Home Historical Novel Naga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

103
0
Naga Deepam Ch24 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 24. சுற்றும் வழியும் சூழ்ந்த வீரரும்

Naga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சிசோதய வம்ச திலகமான ராணா அமரசிம்மனாலேயே வழியனுப்பப்பட்டு ஒண்டாலா கோட்டையின் அரண்மணைப் பின்புற வாயிலாகக் காவலர் நால்வருடன் வெளிப் போந்த ஹரிதாஸ் ஜாலாவின் இதயத்தில் கோட்டையைவிட்டு
அவன் தாண்டிய வெகு நேரத்துக்குப் பின்பும் உணர்ச்சிகள் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் அவன் புத்தியில் எழுந்து எழுந்து வரும். வந்தால் அவன் அவற்றில் திளைத்து மூழ்கிக் குழம்பிக்
கொண்டிருந்தானேயொழிய அக்கம் பக்கத்தில் வந்து கொண்டிருந்த நான்கு காவலரைக்கூடக் கவனிக்கும் சக்தியை இழந்திருந்தான். நாகதீபத்தைக் கொண்டு வருவதாக ஜஹாங்கீரிடம் வாளின் மேல் ஆணை வைத்து வந்த
நாளிலிருந்து பிரதி தினம் தனது வாழ்க்கையில் திடீரென ஏற்பட்டு வந்த திகைக்கத் தக்க திருப்பங்களை அவன் எண்ணினான். அவற்றை எண்ணி எண்ணி மனம் சிதற எதிரே விரிந்த பாலைவனத்தையும் அருகில் அப்பொழுதும் ஓடிய
புவனா நதியையும் ஊன்றி ஊன்றிப் பார்த்தான். இக்கதையின் ஆரம்பத்தில் அவன் பாலைவனத்தில் சிரித்த வறண்ட சிரிப்பு, மனம் குழம்பிய இந்த நேரத்தில் அவனிடமிருந்து எழுந்து பாலைவனத்தின் நிர்க்கதியான வெளியே ஊடுருவ
வில்லை. ஆரம்பத்தில் அவன் பார்வையிலிருந்த வெறுப்பும் இகழ்ச்சியும்கூட சித்தூரை நோக்கிப் புரவியில் அமர்ந்து சென்று கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அவன் கண்களில் விரியவில்லை. கண்களில் விரிந்ததெல்லாம் பெரும்
கனவு. சென்ற ஒரு வாரத்தில் தினம் தினம் ஏற்பட்ட அவன் வாழ்க்கைக் கதையைப் பற்றிய கனவு.
“ராஜபுதனத்தின் பிரதான படைத்தலைவர்களில் ஒருவனான நான், ராஜபுதனத்தின் உயிராகச் சிசோதய மன்னர் நம்பி வந்த பரம்பரை இரத்தினமான நாகதீபத்தை முடியுமானால் கேட்டும், முடியாவிட்டால் வேறு வகையிலும்
கொண்டுவர ஆணையிட்டு வந்ததே விசித்திரம். வந்தவனுக்கு வழியில் மனைவியொருத்தி கிடைத்தது விசித்திரம். அந்த மனைவி வலுவில் மணவறைக்கும் அழைத்தது, அதே இரவில் மன்னரும் தமது மாளிகைக்கு அழைத்தது அதைவிட
விசித்திரம். எந்த நாகதீபத்தை ஜஹாங்கீரிடம் கொண்டு போக நினைத்தானோ, அந்த நாகதீபத்தை பதினைந்து நாள் காப்பதாக ராணாவுக்கு உறுதி கூறி இதோ சித்தூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேனே, ‘இது எல்லா
வற்றையும்விட பரம விசித்திரம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, திரும்பத் திரும்ப தன் புத்தியைச் சூழ்ந்த பழங்காட்சிகளை உதற எண்ணியும் முடியவில்லை. அவன் மனத்திலே மீண்டும் மீண்டும் ராஜபுத்திரியின்
எழில் முகம் எழுந்தது. ஜயன் சந்தாவத் ‘இவன் உன் கணவன்’ என்று ராஜபுத்திரிக்கு முதலில், அறிமுகப்படுத்திய அந்தக் கம்பீர ஏளனச் சிரிப்பு முகம் எழுந்தது. ‘சுந்தர்தாஸை வழியில் சந்தித் தால் கொன்று விடு’ என்று ராணா கூறிச்
சென்றாரே, அந்த ராணாவின் சோக முகமும் எழுந்தது. ஒவ்வொரு சேதியைச் சொல்லியபோதிலும் இறுதியில் ஹரிதாஸ் ஜாலாவின் இதயத்தில் நிலைத்து வேரூன்றி நின்றது ராணா அமரசிம்மன் முகம் தான்.
