Home Historical Novel Naga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

93
0
Naga Deepam Ch28 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 28. இரும்பு வளையம்

Naga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நட்புரிமையுடன் கையைப் பிடிக்கச் சென்ற ஹரிதாஸ் ஜாலாவின் கைகளைப் பார்த்ததும் மொகலாய வீரன் தலை தாழ்த்தி அந்தக் கைகளை வணங்கினானென்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. ஜஹாங்கீர் அளித்த முத்திரை
மோதிரம் அந்தச் சமயத்தில் ஹரிதாஸின் கைவிரலில் பளபளத்துக் கொண்டிருந்தது. அதற்குத் தலைவணங்கிய அந்த மொகலாய வீரன், “இதுவரையிலிருந்த குழப்பம் நீங்கிவிட்டது” என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டான்.
“இதுவரை என்ன குழப்பமிருந்தது உங்களுக்கு?”
“உங்களை எங்கோ பார்த்த நினைப்பிருந்தது…” என்று இழுத்தான் மொகலாய வீரன்.
“எனக்கும் அப்படித்தானிருந்தது” என்று ஒப்புக்கொண்டான் ஹரிதாஸ் ஜாலா.
“ஆனால் எங்கு பார்த்தோம் என்று புரியவில்லை.”
“இப்பொழுது புரிந்துவிட்டதா?”
“புரிந்துவிட்டது பாதுஷாவின் அரண்மனையில் சந்தித்தோம்” என்றான் மொகலாய வீரன்.
அப்பொழுது தான் விஷயம் தெளிவுபட்டது ஹரிதாஸ் ஜாலாவுக்கும், “ஆம் ஆம், நீங்கள் தான் பாதுஷா ஜஹாங்கீரின் முன் அறையில் இருந்தீர்கள். நீங்கள் தான் என்னை பாதுஷாவிடம் அழைத்துச் சென்றீர்கள்” என்று கூறினான்
ஹரிதாஸ் ஜாலா, விவரம் புரிந்ததற்கான குறி முகத்தில் விரிய.
“ஆம்” என்பதற்கறிகுறியாகத் தலையசைத்த மொகலாய வீரன், “ஆம் ஆம், அந்த இடத்தில் தான் சந்தித்தோம். நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. பாதுஷா உங்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் வரும்போது
சிறைக்காவலாளிகளுடன் வந்தீர்கள். போகும்போது சுதந்தர புருஷராகச் சென்றீர்கள். பாதுஷா உங்களை விடுவித்த காரணம் யாருக்கும் புரியவில்லை. ஆனால் நீங்கள் வெளியில் வரும் போது உங்கள் கையிலிருந்த பாதுஷாவின்
முத்திரை மோதிரம் உங்களை யாரும் அணுக முடியாமல் செய்துவிட்டது” என்றும் கூறி, பழைய சம்பவங்களை அப்படியே திருப்பிச் சொன்னான்.
ஜஹாங்கீரின் சந்திப்பு ஹரிதாஸ் ஜாலாவின் சித்தத்திலும் வலம் வந்தது. அன்று தான் செய்த ஆணையை மீண்டும் நினைத்து அங்கிக்குள்ளே இதயத்தின் பக்கத்திலிருந்த நாகதீப மடங்கிய சிமிழையும் வலது கையால் தடவிப் பார்த்துக்
கொண்டரன் அந்த வாலிப வீரன். அதைக் கண்ட மொகலாய வீரன் கேட்டான், “என்ன இதயத்தைத் தடவிச் சிந்திக்கிறீர்கள்? நான் சொன்னது சரியல்லவா?” என்று.
“நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை” என்ற ஹரிதாஸ் ஜாலா மேலும் தொடர்ந்து, “நான் இதயத்தைத் தடவவில்லை, இதயத்தின் அருகில் நான் வைத்திருக்கும் பொருளைத் தடவிப் பார்த்தேன். அதுபோய் விட்டால் பெரும் விபரீதம்
ஏற்படும்” என்று கூறினான்.
மொகலாய வீரன் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. “அத்தனை அற்புதப் பொருளா அது?” என்று ஆச்சரியத்துடன் வினவவும் செய்தான்.
“ஆம்” உறுதியாக வந்தது ஹரிதாஸ் ஜாலாவின் பதில்.
