Home Historical Novel Nagadevi Ch 19 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 19 | Nagadevi Sandilyan | TamilNovel.in

111
0
Nagadevi Ch 19 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 19 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 19 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 19. சிறையில் தலைவன்

Nagadevi Ch 19 | Nagadevi Sandilyan | TamilNovel.in

குருதேவரான சுத்ததத்தரை சிறிதும் மரியாதை யின்றி இரு மாலுமிகள் இழுத்துச் சென்றதைக் கண்ட உபேந்திரன் முதலில் அவரைத் தொடர்ந்து சென்றான். மாலுமிகள் மத்திய தளத்திலிருந்த அவரது அறைக்கு இழுத்துச் சென்று
அதற்குள் அவரைத் தள்ளிக் கதவைப் பூட்டிவிட்டு, “குருநாதரே! தங்களைக் கடலில் சேர்ப்பதற்கு நாளைக் காலையில் வருகிறோம். சுறாக்களுக்கு உமது புஷ்டியான தேகம் நல்ல விருந்தாயிருக்கும்” என்று சொல்லிவிட்டும்
சென்றார்கள். அதைக் கண்டுங்கூட அவரை விடுவிக்க எந்தச் செயலிலும் இறங்காமல் சில விநாடிகள் நின்ற உபேந்திரன் அங்கிருந்து நாகதேவியின் அறைக்குச் சென்றான்.
அப்பொழுது நாகதேவியின் அறை காலியாயில்லை. பஞ்சணை மீது அவன் முதல் நாள் சந்தித்த போது இருந்த நிலையில் அவள் சாய்ந்தவண்ணம், தலைக்கு இடது கையை முட்டுக் கொடுத்து அரைப் படுக்கையாகப் படுத்திருந்தாள்.
அவனைக் கண்டதும் அவள் பழையபடி மும்முறை லேசாக நகைக்கவும் செய்தாள். அவளை அணுக முயன்ற உபேந்திரன் அந்த நகைப்பைக் கேட்டதும் கால்கள் தளப் பலகையில் உறைந்துபோய் அசைவற்று நின்றான்.
நாகதேவியின் கூரிய விழிகள் அவனைக் கூர்ந்து நோக்கின. “படைத்தலைவரே! அருகில் வரலாம். சற்று முன்பு மருதியின் அறையில் நீர் அணைத்த அதே நாகதேவிதான் நான்” என்று கூறி மீண்டும் அவள் நகைத்தாள்.
அதனால் அதுவரை மனத்திலிருந்த குழப்பம் நீங்கவே கண்களில் சீற்றத்தைத் தோற்றுவித்துக் கொண்ட உபேந்திரன், “இப்பொழுது புரிகிறது” என்று முணுமுணுத்தான் சீற்றம் குரலிலும் ஒலிக்க.
நாகதேவியின் இதழ்களில் குரூரமான புன்முறுவலொன்று தவழ்ந்தது. “என்ன புரிந்து கொண்டீர் படைத்தலைவரே?” என்று வினவினாள்.
உபேந்திரன் சீற்றம் முன்னைவிட அதிகமாகவே அவன் கண்கள் உருண்டன பயங்கரமாக. “மருதியாக நீ நடித்திருக்கிறாய், மருதியின் அறையில் இருந்தவள் மருதியல்ல; நீதான் என்பது நன்றாகத் தெரிகிறது” என்று சொன்னான்
குரூரமான சொற்களில்.
நாகதேவி சாய்ந்த நிலையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். “உங்களுக்கு அசல் பொருளில் திருப்தியில்லை என்பது தெரிகிறது படைத்தலைவரே. ஒரு புருஷன் ஆழ்ந்த காதலில் இருந்தால், ஆள் மாறாட்டம் சட்டென்று தெரியும். அப்படித்
தெரியாததிலிருந்து உமது காதல் முழுமையானதல்ல. என்னிடம் பாதி, மருதியிடம் பாதியாக இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினாள்.
“இல்லை. கண்டிப்பாக இல்லை. உன்னை நான் வெறுக்கிறேன்” என்று சீறினான் படைத்தலைவன்.
