Home Historical Novel Nagadevi Ch 24 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 24 | Nagadevi Sandilyan | TamilNovel.in

64
0
Nagadevi Ch 24 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 24 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 24 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 24. குருநாதர் சரசம்

Nagadevi Ch 24 | Nagadevi Sandilyan | TamilNovel.in

உபேந்திரன் உத்தரவுப்படி நீர் மட்டத்திலிருந்து தளத்துக்கு ஏறி வந்த எல்லன் நாகதேவி உல்லாசமாக எசமான் தோள் மீது தலை வைத்துப் படுத்திருந்ததை ரசிக்கவில்லையென்பதைத் தனது பார்வையாலேயே காட்டினாலும் நாகதேவி
அதைப் பொருட்படுத்தினாளில்லை. “நாளை புகார் சங்ககாலத்துக்குச் செல்லும்” என்று அவள் ஊட்டிய உற்சாகத்தை எல்லனும் லட்சியம் செய்தானில்லை. எசமான், நாகதேவி, இருவரை யுமே கோபத்துடன் பார்த்துவிட்டுத்
தடதடவென்று கீழ்த்தளத்துக்குச் செல்லும் படிகளில் இறங்கிச் சென்றான். எசமான் அறையை அடைந்ததும் தன்னால் தாக்கப்பட்டு சுரணையற்றுக் கிடந்த இரு சாவக மாலுமிகளையும் இரு கைகளாலும் தூக்கிப் பிடித்து நிறுத்தி ஓர்
உலுக்கு உலுக்கினான். அதனால் சிறிது கண் விழித்த மாலுமிகளை நோக்கி, “உங்கள் அறைக்கோ, நீங்கள் பணிபுரியும் இடத்திற்கோ செல்லுங்கள்” என்று உத்தரவிட, மாலுமிகளில் ஒருவன் கேட்டான். “நாங்கள் எங்கிருக்கிறோம்?”
என்று. “ஆம் ஆம் சொல்லுங்கள். எங்கிருக்கிறோம்?” என்று இன்னொருவனும் கலந்து கொண்டான்.
“சொர்க்கத்துக்காவது நரகத்துக்காவது அனுப்பிவிடத்தான் இருந்தேன். எசமான் கோபித்துக் கொள்வாரென்று விட்டுவிட்டேன்” என்று கூறிய எல்லன், அட சனியன்களா! போய் வாருங்கள்” என்றான்.
அவர்கள் நகரவில்லை. “சனியன்கள் என்று எங்களை அழைக்கக்கூடாது” என்றான் ஒரு மாலுமி.
“எங்கள் மதத்தில் சனி கிடையாது” என்றான் இன்னொருவன்.
அவர்கள் காட்டிய மதபக்தியால் எரிச்சலுண்டாகவே “சரி! சரி! மூதேவிகளா! போங்கள் வெளியே, என் கண் முன்னால் நிற்காதீர்கள்” என்றான் எல்லன்.
“மூதேவி என்று புராணங்களில் உண்டு. அதை நாங்கள் நம்பவில்லை” என்றான் முதல் மாலுமி.
“ஆகவே அதையும் நாங்கள் நம்ப முடியாது” என்றான் இரண்டாவது மாலுமி.
எல்லன் பொறுமையிழந்தான். ஆகையால் மேற்கொண்டு பேசுவதை நிறுத்தி முதலில் அவர்களை அடித்த மரக்கட்டையை அறை மூலையிலிருந்து கையில் எடுத்துக் கொண்டு, “இதை நம்புகிறீர்களா இல்லையா?” என்று வினவவே
இரு மாலுமிகளும் அந்த இடத்தில் நிற்கவில்லை.
அவர்கள் சென்றதும் தீவிர சிந்தனையில் இறங்கினான் எல்லன். இந்த மரக்கலத்திலிருந்து எசமானோ தானோ எப்படித் தப்புவது என்று யோசிக்கலானான். இரவு நன்றாக முற்றியதால் அலைகள் பெரிதாக எழுந்து மரக்கலத்தைத்
தாக்கிக் கொண்டிருந்தன. அவற்றின் பேய் இரைச்சல் பயங்கரமான சூழ்நிலையை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. இந்த அலையில் அவனால் நீந்த முடியும். நீந்த கடலில் இறங்க வேண்டும். தன்னை அந்த மரக்கலத்தின் ஒவ்வொரு
மாலுமியும் கவனிக்கிறானென்பதை அவன் உணர்ந்திருந்ததால் அது முடியாதென்பதைப் புரிந்து கொண்டான். படகும் நாகதேவியின் வசத்திலிருப்பதால் அதுவும் பயன்படாது கரையை அடைய என்பதும் வெட்ட வெளிச்சமாயிருந்தது.
