Home Historical Novel Nagadevi Ch 2 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 2 | Nagadevi Sandilyan | TamilNovel.in

148
0
Nagadevi Ch 2 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 2 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 2 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 2. அவள் ஒதிய மந்திரம்

Nagadevi Ch 2 | Nagadevi Sandilyan | TamilNovel.in

மகாவீரனென்று பெயர் பெற்றவனும் அன்றுவரை அச்சமென்பதை அணுவளவும் அறியாதவனுமான உபேந்திரனின் சஞ்சலத்தையும், அச்சத்தையும் அவன் உடலில் ஓடிக்கொண்டிருந்த நடுக்கத்தையும் பார்த்த அந்தப் பெண்
அவனைப் பார்த்து லேசாக நகைத்தாள். அப்படி நகைத்த அவள் உட்கார்ந்த நிலையிலிருந்து பஞ்சணைத் தலையணையில் உல்லாசமாகச் சாய்ந்தும் கொண்டாள். அப்படிச் சாய்ந்து ஒரு கையை தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு
அவனை நோக்கிய அவள் அழகு விவரணத்துக்கும் அப்பாற்பட்டதாயிருந்ததை உபேந்திரன் கவனித்தான்.
அந்த அறையிலிருந்த பல போகப் பொருள்களையும் தோற்கடிக்கக் கூடிய போகப் பொருளாய், சாதாரணமாகக் கிட்ட முடியாத தேவமங்கையாய் பஞ்சணையில் ஒருக்களித்துக் கிடந்த நிலையில் அவள் எந்த ஆண்மகனையும்
நிலைகுலையச் செய்து அடிமையாக்கிக் கொள்ளும் ரதிபோல் காட்சியளித்தாள். அறை அவ்வளவு பெரியதல்லவென்றாலும், அங்கிருந்த மரச்சுவர்களிலும் தூண்களிலும் காணப்பட்ட தந்த சீப்புகள், இடையே கட்டப்பட்ட கொடியில்
தொங்கிய பட்டுச் சேலைகள், ஒரு தூணின் ஆணியில் தொங்க விடப்பட்டிருந்த முத்து நவரத்தின மாலைகள், அவள் முகம் கழுவ ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பளிங்குக் கிண்ணம் எல்லாமே அந்த அறையை ஒரு ராணியின் அறையாகச்
செய்திருந்தன. அத்தனை பொருள்களின் அழகையும் மீறிய அழகுடன் அவள் சாய்ந்திருந்ததைக் கவனித்த உபேந்திரன் லேசாகப் பெருமூச்சே விட்டான்.
அதிக வெளுப்பில்லாமல் லேசாக மஞ்சளோடியிருந்த அவள் வழவழத்த மேனி காலத்தால் பழுப் பேறிய தந்தம் போலிருந்தது. அந்த அறையில் காற்றுக்காகப் பஞ்சணைக்கு எதிரில் மேல் தளத்தின் சாய்வில் அமைக்கப்பட்டிருந்த ஒரு
துவாரத்தின் மூலம் காலை நேரத்தின் கதிரவன் கிரணங்கள் உட்புகுந்து அவள் உடலின் மஞ்சள் நிறத்துக்குப் பெரிதும் மெருகூட்டின. அவள் பிறை நுதலுக்கு மேலே அலைந்த கரிய குழல்கள் நடு வகிட்டில் பொருத்தப்பட்டிருந்த
முத்தலை நாகாபரணமும் பேரொளிப் பெற்றுப் பிரகாசித்தன. அவள் குழல் காலையில் நாகை மணல் மேட்டிலிருந்து, அவன் எப்படிப் பார்த்தானோ அதே மாதிரியே விரிந்து கிடந்தது. அப்படி குழல் விரித்த நிலையிலும் அவள் அழகிய
தோற்றம் பிரமிக்கும்படியாகவே இருந்தது. அவள் வளைந்த புருவங்களும் எடுப்பான கூரிய நாசியும், நீர் சொட்டும் ரத்தினக் கூட்டம்போல சிவந்த உதடுகளும், முகத்துக்குத் தக்கபடி அளவோடு அமைக்கப்பட்டிருந்த முகவாய்க்
கட்டையும் கீழே தெரிந்த வெண்சங்குக் கழுத்தும் பிரமையூட்டும் வண்ணம் அமைந்திருந்தன. அந்தக் கழுத்துக்குக் கீழே உறுத்து நோக்கிய இரு தாமரை மொட்டுகள் அதிகப் பருமனின்றி அவள் மெல்லிய உடலுக்குத் தேவையானபடி
அமைந்திருந்தாலும் அவள் ஒருக்களித்ததன் காரணமாக இரண்டிலொன்று தலையணையை முத்தமிட, இன்னொன்று எதிரே நின்ற சோழர் நாகைத் தலைவனை உற்றுநோக்கி மிரட்டியது.
