Home Historical Novel Naga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Naga Deepam Ch25 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25. ஒண்டாலாவின் நிலை

Naga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சுந்தர்தாஸின் குரலைக் கேட்டுத் தனது புரவியைக் கண வேகத்தில் சுழற்றித் திருப்பிய வீரனான ஹரிதாஸ் ஜாலா, சோலை மரமொன்றில் சுந்தர்தாஸ் மிக ஒய்யாரமாகவும் அலட்சியத்துடனும் சாய்ந்து நின்று கொண்டிருந்ததைக்
கவனித்ததும், கோபத்தின் எல்லையை அடைந்தானானாலும், அடுத்த விநாடி சோலைக்குள்ளிலிருந்து ஈசல்களைப் போல் கிளம்பி தன்னைச் சூழ்ந்து வந்த வீரர் கூட்டத்தைக் கண்டதும் கோபத்தை உள்ளடக்கித் தன்னை
நிதானப்படுத்திக் கொண்டான். தன்னை அவர்கள் சூழ்ச்சியால் வளைத்துக் கொண்ட இடம் பாலைவன வெளியாயிருந்தால் அம்புபோல் குதிரையை பாயவிட்டு அவர்களை ஊடுருவிச் செல்லத் தன்னால் முடியும் என்பதையும்,
மரங்கள் அடர்த்தியாயிருந்த அந்தச் சோலையில் புரவியைத் தட்டிவிட்டு ஊடுருவுவதுகூட இயலாத காரியமென்பதையும் உணர்ந்து கொண்டதால், திருப்பிய புரவியைத் திடமாக நிறுத்தி அதைவிட்டுக் கீழிறங் காமலே சுந்தர்தாஸை
உற்று நோக்கினான். சுந்தர்தாஸின் கண்கள் அவன் கண்களை ஒரே விநாடிதான் சந்தித்தன. பிறகு அவை சுற்றிலும் வாட்களை உருவி நின்ற வீரர்களை வலம் வந்தன. அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ்
ஜாலா உறுதி நிரம்பிய குரலில் கேட்டான். “சுந்தர் தாஸ்! ஆயிரம் வீரர்கள் சூழ்ந்தாலும் அஞ்சாத வம்சம் ஜாலாவின் வம்சம் என்பதை நீ அறியவில்லையா?” என்று.
சுந்தர்தாஸின் குரலிலும் உறுதியிருந்தது. உறுதி மட்டுமல்ல, விஷமமும் கலந்திருந்தது அதில். “அதையும் அறிவேன். அந்த வம்சத்தினர் அறிவாளிகள் என்பதையும் அறிவேன்” என்று கூறினான், அவன் விஷமப் புன்முறுவலுடன்.
“அதை நீ உணர்ந்திருப்பது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்” என்றான் சுந்தர்தாஸ் மீண்டும்.
“உன் மகிழ்ச்சிக்கு காரணம் எனக்குப் புரியவில்லை.”
“காரணம் தெரிய வேண்டுமா?”
“தெரிந்தால் நல்லது.”
“அப்படியானால் சொல்கிறேன் கேள். உன் குடும்பத்தார் அறிவாளிகள் அல்லவா?”
“ஆம்”
“அறிவாளிகள் சமயமறிந்து நடப்பவர்கள்.”
“அது தான் நியாயம்.”
“சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி விட்டுக் கொடுப்பது தான் அறிவுக்குச் சான்று.
“அதுவும் உண்மை.”
இந்தப் பதிலைக் கேட்டதும் சுந்தர்தாஸின் முகத்தில் சந்தேகச் சாயை படர்ந்தது. தான் சொல்வதையெல்லாம் ஹரிதாஸ் ஜாலா ஆமோதித்துப் பேசியதன் உட்கருத்து என்ன என்பதை அறிய அவனால் முடியாததால், அவனை
மற்றுமொருமுறை கூர்ந்து நோக்கிய சுந்தர்தாஸ், “என் கருத்தையெல்லாம் ஹரிதாஸ் ஜாலா ஆதரித்துப் பழக்கமில்லை இன்று போக்கே புதிதாக இருக்கிறதே?” என்றான்.
