Home Historical Novel Naga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

106
0
Naga Deepam Ch27 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

அத்தியாயம் – 27. ஒண்டாலாவில் நினைத்ததும் நடந்ததும்

Naga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நள்ளிரவில் வீரன் வந்து எழுப்பியதும், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்த ஹரிதாஸ் ஜாலா, அவன் வாயில் கையை வைத்து ஏதும் பேசவேண்டாமென சைகை செய்து, தன்னுடன் வரும்படி ஜாடை காட்டியதும், ஏதோ முக்கியமான
நிகழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தவனாய், மிகுந்த வேகத்துடன் தனது ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு கலைந்திருந்த தலையைச் சீர் செய்து, இடையில் குறுவாள் ஒன்றையும் செருகிக் கொண்டு அந்த
வீரனைத் தொடர்ந்தான். கூடாரத்திலிருந்து வெளிப்போந்த அந்த வீரன் கூடார வாயிலில் வந்ததும் நாற்புறமும் பார்த்து எச்சரிக்கை செய்து கொண்டு, அடிமேலடி வைத்து சற்று எட்ட இருந்த மற்றொரு கூடாரத்தை நோக்கிச்
சென்றான், அந்தக் கூடாரத்தை அணுகியதும், கூடார வாயிலுக்காகச் செல்லாமல் அதன் பின்புறமாக நடந்து கூடாரச் சீலையை ஒட்டி நின்று கொண்டு ஹரிதாஸையும் தன்னை நெருங்குமாறு சைகை செய்தான். அவன் காட்டிய
சைகையை அனுசரித்துக் கூடாரச் சீலைக்கு அருகில் வந்த ஹரிதாஸ் ஜாலாவுக்கு கூடாரத்துக்குள் இருவர் பேசுவது நன்றாகக் காதில் விழவே, யார் பேசுகிறார்கள் என்று உற்றுக் கேட்டான். ஒருவன் குரல் ஹரிதாஸ் ஜாலாவுக்கு
ஏற்கனவே பழக்கமான சுந்தர்தாஸின் குரல், இன்னொருவன் குரல் எங்கோ கேட்ட மாதிரியிருந்தாலும் எங்கு கேட்டோம் என்பதை நிச்சயிக்க முடியாமல் திண்டாடிய ஹரிதாஸ் ஜாலாவுக்கு உதவ, அருகில் இருந்த வீரன் கூடாரத்தின்
பின்பக்கச் சீலையை மெள்ளப் பிரித்தான். முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தின் பின் பகுதி இரண்டு சீலைகளால் பொருத்தப்பட்டிருந்ததால், இரண்டும் சந்தித்த இடத்தை மெள்ள நீக்கி, வீரன் உள்ளே
பார்க்கும்படி ஹரிதாஸ் ஜாலாவை ஊக்கினான். ஹரிதாஸ் ஜாலா ஒருபுறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்புறத்தை ஒரு கண்ணால் ஆராய்ந்தான். அந்த உட்புறத்தை ஆராய்ந்த அவன் வதனத்தில் சிந்தனைச் சாயை தீவிரமாகப்
படர்ந்தது. சுந்தர்தாஸுக்கு எதிரே நின்றவனை எங்கோ பார்த்திருந்த நினைப்பு அவனுக்கு இருந்தது; ஆனால் எங்கே பார்த்தோம் என்பது மட்டும் திண்ணமாகப் புரியவில்லை. இருப்பினும் அதைப்பற்றி ஆராயாமல் உள்ளே என்ன
நடக்கிறது என்பதை மட்டும் கவனித்த ஹரிதாஸ் ஜாலா, சுந்தர்தாஸுக்கு எதிரில் நின்றவன் மொகலாயனென்பதையும் அவன் சீற்றத்துக்கெதிரே சுந்தர்தாஸ் நடுங்கி நின்று கொண்டிருப்பதையும் கவனித்தான். வந்திருப்பவன்
மொகலாய தூதனென்பதையும், மொகலாயர் விரும்பாத ஏதோ விஷயம் நடந்திருக்கவேண்டுமென்பதையும் ஊகித்துக் கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அவர்கள் இருவர் சம்பாஷணையையும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான். அவன்
ஒற்றைக் கண் பார்வை கூடாரத்தின் உட்புறத்தைவிட்டு அகலவே இல்லை. உட்புறத்தில் நின்ற மொகலாயன் தன் நீண்ட மீசையையும், முசவாய்க்கட்டையின் நட்டநடுவில் லேசாக வளர்ந்து சற்றே நீண்டிருந்த குறுந்தாடியையும் இரண்டு
மூன்று முறை தடவி விட்டுக்கொண்டு. “சுந்தர்தாஸ் பாதுஷா ஜஹாங்கீரிடம் இதைச் செய்கிறேனென்று உறுதி கூறி, அதைச் செய்யத் தவறியவன் பிழைத்ததில்லை தெரியுமா உனக்கு” என்று சீறினான்.
