Home Historical Novel Nagadevi Ch 21 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 21 | Nagadevi Sandilyan | TamilNovel.in

67
0
Nagadevi Ch 21 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 21 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 21 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 21. புகாரிலிருந்து சிறு படகு

Nagadevi Ch 21 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி தந்திரத்தால் பைத்தியப் பட்டம் உறுதி செய்யப்பட்டு, புகாரின் பரதவரால் கை கால்கள் கட்டப்பட்டு சாவக மரக்கலத்தின் தரையில் உருண்டு கிடந்த உபேந்திரன் தன்னெதிரே கொடூரப் புன்னகை யுடன் நின்றிருந்த
நாகதேவியைச் சுடும் கண்களால் ஏறெடுத்து நோக்கினான். அவன் விழிகளில் கண்ட சினத்தைப் பார்த்த நாகதேவி அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், “சோழ மன்னன் படைத்தலைவரே! புகார் வந்ததும் உமக்கு விடி மோட்சம்
கிடைக்குமென்று இறுமாந்திருந்தீர். அதனால் முன்னேற்பாடாக சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மன்னித்துவிடுங்கள்” என்று ஏளனம் ஒலித்த குரலில் பேசினாள். திடீரென்று அவள் முகபாவம் மாறி அதில் ஒரு
வேதனையும் தெரிந்தது. “நாகர் தலைவரே! உமக்கு மட்டும் குலப்பற்று இருந்தால் இப்பொழுது. நீங்கள் இருக்க வேண்டிய நிலை வேறு. உலக நாகர்களுக்கெல்லாம் தலைவியான என்னை உங்கள் அடிமையாக ஆண்டிருக்கலாம்.
மருதியெனும் பெண்ணை நம்பி மகுடத்தை அலட்சியம் செய்தீர். அதன் விளைவு இது. ஆனால் உண்மையாக இந்த நிலைக்கு உங்களைக் கொண்டு வரவோ, தரையில் நீங்கள் கிடப்பதைப் பார்க்கவோ என் மனம் இடந்தரவில்லை. ஆனால்
நாகர் சமுதாயத்தின் நலனை நினைத்து என் உள்ளத்தைப் புண்ணாக்கும் அலுவல்களில் ஈடுபடுகிறேன்” என்று வேதனை நிறைந்த குரலில் பேசினாள்.
இப்படி ஏளனமும் வேதனையும் மாறி மாறி ஏற்பட்ட உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்ட நாகதேவியை அனுதாபம் மிக்க கண்களால் நோக்கிய உபேந்திரன், தேவி! உன் மன நிலை எனக்குப் புரிகிறது. உன்னிடம் எனக்கு அனுதாபமே
உண்டாகிறது. உன் அழகுக்கும் உன் அறிவுக்கும் நீ இருக்க வேண்டிய நிலை வேறு. நீ அடைய முடியாத அந்தஸ்து உலகில் இருக்க முடியாது. ஆனால் கேவலம் சபலத்திற்காக, காமவேட்கைக்காக, சகலத்தையும் அழித்துக் கொள்கிறாய்.
தற்சமயம் நீ வெற்றி கண்டிருக்கிறாய். மருதியை மருந்தைக் கொடுத்து மயக்க நிலையில் வைத்துவிட்டாய். எனக்கும் பைத்தியப் பட்டம் கட்டி புகார் பரதவரும் நம்பும்படி செய்துவிட்டாய். ஆனால் ஒன்று சொல்கிறேன் கேள். உன்
வெற்றிகள் நிரந்தர மானவையல்ல. உலகம் முழுவதையும் நீ ஏமாற்ற முடியாது. யாரை ஏமாற்றினாலும் இருவரை ஏமாற்ற முடியாது” என்று சொன்னான் உபேந்திரன் மிக உறுதியான குரலில்.
“யாரந்த அந்த இருவர்?”நாகதேவி சர்வசாதாரணமாகக் கேட்டாள்.
“ஒருவர் ராஜேந்திர சோழதேவர்…” என்று படைத்தலைவன் சற்று நிதானித்தான்.