“ஒரே ஒரு வழி உண்டு. நாகதேவியைக் கொன்று போடலாம். அதற்கு எசமானர் ஒப்பமாட்டார். அவரே அவள் மையலில் கட்டுண்டிருக்கிறார்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். எதற்கும் கப்பலில் அரவம் அடங்கட்டும் என்று
காத்திருந்தான்.
அரவம் அடுத்த இரண்டு நாழிகைகளில் அடங்கி விட்டது. தளத்தில் காவல் புரிந்த ஒரே ஒரு மாலுமியின் நடையைத் தவிர வேறெந்த ஒலியும் கேட்கவில்லை மரக்கலத்தில். சற்று நிதானித்துவிட்டு எசமான் அறையைவிட்டுக் கிளம்பினான்
எல்லன். கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டியதும் நேர்எதிர் அறைக்குள் நாகதேவியைத் தூக்கிக் கொண்டு எசமான் நுழைவதைக் கண்டான். அடுத்த நிமிடம் அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்த படைத்தலைவன், தான்
இருந்த அறையிலிருந்து இரண்டு அறைகள் தள்ளியிருந்த ஓர் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டதைக் கண்டான். அந்த அறையில் யார் இருக்கிறார்களென்பதை அறிய அந்தஅறையை நோக்கி பூனைபோல் நடந்து அறைக்
கதவை மெதுவாகத் திறந்தான்.
மிக மந்தமான வெளிச்சம் அறைக்கோடியின் சிறு விளக்கிலிருந்து வீசிக் கொண்டிருந்தாலும், இருட்டுக்கு பழக்கப்பட்டுவிட்ட எல்லன் கண்களுக்கு உள்ளே இருந்த காட்சி விவரமாகத் தெரிந்தது. எசமான் அங்கிருந்த பஞ்சணையில்
படுத்திருந்த மருதியின் கன்னத்தில் இதழ்களை இழைத்துக் கொண்டிருப்பதை கண்ட எல்லன் திரும்பிச் செல்ல முயன்ற சமயத்தில் எசமான் எழுந்து விட்டதையும் மருதியைக் கைகளில் தூக்கிக் கொண்டு விட்டதையும் கவனித்தான்.
“இப்பொழுதுதான் அவளைத் தூக்கிச் சென்றார். இப்பொழுது இவளைத் தூக்குகிறார். இரவு முழுவதும் பெண்களைத் தூக்கும் வேலையே இவருக்கு சரியாயிருக்கும் போலிருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட. எல்லன்,
திரும்பிச் செல்லும் முன்பாக “எல்லா…” என்று மிக மெதுவாக அழைத்தான் படைத்தலைவன்.
எந்த அரவமும் செய்யாமல் தான் வந்தும் தனது வரவை எசமான் புரிந்து கொண்டதை உணர்ந்த எல்லன் பிரமை பிடித்து, “எசமான்! தங்களைத் தொடரும் உத்தேசம் எனக்கில்லை” என்றான்.
“தொடர்ந்தால் பாதகமில்லை, நாளை இரவுக்குள் நாம் மருதியை நாகதேவியின் பிடியிலிருந்து அகற்றாவிட்டால் மருதி பிழைப்பது கஷ்டம்” என்று சொன்ன படைத்தலைவன், “எல்லா! இவளை நமது அறைக்கு எடுத்துச் செல்கிறேன்.
இவள் இடத்தில் நீ படுத்திரு. நடக்கும் விஷயத்தை காலையில் சொல்” என்று உத்தர விட்டான்.
எல்லன் தனது பெரிய மீசையைத் தடவிவிட்டுக் கொண்டு புன்முறுவல் செய்தான். “அதனால் பாதகமில்லை. உன் முகத்தை யாரும் திறந்து பார்க்கப் போவதில்லை” என்று சுட்டிக் காட்டிய படைத்தலைவன் “படுக்கையில் படுத்து
உடல் முழுவதையும் போர்த்திக் கொள், யார் எது சொன்னாலும் செய்தாலும் அசங்காதே. நிலைமை மீறினால் உசிதப்படி நட, சகலத்தையும் அரைக்கண்ணால் கவனித்துக் கொண்டிரு” என்று கூறிவிட்டு மருதியைத் தூக்கிக் கொண்டு
வெளியே சென்று விட்டான்.