அன்றிரவு ராணாவை அவன் அதிக நேரம் சந்திக்காவிட்டாலும், சந்தித்த கொஞ்ச நேரத்திற்குள் ராணாவைப் பற்றிய பல விஷயங்களை அவன் புரிந்துகொண்டான். எத்தனையோ பேர், பலப்பல ராஜபுத்திர வம்சங்கள். அவற்றின்
கிளைகள் இத்தனையும் சூழ்ந்திருக்கும் ராணா ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் புரிந்து வைத்திருப்பதையும், ஒவ்வொருவர் போக்கு வரத்து நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் கண்காணித்து வந்ததையும் எண்ணிப்
பார்த்து, சிசோதய வம்ச திலகத்தின் திறமையைப் பற்றிப் பெரிதும் உள்ளூர வியந்து கொண்டான். மகாராணி பேசிய இரண்டொரு பேச்சிலிருந்தும் பார்வையிலிருந்தும் சுந்தர்தாஸ் வந்து போயிருப்பதையும் அவன் செய்திருக்கும்
திரீசமனையும் மகாராணா புரிந்து கொண்டு விட்டதை எண்ண, அவன் வியப்பு உச்ச நிலையை அடைந்தது. மொகலாயரிடம் சமாதானம் செய்து கொள்ள முயன்ற ராணாவை பிதாமஹர் அரியணையிலிருந்து கையைப் பிடித்து இழுத்து
இறக்கிப் போருக்கு அழைத்துச் சென்ற நாளிலிருந்து ராணா அடியோடு மாறிவிட்டதையும் பல போர்களையும் கண்டுவிட்டதால், அவர் அறிவும் பார்வையும் மிகக் கூர்மையடைந்து விட்டதையும் நினைத்த அவன், ராணாவின்
கண்களில் மண்ணைத் தூவுவதோ நாகதீபத்தை அவரையும் மீறி அபகரித்துச் செல்வதோ நடவாத காரியமென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். தன்னிடம் நாகதீபத்தைக் காக்க ஆணை வாங்கிக் கொண்ட ராணா, தன்னை
முழுவதும் நம்பவில்லை என்பதையும் சித்தூருக்குத் தன்னை நான்கு காவலருடன் பயணப்படுத்திவிட்டதிலிருந்தே தெரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, ராஜபுத்திர கிளை வம்சங்கள் மட்டும் பிளவுபடாமலிருந்தால் ராணாவை
ஜஹாங்கீரால் இந்த ஜன்மத்தில் வெற்றிகொள்ள முடியாதென்பதையும் தீர்மானித்துக் கொண்டான். இத்தகைய எண்ணங்களுடன் புரவியில் ஊர்ந்து சென்ற ஹரிதாஸ் ஜாலா, தான் அதற்குமேல் செய்யக்கூடிய காரியமென்ன என்பதை
யோசிக்கத் தொடங்கினான்.