நாகதேவி கேட்டாள். “இன்னொருவர் யாரென்று சொல்லிவிடுங்கள்” என்று.
“எல்லன்.”
“யார் உங்கள் பணியாளா?”
“ஆம்.”
“என் ஆக்ஞைக்கு முன்னால் ஒரு பணியாள் என்ன செய்ய முடியும்?”
“பொறுத்திருந்து பார், புரியும்” என்ற உபேந்திரன் அதற்குமேல் ஏதும் பேச மறுத்தான்.
அத்துடன் நாகதேவி அந்த அறையிலிருந்து அகன்றாள். அன்று முழுவதும் மரக்கல அறையின் தரையிலேயே கிடந்தான் உபேந்திரன். அவனுக்கு உணவு முதலியன எல்லாமே தரையிலேயே படைக்கப்பட்டன அவனைக் காக்க
நியமிக்கப்பட்ட சாவகத்தின் இரு மாலுமிகள் அவனுக்கு வேண்டிய சகலத்தையும் செய்தார்கள். படுத்த இடத்திலேயே ஒருவன் உணவைப் புகட்டினான் வாயில். நீர் அருந்துவதும் படுத்த நிலையிலேயே நடந்தது. இரவு வந்த பின்பு அதே
இரு மாலுமிகள் அவனைத் தரையிலிருந்து படுக்கையில் எடுத்துக் கிடத்தினார்கள்.
அந்த அறையிலிருந்து சாதாரண கயிற்றுக் கட்டிலானாலும் அதில் போடப்பட்ட மெத்தை மட்டும் மிக சொகுசாயிருந்தது. இந்த சுகத்துக்குக் காரணம் நாகதேவியின் அன்பே என்பதையும் புரிந்து கொண்ட உபேந்திரன் சிந்தனையைத்
தீவிரமாகச் செலுத்தலானான். பிறகு சுற்று முற்றும் அறையை நோக்கினான். கட்டில், அறையின் சாளரத்துக்கு அருகில் போடப்பட்டிருந்ததைக் கவனித்துச் சிறிது ஆறுதலும் அடைந் தான். ஆனால் அவன் கை கால்கள் கட்டப்பட்டிருந்த
தாலும் சாளரக்கதவு நன்றாக அடைக்கப்பட்டிருந்ததாலும் தான் எந்த நடவடிக்கை எடுப்பதும் சாத்திய மல்லவென்பதை உணர்ந்து கொண்ட உபேந்திரன், சீற்றத்துக்கு இலக்காகி கட்டிலில் புரண்டான். அப்பொழுது கையில் தட்டுப்பட்ட
கட்டிலின் ஆணி யொன்றைக் கவனித்து சிறிது நிதானித்தான். அதில், மெல்ல கையின் கயிற்று முடிப்பைக் கொடுத்துக் கழற்றப் பிரயத்தனப்பட்டும் முடியவில்லை. கயிற்றின் பிணைப்பு எந்தவிதத்திலும் நீக்க முடியாதிருந்தது.
பல்லிருக்கும்போது ஆணி எதற்கு என்று பற்களாலும் முடிப்பை அவிழ்க்க எத்தனித்தும் பயனில்லை. அப்படி அவன் கயிற்றைக் கவ்விக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கை விளக்குடன் உள்ளே நுழைந்த நாகதேவி, “படைத்தலைவரே!
அந்தப் பற்கள் கயிற்றைக் கடிக்க ஏற்பட்டதல்ல” என்று கூறி நகைத்தாள். பிறகு விளக்கை ஒரு மூலையில் வைத்து விட்டு அவனருகில் வந்து உட்கார்ந்து கொண்டு அவன் உதடு களைத் தனது உதடுகளால் இழைத்தாள். ஆனால்
அன்றுவரை அவளைக் கண்டபோதெல்லாம் இன்ப வசப்பட்ட உபேந்திரன். அன்று வெறும் மரக்கட்டையாயிருந்தான். அவள் இதழ்களை இழைத்தாளே தவிர அவன் உதடுகள் ஏதோ தண்டனையைப் பெறும் நிலையில் உணர்ச்சியற்று
இருந்தது.
