்கு எட்டி இருக்கிறது. இது
யாரிடம் இருக்கிறதோ அவர்கள் சுதந்தரத்தை இழக்க மாட்டார்கள் என்ற ராஜபுதன மக்களின் நம்பிக்கையும் மொகலாயச் சக்கரவர்த்தியின் காதில் விழுந்திருக்கிறது. அதை எப்படியாவது வரவழைத்து நூர்ஜகான் கிரீடத்தில்
பதிக்கப்பார்க்கிறார் ஜஹாங்கீர். இது என்று ராஜபுதனத்தை விட்டு நீங்குகிறதோ அன்று முதல் ராஜபுதனத்தின் சுதந்தரம் பறிபோய்விடும்…”
இந்த இடத்தில் மகாராணா தனது பேச்சை நிறுத்தி ஹரிதாஸின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். “மகாராணா ராஜபுதனத்தின் சுதந்தரம் வீரர்களின் வாட்களாலல்லவா காக்கப்படுகிறது?” என்றான் ஹரிதாஸ்.
மகாராணாவின் முகத்தில் சிந்தனை தீவிரமாகப் படர்ந்தது. “ஆம் ஹரிதாஸ்! ராஜபுதனத்தின் வீரர்கள் தாம் ராஜபுதனத்தைக் காக்கிறார்கள். ஆனால் எதற்கும் ஒரு மூல மந்திரம் உண்டு. மூலபலம் உண்டு. அந்த மூல மந்திரம், மூல பலம்
இந்த இரத்தினமென்று என் முன்னோர்கள் நம்பியிருந்தார்கள். அது சரியான நம்பிக்கையோ, அல்லவோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன” என்றார்.
“என்ன ஆதாரங்கள் ராணா?” என்று வினவினான் ஹரிதாஸ்.
“சிசோதய வம்சத்தை ஸ்தாபித்த பாப்பா ராவூல் கழுத்தில் இந்த இரத்தினத்தைக் கட்டியவர் ஒரு முனிவர் என்று வரலாறு இருக்கிறது, அதன் சக்தியால் பாப்பாராவூல் கீழ்த்திசையில் ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று முனிவர்
சொன்னாராம். சிசோதய வம்சம், ராஜபுதன அரசு ஸ்தாபிக்கப்பட்டது. பிறகு பலமுறை சித்தூர் அழிந்தது. ராஜபுதன வீரர்கள் மாண்டார்கள் ஆனால் சுதந்தரம் பறிபோகவில்லை. என் தந்தை ராணா பிரதாப் சிம்மர் வரலாறுதான் உனக்குத்
தெரியுமே. அவரிடம் வீரபலம் எத்தனையிருந்தது?”
“மிகச் சொற்பம். ராஜா தோடர்மால், மான்ஸிங் எல்லோருமே அக்பரிடம் சேர்ந்து விட்டார்கள்.”
“அப்படியிருந்தும் ராணா பிரதாப் இருபத்து ஐந்து ஆண்டுகள் மொகலாய சாம்ராஜ்யத்தை ஆட்டி வைத்தார். நாடிழந்த. படையிழந்த அவர் ராஜபுதனத்தின் மலைகளிலும் காடுகளிலும் அலைந்தார். ராஜபுதன சுதந்தரக் கொடியுடன்,
ராஜபுதன மானத்துடன், அத்தனை மலைகளிலும் காடுகளிலும் ஓடியபொழுதும் இந்தப் பேழையை அவர் கைவிடவில்லை. இந்த நாக ரத்தினம் நாகம் போன்றது. சில சமயம் படத்தைப் போட்டுக் கொண்டு படுக்கிறது. மறுபடியும்
படமெடுத்துச் சீறுகிறது. பிரதாப்புக்குப் பின் ராஜபுதனம் சீறி எழவில்லையா ஹரிதாஸ்? எத்தனை முறை பிதாமஹரைத் தளபதியாகக் கொண்ட ராஜபுதனப் படைகள் மொகலாயர் படைகளை வெற்றி கொண்டன! இதுவரை பதிநான்கு
பெரும் போர்கள் நடந்திருக்கின்றன. பதினான்கிலும் வெற்றி கண்டிருக்கிறோம்” என்றார் மகாராணா உணர்ச்சியுடன்.