ஜஹாங்கீர் என்னிடம் வாங்கிக்கொண்ட ஆணையில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதி தூது. ராஜபுதனத்தின் போரை நிறுத்துவதற்கும் பரிசாக நாகதீபத்தைத் தரவேண்டுமென்று ராணாவைக் கேட்க வேண்டும் என்பது
தூது நோக்கம். நாகதீபத்தைப் பற்றி ராணா கூறிய வரலாற்றுக்கும். பிறகு அதைக் காக்க அவர் கொண்ட உறுதிக்குப் பின்பும் அதைத் தூது சொல்லிப் பெறுவது என்பது நடக்காது என்பது திண்ணமாயிற்று. ஆகவே முதல் பகுதி
பயனற்றது, இரண்டாம் பகுதி நாகதீபத்தைப் பலவந்தமாகக் கைப் பற்றுவது. அது இப்பொழுது சாத்தியம். நாகதீபத்தின் பேழை இதோ என் அங்கிப்பையில் இதயத்துக்கெதிரே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. வருகிற இந்த நான்கு காவலரை
வாள் கொண்டு சமாளிப்பது மிகவும் சுலபம். ஆனால் ராணா பதினைந்து நாட்களுக்கு ஆணையால் கட்டுப்படுத்தி விட்டாரே! என்ன செய்வது? என் நிலைமை எத்தனை தர்மசங்கடமானது? என்று தனக் குள்ளேயே பேசிக் கொண்டான்.
தனது கேள்விகளுக்கு ஏதும் விடை கிடைக்காததால் “பதினைந்து நாட்கள் முடிந்த பின்பு மேற்கொண்டு செய்ய வேண்டியதை யோசித்துக் கொள்ளலாம்” என்று தனக்குத் தானே உத்தரவிட்டுக் கொண்டான். இப்படியொரு
தீர்மானத்துக்கு வந்ததால் புத்திக் குழப்பம் சிறிது நீங்கவே ராஜபுத்திரியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான் ராஜபுதனத்தின் படைத்தலைவன்.
மகாராணாவுடன் இருந்த அரைஜாம நேரத்தில் பல விஷயங்களை புரிந்து கொண்டானானாலும் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் அவன் மனத்தில் ஊன்றி நின்றது. சுந்தர்தாஸ் நாகதீபத்தைக் காக்கக் கூறிய நிபந்தனைகளைப் பற்றி
மகாராணா மகாராணியிடம் கூறியது அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை. ஜயன் சந்தாவத் வம்ச மகளொருத்தியையும் அவனுக்கு மணமுடித்து வைக்க ஒப்புக் கொண்டேன். இருப்பினும் அவன் உண்மையுடன் நடக்கவில்லை
என்ற ராணாவின் சொற்களை அவன் மறுபடியும் எண்ணிப் பார்த்து ‘ராணா குறிப்பிட்ட ஜயன் சந்தாவத் வம்ச மகள் ராஜபுத்திரியாகத் தானிருக்க வேண்டும்’ என்று முடிவு செய்து கொண்டதால், பெரும் சீற்றத்துக்கும் உள்ளானான்
ஹரிதாஸ் ஜாலா. அப்படி ராணா
சுந்தர்தாஸுக்கு உறுதி கூறியிருந்தால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவரென்பதையும் அவன் உணர்ந்திருந்ததால் ராணா அந்த இரவில் ஜயன் சந்தாவத் மாளிகையில் தங்கவிடாமல் அழைத்து வந்ததற்கும் காரணமிருக்க வேண்டும்
என்றும் தீர்மானித்துக் கொண்டான். ‘என்னைப் பற்றியும் ராஜபுத்திரியைப் பற்றியும் ராணா ஏதோ தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகையால் தான் காந்தருவ மணத்தைத் தடுக்க முயன்றிருக்கிறார்’ என்று நினைத்த அந்த ராஜபுத்திர
வாலிபன், ‘சுந்தர்தாஸைச் சந்தித்தால் கொன்றுவிடு’ என்று ராணா கூறியதன் காரணத்தையும் உணர்ந்து கொண்டான். ‘சுந்தர்தாஸைக் கொன்றுவிட்டால் ராஜபுத்திரத் துரோகி ஒருவன் ஒழிந்து போவான். அத்துடன் தமது வாக்
குறுதியையும் நிறைவேற்ற அவசியமிருக்காது’ என ராணா நினைத்திருக்கிறார் எனவும் ஊகித்த ஹரி தாஸ் ஜாலா, மகாராணா! நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வில்லையே, எனக்கும் ராஜபுத்திரிக்கும் ஏற்கனவே விவாகமாகி விட்டதே!’