“என்ன பொருள் அது?”
“பொருள் என்ன என்று சொல்ல முடியாது. யார் விரும்புவது என்று சொல்ல முடியும்.”
“யார் விருமபுவது!”
“ராணி சாகிபா நூர்ஜஹான்!”
“என்ன!” அதிர்ச்சி மிகுந்த குரலில் கேட்டான் மொகலாய வீரன்.
“ஆம்; ராணி சாகிபா விரும்பினார்கள். அதை எப்படியும் கொண்டு வரும்படி பாதுஷா பணித்தார்; கொண்டு வருவதாக ஆணையிட்டு வந்தேன். கைப் பற்றியும் விட்டேன். வந்த வழியில் சுந்தர்தாஸ் என்னை சிறைப்படுத்தினான்”
என்று மிகத் தந்திரமாக மித்திர பேதத்தில் புகுந்த ஹரிதாஸ் ஜாலா, மொகலாய வீரனை ஏறிட்டு நோக்கினான்.
மொகலாய வீரன் முகம் குங்குமமாகச் சிவந்தது. அவன் விழிகள் நெருப்பைக் கக்கின. உதடுகள் ஒரு விநாடி துடித்தன. “அத்தனை ஆணவமா அவனுக்கு?” என்று சீறினான் மொகலாய வீரன். அத்துடன் தன் இதயத்தின் மீது கையை
வைத்துக் கொண்டு இறைந்தான். “அல்லாவின் (ஸல்) ஆணையாகச்
சொல்கிறேன். இந்த மகம்மது பெக் உயிருடன் இருக்கும் வரையில் சுந்தர்தாஸ் உங்கள் மீது கையை வைக்க முடியாது. அவன் ஏற்கெனவே செய்துள்ள துரோகத்துக்கே சுல்தான் குர்ரம் அவனைத் தூக்கிலிடலாம். பாதுஷாவின்
விவகாரத்தில் தலையிட்டால் அவன் உயிர் அரைக்காசு பெறாது” என்று.
மகம்மது பெக்கின் ஆணை மிக உக்கிரமாயிருந்தது. அதைக் கண்டு உள்ளூர உவகை கொண்ட ஹரிதாஸ் ஜாலா அதற்கு மேலும் தூபம் போட முற்பட்டு, “உங்களுக்குத் தேவையானால் அந்தப் பொருளைக் காட்டுகிறேன்” என்று
அங்கியின் பைக்குள் கையையும் விட்டான்.
“வேண்டாம்! வேண்டாம்!” என்று கூச்சலிட்ட மகம்மது பெக், “ராணி சாகிபா இஷ்டப்பட்டதை இந்த அற்பன் கண்ணால் பார்ப்பதும் தகாது” என்றான்.
ஹரிதாஸ் ஜாலா அவன் ராஜவிசுவாசத்தை எண்ணி மகிழ்ந்தான், இருப்பினும் அவனைத் தன் பக்கத்தில் பூராவாக இழுக்க நினைத்து, “நான் தங்களைப் பெயர் சொல்லி அழைக்கலாமா?” என்று அன்புடன் வினவினான்.
“தாராளமாக அழையுங்கள்” என்றான் மகம்மது பெக்.
“மகம்மது பெக்,”
“சொல்லுங்கள்…”
“என் பெயர் ஹரிதாஸ் ஜாலா.”
“யார்….?”
“ஆம்! ராஜபுதனத்தின் பழைய படைத்தலைவன்.”
“நினைத்தேன் அப்பொழுதே. பாதுஷா பெரும் பணிகளை சாதாரண வீரர்களிடம் ஒப்படைக்க மாட்டாரே என்று. நீங்கள் ஹரிதாஸ் ஜாலாவா?”
“ஆம் மகம்மது பெக். என்னை யாரென்று அறிந்த பின்புதான் பாதுஷா, ராணா அமரசிம்மனிடமிருந்து ஓர் அரிய பொருளைக் கொண்டு வரும்படி பணித்தார். அதைக் கொண்டும் வந்தேன். இடையில் இவனிடம் சிக்கிக் கொண்டேன்.”
“ஹரிதாஸ் ஜாலா! இவனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் சொல்லுங்கள்” என்று கேட்டான் மகம்மது பெக், உணர்ச்சியுடன்.