“தெரியும். ஆனால், எதிர்பாராமல் நேரிட்டுவிடும் விளைவுகளுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்ற சுந்தர்தாஸின் குரல் கேட்பதற்குப் பரிதாபமாயிருந்தது.
“நீ எதிர்பாராமல் இது எப்படி நடந்திருக்க முடியும்” என்று வினவினான் மொகலாய வீரன்.
“நான் தான் முக்கிய அலுவலாக ஒண்டாலாவை விட்டுப் புறப்பட்டு விட்டேனே?” என்றான் சுந்தர்தாஸ் மீண்டும் பரிதாபக் குரலில்.
“உன் அலுவல் என்ன, ஏன் புறப்பட்டாய் என்பதல்ல கேள்வி. எந்தத் தைரியத்தில் நீ மொகலாயப் படையை ஒண்டாலாவைத் தாக்கச் சொன்னாய் என்பதுதான் கேள்வி” என்றான் மொகலாய வீரன், குற்றவாளியை விசாரிக்கும்
நீதிபதியைப் போல.
“ஒண்டாலாவில் என் பணியை நன்றாகத்தான் நிறைவேற்றி வைத்திருந்தேன்.”
“என்ன நிறைவேற்றி வைத்திருந்தாய்?”
“அரசரிடம் சொல்லி ஜயன் சந்தாவத்தை வேறு அலுவலாக ஒண்டலாவிலிருந்து அனுப்பினேன்…”
“உம், பிறகு.”
“ஒண்டாலா கோட்டைக்குள் என் வீரர்களில் பாதிப் பேரைப் புகுத்தி, மீதி வீரருக்கும் காவலில் சிரத்தையில்லாமல் செய்தேன்…”
“பிறகு?”
“அரண்மனையிலிருந்து அமரசிம்மன் வெளிவராத படியும் வேறு யாருக்கும் தூது அனுப்ப முடியாதபடியும் என் ஆட்களை அரண்மனை முழுவதும் நிரப்பி னேன்…”
“நீ சொல்லுவது உண்மையாயிருந்தால், அந்தக் கோட்டையை மொகலாயப் படைகள் தாக்கியதும் கோட்டை பழமென நழுவிப் பாதுஷா கைகளில் விழுந் திருக்க வேண்டும்.”
“ஆம்”
“ஆனால் விழவில்லை தெரியுமா?”
“இப்பொழுதுதான் அதைச் சொன்னாய்.”
