Home Historical Novel Nagadevi Ch 26 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 26 | Nagadevi Sandilyan | TamilNovel.in

75
0
Nagadevi Ch 26 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 26 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 26 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 26. இருவர் கனவு

Nagadevi Ch 26 | Nagadevi Sandilyan | TamilNovel.in

கட்டிலில் படுத்திருந்த மருதி தமது உதவி இல்லாமலேயே கண்களைத் திறந்ததையும் அந்தக் கண்கள் தம்மைப் பார்த்து நகைத்ததையும் கண்டவுடன், கட்டிலில் கிடந்தது மருதியல்லவென்பதை உணர்ந்து கொண்டதால் குருநாதர் அந்த
அறையை விட்டு ஓட எண்ணினாலும் அவர் முயற்சி பலன் தரவில்லை. அவர் கால்கள் நகரவும் மறுத்தன. எந்த நிலையிலும் தன்னைச் சமாளித்துக் கொள்ளும் திறன் வாய்ந்த சுத்ததத்தர் சட்டென்று மருந்துக் குப்பியைக் கையில்
எடுத்துக் கொண்டு போலி மருதியை நோக்கிக் குனிந்து அதிலிருந்த மருந்துத்துளிகளில் சிலவற்றைப் படுத்திருந்தவள் கன்னங்களில் கொட்டிவிட்டார். நான் கைந்து துளிகளை பஞ்சணை விரிப்பிலும் விழும்படி செய்தார். பிறகு
மருந்துக் குப்பியுடன் எழுந்து நின்று, “உபேந்திரா! நீ மட்டும் இப்படி வா” என்று அழைத்தார்.
ஆவலுடன் கட்டிலை அணுகிய உபேந்திரனை நோக்கி, “இன்னும் சில விநாடிகளில் மருதி கண் விழிப்பாள். அவள் விழித்ததும் அதிர்ச்சியாக ஏதாவது பேசி விடாதே. அவளுக்குச் சுரணை பூர்த்தியாக வர அவகாசம் கொடு” என்றார்,
புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் உபேந்திரன்.
“நான் மருந்தை உட்புகட்டும்போது சில துளிகள் இவள் கன்னத்திலும் படுக்கை விரிப்பிலும் பட்டுவிட்டன! அவற்றைத் துடைத்து விடு” என்றும் சொல்லிவிட்டு குப்பியைப் பழையபடி பெட்டியில் வைத்து விட்டு அந்த அறையை
விட்டு நகர முற்பட்டார்.
“எல்லா! குருநாதருடன் நீயும் போ. அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்” என்று எல்லனையும் குருநாதருடன் அனுப்பிவிட்ட உபேந்திரன் அவர்கள் சென்றதும் அறைக்கதவை தாளிட்டுத் திரும்பினான் கட்டிலுக்கு. போலி
மருதியைத் தன்னை நோக்கிப் புரட்டி அவள் அழகிய உடலைத் தன் மார்பு மீது சாத்திக்கொண்டு மருந்துத் துளிகள் பட்டிருந்த பஞ்சணை விரிப்பை எடுத்து கட்டிலின் ஒரு மூலைக்குத் தள்ளினான். மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து
போலி மருதியின் முகத்தை நீண்ட நேரம் உற்று நோக்கினான். வறண்ட ஒரு புன்முறுவலைத் தனது இதழ்களில் படரவிட்டுக் கொண்டு அவள் அழகிய கன்னத்தில் வழிந்திருந்த மருந்துத் துளிகளை அவள் சேலை முந்தானையால்
துடைத்தான். மறுபடியும் அவளைப் பஞ்சணையில் கிடத்தி தானும் பக்கத்தில் உட்கார்ந்து அவள் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல அவள் தனது விழிகளை அகலத் திறந்தாள். “உம்…” என்ற ஆயாச ஒலி
எழுப்பிப் பெருமூச்சும் விட்டாள்.
