Home Historical Novel Naga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

94
0
Naga Deepam Ch26 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 26. சிறிய உதவி பெரிய பலன்

Naga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சித்தூருக்குச் செல்லும் சுற்று வழிப்பாதையின் இடையேயிருந்த சோலையின் கூடாரத்தில் சுந்தர்தாஸ் ஒண்டாலாவின் நிலை பற்றிய விளக்கிய விவரங்களைக் கேட்ட ஹரிதாஸ் ஜாலாவின் இதயத்தில் துன்பமும் கோபமும் கலந்து
உறவாடின பல நிமிடங்களுக்கு.
ஜஹாங்கீரிடம் ஆணையிட்டு வந்த நாளிலிருந்து அன்று வரை தன்னைக் குழப்பி வந்த பல விஷயங்களுக்கு சுந்தர்தாஸின் பேச்சு விளக்கம் தந்துவிட்டதை ராஜபுதனத்தின் அந்த மாஜிப் படைத்தலைவன் உணர்ந்தான்.
ஆரம்பத்திலிருந்தே மொகலாயருடன் போரை விரும்பாதவரும் ஜயன் சந்தாவத்தின் வலுக்கட்டாயத்தினால் போரில் ஈடுபட்டவருமான சித்தூர் மகாராணா தொடர்ந்து போரினால் ராஜபுதனம் அழிவதை விரும்பாமல் ஜஹாங்கீருடன்
ரகசிய சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருந்த வதந்தியில் ஓரளவு உண்மை இருந்திருக்கவேண்டுமென்றும், அந்த இச்சையை உள்ளிருந்து தூண்டியவன் சுந்தர்தாஸாயிருக்க வேண்டுமென்றும் தனக்குள் சொல்லிக்
கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. அப்படி ராணாவின் அந்தரங்கஸ்தனாக இருந்த சுந்தர்தாஸ் ராணாவின் பலவீனத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் சந்தாவதர்கள் போன்ற வீர ராஜபுத்திரர்களின் கைகள் அரசருக்கும்
மேலாக ஓங்கி நின்ற ராஜபுதனத்தில் ஏதும் செய்ய முடியவில்லை என்பதையும் புரிந்துகொண்டான். இத்தகைய யோசனைகளால் முதலில் ராணாவின் மீது ஏற்பட்ட கோபத்தைக்கூட பெரிதும் கைவிட்டு அவர் மீது அனுதாபமே
கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. ராணா உள்ளூர சமாதானத்தை விரும்புவதற்குக் காரணம், அவருக்கு மக்கள் வாஞ்சையும் அவர்கள் அநாவசியமாக அழிவதில் இஷ்டமில்லாததுமே காரணமென்பதை அறிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா,
ராணாவின் புத்தி கூர்மையும் முன்னெச்சரிக்கையுமே சுந்தர்தாஸின் முழுப் பிரயாசையிலிருந்து அவரை அதுவரை காத்து வைத்திருக்கிறதென்று தீர்மானித்துக் கொண்டான்.
தான் முன்னொருமுறை ராணாவையும் சுந்தர்தாஸையும் இணைத்து சுயநலக் குடும்பமென்று ராஜபுத்திரியிடம் சொன்னதை நினைத்துப் பார்த்து, அது எத்தனை பிசகு என்பதையும் உணர்ந்தான். ராணா ஜஹாங்கீரிடம்
சமாதானத்தை விரும்புவது மக்கள் நன்மைக்காக, அவரது கோழைத்தனத்தினாலல்ல என்று தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, ஏதோ ஒரு முடிவுக்கு வந்து சுந்தர்தாஸை ஏறிட்டு நோக்கிக் கேட்டான்: “உண்மையில்
ஒண்டாலா ஆபத்திலிருக்கிறதா?” என்று.
“இது விஷயத்தில் தான் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று சுட்டிக் காட்டினான் சுந்தர்தாஸ்.