என்று ராணாவுக்குப் பதிலும் சொல்லிக் கொண்டான். அது மட்டுமல்ல, தான் காக்க வேண்டியது ஓர் இரத்தினமல்ல, இரண்டு இரத்தி னங்கள் என்றும் உறுதி பூண்டான். ‘ஒன்று இந்த நாக ரத்தினத்தைப் பதினைந்து நாட்களுக்குக்
காப்பாற்ற வேண்டும். அடுத்தது எனது இதய இரத்தினம் ராஜபுத்திரியை ராணாவிடமிருந்து என்ன உலகம் முழுவதும் திரண்டு எதிர்த்தாலும் காக்க வேண்டும்’ என்று கூறி, மீண்டும் ஆணையிடுவதுபோல வாளின் பிடிமீது கையை
வைத்து மெள்ள அதைத் தடவிக் கொடுத்தான்.
இப்படிப் பல சிந்தனைகளில் மூழ்கிப் புரவியை நடத்தி வந்த ஹரிதாஸ் ஜாலா, இரவு அகன்று பொழுது புலரத் தொடங்கிவிட்டதைக் கூட கவனிக்காது மேலும் புரவியை நடத்திச் செல்லவே கூட வந்த காவலனொருவன் அவனை
சற்றே நெருங்கி, “படைத்தலைவர் மன்னிக்க வேண்டும்…” என்று ஏதோ கூற முற்பட்டான். அதனால் இந்த உலகத்தின் சூழ்நிலைக்கு இழுக்கப்பட்ட ஹரிதாஸ் ஜாலா, சட்டென்று புரவியை நிறுத்தி அக்கம் பக்கத்தைக் கவனித்தான். சாலைப்
பொழுதில் பாலைவனம் மிக ரமணீயமாகக் காட்சியளித்தது. மணலை லேசாக நனைத்திருந்த பின் பனி, அப்பொழுதும் தூர இருந்த மணல் மேடுகள் மீது வெள்ளை வெளேரென இறங்கிக் கொண்டு இருந்தது. பொழுது புலர
முற்பட்டதால் வீசிய சில்லென்ற காலைக் காற்று உடலுக்குப் பேரின்பமாயிருந்ததால், உள்ளத்தைக்கூட குளிர வைத்தது. அதுவரை அவன் புவனா நதிக்கரையோரமே வந்து கொண்டிருந்ததால் திடீரென அது எதிர்ப்புறம் திரும்ப
முற்பட்டதைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா, இனி தான் செல்லவேண்டியது ஆற்றோரமில்லை, என்பதையும் முழுப் பாலைவனமேயென்பதையும் புரிந்துகொண்டான். அதுவரை கம்பீர நடைபோட்டு வந்த அவன் புரவியும் பனி நனைத்
திருந்த தன் உடலை ஒருமுறை உதறிக்கொண்டு கால் களையும் இரண்டு மூன்று முறை தூக்கித் தூக்கி நிலத்தில் வைத்தது.
இத்தனையையும் கவனித்த ஹரிதாஸ் ஜாலா, கூட வந்த காவலன் சொல்ல வந்ததை ஊகித்துக்கொண்டானாகையால் மெள்ளப் புரவியிலிருந்து மணலில் குதித்தான், மற்ற காவலரும் அவனுடன் குதிக்கவே அவர்களை நோக்கிக்
கூறினான் ஹரிதாஸ் ஜாலா. “இனி புவனா நதி எதிர்ப்புறம் ஓடும்” என்று.
முதலில் அவனை அணுகிய காவலன், ஆம் படைத்தலைவரே! இனி நதிக்கு எதிர்ப்புறத்தில் தான் நாம் செல்ல வேண்டும். சென்றால் சித்தூர் நான்கு நாள் பயணமிருக்கிறது” என்று கூறினான்.
