Home Historical Novel Naga Deepam Ch29 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch29 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

104
0
Naga Deepam Ch29 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch29 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch29 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 29. தயமூரின் வழி

Naga Deepam Ch29 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

ராணா அமரசிம்மனிடம் இட்ட ஆணைப்படி நாகதீபத்தைப் பதினைந்து நாட்களுக்குத் தன் இதயத்தின் அருகே வைத்துக் காத்துப் பதினாறாம் நாள் சுல்தான் குர்ரத்தின் பாசறையை மகம்மது பெக்குடன் அடைந்த ஹரிதாஸ் ஜாலாவுக்கு,
சுற்றுப்புறக் கிராமங்களையும் ராஜபுத்திர வம்சப் பெண்டிர் குழந்தைகளையும் பிடித்து சிறையிட்ட மர்மத்தை சுல்தான் குர்ரமே விளக்கியதும், ராஜபுதனத்தின் மாஜிப் படைத்தலைவன் ஜஹாங்கீர் மகனின் புத்தி சாதுர்யத்தை
நினைத்துப் பெரிதும் வியந்தான். இனி குர்ரத்தினிடமிருந்து ஜயன் சந்தாவத்தாலும் மேவாரின் சுதந்தரத்தைக் காக்க முடியாதென்ற முடிவுக்கு வந்தான்.
சுல்தான் குர்ரத்தின் போர்ப்பாசறைக் கூடாரத்துக்குள் மகம்மது பெக்கினால் அழைத்துச் சென்று அறி முகப்படுத்தப்பட்ட ஹரிதாஸ் ஜாலா, எதிரே புன்சிரிப்புடன் சிம்ம மஞ்சத்தில் அமர்ந்திருந்த குர்ரத்தை நோக்கினான். ஜஹாங்கீரின்
முகத்தை உரித்து வைத்தது போல் இருந்த குர்ரத்தின் முகத்தில், ஜஹாங்கீர் முகத்தில் சதா சுடர்விட்ட வீரக்களையை விட அழகும் தந்திரமும் அதிகமாக காணப்பட்டன. பிற்காலத்தில் ஷாஷஹான் என்ற பெயருடன் மொகலாய சாம்ராஜ்ய
அரசுக் கட்டில் ஏறி இந்தியாவின் நிரந்தரக் கலைச் சின்னமான தாஜ்மகாலையும் கட்டிய இளவரசன் குர்ரம், பால் வடியும் தனது வதனத்தில் முளைத்திருந்த இரு அழகிய விழிகளாலும் ஹரிதாஸ் ஜாலாவைத் சிரும்ப நோக்கினான்.
ஈட்டியென ஜொலித்த ராஜபுதன வீரனின் கண்களும் அந்த ஈட்டியின் முனையில் புஷ்ப மாலையென வழவழப்புடன் வளைய வந்த சுல்தான் குர்ரத்தின் கண்களும் சில விநாடிகள் ஒன்றையொன்று கவ்வி நின்றன. கடைசியில் இன்பப்
புன்முறுவுலொன்றும் குர்ரத்தின் கடையிதழ்களில் உதயமாயிற்று, “ஹரிதாஸ் ஜாலாவைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன்” என்ற சொற்களும் குர்ரத்தின் உதடுகளிலிருந்து இனிமையுடன் உதிர்ந்தன.
சொற்களின் இனிமை, உதடுகளில் தெரிந்த புன்முறுவல் இரண்டுக்கும் பின்னால் ஆழ்ந்த மனம் சுல்தானுக்கு இருப்பதைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா குர்ரத்துக்குத் தலைவணங்கி, “மொகலாய இளவரசர் என்னைப் பற்றிக்
கேள்விப்பட்டிருப்பது ஜாலா வம்சத்திற்கே பெருமையளிக்கிறது” என்றான்.
சுல்தானின் அழகிய விழிகள் ஜாலாவின் முகத்தில் மீண்டும் பதிந்தன. “என் தந்தையே உங்கள் வம்சத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்” என்றான் குர்ரம் மீண்டும் பரிவுடன்.
“என்ன சொல்லியிருக்கிறார்?”
“ஜாலா வம்சத்தினர் சத்திய சந்தர்கள் என்று.”
“அது மட்டுந்தானா?”
