Home Historical Novel Naga Deepam Ch3 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch3 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

70
0
Naga Deepam Ch3 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch3 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch3 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3. சந்தித்த கண்கள்

Naga Deepam Ch3 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

சரத்காலச் சந்திரன் வானிலிருந்து வீசிய முழு இன்ப ஒளியில். கூடாரத்தின் வாயிலில், மோகனாகரமாக நின்ற அந்தப் பருவ மங்கையின் பேரெழிலைப் பார்த்துப் பார்த்து பிரமித்து, நீண்ட நேரம் நின்றுவிட்ட ஹரிதாஸ் ஜாலாவின் மனோ
நிலை விவரிக்க முடியாத அளவுக்குக் குலைந்து கிடந்தது. தோப்பின் மரங்களிலிருந்து எழும்பிய காற்று அவள் உடலில் பாய்ந்து அலை அலையாக அவள் சீலையைப் புரட்டிக் கொண் டிருந்தது கூட தன் எண்ணங்கள் அடியோடு
நிலை குலைந்து போவதற்குத்தான் என அவன் எண்ணினான். பக்கத்தில் பாலைவனச் சுனையில் அரை முழங்கால் நீரில் தன்னுடன் நின்றிருந்த புரவியைத் தேய்க்கத் தண்ணீரில் பிழிந்து எடுத்திருந்த துணியை அவன் கை
பற்றியிருந்ததேயொழிய, குதிரையைத் தேய்க்கும் திறனை இழந்து கிடந்தது. அந்தச் சமயத்தில் அவன் இறந்து போன சித்தூர் ராணா பிரதாப சிம்மனைப் பெரிதும் வாழ்த்தினான், ‘புவனா என்னும் பூனா நதியால் மிகவும் செழித்திருந்த
ஒண்டாலா சமவெளியிலுள்ள பல தோப்புகளை அழித்துப் பாலைவனமாகச் செய்து மொகலாயருக்கு உணவோ, தங்க இடமோ இல்லாமல் அடித்து, கால் நூற்றாண்டுக்காலம் அவர்களைத் தன்னிடம் அணுகவொட்டாமல் செய்து,
சுதந்தர புருஷனாகவே அமரனுலகு எய்திவிட்ட ராணா பிரதாப்தான் அப்பொழுதிருந்த ஒரு சிறு தோப்பையும் இன்னும் சில நூறு தோப்புகளையும் மட்டும் அழிக்காமல் விட்டது தனக்கு எத்தனை பெரிய உதவியைச் செய்திருக்கிறது,
என்று எண்ணினான் ஹரிதாஸ் ஜாலா. ‘இந்தத் தோப்பையும் அவர் வெட்டிச் சுட்டுக் கொளுத்தியிருந்தால் இந்த மோகனாங்கியை நான் எப்படி மொகலாய வீரர்களிடமிருந்து தப்ப வைத்திருக்க முடியும்?’ என்று தன்னைத் தானே
கேட்டுக் கொண்டதன்றி, அப்படித் தான் தப்ப வைத்த அழகு எத்தனை இணையற்றது என்றும் நினைத்துப் பார்த்து மலைத்தான். கூடாரத்தின் வாயிலில் அவள் நின்றிருந்த முறையே அத்தனை அழகாயிருந்தது. அப்படி நின்ற முறையால்
வெளிப்பட்ட அழகிடங்கள் அங்கங்களின் இணையற்ற கவர்ச்சிக்கும் செழுமைக்கும் அத்தாட்சிகளாக நின்றன.