“ஆம்; அவசியமில்லை” என்று ஒப்புக்கொண்ட, ஹரிதாஸ் ஜாலா மேலும் கேட்டான், “ஒண்டாலாவை ஜஹாங்கீரின் படைகள் கைப்பற்ற முடியுமா?” என்று.
“நிச்சயமாய் முடியும்” என்றான் சுந்தர்தாஸ்.
மீண்டும் சிந்தனையில் இறங்கினான் ஹரிதாஸ் ஜாலா. தான் ஜஹாங்கீரிடம் சிறைப்படுவதற்கு முன்பு நடந்த ஒண்டாலா போரைப் பற்றிய விவரங்கள் அவன் சித்தத்தில் எழுந்துலாவின. ஏராளமான மொகலாயப் படைகளை
சந்தாவதர்களும், சக்தாவதர்களும், இதர ராஜபுத்திரர்களும் நன்கு சிதற அடித்து ஓட்டிய அந்த ரணகளத்தை எண்ணிப் பெருமிதங்கொண்டான் அவன். அன்றும் இதே கோட்டை தான். அதோ ஒண்டாலாவின் மூன்று வாயில்களை நோக்கி
ராஜபுதனத்தின் புரவிப் படை பாய்ந்து செல்கிறது. என்ன வீரச் செயல்கள்! எத்தனை சேதம் மொகலாயர் படைகளுக்கு. அதோ சந்தாவதரின் பெரும் வாளெழுந்து மொகலாயர் தளபதியை வெட்டி வீழ்த்திற்று. கோட்டை வாயில்களில்
நுழைகின்ற ராஜபுத்திரப் படைகள்! ஒண்டாலா கோட்டையை மொகலாயர்களிடமிருந்து எந்தத் தியாகத்தில் வீரத்தில் கைப்பற்றினர் ராஜபுத்திரர்கள். அந்த ஒண்டாலா கோட்டையை இப்பொழுதா விட்டுவிடுவார்கள்? இப்படியெல்லாம்
பழைய கதையை எண்ணிய ஹரிதாஸ் ஜாலா சுந்தர்தாஸை நோக்கி, “சரித்திரத்தை மறந்துவிட்டாய் சுந்தர்தாஸ்” என்றான்.
“எந்தச் சரித்திரத்தை?”
“ஒண்டாலா பிடிபட்ட சரித்திரத்தை.”
“நான் மறக்கவில்லை.”
“அப்படியானால் ஒண்டாலாவில் இன்று மட்டும் மொகலாயர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்?”
“ஒண்டாலா ராஜபுத்திரர்களின் பெரும் நாசத்தால் பிடிபட்ட து.”
“வீரத்தால் என்று சொல், தியாகத்தால் என்று சொல்.”
“சொற்கள் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள் ஹரிதாஸ், ஆனால் விளைவு படுநாசம். ஒண்டலாவைக் கைப்பற்றியதால் ராஜபுத்திர வீர மரபுகள் பல மாண்டுவிட்டன. இப்பொழுது அதைக் காக்க சொற்ப வீரர்கள்
இருக்கிறார்கள்…” என்று சொல்லிக் கொண்டு போன சுந்தர்தாஸை மடக்கிய ஹரிதாஸ், “அதில் உன் வீரர்கள் பாதி, அவர்களும் போர் சன்னத்தில் இல்லை” என்றான்,
“ஆம்.”
“ஒண்டாலாவை மொகலாயரிடம் ஒப்படைக்க முன்னதாகவே தீர்மானித்து விட்டாயா?”
“ஆம்.”
“இது சதியல்லவா?”
“இல்லை. ராஜபுதனத்தின் உயிர்ச்சேதததைத் தடுக்கும் பணி.”
“இந்தப் பணிக்காக ஜஹாங்கீரிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?”
சுந்தர் தாஸின் முகத்தில் சீற்றம் எழுந்தது. “என்னை நாட்டுக்குத் துரோகியென்கிறாயா?” என்று வினவினான் அவன் கோபத்துடன்.