“இல்லை, இட்ட ஆணையை நிறைவேற்றத் தவறாதவர்கள் என்றும் கூறி இருக்கிறார்” என்று கூறிய குர்ரம் மீண்டும் புன்முறுவல் செய்தான்.
குர்ரத்தின் சொற்களிலிருந்தும் அவன் புன்முறுவலிலிருந்தும் நாகதீபத்தைக் கொண்டு வர ஜஹாங்கீரிடம் தான் ஆணையிட்டதை அறிந்து கொண்டிருக்கிறான். என்பதை உணர்ந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அப்படி அறித்து
கொண்டதை எத்தனை பக்குவமாகக் குர்ரம் தெரியப்படுத்துகிறானென்பதை நினைத்துப் பெரிதும் வியப்பெய்தினான். ஆனால் அந்த வியப்பை வெளிக்குக் காட்டாமல் கூறினான், “ஜாலா வம்சத்தினர் ஆணையிடும்போது
நிபந்தனையுடன் ஆணையிடுகிறார்கள்” என்று.
“உன் ஆணைக்கு என்ன நிபந்தனையிட்டாய்?” என்று சர்வசாதாரணமாகக் கேட்டான் குர்ரம்.
“நிபந்தனையை நான் தெரிவிக்கவில்லை, சக்கரவர்த்தியே தெரிவித்தார்.”
“என்ன தெரிவித்தார் என் தந்தை?”
“நாகதீபத்தை நான் கொண்டு வந்தால் ராஜபுதனப் போரை நிறுத்துவதாகக் கூறினார்.
சுல்தான் குர்ரத்தின் அழகிய விழிகள் சில விநாடிகள் நிலத்தில் தாழ்ந்தன; “ஆம்; போரை நிறுத்த வேண்டியது தான். மனிதர்களை நாசப்படுத்தும் போர் எதற்கு?” என்றான் சில விநாடிகள் கழித்து.
இதைக் கேட்ட ஹரிதாஸ் ஜாலாவின் கண்களில் வியப்பு விரிந்தது. “போர் தேவையில்லையா?” என்றும் வினவினான் அந்த வியப்பு குரலிலும் துலங்க.
“தேவையில்லை” திட்டமாக வந்தது குர்ரத்தின் பதில்.
“தேவையில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி?” என்று கேட்டான் ஹரிதாஸ் ஜாலா சற்றுக் கோபத்துடன்.
“நான் ஒண்டாலாவைத் தாக்காததே அத்தாட்சி.”
“ஒண்டாலாவைத் தாக்காவிட்டால் சுற்றுப் புறங்களை ஏன் பிடித்திருக்கிறீர்கள்? ஏன் ராஜபுதனப் பெண்களையும் குழந்தைகளையும் சிறைப் பிடித்திருக்கிறீர்கள்?”
சுல்தான் குர்ரம் தன் சிம்ம மஞ்சத்திலிருந்து எழுந்திருந்தான். “சுற்றுப்புறங்களைப் பிடிப்பதில் தத்துவம் இருக்கிறது. அது என் பாட்டன் அறிந்தது” என்று கூறிய குர்ரம் மேலும் சொன்னான். ‘கேள் ஹரிதாஸ் என் பாட்டனுக்கு
பாட்டனொருவர் இருந்தார். அவர் பெயர் தயமூர்லங். அவர் உறவினரால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டார். பலமுறை தலைநகரைத் திரும்பப் பிடிக்கப் படையெடுத்துத் தோல்வி அடைந்தார். அப்படி தோல்வி அடைந்து ஓடிய ஒரு சமயத்தில்
ஒரு கிழவியின் குடிசையில் போய் உணவு கேட்டார். கிழவிக்கு உணவு கேட்டவர் தயமூர் என்பது தெரிந்தது. அவள் ஒரு கிண்ணத்தில் சுடச்சுட உணவைப் பிசைந்து கொடுத்தாள். தயமூர் அவசரமாகக் கிண்ணச் சோற்றில் கை
வைத்தார். உணவுச் சூட்டில் கை சுட்டு விடவே அலறிக் கையை எடுத்தார். கிழவி நகைத்தாள். நகைத்து விட்டு, ‘தயமூர்! நீ போரிடும் லட்சணந்தான் உனக்கு உண்பதிலுமிருக்கிறது. சுடும் உணவின் நடுவில் கையை வைக்காதே. சுற்றுப்
புறங்களில் இருப்பதைச் சிறுக சிறுக எடுத்துச் சாப்பிடு, சுடாது; கிண்ணமும் காலியாகி விடும்’ என்று கூறினாள். அந்தப் படிப்பினை தயமூருக்கு வெற்றி தந்தது. சுற்றுப் புறங்களைச் சிறுகச் சிறுகக் கைப்பற்றினார். நாடு முழுவதும்
காலக்கிரமத்தில் அவருக்குப் பணிந்தது. வெகு சீக்கிரம் அண்டை நாடுகள் தயமூரின் பெயரைக் கேட்டு நடுங்கின. அந்தத் தத்துவத்தை நான் கையாளுகிறேன். அது மட்டுமல்ல…”
குர்ரம் இந்த இடத்தில் சற்று நிதானிக்கவே ஹரிதாஸ் ஜாலா கேட்டான், “வேறென்ன?” என்று.