“முடியாது. ஒருக்காலும் முடியாது. என்னை வெறுக்கும் சக்தி உங்களுக்குக் கிடையாது. நம்மிருவருக்கும் விதி ஏற்கனவே முடி போட்டுவிட்டது. அதற்கு நாகர் சமுதாயமும் முத்திரை வைத்துவிட்டது. எந்தப் புருஷனும் பெண்ணும்
தானாக இயங்குவதில்லை. விதியின் வலுவான கரத்தால் இயக்கப்படுகிறார்கள்.” என்று சுட்டிக்காட்டிய நாகதேவி தலையிலிருந்த தனது கிரீடத்தை எடுத்துத் தலையணை மீது வைத்தாள். “இப்பொழுது பாருங்கள், நான் மருதியாகி
விட்டேன். இந்தக் கிரீடந்தான் அவளுக்கும் எனக்கும் குறுக்கே நிற்கிறது. நீங்கள் மட்டும் உங்கள் மனத்தைச் சிறிது மாற்றிக் கொண்டால் மருதியின் தலையில் இந்தக் கிரீடம் அணிவிக்கப்படும். அவளையே நாகதேவியாக்கி விடுகிறேன்”
என்றாள் அவள்.
உபேந்திரன் அவளைச் சுட்டுவிடுவதுபோல் பார்த்தான். “நாகர்களுக்கு அவளைத் தலைவியாக்குகிறாயா?”
“ஆம், நான் சொன்ன நிபந்தனையின் மேல்” என்ற நாகதேவி பஞ்சணையில் தொங்கவிட்டிருந்த கால்களை ஆட்டினாள் இருபுறமும்.
அந்தக் கால்களின் ஆட்டத்திலேயே வேட்கை மிகுந்திருப்பதை உணர்ந்த உபேந்திரன் துன்பப் பெரு மூச்சு விட்டான். பிறகு கேட்டான். “எவ்வளவு பெரிய பதவியை இழக்க முற்படுகிறாய் என்பதைப் புரிந்து கொண்டாயா தேவி?” என்று
வினவினான் படைத்தலைவன் துன்பத்தைச் சொற்களிலும் சொட்டி.
அவள் பஞ்சணையில் உட்கார்ந்தபடியே அவனை அருகில் வரும்படி சைகை செய்தாள். அவனும் மெள்ள அவளை அணுகினான். பக்கத்தில் உட்கார இடம் அளித்தாள். தடை ஏதும் சொல்லாமல் உட்கார்ந்த உபேந்திரனைப் பாராமலே
பேசினாள் நாகதேவி. “அன்பரே! பெண்கள் இதயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. எப்பேர்ப்பட்ட பதவியும் தனது புருஷன் என்ற அந்தஸ்தைவிடப் பெரிதல்ல பெண்களுக்கு. மனைவியென்ற உரிமையைவிடப் பெரிய உரிமையும்
வாழ்க்கையில் கிடையாது. அவர்கள் சாம்ராஜ்யம் புருஷனாக அடைய முடியுமானால், அதுமட்டுமல்ல படைத்தலைவரே! உங்களுடைய இதயத்தில் ஒரு சிறு இடம் கிடைக்குமானாலும் போதும் மற்ற இடத்தை மருதி ஆட்கொள்ளட்டும்”
என்றாள் நாக தேவி. அவள் குரல் வழக்கத்துக்கு மாறாகத் தழுதழுத்துக் கிடந்தது. சிறிது பலவீனம்கூட அதில் தெரிந்தது.
இந்த நிலையில் இருந்த நாகதேவியைச் சிறிது நகர்ந்து பஞ்சணையில் நெருங்கி உட்கார்ந்த சோழர் படைத்தலைவன் அவள் தோள் மீது தனது கையைப் போட்டுக் கொண்டான். அந்த நிலையில் அவன் பேசிய போது அவன் குரல்
பரிதாபத்தினால் மிக மென்மையாக ஒலித்தது. “நாகதேவி உனக்கு அழகில் குறை சிறிதுமில்லை. உன் பதவியோ அபரிமிதமானது. இதை யெல்லாம் அற்ப சுகத்துக்காகப் பலி கொடுக்காதே. தவிர நீ வந்த காரியம் ஒன்றிருக்கிறது.
நாகப்பட்டினத்தை சாவக நாகர்கள் வசப்படுத்த உறுதி கூறி வந்திருக்கிறாய். அந்த உறுதியிலிருந்து சிறிது தளர்ந்தாலும் நாகர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று மெதுவாகப் பேசினான் படைத்தலைவன்.
நாகதேவி அவன் தோள் மீது தலையைச் சாய்த்துக் கொண்டாள். “படைத்தலைவரே! நான் தங்களைப் பிரிந்திருக்கும்போது படும் நரக வேதனையைவிட உயிரிழப்பது கஷ்டமாகத் தோன்றவில்லை. அது தவிர உங்களை மணந்த பின்பு
நாகர்களிடம் எனக்கென்ன தொடர்பு? புருஷன் வசப்பட்ட பெண்ணுக்கு அவன் நாடுதான் சொந்த நாடு. அவன் குலந்தான் அவள் குலம். அவனுக்கு வேண்டிய எல்லாமே அவளுக்கும் வேண்டியவைதான். உங்கள் மனைவி எப்படி
சாவகத்தின் தூதுப் பதவியை வகிப்பாள்? சோழ நாடு அவளுக்குச் சொந்தமாகிவிடாதா?” என்று சொன்னாள் தலையை அவன் தோள்மீது இழைத்தவாறே.