“வேறு என்னவென்று நினைக்கச் சொல்கிறாய்?” என்று வினவினான், ஹரிதாஸ் சீற்றம் மிகுந்த தன் விழிகளை சுந்தர்தாஸ் மீது நாட்டி.
அதைக் கண்ட சுந்தர்தாஸ் சிறிதும் அஞ்சவில்லை. சிறிது நேரம் ஏதோ யோசித்தான். “நான் ஏன் வீண் தர்க்கம் செய்ய வேண்டும் ஹரிதாஸ். நீ இப்பொழுது என்னிடம் சிறைப்பட்டிருக்கிறாய். நாம் இங்கிருந்து நாளை மீண்டும்
ஒண்டாலாவுக்குப் பயணப்படுகிறோம்” என்று கூறிவிட்டுக் கூடாரத்தை விட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகு ஹரிதாஸ் ஜாலா கூடாரத்துக்குள் நீண்ட நேரம் உலாவினான். அவன் மனத்தில் துன்ப முள் மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டிருந்தது. ஒண்டாலாவின் பழைய போரையும் அதற்குப்பின் ஜஹாங்கீரின் மகன்
குர்வேலின் படுதோல்வியையும் நினைத்துப் பார்த்த ஹரிதாஸ் ஜாலா, “அப்பேர்ப்பட்ட ராஜபுதனம் கடைசியாக மொகலாயருக்கு தலைவணங்கும் நிலையில் இருக்கிறதா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அந்தத்
துன்பத்தினாலும் ஒண்டாலா பிடிபட்டால் ராஜபுத்திரியின் கதி என்னவென்ற நினைப்பாலும் பெரும் குழப்பத்துக்குள்ளான ஹரிதாஸ் ஜாலா தானிருக்கும் நிலையில் என்ன செய்வதென்பதை அறியாமல் திணறினான். அந்தத் திணறல்
அவனுக்கு அடுத்த இரண்டு நாளும் இருந்து கொண்டுதானிருந்தது. அத்தனை திணறலிலும் ஒரு விஷயம் ஹரிதாஸ் ஜாலாவுக்குத் திண்ணமாகத் தெரிந்தது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் சுந்தர்தாஸ் தன்னிடமிருந்து நாகதீபத்தைக்
கைப்பற்ற முயலமாட்டான் என்பது தான் அது. நாகதீபத்தைத் தன்னைக் கொண்டே ஜஹாங்கீரின் கையில் சமர்ப்பித்து அதற்குண்டான பழியை நிரந்தரமாகத் தன் மேல் சுமத்தித்தான், ராஜபுதனத்தில் தலைக் காட்டாமல் அடித்துவிடுவதே
சுந்தர்தாஸின் நோக்கமென்பதையும், அப்படித் தன்னை ராஜபுதனம் வெறுத்தால் ராஜபுத்திரியைக் கைக் கொள்ளவும் அவன் உத்தேசித்திருக்கிறானென்பதையும் தீர்மானித்துக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, நாகதீபம் சம்பந்தப்பட்டவரை
என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தான்.