குர்ரம் மேலும் சொன்னான். “என் மூதாதையின் வழிப்படி சுற்றுப்புறங்களைப் பிடித்து மேவாரைப் பணிய வைக்க முயலுகிறேன். ஆனால் அது மட்டுமல்ல. தயமூர் பெரும் மூர்க்கர். பிடிக்காதவர்களைக் கொடுமைப்படுத்தினார்.
நான் அன்பு வழியைக் கடைப் பிடிக்கிறேன். பிடித்த ராஜபுத்திரப் பெண்களைப் பார்க்கவும் கூடாதென கண்டிப்பான உத்தரவு பிறப் பித்திருக்கிறேன். காரணம், சுதந்தர வீரர்களான மேவார் வம்சத்தினருக்கு கண்ணியமான சமாதானத்தை
அளிக்க விரும்புகிறேன். இந்த சமாதானம் அவர்கள் நிபந்தனைப்படி நடக்கும்.”
குர்ரத்தின் தந்திரத்தையும் பெருந்தன்மையையும் கண்டு பெரிதும் வியப்படைந்த ஹரிதாஸ் ஜாலா ஏதும் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றான். அக்பரையும் ஜஹாங்கீரையும் எதிர்த்து நின்ற மேவார் இந்தக் கண்ணியத்துக்கு முன்பு
தலை குனிந்து விட்டால் ஆச்சரியப்பட ஏதுமில்லையென்றே நினைத்தான். ஆகவே நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்த ஹரிதாஸ் ஜாலா, மெள்ளத் தன் அங்கிக்குள் கையை விட்டு நாகதீப மடங்கிய பேழையை எடுத்துக் குர்ரத்திடம்
நீட்டினான். குர்ரம் பதிலேதும் சொல்லாமல் அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டு மெள்ளப் பேழையைத் திறந்தான். திறந்தவன் அப்படியே சித்தப் பிரமைப் பிடித்தவன் போல் சிம்ம மஞ்சத்தில் மீண்டும் உட்கார்ந்தான். நீண்ட நேரம் இந்த
சரித்திர இரத்தினத்தில் கண்களைப் பதிய வைத்த குர்ரம், கடைசியில் நன்றி விரிந்த கண்களை ஹரிதாஸ் ஜாலாவின் முகத்தில் ஓடவிட்டான்.
ஹரிதாஸ் ஜாலாவின் உடல் லேசாக நடுங்கியது. விதியின் தூண்டுதலால் செய்யத்தகாத செய்கையைச் செய்து விட்டதாகத் தோன்றியது அவனுக்கு. இதயம் படக்படக் கென்று அடித்துக் கொண்டது. “இளவரசே! என் ஆணையை
நிறைவேற்றிவிட்டேன்” என்று சொற்கள் குளறிக் குளறி வெளிவந்தன.
“ஆம் வீரனே, நிறைவேற்றிவிட்டாய். தயமூரின் பரம்பரை உனக்கு கடமைப்பட்டிருக்கிறது. இந்த இரத்தினம் இருக்கும் இடத்தில் வெற்றி இருப்பதாக வதந்தி இருக்கிறது. அது உண்மையாக அல்லா (ஸல்) அருள் புரியட்டும். இந்த நாட்டில்
அமைதி நிலவட்டும்” என்றான் குர்ரம், கூடாரத்தின் மேற்புறமாகக் கண்களை உயர்த்தி.