ஹரிதாஸும் உணர்ச்சி வசப்பட்டான். ஆம், ராணா, ஆம்! வெற்றி கண்டிருக்கிறோம். ஆனால் அந்த வெற்றிகள்…” ஏதோ கேட்க முற்பட்ட ஹரிதாஸ் பேச்சைச் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.
அவன் கேள்வியை ஊகித்துக் கொண்ட ராணா சொன்னார் : “வெற்றிகளுக்கு இந்த இரத்தினந்தான் காரணமா என்று கேட்கிறாய். ஆம் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் அனைவரும் நம்பியிருக்கிறார்கள். என் மூதாதையர்கள்
அனைவரும் நம்பியிருக்கிறார்கள். என் மூதாதையர்கள் சாதாரண வீரர்கள் அல்லரென்பது வரலாறு அறியும். அவர்களும் நம்பியிருக்கிறார்கள்” என்று மேலும் பேச முற்பட்ட அவர், “அது மட்டுமல்ல…” என்றார்.
“வேறென்ன மகாராணா?” என்று கேட்டான் ஹரிதர்ஸ்.
“இப்போது எதிரியான ஜஹாங்கீரும் நம்புகிறார். இது என்னிடம் இருக்கும் வரையில் ராஜபுதனம் தலை வணங்காது என நினைக்கிறார். ஆகவே இதை உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும்” என்று மகாராணா உக்கிரத்துடன்
பேசினார்.
ஹரிதாஸ் ஜாலா ஏதோ சொல்லத் தொடங்கினான். அவனைப் பேச வேண்டாமென்று சைகை செய்த மகாராணா “ஹரிதாஸ்! இதை உயிரைக் கொடுத்து நீ காக்க வேண்டும். இனி இந்த அரண்மனையும் இதைக் காக்காதென்று
தோன்றுகிறது” என்றார்.
மகாராணியின் புருவங்கள் கோபத்துடன் எழுந்தன. “என்னைச் சந்தேகிக்கிறீர்களா மகாராணா?” என்று சீறினாள் மகாராணி.
“மகாராணி! உன்னிடமிருந்து இதைக் காப்பாற்ற முயலவில்லை நான். உன் உறவினனிடமிருந்து காக்க முயலுகிறேன்” என்றார் திட்டமாக மகாராணா…
“அவன் தான்…” என்று ஏதோ ஆரம்பித்த மகாராணியை இடையே மறித்த மகாராணா, “இந்த இரத்தினத்தைக் காப்பாற்றுவதாக உறுதி கூறியிருக்கிறான். அதற்காகச் சில நிபந்தனைகளையும் விதித்தான். நிபந்தனையுடன்
ராஜபுதனத்துக்குச் சேவை செய்ய வருபவர்களை நான் நம்புவதில்லை மகாராணி. இருப்பினும் உன் உறவினன் என்பதற்காகப் பொறுத்தேன். அவன் நிபந்தனைகளை ஏற்றேன். ஜயன் சந்தாவத் வம்ச மகளொருத்தியை அவனுக்கு மண
முடித்து வைக்கவும் ஒப்புக்கொண்டேன். இருப்பினும் அவன் உண்மையுடன் நடக்கவில்லை. ஒண்டாலா கோட்டை அநாதையாக இருக்கிறது. அவன் இங்கு வைத்திருக்கும் வீரர்களுக்கு காவலில் சிரத்தையில்லை. இந்த சமயத்தில் இந்தக்
கோட்டை தாக்கப்பட்டால் போரின்றிச் சரணடைந்து விடும். அவனை இனி நம்ப முடியாது. நமது சுதந்தரத்தைக் காக்கும் நாகதீபத்தை சரியான கரங்களில் ஒப்படைக்க வேண்டும்” என்று ஆத்திரத்துடன் பதில் கூறியதன்றி, அந்தப்
பேழையை எடுத்துக் கொள்ளும்படியும் ஆக்ஞாபித்தார் ஹரிதாஸுக்கு.