“அசைய வேண்டாம். அப்படியே படுத்திரு” என்று கூறி அவளுடைய கைகளிலொன்றை எடுத்துத் தனது கையில் வைத்துக்கொண்டு இன்னொரு கையை அவள் அழகிய மார்புமீது போட்டான். அவள் மெல்ல நெகிழ்ந்தாள்
பஞ்சணையில். பிறகு அவனை நோக்கித் திரும்பி தனது கையால் அவன் இடுப்பை வளைத்தாள். அப்படி அவள் திரும்பியதன் விளைவாக அவள் மார்பு மீதிருந்த கை அவன் உடலுக்கும் அவள் உடலுக்கும் இடையே அகப்பட்டுக்
கொண்டதால் மார்புமீது கை சற்று அதிகமாகவே அழுந்தத் தொடங்கியது.
இந்த நிலையில் அவன் இருந்தது சாதாரண சமயமாயிருந்தால் உபேந்திரன் உணர்ச்சிகளுக்குப் பெரிதும் இடம் கொடுத்திருப்பான். கையில் அழுந்திய கடினமான இளம் மார்பு ஒன்றே அவனை நிலைகுலையச் செய்திருக்கும். ஆனால்
அன்று உபேந்திரன் உணர்ச்சி களை இழந்த வெறும் கட்டையாக இருந்தான். மீண்டும் அவள் உணர்ச்சிப் பெருமூச்சு விட்டாள். “நான் எங்கிருக்கிறேன்?” என்றும் கேட்டாள் சொப்பனத்தில் பேசுபவள் போல்.
“கவலைப்படாதே. இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறாய் அதிகமாக அலட்டிக்கொள்ளாதே. இன்னும் பூர்ண தெம்பு வரவில்லை உனக்கு” என்று எச்சரித்த உபேந்திரன் அவள் உடலைப் புரட்டி பஞ்சணையில் சரியாகப் படுக்க
வைத்தான்.
அவள் மலர்க் கண்கள் மலர்ந்து கிடந்தன. இதழ்களில் புன்முறுவலொன்று அரும்பிக் கிடந்தது. கண்களை நாற்புறமும் சுழலவிட்டாள் ஒரு விநாடி. பிறகு சொன்னாள், “அன்பரே! நான் இத்தனை நேரம் ஏதோ சொப்பன உலகத்தில்
இருந்தேன்” என்றாள்.
“நானும் அப்படித்தான் இருந்தேன்” என்றான் படைத்தலைவனும்.
“நீங்களா!” என்று கேட்டாள் அவள் வியப்புடன்.
“ஆம்.”
“உங்களுக்கென்ன சொப்பனம்?”
“உன் சொப்பனத்தை முதலில் சொல். பிறகு என் சொப்பனத்தைச் சொல்கிறேன்.”
“அவள் துவங்கினாள் “ நான்… நான்” என்று.
“தைரியமாகச் சொல்” அவன் ஊக்கினான்.
“நான் படுத்திருந்தபோது அந்த மாயக்காரி இருக்கிறாளே அவள் என் கட்டிலுக்கு அருகில் வந்தாள்…”
“உம்.”
“என் வாயில் ஏதோ சில துளிகளைப் புகட்டினாள்.”
“உம்.”
“பிறகு நான் வேறு உலகத்தில் இருந்தேன்.”
“அந்த உலகம் எப்படி இருந்தது?”
“எங்கும் ஒரே பர தவர். பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள் நாகதேவிக்கு. விருந்து நடந்தது நாள் முழுதும், இரவில் அந்தப் பழைய பரதவர் நடனம். அவளும் அதில் சேர்ந்து ஆடினாள். எத்தனை அழகாக ஆடினாள் தெரியுமா?”
இங்கு சிறிது நிறுத்தினாள் அவள்.
“மேலே சொல்” என்றான் அவன்.
“அதற்குப்பின் அவள் களைத்து சாய்ந்தாள். அவளுடன் நீங்களும் ஆடிக் கொண்டிருந்தீர்கள்…” என்று தொடர்ந்தாள் அவள்.
“நானா?”