சுந்தர்தாஸின் முகத்தில் திளைத்துப் பரவிய சந்தேகச் சாயையைக் கவனித்தும் கவனிக்காதவன் போலவே ஹரிதாஸ் ஜாலா தனது முக பாவத்தை வைத்துக் கொண்டு, “காலம் பழைய பழக்கத்தை மாற்றுகிறது. அதைப் பொறுத்துப்
போக்கும் மாறுகிறது” என்றான்.
“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை!” சுந்தர்தாஸ் நிதானத்தைக் கைவிட்டு உஷ்ணத்தை குரலில் அனான் காட்டினான்.
“இதில் விளங்காதது ஏதுமில்லை?” ஹரிதாஸ் ஜாலாவின் குரல் புதுமாதிரி ஒலித்தது. கண்ணிலும் புரிந்துகொள்ள முடியாத பார்வை இருந்தது.
ஆகவே சுந்தர்தாஸ் குழம்பினான். அவன் குழம்பிய நேரத்தில் புரவியிலிருந்து குதித்து அவனருகே மின்னல் வேகத்தில் வந்துவிட்ட ஹரிதாஸ் ஜாலா, தன் இடையிலிருந்த குறுவாளை எடுத்து அவன் வயிற்றில் அழுத்தி விட்டுச்
சுற்றிலுமிருந்த வீரர்களை நோக்கி, “யாரும் அருகில் நெருங்க வேண்டாம், நெருங்கினால் உங்கள் தலைவன் பிணமாகி விடுவான்” என்று கோபமும் உக்கிரமும் கலந்த குரலில் எச்சரித்த ஹரிதாஸ் ஜாலா, சுந்தர்தாஸைப் பார்த்து
“சுந்தர்தாஸ்! நான் உன் எதிரியாயிருந்தவன் தான். ஆனால், இன்று நான் உன் எதிரியல்ல. இரண்டு பேர் நோக்கமும் ஒன்றுதான். இப்பொழுது உடன் வீரர்களை விலகிச் செல்லச் சொல். நாமிருவரும் தனித்துப் பேசுவோம்” என்றான்.
ஹரிதாஸ் ஜாலாவின் துணிகரச் செயல் சிறிதும் வியப்பை அளிக்கவில்லை சுந்தர்தாஸுக்கு. ஜாலாவின் குடும்பத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் அஞ்சாதவர்கள் என ராஜபுதனமே அறிந்திருந்ததாலும், தான் சற்றுத் தவறாக நடந்து
கொள்ள முயன்றாலும், தனது உயிர் அரைக்காசு பெறாதென்று சுந்தர்தாஸ் சந்தேக மற உணர்ந்திருந்ததாலும், அவன் வீரர்களைப் பின்ன டையும்படி கையால் சாடை காட்டினான். வீரர்கள் பின்னடைந்த பின்பு குறுவாளை மீண்டும்
இடையில் செருகிக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா மெள்ளத் தன் புரவியை இழுத்துப் பக்கத்திலிருந்த மரமொன்றில் கட்டினான். பிறகு சுந்தர்தாஸை நோக்கி, “சுந்தர்தாஸ்! நாம் இங்குதான் பேச வேண்டுமா அல்லது நீ தங்க கூடாரம் ஏதாவது
அடித்திருக்கிறாயா?” என்று வினவினான். “கூடாரம் இருக்கிறது” என்று சுந்தர்தாஸ் சொன்னான், உணர்ச்சி வறண்டு விட்ட குரலில்.
“அப்படியானால் அங்கு செல்வோம். தனித்து பேசலாம்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
சுந்தர்தாஸ் சில விநாடிகள் தயங்கினான். பிறகு எதிரே விலகி நின்ற வீரர்களையும் கவனித்தான் அவன். மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா சொன்னான். “சந்தேகம் எதுவும் வேண்டாம் சுந்தர்தாஸ்!
என் வாளின்மீது ஆணையாகச் சொல்கிறேன். நீயாக எனக்குத் தீங்கு விளைவிக்க முனையாவிட்டால் இந்த வாளை உனக்கு எதிராக வீசமாட்டேன். தவிர, நம் இருவர் பாதையும் இணையும் இடம் ஒன்றுதான், வேறல்ல.”