பதிலேதும் பேசாமல் பேழையை எடுத்துக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, மகாராணிக்குத் தலைவணங்கினான். மகாராணாவும் மகாராணியை நோக்கி, “மகாராணி! கவலைப்படாதே. இந்த நாகரத்தினம் வெகு சீக்கிரம் உன்னிடம் வந்து சேரும்”
என்று கூறிவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே நடந்தார். ஹரிதாஸ் பேழை என்னும் அந்த பெரும் பொறுப்பைச் சுமந்து கொண்டு அவரைத் தொடர்ந்து சென்றான். பழையபடி அந்தத் தாழ்வாரத்தின் வழியே வந்து தமது அந்தரங்க
அறையை அடைந்த மகாராணா, தமது ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு பெருமூச்சு விட்டார். பிறகு சொன்னார், “ஹரிதாஸ்! நீ தாங்கி நிற்பது வெறும் இரத்தினமல்ல. ராஜபுதனத்தின் மானம் உன் கையிலிருக்கிறது” என்று.
ஹரிதாஸ் ஜாலா பதில் ஏதும் சொல்லவில்லை. அடுத்து மகாராணா என்ன சொல்லப் போகிறார் என்பதை எதிர்பார்த்து நின்றான். சில விநாடிக்குப் பிறகு மகாராணா ஆக்ஞாபித்தார். “உன் வாளை உருவிக்கொள் ஹரிதாஸ்” என்றார்.
உறுதி நிரம்பிய குரலில்.
ஹரிதாஸ் உறையிலிருந்த தனது நீண்ட வாளை உருவிக்கொண்டான். மகாராணா இடப்போகும் ஆணை என்னவென்று தெரிந்ததால் அவன் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அந்தப் பட படப்பை அதிகமாக்க ராணா
ஆக்ஞாபித்தார். “உன் வாளின் மேல் ஆணை வை, நாகதீபத்தை உயிருள்ள வரை காப்பதாக.
இதைச் சொன்ன மகாராணாவின் குரலில் அதிகாரம் மிதமிஞ்சி ஒலித்தது. அந்த ஆணையை இட்டால் தன். கதி அதோ கதியாகிவிடும் என்பதைப்
புரிந்துகொண்ட ஹரிதாஸ் ஜாலா சிலையென நின்றான். ‘இந்த நாகதீபத்தைக் கொண்டுவர ஆணை வாங்கினான் ஜஹாங்கீர். அதைக் காக்க ஆணை செய்யச் சொல்கிறார் மகாராணா. நேர் விரோதமான இந்தப் பொறுப்புக்களை
எப்படி நிர்வகிப்பது. ஜஹாங்கீர் உத்தரவை நிறைவேற்றினால் ராஜபுதனத்தில் போர் நின்றுவிடும். மகாராணாவின் உத்தரவை நிறைவேற்றினால் ராஜபுதனத்தில் போர் தொடரும். ஆனால் மானம் நிலைக்கும், மானம் முக்கியந்தான்.
அதற்கு ஆணையிட வேண்டியதும் ராஜபுதன மண்ணில் பிறந்த எனது கடமை. ஆனால் முதல் ஆணையை எப்படி மீறுவது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு தயங்கினான்.
அவன் தயக்கத்தைக் கண்ட மகாராணாவின் முகத்தில் கோபம் துளிர்விட்டது. “ஆணையிட என்ன தயக்கம் ஹரிதாஸ்?” என்று வினவினார் ராணா கோபத்துடன்.