திரும்பத் திரும்ப இவ்வண்ணம் விஷயத்தை அலசிக் கொண்டதாலும், நாகதீபத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்ததாலும் சுந்தர்தாஸ் சென்ற பிறகு அந்தக் கூடாரத்தில் விரிக்கப்பட்டிருந்த இரத்தினக் கம்பளத்திலேயே நன்றாகக் கால்களை
நீட்டிப் படுத்துக் கொண்டான் ஹரிதாஸ் ஜாலா, நாகதீபம் சம்பந்தப்பட்டவரை உடனடியாக அதற்கு ஏதும் ஆபத்து இல்லை என்பதை அறிந்து கொண்டதால், ஓரளவு நிம்மதி ஏற்பட்டாலும் சுந்தர்தாஸ் ராஜபுத்திரியைப் பற்றி நிரவியிருந்த
திட்டத்தால் மனம் மிகவும் சலனப்பட்டிருப்பதால் உறக்கம் மட்டும் வரவில்லை அந்த வாலிப வீரனுக்கு. அப்படி உறக்கம் வராததால் மறு படியும் மறுபடியும் எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டும், சிந்தனையிலிறங்கியும்
நாகதீபத்தையும் இரண்டு மூன்று முறை எடுத்துப் பார்த்துக் கொண்டு இரவைக் கழித்துக் கொண்டிருந்தான். அந்தச் சோலையில் இரவு எங்கும் நிம்மதியைச் சிருஷ்டித்திருந்தும். கூடாரத்தின் தனிமையும் ஓரளவு சாந்தியை நிலவச்
செய்திருந்தும், நிம்மதியோ சாந்தியோ அற்ற மனத்துடன் ஹரிதாஸ் ஜாலா விழித்திருந்தான். அவன் மனம் மீண்டும் மீண்டும் ஒண்டாலா கோட்டையிலிருந்த ராஜபுத்திரியை நாடிச் சென்றது. இந்த நேரத்தில் அவள் என்ன செய்து
கொண்டிருப்பாள்? அவளுக்கும் உறக்கம் பிடிக்காதோ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். திடீரெனத் தாங்களிருவரும் பிரிக்கப்பட்ட இரவிலிருந்து அந்த இரவு வரை அவள் நிலைமை மிகவும் சங்கடமானதாக இருக்க
வேண்டுமென்ற நினைப்பும் அவன் மனத்தில் எழவே, ‘நான் சென்றுள்ள பணியைப் பற்றியோ இடத்தைப் பற்றியோ மன்னர் ராஜபுத்திரிக்கு அறிவித்திருப்பாரா? அல்லது அறிவிக்க மறந்திருப்பாரா?’ என்றும் வினவிக் கொண்டான்.
இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இரவைப் போக்கிய ஹரிதாஸ் ஜாலாவை விடியற்காலையிலேயே வந்து சந்தித்த வீரனொருவன், “தலைவர் புறப்படத் தயாராகிவிட்டார்” என அறிவித்தான்.
“யார் தலைவர்?” சீற்றத்துடன் எழுந்தது ஹரிதாஸ் ஜாலாவின் கேள்வி.
“சுந்தர்தாஸ் மகராஜ்” பணியுடன் தலைவணங்கிப் பதில் கூறினான் வீரன்.
ஹரிதாஸ் ஜாலாவின் இதழ்களில் இகழ்ச்சி நகை பூத்தது. “சுந்தர்தாஸ் எப்பொழுது மகராஜ் ஆனார்?” என்று வினவினான் இகழ்ச்சியுடன் ஹரிதாஸ் ஜாலா.
மொகலாயர்கள் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்?”
“நீயும் மொகலாயனா?”
“இல்லை; மொகலாயப் படையிலிருக்கும் ராஜபுத்திரன்.”
“நீ எப்படி ஒண்டலாவுக்கு வந்தாய்?”
“மகராஜ் அழைத்து வந்தார்கள், என்னையும் பலரையும்.”
“மொகலாயர் படையெடுத்தால் கோட்டைக்கு உலை வைப்பதற்காக அழைத்து வந்தாரா?”
இதற்கு அந்த வீரன் பதில் சொல்லவில்லை. ஹரிதாஸ் ஜாலாவை உஷ்ணத்துடன் நோக்கினான் ஒரு விநாடி. “ஊழியனை மிரட்டுவதை விடத் தலைவரை மிரட்டிக் கேட்பது தான் ஹரிதாஸ் ஜாலாவைப் போன்ற சிறந்த
படைத்தலைவருக்கு அழகு”- கூறிவிட்டு வெளியே சென்றான் அந்த வீரன்.