“நாம் நாளை பயணப்பட வேண்டும்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“எங்கு?” என்று வினவினான் மகம்மது பெக்.
“சுல்தான் குர்ரம் இருக்குமிடத்திற்கு” என்று கூறினான் ஹரிதாஸ் ஜாலா.
மகம்மது பெக்கின் பதில் தடங்கல் சிறிதுமின்றி வந்தது. “அவசியம் புறப்படுவோம்” என்றான் அவன்.
“சுந்தர்தாஸும் உடன் வருவதாகச் சொன்னால்?” ஹரிதாஸ் ஜாலா இதைக் கேட்டபோது. அவன் குரலில் அதிருப்தி மண்டிக் கிடந்தது.
அதைக் கவனித்த மகம்மது பெக் கூறினான்: கவலைப்படாதீர்கள். அவனை இங்கேயே நான் நிறுத்தி விடுகிறேன்.”
பிறகு சில விநாடிகள் ஏதோ யோசனையில் இறங்கிய ஹரிதாஸ் ஜாலா, “இப்பொழுது சுல்தான் குர்ரம் எங்கிருக்கிறார்?” என்று வினவினான்.
“ஒண்டாலாவை விட்டுப் பின்வாங்கி விட்டார். அங்கிருந்து மூன்று நாள் பயணத்தில் இருக்கிறார்” என்றான் மகம்மது.
மீண்டும் யோசனையில் இறங்கிய ஹரிதாஸ்ஜாலா, ஏதோ ஒரு முடிவுக்கு வந்து, “சரி மகம்மது பெக், விடியுமுன்பு நாம் புறப்பட்டுவிடுவோம். சுல்தான் குர்ரம் இருக்குமிடத்திற்கு. இந்தப் பொருளை அவரிடம் சேர்ப்பித்தால்தான்
மனம் நிம்மதி அடையும்” என்று கூறிவிட்டு, மகம்மது பெக்கிடம் விடைபெற்று வெளியே வந்தான். மீண்டும் தனது கூடாரத்திற்கு வந்து சேர்ந்து பழையபடி கீழிருந்த இரத்தினக் கம்பளத்தில் படுத்து யோசனையில் இறங்கினான்.
சுந்தர்தாஸிடமிருந்து தப்பினால் இந்த நாகதீபம் உடனடியாக ஜஹாங்கீரிடம் போகாது. இன்று நான் ராணாவை விட்டுப் பிரிந்து பத்து நாளாகிறது. பதினைந்து நாள் வரை இந்த நாகதீபத்தைக் காப்பதாக ராணாவுக்கு உறுதி
கூறியிருக்கிறேன். சுல்தான் குர்ரம் ஒண்டாலாவில் இருந்து மூன்று நாள் பயணத்தில் இருப்பதால், அவர் முகாமை இங்கிருந்து ஐந்து நாள் பயணத்திற்குப் பின்புதான் அடையமுடியும். அதற்குள் பதினைந்து நாள் தவணை தாண்டி
விடும். ராணாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதி அத்துடன் தீர்ந்துவிடுகிறது. பிறகு ஜஹாங்கீரிடம் செய்த ஆணைதான் மீதி இருக்கும். இந்த நாகதீபத்தைக் கொடுத்து அதையும் நிறைவேற்றி விடுகிறேன். அதற்கு ஜஹாங்கீர் அளிக்கும்
வெகுமதி ராஜபுதனத்துடன் சமாதானம். ஆனால் அந்த வெகுமதியை நான் ஏற்க வேண்டியதில்லை. மறுத்துவிடுகிறேன். எனது விடுதலையைக் கேட்கிறேன் வெகுமதியாக. மீண்டும் ராஜபுதனம் திரும்பி மொகலாயருக்கு எதிராகப்
போரிடுகிறேன். நாகதீபத்தை எதிரிக்கு அளித்த பாவத்தை என் கத்தியைக் கொண்டு மொகலாயர் இரத்தத்தால் துடைக்கிறேன்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே ஹரிதாஸ் நாகதீபத்தின் பேழையை எடுத்து அதைத் திறந்து
அதன் உள்ளிருந்த சரித்திர இரத்தினத்தை, நோக்கினான். அதன் செவ்விய கதிர்கள் அந்தக் கூடாரமெங்கும் பரவின. நாகதீபம் படுத்திருந்த ஹரிதாஸ் ஜாலாவின் முகத்துக்கருகே இருந்ததால் அவன் முகத்தை இரத்தக் குழம்பாக அடித்து
இருந்தது. அப்பப்பா! இந்தக் கல்லுக்குத் தான் என்ன சக்தி! இதைப் பற்றி எத்தனை பேருக்கு எவ்வளவு மூட நம்பிக்கைகள்! வாள் செய்ய முடியாததை இது எப்படிச் செய்யும்? கற்களை நம்பி ராஜபுதனம் வாழப் போகிறதா? அல்லது வீரர்
வாட்களை நம்பி வாழப் போகிறதா?’ என்று அந்த நாகதீபத்தை நோக்கி சீறவும் சீறினான் அந்த வீரன். பிறகு பேழையை மூடி அங்கிக்குள் வைத்துக்கொண்டு உறங்கக் கண்களை மூடினான்.