தனக்கும் அது தெரியும் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த ஹரிதாஸ் ஜாலா, ஹாராவளி மலைத் தொடரிருந்த திசையை நோக்கிக் கண்களைத் திருப்பினான். ‘அருகிலிருப்பது போல் தோன்றும் அந்த மலை எத்தனை
தூரத்திலிருக்கிறது? கைக் கெட்டியது போல் இருக்கும் பொருள்கள் வாழ்க்கையில் எப்படித் தூரத்தே இருக்கின்றனவோ அப்படித்தானே இருக்கிறது இதுவும்! அதோ சமீபம் போல் தெரியும் அந்த மலை நான்கு நாள் பயணம்’ என்று
வேதாந்தமாகத் தனக்குள் சொல்லிக் கொண்டு காவலரை நோக்கி, “புரவிகளை நீராட்டுங்கள். நீங்களும் காலைக் கடன்களை முடித்துக் கொள்ளுங்கள். யாராவது குடம் கொண்டு வந்திருந்தால் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். இனி நாம்
ஹாராவளியை நோக்கித் திரும்பினால் இன்று முழுவதும் பாலைவனப் பயணந்தான்” என்று உத்தரவிட்டு உள்ள கஷ்டத்தையும் குறிப்பிட்டான்.
காவலர்கள் புரவிகளின் சேணங்களை நீக்கி விட்டார்கள். கட்டுப்பாடு நீங்கிய புரவிகள் முதலில் துள்ளிக் குதித்தன. இரண்டு புரவிகள் மணலில் படுத்து உடலைப் புரட்டி ஆசுவாசம் செய்து கொண்டன மற்றுமிரண்டு நன்றாக
வாய்களைத் திறந்து பற்களைக் காட்டிக் கனைக்கவும் செய்தன. அந்த வாயில்லாப் பிராணிகள் எப்படியெல்லாம் தங்கள் அலுப்பைத் தீர்த்துக் கொள்ளுகின்றன என்பதைப் பார்த்து, ‘அலுப்புத் தீர இயற்கை எத்தனை எத்தனை வழிகளைச்
சொல்லிக் கொடுத்திருக்கிறது’ என்று வியந்த ஹரிதாஸ் ஜாலா. வழக்கம்போல் தான் ஊர்ந்து வந்த புரவியின் சேணத்தையும் நீக்கி அதையும் புவனாவின் குளிர்ந்த நீரில் குளிப்பாட்ட ஏற்பாடுகளைச் செய்தான். புரவியைக்
குளிப்பாட்ட இறங்குமுன்பு தன் அங்கியின் பையிலிருந்த நாகதீபத்தின், சிறு பேழையைக் கச்சையில் பத்திரப்படுத்தியதன்றி, அங்கியையும் இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டு, உடையை முழுவதும் நீக்காமல் சராயையும் சுருட்டி
மேலேறச் செய்து கொண்டு அரை நிர்வாணமாகப் புரவியை நீரில் இழுத்துச் சென்று கழுவி மீண்டும் கரைக்கு விரட்டினான், பிறகு தனது அங்கி. கச்சை, கால்சராய் இவற்றை ஒரு மூட்டையாகச் சுற்றி கரையில் வைத்து, அவற்றுக்குக்
காவலாகத் தன் கத்தியையும் கைக் கெட்டும் தூரத்தில் வைத்து, புவனாவின் கரையோரத்திலேயே குளித்து தூரக் கிளம்பிய பகலவனை நோக்கி அர்க்கியங்களையும் வாரிவிட்டான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டதும் அந்தப்
பழைய உடைகளை மீண்டும் அணிந்து கொண்டு மேற்கொண்டு பயணத்துக்குத் தயாராகவே கதிரவன் கொடுமை அதிகமாகு முன்பே ஐவரும் பயணப்பட்டுப் புவனாவைப் பிரிந்து சற்றே காயத் தொடங்கிவிட்ட பாலைவன மணலில்
புரவிகளை தட்டிவிட்டனர்.