“ஆம் நீங்களேதான். பெரும் மயக்கத்திலிருந்தீர்கள் அவளிடம். களைத்துச் சாய்ந்த அவளை நீங்கள் தாங்கிப் பிடித்தீர்கள்…”
“சொப்பனம் நன்றாயிருக்கிறது”
“ஆம் தாங்கிப் பிடித்தீர்கள். பிறகு அவளைத் தூக்கிக் கொண்டு அந்தக் கூட்டத்திலிருந்து அகன்றீர்கள்… அங்கிருந்த கடல் நீர் தரையில் மோதிய இடத்துக்கு வந்து அலை நீரை எடுத்து அவள் முகத்தில் அடித்தீர்கள். அவளைக்
கைகளில் தாங்கியபடி.” இந்த இடத்தில் அவள் சிறிது நிதானித்தாள்.
“சொல் மேலே” – அவன் குரல் கடுமையாக ஒலித்தது.
“அவள் கண் விழித்தாள். அவளை வெறியுடன் நோக்கினீர்கள். அவள் இதழ்களுடன் உங்கள் இதழ்களை இழைத்தீர்கள். பிறகு அவள் மார்புச் சேலையை நீக்கி…’“ இதற்குமேல் பேசவில்லை அவள்.
உபேந்திரன் பேச முற்பட்டு, “ இதற்குமேல் நீ சொல்ல வேண்டியது ஏதுமில்லை. பேச வேண்டியது நான். இங்குதான் என் சொப்பனம் தொடர்கிறது” என்றான்.
“உங்கள் சொப்பனமா?”
“ஆம். அதையும் கேள்.”
“சொல்லுங்கள்.” ஆவல் இருந்தது அவள் குரலில்.
“முகத்தில் நீரடித்து மார்பில் கையை வைத்தேன். நீ நினைக்கிறபடி சரசத்துக்காக அல்ல. இதயத் துடிப்பைப் பார்ப்பதற்காக” என்று அவன் புன்முறுவல் செய்தான்.
“புரிகிறது” என்றாள் அவள். புன்முறுவலும் செய்தாள்.
“உண்மையாக இதயத் துடிப்பைப் பார்க்கத்தான் கையை வைத்தேன். அவள் மயக்கமாய் சாய்ந்து விட்டாளல்லவா? இருதயம் பழைய பலத்தை அடைந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டான் படைத்தலைவன்.
“ஆம் ஆம். பார்க்க வேண்டும். மறந்துவிட்டேன் அந்த நிலையை.”
“மறதி சகஜம் தான் மயக்க நிலையில்” என்ற உபேந்திரன் மேலும் சொல்லத் தொடங்கி, “மார்பைப் பார்த்தேனா?” என்று கேள்வியைத் தொடுத்தான்.
இதைக் கேட்ட அவள் நகைத்தாள். “எனக்கெப்படித் தெரியும்!” என்றும் குழைந்தாள்.
“பச்சைக் குழந்தை உனக்கெப்படித் தெரியும்” என்று நகைத்தான் அவன். மேலும் சொன்னான், “இதயத் துடிப்பைப் பார்த்தேன் அதில் சிறிது பட படப்பு இருக்கத்தான் செய்தது. மெல்ல வருடினேன் அவள் மார்பை” என்று.
படுக்கையிலிருந்தவள் இதைக் கேட்டதும் சற்று புரண்டாள். அவள் மார்பு படபடத்தது. “சரி; சொல்லுங்கள்” என்றாள் படபடப்புடன்.
“அவளைச் சொற்களால் ஆசுவாசப்படுத்தினேன். முதலில் அவள் கேட்கவில்லை. பிறகு அவள் அழகிய தொடையில் கையை வைத்தேன்.”
“என்ன!”
“தொடையில் கையை வைத்தேன்.”
“எதற்கு?”
“கால்களை வருடிக் கொடுக்க”
“ஓகோ !”
“வேறு எதற்கென்று நினைத்தாய்?”
“ஒன்றுமில்லை, சொல்லுங்கள்.”
“கால்களை வருடிக் கொடுத்தேன்…”
“உம். அதைத்தான் சொல்லிவிட்டீர்களே!”
“பிறகு முதுகை வருடினேன்.”
“அவள் சுயநிலைக்கு வந்துவிட்டாள் அவ்வளவு தானே?’
“இன்னும் முடியவில்லை” என்றான் அவன்.
“கதையா?” என்று வியப்புடன் கேட்டாள்…
“என் சொப்பனத்தைத்தானே சொல்கிறேன். அது கதையில்லாமல் வேறு எப்படியிருக்க முடியும்?”