எசமான் சொற்படி எல்லன் பஞ்சணையில் படுத்துக்கொண்டு நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டான். பிறகு போர்வையை எடுத்து தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டான். போர்த்த நிலையில் கண்களுக்கு மட்டும்
சிறிது இடம் விட்டுக்கொண்டான். பிறகு ஏதோ யோசித்து “என்ன மடத்தனம் பெண்கள் இப்படி காலை நீட்டிக் கொண்டு படுக்கமாட்டார்கள்” என்று தன்னைக் கடிந்து கொண்டு கால்களை முடக்கி அடக்கமாகப் படுத்தான்.
நாழிகைகள் ஓடின. எதுவுமே நடக்கவில்லை. ‘எசமானுக்கு வீண் பிரமை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நித்திரை கண்ணைச் சுழற்றவே சிறிது கண் அயர முற்பட்ட சமயத்தில் வெளியே மெல்ல மெல்ல யாரோ நடக்கும் காலடி
ஓசை கேட்டது. அதனால் தலையை நன்றாகப் போர்த்தி உறங்குவது போல் பாசாங்கு செய்து கண்களிலிருந்த இடத்தில் மட்டும் போர்வையைச் சிறிது விலக்கி வருவது யாரென்பதைக் கவனித்தான்.
மெல்ல மெல்ல பூனைபோல் நடந்து வந்து அறைக் கதவைத் திறந்தவர் சற்று அறை வாயிற்படியிலேயே நின்றார். அப்படி நின்றவர் குருநாதர் என்பதை அறிந்ததும் திகிலின் வசப்பட்ட எல்லன் பேசாமல் கட்டை போல் கிடந்தான்
கட்டிலில். உள்ளே வந்ததும் குரு நாதர் அறைக் கதவை மெதுவாகச் சாத்தினார். பிறகு அடி மேலடி எடுத்து வைத்து நடந்து கட்டிலின் அருகில் வந்ததும் கட்டிலை சில விநாடிகள் உற்று நோக்கிக் கொண்டு நின்றார். மருதி! நீ மிகவும் நல்ல
பெண். ஆனால் தகாத இடத்தில் உன் மனத்தை அடகு வைத்தாய். படைத்தலைவனை நீ மறந்துவிட்டால் இந்த மயக்க நிலையும் மாறும். நல்ல வாழ்வும் கிடைக் கும்” என்றார்.
கட்டிலில் படுத்திருந்த உருவத்திடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. பதிலை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. ஒருமுறை எல்லன்மீது கையை வைத்து அசச்கிப் பார்த்து விட்டு, “பாவம் கட்டைபோல் கிடக்கிறாள். எழுந்தாலும் என்ன
பயன், சுயபுத்தி முழுதும் வராது மாற்று மருந்து கொடுத்தாலொழிய. மாற்று மருந்து கொடுக்கக்கூடியவர் மொத்தம் மூன்று பேர். நான் ஒருவன். நாகதேவி இன்னொருத்தி, மூன்றாமவன் புகாரில் இருக்கிறவன். பரதவர்களின்
மருத்துவன். ஆனால் அவனை எப்படி அண்ட முடியும்?” என்று கூறிய சுத்ததத்தர் பெருமூச்செறிந்தார். “எல்லாம் போதிசத்வர் நியமனம்” என்று கூறினார்.