அந்த வீரன் சொற்களில் உண்மை புதைந்து கிடப்பதை உணர்ந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. “சுந்தர்தாஸ் மீதுள்ள சீற்றத்தைப் பணிமகனிடம் காட்டிப் பயனென்ன?” என்று தன்னைத் தானே கடிந்தும் கொண்டான். பிறகு
எழுந்திருந்து கூடாரத்து மூலையிலுள்ள நீர்க் கலயத்திலிருந்து நீர் மொண்டு வெளியே வந்து பல் துலக்கி முகம் கழுவிக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டான். மீண்டும் கூடாரத்துக்குள் வந்து ஆடைகளைச் சீர்படுத்திக்
கொண்டதும் வீரனொருவன் கொண்டு வந்த மதுவைச் சிறிது அருந்தி விட்டுப் புறப்படச் சன்னத்தமாக வெளியே வந்தான், கூடாரத்தின் வாயிலில் வீரர்கள் புறப்படத் தயாராகக்காத்திருந்தார்கள். அவன் புரவியும் சேணம் மாட்டிப்
பயணத்துக்குத் தயார்படுத்தப்பட்டிருந்தது. அந்தப் புரவியின் பக்கத்தில் நின்ற புரவியொன்றில் சுந்தர்தாஸ் கம்பீரமாக அமர்ந்திருந்தான். ஹரிதாஸ் ஜாலா அவனை ஒரு விநாடி ஏறெடுத்து நோக்கிவிட்டுத் தன் புரவியின் மீது பாய்ந்து
ஏறினான். அடுத்த விநாடி வீரர் கூட்டம் சோலையின் உட்புறத்தில் புகுந்தது.
சோலையின் ஊடே சிறிது நேரம் பயணப்பட்டதும் மீண்டும் பாலைவன வழியாகச் சென்றார்கள். அன்று பகல் முழுவதும் பாலைவனத்திலும் இடையிடையே இருந்த சோலைகளிலும் சுந்தர்தாஸ் பயணம் செய்தான், அன்று இரவில்
வேறொரு சோலையில் தனது படைவீரனைத் தங்க உத்தரவிட்டான். சுந்தர்தாஸ் சென்ற திசையிலிருந்தும் வேகத்திலிருந்தும் சீக்கிரம் ஒண்டாலாவை அடைவது அவன் நோக்கமல்ல என்பதைப் புரிந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. அது
மட்டுமல்லாமல் அவ்வப்பொழுது தங்கிய இடங்களில் அவன் அடிக்கடி மேற்கு நோக்கிப் புரவி வீரர்களை ஏவியதிலிருந்து, யாருடைய வருகையையோ எதிர் பார்க்கிறான் என்பதையும் அறிந்து கொண்டான். ‘ஒண்டாலாவின் முன்பு
ஜஹாங்கீர் இருந்தால் இவன் அங்கு போக வேண்டியவன் தானே? அப்படியிருக்க ஏன் சுற்று வழியில் பயணம் செய்கிறான்? தவிர யாரை எதிர்பார்க்கிறான்?’ என்று கேட்டு விடை காணாமல் தவித்தான்.
விடை அன்றும் கிடைக்கவில்லை. அடுத்த ஒரு வாரமும் கிடைக்கவில்லை. சுந்தர்தாஸ் பயணத்தைப் பெரிதும் தாமதித்துத் தாமதித்து நடத்தினான். ஒண்டாலாவைச் சுற்றித் தொலைவிலிருந்த ஊர்களாகப் பார்த்துப் பார்த்துத்.
தங்கினான். இப்படி ஒரு வாரம் கழிந்தது. ஆனால் அந்த வாரத்துக்குப் பின் சுந்தர்தாஸின் நிதானம் மெள்ள மெள்ளக் குலைந்து கொண்டு வருவதைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா, ஏதோ ஏமாற்றம் சுந்தர்தாஸின் திட்டத்தில் ஏற்பட்டுவிட்டது
என்பதை மட்டும் புரிந்து கொண்டான். அதுவரை இருந்த நிதானம் குலைந்து வீட்டதால், சுந்தர்தாஸ் காரணமில்லாமல் வீரர்கள் மீது எரிந்து விழத் தொடங்கினான். குற்றமில்லாதவர்கள் மீதெல்லாம் குற்றம் கற்பித்துச் சீறினான். அப்படி
அவன் சீறிக்கொண்டிருந்த ஒரு சமயத்தில் தான் ஹரிதாஸ் அவன் அநீதியைச் சகிக்காமல் தலையிட்டான். புரவியொன்றின் சேணம் நழுவிக் கிடந்ததற்காக ஒரு வீரனைச் சாட்டை கொண்டு அடிக்க ஓடிய சுந்தர்தாஸை இடைபுகுந்து
தடுத்த ஹரிதாஸ் ஜாலா, “சுந்தர்தாஸ்! ராஜபுதனத் தின் வீரர்களை எந்தத் தலைவனும் சாட்டை கொண்டு அடிக்கும் பழக்கமில்லை” என்று கூறினான்.