பொழுது புலர்ந்தது. சோலையில் எங்கும் இன்பம் நிலவிக் கிடந்தது. ஆனால் சுந்தர்தாஸின் இதயம் மட்டும் அந்த இன்பத்தை அனுபவிக்க முடியாமல் எரிமலையாகிக் கிடந்தது. மகம்மது பெக்கும் ஹரிதாஸ் ஜாலாவும் சேர்ந்து
விடியற்காலையில் தன் கூடாரத்துக்கு வந்து தன்னை எழுப்பியதே பெரும் சந்தேகத்தை விளைவித்தது அவனுக்கு. இருவரும் சேர்ந்து புறப்படப் போவதாக மகம்மது பெக் கூறியது பெரும் சீற்றத்தை விளைவித்தது அவன் சித்தத்தில்.
ஆனால் அந்தச் சீற்றத்தை சிறிதும் லட்சியம் செய்யாத மகம்மது பெக்,” இவரைப் பாதுஷாவிடம் அழைத்துப் போகிறேன்” என்றான். கட்டளையிடும் தலைவனைப் போல.
“நான் அழைத்துப் போவதாக இருந்தேன்” என்றான் சுந்தர்தாஸ் கோபத்துடன்.
“அந்தச் சிரமம் உனக்குத் தேவையில்லை” என்றான் மகம்மது சர்வசாதாரணமாக.
“நானும் உடன் வரட்டுமா?”
“உயிரின்மேல் ஆசையில்லையேல் வரலாம்.”
“என் உயிருக்கென்ன ஆபத்து?”
“ஒண்டாலாவில் மொகலாயர் அடைந்த தோல்விக்கு சுல்தான் குர்ரம் தோடா செய்து போடுவார் என்று நினைக்கிறாயா?” என்று கேட்ட மகம்மது, பெரிதாக நகைத்தான்.
முதல் நாளிரவு அவர்கள் இருவர் சம்பாஷணையையும் ஒட்டுக் கேட்டிருந்த ஹரிதாஸ் ஜாலா, ஏதுமறியாதது போல் பாசாங்கு செய்து, “என்ன! ஒண்டாலாவில் போர் நடந்ததா?” என்று வினவினான்.
சுந்தர்தாஸின் முகத்தில் அச்சத்தின் குறி பெரிதாகப் படர்ந்தது. அதைக் கவனித்த மகம்மது பெக் இகழ்ச்சி கலந்த பார்வையொன்றை அவன் மீது வீசி விட்டு, “வாருங்கள் போகலாம்” என்று ஹரிதாஸை நோக்கிக் கொண்டே தன்
புரவியைக் கொண்டுவரச் சொல்லி அதன்மீது தாவினான். ஹரிதாஸ் ஜாலாவும் புரவிமீது ஆரோகணித்ததும் இருவரும் சோலையை விட்டு வெளியே செல்லப் புரவிகளை முடுக்கினார்கள்.
அவர்கள் இருவரும் போவதைப் பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து நின்றான் சுந்தர்தாஸ். அவன் முகத்தில் கோபம் பெரிதும் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கோபத்தை அவர்கள் மீது காட்டமுடியாததால் அக்கம் பக்கத்தில் இருந்த.
