Home Historical Novel Nagadevi Ch 22 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 22 | Nagadevi Sandilyan | TamilNovel.in

102
0
Nagadevi Ch 22 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 22 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 22 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 22. இருவர் நடிக்கலாம்

Nagadevi Ch 22 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவியின் விருப்பப்படி பஞ்சணையில் அவள் பக்கத்தில் அமர்ந்த நாகப்பட்டினத்தின் நாகர்கள் தலைவனும் ராஜேந்திர சோழ தேவரின் படைத்தலை வனுமான உபேந்திரன் அவள் தலையை இழுத்துத் தனது தோளின் மீது சாய்த்துக்
கொண்டான். அவன் தோள் மீது சாய்ந்த தனது தலையைப் புரட்டி அவன் கன்னத்தின் மீது இழைத்த நாகதேவி, இந்தப் பாசாங்கு எதற்கு படைததலைவரே?” என்று வினவினாள்.
படைத்தலைவன் அவள் தலையைத் தனது வலது கையால் நன்றாகத் தோளில் அழுத்திக் கொண்டு சற்று திரும்பி தனது முகவாய்க்கட்டையை அந்தத் தலைமீது வைத்துக் கொண்டபடி சொன்னான்: “நாகதேவி! பாசாங்குக்கும்
படைத்தலைவனுக்கும் வெகு தூரம் என்பதை இத்தனை நாள் நீ புரிந்து கொண்டிருக்க வேண்டும்” என்று.
அவன் முகவாய்க்கட்டை தனது தலைக்குழலில் பதிந்தது மிக இன்பமாக இருந்தது நாகதேவிக்கு. அவள் பஞ்சணையில் நகர்ந்து அவன் உடலின் பக்கப் பகுதியில் தனது உடலை இணைத்தாள். கீழே தொங்கிய அவள் காலொன்று
தொங்கலாடிய அவன் கால் ஒன்றைத் தடவியது. அந்தக் காலின் கட்டை விரலும் அதற்கடுத்த விரலும் அவன் காலின் கட்டை விரலுடன் பார முயன்றன. அந்த நிலையில் கேட்டாள் நாகதேவி, “படைத்தலைவரே, உங்களைப் பற்றி எதை
நம்புவது எதை நம்பக்கூடாது என்பதே எனக்குப் புரியவில்லை. என்னை மருதியாக நினைத்த சமயங்களில் என்னை நீங்கள் அணைத்த வேகத்தை நினைத்தால் இப் பொழுதுகூட என் மெய் சிலிர்க்கிறது. என்னை நாகதேவியாக
எண்ணிய சமயங்களில் நீங்கள் என்னைப் புறக்கணித்த முறையை நினைத்துப் பார்த்தால் என் தேகமும் என் மனமும் பதறுகின்றன. இதற்காக ஆயுள் முழுவதும் இந்த வேதனையைச் சகிக்க வேண்டுமா? நான் மருதியாகத்தான் உங்களிடம்
வாழ முடியுமா? எனக்கென்று தனி வாழ்க்கை சாத்தியமில்லையா?’, என்று இப்படிக் கேட்ட நாகதேவியின் நாசியிலிருந்து ஏக்கப் பெருமூச்சொன்று வெளிவந்தது.
உபேந்திரன் அவள் துன்பத்தைக் கவனிக்கவே செய்தான். அதன் விளைவாக உள்ளத்தே எழுந்த அனுதாபத்தால் தனது இடது கையால் அவள் இடையை வளைத்து அவள் பூவுடலைத் தன்னை நோக்கி இழுத்தான். அவன் கால்விரல்கள்
இரண்டு அவள் கால்விரல்களைக் கவ்வின. அவன் மேற்கொண்டு பேசவில்லை நீண்ட நேரம். ஏதோ நினைத் துக் கொண்டு அவளை விட்டு நீங்கிப் பஞ்சணையில் நகர்ந்து அவளுக்குப் பின்னால் படுத்துக் கொண்டான். “நாகதேவி!
அந்தக் கதவை மூடிவிட்டு வா” என்றும் சொன்னான்.
நாகதேவியின் கண்கள் வியப்பினால் மலர்ந்தன.”உண்மையாகவா படைத்தலைவரே? கதவை மூடி விட்டு வரட்டுமா?” என்று முணுமுணுத்தாள் அவள்.
“சொல்வது காதில் விழவில்லை?” சீறி வந்தன அவன் சொற்கள். –
நாகதேவி மெல்ல நகைத்தாள் ஒருமுறை. பிறகு கட்டிலை விட்டிறங்கி, கதவைத் தாழிட்டு வந்தாள். கட்டிலின் முகப்பில் அமர்ந்தவண்ணம் படுத்துக்கிடந்த படைத்தலைவனை மௌனமாக நோக்கினாள் பல விநாடிகள்.