கூடாரத்தைச் சுற்றிலும் நாலைந்து அடிகளுக்கு மரங்களேதுமில்லாததால் தடையின்றி முழுமதி பாய்ச்சிய நிலவில் காட்சியளித்த அந்தப் பெண், தனது கைகளிலொன்றால் கூடாரத்தின் மேல் சீலையைப் பிடித்துக் கொண்டும்,
இன்னொரு கையால் பக்கச் சீலையைப் பிடித்துக் கொண்டும், ஒரு காலை லேசாக வளைத்து ஒருபுறம் சாய்ந்து கொண்டும் நின்றதைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா, நாட்டிய சாஸ்திரத்தைப் பற்றிய படங்கள் வரைவதானால் இப்படியொரு
ஒரு படம் வரையலாம் என்று எண்ணினான். மேலே சீலை பற்றிய கையும், வளைந்து நின்றதால் துவண்டு திரும்பிய இடையும், பிறகு உறுதியுடன் தரையில் ஊன்றி நின்ற கால்களும், அக்கம்பக்கத்திலுள்ள அம்சங்களைத் தூக்கிக்
கொடுத்ததால் யாரையும் நிலை தடுமாறச் செய்யும் காமன் கணைகளுக்கு அவள் இருப் பிடமாக விளங்கியதை அவன் கண்டான். தலையிலிருந்த அவள் பெருங் கருங்குழல் முடியிலிருந்து பிரிந்து காற்றில் மேலே பறந்த மயிரிழைகள்
கூடார வாயில் உச்சியை எட்ட முயன்று கொண்டிருந்தும், பிறகு முடியாமல் நெற்றியிலடித்து அங்கேயே லயித்து விட்டதும் மேலேயுள்ள வெறும் இடைவெளியைவிட நுதல் பிரதேசத்தின் உயர்வை அவை அறிந்து விட்டதற்கு அத்தாட்சியாக
இருந்தது. அப்படி ஒட்டிக் கொண்ட ஓரிரு விடுபட்ட குழல்களுக்கு இடையே வெளேரென்று எடுபட்ட அந்த முகமும் கண் களின் பக்கங்களில் தொடங்கிய கன்னக் கதுப்புகளின் செழுமையும், அழகுக்கு மட்டுமின்றி நல்ல
ஆரோக்கியத்துக்கும் அடையாளமாக காணப்பட்டன. மை தீட்டிய இரப்பைகளுக்கு இடையே ஜொலித்த கண்களில் பெரும் சாந்தத்தைக் கண்டான் ஹரிதாஸ் ஜாலா. அந்த சாந்தத்துக்கும் தன்னுடன் பாலை வனத்தில் வாதாடிய போது
இருந்த கோபத்துக்கும் துடிப்புக்கும் எத்தனை வித்தியாசமென்பதை எண்ணிப் பார்த்த அந்த வாலிபன், கோபம் கக்கும் அவள் இதயத்தின் அடிப்படை, உண்மையில் அன்பு மயம் என்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். சாந்தமான
பார்வையைத்தான் அந்தக் கண்கள் வீசின. ஆனால் அந்த சாந்தத்திலும் ஒரு வீரக் கனலும் ஊடே பளிச்சிட்டது. இதுவும் வீரனான ஹரிதாஸ் ஜாலாவின் கண்களிலிருந்து தப்பவில்லை. அழகு அபரிமிதமாயிருந்தாலும், அந்த அழகு லேசில்
அணுகத் தக்கதல்ல என்பதை அவன் புரிந்து கொண்டான். அமுதத்தை வர்ஷிப்பது போல் சிவந்து கிடந்த அவள் உதடுகளைப் பார்த்த அந்த வாலிபன் அவற்றில் தெரிந்த உறுதியையும் பார்த்தான். உதடுகள் நல்ல சிவப்பு. அக்கினிச்
சிவப்பு, கற்பின் அக்கினி அவற்றில் விளையாடிக் கொண்டிருந்தது. அக்கினி சாட்சியாகக் கைப்பிடிக்கும் ஒருவனுக்கே அந்த அக்கினி தணிந்து அமுதமாகும் என்பதை அவை சந்தேகமற உணர்த்தின. அந்த உதடுகளைப் பார்த்து
ஹரிதாஸ் ஜாலாவின் மனத்தில் ஜோஹரில் தாங்களே எரிந்து மாய்ந்த கணக்கில்லா ராஜபுதனக் கற்புக்கரசிகளின் நினைப்பு எழுந்தது.
இவ்வளவு அழகிய பவித்ர உதடுகளுக்குக் கீழே எழுந்த கவர்ச்சிகள் அவன் கண் களை மட்டுமென்ன, இந்திரியங்களையும் பறிக்கத்தான் முற்பட்டன. ஒரு கையைக் கூடாரத்தின் மேலும், மற்றொரு கையைக் கூடாரத்தின்
பக்கவாட்டிலும், பிடித்ததால், போர்வைக் குள்ளேயே புரட்சி செய்து, முட்டி எழுந்த கெட்டிக் குவளை மொட்டுக்களும் அவற்றைக் கண்டு பயந்து அடியோடு ஒடுங்கிவிட்ட இடையும், பயமென்பதை அரியாமல் அதற்குக் கீழே செழித்து
ஓடிய அங்க லாவண்யங்களும் ஹரிதாஸ் ஜாலாவின் மதியை அடியோடு மயக்கத்தான் செய்தன. அந்த மயக்கத்திலும், அவள் நின்ற தோரணை ஒரு பயத்தையும் அளித்தது அவனுக்கு. அவள் ராஜபுதனத்தின் பெருங் குடிமகள், அணுகத்
தகாதவள் என்பதைத் திட்டமாகப் புரிந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா.