வீரர்கள் மீது எரிந்து விழுந்தான். “உம் சீக்கிரம் கிளம்புங்கள். ஒண்டாலாவுக்குச் செல்வோம்” என்று உத்தரவு பிறப்பித்தான் அவன். ஒண்டாலாவுக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் சுல்தான் குர்ரத்தின்
பாசறையை நோக்கி ஹரிதாஸ் ஜாலரிவும், மகம்மது பெக்கும் விரைந்து கொண்டிருந்தார்கள். மகம்மது பெக்குடன் அடுத்த ஐந்து நாட்கள் பயணம் செய்த ஹரிதாஸ் ஜாலா வழியில் கண்களில் தென்பட்ட நிலையால் பெரிதும் அச்சத்துக்கும்
கோபத்துக்கும் உள்ளானான், அது மட்டுமல்ல, சுல்தான் குர்ரத்தின் உள்ளமும் நன்றாக புரிந்தது அவனுக்கு. ராஜபுதனம் கடைசியாக ஜஹாங்கீரிடம் சரணாகதி அடைந்து விடுமென்பதற்கான அறிகுறிகளை, பயணம் செய்த ஐந்து
நாட்களிலும் கண்டான்.
வழிநெடுக சுல்தான் குர்ரத்தின் படைகள் பெரு வாரியாக கூட்டம் கூட்டமாக முகாம் செய்திருந்தன. ஒவ்வோர் இடத்திலும் ஏராளமான ராஜபுத்திர விவசாயிகள், வணிகர், பெண்கள் ஆகிய பிரஜைகள் ஏராளமாகச் சிறை செய்யப்பட்டு
வளைத்துக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறை முகாம்களில் சிலவற்றில் ராணாவின் உறவினரும் இருந்தார்கள். புரோகிதர்களின் குடும்பங்கள் இருந்தன.
“இதென்ன அநீதி!” என்று ஒருமுறை வாய்விட்டே சொன்னான். ஹரிதாஸ் ஜாலா.
மகம்மது பெக் பதிலுக்கு புன்முறுவல் செய்தான். “இவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. பத்திரமாகக் காக்கப்படுகிறார்கள்” என்று சுட்டிக் காட்டினான்.
“இந்த சாதாரணப் பிரஜைகளை ஏன் சிறை செய்யவேண்டும்?” என்று வினவினான். ஹரிதாஸ் ஜாலா
“மக்கள் நலனுக்கு மன்னர் பொறுப்பாளி” என்றான் மகம்மது பெக்.
“ஆம்”
“அந்த நலனைக் காக்க முடியாத மன்னனை வெறுப்பார்கள்.”
“ஆம்”
அந்த வெறுப்பைத்தான் சுல்தான் குர்ரம் தூண்டி வருகிறார் சுல்தான் குர்ரத்தின் முறை தனிப்பட்டது.”
“என்ன முறை அது?”
“ஒண்டாலாவைச் சுற்றிப் பெரிய இரும்பு வளையம், வளைக்கப்பட்டு இருக்கிறது.”
“இரும்பு வளையமாக?”
“ஆம், ஒண்டாலாவைச் சுற்றியுள்ள கிராமங்களைப் பிடித்திருக்கிறார் சுல்தான். அந்தக் கிராம மக்களை எல்லாம் சிறையில் வைத்திருக்கிறார். ஒண்டாலாவை இப்படியொரு சிறைகூடம் வளைத்திருக்கிறது.
“கிராமங்களைப் பிடித்து என்ன பயன்? கோட்டையை அல்லவா பிடிக்க வேண்டும்?”
மகம்மது பெக் புன்முறுவல் செய்தான். “அதிலும் தத்துவம் இருக்கிறது” என்று கூறி, கண்ணைச் சிமிட்டினான் மகம்மது பெக்.
“என்ன தத்துவம் அது?” என்று வினவினான் ஹரிதாஸ்.
அந்தத் தத்துவத்தை மகம்மது பெக் விளக்கவில்லை. ஆறாம் நாள் சுல்தான் குர்ரமே விளக்கினான், அந்த விளக்கம் நாகதீபத்தின் விதியையும் ராஜபுதனத்தின் விதியையும் ஒருங்கே நிர்ணயித்துவிட்டது.

Previous articleNaga Deepam Ch27 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch29 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here