இதைக் கேட்டதும் என்ன காரணத்தாலோ மிரண்டு விழித்தான் சுந்தர்தாஸ், வீரர்களை மறுபடியும் ஒருமுறை குழப்பத்துடன் பார்த்தான், அடுத்தபடி வேறெதுவும் பேசாமல் தன்னுடன் வரும்படி ஹரிதாஸ் ஜாலாவுக்கு வழிகாட்டிச்
சோலைக்குள் அழைத்துச் சென்றான். சுந்தர்தாஸைத் தொடர்ந்து ஹரிதாஸ் ஜாலாவும், ஹரிதாஸ் ஜாலாவைச் சற்று எட்டவே சூழ்ந்து மற்ற வீரர்களும் சிறிது தூரம் பயணம் செய்ததும் அந்தச் சோலை நடுவிலிருந்த கூடாரத்துக்கு வந்து
சேர்ந்தார்கள். அங்கு வந்ததும் எச்சரிக்கையுடன் காவல் புரியும்படி அவர்களுக்கு உத்தரவிட்ட சுந்தர்தாஸ், ஹரிதாஸ் ஜாலாவை அழைத்துக்கொண்டு கூடாரத்துக்குள் நுழைந்தான். கூடாரத்துக்குள் உட்காரவோ படுக்கவோ அதிக
வசதி ஏதுமில்லாதிருந்ததையும் கீழே விரித்திருந்த ஒரு மாபெரும் கம்பளத்தைத் தவிர மஞ்சமேதுமில்லாததையும் கவனித்த ஹரிதாஸ் ஜாலா, அந்தக் கூடாரத்தை எந்த விநாடியிலும் பிரித்துச் சுருட்டிச் செல்ல சுந்தர்தாஸ் தயாராக
வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான். இப்படிக் கூடாரம் பயணத்துக்குத் தயாராகயிருப்பதில் பயன் என்ன என்பது மட்டும் அவனுக்குப் புரியவில்லை யாகையால் அதைப் பற்றி கேட்கத் தன் கண்களை சுந்தர்தாஸை
நோக்கி உயர்த்தினான்.
கேள்வி எழுப்பிய அந்தக் கூரிய கண்களைக் கண்ட சுந்தர்தாஸ், ஹரிதாஸ் ஜாலாவின் உள்ளத்தி லோடிய எண்ணங்களைப் புரிந்துகொண்டான். ஆனாலும் அதைப்பற்றி ஏதும் பிரஸ்தாபிக்காமலும் பதில் சொல்லாமலும் அவனைக்
கம்பளத்தில் உட்காரச் சொல்லித்தானும் உட்கார்ந்து கொண்டான். வெளியிலிருந்த வீரனொருவனை அழைத்து இருவருக்கும் மது கொண்டு வரவும் கட்டளையிட்டான், மது வந்ததும் அதை இரு கிண்ணங்களில் ஊற்றி ஒன்றை
ஹரிதாஸ் ஜாலாவிடம் கொடுத்து மற்றொன்றைத் தான் எடுத்து உறிஞ்சினான். சாதாரணமாக நிதானமாகக் காரியத்திலிறங்கியதைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா, அதற்குக் காரணம் புரியாமல் விழித்தான். மதுவை உறிஞ்சிக் கீழே வைத்த
சுந்தர்தாஸ் காரணத்தைப் புரிய வைக்கத் துவங்கி “ஹரிதாஸ்! இந்தச் சோலையில் நீ என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாய் இல்லையா?” என்றான்.
சோலையை நான் எதிர்பார்க்கவில்லை, நான் செல்ல முயன்ற திசை வேறு” என்று சர்வசாதாரணமாகச் சொன்னான் ஹரிதாஸ் ஜாலா.
“சித்தூருக்குப் பாலைவனக் குறுக்கு வழியாகச் செல்லப் பார்த்திருப்பாய்.”
“ஆனால் இங்கு அழைத்து வர வீரர்களுக்கு உத்தர விட்டிருந்தேன்.”
“நான் சித்தூருக்குப் போவேனென்பது உனக்கெப் படித் தெரியும்?”
“நாகதீபத்தைக் காக்க ராணா வேறு என்ன செய்ய முடியும்? என்னிடம் அவருக்கு நம்பிக்கையில்லை. நம்பிக்கையானவரிடம் கொடுத்துச் சித்தூருக்கு அனுப்பினால் அதை பத்திரப்படுத்தலாம்.”