சுத்ததத்தர் தமது அயோக்கியத்தனத்துக்குப் பழியை போதிசத்வர்மீது சுமத்துவதை உணர்த்த எல்லன் சிறிது எரிச்சல் கொண்டான். “புத்த மதமும் வேத மதந்தானே! மற்ற பக்தர்கள் முருகன் நாராயணன் என்று சில தெய்வங்களைத்
தங்கள் ஊழல்களுக்குத் துணைக்கழைப்பது போல் இவரும் போதி சத்வரை அழைக்கிறார்” என்று உள்ளுர எல்லன் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் குருநாதர் அறையின் ஒரு மூலைக்குச் சென்று அங்கிருந்த பெரிய
மரப்பெட்டியொன்றைத் திறந்தார், அதிலிருந்து மண்ணால் செய்த குப்பியொன்றை எடுத்தார். அதைச் சிறிது முகர்ந்து சட்டென்று தமது பெரிய முக்கை அகற்றி தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டார். பிறகு தமது குடமிளகாய்
மூக்கை இரு முறை ஊதினார் பலமாக. அடுத்து அந்தக் குப்பியை கட்டிலுக்காக நீட்டி, மருதி! இதோ இருக்கிறது உன் மாற்றுமருந்து. அருகில் இருக்கும் ரசாயனம் உனக்கோ உபேந்திரனுக்கோ எப்படித் தெரியப் போகிறது?” என்று
சொல்லிப் புன்முறுவல் கொண்ட சுத்ததத்தர், “எதற்கும் உன் தாது எப்படியிருக்கிறது பார்க்கிறேன்” என்று கூறிக் கொண்டு குப்பியை மரப்பெட்டியில் பத்திரப்படுத்தி விட்டுக் கட்டிலை நோக்கி வந்தார்.
கட்டிலுக்கு அருகே சிறிது நேரம் நின்றதும் மெள்ள போர்வையை அகற்ற முயன்றார். அதை இழுத்து எல்லன் மூடிக்கொள்ளவே “மருதி பண்புள்ள தமிழ் மகள். மயக்கத்திலும் நாணத்தை விட்டாளில்லை. இயற்கையிலேயே அது
இருக்கிறது இவளிடம்” என்று பாராட்டிவிட்டு மெதுவாகப் போர்வையைச் சிறிது அகற்றி அதற்குள் கையை விட்டார். எல்லனும் அவர் கையை நாடி தன் கையை நீட்டினான். சுத்ததத்தர் அந்த கையின் நாடியை சோதித்தார் தமது விரல்
களால். “தாது பலமாயிருக்கிறது! மயக்கமாயிருப்பவளுக்கு இத்தனை உரமான தாது ஏது?” என்று வினவிக் கொண்டார் சற்று இரைந்து. பிறகு சுடுகையைப் பரி சோதிக்க கன்னமிருந்த இடத்தை நாடி கையை வைத்தார். எல்லன் பெருமீசை
கையைத் தடவவே, “கன்னத்தில் என்ன தேங்காய் நாரை வைத்துக் கொண்டிருக்கிறாள்? ஏதாவது பத்து போடும்போது தானே பஞ் சையோ நாரையோ வைப்பது வழக்கம்?” இவளுக்கு வேறு யாராவது சிகிச்சை செய்திருக்கிறார்களா
என்று கேட்டார் சற்று பலமாக.
அந்த சமயத்தில் அவர் முற்றும் எதிர்பாராதது நடந்தது. மெல்ல போர்வைக்குள்ளிருந்த கையொன்று அவரை போர்வையோடு இழுத்தது. “சே மருதி! இதென்ன விளையாட்டு? நான் படைத்தலைவனில்லை” என்று வெட்கத்துடன்
சொல்லிக் கொண்டு விலக முயன்றார். பிடித்த கை அவரை விடவில்லை. அடி பைத்தியமே! விடு என்னை, நான் துறவி” என்று தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றார்.
போர்வைக்குள்ளிருந்த ஆண் மருதி விடவில்லை அவரை. நன்றாக இழுத்துப் போர்வைமீது கிடத்திக் கொண்டது. அடுத்த விநாடி இரும்புப் பிடியில் இருந்தார் சுத்ததத்தர். “சரசத்துக்குத் துறவி லாயக்கில்லை. என் துறவறம் என்ன
ஆவது?” என்று மனம் வெதும் பிய குருநாதரை போர்வைக்குள்ளிருந்த கைகள் வளைத்தன. இரும்பு வளையத்துக்குள் சிக்கிய சுத்ததத்தர், “காமம் வந்தால் பெண்களுக்குப் பிசாசு பலம் வரும் போலிருக்கிறது” என்று கூறிக்கொண்டு
தப்ப முயன்றார். முடியவில்லை. அவரைச் சுற்றியிருந்த கைகள் இறுக்கின அவரை மேலும். சுத்ததத்தருக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. அந்த சமயத்தில் அறைவாசலிலிருந்து உபேந்திரன் குரல் ஒலித்தது. குருநாதரே இதென்ன?”
என்று.

Previous articleNagadevi Ch 23 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 25 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here