“ஆம் இப்பொழுது தான் அதைச் சொன்னேன். அது மட்டுமல்ல” என்ற அந்த மொகலாய வீரன் சுந்தர்தாஸை நோக்கி நெருப்புத் துண்டங்களென ஒளி வீசிய கண்களை திருப்பினான். அத்துடன் தொடர்ந்தும் சொன்னான். “படைகள்
போருக்குத் தயாராயிருந்தன, மொகலாயர், கோட்டையை நீ சொன்னபடி இரவில் தான் அணுகினார்கள். அவர்கள் கதவுகளை நெருங்கும் வரை தூங்கிக் கிடந்த கோட்டை, திடீரென உயிர் பெற்றது. வாயிற்கதவுகளும் நிமிஷ
மாத்திரத்தில் திறந்து வெள்ளம் போல் ராஜபுதனப் புரவி வீரர் பாய்ந்து வந்தார்கள். பக்க வாயில்கள் இரண்டின் வழியாகவும் சந்தாவதர்களும் வெகு வேகத்துடன் கிளம்பி நமது படைகளை ஊடுருவி விட்டார்கள்” என்று.
இதைச் சொன்ன அந்த மொகலாய வீரன் அடுத்த விநாடி கோப நகை நகைத்து. “சுந்தர்தாஸ்! கோட்டையின் நடுவாயிலும் திறந்தது. வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தலைமை வகித்து வந்தது யார் தெரியுமா?” என்று கேட்டான்.
“யார்?” சுந்தர்தாஸின் குரலில் திகில் மண்டிக் கிடந்தது.
“ஊகித்துச் சொல் பார்ப்போம்” என்றான். மொகலாய வீரன் இகழ்ச்சியுடன்.
“ராணாவா?” -ஏதோ கேட்க வேண்டும் என்பதற் காகக் கேட்டான் சுந்தர்தாஸ்.”
“இல்லை.”
“வேறு யார்?”
“நீ கோட்டையை விட்டு அனுப்பிவிட்டதாகச் சொன்னாயே…” மொகலாய வீரன் வார்த்தையை முடிக்கவில்லை.
சுந்தர்தாஸின் முகத்தில் பயத்தின் சாயை படர்ந்தது. “யார்… யார்…” என்று குளறினான்.
“ஆம் சுந்தர்தாஸ்! யார் பெயரைச் சொல்ல நீ அஞ்சுகிறாயோ அவர்தான்- ஜயன் சந்தாவத்?” என்றான் அந்த மொகலாய வீரன்.
சுந்தர்தாஸ் இடி தலைமேல் விழுந்து விட்டது போல் அதிர்ச்சியுற்று நின்றான். “ஜயன் சந்தாவத்! ஜயன் சந்தாவத்! அவர் எப்படி வந்தார் அங்கே? அவரைத்தான் நான் அரசரிடம் சொல்லி அனுப்பிவிட்டேனே?” – என்று தட்டுத் தடுமாறிப்
பேசினான் சுந்தர்தாஸ்.
மொகலாயன் முகத்தில் இகழ்ச்சிக் குறி படர்ந்தது. “நாட்டுக்குத் துரோகம் செய்ய முனைபவர்களைவிட நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கு அதிக ஊகமிருப்பதால் ஏற்படும் விளைவு இது” என்றான் அவன்.
இதைத் தாங்காத சுந்தர்தாஸ், “யார் நாட்டுக்குத் துரோகி? வார்த்தைகளை அளந்து பேசு. நானும் ராஜபுதனத்தின் படைத்தலைவர்களில் ஒருவன்” என்று சீறினான்.
“ராஜபுதனத்திடம் பரிதாபப்படுகிறேன் சுந்தர்தாஸ்” என்ற மொகலாய வீரன் மேலும் தொடர்ந்து,
“சுந்தர்தாஸ்! மொகலாயருக்கு ஒண்டாலா சண்டையில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஜயன் சந்தாவத்தின் தாக்குதலால் உருண்ட தலைகளை மூன்று நாள் திரட்டி இருக்கிறது மொகலாயர் படை. நீ எழுதியது போல், ஒண்டாலா
சரணடையவில்லை. இன்னும் கம்பீரமாக நின்றிருக்கிறது. இதற்கு நீ யாருக்குப் பதில் சொல்ல வேண்டும் தெரியுமா?” என்று கேட்டான்.
“யாருக்கு, பாதுஷாவுக்குத்தானே?” என்று சுந்தர்தாஸ் வினவினான்.