“அதற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனென்பது உனக்கெப்படித் தெரியும்?”
“தெரியாது. யாரிடமாவது அது சித்தூருக்கு அனுப்பப்படும் என்பது மட்டும் தெரியும். அது எப்படி எந்த வழியாக அனுப்பப்படும் என்பதும் தெரியும். அதை எடுத்துச் செல்லுபவர் யாராயிருந்தாலும் இங்கு கொண்டு வரும்படி
உத்தரவிட்டேன் என் வீரர்களுக்கு.”
“இந்த வீரர்கள் தான் துணை வருவார்கள் என்பது உனக்கெப்படி தெரியும்?”
“என் வீரர்களைத் தவிர யாரும் துணை வர முடியாது. ஒண்டாலா கோட்டையில் இருக்கும் வீரர்களில் பாதிப்பேர் என்னைச் சேர்ந்தவர்கள். அரண்மனையில் இருப்பவர்கள் அத்தனை பேரும் என் வீரர்கள்.”
இதைக் கேட்டதும் மகாராணாவின் நிர்க்கதியான நிலையைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, சுந்தர்தாஸின் அயோக்கியத்தனத்தின் எல்லையை நினைத்துப் பெரிதும் வியந்தான். இப்படியொரு கோடாரிக்காம்பு ராஜபுதனத்துக்கு
ஏற்பட்டதை எண்ணி அதன் துர்க்கதியை நினைத்து உள்ளூர துக்கமும் கொண்டான். ஆனால், அந்த உணர்ச்சிகள் எதையும் வெளிக்குக் காட்டாமல், “ராணாவின் நிலை பரிதாபமானது!” என்று கூறினான் ஹரிதாஸ், சுந்தர்தாஸை
நோக்கி.
“பரிதாபமானது என்பதைவிட மிகவும் ஆபத்தானது என்று கூறுவது பொருந்தும்” என்று கூறிய சுந்தர்தாஸ், ஹரிதாஸ் ஜாலாவைப் பொருள்பட நோக்கினான்.
“ஆபத்தானதா!” ஹரிதாஸின் குரலில் வியப்பிருந்தது.
“ஆம்; ஹரிதாஸ்! மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கிறார் மகாராணா” என்று சுந்தர்தாஸ் வருத்தப்படுபவன் போல் பாசாங்கு செய்தான்.
“என்ன ஆபத்தோ?”
“ஜஹாங்கீர் எங்கிருக்கிறார் தெரியுமா?”
“ஆஜ்மீரில்…”
“இல்லை.”
“பின் எங்கே?”
பதிலுக்குப் பெரும் வெடியை எடுத்து வீசினான் சுந்தர்தாஸ். “ஒண்டாலா கோட்டையின் வாயிலில் இருக்கிறார்!” என்ற சுந்தர்தாஸ் திடீரென உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்திருந்தான். அவனுக்கு முன்னரே துள்ளி எழுந்துவிட்ட
ஹரிதாஸ் ஜாலாவின் கண்கள் ஈட்டிகளென ஜொலித்தன. அவன் கை மிகப் பலமாக சுந்தர்தாஸின் அங்கியைப் பிடித்தது. “உண்மையா கவா?” என்று கேட்டான் ஆத்திரம் மிதமிஞ்சித் தொனித்த குரலில் ஹரிதாஸ்.
சுந்தர்தாஸ் அந்த ஆத்திரத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் ஹரிதாஸின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சிறிது விலகி நின்று, “ஜாலா வம்சத்தினர் இடி தலையில் விழுந்தாலும் உணர்ச்சிகளைக் கைவிடாதவர்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என வெறுப்புடன் கூறினான்.
ஹரிதாஸ் ஜாலா அவனைச் சுட்டுவிடுவது போல் பார்த்தான். “இடி ஜாலா வம்சத்தின் தலைமேல் விழவில்லை சுந்தர்தாஸ் ராஜபுதனத்தின் தலைமேல் விழுந்திருக்கிறது” என்று சீறினான்.