அவள் கிடந்த நிலையில் அவள் நீண்ட சரீரத்திலிருந்த பல வளைவுகள் அவள் உடலின் வசீகரத்துக்கு எல்லையில்லையென்பதை எடுத்துக் காட்டின. இடது கையை அவள் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் வலது
கை மட்டும் அவளுக்குக் குறுக்கே தொங்கிக் கொண்டிருந்தது. அது பதிந்த இடத்துக்கு மேலே தெரிந்த சின்னஞ்சிறு இடையும், -அடுத்து லேசாய்ப் பருத்து எழுந்த அழகும் அதை அடுத்து நீண்டு கிடந்த தந்தக் கால்களும், அவள் அம்சம்
ஒவ்வொன்றிலும் அழகு சுடர் விடுவதை நிரூபித்தன.
அவள் அன்று மிக மெல்லிய சீனப்பட்டு ஒன்றை அணிந்திருந்ததால் அது அடிக்கடி அவள் வழவழத்த சரீரத்திலிருந்து நழுவி விழுந்தாலும் அவள் அதைச் சரிப்படுத்திக்கொள்ள முயன்றாளில்லை. அந்தப் பட்டு இருந்த மென்மையில்
உடலின் அழகு பூராவும் தெரிந்தாலும் அதை அவள் லட்சியப்படுத்தினாள் இல்லை. அவள் இதழ்களில் புன்சிரிப்பு ஒன்று தவழ்ந்து கிடந்தது.
அவள் மோகனகரமான இத்தனை அழகிலும் சவர்ச்சியிலும் ஒரு பயங்கரம் ஊடுருவி நின்றதைக் கவனித்தான் உபேந்திரன். அத்தனை அழகிலும் அவள் நெளிந்து கிடந்தபோது ஒரு சர்ப்பம் நெளிவது போலவே காணப்பட்டதை
உணர்ந்த உபேந்திரன், “இவள் நாக கன்னிகை தான் சந்தேகமில்லை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் தன்னை அணு அணுவாகக் கவனிப்பதையும், ஏதோ சிந்திப்பதையும் கவனித்த அந்தப் பெண்ணும் அவனைக்
கூர்ந்து கவனித்தாள்.
வாலிபப் பருவத்தில் நல்ல உயரத்துடனிருந்த அந்த ஆண் மகனின் நெடுங்கைகள் ஒல்லியாய் இருநதாலும் உரத்துடனிருந்ததையும், சதைப் பிடிப்பு அதிகமில்லாத உடலின் மற்ற பகுதிகளும் எஃகுபோல உறுதியுடனிருந்ததையும்,
அவன் நின்ற தோரணையில் அதிகாரம் செலுத்தும் ஆண்மை பொங்கி நின்றதையும் அவள் கவனிக்கவே செய்தாள். அவன் அன்று அங்கி ஏதும் அணியாமல் இடுப்பில் ஒரு வஸ்திரத்தை மட்டும் மூலைக் கச்சமாகக் கட்டிக்
கொண்டிருந்ததால் அவன் தொடை உச்சியிலிருந்து பாதம்வரை கால்கள் நன்றாகத் தெரிந்தன. வீரம் சொட்டும் அவன் வதனமும் காக்கை இறகுகள் போல் வெளியிடப்பட்டிருந்த கரிய குழல்களும், அவன் கழுத்தில் ஆடிய வீர சங்கிலியும்
அவன் கம்பீரத்துக்குச் சான்று கூறின. இடுப்பில் ஒரு குறுவாளைக்கூட அவன் கொண்டு வராததை அவள் கவனித்து வியப்பும் பெருமையும் கொண்டாள். அவன் கண்களுடன் தனது கண்களையும் கலந்தாள் ஒரு விநாடி,
இத்தனையிலும் அவன் வதனத்தில் ஓடிய அச்சத்தின் சாயையும் கண்டதால் மெள்ள நகைத்தாள்.
அவள் நகைப்பை அவன் பொருட்படுத்தாமலே நின்றான். ஆகையால் அவளே சொன்னாள், “சோதனை வரும்போது எந்த ஆண் மகனும் கோழைதான்” என்று.
அதற்கும் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளை வெறித்துப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அவன் சங்கட நிலையை அவளும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். “நிற்க முடியவில்லையென்றால் இப்படி வந்து உட்கார்”
என்று அவள் தன் கால்களை மடித்துப் பஞ்சணை ஓரத்தில் அவனுக்கு இடம் விட்டாள்.