தனது கையிலிருந்த வாளையும் நோக்கி மகாராணாவையும் நோக்கினான் ஒரு விநாடி ஹரிதாஸ். “மகாராணா! இந்த ஆணையை இட என்னால் முடியாது” என்றான், பிறகு திட்டமாக.
மகாராணாவின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. “ஏன் முடியாது?” என்று வினவினார்.
“காரணம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்” என்றான் ஹரிதாஸ் மீண்டும்.
“அரசன் ஆணையை மறுப்பதற்கு தண்டனை என்ன தெரியுமா?”
“தெரியும். மரணம்.”
“அதற்குத் தயாராயிருக்கிறாயா?”
“வாழ்க்கை முழுவதுமே அதற்குத் தயாராயிருந்திருக்கிறேன்.”
இதைக் கேட்ட ராணா நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். கடைசியில் கேட்டார். “இதை ஒரு பட்சம் அதாவது பதினைந்து நாட்கள்… காக்க முடியுமா உன்னால்?” என்று.
ஹரிதாஸ் ஆசுவாசப் பெருமூச்சு விட்டான், பதினைந்து நாட்களுக்குப் பிறகு தான் முதல் ஆணையை நிலை நிறுத்தலாம் என்று தீர்மானித்த அவன், “சரி மகாராணா! இன்றிலிருந்து பதினைந்து நாட்கள் வரை நான் இந்த நாகதீபத்தைக்
காக்கிறேன். என் வாளின் மேல் ஆணை. ஆனால் பதினைந்து நாட்களுக்குள் நீங்கள் என்னிடமிருந்து இதைப் பெற்றுக் கொள்ளா விட்டால்…” என்று சொல்லிக் கொண்டு போனதைத் தடுக்க, மகாராணா புன்முறுவல் கொண்டு
ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, “பதினைந்து நாட்களுக்குப் பிறகு இது உன் வசத்திலிருந்தால் இதை எது வேண்டுமானாலும் செய்து கொள் என்றார்.
ஹரிதாஸ் மகாராணாவுக்குத் தலை வணங்கி வீட்டுத் திரும்பிச் செல்ல முயன்றான். “எங்குச் செல்கிறாய் ஹரிதாஸ்?” என்றழைத்து அவனைத் தடுத்தார் ராணா.
“ஜயன் சந்தாவத்தின் இலலத்துக்கு” என்றான் ஹரிதாஸ்.

.
“அங்கு நீ போகவில்லை இப்பொழுது.”
“வேறெங்குப் போகிறேன்?”
“சித்தூருக்கு.
இதைக் கேட்ட ஹரிதாஸ் வாயடைத்து நின்றான். மகாராணா சிரித்தார். “ஆம் நமது தலைநகருக்குத் தான். வா இப்படி என்னுடன்” என்று பின்னாலிருந்த ரகசியக் கதவொன்றைத் திறந்து. மாளிகைத் தோட்டத்துக்கு அவனை அழைத்து
வந்தார். அங்கு நான்கு புரவி வீரர்கள் அவனை அழைத்துச் செல்ல தயாராக காத்திருந்தார்கள். அவனுக்கும் ஒரு புரவி சேணம் போட்டுத் தயாராயிருந்தது. “ஹரிதாஸ் இந்தப் பேழையுடன் தலைநகரில் காத்திரு. இன்றிலிருந்து
பதினைந்தாம் நாள் நானே உன்னிடம் இதைப் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.
ஹரிதாஸ் ஜாலா ஏதும் பேசாமல் புரவியில் ஏறப்போனான். “இன்னும் ஒரு வார்த்தை” என்றார் ராணா.
ஹரிதாஸ் திரும்ப ராணாவை நோக்கினான். “சுந்தர்தாஸை இடையில் சந்திப்பாய். சந்தித்தால் அவனைக் கொன்றுவிடு. உயிருடன் விட்டு வைக்காதே” என்று கூறிவிட்டு, ராணா மீண்டும் அரண்மனைப் பின்புற வாயிலை நோக்கி
நடந்தார்.

Previous articleNaga Deepam Ch22 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here