“வேறு எப்படியும் இருக்க முடியாது.”.
“முதுகைத் தடவிக் கொடுத்தேன். பிறகு அவள் உதடுகளில் இப்படிக் கையை வைத்தேன்” என்று கூறிய உபேந்திரன் அவள் உதடுகள் இரண்டையும் இறுக்கிப் பிடித்தான்.
“வலிக்கிறது விடுங்கள்” என்றாள் படுக்கையில் கிடந்த பைங்கிளி.
உபேந்திரன் நகைத்தான். “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள்.
உபேந்திரன் புன்முறுவல் கொண்டான். “அவளும் இப்படித்தான் சொன்னாள். ஆனால் நான் விட வில்லை. அந்த உதடுகளை உற்று நோக்கினேன். உன் மத்தம் தரும் உதடுகள் இப்படி நோக்கினேன்” என்று உதடுகளை ஊன்றிப்
பார்த்தான்.
அவள் கண்களில் காமவெறி மண்டியது. அவன் கையில் இறுக்கிப் பிடித்திருந்த உதடுகள் அசைய முயன்றன. மெதுவாக அவற்றுக்கு விடுதலை அளித்த உபேந்திரன் மேலும் சொன்னான். “வலிக்கிறது விடுங் கள் என்று சொன்னாளே
தவிர நான் விடுவதில் அவளுக்கு இஷ்டமில்லை. வலியும் அவளுக்கு வேண்டித்தானிருந்தது” என்று.
“உங்களுக்கு எப்படித் தெரிந்தது அது?” என்று வினவினாள் கட்டிலில் கிடந்தவள்.
“அவள் நெளிந்தாள் என் மீது. பிறகு…”
“பிறகு!”
“நெகிழ்ந்தாள்.” உணர்ச்சியை அதிகமாகக் காட்டினான் உபேந்திரன்.
இப்படியா படைத்தலைவரே?” என்று கேட்டு கட்டிலில் படுத்திருந்தவளும் நெளிந்தாள். அவனை நோக்கி எழுந்தாள். அவன் மார்பில் – இழைந்தாள். நெகிழ்ந்தாள்.
“இப்படியேதான்” என்ற படைத்தலைவன் உணர்ச்சியை அதிகமாகக் காட்டினான்.
போலி மருதி நகைத்தாள். “படைத்தலைவரே! உம்மை உறுதி உள்ளவர் என்று நினைத்திருந்தேன்…” என்றும் சொன்னாள்.
“இப்பொழுது?”
“நீர் ஒரு கோழை.”
“அப்படியா?”
“இல்லாவிட்டால் ஒரு பெண் இத்தனை தூரம் வலிய வந்தபிறகு அவளை சும்மா விடலாமா?”
“எதுவும் பெண்ணைப் பொறுத்தது.”
“ஏன் நாகதேவி அழகில்லையா?
“அவளுக்கு இணையான அழகிகள் உலகத்தில் கிடையாது.”
“பின் ஏன்?”
“சமயம் வரவில்லை. எதற்கும் மனம் இடந்தர வேண்டும்” என்று உபேந்திரன் கட்டிலிலிருந்து எழுந்து அறைக் கோடிக்குச் சென்று மருந்து பெட்டியைத் திறந்து அதில் சுத்ததத்தர் வைத்துப்போன மருந்துக் குப்பியைக் கையில் எடுத்துக்
கொண்டான்.
“அது எதற்கு!” என்று கேட்டாள் கட்டிலில் கிடந்தவள்.
கையில் குப்பியைப் பிடித்தவண்ணம் கதவுக்கருகிலிருந்து திரும்பிக் கட்டிலை நோக்கினான் உபேந்திரன். “மருதியை எழுப்ப” என்றும் கூறினான்.
“என்ன!” அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள்.
“ஆம் நாகதேவி. மருதியை எழுப்பத்தான். காலையில் நம்முடன் அவளும் வருவாள் புகாருக்கு” என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தான் உபேந்திரன்.
கட்டிலில் சரேலென உட்கார்ந்த நாகதேவி அதிர்ச்சியால் சிலையானாள்.

Previous articleNagadevi Ch 25 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 27 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here