அந்த ராஜபுத்திரியை அவன் ஆராய்ச்சி செய்த அளவுக்கு அவள் அவனை ஆராயவில்லையென்றாலும், அவன் குதிரையைக் குளிப்பாட்டி நின்ற கோலத்தை அவள் ரசிக்கவே செய்தாள். நல்ல உயர மும் திண்மையும் வாய்ந்திருந்தாலும்
உயரத்தில் ஒல்லியாய்த் தெரிந்த தேகமும், உறுதியான தோள்களும், திரும்பி நோக்கிய போது மார்டனில் தெரிந்த காயங்களும், அவள் கண்களைக் கவ்விக் கொண்டன. பெரும் வீர னொருவனைத்தான் சந்தித்திருக்கிறோம் என்பதை
அவள் தீர்மானித்துக் கொண்டாள். தன்னை அவன் கண்கள் ஊடுருவிப் பார்த்ததால், சினம் கொண்ட தன் மனம் ஏன் அந்தச் சினத்தை மீண்டும் மீண்டும் அடக்கிக் கொள்கிறது என்பதை எண்ணிப் பார்த்த அந்த ராஜபுத்திரி சற்றுக்
குழம்பவும் செய்தாள். அங்கிகளையெல்லாம் களைந்து கரையில் வைத்து விட்டு, ராஜபுதனப் பிராமணப் பிரம்மச்சாரிகளைப் போல் அவன் வேஷ்டியைத் தார் பாய்ச்சுக் கட்டிக் கொண்டிருந்ததால் வெளிப்பட்ட தேக வாளிப்பும், அவன்
குதிரையைத் தேய்த்தபோது தசைகள் அசைந்த திண்மையும் அவன் பெரும் பலத்துக்கு அத்தாட்சிகளென்பதைப் புரிந்து கொண்டாள் அவள். குதிரையைக் குளிப்பாட்டியபோது அதன் வால் சுழற்றியடித்த நீர் அவன் நெற்றியிலும்
மார்பிலும், முத்து முத்தாகச் சந்திர வெளிச்சத்தில் மின்னி நல்ல வெளுப்பாயிருந்த அவன் உடலுக்குப் பெரும் அழகை அளித்ததையும் அவள் கண்டாள். குதிரையைத் தேய்க்கப் பிழிந்த துணியை அவன் கையில் பிடித்தபடியே நின்று
தன்னைப் பார்த்து மலைப்பதையும், அவன் அழகுடன் கலந்த வீரக்களை அந்த மலைப்பில் அதிகமாகப் பிரகாசிப்பதையும் கண்டு திறமையும், தந்திரமும், சாமர்த்தியமுள்ள ஒரு புருஷனின் துணை தனக்குக் கிடைத்திருப்பது பற்றி
அவள் ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றும் விட்டாள்.
இப்படி அவளும் தன்னைக் கூர்ந்து நோக்கியதால் திடீரென சங்கடத்துக்குட்பட்ட ஹரிதாஸ் ஜாலா, அவளைப் பார்ப்பதை விட்டுக் குதிரையை நோக்கித் திரும்பி அதை நன்றாகத் தேய்க்க முற்பட்டான். நிதானமாகத் தேய்த்து அதைக்
குளிப்பாட்டிக் கரையேற்றிப் பக்கத்திலிருந்த மரமொன்றில் பிணைத்து விட்டு, மீண்டும் சுனையில் இறங்கித் தன் கை கால்கள், முதுகு, முகம் இவற்றின்மீது தண்ணீரை வாரியடித்துக் கழுவிக் கொண்டான். பிறகு மறைவிடம் சென்று
வேறு துணி உடுத்தி மறுபடியும் சுனைக் கரைக்கு வந்து ஈரத் துணியை மரத்தில் கட்டி உலரவிட்டுத் தன் அங்கி முதலானவற்றைத் தோளில் போட்டுக் கொண்டும், நீண்ட வாளை உறையுடன் கையில் பிடித்துக் கொண்டும்,
புரவியிலிருந்து இறக்கியிருந்த இரு பைகளையும் இன்னொரு கையில் எடுத்துக்கொண்டும் ராஜபுத்திரியை நோக்கி வந்தான் ஹரிதாஸ் ஜாலா.
