Home Historical Novel Nagadevi Ch 29 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 29 | Nagadevi Sandilyan | TamilNovel.in

89
0
Nagadevi Ch 29 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 29 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 29 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 29. பூனை கண்ணை மூடினால்…

Nagadevi Ch 29 | Nagadevi Sandilyan | TamilNovel.in

கால வெள்ளத்தில் பழைய புகார் அழிந்து விட்டாலும், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற முதுரைப்படி அதன் கம்பீரம் சிறிதும் குறைந்ததாகத் தெரியவில்லை. நாகை படைத்தலைவன் கண்களுக்கு கரிகாலன் காலத்தில்
யவனர்களால் பாதுகாக்கப்பட்ட பெரும் கோட்டையோ, கோட்டை வாசலோ, வாசலின் மணிக்கதவங்களோ அன்று இல்லைதான். ஆனால் கடற்கோள் கொண்டது போக இடிந்த கோட்டையின் மிகுதிப் பகுதிகளாக இரண்டு பெரும்
சுவர்கள் அன்று காலையில் பழைய நாகரிக உயர்வின் சின்னமாக மிகக் கம்பீரமாக நின்றிருந்தன. அவற்றின் மீது பயங்கரமாக எழுந்து மோதிய கடல் அலைகள்அவற்றையும் இழுத்துத் தள்ள முயன்றாலும் முடியாத தால் பின்வாங்கின.
அதைப் பார்த்துக்கொண்டு நின்ற உபேந்திரன், பரதவ மங்கையர் நெல் உலர்த்தும் முன் முற்றங்களும் அங்கு உலர்த்தப்பட்ட உணவைக் கவர வரும் கோழிகளின் மீது புகாரின் பரதவ மங்கையர் பொற் குழைகளை வீசும் அற்புதக்
காட்சிகளும் மறைந்தாலும், பரதவரின் வீரம் அங்கு கூடியிருந்தவர்களிடை அன்றும் தென்பட்டதைக் கண்டான். “இந்தக் காட்சியைப் படைக்க இன்னோர் உருத்திரங் கண்ணனார் ஏன் பிறக்கவில்லை” என்று தன்னைக் கேட்டுக்கொண்டு
பழைய நகரை நினைத்துப் பெருமூச்சும் விட்டான்.
அதனால் நைந்த மனத்துடன் எதிரே நின்ற பெருங்கூட்டத்தைப் பார்த்து, “பட்டினப்பாக்கந்தான் போய் விட்டதே தவிர மருவூர்ப்பாக்கம் போகவில்லை. பரதவர் வீரமும் போகவில்லை” என்று தன்னைத் தேற்றிக் கொள்ளவும் செய்தான்.
அப்படி நின்ற படைத்தலைவனுக்கு பரதவர் சங்கு மாலை அணிவித்தனர். பரதவ மங்கையர் ஆரத்தி எடுத்தார்கள் “ராஜேந்திர சோழ தேவர் படைத்தலைவரே சோழ நாட்டு அணிகலமே! வருக வருக!” என்று மங்கலக் கூச்சலும்
இட்டார்கள்.
நாகதேவியாக நின்ற மருதிக்கும் வரவேற்பு பலமாயிருந்தது. அவள் அணிந்திருந்த முத்தலை நாகாபரணம் பரதவ மங்கையருக்குப் புதிதாக இருந்தாலும் வேறெந்த நாட்டு ராணியோ தங்கள் நாட்டுக்கு வந் திருக்கிறாள் என்ற
நினைப்பில் அவள் மீது மலர் தூவினார்கள். இத்தனைக்கும் குருநாதரை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் கூட்டத்திலிருந்த புது மனிதனைப் பார்த்துத் திரும்பி ஓடிவிட முயன்ற குருநாதரைக் கையைப் பிடித்து
நிறுத்திய உபேந்திரன், “புகார் பெருமக்களே! இவர் தான் எங்கள் குருநாதர். இப்பொழுது சாவக மன்னனுக்காக நாகையில் கட்டப்பட்டு வரும் சூடாமணி விஹா ரத்துக்குத் தலைவராகப் போகிறவர்” என்று அறிமுகப்படுத்த கூட்டம்
அவருக்குத் தலைவணங்கியது ஒரு முறை.