அவள் அழைப்பை அவன் ஏற்கவில்லை. நின்ற படியே அவளை நோக்கி, “ நிற்க முடியாத அளவுக்கு அச்சமில்லை எனக்கு. தவிர அச்சமும் எனக்கு இன்று ஏற்பட்ட புது அனுபவம்” என்று கூறினான்.
அவன் சொன்னதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக அவள் தன் தலையை அசைத்தாள் “அப்படித் தானிருக்க வேண்டும். நீ மகாவீரனென்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாகர்களிடை உன் பெயர் பிரசித்தி பெற் றிருக்கிறது” என்று
அவளும் சொன்னாள். அதைச் சொன்னபோது அவள் குரலில் அதிகாரமில்லை; பெருமை இருந்தது. கடுமையில்லை ; கனிவிருந்தது.
மேலும் அவளே பேசினாள். “உபேந்திரா! உன் பெயரை, வீரத்தை, நீ போர்க்களங்கள் இரண்டில் புரிந்த வீரச் செயல்களை நாகர்கள் அறிவார்கள். அதனால்தான் இந்தப் புனிதப் பணிக்கு உன்னை உப யோகிக்க எனக்கு யோசனை
கூறினார்கள். அதை யொட்டித்தான் உனக்கு ஓலை அனுப்பினேன். அந்தப் பணியை உன் உதவியுடன் நிறைவேற்றத்தான் இங்கு வந்திருக்கிறேன், புரிகிறதா?” இப்படிப் பேசிய அந்த அழகி மீண்டும் உபேந்திரனை ஏறெடுத்து
நோக்கினாள்.
உபேந்திரனும் இம்முறை அவள் கண்களைச் சிறிதும் அச்சமின்றி நோக்கினான். “புரிகிறது! ஆனால் பணி என்னவென்பது புரியவில்லை” என்று சற்றுக் கடுமையுடன் கூறினான்.
“சகலத்தையும் சமயத்தில் புரிய வைக்கிறேன் உனக்கு வழிகாட்டவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்றாள் அந்த நாக வம்சத்தவள்.
அதுவரை மிகுந்த பொறுமையைக் காட்டிய உபேந்திரன், “எனக்கு யாரும் வழிகாட்ட முடியாது. நான் எதைச் செய்ய வேண்டும், என்று உத்தர விடவும் முடியாது. தவிர எனக்கு உத்தரவிட உனக்கு என்ன அதிகாரம்?” என்று
பொறுமையை உதறி சற்றுச் சினத்தைக் காட்டினான்.
அவள் முகத்தில் இகழ்ச்சியின் சாயை படர்ந்தது. “உபேந்திரா! இதுவரை உன்னைப் புத்திசாலியென்று நினைத்தேன். நீ உன் குலத்தை மறந்துவிட்டாய். உண்மையில் நீ நாகர் குலத்தவனா என்ற சந்தேகமும் எனக்கு உண்டாகிறது” என்று
கூறிய அவள் ஒருமுறை பஞ்சணையில் அசைந்தாள், கோபத்துடன் “உபேந்திரா! நாகனாகப் பிறந்த யாரும் எந்த நாட்டையும் சேர்ந்தவரல்லன். நாகர் குலத்துக்குத்தான் அவர்கள் சொத்து. நாகர் தலைவர் இடும் பணியைத்தான் அவர்கள்
செய்ய வேண்டும். அவர்கள் முதல் கடமை அவர்கள் குலத்துக்கு. நாடு நகரம் எல்லாமே அடுத்த படி” என்று விளக்கிய அவள், “ நாகவீரனே! உனக்கு நான் அனுப்பிய ஓலையில் என்ன கையெழுத்திட்டிருந்தேன்?” என்று வினவவும்
செய்தாள்.
“நாகதேவி என்று கையெழுத்திட்டிருந்தீர்கள். அது உங்கள் பதவியா பெயரா?” என்று உபேந்திரன் கேட்டான்.
“இரண்டும்தான். என் பெற்றோர் இட்ட பெயர் நாகதேவி. நாகர்கள் என்னைத் தலைவியாகத் தேர்ந்தெடுத்து நாகதேவி என்று அழைத்தார்கள். இப்படிப் பொருந்துவது அபூர்வம்! அதுவும் முத்தலை நாகர் சாதியில் இப்படி ஏற்படுவது
மிகமிக அபூர்வம்” என்றாள் அவள்.
பதிலுக்கு அவன் தலையை மட்டும் அசைத்தான். ‘நாகதேவி, நாகதேவி’ என்று இருமுறை உச்சரிக்கவும் செய்தான்.