உபேந்திரன் வதனத்தில் அச்சத்தின் சாயை படர்ந்தது. தனக்காக உயிரையும்விடச் சித்தமாயிருக்கும் நாகதேவியிடம் சிறிது அனுதாபங்கூட அவன் இதயத்தில் உற்பத்தியாயிற்று. உயிரை விடுவதைக்கூட அவன் பிரமாதமாக
நினைக்கவில்லை. சாவக அரசுக்குத் துரோகம் செய்யும் அளவுக்கு அவள் உள்ளம் இடங்கொடுத்து விட்டதைப்பற்றி அவன் வியந்தான். அவளை அவன் கையொன்று அணைக்கவும் செய்தது. அவள் உடலும் மருதியின் உடலைப்
போலவே மென்மையாக இருந்தது. இதன் விளைவாகத்தான் சூடாமணி விஹாரத்தின் சார்புத் திண்ணையிலும் சற்று முன்பு மருதியின் அறையிலும் அவளைத்தான் அணைக்க முடிந்தது. ஏன்? அணைப்பின் சிகரத்தையும் எட்ட
முடிந்தது என்பதைப் புரிந்து கொண்ட உ.பேந்திரன் மெதுவாகக் கேட்டான், “நான் மருதியிடம் வருவதாகச் சொன்னது உனக்கெப்படித் தெரிந்தது?” என்று.
அவள் சிறிது சிந்தித்தாள். பிறகு பஞ்சணையை விட்டு எழுந்து, “ இப்படி வாருங்கள்” என்று கூறிக் கொண்டு சற்று எட்ட இருந்த சாளரத்தை நோக்கி நடந்தாள். மூடியிருந்த சாளரத்தை திறந்து முதலில் தன் தலையை வெளியே
நீட்டினாள். உபேந்திரனும் அவள் பக்கக்தில் நின்று தலையை வெளியே நீட்டினான். மந்தமான நிலவில் கடல் கனவு நிலையை எங்கும் விரவியிருந்தது. தளத்திலிருந்த மாலுமிகள் பேசியபோது அவர்கள் பேச்சு அவன் காதுகளில்
தெளிவாக விழுந்தது. “சற்று இப்படியே இருங்கள், நான் உங்களுடன் மேல் தளத்திலிருந்து பேசுகிறேன்” என்று கூறிவிட்டு நாகதேவி மேல் தளத்துக்கு துரிதமாகச் சென்றாள். இரண்டு நிமிடங்களுக்கெல்லாம் அவள் “அன்பரே!” என்று
அழைத்தது அவன் காதில் தெளிவாக விழுந்தது. அவள் மேல் தளத்தின் பக்கப் பலகைக்கு வெளியே குனிந்தவண்ணம் மெதுவாகத் தான் பேசினாள். அவள் பேசிய ஒவ்வொரு சொல்லும் படைத்தலைவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.
“அன்பரே! மருதியிடம் நீர் பேசிய அன்புச் சொற்களில் பாதியை என்னிடம் பேசியிருந்தால்கூட நான் உங்கள் கைப்பாவையாக மாறி இருப்பேன். நீங்கள் அதைச் செய்யவில்லை. என்னை வெறுத்தீர். அது மட்டுமல்ல; அவளிடம் என் னென்ன
ஆசை வார்த்தைகளைப் பேசினீர்கள்? நள்ளிரவில் அவள் அறைக்குப் போக என்ன சாமர்த்தியமாகத் திட்டமிட்டீர்கள். அதைக் கேட்டுத் தான் அவள் அறையில் நான் இருந்தேன். நீங்கள் கதவை தாழிட வேண்டாமென்று சொன்னது மட்டும்
என் காதில் விழவில்லை. விழுந்திருந்தால் கதவைத் தாளிட்டிருக்க மாட்டேன்” என்று சொன்ன நாகதேவியின் குரல் அதற்குப் பிறகு ஒலிக்கவில்லை.
தா மீண்டும் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அறையில் அவள் தோற்றமளித்தாள். “படைத்தலைவரே இப்பொழுது புரிகிறதா உங்கள் திட்டம் எனக்கு எப்படித் தெரிந்த தென்று?” என்றும் கேட்டுப் புன்முறுவல் கொண்டாள்.