அதைக் கவனிக்கவே செய்த நாகதேவி, “படைத்தலைவரே! உமது பிடிவாதம் இன்னும் போகவில்லை. ஒரு பெண் வலுவில் வரும்போது உதறி எறிகிறாய் இதன் விளைவு” என்றாள்.
உபேந்திரன் கண்களில் மிதமிஞ்சிய வெறுப்பு தெரிந்தது. ‘ அடி விஷப்பாம்பே நீ பெண் என்று யார் சொன்னது? நீ ஒரு காமப்பிசாசு. உனக்குக் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம்கூட சரியாகத் தெரியாது. கட்டாயத்தினால் உத்தரவால்,
தண்டனை விதிப்பதால் காதலைப் பெற முடியாது, அதன் நியதியே தனி, அன்பு, தியாகம் இவற்றின் மீது கட்டப்படுகிறது” என்று வெறுப்புடன் சொன்ன உபேந்திரன், “போய் விடு. இங்கு என் அருகில் உட்காராதே. உன் அழகில் சில
சமயங்களில் மயங்கி இருக்கிறேன். அந்த மயக்கங் கூட இப்பொழுதில்லை. இந்த விடுதலை அளித்ததற்காக உனக்கு நன்றி செலுத்துகிறேன். போய்விடு” என்று வெறுப்பு குரலில் பூர்ணமாக ஒலிக்கப் பேசிய உபேந்திரன் மரக்கட்டை
போல் படுத்துக் கிடந்தான்.
நாகதேவி எழுந்தாள் கட்டிலைவிட்டு. அவனை உற்று நோக்கினாள் பல விநாடிகள். பிறகு தன் கையாலேயே அவன் கட்டுகளை அவிழ்த்தாள். அடுத்து சரசரவென்று அந்த அறையை விட்டு அகன்றாள். கதவு மீண்டும் காவலரால்
மூடப்பட்டது.
மூடப்பட்டக் கதவைப் பார்த்துக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்திருந்தான் உபேந்திரன் நீண்ட நேரம். பிறகு நாள் பூராவும் கட்டுப்பட்டுக் கிடந்ததால் மரத்துப் போயிருந்த கை கால்களுக்கு சுரணை வரவழைத்துக் கொள்ள கட்டிய
இடங்களைத் தனது கைகளால் மாறி மாறி உருவி விட்டுக் கொண்டான். பிறகு எழுந்து தரையில் நின்று அறையில் நடமாடினான். அடுத்து நாக தேவியால் அவிழ்க்கப்பட்டுத் தரையில் கிடந்த கயிறுகளைக் கையில் எடுத்துப் பார்த்தான்.
“நல்ல வலுவான நூல் கயிறுகள் இவை. இவற்றைப் பிணைத்து சாளரத்தில் கட்டிக் கடலில் இறங்கி நான் தப்பலாம். அதற்கு வழி கொடுத்திருக்கிறாள் நாகதேவி. ஏன்? காதலனைக் கட்டி வைக்க இஷ்டமில்லாததாலா? அல்லது தப்ப
இடங்கொடுத்து, தப்பும் சமயத்தில் பிடித்து அதை சாக்காக வைத்து ஒருவழியாக என்னை ஒழித்துக் கட்டவா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான், எந்த தந்திரத்துக்கும் தான் இடங் கொடுக்கக் கூடாதென்ற முடிவுக்கு வந்து
கட்டிலில் படுத்து உறங்க முற்பட்டான். இரவு ஓடிக் கொண்டிருந்தது. திடீரென ஒரு யோசனை தோன்றவே கட்டிலைவிட்டு எழுந்திருந்து அடிமேல் அடி வைத்து மெல்ல நடந்தான் வெளியே, கதவுக்கு வெளியே காவல் காத்து நின்ற இரு
மாலுமிகள் அவனைத் தடை செய்யவில்லை. அவன் சென்றபோது அவனைத் தொடரவும் இல்லை. இந்த மாற்றத்துக்குக் காரணம் புரியாத படைத்தலைவன் தளத்தை நோக்கிச் சென்றான். தளத்தில் இரண்டொரு மாலுமிகளைத் தவிர