“இன்னும் விழவில்லை விழப்போகிறது” என்று திருத்திய சுந்தர்தாஸ், “அதை விழாமல் நாம் தடுக்கலாம்” என்று கூறினாள்.
“எப்படித் தடுப்பது?”
“ஜஹாங்கீருக்கு வேண்டியதைக் கொடுக்கலாம்.”
“என்ன வேண்டும் அவருக்கு?”.
“உன் வசமிருக்கும் நாகதீபம்.”
இதைக் கேட்ட ஹரிதாஸ் ஜாலா. சீற்றத்தைக் விட்டுப் பிரமிப்பின் வசப்பட்டான்.
ஜஹாங்கீருக்கு வேண்டிய நாகதீபத்தைக் கொடுத்துவிட்டால், ராஜபுதனத்தின் தலைமேல் விழ இருக்கும் இடியை தவிர்க்கலாம் என சுந்தர்தாஸ் கூறியதைக் கேட்டதால் பெரும் வியப்பின் வசப்பட்ட ஹரிதாஸ் ஜாலா, “என்னிடம் நாகதீபம்
இருப்பது உனக்குத் தெரியக் காரணமிருக்கிறது. ஆனால் அதை ஜஹாங்கீர் விரும்புவது உனக்கெப்படித் தெரியும்?” என்று வினவினான் வியப்பு குரலிலும் ஊடுருவ.
“உன்னை ஜஹாங்கீர் சிறையிலிருந்து விடுவிக்க வில்லையா?” என்று வினவினான் சுந்தர்தாஸ்.
“ஆம்” ஹரிதாஸின் பதில் சந்தேகத்துடன் உதிர்ந்தது.
“உன்னை முன்பே அவருக்குத் தெரியுமா?” என்று மறுபடியும் வினவினான் சுந்தர்தாஸ்.
“தெரியாது.”
“அப்படியிருக்க உன்னிடம் நாகதீபத்தைக் கொண்டு வரும் பணியை ஒப்படைப்பானேன்?”
ஹரிதாஸ் ஜாலாவின் மனத்தில் அதுவரை புரியாத பல விஷயங்கள் அப்பொழுது தான் புரிந்தன. சுந்தர்தாஸ்தான் தன்னை இந்தப் பணிக்கு இழுத்திருக்க வேண்டுமென்று அறிந்து கொண்ட ஹரிதாஸ். “அப்படியா விஷயம்?”
என்றான் வறண்ட குரலில்.
“ஆம், ஹரிதாஸ்! ஜாலா வம்சத்தினர் இடும் ஆணையை நிறைவேற்றுவார்கள் என்று நான் தான் அவருக்குச் சொன்னேன்! என் ஓலையைக் கண்ட பிறகு தான் உன்னை சிறையிலிருந்து அழைத்திருக்க வேண்டும் அவர்!” என்று கூறினார்
சுந்தர்தாஸ்.
மொகலாயருக்குக் கையாட்கள் எப்பொழுதும் ஹிந்து சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெறுப்புப் பெருமூச்சு விட்ட ஹரிதாஸ் ஜாலா, “நீயோ ஒண்டாலா கோட்டையிலிருந்திருக்கிறாய். நாகதீபம்
மகாராணியிடம் இருந்திருக்கிறது. கோட்டையிலுள்ள வீரர்கள் பெரும்பாலோர் உன்னைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்க நீயே பலவந்தமாக நாகதீபத்தைக் கைப்பற்றியிருக்கலாமே” என்றான், சுந்தர்தாஸை நோக்கி.
“அதை நான் மிகவும் சுலபமாகச் செய்திருக்கலாம்” என்று ஒப்புக் கொண்டான் சுந்தர்தாஸ்,
“பின் ஏன் செய்யவில்லை?” என்று வினவினான்.
சுந்தர்தாஸ் சில விநாடிகள் மௌனம் சாதித்தான். பிறகு மெள்ளச் சொன்னான். “நாட்டுக்கு வரலாறு என்பது ஒன்றிருக்கிறது…” என்று.
“ஆம். இருக்கிறது.”
“அதில் தேசத் துரோகிகளின் பட்டியலில் பெயர் வருவது விரும்பத்தக்கதல்ல.”
“ஆம்”
“ஆகவே இந்தப் பணியில் நேரடியாக நான் ஈடுபட விரும்பவில்லை.