ஹரிதாஸ் ஜாலா பதில் சொல்லவில்லை. உணர்ச்சிகளின் அலைகளில் அவன் புரண்டு கொண்டிருந்தான். குர்ரம் நாகதீபத்தின் பேழையை மூடி தன் அங்கிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான். “ஹரிதாஸ்! சீக்கிரம் இதைப்பற்றி என்
தந்தைக்கு அறிவித்து விடுகிறேன். அதற்காக மகம்மது பெக்கையே அனுப்புகிறேன். உனக்கு என்ன வேண்டும், கேள்” என்றான்.
தடங்கலின்றிக் கேட்டான் ஹரிதாஸ், “ஒண்டாலாவுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்” என்று.
“எதற்கு?” குர்ரத்தின் கேள்வியில் ஆச்சரியம் ஒலித்தது.
“உங்களுக்கெதிராகப் போரிட!” தயக்கமின்றி வந்தது ஹரிதாஸின் பதில்.
“இனி அமைதி நிலவப் போகிறதே ஹரிதாஸ்’ என்றான் குர்ரம்.
“முடியுமானால் அதைத் தடுப்பேன்.”
“ஏன்?”
“ராணா பிரதாப் அமைதியை விரும்பவில்லை சுதந்தரத்தை விரும்பினார்.”
“ஆனால் அமரசிம்மர் அமைதியை விரும்புகிறாரே.”
“யார் சொன்னது?”
“நேற்றே இதற்குத் தூதர் வந்து போனார்.”
“யார் அந்த தூதர்?”
“சுபகரண்சிங்.”
ஹரிதாஸ் ஜாலா அதிர்ச்சியுற்று நின்றான். ராஜபுதனத்துச் சிறந்த படைத்தலைவர்களில் ஒருவரான சுபகரண்சிங்கே இதற்கு வருவதானால் ராஜபுதனம் தலை தாழ்த்தியது போலத்தானென்று முடிவு செய்தான். இருப்பினும் ஒண்டாலா
போகத் தீர்மானித்த ஹரிதாஸ் ஜாலா, “எனக்கு விடையளியுங்கள் சுல்தான். நான் உங்களைப் போரில் சந்திக்கிறேன்” என்று கூறினான்.
குர்ரம் மிகக் கம்பீரமாக எழுந்து நின்றான். “சுதந்தரமாகப் போய்வா ஹரிதாஸ் ஜாலா. ஆனால் இனி நாம் போரில் சந்திக்க மாட்டோம். சமாதானப் பேச்சுப் பேசத்தான் சந்திப்போம். வெற்றியை அளிக்கும் நாகதீபம் என் கையில்
வந்துவிட்டது” என்று கூறிவிட்டுக் கையைத் தட்டினான். அந்த அழைப்புக்குப் பணிந்து உள்ளே வந்த மகம்மது பெக்கிடம் சொன்னான்: “முகம்மது பெக்! ஹரிதாஸ் ஜாலா நமது தந்தையின் கட்டளையை நிறைவேற்றி நமது
சாம்ராஜ்யத்துக்கு பெரும் பணி செய்திருக்கிறார். இவருக்குப் புரவியொன்று கொடுத்து ஒண்டாலாவுக்குச் செல்ல ஏற்பாடு செய். இவர் மீது யார் கை வைத்தாலும் குர்ரத்தின் மீது கைவைத்ததாகும் என்று ஓலை எழுதிக் கொடு” இதைக்
கூறிய குர்ரம் பேட்டி முடிந்து விட்டது என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான்.
குர்ரத்தின் பாசறையிலிருந்து வெளிப்போந்த ஹரிதாஸ் ஜாலா, எப்படியும் மேவாரைப் பணியவிடக் கூடாதென்ற உறுதியுடன் ஒண்டாலாவை நோக்கிச் சென்றான். கேவலம் ஓர் இரத்தினம், சிருஷ்டியின் ஒரு கல், ஓர் அரசின் கதியை
நிர்ணயிக்கக் கூடாதென்று தீர்மானித்தான். ஜயன் சந்தாவத்தை எப்படியும் தூண்டி மீண்டும் போர் செய்யும் எண்ணத்துடன் ஒண்டாலாவை அடைந்தான். ஆனால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை. குர்ரத்தின் வாக்கே பலித்தது.
அதைப் பற்றி ஜஹாங்கீரே தமது கைப்பட எழுதி வைத்திருக்கின்றார். ஜஹாங்கீரின் சுயசரித்திர ஏடு இப்படிக் கூறுகிறது….