“இல்லை.”
“சுல்தான் பர்வேஸுக்கா?”
“இல்லை.”
“பின் யாருக்கு?”
“ஜஹாங்கீர் எந்த மகனை அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறார்?”
மொகலாய வீரனின் இந்தக் கேள்வி சர்வசாதாரணமானது தான். ஆனால் அதைக் கேட்டதும் சுந்தர்தாஸ் மெள்ள நடுங்கினான் “யார், சுல்தான் குர்ரமா?” என்று வினவினான் திகிலும் வியப்பும் குரலில் புகுந்து லாவ.
“ஆம், சுல்தான் குர்ரம்தான் இந்தப் படையெடுப்புக்குத் தலைவர். ஒண்டாலாவின் தோல்விக்குப் பின்பு ராஜபுதனத்தைப் படிய வைக்காமல் திரும்புவதில்லையென பாதுஷாவுக்கு ஓலை அனுப்பி இருக்கிறார்” என்றான் மொகலாய
வீரன்.
சுந்தர்தாஸுக்கு என்ன சொல்வதென்றே புரியாததால் விழித்தான். மொகலாய வீரன் மேற்கொண்டு உத்தரவிட்டான் சுந்தர்தாஸுக்கு. “நாளையே நீ என்னுடன் புறப்பட வேண்டும்” என்று.
“எங்கு புறப்பட வேண்டும்?”
“சுல்தான் குர்ரம் இருக்குமிடத்திற்கு. மீதியைக் காலையில் பேசிக் கொள்வோம்” என்ற அந்த மொகலாய வீரன் சுந்தர்தாஸின் பதிலுக்குக் காத்திராமல் விடு விடு என்று வெளியே சென்றான். வெளியில் இருந்து அவன்
வீரனொருவனை விளித்துத் தனக்கொரு தனிக்கூடாரம் ஒன்று அமைக்கும்படி உத்தரவிட்டது ஹரிதாஸ் ஜாலாவின் காதில் தெளிவாக விழவே., மேற்கொண்டு அங்கு நிற்கப் பிரியப்படாத அவன், கூடவே வந்த வீரனையும் அழைத்துக்
கொண்டு மரங்களின் இருட்டில் நடந்து பழையபடி தன் கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான்.
கூடாரத்துக்கு வந்ததும் ஆழ்ந்த யோசனையில் இறங்கினான். ஹரிதாஸ் ஜாலா ஒண்டாலாவை விட்டுத்தான் கிளம்பி அன்றுடன் பத்து தினங்கள் முடிந்து விட்டதைக் கணக்குப் பார்த்துக்கொண்ட ஹரிதாஸ் ஜாலா. அடுத்த ஐந்து
நாட்களைக் கடந்து விட்டால் ராணாவிடம் தான் செய்திருந்த ஆணை ரத்தாகி விடுமென்றும், பிறகு தான் நாகதீபத்தை ஜஹாங்கீருக்கு அனுப்புவதில் தடையேதுமிருக்காதென்றும் தீர்மானித்தான். அப்படி அனுப்பிவிடும் பட்சத்தில்
ஜஹாங்கீருக்கும் தான் செய்த ஆணை பயனளித்து விடுவதால் அதற்குமேல் தனது சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த மொகலாய சக்கரவர்த்தியாலும் முடியாதென்பதையும் உணர்ந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலாவின் மனத்தில் திடீரென ஒரு
திட்டம் உருவாயிற்று. ‘ஆம் அது தான் சரி’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட அந்த வாலிப வீரன், தன் முன் நன்றியறிதலுடன் நின்று கொண்டிருந்த வீரனை நோக்கி, “வீரனே நீ இன்று எனக்கு ஒரு பேருதவி செய்து இருக்கிறாய்.
இன்னோர் உதவியும் செய்ய முடியுமா?” என்று வினவினான்.
“சொல்லுங்கள் படைத்தலைவரே” என்றான் வீரன்.