ஆனால் அந்தப் புதிய மனிதன் மட்டும் தலை வணங்காததையும் அவன் இதழ்களில் ஒரு புன்சிரிப்பு விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்ட சுத்ததத்தர் தமக்கு முடிவு காலம் கிட்டி விட்டதை உணர்ந்தார்.
அந்தப் புது மனிதன் குருநாதரை ஒருமுறை கவனித்த பிறகு வேறு திக்கில் கண் களைத் திருப்பிக் கொண்டான். ஆனால் படைத்தலைவனும் குருநாதரும் நாகதேவியும் பரதவரால் ஊருக்குள் அழைத்துச் செல்லப்பட்டதும்
கூட்டத்திலிருந்து விலகி நின்று குரு நாதர் அருகில் வந்ததும் அவர் கையில் யாருமறியாமல் எதையோ திணித்துவிட்டுச் சென்றுவிட்டான். குரு நாதர் திகில் அதிகமாயிற்று. அவர் கையில் திணிக்கப் பட்டது ஒரு நாணயமானாலும் அது
என்னவென்பதை யும் அது திணிக்கப்பட்டதன் காரணத்தையும் குரு நாதர் புரிந்து கொண்ட தால் பிரும்மஹத்தி பிடித்துக் கொண்டவர் போல் பதுமையென நடந்து சென்றார்.
பரதவரும் மற்றும் அவர்களுடனிருந்த சில வீரர்களும் மருவூர்ப்பாக்கத்தின் முகப்பிலிருந்த ஒரு மாளிகையில் படைத்தலைவனையும் மருதியையும் குருநாதரையும் தங்க வைத்தார்கள். அந்த மாளிகைக்கு எதிரில் நாளங்காடி
சவுக்கப்பூதம் மட்டும் பிரும்மாண்டமாக உட்கார்ந்திருந்தது. அதைச் சுற்றி அலைகள் மோதிக் கொண்டிருந்தன. அத்தனையும் அழிந்தும் அந்த பூதமும் அதன் எதிரிலிருந்த பலிபீடமும் மட்டும் அழியா திருந்ததை குருநாதர் கவனித்தார்.
தாங்கள் தங்கவேண்டிய மாளிகைப் படியில் காலடி வைத்த படைத்தலைவன், “குருநாதரே! எல்லாம் அழிந்தும் பலி பீடம் அழியவில்லை “ என்று சுட்டிக் காட்டினான்.
“ஆம்” பயத்துடன் மென்று விழுங்கினார் குருநாதர்.
“இந்தப் பீடத்தில் எள்ளுருண்டை வைப்பதுண்டு. நரபலியும் நடப்பதுண்டு” என்று மேலும் சுட்டிக் காட்டினான் படைத்தலைவன்.
“ஆம். ஆம்.”
“கரிகாலன் காலத்தில் வீரர்கள் தங்களைத் தாங்களே பலி கொடுத்துக் கொண்டார்கள். இந்த பலி பீடத்தின் முன்பு நின்று தங்கள் தலைகளைத் தங்கள் வாட்களால் சீவிக் கொள்வார்கள்.”
“ஆம் ஆம். அதெல்லாம் இப்பொழுது எதற்கு?”
“இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அரசாங்க குற்றவாளிகள் இந்த பலி பீடத்தில் வெட்டப்படுகிறார்கள்…”
குருநாதர் உடல் நடுக்கம் கண்டது. படைத்தலைவன் பக்கத்தில் நின்றிருந்த மருதிகூட நடுங்கினாள். “வீணாக குருநாதரைப் பயமுறுத்தாதீர்கள்” என்ற மருதி உள்ளே சென்றாள். படைத்தலைவனும் குருநாதரும் அவளைத்
தொடர்ந்தார்கள்.