அவன் நடவடிக்கை ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்த ராஜபுத்திரி வியப்பின் எல்லையை எய்தினாள். சதா மொகலாய ஒற்றர்கள் நடமாடும் பாலைவன எல்லை அருகேயிருக்க, அவன் அந்த இடத்தி லிருந்து
புறப்படுவதற்கான துரிதத்தைக் காட்டாமல் பரம நிதானமாக குதிரையைக் குளிப்பாட்டித் தானும் குளித்து ஏதோ தேசாந்தரம் போகிறவன்போல் இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்ட
ராஜபுத்திரி, இவன் நெஞ்சுத் துணிவு எல்லையற்றது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவன் வந்த தோரணை, அவன் கைகளில் பொருள்களை தாங்கிய முறை, எல்லாமே வேடிக்கை யாயிருந்தது அவளுக்கு. அது
மட்டுமன்று, அவன் கூடாரத்துக்கு அருகே வந்ததும் ஏதும் பேசாமல் கூடார வாயிலில் தன் காலடியில் உட்கார்ந்து கத்தியை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பைகளைத் தன் எதிரில் பிரித்து உள்ளேயிருக்கும் பொருள்களைச் சோதிக்க
முற்பட்டது மேன்மேலும் வேடிக்கையாயிருந்தது அவளுக்கு.
அவன் ஏதும் பேசாமல் அவள் காலடியில் உட்கார்ந்து பைகளிலிருந்த பல பொருள்களை நீக்கி விட்டு அடியிலிருந்த இரண்டு சிறு இலைப்பொட்டலங்களை எடுத்து எதிரே வைத்துக் கொண்டான். பிறகு தான் அவளை ஏறெடுத்துப்
பார்த்தான்.
அதுவரை அவள் கொண்டிருந்த சாந்தம் காற்றில் பறந்தது. “என்ன அந்த இலைகளில்?” கேட்டாள் அவள்.
“உணவு! உட்காருங்கள் நீங்களும் சாப்பிடலாம்” என்றான் அவன் பதிலுக்கு.
“இங்கு என்ன வனபோஜனத்துக்கு வந்திருக்கிறீர்களா?” என்று அவள் சற்றுக் கோபத்துடன் கேட்டாள்.
“அப்படியே வந்தாலும் அதில் தவறென்ன?” என்று சாதாரணமாக வினவினான்.
“தவறில்லையா?”
“இல்லை. வனபோஜனத்துக்கு வேண்டிய சகலமும் இங்கு அமைந்திருக்கிறது. நல்ல மலர்களைக் கொடுக்கும் மரங்கள், செடிகள். அள்ளிப் பருக அமுதமாயிருக்கும் சுனை, நல்ல வெண்ணிலவு, அத்துடன்…”
“அத்துடன்?”
“ஒன்றுமில்லை.”
“ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டீர்கள்.”
“ஆம்.”
“ஏன்?”
“பயமாயிருக்கிறது “
“வீரர்கள் பயப்படலாமா?”
“சில சமயங்களில் பயம் நல்லதென்று தங்களிடம் சற்று முன்பு பாலைவனத்தில் நானே சொல்லவில்லையா?”
“ஆம்.”
“அந்தச் சமயங்களில் இதுவும் ஒன்று.”
அவன் எதைச் சொல்ல மறுக்கிறானென்பதை அவள் புரிந்து கொண்டாள்! வெண்ணிலவில், சோலையில், சுனையருகில் தானிருப்பதை அவன் கூற முற்பட்டு, அடககிக் கொண்டான் என்பதை அவள் உணர்ந்தாள். அதை வெளிக்குக்
காட்டாமல் மேலும் பேச முற்பட்ட அவள், அவனைப் பற்றி அறிந்து கொள்ள மெள்ள கேள்விகளை வீசினாள். அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்காமலே பதில் சொன்னான். கிடைத்த பதில்கள் விளைவித்த உணர்ச்சிகள் விவரிக்க
முடியாதவை. அந்தப் பதில்களால் அவள் உள்ளம் நெகிழ்ந்தது. அவள் கண்கள் அவனை ஊடுருவிப் பார்த்தன. அவனும் தலை நிமிர்ந்து அவளை நோக்கினான். சந்தித்த கண்கள் சந்தித்தபடி நின்றன. எந்த இரண்டு எந்த இரண்டைக்
கவர்ந்தது? சொல்ல முடியாத நிலை. ஆனால் நிலைத்தவை என்னமோ நான்கு!

Previous articleNaga Deepam Ch2 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch4 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here