படைத்தலைவரே!” என்று மெதுவாக அழைக்கவும் செய்தாள்.
“என்ன?”‘ படைத்தலைவன் பதில் கேள்வி முரட்டுத்தனமாயிருந்தது.
“நீங்கள்.”
“உம்?”
“நல்ல நடிகர்.”
“நடிகரா”
“ஆம். வேஷம் போடுகிரீர்.”
“என்ன வேஷமோ?”
“காதல் வேஷம்.”
அடுத்து நாகதேவி படைத்தலைவரின் முரட்டுப் பிடியிலிருந்தாள். அவளை இழுத்துத் தன்மீது தள்ளிக் கொண்டு இரு கைகளாலும் இறுக்கிய உபேந்திரன் அவள் இம்சைப்பட்டு தன்மீது நெளிவதைக் கண்டு, “ இப்பொழுது
எப்படியிருக்கிறது எனது நடிப்பு” என்று கேட்டான் மெதுவாக.
அவன்மீது நெளிந்து கொண்டே நெளிந்த நிலையில் தனது அங்க லாவண்யங்களை அவன்மீது இழைத்தவாறே ஆயாசப் பெருமூச்சு விட்டுக்கொண்ட வண்ணம், “இது மட்டும் சொப்பனமாயில்லாதிருந்தால், உண்மையாயிருந்தால்…”
என்று முணுமுணுத்தாள் நாகதேவி.
உபேந்திரன் கைகள் அவளை இறுக்குவதை நிறுத்தி முகத்துக்கருகில் உள்ளங்கைகள் வந்து அவளுடைய வழவழத்த இரு கன்னங்களையும் லேசாகப் பிடித்து அவள் முகத்தைத் தன் முகம் நோக்கிச் சாய்க்கத் தொடங்கின. அடுத்த
விநாடி அவன் உதடுகள் அவள் கன்னமொன்றிலும் கழுத்திலும் புதைந்தன. கழுத்தில் புதைந்த உதடுகள் அங்கேயே அழுந்திப் புரண்டன. அடுத்து சற்றுக் கீழேயும் இறங்க முற்பட்டன.
நாகதேவி காமத்தின் பூரணமான பிடியில் இருந்தாள். அவள் அவனைத் தடை ஏதும் செய்யவில்லை. அவள் கமலக் கண்கன் மூடிக் கிடந்தன. ஏதோ பெரும் சொப்பனத்தில் இருப்பது போன்ற பிரமையின் சாயை வதனத்தில் விரவிக்
கிடந்தது. அப்படியே அவள் நெளிந்தாள் அவன் உடல் மீது, சர்ப்பம் நெளிவது போல. அப்படி அவள் ஊர்ந்து, நெளிந்தது. அவ்வப் பொழுது விட்டு விட்டு இழைந்தது. எல்லாமே இன்ப மாயிருந்ததால் உபேந்திரனும் பெருமூச்சு விட்டான்.
அதுவரை நடித்த நாடகம் ஊட்டிய உணர்ச்சிகள் நாடகத்தை உண்மையாகச் செய்து விட்டதால் உபேந்திரன் உணர்ச்சிவசமானான். அவன் மனக்கண்ணிலிருந்து புகார் மறைந்தது. தனித்து வந்த படகு மறைந்தது. உலகமே மறைந்தது.
தெரிந்தது நாகதேவியின் மலர் உடல் ஒன்றுதான்.
அந்த எண்ணங்களால் தன்மீது கிடந்த நாகதேவியைத் தனது இரு கைகளாலும் சிறிது தூக்கிப் பிடித்தான். அவன் கண்களுக்கெதிரே எழுந்தது அவள் அழகிய மார்பகம். சேலை நழுவிவிட்டதால் கச்சையைத் திமிற முயன்ற
இருமொட்டுகள் அவனை நோக்கின. ‘தண்டில் துளிரில், மொட்டுகள் விடுவதுண்டு. ஆனால் மலரில் மொட்டுகள் விளைவதைக் கேட்டதில்லை’ என்று நினைத்த உபேந்திரன் நாகதேவி ஓர் அற்புதம் என்று உள்ளுர சொல்லிக்
கொண்டான். பிறகு அவன் நினைக்கும் சக்தியை இழந்தான். அவன் முகம் அவள் மார்பின் நடுவில் புதைந்து மொட்டுகளில் மறைந்தது.