“எனக்கு அந்தப் பெயர் வந்தால் பாதகமில்லை போலிருக்கிறது.”
சுந்தர்தாஸ் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான், “அதல்ல என் எண்ணம். இஷ்டப்பட்டிருந்தால் நீ ஜஹாங்கீர் இட்ட பணியை மறுத்திருக்கலாம். மறுக்காததால் அதற்கான விளைவையும் பெயரையும் ஏற்றுத் தானே ஆகவேண்டும்?”
என்ற சுந்தர்தாஸ் ஹரிதாஸ் ஜாலாவை விஷமத்துடன் பார்த்தான்.
சுந்தர்தாஸின் கயமையின் எல்லையை நினைத்து உள்ளூர வியந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அவன் நாட்டுக்குத் துரோகம் செய்து சரித்திரத்தில் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள முயல்வதை எண்ணி, அதிலிருந்த விபரீதத்தை
நினைத்துப் பார்த்தான். நாட்டினிடம் நல்ல எண்ணமுடைய தான் எத்தனை விபரீத ஆணைகளை இடவேண்டி வந்திருக்கிறது என்பதையும் சிந்தித்து தன் வாழ்வின் போக்கை எண்ணி மெள்ள நகைக்கவும் செய்தான். அந்த நகைப்பில்
பழைய வறட்சி இருந்தது. அலட்சியமும் இருந்தது.
நகைப்புக்கு காரணம் புரியாத சுந்தர்தாஸ் வினவினான் “ஏன் நகைக்கிறாய் ஹரிதாஸ்?” என்று.
“துரோகி நல்லவனாகவும் நல்லவன் துரோகியாகவும் உலகத்தின் கண்களில் காட்சியளிக்க நேர்ந்த விபரீதத்தை எண்ணி நகைத்தேன்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“வாழ்வின் வழியே அது தானே!” என்று சுந்தர்தாஸ் தத்துவம் பேசினான்.
“வாழ்வின் தத்துவங்களை நீ நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் சுந்தர்தாஸ்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“பிழைப்பதற்கு அது தான் மார்க்கம்”
“அதை நீ நன்கு புரிந்து கொண்டிருக்கிறாய்”
“புரிந்து கொண்டதால்தான் இன்று நான் ராஜபுதனத்தின் வாழ்வை நிர்ணயிக்கும் ஸ்தானத்தில் இருக்கிறேன்.”
“நீயா அதன் வாழ்வை நிர்ணயிக்கப் போகிறாய்?”
“ஆம், வகையறியாத ராணா வருஷக்கணக்கில் அதிக பலமுள்ள மொகலாயப் படைகளோடு போரிட்டு ராஜபுதனத்தின் வீரர்களில் பாதிப்பேரை ஒழித்து விட்டார். மீதி பாதிப் பேரும் மாளும் முன்பு ஒன்று ராணா பணிய வேண்டும்,
அல்லது அழிய வேண்டும்” என்றான்.
“அப்படியா!”
“ஆம். இது வெறும் பேச்சல்ல, இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே தருணத்தில், ஒண்டாலா கோட்டையை நோக்கி மொகலாயப் படைகள் நகருகின்றன. ஜஹாங்கீரின் பெரும் பீரங்கிகள் பாலைவனத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக்
கோட்டையை நோக்கித் தங்கள் பெருவாய்களைத் திறந்து கொண்டிருக்கின்றன. எந்த நிமிஷமும் அந்த வாய்களிலிருந்து பெரும் அக்னி வெடிகள் கிளம்பலாம். பயங்கரமான ஆபத்திலிருக்கின்றது ஒண்டாலா. மகாராணாவும்
ஆபத்திலிருக்கிறார். அதைக் காக்கக் கூடியவர் நாம் இருவருந்தான்” என்றான் சுந்தர்தாஸ்.
ஹரிதாஸின் கண்கள் முன்பு ஒண்டாலா கோட்டை எழுந்தது. அதில் ராணாவின் வீரமுகம் எழுந்தது. அந்த முகத்தை நோக்கி மொகலாயர் பீரங்கிகளும் பயங்கரமாக எழுந்தன.

Previous articleNaga Deepam Ch24 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here