மணலைச் சிறிதும் லட்சியம் செய்யாமலே அந்த சாதிப் புரவிகள் ஓட்டம் நடையுமாகச் சென்றன. இரு காவலர் முன் செல்ல இரு காவலர் பின்தொடர்ந்து வர, பாலைவனத்தில் அன்று பகற் பூராவும் பயணம் செய்தான் ஹரிதாஸ் ஜாலா.
முதல் ஜாமத்தில் அதிகமாகத் தகிக்கத் தொடங்கிய சூரிய உஷ்ணம் இரண்டாம் ஜாமத்தில் உச்ச நிலையை அடைந்ததும் சிறிதும் அதைப் பற்றிக் கவலைப்படாமலும் உணவைக் கூட எதிர்பாராமலும் புரவியை நடத்திய ஹரிதாஸ் உடல்
உரத்தையும் சகிப்புத் தன்மையையும் கண்ட காவலர் வியந்தனர். உறுதியும் திடமும் அவர்களுக்கில்லாததால், சிறிது புரவிகளை நிறுத்தி உணவருந்தவும் நீரருந்தவும் – ஹரிதாஸ் ஜாலாவை அனுமதியும் கேட்டனர் அவர்கள் உணவை
முடிக்க அனுமதி தந்த ஹரிதாஸ் ஜாலா, காவலன் கொடுத்த உணவை மறுத்து, “ஒரு வாய் குடிநீர் கொடுங்கள் போதும்” என்று கூறினான். காவலர் அவனை அதற்கு மேல் கட்டாயப்படுத்தாமல் உண வருந்தி முடித்து, அவனுக்கு ஒரு
குவளை குடிநீர் மட்டும் கொடுத்தார்கள். புரவியிலிருந்து இறங்காமலே நீரைக் குடித்த ஹரிதாஸ் ஜாலா, காவலர் தயாரானதும் மீண்டும் புரவியை நடத்தினான்.
சுற்றிலும் அனல் வாரி கொட்டிக் கொண்டிருந்தது. பாலைவன வெளியில் தூரத்தில் நீர் பல இடங்களில் ஒளிவிட்டது. அதைப் போலத்தான் பலர் வாழ்வும் இருக்கிறதென்று தீர்மானித்த ஹரிதாஸ் ஜாலா மறுபடியும் சிந்தனையில்
இறங்கினான். பழைய எண்ணங்கள் சிந்தையில் பழையபடி உலாவவே அவன் சுற்றிலும் நெருப்பை வாரிக் கொட்டும் சூழ் நிலையைக்கூட கவனிக்காமல் சிந்தனை உலகத்திலேயே மூழ்கிக் கிடந்தான். உலகை மறந்த அவனை மற்ற காவலர்
வழி காட்டி அழைத்துச் சென்றார்கள். முன்னால் ஓடிய புரவிகளைத் தொடர்ந்து ஹரிதாஸ் ஜாலாவின் புரவியும் ஓடியது. பகல் பயணம் பரம நரகமாய் இருந்தது அந்தக் கூட்டத்துக்கு. இரவிலும் பாலைவனத்திலேயே சஞ்சரிக்கும்
படியாயிருந்தாலும் இரவின் பனி பெரிதும் பயணத்துக்கு இதமாயிருக்கும் என்ற நினைப்பால், பகல் நெருப்பு ஜ்வாலையை லட்சியம் செய்யாமலே சென்றான் ஹரிதாஸ் ஜாலா. இப்படிப் பயணம் செய்த ஹரிதாஸ் ஜாலாவின் அலட்சியத்தை
கோபித்தோ என்னவோ கதிரவன் மெள்ளத் தன் உஷ்ணத்தை ஒடுக்கிக் கொண்டான். தூக்கத்துக்குப் பின்வரும் சுகம்போல் மகிழ்ச்சியளிக்கும் மாலை நேரமும் மெள்ள மெள்ள நெருங்கி வந்தது.