இப்பொழுது ஒரு மொகலாய வீரனைப் பார்த்தோமே, சுந்தர்தாஸின் கூடாரத்தில்…” என்று துவங்கினான் ஹரிதாஸ் ஜாலா.
“ஆம்; பார்த்தோம்.”
“அவன் யார் தெரியுமா உனக்கு?” ‘
“தெரியாது.”
“நான் எங்கோ பார்த்திருக்கிறேன் அவனை.”
“எங்கே?”

.
“ஒன்றுமில்லை, அந்த வீரனை நான் சந்திக்க வேண்டும்.”
“கூடாது, கூடாது.”
“ஏன்?”
“பெரிய ஆபத்தல்லவா அது?”
ஹரிதாஸ் ஜாலா புன்முறுவல் காட்டினான். “எதிரிகளிடமிருந்து நமக்கு எப்பொழுதும் ஆபத்து குறைவு வீரனே! ஆபத்தெல்லாம் நம்முடன் இருக்கும் மனிதர்களால் தான். ராஜபுதனத்தைக் கைப்பற்ற ஜஹாங்கீர் முயல்வது தவறல்ல,
குற்றமல்ல. அதைக் காட்டிக் கொடுக்கத் தயாராய் இருக்கும் சுந்தர்தாஸ் போன்றவர்கள் தான் உண்மைப் புல்லுருவிகள். அவர்களுக்குத் தான் நாம் அஞ்சவேண்டும். நீ சென்று மொகலாய வீரனுக்குக் கூடாரமடித்ததும் என்னிடம் வந்து
சொல்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
ஹரிதாஸ் ஜாலாவின் ஆணையைச் சிரமேல் ஏற்றுச் சென்ற அந்த வீரன் சுமார் ஒரு நாழிகை கழித்துத் திரும்பி கூடாரம் அடித்து முடிந்து அந்த மொகலாய வீரனும் படுத்து விட்டதாகக் கூறினான். அடுத்த விநாடி அந்த வீரனைத்
தொடர்ந்து வெளியே கிளம்பிய ஹரிதாஸ் ஜாலா, மொகலாய வீரன் கூடார வாயிலில் காவலன் ஒருவன் நின்றிருந்ததால் கூடாரத்தின் பின் புறம் சென்று அங்கிருந்த சீலையை மெள்ள குறுவாளால் கிழித்துச் சீலையைப் பிரித்துக்
கொண்டு உள்ளே நுழைந்து, கூட வந்த வீரனைச் சென்று விடும்படி சைகை செய்து சீலையை மூடி விட்டான். பிறகு மெள்ள ஓசைப்படாமல் மொகலாய வீரன் படுத்திருந்த இடத்தை அணுகிய ஹரிதாஸ் ஜாலா அவனை மெள்ளத் தட்டி,
அப்படி எதிர்பாராதவிதமாக எழுப்பப்பட்ட மொகலாய வீரன் அதிர்ச்சியுற்று எழுந்திருந்து எதிரே நின்ற ஹரிதாஸ் ஜாலாவைப் பார்த்தவுடன், வியப்பின் எல்லையை அடைந்தவனாய், “யார்? நீயா!” என்று கூறினான்.
ஹரிதாஸ் ஜாலாவின் புத்தியிலும் அவனை எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற நினைப்பு மலரவே, அவன் விழிகளும் ஆச்சர்யத்தின் எல்லையில் சஞ்சரித்தன.
“என்ன ஆச்சரியமான சந்திப்பு!” என்றான் ஹரிதாஸ் ஜாலா. எதிரியின் கைகளை அன்புடன் பிடிக்கத் தனது கைகளை நீட்டினான்.
ஹரிதாஸ் ஜாலாவின் கைகளைப் பற்றவில்லை அந்த வீரன். பதிலுக்குத் தலையை நன்றாகத் தாழ்த்தி வணங்கினான். ராஜபுதனத்தின் படைத்தலைவனுக்கு.

Previous articleNaga Deepam Ch26 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here