அவன் தன் பெயரை இருமுறை உச்சரித்ததைக் கண்ட அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்தது. இதழ்களில் அழகிய இள நகை கூடியது. “பெயர் அழகாக இருக்கிறதா?” என்று மெதுவான குரலில் வினவினாள் அவள்.
“அழகாகவும் இருக்கிறது! பதவிக்குத் தக்கபடியும் இருக்கிறது” என்றான் உபேந்திரன் மரியாதை நிரம்பிய குரலில். “என்ன இருந்தாலும் இவள் எங்கள் சமுதாயத் தலைவி அல்லவா?” என்று மரியாதைக்கு உள்ளூர காரணமும் கற்பித்துக்
கொண்டான்.
அவன் பதிலில் கண்ட பணிவும் மரியாதையும் அவளுக்கு மிக இன்பத்தை அளித்திருக்க வேண்டும். அடுத்து அவள் மீண்டும் அழைத்தாள் அவனை. “உபேந்திரா” என்று.
“தேவி!” என்றான் அவன்.
“நீ நிலைமையைப் புரிந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன். இனி நாமிருவரும் இணைந்து வேலை செய்வது சுலபம்” என்று குறிப்பிட்டாள் நாகதேவி.
இதற்கு அவன் பதிலேதும் சொல்லவில்லை. “ஏன் வாளாவிருக்கிறாய் உபேந்திரா?” என்று அன்பு சொட்டிய குரலில் கேட்டாள் அவள்.
“தேவி! நீங்கள் வந்த காரியத்தை இன்னும் சொல்லவில்லை” என்றான் உபேந்திரன்.
அவள் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினாள். பிறகு “உபேந்திரா! ஏன் நிற்கிறாய்? இப்படி வந்து என் அருகில் உட்கார்” என்று தன் உடல் முழுவதையுமே பஞ்சணையில் பின்னால் நகர்த்திக் கொண்டாள்.
“தவறு தேவி நாகர் குலத்தார் அவர்கள் தலைவர்களுக்குச் சரிசமானமாக உட்காருவது சம்பிரதாய விரோதம்” என்று சுட்டிக் காட்டினான் உபேந்திரன்.
அவன் சொற்படி நடக்காததால் அவள் முகத்தில் சினம் லேசாகத் தெரிந்தது. “தலைவி சொற்படி நடக்காதிருப்பது சம்பிரதாயமா?” என்று வினவினாள்.
“எதுவும் உத்தரவைப் பொறுத்தது” என்ற உபேந்திரன் “தாங்கள் வந்த காரியம் என்ன? என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்? சொல்லுங்கள் தேவி” என்று கேட்டான் பணிவு நிரம்பிய குரலில்.
நாகதேவி அவனை நோக்கி நகைத்தாள். “நான் பெண் என்பதால் என் அருகில் உட்கார அஞ்சுகிறாய் சரி, அப்படியே நில். நாகர்கள் கட்டளையைக் கேள்” என்று சொன்ன நாகதேவி பஞ்சணையிலிருந்து எழுந்து தரையில் நின்று
கொண்டாள். அந்த நிலையில் அவன் செய்ய வேண்டுவதென்ன என்பதை விளக்கத் தொடங்கினாள்.
அவள் விளக்க விளக்கப் பெரும் அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளானான் உபேந்திரன். “துரோகம் பச்சைத் துரோகம். இதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று தரையில் காலை உதைத்து உக்கிரமாகக் கூவவும் செய்தான் சோழர்
படைத் தலைவன். “உனக்குப் பைத்தியப் பிடித்திருக்கிறது. நாகர்கள் எல்லோருக்குமே பைத்தியம் பிடித்திருக்கிறது” என்றும் கூறினான்.
இந்தக் கூச்சலால் அவள் சிறிதும் மசியவில்லை. தன் உடலின் அழகுகள் அசைய அவனை நோக்கி வந்தாள். அருகில் வந்ததும் “குனி உபேந்திரா” என்று மெதுவாகச் சொன்னதுடன் நில்லாமல் அவன் குழலைப் பிடித்து முகத்தைத்
தாழ்த்தி அவன் காதில் ஏதோ ஓதினாள்.
அவள் ஓதிய மந்திரம்தான் என்னவோ? உபேந்திரன் கண்கள் சுழன்றன. பிரமிப்பு அவன் இதயத்தை ஆட்கொண்டது. மீள முடியாத பாதாளத்தில் தான் தள்ளப்பட்டு விட்டதை உணர்ந்தான்.

Previous articleNagadevi Ch 1 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here