மருவூர்ப்பாக்கத்தின் மாளிகைக்குள் சகல வசதிகளும் இருந்தன. பரதவ மங்கையர் இரண்டு பேர் மருதியை அவள் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பரதவர் இருவர் படைத்தலைவனுக்கு ஒரு பெரிய அறையைக் காட்டினார்கள்.
ஏதோ அரசர்கள் தங்கு வதற்காக ஏற்பட்ட அறை போலிருந்த அந்த அறையைக் கண்ட படைத்தலைவன் அங்கிருந்த கட்டிலில் நிம்மதியாகப் படுத்தான். பணி செய்ய நின்ற இரு பர தவரையும் அப்புறம் வரச் சொல்லி அனுப்பிவிட்டான்.
குருநாதருக்கும் ஒரு பெரிய அறை கொடுக்கப்பட் டிருந்தாலும் அது படைத்தலைவன் அறைக்கு நேர் எதிரில் இருந்ததைக் குருநாதர் கவனித்தார். தான் படைத்தலைவன் கண்ணில் படாமல் எங்கும் நகர முடியாதென்பதைப் புரிந்து
கொண்டார். படைத்தலைவன் அறைக் கதவுகள் திறந்து கிடந்ததையும், அங்கிருந்த பஞ்சணையில் படுத்த வண்ணம் படைத் தலைவன் தனது அறையை நோக்கிக் கொண்டிருந்த தையும் கண்ட குருநாதர் தமது அறைக்கதவைச் சாத்தி
விட்டுத் தமது கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்த நேரத்திலும் அந்தப் புதுமனிதன் அவர் மனக்கண் முன்பு நின்றான். ஆஜானுபாகுவாய் இருந்த அந்த மனிதனின் ஆராய்ச்சிக் கண்கள் அப்பொழுதும் உள்ளிருந்து
அவரைப் பார்ப்பது போன்ற பிரமை இருந்தது குருநாதருக்கு. அதனால் கண்களை மூடிக்கொண்ட குருநாதர் பூனை கண்ணை மூடினால் உலகம் அஸ்தமித்து விடும் என்ற பழமொழிக்கு உதா ரணமாக விளங்கினார்.
புறக்கண் மூடியதே தவிர அகக்கண் மூடவில்லை. “நாசமாய்ப் போன இந்த நாகதேவி எதற்காக நாகைக்கு வந்தாள்?” என்று தன்னை கேட்டுக் கொண்டதன்றி “வேறெதற்கு? என் பிராணனை வாங்கத்தான்’ என்று பதிலும் சொல்லிக்
கொண்டார். “போயும் போயும் அவன் எப்படி இங்கே வந்தான்? அவனை புகாரில் ஒருவருக்குமே அடையாளம் புரிய வில்லை. சோழ நாட்டுக்கே காவலாயிருந்த புகாரின் கண்ணுமா பொட்டையாகி விட்டது? பரதவர் அறிவும் மழுங்கி
விட்டதா? அவன் என்ன காரணத்தால் இங்கு வந்திருக்கிறான்?” என்று தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். இன்னொரு முறை அவன் என் கண்ணில் படட்டும் அவனை அம்பலப்படுத்திவிடுகிறேன் என்று வீராப்பாகவும்
இரைந்து சொன்னார். சில வினாடிகளுக்குப் பிறகு கண்ணைத் திறக்கவும் செய்தார். அதுவரை யாரைப்பற்றி அவர் எண்ணங்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தாரோ, அந்த மனிதன் அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்தான்.
குருநாதருக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. எழுந்திருக்க முயன்றார்.
“அசைய வேண்டாம். அப்படியே இரும்” என்று ஆணையிட்டான் அந்த மனிதன்.

Previous articleNagadevi Ch 28 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 30 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here