பாலைவனத்தை ஆட்கொண்ட மாலைநேர மஞ்சள் வெயில் பகலின் கொடுமையை அடியோடு மறைத்தது, காவலர் தங்கள் புரவிகளைச் சிறிது நிறுத்தி வியர்வையைக் குதிரைச் சீலைகளால் துடைத்துக்கொண்டு ஆக வாசப்
பெருமூச்சு விட்டார்கள். மீண்டும் துவங்யே பயணம் இடைவிடாது நடந்தது. ஹரிதாஸ் ஜாலா அக்கம் பக்கமெதையும் கவனியாமல் வீரர்களைப் பின் தொடர்ந்து புரவியை நடத்தினான். இரவு நெருங்கி வெகு நேரத்துக்குப்பின் ஒரு
சோலையொன்று வரவே வீரர்கள் அங்கு இறங்கினார்கள். ஹரிதாஸ் ஜாலா புரவியை விட்டு இறங்கவில்லை. சுற்றும் முற்றும் சந்தேகத்துடன் பார்த்தான். பிறகு காவலரில் ஒருவனை விளித்து, “நாம் வழி தவறி விட்டோமென்று
நினைக்கிறேன்” என்று கூறினான்.

.
அவன் அழைத்த காவலன் புரவியைவிட்டு மெள்ள அவனருகில் வந்த சமயத்தில் மற்றொரு காவலன் பந்தமொன்றைக் கொளுத்திச் சற்று தூரத்தில் பூமியில் நட்டான். அந்தப் பந்தத்தின் வெளிச்சத்தில் சோலை நன்றாகத் தெரிந்தது.
அந்தச் சோலையை மறுபடியும் இருமுறை பார்த்த ஹரிதாஸ் ஜாலா காவலனை நோக்கி “சித்தூர் செல்லும் மார்க்கம் இதுவல்லவே?” என்றான்.
காவலன் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. “இப்படியும் போகலாம, படைத்தலைவரே!” என்று கூறினான்.
“போகலாம். ஆனால் நான்கு நாட்களில் நாம் போய்ச் சேரமுடியாதே. இது சுற்றி வளைத்தல்லவா செல்லும்?” என்று கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
“ஆம்; இருந்தாலும் இந்த வழி சற்று சௌகரிய மானது. அடுத்து அடுத்துப் பாலைவனச் சோலைகள் உள்ளன” என்றான் காவலன்.
“சோலைகள் எதற்கு?” என்று உஷ்ணத்துடன் கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
“இன்றைய வெப்பத்தைக் கவனித்தீர்களல்லவா?”
“கவனித்தேன்.”
“இந்த வெப்பத்தில் போனால் புரவிகள் மாண்டுவிடும்.”
“யார் சொன்னது? ராஜபுதனப் புரவிகள் இதை விட. உஷ்ணத்னதத் தாங்கவல்லவை.
“ஆம், உண்மை தான் படைத்தலைவரே.”
“அப்படியானால் எதற்கு இந்த வழியில் போகவேண்டும்?”
“இவை ராஜபுதனப் புரவிகள் அல்லாததால்.”
“வேறு என்ன புரவிகள் இவை.”
“மொகலாயர் புரவிகள்”
இந்தப் பதிலை மிகவும் பணிவுடன் கூறினான் காவலன். ஹரிதாஸ் ஜாலாவின் கை வாளிடம் சென்றது. “யார் நீங்கள்?” என்ற கர்ஜனையும் அவன் தொண்டையிலிருந்து பயங்கரமாக எழுந்தது.
“அதை என்னைக் கேட்பது நல்லது” என்று பின்னாலிருந்து எழுந்த குரலைக் கேட்டு திடீரெனப் புரவியைச் சுழற்றித் திருப்பினான் ஹரிதாஸ் ஜாலா. அவன் பின்னால் சோலை மரமொன்றில் சாய்ந்து கொண்டு சுந்தர்தாஸ்
நின்றிருந்தான். சோலையிலிருந்து சரேலென கிளம்பிய வீரர்கள் விநாடி நேரத்தில் ஹரிதாஸ் ஹரிதாஸ் ஜாலாவை வளைத்துக் கொண்டார்கள்.

Previous articleNaga Deepam Ch23 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here