யாருமில்லை. அங்கிருந்தபடியே தூரத்தில் பாழடைந்த புகாரை நோக்கினான். பரதவரின் கடற்கரையில் வழக்கம் போல் இல்லங்களில் சின்னஞ்சிறு விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன. பாழடைந்த கோட்டைச் சுவர்மீது அலைகள்
மோதிக் கொண்டிருந்தன. அவற்றை நோக்கிய படைத்தலைவன் பெருமூச்சு விட்டான். பகைவர் யாரும் புகமுடியாத வலுப்படைத்த காரணமாக புகார் எனும் பெயர் படைத்த, அந்த மாநகரின் வீழ்ச்சியைப் பார்த்த படைத்தலைவன்,
சீரழிவு எதற்கும் உண்டு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு “நானும் இப்பொழுது புகாரைப் போலத்தான்” என்று நொந்து கொண்டான். இப்படி நினைத்தவன் மரக்கலத்தின் பக்கப்பலகைக்கு அருகில் சென்று சாய்ந்து கடலை
நோக்கினான். அந்த இருட்டிலும் சின்னஞ்சிறு படகு ஒன்றில் பரதவன் ஒருவன் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.”இந்த நேரத்தில் இவன் எதற்காக மீன் பிடிக்கிறான்” என்று கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அந்தப்
படகு மரக்கலத்தை நோக்கி நகருவதைக் கண்டான். அதனால் சந்தேகம் கொண்ட படைத்தலைவன் எதையோ நினைத்துக்கொண்டு மரக்கலப் பலகையில் சாய்ந்து, “தேவி நாகதேவி” என்று அழைத்தான். கீழிருந்து நாகதேவியின் குரல்
ஒலித்தது. “யார் படைத் தலைவரா?” என்று.
“ஆம்” என்றான் படைத்தலைவன்.
“தளத்தில் என்ன செய்கிறீர்?”
“புகாரைப் பார்க்கிறேன்.”
“புகாரில் என்ன இருக்கிறது?”
“பழைய புகார் தெரிகிறது.”
“கனவு காண்கிறீர்களா?”
“ஆம். கனவில், இன்று இல்லாததை ஒரு காலத்தில் இருந்ததை, பார்க்கிறேன்.”
“நானும் கனவு தான் காண்கிறேன் அன்பரே!”
“நீயுமா?”
“ஆம். இன்றே இல்லாததை, கிடைக்காததைப் பற்றிக் கனவு காண்கிறேன். அது தவறா?” இதைத் தொடர்ந்து ஒரு பெருமூச்சு வந்தது.
“இரு தேவி உன் அறைக்கு வருகிறேன்” என்று கூறிய உபேந்திரன் கடலை ஒரு முறை உற்று நோக்கினான். அந்தச் சிறு படகு மரக்கலத் திசையை விட்டுச் சிறிது தெற்கே நகர்ந்து மீண்டும் மரக்கலத்தை நோக்கித் திரும்பியது. அதற்குப்
பிறகு அங்கு நிற்காத உபேந்திரன் தட தடவென்று வேகமாக நடந்து கீழ்த்தளம் வந்து நாகதேவியின் அறைக்குள் புகுந்தான்.
நாகதேவி புன்முறுவலுடன் அவனை வரவேற்றாள். “திடீர் திடீரென்று உங்கள் மனம் மாறுகிறது படைத்தலைவரே” என்று கூறவும் செய்தாள். தனது பஞ்சணையில் நகர்ந்து அவன் அமர இடமும் கொடுத்தாள். அதே சமயத்தில்
உபேந்திரன் கவனித்த சிறு படகு மரக்கலத்தின் இன்னொரு பகுதியை அணுகிக் கொண்டிருந்தது.

Previous articleNagadevi Ch 20 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 22 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here