மறைந்த முகத்தின் காரணமாக நிறைந்த மோகம் அவன் உணர்ச்சிகளை உச்சிக்குக் கொண்டு சென்றது. அவள் மலர் மொட்டுகள் அவன் கன்னங்களின் இரு புறமும் அழுந்திக் கிடந்தன. இடைவெளி விட்டு விட்டு இழையவும்
செய்தன. வேறு ஏதோ உலகத்தில் இருந்தான் உபேந்திரன், சொர்க்கம் என்றால் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த சமயத்தில் அவன் கண்கள் மூடிக் கிடந்தன. நாகதேவி அவன் உடல் மீதிருந்து அகன்று பக்கத்தில்
படுத்துக் கொண்டாள். ஆனால் சரசம் எதிலும் ஈடுபடவில்லை அவள். அவன் கையொன்றை மட்டும் எடுத்து மார்பில் வைத்துக் கொண்டாள். உபேந்திரன் அவளை நோக்கித் திரும்பிப் படுத்து “தேவி” என்று மெதுவாக அழைத்தான்.
“என்ன?’ என்று அவளும் மெதுவாகக் கேட்டாள்.
“இப்படித் திரும்பு” என்ற அவன் மல்லாந்து கிடந்த அவளை தன்னை நோக்கிப் புரட்ட முயன்றான்.
திரும்பவில்லை அவள். “என்ன தேவி” என்று குரலில் சிறிது சீற்றத்தைக் காட்டினான் உபேந்திரன்.
“என்ன தலைவரே!”
“ஏன் திரும்ப மறுக்கிறாய்?”
“எதற்காகத் திரும்ப வேண்டும்?”
“என்ன பைத்தியக்காரக் கேள்வி இது?”
“இந்த நிலையே பைத்திய நிலை தான்…”
“அதன் பூர்த்தி?”
“உங்கள் கைகளில் இருக்கிறது” என்ற நாகதேவி தனது அறையின் கூரையை நோக்கினாள். அங்கிருந்த ஒரு சிறிய கண்ணாடியில் உபேந்திரன் முகத்தை ஆராய்ந்தாள். அவன் முகத்தில் பூர்ண திருப்தி மண்டிக் கிடந்தது. அதில் தெரிந்த
அவள் தலையின் நாகா பரணத்தின் முகப்பும் அவள் தலையின் அசைப்பால் சிறிது அசைந்தது அந்த மூன்று தலைகளின் பார்வையில் ஏதோ செய்தி இருப்பதாக அவளுக்குத் தோன்றியதால், “அன்பரே?” என்று அவள் அழைத்தாள்,
“என்ன தேவி” என்று வினவினான் உபேந்திரன்.
“கதவை சிறிது திறவுங்கள்’ என்றாள் நாகதேவி.
உபேந்திரன் கட்டிலிலிருந்து எழுந்தான் சந்தேகத்துடன். பிறகு சென்று கதவைத் திறந்தான். அங்கு யாருமில்லாததால் திரும்பி வந்து, “எதற்காகக் கதவைத் திறக்கச் சொன்னாய்?” என்று வினவினான்.
“உங்கள் அறைக்குப் போகலாம்.” படுத்தபடி உத்தரவிட்டாள் நாகதேவி.
“ஏன் இந்த மாற்றம்?”
“நமது நாகர் குல முறைப்படி திருமணமாகுமட்டும் இப்படி நாம் சேருவது தவறு. உங்களுக்கே தெரியும்!”
அவள் சொன்னதில் தவறில்லையென்பது உபேந்திரனுக்குத் தெரிந்தேயிருந்தாலும், ‘இத்தனை நாழி என் சரசத்தை அவள் ஏன் ஏற்று கொண்டாள்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அறையை விட்டு அவன் செல்லுமுன்பு
கட்டிலில் கிடந்த அவளை நோக்கினான். அவள் கண்கள் அவனை நோக்கி நகைத்தன. அதற்குக் காரணம் புரியாததால் குழப்பத்துடன் தனது அறையை நோக்கி நடக்க முற்பட்டான். அவன் மறைந்ததும் நாகதேவி மும்முறை நகைத்தாள்.
“நடிக்க இருவராலும் முடியும்” என்று சொல்லிக் கொண்டாள் மெதுவாக.
அதன் உண்மையை உபேந்திரன் தனது அறைக்குச் சென்றதும் புரிந்து கொண்டான். அவன் அறையில் எல்லன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் கவலை மண்டிக் கிடந்தது. “என்ன எல்லா?” என்று வினவினான் உபேந்திரன்.
“நான் வந்த படகு அகற்றப்பட்டுவிட்டது” என்று அறிவித்தான் எல்லன்.

Previous articleNagadevi Ch 21 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 23 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here