சுந்தர்தாஸின் கண்கள் நெருப்பைக் கக்கின. “அதை எனக்குப் போதிக்க நீ யார்?’ என்று அதட்டினான்.
“ராஜபுதனத்தின் வீரர்களில் ஒருவன்” ஹரிதாஸ் ஜாலாவின் பதில் மிகுந்த நிதானத்துடன் வந்தது.
“உன் வேலையை மட்டும் நீ கவனிப்பது நல்லது.”
“அதைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்?”
“என்ன அது?”
“ஒரு ராஜபுத்திரனுக்கு அநீதி விளைவிக்கப்படும் போது, இன்னொரு ராஜபுத்திரன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
“இந்த விஷயங்களில் உன் தலையீட்டை நான் விரும்பவில்லை.”
“விரும்பாவிட்டால் குறையைத் தீர்த்துக்கொள்ள வழியிருக்கிறது.”
“என்ன வழி?”
“ராஜபுத்திரர்கள் பாம்பரை வழி.”
அது என்ன வழியென்பதை சுந்தர்தாஸ் உணர்ந்தே இருந்தான். ராஜபுத்திரர்களுக்குள் தீவிரக் கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில், கத்தி கொண்டு முடிவை ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை ஹரிதாஸ் ஜாலா
குறிப்பிடுகிறானென்பதை அறிந்து கொண்ட சுந்தர்தாஸ், அவனையும் அவனால் காப்பாற்றப்பட்ட வீரனையும் ஒரு முறை வெறித்து நோக்கிவிட்டு வேறு திசையில் சென்றுவிட்டான். மேற்கொண்டு எந்த இடத்திலும் நிற்காமலும்,
அவமானத்திலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்ட வீரனை ஏறெடுத்துப் பார்க்காமலும், ஹரிதாஸ் ஜாலாவும் தன் கூடாரத்தை நோக்கிச் சென்று விட்டான். அந்தச் சம்பவம் சிறிய சம்பவம் தான். ஆனால் சின்னஞ்சிறிய சம்பவங்கள் உலக
சரித்திதரத்தை மாற்றி இருக்கின்றனவல்லவா? அப்படி அந்த சிறிய சம்பவம், சிறிய உதவி ஹரிதாஸ் ஜாலாவின் நிலைமையைப் பெரிதும் மாற்றியது. அதனால் கிடைத்த பலன் பெரும் பலன். அதை நினைத்துப் பிற்காலத்தில் பல முறை
வியந்தான் ஹரிதாஸ் ஜாலா. பலன் உடனே கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு வாரம் கழித்துக் கிடைத்தது. நன்றாக இருள் சூழ்ந்த இரவில் கிடைத்தது. நன்றாக கூடாரத்தில் உறங்கிக் கொண்டு இருந்த ஹரிதாஸ் ஜாலாவை சுந்தர்தாஸின்
சாட்டையிலிருந்து தப்பிய அந்த வீரன், நள்ளிரவில் வந்து அசைத்து எழுப்பினான். அதனால் வாரிச் சுருட்டி எழுந்த ஹரிதாஸைக் கூச்சலிட வேண்டாமென்று சைகை செய்து தன்னுடன் வரும்படியும் ஜாடை காட்டினான்.

Previous articleNaga Deepam Ch25 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here