அடுத்து ஒய்யார நடை நடந்து அவனை நோக்கி வந்தாள். கட்டிலை அணுகியதும் அவன் இரு தோள் மீதும் தனது கைகளை வைத்தாள்.
அவள் விம்மிய மார்பு அவன் முகத்துக்கு எதிரில் இருந்தது. இரட்டை அழகுகள் உணர்ச்சியால் லேசாகத் துடித்தன. அவள் மார்பிலிருந்து எழுந்த வாசனைத் திரவியத்தின் சுகந்தம் அவனை மயக்கியது. அந்த மயக்கத்திலும் அவன்
மருதியைப்பற்றி நினைத்தான். ‘ ஆமாம் இவள் இத்தனையும் சொன்னாள். மருதியைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே?’ என்று தன்னைத் தானே வினவிக் கொண்டான். அந்தக் கேள்வியை வெளிப்படையாக அவளையே கேட்டான்.
அவன் வினாவைக் கேட்ட அவள் முகம் சிறிது சிவந்தது. “மருதியைப்பற்றிக் கவலை வேண்டாம். அவளுக்கு இதுவரை எந்தக் கெடுதலுமில்லை” என்று சொன்னாள்.
“அவளை நான் பார்க்க வேண்டும்” என்றான் படைத்தலைவன் சிறிது சந்தேகத்துடன்.
“தாராளமாகப் பார்க்கலாம்” என்று சொன்ன நாகதேவி – பஞ்சணையிலிருந்த தலையணையைத் தூக்கி அதற்குக் கீழிருந்த ஒரு திறவுகோலை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“குருநாதரை அடைத்திருக்கும் அடுத்த அறையில் மருதியும் இருக்கிறாள். போய்ப் பார்த்து வாருங்கள்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினாள் நாகதேவி.
சாவியைக் கையில் வாங்கி நாகதேவியையும் பார்த்து சாவியையும் நோக்கினான் ஒருமுறை. பிறகு திரும்பி அறைக்கதவை நோக்கி நடந்தான். “படைத்தலைவரே!” என்ற நாகதேவியின் குரல் அவன் வேகத் தைச் சிறிது தடுத்தது. அவன்
திரும்பி நோக்கினான். நாகதேவி பழைய நாகதேவியாயில்லை, ராணிபோல் அரச தோரணையில் உட்கார்ந்திருந்தாள். “படைத்தலைவரே! சென்று மருதியைப் பாருங்கள். அவளுக்கு ஒரு குறையும் நான் வைக்கவில்லை. ஆனால் நான்
கொடுத்த மூன்று நாள் கெடு நாளையுடன் முடிவடைகிறது. நாளை மாலையில் நாம் பூம்புகாரை அடைவோம். அதற்கு முன்பு நீர் எடுக்கும் முடிவு அவள் கதியை நிர்ணயிக்கும்” என்று கூறிவிட்டு மறுபடியும் பஞ்சணையில்
சாய்ந்து கொண்டாள்.
சாவியுடன் சென்ற உபேந்திரன் நாகதேவியின் பஞ்சணையைப்போலவே இருந்த மற்றொரு பஞ்சணையில் மருதி படுத்திருந்தாள். அவன் காலடிச் சத்தத்தைக் கேட்டதும் அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவனை சுமுகத்துடன்
வரவேற்பதற்குப் பதில், “செல்லுங்கள், சென்று விடுங்கள்” என்று ஆத்திரத்துடன் கூவினாள் மருதி. அவள் கண்கள் நிர்மலமாயில்லை ; பித்தம் பிடித்தவள் போலிருந்தாள். அதிர்ச்சியடைந்து நின்றான் உபேந்திரன். நடந்திருப்பது
என்னவென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மாற்று மருந்து அவனுக்குத் தெரியும். ஆனால் அது அவன் கையில் இல்லை. மருதியை சுயநிலைக்குக் கொண்டு வருவது முடியாத காரியமென்பதைச் சந்தேகமற உணர்ந்த
உபேந்திரன், “ஏனில்லை, ஒரு மருந்து இருக்கிறது. முதலில் நாகதேவியைக் கொன்று விடுகிறேன்” என்று கூறிக் கொண்டு அறைக் கதவைத் தடாலென மூடிக் கொண்டு வெளியே வேகமாக நடந்தான். இடையில் இருந்த சிறு வழியில்
சென்றபோது இரு முரடர்கள் அவனைப் பலமாகப் பிடித்தார்கள். அவன் வாயும் பலமான ஒரு கையால் மூடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவனும் ஓர் அறையில் தள்ளப்பட்டான். அந்த அறைக்கதவும் பலமாக இழுக்கப்பட்டு
பூட்டப்பட்டது.

Previous articleNagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 20 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here