“நான் அரியணை ஏறி எட்டாவது வருஷத்தில் என் அதிர்ஷ்ட மகன் குர்ரம் ராணாவிடமிருந்து கைப்பற்றிய ஆலம் கோமான் என்ற யானையையும் மற்றும் பதினேழு யானைகளையும் எனக்கு அனுப்பி வைத்தான்… அதையடுத்து சில
நாட்களில் ராணா அமரசிம்மன் பணிய விரும்புவதாகச் செய்தி வந்தது. எனது மகன் குர்ரம் மேவாரைச் சுற்றியுள்ள பல இடங்களையும் மேவாரின் பெரிய குடும்பங்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், குழந்தைகள் மற்றுமுள்ள உறவி
னர்கள் இவர்களைச் சிறைபிடித்து விட்டதாலும் ராணா பணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது… நான் ஆஜ்மீரை விட்டு வேட்டையாடித் திரும்பியபொழுது எனது மகன் குர்ரம் ராணா தன்னைச் சந்தித்துவிட்டதாக மகம்மது பெக்,
என்ற வீரனிடம் தகவல் அனுப்பியிருந்தான். இதைக் கேட்டதும் நான் மகம்மது பெக்குக்கு ஒரு யானை, ஒரு குதிரை இவற்றைப் பரிசளித்து ஜுல்பெகார் கான் என்ற பட்டத்தையும் அளித்தேன்.”
ஜஹாங்கீரின் இந்தச் சொற்கள் சரித்திர ஏடுகளில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. பாபருக்கும் அக்பருக்கும் பணியாதது ஜஹாங்கீருக்குப் பணிந்தது. இது குர்ரத்தின் தந்திரத்தால் பணிந்ததா, நாகதீபம் கைமாறியதால் பணிந்ததா

.
என்பதைச் சரித்திரம் சொல்லவில்லை. ஆனால் அந்த சரித்திர இரத்தினம் தம்மிடம் வந்ததை ஜஹாங்கீர் கௌரவமாகவே சொல்கிறார். ‘ஞாயிறு 26.ஆம் தேதி ராணா எனது மகனைச் சந்தித்துப் பிரசித்திப் பெற்ற அவரது குடும்ப இரத்தினம்
ஒன்றையும் கொடுத்தார்’ என்கிறது ஜஹாங்கீர் சுயசரிதை.
ஆகவே ஹரிதாஸ் ஜாலா ஒண்டாலா கோட்டையைச் சில நாட்களுக்குப் பிறகு அடைந்தபோது ராணா அமரசிம்மன் சமாதானத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். தன் எதிரே ஆக்ரோஷத்துடன் வந்து நின்ற ஹரிதாஸ்
ஜாலாவைப் பார்த்த ராணா துன்பப் புன்முறுவல் செய்தார். “நாகதீபம் குர்ரத்திடம் போய்விட்டது என்று நினைக்கிறேன்” என்றும் கூறினார் வருத்தத்துடன்.
“ஆம். ஆனால்…” என்று ஏதோ சொல்லத் துவங்கிய ஹரிதாஸ் ஜாலாவைக் கையமர்த்திய ராணா, “நீ எதுவும் சொல்லத் தேவையில்லை ஹரிதாஸ். நீ சுந்தர்தாஸின் சாட்டையிலிருந்து காப்பாற்றிய வீரன் அனைத்தையும் சொன்னான்.
விதி ராஜபுதனத்துக்கு எதிராகச் சதி செய்து இருக்கிறது. இதில் நீயோ நானோ யாரும் குற்றவாளியல்ல” என்றார் அமைதியுடன்.
ஹரிதாஸ் ஜாலாவின் உணர்ச்சிகள் கொந்தளித்தன. விதியை வெல்லுவோம் ராணா! ஜயன் சந்தாவத்தின் தலைமையில் மீண்டும் போர் தொடுப்போம். இதோ என் வாள் உங்கள் திருவடியில்” என்று கூறித் தன் வாளை உருவி
ராணாவின் காலடியில் வைத்தான்.
அந்த வாளை யெடுத்து அனுதாபத்துடன் ராணா ஹரிதாஸிடம் கொடுத்துவிட்டுப் பதில் சொன்னார். பதிலைக் கேட்ட ஹரிதாஸ் இடிவிழுந்தது போல் நின்றான்.

Previous articleNaga Deepam Ch28 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch30 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here